மறைந்திருந்த பொக்கிஷம் வெளிப்படுகிறது
மாக்காரியாஸ் பைபிள் பற்றிய கதை
ஆராய்ச்சியாளர் ஒருவர் 1993-ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ரஷ்ய தேசிய நூலகத்தில் பழைய, பழுப்பேறிய ஆர்த்தடாக்ஸ் மறுபார்வை (ஆங்கிலம்) பத்திரிகைகள் குவிந்திருப்பதைக் கண்டுபிடித்தார். 1860 முதல் 1867 வரை வெளிவந்திருந்த பத்திரிகைகளுக்கிடையே, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ரஷ்ய நாட்டு பொதுமக்களின் கண்ணில்படாமல் மறைந்திருந்த ஒரு பொக்கிஷம் கிடக்கிறது. அது முழு எபிரெய வேதாகமத்தின் அல்லது பைபிளின் “பழைய ஏற்பாட்டின்” ரஷ்ய மொழிபெயர்ப்பாக இருந்தது!
வேதாகமத்தை மொழிபெயர்த்தவர்கள், ஆர்கிம்மான்ரைட் மாக்காரியாஸ் என்று அறியப்பட்டிருந்த மிக்கயீல் யாக்கோவ்லேவ்யிச் க்ளுகாரெஃப் மற்றும் ஜியராஸ்யிம் பெட்ரோவிக் பாவ்ஸ்கி ஆவர். இருவரும் ரஷ்ய ஆர்த்தடாஸ் சர்ச்சில் முக்கிய உறுப்பினர்களாகவும் மொழி வல்லுநர்களாகவும் இருந்தனர். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த மனிதர்கள் தங்கள் மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தபோது, முழு பைபிளும் ரஷ்ய மொழியில் அதுவரை மொழிபெயர்க்கப்படாமல் இருந்தது.
உண்மைதான், நவீன கால ரஷ்ய மொழியின் முன்னோடியாக இருந்த மொழியான ஸ்லாவிய மொழியில் பைபிள் இருந்தது. இருந்தபோதிலும், 19-ஆம் நூற்றாண்டின் மத்திப காலத்துக்குள், ஸ்லாவிய மொழி பாதிரிமாரால் மத ஆராதனைகளில் பயன்படுத்தப்பட்டதே தவிர மற்றபடி அது நீண்ட காலமாக பொதுமக்களின் வழக்கில் இல்லாமல் இருந்தது. மேற்கிலும்கூட இதே நிலைமையே இருந்தது, அங்கே லத்தீன் நீண்ட காலமாக பேச்சு வழக்கில் இல்லாத மொழியாக ஆனபின்பும் ரோமன் கத்தோலிக்க சர்ச் பைபிளை லத்தீன் மொழியில் மாத்திரமே வைத்திருக்க முயன்றது.
மாக்காரியாஸும் பாவ்ஸ்கியும் பைபிள் பொதுமக்களுக்கு கிடைக்க முயற்சி செய்தனர். ஆகவே நீண்ட காலமாக மறக்கப்பட்டுப்போயிருந்த அவர்களுடைய படைப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் ரஷ்ய நாட்டின் இலக்கிய மற்றும் மத சம்பந்தமான பாரம்பரிய பொக்கிஷத்தின் முக்கியமான ஒரு பகுதியை மீட்க முடிந்திருக்கிறது.
என்றாலும் உண்மையில் பாவ்ஸ்கியும் இந்த மாக்காரியாஸும் யார்? பொது மக்கள் பேசும் மொழியில் பைபிளை கொண்டுவர அவர்கள் எடுத்த முயற்சிக்கு ஏன் இந்தளவு எதிர்ப்பு? அவர்களுடைய கதை பைபிளை நேசிக்கும் அனைவருக்கும் மனதை கவருவதாகவும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாகவும் உள்ளது.
