யெகோவாவின் நாள் சமீபம்
“முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்.” —யோவேல் 1:2.
1, 2. யூதாவில் இருந்த என்ன சூழ்நிலைமையின் காரணமாக, வலிமைமிக்க தீர்க்கதரிசனத்தை உரைக்கும்படி யோவேலை யெகோவா ஏவினார்?
அந்த நாளுக்கு ஐயோ! ஏனென்றால் யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வ வல்லவரிடமிருந்து வரும் மகா சூறையாடல் போன்றது!” என்னே ஒரு சிலிர்ப்பூட்டும் அறிவிப்பு! இது யோவேல் தீர்க்கதரிசி மூலம் கடவுள் தம்முடைய மக்களுக்கு கொடுத்த செய்தி.
2 யோவேல் 1:15-ல் (NW) உள்ள அந்த வார்த்தைகள் யூதாவில் பதிவுசெய்யப்பட்டன; ஒருவேளை பொ.ச.மு. சுமார் 820-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கலாம். அந்தச் சமயத்தில் பச்சைப்பசேலென்ற செடிகொடிகளால் போர்வைபோல் போர்த்தப்பட்டிருந்த மலைகள் அத்தேசத்தை அழகுறச்செய்தன. பழவகைகளும் தானியமும் ஏராளமாய் விளைந்தன. மேய்ச்சல் நிலங்கள் பரந்தும் பசுமையுடனும் காணப்பட்டன. ஆனால் ஏதோவொன்று பெருந்தவறாய் இருந்தது. எருசலேமிலும் யூதா தேசத்திலும் பாகால் வழிபாடு கொடிகட்டிப் பறந்தது. இந்தப் பொய்க் கடவுளுக்கு முன்னால் மக்கள் குடிவெறிகொண்டு சிற்றின்ப களியாட்டங்களில் ஈடுபட்டனர். (ஒப்பிடுக: 2 நாளாகமம் 21:4-6, 11.) இவையெல்லாம் தொடர்ந்து நடக்கும்படி கடவுள் அனுமதிப்பாரா?
3. எதைக் குறித்து யெகோவா எச்சரித்தார், எதற்காக தேசங்கள் ஆயத்தம் செய்ய வேண்டும்?
3 பைபிள் புத்தகமாகிய யோவேல் தரும் பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்கிறதில்லை. யெகோவா தேவன் தம்முடைய அரசதிகாரத்தை நிரூபித்து, தம்முடைய புனித பெயரை பரிசுத்தப்படுத்துவார். யெகோவாவின் மகா நாள் சமீபத்தில் இருந்தது. கடவுள் எல்லா தேசங்களின்மீதும் ‘யோசபாத்தின் பள்ளத்தாக்கில்’ நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார். (யோவேல் 3:12) அவர்கள் சர்வ வல்லவராகிய யெகோவாவுடன் யுத்தம்பண்ண தயாராகட்டும். நாமும்கூட யெகோவாவின் மகா நாளை எதிர்ப்படுகிறோம். ஆகையால், நம்முடைய நாளுக்கும் கடந்த காலத்துக்குமுரிய யோவேலின் தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் கூர்ந்து ஆராய்வோமாக.
பூச்சிகளின் படையெடுப்பு
4. யோவேல் எச்சரித்த சம்பவம் எவ்வளவு பெரிதாய் இருக்கும்?
4 யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் சொல்கிறார்: “முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.” (யோவேல் 1:2, 3) முதியோர்களும் எல்லா ஜனங்களும் தங்களுடைய வாழ்நாளிலோ தங்களுடைய முன்னோர்களின் காலத்திலோ நடந்திராத ஒன்றை எதிர்பார்க்கலாம். மூன்றாம் தலைமுறைக்கு விவரித்துக் கூறப்படுமளவுக்கு அது அவ்வளவு வியக்கத்தக்கதாய் இருக்கும்! குறிப்பிடத்தக்க இந்தச் சம்பவம் என்ன? இதைக் கண்டுபிடிப்பதற்கு, நாம் யோவேலின் நாளில் இருப்பதுபோல கற்பனை செய்துகொள்ளலாம்.
