இரட்சிப்புக்காக யாவரறிய அறிவித்தல்
“யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.”—ரோமர் 10:13, NW.
1. சரித்திரம் முழுவதிலும், என்ன எச்சரிக்கைகள் தொனிக்கப்பட்டிருக்கின்றன?
‘யெகோவாவின் நாட்கள்’ பலவற்றை பைபிள் சரித்திரம் விவரிக்கிறது. நோவாவின் நாளைய ஜலப்பிரளயம், சோதோம் கொமோராவின் அழிவு, பொ.ச.மு. 607-லும் பொ.ச. 70-லும் எருசலேமின் அழிவுகள் ஆகியவை யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாட்களாக இருந்தன. யெகோவாவுக்கு விரோதமாக கலகம் செய்தவர்களின்மீது நீதித்தீர்ப்பை நிறைவேற்றும் நாட்களாக அவை இருந்தன. (மல்கியா 4:5; லூக்கா 21:22) அந்நாட்களின்போது, தங்கள் அக்கிரமத்தின் நிமித்தமாக பலர் அழிந்தனர். ஆனால் சிலர் தப்பிப்பிழைத்தனர். வரவிருந்த ஜலப்பிரளயத்தைப் பற்றி அக்கிரமக்காரருக்குத் தெரிவிக்கவும், நேர்மை இருதயமுள்ளோர் இரட்சிப்பைக் கண்டடைவதற்கு வாய்ப்பை அளிக்கவும் யெகோவா எச்சரிக்கைகளை தொனிக்கச் செய்தார்.
2, 3. (அ) பெந்தெகொஸ்தே நாளில், என்ன தீர்க்கதரிசன எச்சரிக்கை மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டது? (ஆ) பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து, யெகோவாவின் பெயரில் கூப்பிடுவதில் என்ன தேவைப்பட்டது?
2 பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்டது இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணம். ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தச் சம்பவத்தை முன்னறிவிப்பவராய், தீர்க்கதரிசியாகிய யோவேல் இவ்வாறு எழுதினார்: “வானத்திலும் பூமியிலும் அற்புதங்களைக் காட்டுவேன், இரத்தம், அக்கினி, புகைஸ்தம்பங்களே. யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும்.” இத்தகைய பயங்கரமான சமயத்தை எவராவது எப்படி தப்பிப்பிழைக்க முடியும்? தேவாவியால் ஏவப்பட்டவராக யோவேல் இவ்வாறு எழுதினார்: “அப்பொழுது யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ [“யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிறவர்,” NW] அவன் ரட்சிக்கப்படுவான்; யெகோவா சொன்னபடி சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் ரட்சிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள், தப்பி மீந்தவர்களில் யெகோவா அழைத்தவர்கள் இருப்பார்கள்.”—யோவேல் 2:30-32, தி.மொ.
3 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில், அப்போஸ்தலனாகிய பேதுரு, எருசலேமிலிருந்த யூதரும் யூத மதத்திற்கு மாறினவர்களும் அடங்கிய ஒரு கூட்டத்தை நோக்கி பேசினார்; யோவேலின் தீர்க்கதரிசனத்தை மேற்கோளாகக் குறிப்பிட்டு, தனக்குச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் தங்கள் நாளில் அதன் ஒரு நிறைவேற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பதை காட்டினார்: “உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்; கர்த்தருடைய [“யெகோவாவின்,” NW] பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ [“யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிறவர்,” NW] அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.” (அப்போஸ்தலர் 2:16-21) பேதுரு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனக்கூட்டத்தார் எல்லாரும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாக இருந்தார்கள், ஆகையால் யெகோவாவின் பெயரை அறிந்திருந்தார்கள். அதுமுதற்கொண்டு, யெகோவாவின் பெயரில் கூப்பிடுவது மேலுமதிகமான ஒன்றை உட்படுத்தும் என்பதை பேதுரு விளக்கினார். கொல்லப்பட்டு, பின்பு அழியாமையுடைய பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவின் பெயரில் முழுக்காட்டப்படுவதை இது முக்கியமாய் உட்படுத்தினது என்று காட்டினார்.—அப்போஸ்தலர் 2:37, 38.