ரஷ்ய மொழி பைபிளுக்கான அவசியம்
மாக்காரியாஸ், பாவ்ஸ்கி என்பவர்கள் பொது மக்கள் பேசும் மொழியில் பைபிள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முதல் நபர்கள் அல்ல. இதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், முதலாம் பீட்டர் அல்லது மகா பீட்டர் என்ற ரஷ்ய பேரரசரும்கூட இந்தத் தேவையை உணர்ந்தார். பரிசுத்த வேதாகமத்தை மதிப்புடன் அவர் கருதியதும், “பைபிள் மற்ற எல்லாவற்றையும்விட மேம்பட்டு நிற்கும் புத்தகமாகும்; கடவுளிடமும் தன்னுடைய அயலானிடமும் மனிதனின் கடமை சம்பந்தப்பட்ட அனைத்தையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது” என்று அவர் சொன்னதாக காட்டப்பட்டிருக்கும் மேற்கோளும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் காரணமாக, 1716-ல், பீட்டர் ஆம்ஸ்டர்டாமில் தன்னுடைய சொந்த செலவில் பைபிளை அச்சடிக்கும்படியாக தன்னுடைய அரசவைக்கு ஆணை பிறப்பித்தார். ஒவ்வொரு பக்கத்திலும் ரஷ்ய மொழி வாசகமும் டச்சு மொழி வாசகமும் இடம்பெற வேண்டியதாக இருந்தது. ஒரே ஆண்டுக்குப் பின், 1717-ல், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் அல்லது “புதிய ஏற்பாடு” பகுதி தயாராகிவிட்டது.
1721-க்குள் டச்சு மொழியில் எபிரெய வேதாகமத்தின் நான்கு-தொகுதி மொழிபெயர்ப்பு பகுதியும்கூட அச்சிடப்பட்டுவிட்டது. பக்கத்தின் ஒரு பகுதி, ரஷ்ய மொழி வாசகத்தால் பின்னால் நிரப்பப்படும்படியாக காலியாக விடப்பட்டது. பதிப்பை அங்கீகாரம் செய்வதற்கும் விநியோகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும் ரஷ்ய நாட்டு ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் “புனித பேரவை”யினிடமாக பைபிள்களை பீட்டர் ஒப்படைத்தார். என்றாலும், பேரவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே, பீட்டர் இறந்துபோனார். அவருடைய பைபிள்களுக்கு என்னவாயிற்று? ரஷ்ய மொழி வாசகத்துக்கு விடப்பட்டிருந்த காலியான இடங்கள் பூர்த்திசெய்யப்படவே இல்லை. கீழ் அறையில் பைபிள்கள் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தன, அங்கே அவை படிப்படியாக இற்றுப்போயின—சேதமடையாத ஒரு பிரதியைக்கூட பின்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! “மீதமிருந்த அனைத்தையும் வியாபாரிகளுக்கு விற்றுவிட” பேரவை தீர்மானித்திருந்தது.
மொழிபெயர்க்கும் முயற்சிகள் ஆரம்பமாகின்றன
1812-ல், பிரிட்டன் மற்றும் அயல்நாட்டு பைபிள் சங்கத்தின் உறுப்பினரான ஜான் பேட்டர்ஸன் ரஷ்ய நாட்டுக்கு வந்திருந்தார். பேட்டர்ஸன் பைபிள் சங்கம் ஒன்றை அமைக்குமாறு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கல்விமான்களுடைய ஆர்வத்தைத் தூண்டினார். 1812 டிசம்பர் 6 அன்று—முதலாம் நெப்போலியனுடைய படைகளின் தாக்குதலை ரஷ்யப்படை துரத்தியடித்த அதே ஆண்டு—ரஷ்யப் பேரரசர் முதலாம் அலெக்ஸாண்டர் ரஷ்ய நாட்டு பைபிள் சங்கத்தின் உரிமைப் பத்திரத்துக்கு அங்கீகாரமளித்தார். 1815-ல் ரஷ்ய நாட்டுப் பேரரசர் சங்கத்தின் தலைவரான இளவரசர் அலெக்ஸாண்டர் கலீட்ஸின் என்பவரிடம் “ரஷ்ய நாட்டு மக்களும்கூட கடவுளுடைய வார்த்தையை தங்களுடைய தாய் மொழியில் வாசிக்கும் வாய்ப்பினைப் பெறவேண்டும்” என்று ஆளும் பேரவைக்கு எடுத்துக்கூறும்படியாக யோசனை சொன்னார்.