5, 6. (அ) யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்த வாதையை விவரியுங்கள். (ஆ) அந்த வாதைக்கு மூலகாரணர் யார்?
5 செவிகொடுத்துக் கேளுங்கள்! தூரத்திலிருந்து வரும் ஓர் இரைச்சலை யோவேல் கேட்கிறார். வானம் இருளடைகிறது, மேலே இருள் கவிந்து வருகையில் திகிலூட்டும் அந்த இரைச்சல் அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதன் பின்பு புகைபோன்ற மேகம் இறங்குகிறது. அது கோடிக்கணக்கான பூச்சிகளின் சேனை. எப்பேர்ப்பட்ட பேரழிவை ஏற்படுத்துகிறது! இப்பொழுது யோவேல் 1:4-ஐ கவனியுங்கள். இந்தப் பூச்சிகளின் படைகளெல்லாம் இடம்பெயர்ந்து செல்லும் சிறகுடைய வெட்டுக்கிளிகள் மட்டுமல்ல. அதோ! பசியோடிருக்கும் ஊர்ந்துசெல்லும் சிறகில்லா வெட்டுக்கிளிகளும் கூட்டம் கூட்டமாய் வருகின்றன. காற்றினால் அடித்துவரப்பட்டதால், அந்த வெட்டுக்கிளிகள் திடீரென வந்து சேருகின்றன, அவற்றின் இரைச்சல் இரதங்களின் இரைச்சலைப் போல் இரைகிறது. (யோவேல் 2:5) அகோர பசியால் கோடிக்கணக்கான அந்த வெட்டுக்கிளிகள் ஒரு பசுஞ்சோலையையே சடுதியில் வனாந்தரமாக ஆக்கிவிட முடியும்.
6 இடம்பெயர்ந்து செல்லும் உயிரிகளில் அடுத்து வருவது, முசுக்கொட்டைப் பூச்சிகள்—அந்துப் பூச்சிகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் லார்வா பருவம். பசிவெறியோடுள்ள திரளான சேனைகளாகிய முசுக்கொட்டைப் பூச்சிகள், கிட்டத்தட்ட தாவரங்களின் பசுமையே போய்விடும் வரை அவற்றின் இலைகளைத் துண்டு துண்டாக, இலை இலையாக சாப்பிட்டுவிட முடியும். அவை விட்டுவைத்த மீதியை வெட்டுக்கிளிகள் தின்றுவிடும். வெட்டுக்கிளிகள் விட்டுவைப்பதை வேகமாக பாய்ந்துவரும் கரப்பான் பூச்சிகள் ஒன்றுவிடாமல் காலிபண்ணிவிடும். ஆனால் இதை கவனியுங்கள்: யோவேல் 2-ம் அதிகாரம், 11-ம் வசனத்தில், வெட்டுக்கிளி கூட்டத்தை “தமது சேனை” என்பதாக கடவுள் அடையாளம் காட்டுகிறார். ஆம், தேசத்தைப் பாழாக்கி கடும் பஞ்சத்தை உண்டாக்கும் வெட்டுக்கிளி வாதைக்கு அவரே மூலகாரணர். எப்பொழுது? ‘யெகோவாவின் நாளுக்கு’ சற்று முன்பு.
‘வெறியரே, விழித்திடுங்கள்’!
7. (அ) யூதாவின் மதத் தலைவர்களுடைய நிலைமை என்ன? (ஆ) இன்று கிறிஸ்தவமண்டல தலைவர்கள் எவ்வாறு யூதாவின் மதத் தலைவர்களுக்கு ஏற்பட்டதை போன்ற நிலைமையில் இருக்கின்றனர்?
