அப்போஸ்தலர் காலங்களில் ஒளிப் பிரகாசங்கள்
“நீதிமானுக்காக வெளிச்சமும், [“ஒளி தானே பிரகாசித்திருக்கிறது,” NW] செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.”—சங்கீதம் 97:11.
1. இன்று யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு பூர்வ கிறிஸ்தவர்களை ஒத்திருக்கிறார்கள்?
உண்மை கிறிஸ்தவர்களாக, சங்கீதம் 97:11-ன் வார்த்தைகளை நாம் எவ்வளவாகப் போற்றுகிறோம்! மறுபடியும் மறுபடியுமாக நமக்கு ‘ஒளிப் பிரகாசித்திருக்கிறது.’ உண்மையில், யெகோவாவின் பிரகாசிக்கும் ஒளியை நம்மில் சிலர் அநேக ஆண்டுகளாகக் கண்டிருக்கிறோம். இதெல்லாம், நீதிமொழிகள் 4:18-ஐ நமக்கு நினைவுபடுத்துகிறது; அது இவ்வாறு வாசிக்கிறது: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.” பாரம்பரியத்தைவிட வேதவசனங்களுக்கு போற்றுதலைக் காண்பிப்பதில், யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் பூர்வ கிறிஸ்தவர்களை ஒத்திருக்கிறோம். தெய்வீக ஏவுதலினால் எழுதப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் சரித்திரப்பூர்வ புத்தகங்களிலிருந்தும் அதன் கடிதங்களிலிருந்தும் அவர்களுடைய மனநிலையைத் தெளிவாகக் காணலாம்.
2. இயேசுவைப் பின்பற்றியவர்கள் பெற்ற முதல் ஒளிப் பிரகாசங்களில் எவை உட்பட்டிருந்தன?
2 இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய ஆரம்ப காலத்தவர்கள் பெற்றுக்கொண்ட முதல் ஒளிப் பிரகாசங்களில் மேசியாவைப் பற்றியவை இருந்தன. அந்திரேயா தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவிடம் சொன்னார்: “மேசியாவைக் கண்டோம்.” (யோவான் 1:41) சிறிதுகாலத்திற்குப் பின், அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசு கிறிஸ்துவிடம் பின்வருமாறு சொன்னபோது அதே கருத்துக்குச் சான்றுபகர பரலோகத்திலுள்ள பிதா அவருக்கு உதவினார்: “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.”—மத்தேயு 16:16, 17; யோவான் 6:68, 69.
அவர்களுடைய பிரசங்க வேலைமீது பிரகாசம்
3, 4. தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின், அவரைப் பின்பற்றியவர்களுடைய எதிர்கால வேலையைப் பற்றி என்ன ஒளியூட்டுதலை இயேசு அவர்களுக்குக் கொடுத்தார்?
3 உயிர்த்தெழுதலுக்குப்பின் இயேசு கிறிஸ்து, தம்மைப் பின்பற்றுகிற அனைவர்மீதும் விழுந்திருக்கும் ஒரு கடமையின்பேரில் ஒளிப் பிரகாசங்களை அளித்தார். பெரும்பாலும் கலிலேயாவில் கூடியிருந்த 500 சீஷர்களிடமே அவர் இதைச் சொன்னார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:19, 20; 1 கொரிந்தியர் 15:6) அதற்கு பின்னர், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் பிரசங்கிப்பவர்களாய் ஆக வேண்டியிருந்தது; மேலும், அவர்களுடைய பிரசங்க வேலை, ‘காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாருக்கு’ வரையறுக்கப்பட்டதாய் இருக்கப்போவதில்லை. (மத்தேயு 10:6) பாவமன்னிப்பிற்கான மனந்திரும்புதலின் அடையாளமாக அவர்கள் யோவானின் முழுக்காட்டுதலைக் கொடுக்க வேண்டியதாகவும் இல்லை. பதிலாக, அவர்கள் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” மக்களுக்கு முழுக்காட்டுதல் கொடுக்க வேண்டியதாயிருந்தது.
4 இயேசு பரலோகத்திற்கு ஏறிப்போவதற்கு சற்று முன்னர், அவருடைய 11 உண்மையுள்ள அப்போஸ்தலர் இவ்வாறு கேட்டனர்: “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்”? அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, இயேசு பின்வருமாறு சொல்லி அவர்களுடைய பிரசங்க வேலையைப்பற்றி மேலுமான போதனைகளைக் கொடுத்தார்: “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” அப்போது வரையிலும் அவர்கள் யெகோவாவுக்கு மட்டுமே சாட்சிகளாக இருந்தார்கள்; இப்போதோ அவர்கள் கிறிஸ்துவுக்கும் சாட்சிகளாக இருப்பார்கள்.—அப்போஸ்தலர் 1:6-8.
5, 6. பெந்தெகொஸ்தே அன்று இயேசுவின் சீஷர்கள் என்னென்ன ஒளிப் பிரகாசங்களைப் பெற்றனர்?
5 பத்தே நாட்களுக்குப் பின்னர், என்னே பகட்டான ஒளிப் பிரகாசங்களை இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பெற்றார்கள்! பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாள் அன்று, யோவேல் 2:28, 29-ன் முக்கியத்துவத்தை அவர்கள் முதல் முறையாக, முழுமையாகப் புரிந்துகொண்டார்கள்: “நான் [யெகோவா] மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.” எருசலேமில் கூடியிருந்த அவர்கள் அனைவரின்—சுமார் 120 ஆண்கள் மற்றும் பெண்களின்—தலைகள் மேலும் பரிசுத்த ஆவி, அக்கினி மயமான நாவுகளின் வடிவில் வந்தமர்ந்ததை இயேசுவின் சீஷர்கள் கண்டனர்.—அப்போஸ்தலர் 1:12-15; 2:1-4.
6 மேலும், சங்கீதம் 16:10-ன் வார்த்தைகள், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்குப் பொருந்தின என்று பெந்தெகொஸ்தே நாளன்றுதான் அந்தச் சீஷர்கள் முதல்முறையாகப் புரிந்துகொண்டார்கள். சங்கீதக்காரன் சொல்லுகிறார்: “[யெகோவா தேவன்] என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.” அந்நாள்வரையாக அரசனாகிய தாவீதின் கல்லறை அவர்களிடத்தில் இருந்தபடியால், அந்த வார்த்தைகள் அவருக்குப் பொருந்தியிருக்க முடியாது என்பதை சீஷர்கள் அறிந்துகொண்டார்கள். இந்தப் புதிய ஒளி விவரிக்கப்பட்டதைக் கேட்ட சுமார் 3,000 பேருக்கு அது அந்தளவு ஏற்கத்தக்கதாக இருந்தபடியால் அன்றுதானே அவர்கள் முழுக்காட்டுதலைப் பெற்றதில் ஆச்சரியமேதுமில்லை!—அப்போஸ்தலர் 2:14-41.
7. ரோம படை அதிகாரியாகிய கொர்நேலியுவிடம் சென்றபோது என்ன பிரகாசமான ஒளியை அப்போஸ்தலன் பேதுரு பெற்றார்?