எபிரெய வேதாகமத்தை நேரடியாக மூல எபிரெயுவிலிருந்து ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது பாராட்டுக்குரியதாகும். எபிரெய வேதாகமத்தை ஸ்லாவிய மொழிக்கு மொழிபெயர்க்க பண்டைய கிரேக்க செப்டுவஜின்ட் அடிப்படையாக இருந்தது. ரஷ்ய மொழிக்கு பைபிளை மொழிபெயர்க்க இருந்தவர்களிடம் திருத்தம், தெளிவு, தூய்மை ஆகியவையே மொழிபெயர்ப்பின் முக்கிய அம்சங்களாக இருக்கவேண்டும் என்பதாக சொல்லப்பட்டது. ரஷ்ய மொழியில் பைபிளை அளிப்பதற்கு செய்யப்பட்ட இந்த ஆரம்ப கால முயற்சிகளுக்கு என்ன நடந்தது?
பைபிள் மொழிபெயர்ப்புக்கு ஒரு மரண அடியா?
சர்ச்சிலும் அரசாங்கத்திலுமிருந்த பழமைவாதிகள் அந்நிய மத மற்றும் அரசியல் செல்வாக்கைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க ஆரம்பித்தனர். பொது மத ஆராதனையில் பயன்படுத்தப்பட்ட ஸ்லாவிய மொழி, ரஷ்ய மொழியைக் காட்டிலும் பைபிளின் செய்தியை மிகத் தெளிவாக கூறியதாய் சில சர்ச் தலைவர்கள் தெரிவித்தார்கள்.
இதன் காரணமாக ரஷ்ய நாட்டு பைபிள் சங்கம் 1826-ல் கலைக்கப்பட்டது. பைபிள் சங்கம் தயாரித்திருந்த பல ஆயிரக்கணக்கான பிரதிகள் எரிக்கப்பட்டன. இதன் விளைவாக, பைபிள், சடங்குக்கும் பாரம்பரியத்துக்கும் அடுத்ததாக இரண்டாம் பட்சமானதாக ஆனது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் மாதிரியைப் பின்பற்றி, புனித பேரவை 1836-ல் இந்த ஆணையைப் பிறப்பித்தது: “கடவுள் பற்றுள்ள எந்த ஒரு பாமரனுக்கும் வேதவாக்கியங்களைக் கேட்பதற்கு அனுமதி உண்டு, ஆனால் வேதவாக்கியங்களின் சில பகுதிகளை, விசேஷமாக பழைய ஏற்பாட்டை உதவியில்லாமல் வாசிப்பதற்கு எவருக்கும் அனுமதி இல்லை.” பைபிளை மொழிபெயர்ப்பு செய்வது முடிவுக்கு வந்துவிட்டது போல தோன்றியது.
பாவ்ஸ்கியின் படைப்பு
இதற்கிடையில், எபிரெய மொழி பேராசிரியர் ஜியராஸ்யிம் பாவ்ஸ்கி எபிரெய வேதாகமத்தை ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டார். 1821-ல் அவர் சங்கீதத்தை மொழிபெயர்த்து முடித்தார். ரஷ்ய பேரரசர் உடனடியாக அதை அங்கீகரித்துவிட்டார், ஜனவரி 1822-க்குள் சங்கீத புத்தகம் பொது மக்களுக்கு வெளியிடப்பட்டது. உடனடியாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது, 12 தடவை அது மறுபதிப்பு செய்யப்பட வேண்டியதாயிற்று—மொத்தமாக 1,00,000 பிரதிகள்!