4. என்ன செய்தியை கிறிஸ்தவர்கள் பரவலாக அறிவித்தார்கள்?
4 உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைப் பற்றிய செய்தியை, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு, கிறிஸ்தவர்கள் பரவச் செய்தனர். (1 கொரிந்தியர் 1:23) மனிதர்கள், யெகோவா தேவனின் ஆவிக்குரிய குமாரராக புத்திரசுவிகாரம் செய்யப்பட்டு, ‘யெகோவாவின் மகத்துவங்களை பரவலாக அறிவிக்கும்’ புதிய ‘தேவனுடைய இஸ்ரவேலராகிய’ ஆவிக்குரிய ஜனத்தின் பாகமாக முடியும் என்று அவர்கள் தெரிவித்தார்கள். (கலாத்தியர் 6:16; 1 பேதுரு 2:9, NW) மரண பரியந்தம் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தவர்கள், இயேசுவுடன், அவருடைய பரலோக ராஜ்யத்தில் உடன்சுதந்தரவாளிகளாக, அழியாமையுடைய பரலோக வாழ்க்கையை சுதந்தரிப்பார்கள். (மத்தேயு 24:13; ரோமர் 8:15, 16; 1 கொரிந்தியர் 15:50-54) மேலும், வரவிருந்த யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான அந்த நாளை, இந்தக் கிறிஸ்தவர்கள் யாவரறிய அறிவிக்க வேண்டியதாக இருந்தது. அந்தச் சமயம் வரையில், எருசலேமையும் கடவுளுடைய ஜனங்களென உரிமைபாராட்டினவர்களையும் தாக்கியிருந்த எதையும் பார்க்கிலும் மிகைப்பட்ட ஓர் உபத்திரவத்தை யூத உலகம் அனுபவிக்கவிருந்ததைக் குறித்து அவர்கள் மற்றவர்களிடம் எச்சரிக்க வேண்டியதாக இருந்தது. எனினும் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள். யார்? யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிறவர்களேயாவர்.
“கடைசிநாட்களில்”
5. தீர்க்கதரிசனத்தின் என்ன நிறைவேற்றங்கள் இன்று நடந்தேறியிருக்கின்றன?
5 பல வகைகளில், அப்போதிருந்த நிலைமைகள், இன்று நாம் காண்பவற்றிற்கு முன்நிழலாக இருந்தன. 1914 முதற்கொண்டு மனிதவர்க்கம், ‘கடைசிகாலம்,’ “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு,” ‘கடைசிநாட்கள்’ என்றெல்லாம் பைபிள் குறிப்பிடுகிற ஒரு விசேஷ காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. (தானியேல் 12:1, 4; மத்தேயு 24:3-8; 2 தீமோத்தேயு 3:1-5, 13) நம்முடைய நூற்றாண்டில் பயங்கர போர்கள், கட்டுக்கடங்கா வன்முறை, சமுதாயமும் சூழ்நிலைகளும் பாழ்ப்படுத்தப்படுதல் ஆகியவை, பைபிள் தீர்க்கதரிசனத்தின் கவனிக்கத்தக்க நிறைவேற்றத்தைக் குறித்திருக்கின்றன. இவையெல்லாம், இயேசு தீர்க்கதரிசனம் உரைத்த அடையாளத்தின் பாகமாக இருக்கின்றன; முடிவான தீர்வான யெகோவாவின் பயங்கரமான நாளை மனிதவர்க்கம் அனுபவிக்கப்போகும் நிலையில் இருக்கிறது என்பதை இவை காட்டுகின்றன. “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவ [“மகா உபத்திரவம்,” NW]” உச்சக்கட்டமாகிய அர்மகெதோன் யுத்தத்தில் இந்த நாள் முடிவடைகிறது.—மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 16:16.