7 பல நூற்றாண்டுகளாக இஸ்ரவேலர்கள், கடவுள் தங்களைப்பற்றி சொன்னவற்றை மதித்துணர்ந்தனர்: “பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்.” (ஆமோஸ் 3:2) ஆகவே, விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியாரான விசுவாசிகளிடம் பரிசுத்த ஆவி முதல்முறையாக வந்திறங்கினபோது, அப்போஸ்தலனாகிய பேதுருவும் ரோம படை அதிகாரியாகிய கொர்நேலியுவின் வீட்டிற்கு அவருடன் சென்றவர்களும் உண்மையிலேயே அதிக பிரகாசமான ஒளி ஒன்றைப் பெற்றனர். இந்த ஒருமுறை மட்டுமே, முழுக்காட்டுதல் பெறுவதற்குமுன் பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் அது அவசியமாக இருந்தது. இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யப்படாத இந்தப் புறஜாதியார் முழுக்காட்டுதலுக்குத் தகுதி பெற்றிருந்தனர் என்று பேதுருவுக்குத் தெரிந்திருக்காது. இந்தச் சம்பவத்தின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொண்டவராய், பேதுரு கேட்டார்: “நம்மைப்போல பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் [புறஜாதியாரும்] ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா”? சந்தேகமின்றி, அங்கிருந்த எவராலும் சரியானபடி மறுக்கமுடியவில்லை; ஆகவே இந்தப் புறஜாதியாரின் முழுக்காட்டுதலும் நடைபெற்றது.—அப்போஸ்தலர் 10:44-48; ஒப்பிடுக: அப்போஸ்தலர் 8:14-17.
இனிமேலும் விருத்தசேதனம் இல்லை
8. விருத்தசேதன பழக்கத்தைக் கைவிடுவதை ஏன் சில பூர்வ கிறிஸ்தவர்கள் கடினமானதாகக் கண்டார்கள்?
8 விருத்தசேதனத்தைப் பற்றிய பிரச்சினையின் சம்பந்தமாக மேலுமான தெளிவான சத்தியத்தின் ஒளிப் பிரகாசம் தென்பட்டது. விருத்தசேதன பழக்கம் பொ.ச.மு. 1919-ல், ஆபிரகாமுடன் யெகோவா செய்த உடன்படிக்கையின்போது ஆரம்பமானது. ஆபிரகாமும் அவருடைய வீட்டிலுள்ள மற்ற எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று கடவுள் அப்போது கட்டளையிட்டார். (ஆதியாகமம் 17:9-14, 23-27) ஆகவே ஆபிரகாமின் சந்ததியாருக்கு விருத்தசேதனம் ஒரு அடையாளக்குறியாக ஆனது. அவர்கள் இந்தப் பழக்கத்தைக் குறித்து எவ்வளவு பெருமைப்பட்டனர்! அதன் விளைவாக, “விருத்தசேதனமில்லாத” என்ற பதம் வெறுப்பிற்குரிய பதமாக ஆனது. (ஏசாயா 52:1; 1 சாமுவேல் 17:26, 27) ஆரம்பகால யூத கிறிஸ்தவர்களில் ஒருசிலர், ஏன் இந்த அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பினர் என்பதைக் காண்பது எளிதாயிருக்கிறது. அவர்களில் சிலர் இந்த விஷயத்தைக் குறித்து, பவுல் மற்றும் பர்னபாவுடன் ஒரு பெரிய விவாதத்தைக் கொண்டிருந்தனர். அதற்குத் தீர்வு காண்பதற்காக, கிறிஸ்தவ நிர்வாகக் குழுவோடு கலந்துபேசும்படி, பவுலும் மற்றவர்களும் எருசலேமுக்குச் சென்றனர்.—அப்போஸ்தலர் 15:1, 2.
9. அப்போஸ்தலர் 15-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தபடி, ஆரம்பகால நிர்வாகக் குழுவிற்கு என்ன ஒளிப் பிரகாசங்கள் வெளிப்படுத்தப்பட்டன?
9 யெகோவாவின் ஊழியர்களுக்கு விருத்தசேதனம் இனிமேலும் ஒரு தேவையாக இல்லை என்ற ஒளியை அந்த ஆரம்பகால கிறிஸ்தவர்கள், தெளிவான ஒரு அற்புதத்தின் வாயிலாக இம்முறை பெறவில்லை. மாறாக, வேதவசனங்களை ஆராய்வதன் மூலமும், வழிநடத்துதலுக்காக பரிசுத்த ஆவியைச் சார்ந்திருப்பதன் மூலமும், விருத்தசேதனமில்லாத புறஜாதியாரின் மன மாற்றத்தைக் குறித்து பேதுரு மற்றும் பவுலின் அனுபவங்களைக் கேட்பதன் மூலமும் அந்த அதிகப்படியான ஒளியை அவர்கள் பெற்றார்கள். (அப்போஸ்தலர் 15:6-21) அந்தத் தீர்மானம் ஒரு கடிதத்தின் மூலமாகத் தெரிவிக்கப்பட்டது; அதன் ஒரு பாகம் இவ்வாறு வாசிக்கிறது: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது.” (அப்போஸ்தலர் 15:28, 29) இவ்வாறாக, விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்ற கட்டளையிலிருந்தும் மோசேயின் நியாயப்பிரமாணம் தேவைப்படுத்திய மற்ற காரியங்களிலிருந்தும் ஆரம்ப கிறிஸ்தவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். எனவே, கலாத்திய கிறிஸ்தவர்களிடம் பவுலால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “அப்படிப்பட்ட சுயாதீனத்திற்கே கிறிஸ்து நம்மை விடுவித்தார்.”—கலாத்தியர் 5:1, NW.
சுவிசேஷங்களில் ஒளி
10. மத்தேயு சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சில ஒளிப் பிரகாசங்கள் யாவை?
10 சுமார் பொ.ச. 41-ல் எழுதப்பட்ட மத்தேயு சுவிசேஷம், அதை வாசிப்பவர்களின் நன்மைக்காக அநேக ஒளிப் பிரகாசங்களை உடையதாய் இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இயேசு தம்முடைய போதனைகளை விவரித்துக்கூறுவதை, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் வெகு சிலரே நேரடியாகக் கேட்டிருந்தனர். குறிப்பாக, ராஜ்யமே இயேசுவுடைய பிரசங்கத்தின் பொருளாக இருந்தது என்று மத்தேயு சுவிசேஷம் அழுத்திக் காண்பித்தது. மேலும், சரியான உள்நோக்கத்தைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இயேசு எவ்வளவு பலமாக அழுத்திக் கூறியிருந்தார்! அவருடைய மலைப் பிரசங்கத்திலும், (13-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற) அவருடைய உவமைகளிலும், 24 மற்றும் 25-ம் அதிகாரங்களிலுள்ள அவருடைய பெரிய தீர்க்கதரிசனத்திலும் உள்ள ஒளியின் பிரகாசங்கள்தான் எத்தனை எத்தனை! பொ.ச. 33 பெந்தெகொஸ்தேக்குச் சுமார் எட்டு வருடங்களுக்குப் பின்னரே எழுதப்பட்ட இதெல்லாம் மத்தேயு சுவிசேஷ பதிவில், ஆரம்ப கிறிஸ்தவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
11. லூக்கா மற்றும் மாற்கு சுவிசேஷங்களிலுள்ள பொருளடக்கத்தைப்பற்றி என்ன சொல்லப்படலாம்?
11 சுமார் 15 வருடங்களுக்குப் பின், லூக்கா தன் சுவிசேஷத்தை எழுதினார். அதில் பெரும்பாலானவை மத்தேயு பதிவோடு ஒத்திருந்தாலும், 59 சதவீதம் கூடுதலான விஷயமாகவே இருக்கிறது. மற்ற சுவிசேஷ எழுத்தாளர்களால் குறிப்பிடப்படாத, இயேசுவின் ஆறு அற்புதங்களையும் இரண்டு மடங்குக்கும் கூடுதலான அவருடைய உவமைகளையும் லூக்கா பதிவு செய்தார். செயல் ஈடுபாடு கொண்ட ஒரு மனிதராக, அற்புதம் செய்யும் ஒருவராக, இயேசு கிறிஸ்துவை முக்கியப்படுத்திக் காண்பித்து, மாற்கு தன் சுவிசேஷத்தை ஒருசில வருடங்கள் கழித்து எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. மத்தேயு மற்றும் லூக்காவால் முன்னதாக பதிவுசெய்யப்பட்ட சம்பவங்களையே மாற்கு பெரும்பாலும் பதிவு செய்தபோதிலும், அவர்கள் பதிவு செய்திராத ஒரு உவமையை அவர் பதிவு செய்தார். அந்த உவமையில், இயேசு, கடவுளுடைய ராஜ்யத்தை, முளைத்து, பின்பு கதிர்விட்டு, தானியத்தையும் விளைவிக்கும் விதைக்கு ஒப்பிட்டுப் பேசினார்.a—மாற்கு 4:26-29.
12. யோவான் சுவிசேஷம் எந்த அளவுக்குக் கூடுதலான அறிவொளியூட்டுதலைத் தந்தது?
12 மாற்கு தன் பதிவை எழுதி 30-க்கும் அதிகமான வருடங்களுக்குப் பின்னர், யோவானின் சுவிசேஷம் எழுதப்பட்டது. இயேசுவின் ஊழியத்தில், குறிப்பாக, அவர் மனிதனானதற்கு முன்னான வாழ்க்கையைப் பற்றி பல குறிப்புகளின்மூலம், எப்பேர்ப்பட்ட ஒளிக் கதிரை யோவான் பரவச் செய்கிறார்! யோவான் மட்டுமே லாசருவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய பதிவை அளிக்கிறார்; மேலும் 13 முதல் 17 அதிகாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, இயேசு தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் சொன்னவற்றிலுள்ள அநேக நல்ல குறிப்புகளையும், அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்றிரவு செய்த உருக்கமான ஜெபத்தையும் அவர் மட்டுமே கூறுகிறார். உண்மையில், யோவான் சுவிசேஷத்தில், 92 சதவீத பகுதி தனித்தன்மை வாய்ந்தது என சொல்லப்படுகிறது.
பவுலின் கடிதங்களில் ஒளிப் பிரகாசங்கள்
13. பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தை ஏன் சிலர் ஒரு சுவிசேஷமாகக் கருதியிருக்கின்றனர்?
13 அப்போஸ்தலர் காலங்களில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்குச் சத்தியத்தின் பிரகாசங்களைக் கொண்டு செல்வதற்கு முக்கியமாக அப்போஸ்தலன் பவுல் பயன்படுத்தப்பட்டார். உதாரணமாக, சுமார் பொ.ச. 56-ல், ரோமருக்கு எழுதிய பவுலின் கடிதம் உள்ளது; கிட்டத்தட்ட லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தை எழுதிய அதே சமயத்தில் எழுதப்பட்டதாய் இருக்கிறது. கடவுளின் தகுதியற்ற தயவின் காரணமாகவும் இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலமாகவும் நீதி பெறப்படுகிறது என்ற உண்மையை பவுல் இந்தக் கடிதத்தில் சிறப்பித்துக்காட்டுகிறார். நற்செய்தியின் இந்த அம்சத்தை பவுல் அழுத்திக்கூறியிருப்பது, அவர் ரோமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தைச் சிலர் ஐந்தாவது சுவிசேஷமாகக் கருதும்படி செய்திருக்கிறது.
14-16. (அ) கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில், ஐக்கியத்திற்கான தேவையைப்பற்றி பவுல் என்ன ஒளியூட்டுதலைக் கொடுத்தார்? (ஆ) நடத்தையைக் குறித்ததில் மேலுமான என்ன வெளிச்சத்தை ஒன்று கொரிந்தியர் கொண்டிருக்கிறது?
14 கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களை உறுத்திக்கொண்டிருந்த ஒருசில காரியங்களைப் பற்றி பவுல் எழுதினார். கொரிந்தியருக்கு அவர் எழுதிய கடிதம், இன்று வரையாக கிறிஸ்தவர்களுக்குப் பயனளித்திருக்கும் ஏவப்பட்டெழுதப்பட்ட ஆலோசனையை உட்படுத்துகிறது. முதலாவதாக, குறிப்பிட்ட நபர்களை மையமாக வைத்து தனிப்பட்ட கருத்து வேறுபாட்டு குழுக்களை உருவாக்கியதால் அவர்கள் செய்த தவறை அவர் கொரிந்தியருக்கு அறிவுறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு தைரியமாகச் சொல்வதன்மூலம், அப்போஸ்தலன் அவர்களுடைய மனநிலையை சரிசெய்தார்: “நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.”—1 கொரிந்தியர் 1:10-15.