பாவ்ஸ்கியின் புலமைவாய்ந்த முயற்சிகள், அநேக மொழி வல்லுநர்கள் மற்றும் இறையியலரின் மரியாதையைப் பெற்றுத்தந்தன. அவரைச் சூழ்ந்திருந்த மறைவான சூழ்ச்சிகளினால் பாதிக்கப்படாத ஒளிவுமறைவில்லாத நேர்மையான மனிதர் என்பதாக அவர் விவரிக்கப்படுகிறார். ரஷ்ய பைபிள் சங்கத்தை சர்ச் எதிர்த்துவந்த போதிலும், அது அந்நிய நாட்டு அக்கறைகளை ஆதரிப்பதாக சிலர் நினைத்தபோதிலும் பேராசிரியர் பாவ்ஸ்கி தொடர்ந்து தன்னுடைய சொற்பொழிவுகளின்போது பைபிள் வசனங்களை ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்து வந்தார். அவரைப் பார்த்து வியந்த மாணவர்கள் அவருடைய மொழிபெயர்ப்புகளைக் கைப்பட எழுதினார்கள், காலப்போக்கில் அவருடைய படைப்பை அவர்களால் தொகுக்க முடிந்தது. 1839-ல் தணிக்கையாளர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்கள் கல்வி அச்சாலையில் துணிந்து 150 பிரதிகளை வெளியிட்டார்கள்.
பாவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பு வாசகர்களை மிகவும் கவர்ந்ததால், அதன் மவுசு அதிகமானது. ஆனால் 1841-ல் இந்த மொழிபெயர்ப்பு ஆர்த்தடாக்ஸ் கோட்பாட்டிலிருந்து விலகிச்செல்வதாக வாதாடி இந்த மொழிபெயர்ப்பின் “ஆபத்தைக்” குறித்து பேரவைக்கு மொட்டைக் கடிதத்தில் ஒரு புகார் அனுப்பிவைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பேரவை இந்த ஆணையைப் பிறப்பித்தது: “அச்சடிக்கப்பட்ட மற்றும் கையால் எழுதப்பட்ட ஜி. பாவ்ஸ்கியின் பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்புகள் அனைத்தையும் பறிமுதல்செய்து அழித்துவிடுங்கள்.”
கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்துதல்
இருந்தபோதிலும், பாவ்ஸ்கி, பைபிள் மொழிபெயர்ப்பின் ஆர்வத்தை மீண்டும் தட்டியெழுப்பினார். மற்றொரு முக்கியமான விஷயத்தின் சம்பந்தமாக எதிர்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவர் சிறந்த முன்மாதிரியை வைத்திருந்தார்; கடவுளுடைய பெயரே அந்த முக்கிய விஷயம்.
ரஷ்ய நாட்டு ஆராய்ச்சியாளர் கார்ஸுன்ஸ்கி இவ்விதமாக விளக்கினார்: ‘கடவுளுடைய உண்மையான பெயர், அவருடைய பெயர்களில் மிகவும் பரிசுத்தமானது, יהוה என்ற நான்கு எபிரெய எழுத்துக்களால் ஆனது, இப்பொழுது ஜெகோவா என்பதாக உச்சரிக்கப்படுகிறது.’ பண்டைய பைபிள் பிரதிகளில், கடவுளின் தனிச் சிறப்புப் பெயர் எபிரெய வேதாகமத்தில் மாத்திரமே ஆயிரக்கணக்கான தடவை காணப்படுகின்றன. என்றாலும், தெய்வீகப் பெயரானது எழுதவோ, உச்சரிக்கவோ கூடாதபடிக்கு மிகவும் பரிசுத்தமானது என்ற தவறான கருத்து யூதர்களிடம் இருந்தது. இதைக் குறித்து கார்ஸுன்ஸ்கி குறிப்பிட்டதாவது: ‘பேச்சில் அல்லது எழுத்தில் அதற்கு பதிலாக பொதுவாக அதோனாயி பயன்படுத்தப்பட்டது, இந்த வார்த்தை பெரும்பாலும் “கர்த்தர்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.’