6. (அ) மனத்தாழ்மையுள்ளோரை இரட்சிப்பதற்கு, யெகோவா எவ்வாறு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்? (ஆ) தப்பிப்பிழைப்பது எவ்வாறு என்பதன்பேரில் பவுலின் அறிவுரையை நாம் எங்கே காண்கிறோம்?
6 அழித்தொழிக்கும் அந்த நாள் நெருங்கி வருகையில், மனத்தாழ்மையுள்ளோரின் இரட்சிப்புக்காக யெகோவா நடவடிக்கை எடுக்கிறார். இந்த ‘கடைசிகாலத்தின்போது,’ ஆவிக்குரிய தேவனுடைய இஸ்ரவேலில் மீதியானவர்களை அவர் கூட்டிச்சேர்த்தபின், 1930-லிருந்து, ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்களைக்’ கூட்டிச்சேர்ப்பதற்கு, பூமிக்குரிய தம்முடைய ஊழியர்களின் கவனத்தைத் திருப்பியிருக்கிறார். ஒரு தொகுதியாக, இவர்கள் உயிருடன் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளிவருகிறார்கள்.’ (வெளிப்படுத்துதல் 7:9, 14) ஆனால், தனியே ஒவ்வொரு நபரும், தான் தப்பிப்பிழைப்பதை எவ்வாறு நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்? இந்தக் கேள்விக்கு அப்போஸ்தலன் பவுல் பதிலளிக்கிறார். தப்பிப்பிழைப்பதற்கு, அவருடைய காலத்துக்கும், மறுபடியுமாக நம்முடைய காலத்துக்கும் பொருந்துகிற சிறந்த அறிவுரையை ரோமர் 10-ம் அதிகாரத்தில் அவர் கொடுக்கிறார்.
இரட்சிப்புக்காக ஒரு விண்ணப்பம்
7. (அ) ரோமர் 10:1, 2-ல் என்ன நம்பிக்கை குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது? (ஆ) யெகோவா இப்போது மேலும் பரவலாக நற்செய்தி யாவரறிய அறிவிக்கப்படும்படி ஏன் செய்திருக்க முடியும்?
7 ரோமர் நிருபத்தை பவுல் எழுதினபோது, ஒரு ஜனமாக இஸ்ரவேலை யெகோவா ஏற்கெனவே தள்ளிவிட்டிருந்தார். எனினும், இந்த அப்போஸ்தலன் இவ்வாறு உறுதிகூறினார்: “இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.” தனி நபர்களான யூதர்கள், கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைந்து, இரட்சிக்கப்படுவதற்கு வழிநடத்தப்படலாம் என்பது அவருடைய நம்பிக்கையாக இருந்தது. (ரோமர் 10:1, 2) மேலும், யோவான் 3:16-ல் காட்டப்பட்டபடி, மனிதவர்க்கம் முழுவதிலுமே, விசுவாசிப்போர் இரட்சிப்பை அடையும்படி யெகோவா விரும்புவார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” மீட்பின் கிரயமாகிய இயேசுவின் பலி, அந்த மகத்தான இரட்சிப்புக்கு வழியைத் திறந்தது. நோவாவின் நாளிலும், அதற்குப் பின்னான மற்ற ஆக்கினைத் தீர்ப்புக்குரிய நாட்களிலும் செய்ததுபோல், இரட்சிப்புக்கான வழியைக் குறிப்பிட்டுக் காட்டி, “நற்செய்தி” பரவலாக யாவரறிய அறிவிக்கப்படும்படி யெகோவா செய்திருக்கிறார்.—மாற்கு 13:10, 19, 20.
8. பவுலின் மாதிரியைப் பின்பற்றி, இன்று கிறிஸ்தவர்கள் யாருக்கு நற்பிரியத்தை கொண்டுசெல்கிறார்கள், எவ்வாறு?
8 யூதர், புறஜாதியார் ஆகிய இருதரப்பினரிடமுமே தன் சொந்த நற்பிரியத்தைக் காட்டுபவராக பவுல், தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பின்போதும் பிரசங்கித்தார். ‘யூதரும் கிரேக்கரும் நம்பும்படிசெய்ய முயன்றார்.’ எபேசு சபை மூப்பர்களிடம் இவ்வாறு சொன்னார்: “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல் பகிரங்கமாகவும் வீடுவீடாகவும் உங்களுக்கு உபதேசித்து அறிவித்தேன். கடவுளிடம் மனந்திரும்புவதைப்பற்றியும் நமது ஆண்டவராகிய இயேசுவில் விசுவாசம் வைப்பதைப் பற்றியும் நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் திடச்சாட்சி கூறினேன்.” (அப்போஸ்தலர் 18:4, NW; 20:20, 21, தி.மொ.) அவ்வாறே யெகோவாவின் சாட்சிகள் இன்று, கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டிக்கொள்வோருக்கு மட்டுமல்லாமல், எல்லா ஜனங்களுக்கும், “பூமியின் கடைசிபரியந்தமும்” பிரசங்கிப்பதில், தங்களை ஊக்கமாய் ஈடுபடுத்துகிறார்கள்.—அப்போஸ்தலர் 1:8; 18:5.
‘விசுவாசத்தின் வார்த்தையை’ அறிவித்தல்
9. (அ) என்ன வகையான விசுவாசத்தை ரோமர் 10:8, 9 ஊக்குவிக்கிறது? (ஆ) எப்போது, எவ்வாறு நம்முடைய விசுவாசத்தை நாம் அறிக்கையிட வேண்டும்?
9 இரட்சிப்படைவதற்கு நிலையான விசுவாசம் தேவைப்படுகிறது. உபாகமம் 30:14-ஐ மேற்கோள்காட்டி, பவுல் இவ்வாறு சொன்னார்: “இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது . . . இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.” (ரோமர் 10:8) அந்த ‘விசுவாசத்தின் வார்த்தையை’ நாம் பிரசங்கித்து வருகையில், அது நம்முடைய இருதயங்களில் மேலும் மேலும் ஆழமாகப் பதிகிறது. பவுலுடையக் காரியத்திலும் அவ்வாறே இருந்தது. அந்த விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் அவரைப்போல் இருக்கும்படியான நம்முடைய தீர்மானத்தை, பின்வரும் அவருடைய மேலுமான வார்த்தைகள் பலப்படுத்தலாம்: “இயேசுவை ஆண்டவரென்று நீ உன் வாயினால் [“யாவரறிய,” NW] அறிக்கையிட்டுக் கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசிப்பாயாகில் இரட்சிக்கப்படுவாய்.” (ரோமர் 10:9, தி.மொ.) இந்த அறிக்கையிடுதல், முழுக்காட்டப்படும் சமயத்தில் மற்றவர்களுக்கு முன்பாக செய்வதாய் மாத்திரமே இராமல், தொடர்ந்து செய்யப்படும் ஓர் அறிக்கையிடுதலாக, சத்தியத்தின் எல்லா மகத்தான அம்சங்களையும் பற்றி ஆர்வமாய் யாவரறிய அறிவித்துவரும் சாட்சியமாக இருக்க வேண்டும். இத்தகைய சத்தியம், ஈடற்ற உன்னத ஆண்டவராகிய யெகோவாவின் மிக அருமையான பெயரின்மீதும்; நம்முடைய மேசியானிய அரசரும் மீட்பருமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீதும்; சிறப்பான ராஜ்ய வாக்குறுதிகளின்மீதும் கவனத்தை ஒருமுகப்படுத்த வைக்கிறது.
10. ரோமர் 10:10, 11-ன் பிரகாரம், ‘விசுவாசத்தின் வார்த்தையை’ நாம் எவ்வாறு கையாள வேண்டும்?
10 இந்த அப்போஸ்தலன் தொடர்ந்து சொல்லுகிறபிரகாரம், இந்த ‘விசுவாசத்தின் வார்த்தையை’ ஏற்று, அதைப் பொருத்தி பயன்படுத்தாத எவருக்கும் இரட்சிப்பு இல்லை: “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.” (ரோமர் 10:10, 11) இந்த ‘விசுவாசத்தின் வார்த்தையை’ மற்றவர்களுக்குச் சொல்ல நாம் தூண்டப்பட, அதைப் பற்றிய திருத்தமான அறிவை நாம் அடைந்து, நம்முடைய இருதயங்களில் தொடர்ந்து பேணிக்காக்கவேண்டும். இயேசு தாமே இவ்வாறு நமக்கு நினைப்பூட்டுகிறார்: “விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார்.”—மாற்கு 8:38.
11. நற்செய்தி எவ்வளவு பரவலாக அறிவிக்கப்பட வேண்டும், ஏன்?
11 இந்த கடைசிகாலத்தில், ராஜ்ய சாட்சி பூமியின் கடைமுனைகள் வரையாக பரவுகையில், தீர்க்கதரிசியாகிய தானியேலால் முன்னறிவிக்கப்பட்டபடி, ‘ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போல், பிரகாசிக்கிறவர்களாகக்’ காணப்படுகிறார்கள். அவர்கள், ‘அநேகரை நீதிக்குட்படுத்தி’ வருகிறார்கள், உண்மையான அறிவு நிச்சயமாகவே மிகுதியாகியுள்ளது. ஏனெனில், கடைசிகாலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்களின்பேரில் ஒளி, மேன்மேலும் அதிக பிரகாசமாகும்படி யெகோவா செய்துகொண்டிருக்கிறார். (தானியேல் 12:3, 4) சத்தியத்தையும் நீதியையும் நேசிக்கிற யாவரும் தப்பிப்பிழைப்பதற்கு இன்றியமையாததாக இருக்கிற இரட்சிப்புக்குரிய ஒரு செய்தி இங்குள்ளது.
12. எவ்வாறு ரோமர் 10:12, வெளிப்படுத்துதல் 14:6-ல் விவரிக்கப்பட்டிருக்கிற தூதனின் பொறுப்போடு பொருந்துகிறது?
12 அப்போஸ்தலன் பவுல் தொடர்ந்து சொல்கிறார்: “யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னர்.” (ரோமர் 10:12, தி.மொ.) இன்று, இன்னும் பரவலாக பூகோள அளவில், எல்லா ஜனங்களுக்கும், பூமியின் கடைமுனைகள் வரையாகவும் “நற்செய்தி” பிரசங்கிக்கப்பட வேண்டும். வெளிப்படுத்துதல் 14:6-ல் (தி.மொ.) குறிப்பிடப்பட்டுள்ள தூதன் நடுவானத்தில் தொடர்ந்து பறந்துகொண்டு, “பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு, ஜாதிகள் கோத்திரத்தார் பாஷைக்காரர் ஜனங்கள் யாவருக்கும் அறிவிக்க வேண்டிய நித்திய சுவிசேஷத்தை” நமக்கு ஒப்படைக்கிறார். செவிகொடுப்போருக்கு இது எவ்வாறு நன்மை பயக்கும்?
யெகோவாவின் பெயரில் கூப்பிடுதல்
13. (அ) 1998-க்குரிய நம் வருடாந்தர வசனம் என்ன? (ஆ) இந்த வருடாந்தர வசனம் ஏன் இன்று மிக பொருத்தமாயிருக்கிறது?
13 யோவேல் 2:32-ஐ மேற்கோள்காட்டி, பவுல் சொல்கிறார்: “யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.” (ரோமர் 10:13, NW) 1998-க்கு யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர வசனமாக இந்த வார்த்தைகள் தெரிவுசெய்யப்பட்டிருப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! யெகோவாவில் நம்பிக்கை வைத்து, அவருடைய பெயரையும் அந்தப் பெயர் அர்த்தப்படுத்தும் மகத்தான நோக்கங்களையும் தெரிவிப்பதில் முன்னேறுவது, முன்னொருபோதும் இல்லாதளவு அதிக முக்கியமாக உள்ளது! முதல் நூற்றாண்டில் இருந்ததைப்போல், தற்போதைய கறைபட்ட காரிய ஒழுங்குமுறையின் இந்தக் கடைசிநாட்களில், திரும்பத் திரும்ப தொனிக்கும் இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது; “மாறுபாடுள்ள, இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்.” (அப்போஸ்தலர் 2:40) தங்களுக்கும், தாங்கள் யாவரறிய அறிவிக்கும் நற்செய்திக்கு செவிகொடுத்துக் கேட்போருக்கும்கூட இரட்சிப்பை அருளும்படி யெகோவாவை நோக்கி விண்ணப்பிப்பதற்கு, உலகமுழுவதிலும், கடவுள் பயமுள்ள எல்லா மக்களுக்கும் இது எக்காளமுழக்கம் போன்ற அழைப்பாக இருக்கிறது.—1 தீமோத்தேயு 4:16.
14. இரட்சிப்புக்காக எந்தக் கன்மலையை நாம் நோக்க வேண்டும்?
14 யெகோவாவின் பெரிதான நாள் இந்தப் பூமியில் திடீரென்று வருகையில் என்ன சம்பவிக்கும்? இரட்சிப்புக்காக யெகோவாவை பெரும்பான்மையர் எதிர்நோக்குவதில்லை. பொதுவில் மனிதவர்க்கத்தினர்: “பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்” என்று தொடர்ந்து சொல்லுவார்கள். (வெளிப்படுத்துதல் 6:15, 16) இந்தக் காரிய ஒழுங்குமுறையின், மலையைப்போன்ற அமைப்புகளிலும் நிறுவனங்களிலுமே அவர்களுடைய நம்பிக்கை இருக்கும். எனினும், எல்லாவற்றிலும் மகா பெரிய கன்மலையானவராகிய யெகோவா தேவனில் அவர்கள் நம்பிக்கை வைத்தால் எவ்வளவு அதிக மேம்பட்டதாக இருக்கும்! (உபாகமம் 32:3, 4) அவரைக் குறித்து, அரசன் தாவீது இவ்வாறு சொன்னார்: “யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்.” யெகோவா ‘நமது ரட்சணியக் கன்மலை.’ (சங்கீதம் 18:2; 95:1, தி.மொ.) அவருடைய பெயர் “பலத்த கோபுரம்,” வரவிருக்கிற அந்த நெருக்கடி கட்டத்தின்போது நம்மைப் பாதுகாப்பதற்கு போதிய பலமுள்ள ஒரே “கோபுரம்.” (நீதிமொழிகள் 18:10, NW) ஆகையால், இன்று உயிரோடிருக்கிற ஏறக்குறைய 600 கோடி மனிதரில், முடிந்தளவு அத்தனை பேருக்கும், உண்மையாயும் உள்ளப்பூர்வமாயும் யெகோவாவின் பெயரில் கூப்பிடுவதற்குக் கற்பிப்பது இன்றியமையாததாக உள்ளது.
15. விசுவாசத்தைக் குறித்து ரோமர் 10:14 குறிப்பிட்டுக் காட்டுவது என்ன?
15 பொருத்தமாகவே, அப்போஸ்தலன் பவுல் தொடர்ந்து கேட்கிறார்: “அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் [“கூப்பிடுவார்கள்,” NW] தொழுதுகொள்ளுவார்கள்?” (ரோமர் 10:14) இரட்சிப்புக்காக யெகோவாவைக் கூப்பிடும்படி, இந்த ‘விசுவாசத்தின் வார்த்தையை’ தங்களுடையதாக்கிக்கொள்ள இனியும் உதவி தேவைப்படுவோராக திரளான பேர் இருக்கலாம். விசுவாசம் மிக முக்கியமானது. இன்னொரு நிருபத்தில் பவுல் இவ்வாறு சொல்கிறார்: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” (எபிரெயர் 11:6) எனினும், எவ்வாறு, இன்னும் லட்சக்கணக்கானோர் கடவுளில் விசுவாசம் வைப்போராக ஆவார்கள்? ரோமருக்கு எழுதின நிருபத்தில், பவுல் இவ்வாறு கேட்கிறார்: “அவரைக்குறித்து கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” (ரோமர் 10:14) அவர்கள் கேள்விப்படுவதற்கு வழிவகைகளை யெகோவா அளிக்கிறாரா? நிச்சயமாகவே அளிக்கிறார்! தொடர்ந்து சொல்லும் பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?”
16. கடவுளுடைய ஏற்பாட்டில், பிரசங்கிப்போர் ஏன் முக்கியமாகத் தேவைப்படுகின்றனர்?
16 பிரசங்கிப்போர் தேவை என்பது, பவுலின் விவாதத்திலிருந்து மிகத் தெளிவாயிருக்கிறது. ‘இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவு வரையாக,’ இவ்வாறு இருக்கும் என்பதை இயேசு குறிப்பாகத் தெரிவித்தார். (மத்தேயு 24:14, NW; 28:18-20) பிரசங்க வேலையானது, பத்திரமாய்த் தப்புவதற்கு யெகோவாவின் பெயரில் கூப்பிடும்படி ஜனங்களுக்கு உதவி செய்வதற்கான கடவுளுடைய ஏற்பாட்டின் முக்கியமான ஒரு பாகமாக இருக்கிறது. கடவுளுடைய மிக மதிப்புவாய்ந்த பெயரை கௌரவிப்பதற்கு, கிறிஸ்தவமண்டலத்திலும்கூட பெரும்பான்மையர் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. விளக்க முடியாத ஒரு திரித்துவ கோட்பாட்டில், யெகோவாவை வேறு இரண்டு பெயர்களுடன், மோசமாக குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், சங்கீதம் 14:1-லும் 53:1-லும் குறிப்பிடப்பட்டிருக்கிற வகுப்பாரைப்போல் பலர் இருக்கிறார்கள்: “தேவன் [“யெகோவா,” NW] இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.” வரவிருக்கிற மகா உபத்திரவத்தில் தாங்கள் பத்திரமாய்த் தப்ப வேண்டுமானால், யெகோவா ஜீவனுள்ள கடவுள் என்பதை அவர்கள் அறிய வேண்டும்; மேலும், அவருடைய பெயர் அர்த்தப்படுத்துகிற எல்லாவற்றையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பிரசங்கிப்போரின் ‘அழகான பாதங்கள்’
17. (அ) திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை, அப்போஸ்தலன் பவுல் மேற்கோள் காட்டுவது ஏன் பொருத்தமாயிருக்கிறது? (ஆ) ‘அழகான பாதங்களை’ உடையோராக இருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
17 அப்போஸ்தலன் பவுல், இன்னும் ஒரு முக்கியமான கேள்வியை வைத்திருக்கிறார்: “அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தை கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.” (ரோமர் 10:15) பவுல் இங்கு, ஏசாயா 52:7-ஐ மேற்கோளாகக் குறிப்பிடுகிறார். இது, 1919 முதற்கொண்டு பயன்படுத்தியிருக்கும் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனத்தின் பாகமாக உள்ளது. இன்று, ‘சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துகிறவனை’, யெகோவா, மறுபடியும் ஒரு முறை அனுப்புகிறார். கீழ்ப்படிதலுடன், கடவுளுடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட ‘காவற்காரரும்’ அவர்களுடைய தோழர்களும் மகிழ்ச்சியோடு தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். (ஏசாயா 52:7, 8) இன்று இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துகிறவர்கள், வீடுவீடாக நடந்து செல்கையில், அவர்களுடைய பாதங்கள் சோர்வுற்று தளர்ந்தவையாகவும், தூசி படிந்தவையாகவும் ஆகலாம்; ஆனால், அவர்களுடைய முகங்களோ எவ்வளவாய் மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கின்றன! சமாதானத்தின் நற்செய்தியை யாவரறிய அறிவிக்கும்படியும், துக்கிப்போரை ஆறுதல்படுத்தி, இரட்சிப்பை கருத்தில் கொண்டு, யெகோவாவின் பெயரில் கூப்பிட இவர்களுக்கு உதவிசெய்யும்படியும், தாங்கள் யெகோவாவின் கட்டளைப்படி அனுப்பப்படுகிறவர் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
18. நற்செய்தியைத் தொனிக்கச் செய்வதில் முடிவான பலனைக் குறித்து ரோமர் 10:16-18 என்ன சொல்கிறது?
18 ஜனங்கள் ‘கேள்விப்பட்டதை விசுவாசித்தாலும்’ சரி அல்லது அதற்குக் கீழ்ப்படியாதிருக்கத் தெரிந்துகொண்டாலும் சரி, பவுலின் வார்த்தைகள் உண்மையாகத் தொனிக்கின்றன: “அவர்கள் கேள்விப்படவில்லையா . . . அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.” (ரோமர் 10:16-18) அவருடைய சிருஷ்டிப்பு செயல்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறபடி, ‘வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறதுபோல்,’ பூமியிலுள்ள அவருடைய சாட்சிகளும், “யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தையும் நமது கடவுள் பழிவாங்கும் நாளையும் பிரசித்தப்படுத்தவும், துயரப்பட்ட அனைவரையும் தேற்றவும்” வேண்டும்.—சங்கீதம் 19:1-4; ஏசாயா 61:2, தி.மொ.
19. இன்று ‘யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிறவர்கள்’ அனைவரும் என்ன பலனை அடைவார்கள்?
19 யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் நெருங்கிவந்துகொண்டே இருக்கிறது. “ஐயோ, என்ன நாள்! யெகோவாவின் நாள் சமீபம்; அது சர்வ வல்லவரிடமிருந்துவரும் சங்காரம்போன்றது.” (யோவேல் 1:15, தி.மொ.; 2:31) இன்னும் திரளான பேர், அவசரத்தன்மையை உணர்ந்து நற்செய்தியை ஏற்று, யெகோவாவின் அமைப்புக்குள் திரண்டுவரவேண்டும் என்பதே நம்முடைய ஜெபமாக இருக்கிறது. (ஏசாயா 60:8; ஆபகூக் 2:3) யெகோவாவின் மற்ற நாட்கள்—நோவாவின் நாளில், லோத்தின் நாளில், விசுவாசதுரோக இஸ்ரவேல் மற்றும் யூதாவின் நாட்களில் ஏற்பட்டவை—பொல்லாதவர்களுக்கு அழிவைக் கொண்டுவந்தன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவை எல்லாவற்றையும் பார்க்கிலும் மிகப் பெரிதான உபத்திரவத்தின் விளிம்பில் நாம் இப்போது நிற்கிறோம்; அப்போது யெகோவாவின் சூறைக் காற்று பொல்லாங்கை இந்தப் பூமியின் பரப்பிலிருந்து அறவே துடைத்தொழித்து, நித்திய சமாதானத்துக்குரிய பரதீஸுக்கு வழியுண்டாக்கும். உண்மையுடன் ‘யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிறவர்களுள்’ ஒருவராக நீங்கள் இருப்பீர்களா? இருப்பீர்களென்றால் களிகூருங்கள்! நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்ற கடவுளுடைய வாக்குறுதிதாமே உங்களுக்கு இருக்கிறது.—ரோமர் 10:13, NW.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளுக்குப்பின் என்ன புதிய காரியங்கள் யாவரறிய அறிவிக்கப்பட்டன?
◻ ‘விசுவாசத்தின் வார்த்தைக்கு’ கிறிஸ்தவர்கள் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்?
◻ ‘யெகோவாவின் பெயரில் கூப்பிடுதல்’ என்பதன் அர்த்தம் என்ன?
◻ இராஜ்ய செய்தி கொண்டுசெல்வோர் என்ன கருத்தில் ‘அழகான பாதங்களை’ உடையோராக இருக்கின்றனர்?
[பக்கம் 18-ன் படம்]
பியூர்டோ ரிகோ, செனிகல், பெரு, பாப்புவா நியூ கினீ—ஆம், பூகோளம் முழுவதிலும், கடவுளுடைய ஜனங்கள் அவருடைய மகத்துவங்களை அறிவிக்கிறார்கள்