7 யூதாவின் மதத் தலைவர்களாகிய இகழத்தக்க ஒரு கூட்டத்தினர், பின்வரும் இந்தக் கட்டளையின்போது தனிப்படுத்தி காட்டப்படுகிறார்கள்: “வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.” (யோவேல் 1:5) ஆம், யூதாவின் ஆவிக்குரிய குடிவெறியர்கள் ‘விழிக்கும்படி,’ நிதானத்துக்கு வரும்படி சொல்லப்பட்டார்கள். ஆனால் இது பழங்கால சரித்திரம்தானே என்று நினைத்துவிடாதீர்கள். இப்பொழுதே, யெகோவாவின் மகா நாளுக்கு முன்பே, கிறிஸ்தவமண்டல குருமார், அடையாளப்பூர்வமான கருத்தில் அளவுக்கதிகமாய் ‘புது திராட்சரசத்தை’ அருந்தியிருப்பதால், உன்னதமானவரிடமிருந்து வரும் இந்தக் கட்டளையை உணர்ந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்; யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளில் அவர்கள் தங்களுடைய வெறிகொண்ட மதிமயக்கத்திலிருந்து எழுப்பப்படும்போது எவ்வளவு ஆச்சரியமடைந்தவர்களாய் இருப்பார்கள்!
8, 9. (அ) வெட்டுக்கிளிகளையும் அவற்றினுடைய வாதையின் விளைவையும் யோவேல் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) இன்று, வெட்டுக்கிளிகள் யாரை அடையாளப்படுத்துகின்றன?
8 அந்தப் பெரும் வெட்டுக்கிளி சேனையைப் பாருங்கள்! “எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி [“ஜனம்,” NW] என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு. அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று. தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப் போலப் புலம்பு.”—யோவேல் 1:6-8.
9 இது வெறுமனே யூதாமீது படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகளின் ‘ஒரு ஜனத்தைப்’ பற்றிய தீர்க்கதரிசனம்தானா? இல்லை, அதைக் காட்டிலும் இந்தத் தீர்க்கதரிசனத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. யோவேல் 1:6-லும் வெளிப்படுத்துதல் 9:7-லும் கடவுளுடைய ஜனங்கள் வெட்டுக்கிளிகளாக அடையாளப்படுத்தி காண்பிக்கப்படுகின்றனர். நவீனகால வெட்டுக்கிளி சேனை யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட வெட்டுக்கிளி சேனையே தவிர வேறில்லை; இப்பொழுது இயேசுவின் ‘வேறே ஆடுகளாகிய’ ஏறக்குறைய 56,00,000 பேர் அதில் சேர்ந்துள்ளனர். (யோவான் 10:16) யெகோவாவின் வணக்கத்தாரடங்கிய இந்த மாபெரும் திரள்கூட்டத்தின் பாகமாயிருப்பதைக் குறித்து நீங்கள் சந்தோஷப்படவில்லையா?
10. யூதாவின்மீது ஏற்பட்ட வெட்டுக்கிளி வாதையின் விளைவு என்ன?
10 யோவேல் 1:9-12-ல், வெட்டுக்கிளி வாதையின் சில பாதிப்புகளைப் பற்றி நாம் வாசிக்கிறோம். ஒன்றன் பின் ஒன்றாக வந்த கூட்டம் அத்தேசத்தை முற்றிலும் பாழாக்குகிறது. தானியம், திராட்சரசம், எண்ணெய் ஆகியவை இல்லாமல், உண்மையற்ற அந்த ஆசாரியர்கள் தங்களுடைய செயல்களைத் தொடர முடியாது. அந்த நிலமும்கூட புலம்பி அழுகிறது, ஏனென்றால் தானியத்தை அந்த வெட்டுக்கிளிகள் படுநாசம் செய்துவிட்டன, திராட்சச்செடிகள் கனியில்லாமல் ஆகிவிட்டன. திராட்சச்செடிகள் அழிக்கப்பட்டதால், பாகாலை வழிபட்ட அந்தத் திராட்சரச பெருங்குடியர்களுக்கு இனிமேல் திராட்சரசம் இல்லாமல் போயிற்று; இவர்கள் ஆவிக்குரிய குடிவெறியர்களாயும் இருந்தனர்.