கடவுளுடைய பெயரை உபயோகிக்காததற்குக் காரணம் மூடநம்பிக்கையான ஒரு பயமேயொழிய, கடவுள் பக்தி அல்ல. பைபிளிலேயுங்கூட, கடவுளுடைய பெயரை உபயோகிக்கக் கூடாது என்று எந்த இடத்திலேயும் பதிவாகவில்லை. கடவுள்தாமே மோசேயிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக. என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.” (யாத்திராகமம் 3:15, NW) திரும்பத் திரும்ப வேதாகமம் வணக்கத்தாரை பின்வருமாறு துரிதப்படுத்துகிறது: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவரது பெயரைச் சொல்லிக் கூப்பிடுங்கள்.” (ஏசாயா 12:4, NW) இருந்தாலும், பெரும்பாலான பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் யூத பாரம்பரியத்தைப் பின்பற்றி கடவுளுடைய பெயரை பயன்படுத்தாதிருக்கவே தெரிந்துகொண்டனர்.
இருந்தாலும் பாவ்ஸ்கி இந்தப் பாரம்பரியங்களைப் பின்பற்றவில்லை. அவர் மொழிபெயர்த்த சங்கீதங்களில் மாத்திரமே, யெகோவா என்ற பெயர் 35-க்கும் மேற்பட்ட தடவை காணப்படுகிறது. அவர் காட்டிய துணிவு சமகாலத்தவர் ஒருவரின்மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தவிருந்தது.
ஆர்கிம்மான்ரைட் மாக்காரியாஸ்
இந்தச் சமகாலத்தவர், ஆச்சரியப்பட வைக்கும் விதமாக மொழிகளில் திறமை கொண்ட ரஷ்ய நாட்டு ஆர்த்தடாக்ஸ் மிஷனரியான ஆர்கிம்மான்ரைட் மாக்காரியாஸ் என்பவர் ஆவார். ஏழு வயதிலேயே அவரால் ரஷ்ய மொழியின் சிறு வாசகங்களை லத்தீனுக்கு மொழிபெயர்க்க முடிந்தது. 20 வயதை அடைவதற்குள் அவர் எபிரெயு, ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். இருந்தபோதிலும், கடவுளுக்கு முன்பாக அவருக்கிருந்த தாழ்மையான மனப்பான்மையும் பொறுப்புணர்வும் மட்டுமீறிய தன்னம்பிக்கை என்ற கண்ணியைத் தவிர்ப்பதற்கு அவருக்கு உதவின. அவர் அடிக்கடி மற்ற மொழி வல்லுநர்கள் மற்றும் கல்விமான்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.
மாக்காரியாஸ் ரஷ்ய நாட்டில் மிஷனரி வேலையை சீர்படுத்த விரும்பினார். கிறிஸ்தவத்தை ரஷ்ய நாட்டிலுள்ள முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு முன்பாக, சர்ச் “பள்ளிகளை நிறுவி ரஷ்ய மொழியில் பைபிள்களை விநியோகிப்பதன் மூலம் பொது மக்களுக்கு அறிவொளியூட்ட வேண்டும்” என்பதாக அவர் நினைத்தார். மார்ச் 1839-ல், மாக்காரியாஸ் எபிரெய வேதாகமத்தை ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்ப்பதற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு வந்திறங்கினார்.
மாக்காரியாஸ் ஏற்கெனவே பைபிள் புத்தகங்களாகிய ஏசாயா மற்றும் யோபுவை மொழிபெயர்த்து முடித்திருந்தார். இருந்தபோதிலும், எபிரெய வேதாகமத்தை ரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பதற்கு பேரவை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. உண்மையில், எபிரெய வேதாகமத்தை ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்ப்பதை மறந்துவிடும்படியாக மாக்காரியாஸுக்குச் சொல்லப்பட்டது. பேரவை ஏப்ரல் 11, 1841 தேதியிட்ட அதிகாரப்பூர்வமான தீர்மானம் ஒன்றை வெளியிட்டது; அதில் மாக்காரியாஸ், “தன்னுடைய மனச்சாட்சியைப் பிராத்தனை, மண்டியிடுதல் ஆகியவற்றின் மூலமாக சுத்திகரித்துக் கொள்வதற்காக டாம்சிக்கில் ஒரு பிஷப்பினுடைய வீட்டில் இருந்து மூன்று முதல் ஆறு வாரங்கள் பிராயச்சித்தம்” செய்யும்படியாக உத்தரவிடப்பட்டிருந்தார்.
