‘தேவனே, உமது ஒளியை அனுப்பியருளும்’
“உமது ஒளியையும் சத்தியத்தையும் அனுப்பியருளும். அவையே என்னை வழிநடத்தட்டும்.”—சங்கீதம் 43:3, Nw.
1. யெகோவா தம் நோக்கங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
தம் ஊழியர்களுக்கு தமது நோக்கங்களை தெரியப்படுத்துவதில் யெகோவா மிகவும் கரிசனை மிக்கவர். திடீரென பாயும் ஒளிவெள்ளம் கண்களையே குருடாக்கிவிடும். அதுபோல, எல்லா சத்தியங்களையும் ஒரே சமயத்தில் கடவுள் வெளிப்படுத்துவதில்லை. மாறாக, படிப்படியாக அவற்றை நமக்கு தெரியப்படுத்துகிறார். ஜீவனுக்கான பாதையில் நாம் மேற்கொண்டுள்ள பயணத்தை, நீண்ட தூரம் நடந்து செல்லும் பயணத்திற்கு ஒப்பிடலாம். அதிகாலையில் பயணத்தை ஆரம்பிக்கையில் அவரால் தெளிவாக காண முடிவதில்லை. அடிவானத்திலிருந்து சூரியன் மெதுவாக எட்டிப் பார்க்கும்போது, தன்னைச் சுற்றியுள்ளவற்றை ஓரளவு காண முடிகிறது. தூரத்தில் உள்ளவையோ மங்கலாகத்தான் தெரிகின்றன. சூரியன் நடுவானத்திற்கு வரும்போது, தூரத்தில் உள்ளவற்றையும் அவரால் தெளிவாக காண முடிகிறது. கடவுள் அருளும் ஆவிக்குரிய ஒளியும் இதைப்போன்றே இருக்கிறது. ஒரு சமயத்தில் சில விஷயங்களையே நாம் புரிந்துகொள்ள கடவுள் அனுமதிக்கிறார். இதே விதத்தில்தான், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலை கொடுத்தார். பூர்வ காலங்களில், யெகோவா தம் ஜனங்களுக்கு எவ்விதமாக ஆவிக்குரிய தெளிந்துணர்வைத் தந்தார் என்பதையும் இன்று எவ்விதமாக தருகிறார் என்பதையும் நாம் சிந்திப்போம்.
2. கிறிஸ்தவ சகாப்தத்திற்குமுன் தெளிவூட்டுதலை யெகோவா எப்படி தந்தார்?
2 43-ம் சங்கீதத்தை தொகுத்தவர்கள் கோராகின் குமாரர்கள். லேவியர்களாக, கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டங்களை மக்களுக்கு போதிக்கும் பாக்கியம் அவர்களுக்கு இருந்தது. (மல்கியா 2:7) அவர்களுடைய மகா போதகராய் விளங்கியவர் யெகோவாவே. எல்லா ஞானத்துக்கும் ஊற்றுமூலராக அவரையே அவர்கள் சார்ந்திருந்தார்கள். (ஏசாயா 30:20, NW) “தேவனே, . . . உமது ஒளியையும் சத்தியத்தையும் அனுப்பியருளும். அவையே என்னை வழிநடத்தட்டும்” என சங்கீதக்காரர் ஜெபித்தார். (சங்கீதம் 43:1, 3, NW) இஸ்ரவேலர்கள் உண்மைத்தன்மையை நிரூபித்த வரை யெகோவா தம் வழிகளை அவர்களுக்கு கற்பித்தார். பல நூற்றாண்டுகளுக்குப்பின், தமது குமாரனை பூமிக்கு அனுப்பி, மிகச் சிறந்த, குறிப்பிடத்தக்க ஒளியையும் சத்தியத்தையும் அவர்களுக்கு தந்தார். இவ்வாறாக, யெகோவா அவர்களுக்கு கருணை காட்டினார்.
3. இயேசுவின் போதனைகளால் யூதர்கள் எவ்வாறு சோதிக்கப்பட்டனர்?