“ஆசாரியர்களே, . . . புலம்புங்கள்”
11, 12. (அ) இன்று கடவுளுடைய ஆசாரியர்களாக உரிமைபாராட்டுவது யார்? (ஆ) நவீனநாளைய வெட்டுக்கிளி வாதையால் கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்?
11 நெறிகெட்ட அந்த ஆசாரியர்களுக்கு கடவுள் கொடுத்த செய்தியை செவிமடுத்துக் கேளுங்கள். “ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்.” (யோவேல் 1:13) யோவேல் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தில், லேவிய ஆசாரியர்கள் பலிபீடத்தில் சேவை செய்தனர். ஆனால் கடைசி நிறைவேற்றத்தைப் பற்றியென்ன? இன்று, கிறிஸ்தவமண்டல குருமார் கடவுளுடைய பலிபீடத்தில் சேவிக்கும் அதிகாரத்தை எடுத்திருக்கின்றனர், கடவுளுடைய ஊழியர்களாய், அவருடைய ‘ஆசாரியர்களாய்’ இருப்பதாக உரிமை பாராட்டிக்கொள்கின்றனர். ஆனால் நவீனகால வெட்டுக்கிளிகள் முன்னேறிச் செல்கையில் இப்பொழுது என்ன நடக்கிறது?
12 செயல்பட்டுவரும் யெகோவாவின் ஜனங்களை கிறிஸ்தவமண்டல ‘ஆசாரியர்கள்’ பார்க்கும்போதும் அவர்களுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பின் எச்சரிக்கையை கேட்கும்போதும், அவர்கள் மூர்க்க வெறிபிடித்தவர்களாய் மாறுகின்றனர். எரிச்சலினால் தங்களுடைய மார்பில் அடித்துக்கொள்கின்றனர், ராஜ்ய செய்தியின் பாழாக்கும் பாதிப்பைக் குறித்து ஆத்திரமடைகின்றனர். அவர்களுடைய மந்தைகள் அவர்களை விட்டுப்போகும்போது அலறுகின்றனர். அவர்களுடைய வயல்வெளிகள் பசுமையிழந்து போவதால், அவர்கள் இரட்டுடுத்தி இரவை கழிக்கட்டும், தங்களுடைய வருமானத்தை இழப்பதால் புலம்பி அழட்டும். விரைவில் அவர்கள் தங்களுடைய வேலையையும் இழந்துவிடுவார்கள்! சொல்லப்போனால், அவர்களுடைய முடிவு அருகில் இருப்பதால் இராமுழுவதும் புலம்பி அழும்படி கடவுள் அவர்களிடம் சொல்கிறார்.
13. ஒரு தொகுதியாக கிறிஸ்தவமண்டலம் யெகோவாவின் எச்சரிப்புக்கு சாதகமாய் பிரதிபலிக்குமா?
13 யோவேல் 1:14 சொல்கிறபடி, மனந்திரும்பி ‘உதவிக்காக யெகோவாவை நோக்கி’ கூக்குரலிடுவதே அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. கிறிஸ்தவமண்டலத்தின் முழு குருமார் வகுப்பும் யெகோவாவிடம் திரும்பும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? நிச்சயமாகவே எதிர்பார்க்க முடியாது! அவர்கள் மத்தியிலுள்ள தனிநபர்கள் யெகோவாவின் எச்சரிப்புக்கு செவிகொடுக்கலாம். ஆனால் ஒரு வகுப்பாக இந்த மதத் தலைவர்களுக்கும் சர்ச் அங்கத்தினர்களுக்கும் ஆவிக்குரிய விதத்தில் பஞ்சம் தொடர்ந்து இருக்கும். தீர்க்கதரிசி ஆமோஸ் முன்னறிவித்தார்: “இதோ நாட்கள் வரும்,—இது யெகோவாவாகிய ஆண்டவரின் திருவாக்கு—அப்போது தேசத்திலே பஞ்சம் வரச்செய்வேன், அது ஆகாரப்பஞ்சமல்ல, ஜலதாகமுமல்ல, யெகோவாவின் வசனத்தைக் கேட்க வேண்டுமெனத் தவிக்கிற பஞ்சமே.” (ஆமோஸ் 8:11, தி.மொ.) மறுபட்சத்தில், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலம் கடவுள் அன்புடன் வழங்கும் கொழுமையான ஆவிக்குரிய விருந்திற்காக நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்கிறோம்!—மத்தேயு 24:45-47, NW.