மாக்காரியாஸின் துணிச்சலான நிலைநிற்கை
டிசம்பர் 1841 முதல் ஜனவரி 1842 வரையாக மாக்காரியாஸ் தன் பிராயச்சித்தத்தை நிறைவேற்றினார். ஆனால் அதை நிறைவேற்றி முடித்தவுடன், அவர் உடனடியாக எபிரெய வேதாகமத்தில் மீதமுள்ளவற்றை மொழிபெயர்க்க ஆரம்பித்துவிட்டார். அவர் எபிரெய வேதாகமத்தின் பாவ்ஸ்கியினுடைய மொழிபெயர்ப்பு ஒன்றைப் பெற்று தன்னுடைய சொந்த மொழிபெயர்ப்புகளை சரிபார்க்க அதைப் பயன்படுத்திக் கொண்டார். பாவ்ஸ்கியைப் போலவே, இவர் கடவுளுடைய பெயரை மறைக்க மறுத்துவிட்டார். உண்மையில் சொல்லப்போனால், யெகோவா என்ற பெயர் மாக்காரியாஸின் மொழிபெயர்ப்பில் 3,500 தடவைக்கு மேல் காணப்படுகிறது!
மாக்காரியாஸ் தனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுக்கு தன்னுடைய படைப்புகளின் பிரதிகளை அனுப்பிவைத்தார். கையெழுத்துப் பிரதிகள் சில புழக்கத்திலிருந்த போதிலும், இவருடைய படைப்பு பிரசுரிக்கப்படுவதை சர்ச் தொடர்ந்து எதிர்த்தது. மாக்காரியாஸ் வெளிநாடுகளில் தன்னுடைய பைபிளுக்கு ஆதரவைத் திரட்ட முயன்றார். அவர் புறப்படுவதற்கு முந்தின நாள் நோய்வாய்ப்பட்டு அதற்குப்பின் விரைவில் 1847-ல் இறந்துபோனார். அவருடைய பைபிள் மொழிபெயர்ப்பு அவருடைய வாழ்நாளில் பிரசுரிக்கப்படவே இல்லை.
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது!
கடைசியாக, அரசியல் மற்றும் மத காற்றின் திசை மாறியது. புதிய ஒரு முற்போக்கான மனப்பான்மை தேசமெங்கும் பரவியது, 1856-ல் பேரவை மறுபடியுமாக பைபிளை ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்க்க அங்கீகாரம் அளித்தது. முன்னிலும் மேம்பட்ட இந்தச் சூழ்நிலையில், ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் ஒரு பரிசோதனை என்ற தலைப்பின்கீழ் மாக்காரியாஸ் பைபிள் 1860-க்கும் 1867-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளிலே ஆர்த்தடாக்ஸ் மறுபார்வை-யில் பகுதி பகுதியாக பிரசுரிக்கப்பட்டது.
ரஷ்ய மத இலக்கிய கல்விமான், செர்னிகோவின் பேராயர் ஃபிலாரே, மாக்காரியாஸ் பைபிளை பற்றிய தன்னுடைய மதிப்பீட்டை இவ்வாறு கூறினார்: “அவருடைய மொழிபெயர்ப்பு எபிரெய வாசகத்திலிருந்து மாறுபடாமலும் மொழிபெயர்ப்பின் மொழிநடை தூய்மையாகவும் பொருளுக்குப் பொருத்தமாகவும் உள்ளது.”