15 வினைமையான ஒழுக்கக்கேடும் கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவ சபையில் பொறுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. அங்கு ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்திருந்தான்; இதன்மூலம் ‘அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத வேசித்தனத்தை’ அவன் நடப்பித்து வந்தான். பவுல் தெளிவான வார்த்தைகளில் எழுதினார்: “அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.” (1 கொரிந்தியர் 5:1, 11-13) அது—சபை நீக்கம் செய்தல்—கிறிஸ்தவ சபைக்குப் புதிதான ஒன்றாக இருந்தது. கொரிந்து சபையில் அறிவொளியூட்டப்படுதல் தேவைப்பட்ட மற்றொரு பிரச்சினை, அதன் அங்கத்தினர் சிலர், குறைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு தங்கள் ஆவிக்குரிய சகோதரர்களை உலகப்பிரகாரமான வழக்காடு மன்றங்களுக்குக் கொண்டு சென்றிருந்த உண்மையோடு சம்பந்தப்பட்டிருந்தது. இவ்வாறு செய்ததற்காக பவுல் அவர்களை வன்மையாகக் கண்டித்தார்.—1 கொரிந்தியர் 6:5-8.
16 கொரிந்து சபையில் தொந்தரவாக இருந்த மற்றுமொரு பிரச்சினையானது பாலுறவுகளோடு தொடர்புடையதாகும். பாலின ஒழுக்கக்கேடு பரவலாக இருந்ததால், ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியையும் ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்த புருஷனையும் கொண்டிருப்பது நல்லது என்று 1 கொரிந்தியர் 7-ம் அதிகாரத்தில் பவுல் காண்பித்தார். திருமணமாகாதவர்கள் அதிக கவனச்சிதறலின்றி யெகோவாவைச் சேவிக்க முடிகிறது, என்றாலும் திருமணமின்றியிருக்கும் வரத்தை எல்லாரும் கொண்டில்லை என்றும் பவுல் காண்பித்தார். ஒரு பெண்ணின் புருஷன் மரணமடைந்தால், அவள் மீண்டும் திருமணம்செய்ய விடுதலையாய் இருப்பாள், ஆனால் “கர்த்தருக்கு உட்பட்டவனை மாத்திரமே” திருமணம் செய்ய வேண்டும்.—1 கொரிந்தியர் 7:39, NW.
17. உயிர்த்தெழுதலைப் பற்றிய போதனையின்மேல் பவுல் என்ன வெளிச்சத்தை அளித்தார்?
17 உயிர்த்தெழுதலைக் குறித்து எப்பேர்ப்பட்ட ஒளிப் பிரகாசங்களைப் பிரகாசிக்கச் செய்ய கர்த்தர் பவுலைப் பயன்படுத்தினார்! அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன வகையான சரீரத்துடன் எழுப்பப்படுவார்கள்? “ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்,” என்று பவுல் எழுதினார். மாம்சப்பிரகாரமான சரீரம் எதுவும் பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதில்லை, ஏனென்றால் “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது.” அபிஷேகம்செய்யப்பட்ட எல்லாரும் மரணத்தில் நித்திரையாய் இருப்பதில்லை, இயேசுவுடைய வந்திருத்தலின்போது, சிலர் மரித்த உடனேயே சாவாமையுள்ள வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று பவுல் மேலுமாகச் சொன்னார்.—1 கொரிந்தியர் 15:43-53.
18. தெசலோனிக்கேயருக்குப் பவுல் எழுதிய முதல் கடிதம் எதிர்காலத்தைப் பற்றிய என்ன வெளிச்சத்தைக் கொண்டிருந்தது?
18 தெசலோனிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எழுதிய கடிதத்தில், எதிர்காலத்தின்பேரில் ஒளி வீசச்செய்யும்படி அவர் பயன்படுத்தப்பட்டார். இரவில் திருடன் வருகிறவிதமாக யெகோவாவின் நாள் வரும். பவுல் மேலுமாக விவரித்தார்: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.”—1 தெசலோனிக்கேயர் 5:2, 3.
19, 20. எபிரெயருக்குப் பவுல் எழுதிய கடிதத்தில், எருசலேம் மற்றும் யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் என்ன ஒளிப் பிரகாசங்களைப் பெற்றார்கள்?
19 எபிரெயருக்கு எழுதிய கடிதத்தின் மூலமாக பவுல், எருசலேம் மற்றும் யூதேயாவிலிருந்த ஆரம்ப கிறிஸ்தவர்களுக்கு ஒளிப் பிரகாசங்களைத் தெரியப்படுத்தினார். மோசேயின் நியாயப்பிரமாண வணக்கமுறைக்கு மேலாக கிறிஸ்தவ வணக்கமுறையின் சிறப்பை எவ்வளவு திறம்பட அவர் காண்பித்தார்! தூதர்களால் கடத்தப்பட்ட நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அப்படிப்பட்ட தேவதூத தூதுவர்களைவிட மிகவும் மேம்பட்டவரான கடவுளுடைய குமாரனால் முதலாவதாகச் சொல்லப்பட்ட ஒரு இரட்சிப்பில் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தைக் கொண்டிருக்கிறார்கள். (எபிரெயர் 2:2-4) கடவுளுடைய வீட்டில் மோசே, வெறும் ஒரு ஊழியக்காரனாகவே இருக்கிறார். இயேசு கிறிஸ்துவோ அந்த முழு வீட்டையும் நடத்துபவராக இருக்கிறார். கிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியராக இருந்து, ஆரோனிய ஆசாரியத்துவத்திற்கு மிகவும் மேம்பட்ட ஒரு ஸ்தானத்தைக் கொண்டிருக்கிறார். விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலில் குறைவுபட்டதன் காரணமாக, இஸ்ரவேலர் கடவுளுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியவில்லை என்றும், ஆனால் கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் காரணமாக அதனுள் பிரவேசிக்கின்றனர் என்றும் பவுல் குறிப்பிட்டுக் காட்டினார்.—எபிரெயர் 3:1–4:11.
20 மேலுமாக, புதிய உடன்படிக்கையானது நியாயப்பிரமாண உடன்படிக்கையைவிட மிகவும் மேலானது. எரேமியா 31:31-34-ல், 600 வருடங்களுக்கு முன்னர் தீர்க்கதரிசனமுரைக்கப்பட்டபடி, புதிய உடன்படிக்கையிலுள்ளவர்கள், கடவுளுடைய சட்டம் தங்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டவர்களாகவும் பாவங்களுக்கு உண்மையான மன்னிப்பை அனுபவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள், வருடந்தோறும் தன் சொந்த பாவங்களுக்காகவும் மக்களுடைய பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்தவேண்டியிருந்த ஒரு பிரதான ஆசாரியனைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, பாவமில்லாதவரும் ஒரேதரம் பாவங்களுக்கான பலியைச் செலுத்தியவருமான இயேசு கிறிஸ்துவை தங்களுக்குப் பிரதான ஆசாரியராகக் கொண்டிருக்கின்றனர். தம் பலியைச் செலுத்த கைகளால் கட்டப்பட்ட பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்குப் பதிலாக, அவர் பரலோகத்தில்தானே, யெகோவாவுக்கு முன்பாகக் காணப்படும்படி அங்கு பிரவேசித்தார். மேலுமாக, மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழிருந்த மிருக பலிகள் பாவங்களை முழுமையாக நீக்கிப்போட முடிவதில்லை; முடிந்திருந்தால் அவை வருடந்தோறும் செலுத்தப்பட்டிருக்காது. ஆனால், ஒரேதரமாகச் செலுத்தப்பட்ட கிறிஸ்துவின் பலி, உண்மையில் பாவங்களை நீக்கிப்போடுகிறது. இதெல்லாம், இன்று அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரும் ‘வேறே ஆடுகளும்’ சேவை செய்யக்கூடிய பிராகாரங்களை உடைய பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின்மேல் ஒளியைப் பிரகாசிக்கச் செய்கிறது.—யோவான் 10:16; எபிரெயர் 9:24-28.
21. அப்போஸ்தலர் காலங்களில் சங்கீதம் 97:11 மற்றும் நீதிமொழிகள் 4:18-ன் நிறைவேற்றத்தைக் குறித்து இந்தக் கலந்தாலோசிப்பு எதைக் காண்பித்திருக்கிறது?
21 அப்போஸ்தலன் பேதுரு மற்றும் சீஷர்களாகிய யாக்கோபு மற்றும் யூதாவுடைய கடிதங்களில் காணப்படுகிறவற்றைப் போன்ற ஒளிப் பிரகாசங்களைப்பற்றிய அதிக உதாரணங்களைக் குறிப்பிடுவதற்கு இடம் போதாது. ஆனால் சங்கீதம் 97:11 மற்றும் நீதிமொழிகள் 4:18, அப்போஸ்தலர் காலங்களில் கருத்தைக்கவரும் நிறைவேற்றங்களைக் கொண்டிருந்தன என்பதைக் காண்பிப்பதற்கு மேற்சொல்லப்பட்டவை போதுமானவையாக இருக்கும். சத்தியமானது, மாதிரிகளிலும் நிழல்களிலுமிருந்து நிறைவேற்றங்களுக்கும் மெய்மைகளுக்கும் முன்னேறியது.—கலாத்தியர் 3:23-25; 4:21-26.
22. அப்போஸ்தலரின் மரணத்திற்குப் பின் என்ன நடந்தது, அடுத்த கட்டுரை எதைக் காண்பிக்கும்?
22 இயேசுவின் அப்போஸ்தலருடைய மரணத்துக்கும் முன்னுரைக்கப்பட்ட விசுவாசதுரோகம் ஆரம்பிப்பதற்கும் பின்னர், சத்தியத்தின் ஒளி மிக மங்கலானது. (2 தெசலோனிக்கேயர் 2:1-11) என்றபோதிலும், இயேசுவின் வாக்குறுதிக்கு இசைவாக, பல நூற்றாண்டுகளுக்குப் பின் எஜமான் திரும்பி வந்தபோது, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஏற்ற வேளையில் தம் “வேலைக்காரருக்கு” போஜனம் கொடுப்பதாகக் கண்டார். அதன் விளைவாக, “தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும்” இயேசு கிறிஸ்து அந்த அடிமையை விசாரணைக்காரனாக வைத்தார். (மத்தேயு 24:45-47, NW) என்னென்ன ஒளிப் பிரகாசங்கள் பின்தொடர்ந்தன? அடுத்த கட்டுரையில் இது சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு கிறிஸ்தவன் ஆளுமை பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காகத் தெரிவுசெய்யும் சூழலை இங்கு நிலம் குறிப்பிடுகிறது.—காவற்கோபுரம் (ஆங்கிலம்), ஜூன் 15, 1980, பக்கங்கள் 18-19-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ சத்தியத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் படிப்படியானதே என்பதை எந்த பைபிள் வசனங்கள் காண்பிக்கின்றன?
◻ அப்போஸ்தலர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சில ஒளிப் பிரகாசங்கள் யாவை?
◻ சுவிசேஷங்களில் என்ன வெளிச்சம் காணப்படுகிறது?
◻ பவுலின் கடிதங்கள் என்னென்ன ஒளிப் பிரகாசங்களைக் கொண்டிருக்கின்றன?