14. வெட்டுக்கிளி வாதை எதற்கு முன்னறிகுறியாக இருக்கிறது?
14 வெட்டுக்கிளி வாதை நடக்கப்போகும் ஏதோவொன்றிற்கு முன்னறிகுறியாக இருந்தது மற்றும் இருக்கிறது. எதற்கு முன் அறிகுறியாக? யோவேல் நமக்குத் தெளிவாக சொல்கிறார், அவர் உரைப்பதாவது: “அந்த நாளுக்கு ஐயோ! ஏனென்றால் யெகோவாவின் நாள் சமீபம், அது சர்வ வல்லவரிடமிருந்து வரும் மகா அழிவு போன்றது!” (யோவேல் 1:15, NW) இன்று கடவுளுடைய வெட்டுக்கிளி சேனையின் உலகளாவிய படையெடுப்புகள், பெரிதும் பயங்கரமுமான யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. நிச்சயமாகவே, பொல்லாதவர்களுக்கு எதிராக தெய்வீக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றி, சர்வலோக பேரரசராக யெகோவா வெற்றிவாகை சூடிவரும் கணக்குத் தீர்க்கும் விசேஷ நாளுக்காக நேர்மை இருதயமுள்ளோர் அனைவரும் வாஞ்சையுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
15. தேசத்திற்கு ஏற்பட்ட பாழான நிலைமையைப் பார்க்கையில், தெய்வீக எச்சரிப்புகளுக்கு செவிசாய்ப்பவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?
15 யோவேல் 1:16-20 காண்பிக்கிறபடி, பூர்வீக யூதாவில் உணவுப்பொருள் நிறுத்தப்பட்டது. அதுபோலவே சந்தோஷமும் எடுத்துப்போடப்பட்டது. பண்டக சாலைகள் பாழாக்கப்பட்டன. களஞ்சியங்கள் இடித்து நொறுக்கப்பட வேண்டியதாயிருந்தது. செழிப்பான நிலத்தை வெட்டுக்கிளிகள் நாசப்படுத்திவிட்டதால் புல்வெளி இல்லாமல் போனது, குழப்பத்தில் கால்நடைகள் அங்குமிங்கும் அலைந்து திரிந்தன, ஆட்டு மந்தைகள் அழிந்துபோயின. எப்பேர்ப்பட்ட ஒரு பேரழிவு! இப்படிப்பட்ட நிலைமைகளுக்கு மத்தியில், யோவேலுக்கு என்ன நடந்தது? 19-ம் (தி.மொ.) வசனத்தின்படி, அவர் சொன்னதாவது: “யெகோவாவே, உம்மைநோக்கிக் கூப்பிடுகிறேன்.” இன்றும்கூட, அநேகர் தெய்வீக எச்சரிப்புகளுக்கு செவிசாய்த்து, விசுவாசத்துடன் யெகோவா தேவனை நோக்கி கூக்குரலிடுகின்றனர்.
“யெகோவாவின் நாள் வருகிறது”
16. ஏன் ‘தேசத்தின் குடிகள்’ தத்தளிக்க வேண்டும்?
16 கடவுளிடமிருந்து வரும் இந்தக் கட்டளைக்குச் செவிகொடுங்கள்: “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்.” (யோவேல் 2:1) ஏன் அப்படி பிரதிபலிக்க வேண்டும்? அந்தத் தீர்க்கதரிசனம் பதிலளிக்கிறது: “யெகோவாவின் நாள் வருகிறது, அது சமீபம். அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களிலே எல்லாவிடத்தும் பரவுவதுபோலாம்.” (யோவேல் 2:1, 2, தி.மொ.) உண்மையான ஓர் அவசர உணர்வு யெகோவாவின் மகா நாளோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
17. தேசமும் யூதாவிலுள்ள மக்களும் எவ்வாறு வெட்டுக்கிளி வாதையால் பாதிக்கப்பட்டனர்?
17 தளராத வெட்டுக்கிளிகள் ஒரு சோலையை வனாந்தரமாக மாற்றுகையில் தீர்க்கதரிசன காட்சியின் தாக்கத்தைக் கற்பனைசெய்து பாருங்கள். வெட்டுக்கிளி சேனையின் விவரிப்புக்கு செவிகொடுங்கள்: “அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும். அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும். அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.” (யோவேல் 2:4-6) யோவேலின் நாளில் ஏற்பட்ட வெட்டுக்கிளி வாதையின்போது, பாகால் வணக்கத்தாருடைய வேதனை பெருகியது, அவர்களுடைய முகங்கள் கவலையால் தோய்ந்து காணப்பட்டன.
18, 19. இன்று கடவுளுடைய மக்களின் வேலை எவ்வாறு வெட்டுக்கிளி வாதைக்கு ஒத்திருக்கிறது?
18 வரிசை பிசகாமல், சளைக்காமல் செல்லும் இந்த வெட்டுக்கிளிகளை எதுவும் தடுத்துநிறுத்தவில்லை. அவை “பராக்கிரமசாலிகளைப்போல” ஓடின, மதிலின்மீதும் ஏறின. ‘அவைகளில் சில ஆயுதங்களுக்குள் விழுந்தாலும், மற்றவை தன் பாதையை விட்டு விலகாது.’ (யோவேல் 2:7, 8) கடவுளுடைய அடையாளப்பூர்வமான வெட்டுக்கிளிகளின் தற்கால சேனையைப் பற்றிய என்னே ஓர் தத்ரூபமான தீர்க்கதரிசன விவரிப்பு! இன்றும்கூட, யெகோவாவின் வெட்டுக்கிளி சேனை தொடர்ந்து நேராக முன்னோக்கிச் செல்கிறது. எதிர்ப்பு என்ற எந்த ‘மதிலும்’ அவற்றை தடுத்து நிறுத்த முடியாது. அவை தங்களுடைய கடவுளுக்கான உத்தமத்தன்மையை விட்டுக்கொடுப்பதில்லை; ஆனால், நாசி ஜெர்மனியின் ஹிட்லரை வாழ்த்த மறுத்ததற்காக ‘ஆயுதங்களுக்குள் விழுந்த’ ஆயிரக்கணக்கான சாட்சிகளைப் போல, சாவை எதிர்ப்பட தயாராக இருக்கின்றன.
19 கடவுளுடைய நவீனகால வெட்டுக்கிளி சேனை, கிறிஸ்தவமண்டல “பட்டணம்” எங்கும் சென்று முற்றும் முழுமையான சாட்சிகொடுத்திருக்கிறது. (யோவேல் 2:9) அவை உலகமுழுவதும் சாட்சிகொடுத்திருக்கின்றன. அவை யெகோவாவின் செய்தியை அறிவிக்கையில், தொடர்ந்து எல்லா தடைகளையும் தாண்டிச்சென்று கோடிக்கணக்கானோருடைய வீடுகளுக்குள் நுழைகின்றன, தெருவிலுள்ள ஆட்களை அணுகுகின்றன, அவர்களிடம் தொலைபேசியில் பேசுகின்றன, இவ்விதமாய் சாத்தியமான எல்லா வழியிலும் அவர்களை தொடர்புகொள்கின்றன. உண்மையில், அவை இடைவிடாமல் செய்யப்படும் ஊழியத்தில் கோடிக்கணக்கான பைபிள் பிரசுரங்களை விநியோகித்திருக்கின்றன; இன்னும் அநேகமநேக பிரசுரங்களை—வெளியரங்கமாகவும் வீட்டுக்கு வீடும்—விநியோகிக்கும்.—அப்போஸ்தலர் 20:20, 21.
20. நவீன நாளைய வெட்டுக்கிளிகளை ஆதரித்துவருவது யார், என்ன விளைவுகளுடன்?
20 பெருந்திரளான வெட்டுக்கிளிகளின் கூட்டம், சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் மறைக்கத்தக்க ஒரு மேகம்போல இருக்கிறது என்று யோவேல் 2:10 காண்பிக்கிறது. (ஒப்பிடுக: ஏசாயா 60:8) இந்தச் சேனைக்குப் பின்னால் இருப்பது யார் என்பதைக் குறித்ததில் ஏதாவது சந்தேகமுண்டா? வெட்டுக்கிளிகளின் இரைச்சலுக்கும் மேலாக ஓங்கிவரும் இந்த வார்த்தைகளை யோவேல் 2:11-ல் (தி.மொ.) நாம் கேட்கிறோம்: “யெகோவா தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளையம் மகா பெரிது, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிறவன் வல்லமையுள்ளவன்; யெகோவாவின் நாள் பெரிது, மகா பயங்கரமானது; அதைச் சகிப்பவன் யார்?” ஆம், யெகோவா தேவன் தம்முடைய வெட்டுக்கிளி சேனையை இப்பொழுதே—அவருடைய மகா நாளுக்கு முன்பே—அனுப்பிக்கொண்டிருக்கிறார்.
‘யெகோவா தாமதமாய் இல்லை’
21. “யெகோவாவின் நாள் திருடனைப் போல வரும்”போது என்ன சம்பவிக்கும்?
21 யோவேலைப் போலவே, அப்போஸ்தலன் பேதுருவும் யெகோவாவின் மகா நாளைப் பற்றி பேசினார். அவர் எழுதினார்: “யெகோவாவின் நாள் திருடனைப் போல வரும்; அப்பொழுது வானங்கள் ‘உஸ்’ என்ற இரைச்சலுடன் அகன்றுபோம், கடும் வெப்பத்தால் பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் வெளியாகும்.” (2 பேதுரு 3:10, NW) பொல்லாத அரசாங்கமாகிய “வானங்கள்,” பிசாசாகிய சாத்தானுடைய செல்வாக்கினால் “பூமி”யின்மீது, அதாவது கடவுளிடமிருந்து பிரிந்துவிட்ட மனிதவர்க்கத்தின்மீது ஆட்சிசெய்கின்றன. (எபேசியர் 6:12; 1 யோவான் 5:19) அடையாளப்பூர்வமான இந்த வானங்களும் பூமியும் யெகோவாவின் மகா நாளில் தெய்வீக கோபாக்கினையின் வெப்பத்தில் தப்பிப்பிழைக்காது. அதற்கு மாறாக, ‘அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று [நாம்] காத்திருக்கும்’ ஒன்றால் அவை மாற்றீடு செய்யப்படும்.—2 பேதுரு 3:13.
22, 23. (அ) யெகோவா இரக்கத்துடன் பொறுமையை காண்பித்திருப்பதற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? (ஆ) யெகோவாவின் நாள் சமீபத்தில் இருப்பதால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்?
22 தற்காலத்தில் வரும் எல்லா கவனச்சிதறல்களாலும் விசுவாசப் பரீட்சைகளாலும், நம்முடைய காலங்களின் அவசரத்தன்மையைக் குறித்த பார்வையை நாம் இழந்துவிடக்கூடும். ஆனால், அடையாளப்பூர்வமான அந்த வெட்டுக்கிளிகள் தொடர்ந்து முன்னோக்கிச் செல்கையில், அநேகர் அந்த ராஜ்ய செய்திக்குப் பிரதிபலிக்கின்றனர். இதற்காக கடவுள் காலத்தை அனுமதித்திருக்கிறபோதிலும், அவருடைய பொறுமையை தாமதத்துடன் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [“யெகோவா,” NW] தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.”—2 பேதுரு 3:9.
23 யெகோவாவின் மகா நாளுக்காக நாம் காத்திருக்கையில், 2 பேதுரு 3:11, 12-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள அப்போஸ்தலனின் வார்த்தைகளை நாம் மனதிற்கொள்வோமாக: “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.” முடிவு வருவதற்கு முன்பு ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதில் ஒழுங்காகவும் அர்த்தமுள்ள விதத்திலும் பங்குகொள்வதன் மூலம், நாம் யெகோவாவின் வெட்டுக்கிளி சேனையோடு இணைந்து செயல்படுவது இப்படிப்பட்ட நடக்கையிலும் பக்தியிலும் நிச்சயமாகவே உட்பட்டிருக்கின்றன.—மாற்கு 13:10.
24, 25. (அ) யெகோவாவினுடைய வெட்டுக்கிளி சேனையின் வேலையில் பங்குகொள்ளும் சிலாக்கியத்திற்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்? (ஆ) அர்த்தமுள்ள என்ன கேள்வியை யோவேல் எழுப்புகிறார்?
24 யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் வரும்வரை கடவுளுடைய வெட்டுக்கிளி சேனை அதன் வேலையை நிறுத்தாது. நிறுத்தமுடியாத இந்த வெட்டுக்கிளி சேனை இருப்பது தானேயும் யெகோவாவின் நாள் சமீபத்தில் உள்ளது என்பதற்கு குறிப்பிடத்தக்க அத்தாட்சியாய் இருக்கிறது. யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு முன்பு நடக்கும் பலமான கடைசி தாக்குதலில் கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட வெட்டுக்கிளிகள் மற்றும் அவர்களுடைய தோழர்கள் மத்தியில் சேவிப்பதைக் குறித்து நீங்கள் சந்தோஷப்படவில்லையா?
25 யெகோவாவின் நாள் எவ்வளவு பெரிதாய் இருக்கும்! “அதைச் சகிக்கிறவன் யார்?” என்ற கேள்வி எழுப்பப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை. (யோவேல் 2:11) இந்தக் கேள்வியும் வேறுபல கேள்விகளும் பின்வரும் இரண்டு கட்டுரைகளில் சிந்திக்கப்படும்.
உங்களால் விளக்க முடியுமா?
◻ யூதாவை ஏன் பூச்சிகளின் வாதையால் யெகோவா எச்சரித்தார்?
◻ யோவேல் தீர்க்கதரிசனத்தின் நவீனநாளைய நிறைவேற்றத்தில், யெகோவாவின் வெட்டுக்கிளிகள் யார்?
◻ வெட்டுக்கிளி வாதைக்கு கிறிஸ்தவமண்டல தலைவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர், அதன் விளைவுகளிலிருந்து அவர்களில் சிலர் எவ்வாறு தப்பித்துக்கொள்ளலாம்?
◻ இந்த 20-ம் நூற்றாண்டில் வெட்டுக்கிளி வாதை எவ்வளவு பரவலாக இருந்திருக்கிறது, எதுவரை அது தொடரும்?
[பக்கம் 9-ன் படம்]
பூச்சி வாதை இன்னும் மோசமான ஒன்றிற்கு முன்னறிகுறியாக இருந்தது
[படத்திற்கான நன்றி]
பட்ட மரம்: FAO photo/G. Singh
[பக்கம் 10-ன் படம்]
யெகோவா தேவனே நவீன நாளைய வெட்டுக்கிளி வாதைக்குப் பின்னாலிருப்பவர்
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
வெட்டுக்கிளி: FAO photo/G. Tortoli; வெட்டுக்கிளி கூட்டம்: FAO photo/Desert Locust Survey