இருந்தபோதிலும், மாக்காரியாஸ் பைபிள் பொதுமக்களுக்கு ஒருபோதும் கிடைக்கும்படிச் செய்யப்படவில்லை. உண்மையில், அது பெரும்பாலும் மறக்கப்பட்டே போனது. 1876-ல், எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமங்கள் உட்பட முழு பைபிளும் கடைசியாக பேரவையின் ஒப்புதலோடு ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. இந்த முழு பைபிள் குரு மன்றத்தின் பைபிள் என்பதாக அடிக்கடி அழைக்கப்படுகிறது. இந்த “அதிகாரப்பூர்வமான” ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் மொழிபெயர்ப்புக்கு பாவ்ஸ்கி மற்றும் மாக்காரியாஸ் மொழிபெயர்ப்புகள் முக்கிய ஆதாரமாக இருந்தன என்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஆனால் கடவுளுடைய பெயர் எபிரெய மொழியில் காணப்படும் இடங்களில் வெகு சில இடங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டது.
இன்று மாக்காரியாஸ் பைபிள்
1993 வரையாக மாக்காரியாஸ் பைபிள் மறைவாகவே இருந்தது. அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டபடி, அந்தச் சமயத்தில் அதனுடைய ஒரு பிரதி ரஷ்ய நாட்டு தேசிய நூலகத்தில் அரியபுத்தகங்கள் பகுதியில் பழைய ஆர்த்தடாக்ஸ் மறுபார்வை பத்திரிகைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் இந்தப் பைபிளை பொது மக்களுக்கு கிடைக்கும்படிச் செய்வது மதிப்புள்ளதாயிருக்கும் என்று உணர்ந்தனர். மாக்காரியாஸ் பைபிளைப் பிரசுரிப்பதற்கான ஆயத்தம் செய்வதற்கு ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பு இதன் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள நூலகம் அவர்களுக்கு அனுமதி அளித்தது.
அதைத் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகள் ரஷ்யா முழுவதிலும் ரஷ்ய மொழி பேசப்படும் மற்ற அநேக தேசங்களிலும் விநியோகம் செய்வதற்காக இத்தாலியில் இந்தப் பைபிளின் சுமார் 3,00,000 பிரதிகள் அச்சு செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்தனர். பெரும்பாலான எபிரெய வேதாகமத்தில் மாக்காரியாஸ் மொழிபெயர்ப்போடுகூட, பைபிளின் இந்தப் பதிப்பு பாவ்ஸ்கி மொழிபெயர்த்த சங்கீதங்களையும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் ஒப்புதலோடு செய்யப்பட்ட பேரவையின் கிரேக்க வேதாகம மொழிபெயர்ப்பையும் உடையதாயிருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரியில், ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நிருபர் கூட்டத்தில் இது வெளியிடப்பட்டது. (பக்கம் 26-ஐக் காண்க.) ரஷ்ய மொழி வாசகர்கள் நிச்சயமாகவே இந்தப் புதிய பைபிளினால் அறிவொளியூட்டப்பட்டு பயனடைவர்.
இதன் காரணமாக இந்தப் பைபிள் பிரசுரம் மதத்திற்கும், இலக்கிய புலமைக்கும் கிடைத்த வெற்றியாகும்! மேலுமாக இது ஏசாயா 40:8-ல் உள்ள வார்த்தைகளின் உண்மைக்கு விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஒரு நினைப்பூட்டுதலாகவும்கூட உள்ளது: “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.”
[பக்கம் 26-ன் பெட்டி]
பைபிள் திறனாய்வாளர்களின் பாராட்டைப் பெறுகிறது
“இன்னொரு இலக்கியப் படைப்பு வெளியிடப்பட்டுள்ளது: மாக்காரியாஸ் பைபிள்.” இந்த அறிமுக வார்த்தைகளோடு காம்சாமால்ஸ்காயா ப்ராவ்டா மாக்காரியாஸ் பைபிளின் வெளியீட்டை அறிவித்தது.