3 மனிதனாக வந்த கடவுளின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து உண்மையிலேயே “உலகத்திற்கு ஒளியாயிரு”ந்தார். (யோவான் 8:12) அவர் “அநேக விசேஷங்களை உவமைகளாக போதித்தார்.” அவை புதிய விஷயங்கள். (மாற்கு 4:2) “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என பொந்தியு பிலாத்துவிடம் அவர் சொன்னார். (யோவான் 18:36) ரோமர்களுக்கும் தேசியவாத யூதர்களுக்கும் இது நிச்சயமாகவே புதிய கருத்தாக இருந்தது. ரோம சாம்ராஜ்யத்தை தரைமட்டமாக்கி, இஸ்ரவேலை அதன் முந்தைய நிலைக்கு மேசியா திரும்ப நிலைநாட்டுவார் என அவர்கள் நினைத்தனர். யெகோவாவிடம் இருந்து வந்த ஒளியை இயேசு பிரதிபலித்தார். ஆனால், யூத ஆட்சியாளர்களுக்கோ அவருடைய வார்த்தைகள் கசந்தன. ஏனெனில், அவர்கள் “தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.” (யோவான் 12:42, 43) பெரும்பாலானோர் கடவுளிடமிருந்து வந்த ஆவிக்குரிய ஒளியையும் சத்தியத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, மனித பாரம்பரியங்களையே விடாது பற்றிக்கொண்டிருந்தனர்.—சங்கீதம் 43:3; மத்தேயு 13:15.
4. இயேசுவின் சீஷர்கள் தொடர்ந்து புரிந்துகொள்ளுதலில் வளருவார்கள் என்பது நமக்கு எப்படி தெரியும்?
4 எனினும், இயேசு போதித்த சத்தியத்தை நேர்மை இருதயமுள்ள சில ஆண்களும் பெண்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். கடவுளுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதில் அவர்கள் சீராக முன்னேறினர். அவர்களுடைய போதகரின் பூமிக்குரிய வாழ்க்கை முடிவுறும்போது, அவர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்” என இயேசு அவர்களிடம் சொன்னார். (யோவான் 16:12) கடவுளுடைய சத்தியத்தை புரிந்துகொள்வதில் சீஷர்கள் தொடர்ந்து வளர வேண்டியவர்களாய் இருந்தனர்.
தொடர்ந்து ஒளி பிரகாசித்தல்
5. முதல் நூற்றாண்டில் என்ன கேள்வி எழும்பியது, அதைத் தீர்க்கும் பொறுப்பு யாருக்கு இருந்தது?
5 இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கடவுளிடமிருந்து வந்த ஒளி முன்னைவிட அதிகமாய் பிரகாசித்தது. பேதுருவுக்கு கொடுக்கப்பட்ட ஒரு காட்சியில், இதுமுதல் விருத்தசேதனமில்லாத புறஜாதியாரும் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக முடியும் என்பதை யெகோவா வெளிப்படுத்தினார். (அப்போஸ்தலர் 10:9-17) மாபெரும் வெளிப்படுத்துதல் அது! என்றபோதிலும், பின்னர் ஒரு கேள்வி எழுந்தது: கிறிஸ்தவர்களாக ஆனபின் இந்த புறஜாதியார் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டுமென யெகோவா எதிர்பார்த்தாரா? இந்தக் கேள்விக்கான பதில் அந்தக் காட்சியில் தரப்படவில்லை. கிறிஸ்தவர்களுக்குள்ளே காரசாரமான விவாதத்திற்குரிய பொருளாகியது அது. மதிப்புமிக்க அவர்களுடைய ஐக்கியம் பாழாகாமல் இருக்க வேண்டுமெனில், இந்த விவாதம் தீர்க்கப்பட வேண்டும். எனவே, எருசலேமில், “அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.”—அப்போஸ்தலர் 15:1, 2, 6.
6. விருத்தசேதனம் பற்றிய கேள்வியை அப்போஸ்தலரும் மூப்பரும் சிந்தித்தபோது, என்ன முறையை அவர்கள் பின்பற்றினர்?
6 விசுவாசிகளாக மாறிய புறஜாதியாருக்கான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை அங்கு கூடியிருந்தவர்கள் எப்படி தீர்மானிக்க முடியும்? அந்தக் கலந்தாலோசிப்பிற்கு தலைமை தாங்கும்படி ஒரு தூதரை யெகோவா அனுப்பவில்லை. அல்லது ஒரு தரிசனத்தை அவர்களுக்கு தரவில்லை. இருப்பினும், அப்போஸ்தலரும் மூப்பரும் எந்தவித வழிநடத்துதலும் இன்றி முற்றிலுமாக கைவிடப்படவில்லை. விருத்தசேதனமில்லாத புறஜாதியார்மீது தம் பரிசுத்த ஆவியைப் பொழிவதன் மூலம் கடவுள் எப்படி அவர்களோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தார் என்பதை கண்கூடாக பார்த்த சில யூத கிறிஸ்தவர்களின் சாட்சியத்தை அவர்கள் கலந்து ஆராய்ந்தனர். வழிநடத்துதலுக்காக வேதவசனங்களையும் அவர்கள் ஆராய்ந்தனர். அதன் விளைவாக, தெளிவூட்டும் வேதவசனத்தின் அடிப்படையில் ஒரு பரிந்துரையை சீஷனாகிய யாக்கோபு அளித்தார். அதற்கான ஆதாரத்தை கலந்தாராய்கையில், கடவுளுடைய சித்தம் தெளிவாயிற்று: யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற புறஜாதியார் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டியதில்லை. இந்தத் தீர்மானத்தை அப்போஸ்தலரும் மூப்பரும் உடனடியாக நிருபத்தில் எழுதினர். உடன்கிறிஸ்தவர்கள் இதனால் வழிநடத்தப்படுவதற்காக அவ்வாறு செய்தனர்.—அப்போஸ்தலர் 15:12-29; 16:4.
7. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எந்த விதத்தில் படிப்படியாக முன்னேறினர்?
7 புறஜாதியாரைக் குறித்து கடவுளுடைய நோக்கத்தின் தனிச்சிறப்புமிக்க இந்தப் புதிய புரிந்துகொள்ளுதலை பெற்றபோது, யூதக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். பொதுவாக புறஜாதியாரைப் பற்றிய அவர்களுடைய கருத்தில் மாற்றத்தை இது தேவைப்படுத்தியபோதிலும் அதை தாராளமாக ஏற்றனர். தங்கள் முன்னோரின் பாரம்பரியங்களையே பிடித்துக்கொண்டிருந்த யூத மதத் தலைவர்களைப் போல் இல்லாமல், அநேகர் இதை வரவேற்று ஏற்றுக்கொண்டனர். அவர்களுடைய மனத்தாழ்மையை யெகோவா ஆசீர்வதித்தார். அதினாலே “சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.”—அப்போஸ்தலர் 15:31; 16:5.
8. (அ) முதல் நூற்றாண்டு முடிவுற்றபின், இன்னும் அதிகமான ஒளி எதிர்பார்க்கப்பட்டது எப்படி நமக்கு தெரியும்? (ஆ) பொருத்தமான என்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?
8 முதல் நூற்றாண்டு முழுவதுமாக ஆவிக்குரிய ஒளி தொடர்ந்து பிரகாசித்தது. ஆனால், தம் நோக்கத்தின் எல்லா அம்சங்களையும் அந்த ஆரம்பக்கால கிறிஸ்தவர்களுக்கு யெகோவா வெளிப்படுத்தவில்லை. “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்” என முதல் நூற்றாண்டு உடன் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 13:12) இப்படிப்பட்ட ஒரு கண்ணாடிக்கு ஒளியை சிறந்த விதத்தில் பிரதிபலிக்கும் மேற்பரப்பு இல்லை. இதைப் போலவே, ஆவிக்குரிய ஒளியை புரிந்துகொள்ளுதல் மட்டுப்பட்டதாகவே இருந்தது. அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பிறகு, சிறிது காலத்திற்கு அந்த ஒளி மங்கிவிட்டது. ஆனால் சமீப ஆண்டுகளில், ஆவிக்குரிய அறிவு அபரிமிதமாக உள்ளது. (தானியேல் 12:4) தம்முடைய ஜனங்களை யெகோவா இன்று எவ்விதம் தெளிவூட்டுகிறார்? வேதவசனங்களைக் குறித்து நமக்கிருக்கும் புரிந்துகொள்ளுதலை விரிவுப்படுத்துகையில் நாம் எவ்விதமாக பிரதிபலிக்க வேண்டும்?
படிப்படியாய் ஒளி பிரகாசித்தல்
9. பைபிள் படிப்புக்கான என்ன தனித்தன்மை வாய்ந்த, சிறந்த முறை ஆரம்ப பைபிள் மாணாக்கர்களால் பயன்படுத்தப்பட்டது?
9 நவீன காலங்களில், முதல் ஒளிக்கீற்று 19-ம் நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்து ஆண்டுகளில் தோன்ற ஆரம்பித்தது. சில கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் வேதவசனங்களை ஆர்வத்தோடு படிக்க துவங்கியபோது இது ஆரம்பித்தது. பைபிள் படிப்புக்கான நடைமுறையான வழி ஒன்று துவக்கப்பட்டது. அதாவது, யாராவது ஒருவர் ஒரு கேள்வியை எழுப்புவார். பின், அதனோடு சம்பந்தப்பட்ட எல்லா வசனங்களையும் குழுவாக அலசி ஆராய்வர். ஒரு பைபிள் வசனம் மற்றொன்றோடு முரண்படுவதுபோல் தோன்றினால், நேர்மை மனமுள்ள இந்தக் கிறிஸ்தவர்கள் அந்த இரண்டு வசனங்களையும் பொருத்துவதற்கு முயலுவர். அன்றுள்ள மதத் தலைவர்களைப் போல் பாரம்பரியங்கள் அல்லது மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட கொள்கைகள் தங்களை வழிநடத்த அவர்கள் அனுமதிக்கவில்லை. மாறாக, பைபிள் மாணாக்கர்கள் (யெகோவாவின் சாட்சிகள் அப்போது அவ்வாறே அறியப்பட்டனர்) தங்களுக்கு வழிகாட்டியாக பரிசுத்த பைபிளையே கொண்டிருந்தனர். கிடைத்த எல்லா பைபிள் ஆதாரங்களையும் ஆழ்ந்து சிந்தித்தபின், அவர்களுடைய முடிவுகளை பதிவு செய்தனர். இந்த வகையில், பைபிளின் அடிப்படை கோட்பாடுகள் பலவற்றைப் புரிந்துகொள்ளுவது தெளிவாக்கப்பட்டது.
10. பைபிள் படிப்புக்கு உதவும் என்ன புத்தகங்களை சார்ல்ஸ் டேஸ் ரஸல் எழுதினார்?
10 பைபிள் மாணாக்கர்களில் தனித்து விளங்கியவர் சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவரே. வேதாகமங்களில் படிப்புகள் (ஆங்கிலம்) என தலைப்பிடப்பட்ட, பைபிள் படிப்புக்கு உதவும் ஆறு தொகுப்புகளை அவர் எழுதினார். பைபிள் புத்தகங்களாகிய எசேக்கியேலையும் வெளிப்படுத்துதலையும் விளக்கும் ஏழாவது தொகுப்பையும் சகோதரர் ரஸல் எழுத நினைத்திருந்தார். “எப்போது நான் விளக்கத்தை கண்டுபிடிக்கிறேனோ, அப்போது ஏழாவது தொகுப்பை எழுதுவேன்” என அவர் சொன்னார். இருந்தாலும், “இதற்கான விளக்கத்தை கர்த்தர் வேறே யாருக்காவது கொடுத்தால், அவர் அதை எழுதுவார்” என அவர் மேலும் சொன்னார்.
11. கடவுளின் நோக்கங்களை நாம் புரிந்துகொள்வதற்கும் நேரத்திற்கும் என்ன சம்பந்தம்?
11 சி. டி. ரஸல் அவர்களால் சொல்லப்பட்ட இந்தக் கூற்று முக்கியமான ஓர் அம்சத்தை கோடிட்டு காட்டுகிறது. குறிப்பிட்ட சில பைபிள் வாக்கியங்களை புரிந்துகொள்ளும் நம் திறமை முக்கியமாய் நேரத்தையே சார்ந்திருக்கிறது. கவலைப்படுவதால் மாத்திரமே அதற்குரிய காலத்திற்குமுன் சூரியன் உதிக்கும்படி எவருமே துரிதப்படுத்த முடியாது. அதைப் போலவே, வெளிப்படுத்துதல் புத்தகத்தின்மீது ஒளியைப் பிரகாசிக்கும்படி எவருமே கட்டாயப்படுத்த முடியாது என்பதை சகோதரர் ரஸல் அறிந்திருந்தார்.
வெளிப்படுத்தப்படுதல்—கடவுளின் உரிய காலத்தில்
12. (அ) பைபிள் தீர்க்கதரிசனம் எப்போது தெள்ளந்தெளிவாக புரிந்துகொள்ளப்படும்? (ஆ) பைபிள் தீர்க்கதரிசனத்தை புரிந்துகொள்ளும் நம் திறமை கடவுளுடைய கால அட்டவணையின்பேரில்தான் சார்ந்திருக்கிறதென்பதை என்ன உதாரணம் காட்டுகிறது? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)
12 மேசியாவைப் பற்றிய அநேக தீர்க்கதரிசனங்களை இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுதான் அவருடைய அப்போஸ்தலர்கள் புரிந்துகொண்டனர். அதைப் போன்றே, இன்றும் பைபிள் தீர் க்கதரிசனங்களின் ஒவ்வொரு நுணுக்கமான குறிப்புகளையும் அவை நிறைவேற்றம் அடைந்த பின்னர்தான் கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்கின்றனர். (லூக்கா 24:15, 27; அப்போஸ்தலர் 1:15-21; 4:26, 27) தீர்க்கதரிசனங்கள் அடங்கிய ஒரு புத்தகம் வெளிப்படுத்துதல். எனவே, அது விவரிக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்போதுதானே அவற்றை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, வெளிப்படுத்துதல் 17:9-11-ல் குறிப்பிடப்பட்டுள்ள, அடையாள அர்த்தமுள்ள சிவப்பு நிற மூர்க்கமிருகத்தின் அர்த்தத்தை சி. டி. ரஸல் சரியாக புரிந்துகொண்டிருக்க முடியாது. ஏனெனில், அந்த மிருகம் அடையாளப்படுத்தும் சர்வதேச சங்கம், ஐக்கிய நாட்டு சபை போன்ற அமைப்புகள் அவருடைய மரணத்திற்குப்பின்தான் தோன்றின. a
13. குறிப்பிட்ட ஒரு பைபிள் பொருளின்மீது ஒளி பிரகாசிக்கும்போது சில சமயங்களில் என்ன நேரிடுகிறது?
13 விருத்தசேதனமில்லாத புறஜாதியாரும் உடன்விசுவாசிகளாக முடியும் என்பதை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கற்றனர். அந்த மாற்றம், புறஜாதியார் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டுமா என்ற புதிய கேள்வியை அப்போது எழுப்பியது. அப்போஸ்தலர்களும் மூப்பர்களும், விருத்தசேதனத்தைப் பற்றிய இந்த விவாதத்தை முழுமையாக மறுபடியும் ஆராயும்படி இது வழிநடத்திற்று. இது இன்றும் பொருந்துகிறது. ஒரு பைபிள் பொருளின்மீது பிரகாசிக்கும் ஒளிச்சுடர், அதோடு சம்பந்தப்பட்ட குறிப்புகளை மறுபடியும் ஆராயும்படி கடவுளுடைய அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியர்களாகிய “உண்மையும் விவேகமுள்ள அடிமை” வகுப்பாரை சில சமயங்களில் தூண்டியுள்ளது. பின்குறிப்பிடப்பட்டுள்ள, சமீபத்திய உதாரணம் ஒன்று அதை விளக்குகிறது.—மத்தேயு 24:45, NW.
14-16. ஆவிக்குரிய ஆலயத்தைப் பற்றி திருத்தப்பட்ட என்ன கருத்து, எசேக்கியேல் 40 முதல் 48 அதிகாரங்களின் நம் புரிந்துகொள்ளுதலை பாதித்திருக்கிறது?
14 1971-ல், “நான் யெகோவா என்பதை தேசங்கள் அறிந்துகொள்ளும்”—எப்படி? என்று தலைப்பிடப்பட்ட ஆங்கில புத்தகத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் விளக்கம் பிரசுரிக்கப்பட்டது. ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்தை அந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயம் சுருக்கமாக சிந்தித்தது. (எசேக்கியேல், அதிகாரங்கள் 40-48) அந்த சமயத்தில், எசேக்கியேலின் ஆலய தரிசனம் புதிய உலகத்தில் எப்படி நிறைவேற்றப்படும் என்பதற்கே கவனம் செலுத்தப்பட்டது.—2 பேதுரு 3:13.
15 எனினும், எசேக்கியேலுடைய தரிசனத்தின் நம் புரிந்துகொள்ளுதலை, டிசம்பர் 1, 1972, காவற்கோபுரம் (ஆங்கிலம்) பிரதியில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு கட்டுரைகள் சரிசெய்தன. எபிரெயர் 10-ம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுலால் விவரிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய பெரிய ஆலயம் அக்கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்பட்டது. பூமியில் இருக்கையில் அபிஷேகம்பண்ணப்பட்டோரின் நிலையை, ஆவிக்குரிய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் உட்பிரகாரமும் குறிக்கின்றன என்பதை அந்தக் காவற்கோபுரம் விளக்கியது. பல வருடங்களுக்குப்பின், எசேக்கியேல் புத்தகத்தின் 40 முதல் 48 அதிகாரங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. ஆவிக்குரிய ஆலயம் இன்று இயங்குவதுபோல், எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட ஆலயமும் இன்று இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிந்துகொள்ளப்பட்டது. எப்படி?
16 எசேக்கியேலின் தரிசனத்தில், ஆசாரியரல்லாத கோத்திரத்தாருக்கு சேவை செய்ய ஆசாரியர்கள் ஆலயத்தின் பிரகாரத்தில் வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள். “ராஜரீக ஆசாரியக்கூட்டமான,” யெகோவாவின் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியர்களை இந்த ஆசாரியர்கள் தெளிவாக பிரதிநிதித்துவம் செய்கின்றனர். (1 பேதுரு 2:9) எனினும், இயேசுவின் ஆயிரமாண்டு ஆட்சி முழுவதும் ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் அவர்கள் சேவை செய்யமாட்டார்கள். (வெளிப்படுத்துதல் 20:4) அந்தக் காலப்பகுதி முழுவதும் இல்லையென்றாலும், பெரும்பாலான பகுதி அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் ஆவிக்குரிய ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலமாகிய “பரலோகத்திலேதானே” கடவுளை சேவிப்பர். (எபிரெயர் 9:24) எசேக்கியேலுடைய ஆலயத்தின் பிரகாரத்தில் ஆசாரியர்கள் வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள். எனவே, அபிஷேகம்பண்ணப்பட்டோரில் இன்னும் சிலர் பூமியில் இருக்கும் இந்தக் காலப்பகுதியில்தானே அந்த தரிசனம் நிறைவேறிக் கொண்டிருக்க வேண்டும். இந்த பொருளின்பேரிலான திருத்தப்பட்ட கருத்தை இப்பத்திரிகையின் மார்ச் 1, 1999 பிரதி கலந்தாலோசித்தது. எனவே, 20-ம் நூற்றாண்டின் முடிவு வரையாக, எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தின்மீது ஆவிக்குரிய ஒளி தொடர்ந்து பிரகாசித்திருக்கிறது.
உங்கள் கருத்தை திருத்திக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருங்கள்
17. சத்தியத்தின் அறிவைப் பெற்றதிலிருந்து உங்களுடைய சொந்த கருத்துக்களில் என்ன மாற்றங்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள், அவை உங்களுக்கு எவ்விதங்களில் நன்மை அளித்திருக்கின்றன?
17 சத்தியத்தின் அறிவைப் பெற விரும்புவோர் யாராக இருந்தாலும் “எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்த” மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 10:5) அது எப்போதும் சுலபமான காரியமல்ல. முக்கியமாக, கருத்துக்கள் நம் மனதில் ஆழமாக வேரூன்றியதாய் இருக்கும்போது அது எளிதல்ல. உதாரணமாக, கடவுளுடைய சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்குமுன், நீங்கள் குடும்பமாக சில மதப் பண்டிகைகளை குதூகலமாக கொண்டாடியிருந்திருக்கலாம். ஆனால், பைபிளை படிக்க ஆரம்பித்த பிறகோ, இந்தப் பண்டிகைகள் எல்லாம் பொய்மத ஆரம்பத்தை உடையன என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். முதலில், நீங்கள் கற்றவற்றை நடைமுறைப்படுத்த ஒருவேளை தயங்கியிருக்கலாம். ஆனால் முடிவில், மதக் கருத்துக்களைவிட கடவுளுக்கான உங்கள் அன்பு பலமானதாய் நிரூபித்திருக்கும். எனவே, கடவுளுக்கு பிரியமில்லாத கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை நீங்கள் நிறுத்தியிருப்பீர்கள். உங்களுடைய இந்தத் தீர்மானத்தை யெகோவா ஆசீர்வதிக்கவில்லையா?—எபிரெயர் 11:25-ஐ ஒப்பிடுக.
18. பைபிள் சத்தியத்தைப் பற்றிய நம் புரிந்துகொள்ளுதல் தெளிவாக்கப்படுகையில் நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்?
18 கடவுளுடைய வழியில் காரியங்களை செய்தால் நாம் எப்போதுமே நன்மை அடையலாம். (ஏசாயா 48:17, 18) பைபிள் வாக்கியத்தைப் பற்றிய நம் கருத்து தெளிவாக்கப்படும்போது, சத்தியத்தில் வளருவதற்காக நாம் களிகூருவோமாக! நாம் தொடர்ந்து தெளிவூட்டுதலைப் பெறுவதானது நாம் உண்மையிலேயே சரியான பாதையில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்கிறது. “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.” (நீதிமொழிகள் 4:18) கடவுளுடைய நோக்கங்களின் சில அம்சங்களை இப்போது நாம் ‘நிழலாட்டமாய்த்தான்’ பார்க்கிறோம் என்பது மெய்யே. ஆனால், கடவுளின் உரிய காலம் வரும்போது, சத்தியத்தின் முழு நிறைவான அம்சங்கள் அனைத்தையும் நாம் பார்ப்போம். “அந்தப் பாதையிலே” நம் பாதங்கள் உறுதியாய் பதிந்திருக்குமானால் நாம் அதை பார்க்கலாம். இதற்கிடையில், யெகோவா நமக்கு தெளிவாக்கி இருக்கும் சத்தியத்தில் நாம் மகிழ்வோமாக! இதுவரை தெளிவாக புரிந்துகொள்ள முடியாதவற்றிற்கும் தெளிவூட்டுதல் கிடைக்க காத்திருப்போமாக!
19. நாம் சத்தியத்தை நேசிக்கிறோம் என்பதை காட்டும் ஒரு வழி என்ன?
19 ஒளிக்கான நம் அன்பை நடைமுறையில் நாம் எப்படி வெளிக்காட்டலாம்? கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசிப்பதே ஒரு வழி. முடிந்தால் தினமும் வாசியுங்கள். பைபிள் வாசிப்புக்காக தவறாமல் ஓர் அட்டவணையை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? அனுபவித்து மகிழ்வதற்கான அதிகமதிகமான ஆவிக்குரிய உணவை காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் நமக்கு அளிக்கின்றன. நம் நன்மைக்காக தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்கள், சிற்றேடுகள், பல பிரசுரங்களையும் நினைவில்கொள்ளுங்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகத்தில் (ஆங்கிலம்) பிரசுரிக்கப்படும் உற்சாகமளிக்கும் ராஜ்ய பிரசங்கிப்பு பற்றிய அறிக்கைகளை பற்றியதென்ன?
20 சங்கீதம் 43:3-ல் உள்ள ஜெபத்திற்கு வியக்கத்தக்க முறையில் யெகோவா பதிலளித்திருக்கிறார். அந்த வசனத்தின் முடிவில் நாம் வாசிப்பதாவது: “[உமது ஒளியும் சத்தியமும்] உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.” திரளானோரோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவதை நீங்கள் எதிர்நோக்கி இருக்கிறீர்களா? நம் கூட்டங்களில் ஆவிக்குரிய போதனை அளிக்கப்படுகிறது. யெகோவா இன்று தெளிவூட்டுதலை அளிக்கும் முக்கிய வழி இது. கிறிஸ்தவ கூட்டங்களுக்கான நம் மதித்துணர்வை நாம் எப்படி அதிகரிக்கலாம்? அடுத்த கட்டுரையிலுள்ள இந்தப் பொருளை ஜெபசிந்தையோடு சிந்திக்கும்படி உங்களை அழைக்கிறோம்.
[அடிக்குறிப்புகள்]
a சி. டி. ரஸல் மரித்தபின், வேதாகமங்களில் படிப்புகள் என்ற புத்தகத்தின் ஏழாவது தொகுப்பு தயாரிக்கப்பட்டது. எசேக்கியேல், வெளிப்படுத்துதல் புத்தகங்களுக்கு விளக்கம் கொடுக்கும் முயற்சி அதில் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பைபிள் புத்தகங்களைப் பற்றி ரஸல் கொடுத்திருந்த விளக்கங்களின் அடிப்படையில் அந்தத் தொகுப்பின் சில பாகங்கள் இருந்தன. என்றாலும், அந்த தீர்க்கதரிசனங்களின் அர்த்தத்தை வெளிப்படுத்தும் நேரம் அப்போது வரவில்லை. பொதுவாக சொல்லப்போனால், வேதாகமங்களில் படிப்புகள் தொகுப்பில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கங்கள் தெளிவாக இல்லாமல் மங்கலாகவே இருந்தன. தொடர்ந்து வந்த வருடங்களில், யெகோவாவின் தகுதியற்ற தயவும் உலக அரங்கில் தோன்றிய முன்னேற்றங்களும் இந்த தீர்க்கதரிசன புத்தகங்களின் அர்த்தத்தை மிகத் துல்லியமாக புரிந்துகொள்ள உதவியது.
உங்களால் பதிலளிக்க முடியுமா?
• யெகோவா தம் நோக்கங்களை ஏன் படிப்படியாக வெளிப்படுத்துகிறார்?
• விருத்தசேதனம் பற்றிய விவாதத்தை எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களும் மூப்பரும் எப்படி தீர்த்தனர்?
• என்ன பைபிள் படிப்பு முறையை ஆரம்ப பைபிள் மாணாக்கர்கள் பின்பற்றினர், அது ஏன் தனிச்சிறப்பு வாய்ந்தது?
• கடவுளின் உரிய காலத்தில் ஆவிக்குரிய ஒளி எப்படி வெளிப்படுத்தப்படுகிறது என்பதை விளக்குங்கள்.
20. யெகோவாவிடமிருந்து வரும் ஒளிக்கும் சத்தியத்திற்கும், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நாம் செல்வதற்கும் என்ன சம்பந்தம்?
[பக்கம் 12-ன் படம்]
கடவுளின் உரிய காலத்தில் வெளிப்படுத்துதல் புத்தகத்தின்மீது ஒளி பிரகாசிக்கப்படும் என்பதை சார்ல்ஸ் டேஸ் ரஸல் அறிந்திருந்தார்