சுமார் “120 ஆண்டுகளுக்கு முன்னர்தானே” ரஷ்ய பைபிள் முதன்முதலாக தோன்றியது என்பதைக் குறிப்பிட்ட பின்பு, இந்தச் செய்தித்தாள் இவ்விதமாக வருத்தத்தோடு அறிவித்தது: “பல ஆண்டுகளாக சர்ச் பரிசுத்தப் புத்தகங்கள் எளிதாக வாசிக்க முடிகிற மொழியில் மொழிபெயர்க்கப்படுவதை எதிர்த்து வந்தது. பல்வேறு மொழிபெயர்ப்புகளை நிராகரித்துவிட்ட பின்பு, சர்ச் கடைசியாக 1876-ல் அவற்றில் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்தது. அது புனித பேரவை மொழிபெயர்ப்பு என்று அறியப்படலானது. இருந்தபோதிலும், அது சர்ச்சுகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அங்கே இன்று வரையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஒரே பைபிள் ஸ்லாவிய மொழி பைபிளாகும்.”
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் எக்கோ என்ற செய்தித்தாளும்கூட மாக்காரியாஸ் பைபிள் பிரசுரிக்கப்பட்ட மதிப்பை சுட்டிக்காட்டி, இவ்வாறு கூறியது: “செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி, ஹெர்ட்சன் பிடகாகிக்கல் யுனிவர்சிட்டி, ஸ்டேட் மியூசியம் ஆஃப் ரிலிஜியஸ் ஹிஸ்டரி ஆகியவற்றைச் சேர்ந்த தகுதியுடைய கல்விமான்கள் பைபிளின் இந்தப் புதிய பதிப்பை மிகவும் உயர்வாக பாராட்டியுள்ளனர்.” கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மாக்காரியாஸ் மற்றும் பாவ்ஸ்கி பைபிளை ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்ததைக் குறிப்பிட்டு செய்தித்தாள் இவ்விதமாகச் சொன்னது: “அந்தச் சமயம் வரையாக, ரஷ்ய நாட்டில் பைபிள் ஸ்லாவிய மொழியில் மாத்திரமே வாசிக்கப்படவும் குருவர்க்கத்தினரால் மட்டுமே புரிந்துகொள்ளப்படவும் முடிந்தது.”
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள மாக்காரியாஸ் பைபிள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. நியஃப்சாக்கியா வ்ரெம்யா என்ற உள்ளூர் செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “தகுதியுள்ள கல்விமான்கள் . . . இந்தப் பதிப்பு, ரஷ்ய மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலாச்சார வாழ்க்கையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியாக கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த மத அமைப்பின் வேலையைப்பற்றி ஒருவர் என்ன நினைத்தாலும் சரி, இதுவரையில் அறியப்படாமல் இருந்த இந்த பைபிள் மொழிபெயர்ப்பு பிரசுரிக்கப்பட்டிருப்பது சந்தேகமின்றி அதிக பயனுள்ளதாகும்.”
நிச்சயமாகவே, கடவுளை நேசிக்கும் அனைவருமே அவருடைய எழுதப்பட்ட வார்த்தை பொது மக்கள் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிகிற ஒரு மொழியில் கிடைக்கையில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர். உலகம் முழுவதிலும் ரஷ்ய மொழி பேசும் லட்சக்கணக்கான ஆட்களுக்கு மற்றொரு பைபிள் மொழிபெயர்ப்பு கிடைத்திருப்பதைக் குறித்து எல்லா இடங்களிலுமுள்ள பைபிளை நேசிப்போர் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.
[பக்கம் 23-ன் படம்]
மறைந்திருந்த பொக்கிஷம் கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய தேசிய நூலகம்
[பக்கம் 23-ன் படம்]
மகா பீட்டர் பைபிளை ரஷ்ய மொழியில் பிரசுரிக்க முயற்சிசெய்தார்
[பக்கம் 23-ன் படம்]
Corbis-Bettmann
[பக்கம் 24-ன் படம்]
பைபிளை ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்க்க பங்களித்த ஜியராஸ்யிம் பாவ்ஸ்கி
[பக்கம் 25-ன் படம்]
ஆர்கிம்மான்ரைட் மாக்காரியாஸின் பெயரால் அழைக்கப்படும், புதிய ரஷ்ய மொழி பைபிள்
[பக்கம் 26-ன் படம்]
மாக்காரியாஸ் பைபிள் வெளியீடு இந்த நிருபர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது