மழைக்காக நன்றி சொல்லுங்கள்
மழை! அது பெய்யாவிட்டால் நம் கதி? அடைமழை பெய்தால் வெள்ளப்பெருக்கு வந்து ஊரையே நாசப்படுத்திவிடும் என்பது உண்மைதான். அதோடு, சதா குளிரடிக்கிற அல்லது மழை பெய்கிற இடங்களில் வாழ்கிறவர்கள் அல்லது அப்படிப்பட்ட பருவகாலங்களை எதிர்ப்படுகிறவர்கள் எப்போதும் மழையை ரசிக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதான். (எஸ்றா 10:9) ஆனால், பெரும்பாலும் உஷ்ணத்தாலும் வறட்சியாலும் தவிக்கிற லட்சோபலட்சம் பேர், மழைத் துளிகள் மண்ணில் விழ ஆரம்பித்ததுமே உற்சாகத் துள்ளல் போடுகிறார்கள்.
பைபிள் சம்பவங்கள் நிகழ்ந்த நாடுகளில், இப்படிப்பட்ட சீதோஷ்ணம்தான் நிலவியது. அப்போஸ்தலன் பவுல் மிஷனரி ஊழியம் செய்த ஆசியா மைனரின் உள்நாட்டுப் பகுதிகள் அவற்றில் அடக்கம். பூர்வ லிக்கவோனியாவில் பவுல் இருந்தபோது அங்கு வாழ்ந்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘[கடவுள்] நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாமல் இல்லை.’ (அப்போஸ்தலர் 14:17) இந்த வசனத்தில் பவுல் முதலாவதாக மழையைக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்; மழை இல்லாவிட்டால் எதுவும் முளைக்காது, ‘செழிப்புள்ள காலங்களும்’ இருக்காது.
மழையைப் பற்றி பைபிள் ஏராளமான தகவலை அளிக்கிறது. மழை என்பதற்குரிய எபிரெய, கிரேக்க வார்த்தைகள் பைபிளில் நூற்றுக்கும் அதிகமான முறை காணப்படுகின்றன. மழை எனும் அற்புதப் பரிசைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதே சமயம், அறிவியல்பூர்வமாக பைபிள் எந்தளவு திருத்தமாய் உள்ளது என்பதை அறிந்து, அதன் பேரில் உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா?
மழையைப் பற்றி பைபிள் தரும் தகவல்
மழை உருவாவதற்கு அடிப்படையாய் அமையும் ஓர் அம்சத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். “உங்கள் பிதா . . . தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 5:45) மழையைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாக சூரியனைப் பற்றி இயேசு சொன்னதைக் கவனித்தீர்களா? அவர் சொன்னது சரிதான். ஏனென்றால், தாவரங்கள் வளர்வதற்கான சக்தியைக் கொடுக்கும் சூரியன்தான் நீர் சுழற்சி நடைபெறுவதற்கும் காரணமாக இருக்கிறது. ஆம், ஒவ்வொரு வருடமும் கடலிலிருந்து கிட்டத்தட்ட 53 கோடி கன அடி நீர், சூரிய வெப்பத்தால் நன்னீர் ஆவியாக மாறுகிறது. சூரியனை யெகோவா தேவன் படைத்திருப்பதால் நீரை இழுத்து மழையைப் பொழியச் செய்பவர் என அவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பது சாலப் பொருத்தம்.
இந்த நீர் சுழற்சியை பைபிள் பின்வருமாறு விளக்குகிறது: “நீர்த்துளிகளை அவர் [இறைவன்] ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை மழையாக வடித்துக் கொடுக்கின்றார். முகில்கள் [மேகங்கள்] அவற்றைப் பொழிகின்றன; மாந்தர்மேல் அவற்றை மிகுதியாகப் பெய்கின்றன.” (யோபு 36:26–28, பொது மொழிபெயர்ப்பு) அறிவியல் ரீதியில் திருத்தமாய் உள்ள இந்த வார்த்தைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டன; நீர் சுழற்சியைப் புரிந்துகொள்ள அன்றுமுதல் இன்றுவரை மனிதன் பெரும்பாடு பட்டிருக்கிறான். ஆனால், “இதுவரை மழைத்துளி உருவாகும் விதம் பற்றி [மனிதனுக்கு] திட்டவட்டமாகத் தெரியாது” என்று நீர் அறிவியல்-பொறியியல் என்ற தலைப்பில் 2003-ல் வெளிவந்த ஆங்கிலப் பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது.
மேகங்களிலுள்ள மிக நுண்ணிய நீர்த்திவலைகளுக்கு மையக் கருவாய் விளங்கும் நுண்துகள்களிலிருந்து மழைத்துளிகள் உருவாகின்றன என்பது மட்டுமே விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு மழைத்துளியாக உருவெடுக்க இந்த மிக நுண்ணிய நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான மடங்கு அல்லது அதற்கு அதிகமான மடங்கு பெரிதாக வேண்டும். இது பல மணிநேரம் எடுக்கும் ஒரு சிக்கலான செயல்முறை. நடைமுறை நீரியல் என்ற அறிவியல் பாடப்புத்தகம் (ஆங்கிலம்) இவ்வாறு சொன்னது: “மேகத்துளிகள் எப்படி மழைத்துளிகளாக உருவெடுக்கின்றன என்பதற்குப் பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. இந்தக் கோட்பாடுகளின் பேரில் நடைபெறும் ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் மூழ்கிப்போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.”
மழைக்குக் காரணமான படைப்பாளர் பின்வரும் கேள்விகளைத் தம் ஊழியரான யோபுவிடம் கேட்டார்: “மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்? . . . அந்தக்கரணங்களில் [அதாவது, மேக அடுக்குகளில்] ஞானத்தை வைத்தவர் யார்? . . . ஞானத்தினாலே கொடிமாசிகளை [அதாவது, மேகங்களை] எண்ணுபவர் யார்? . . . ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?” (யோபு 38:28, 36–38) இந்தக் கேள்விகளைக் கடவுள் கேட்டு சுமார் 3,500 வருடங்கள் ஆகிவிட்டன; கடினமான இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் இன்றும் திணறுகிறார்கள்.
எந்த முறையில் நீர் சுழற்சி நடைபெறுகிறது?
மழை நீரல்ல, கடல் நீரே ஆற்று நீராகிறது, அதாவது கடல் நீர் எப்படியோ பூமிக்கடியில் ஓடி மலைகளுக்கு மேல் ஏறி, புத்துயிரூட்டும் ஊற்று நீராக உருவெடுக்கிறது என்று கிரேக்க தத்துவஞானிகள் கற்பித்தார்கள். பைபிள் விளக்கவுரை ஒன்று, சாலொமோனின் வார்த்தைகளுக்கு இத்தகைய அர்த்தத்தைத்தான் தருகிறது. கடவுளுடைய சக்தியின் உதவியால் சாலொமோன் இவ்வாறு சொன்னார்: “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.” (பிரசங்கி 1:7) குழாய் வழியாகத் தண்ணீர் மேலே ஏற்றப்படுவதைப்போல கடல் நீர் எப்படியோ மலைகளுக்குள் மேலே ஏற்றப்பட்டு, பிறகு ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றா சாலொமோன் சொன்னார்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் சாலொமோன் காலத்தில் வாழ்ந்தவர்கள் நீர் சுழற்சியைப் பற்றி என்ன நம்பினார்கள் என்பதைப் பார்ப்போம். தவறான கோட்பாடுகளையே அவர்களும் நம்பினார்களா என்பதையும் பார்ப்போம்.
சாலொமோன் அந்த வார்த்தைகளை எழுதி நூறாண்டுகளுக்குள்ளேயே, மழை நீர் உருவாகும் விதத்தைப் பற்றி தான் அறிந்திருந்த தகவலை எலியா தீர்க்கதரிசி தெரிவித்தார். அவருடைய காலத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக கடும் வறட்சி நிலவியது. (யாக்கோபு 5:17) இஸ்ரவேலர் யெகோவா தேவனைப் புறக்கணித்துவிட்டு பாகால் என்ற கானானியரின் மழைத் தெய்வத்தை வணங்கியதால் இந்தக் கடும் வறட்சியால் அவதிப்பட அவர்களை யெகோவா விட்டுவிட்டார். இஸ்ரவேலர் மனந்திரும்பி யெகோவாவை வழிபட அவர்களுக்கு எலியா உதவினார்; எனவே, மழைக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அதோடு தன்னுடைய ஊழியக்காரனிடம் ‘கடல் பக்கமாய்ப் பார்க்க’ சொன்னார். ‘மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருவதாக’ அந்த ஊழியக்காரன் வந்து சொன்னபோது தன்னுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்துவிட்டதென எலியா புரிந்துகொண்டார். சீக்கிரத்தில், “வானம் இருண்டது; கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது.” (1 இராஜாக்கள் [அரசர்கள்] 18:43–45, பொ.மொ.) நீர் சுழற்சியைப் பற்றி எலியா அறிந்திருந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது. கடலுக்கு மேல் உருவாகும் மேகங்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிக் கிழக்குப் பக்கமாகக் காற்றின்மூலம் தள்ளப்படுவதை அவர் அறிந்திருந்தார். இன்றுவரை, இந்த முறையிலேயே பூமி மழை நீரைப் பெறுகிறது.
மழைக்காக எலியா ஜெபம் செய்து சுமார் நூறாண்டுகளுக்குப் பிறகு, நீர் சுழற்சிக்குரிய நீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதைக் குறித்து ஆமோஸ் என்ற எளிய விவசாயி ஒரு முக்கியத் தகவலைத் தெரிவித்தார். ஏழை எளியவரை ஒடுக்கி, பொய் தெய்வங்களை வழிபட்ட இஸ்ரவேலருக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்லும்படி கடவுள் இவரைப் பயன்படுத்தினார். கடவுளுடைய கையில் மரண தண்டனை பெறாமல் தப்பிப்பதற்கு “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” என்று ஆமோஸ் அவர்களை ஊக்கப்படுத்தினார். படைப்பாளராக யெகோவா ‘சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுவதால்’ அவரை மட்டுமே வழிபட வேண்டுமென அவர் விளக்கினார். (ஆமோஸ் 5:6, 8) நீர் சுழற்சியையும் அதன் பாதையையும் பற்றிய சிலிர்ப்பூட்டும் உண்மையை ஆமோஸ் மீண்டும் குறிப்பிட்டார். (ஆமோஸ் 9:6) இவ்வாறு, மழை நீருக்கு முக்கிய ஊற்றுமூலம் கடல்தான் என்பதை ஆமோஸ் விளக்கினார்.
இந்த உண்மையை 1687-ல் எட்மண்ட் ஹாலி என்பவர் அறிவியல் ரீதியாக நிரூபித்தார். எனினும், ஹாலி அளித்த அத்தாட்சியை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. “பூமிக்குள்ளேயே ஒரு நீரோட்ட மண்டலம் இருப்பதாகவும், அது கடல் நீரை மலை உச்சிகளுக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து அனுப்புவதாகவும் 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உறுதியாய் நம்பப்பட்டது” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா ஆன்லைன் குறிப்பிடுகிறது. இன்று, நீர் சுழற்சி உண்மையில் எப்படி நடைபெறுகிறது என்பதை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். “கடல்நீர் ஆவியாகி, பின்னர் வளிமண்டலத்தில் திரவமாகி பூமியின் மீது விழுகிறது; கடைசியில் அது ஆறுகளில் ஓடி கடலிலேயே கலந்துவிடுகிறது” என்று அந்த பிரிட்டானிக்கா சொல்கிறது. ஆக, மழை சுழற்சி பற்றி பிரசங்கி 1:7-ல் காணப்படும் சாலொமோனின் வார்த்தைகள் இந்தச் சுழற்சியைத்தான் குறிப்பிடுகின்றன.
என்ன செய்ய இது உங்களைத் தூண்ட வேண்டும்?
பல்வேறு பைபிள் எழுத்தாளர்கள் நீர் சுழற்சியைப் பற்றிய உண்மையை மிகத் துல்லியமாக விளக்கியிருப்பது, மனிதனின் படைப்பாளரான யெகோவா தேவன்தான் பைபிளின் நூலாசிரியர் என்பதற்கு குறிப்பிடத்தக்க ஓர் அத்தாட்சி. (2 தீமோத்தேயு 3:16) பூமியை மனிதன் மோசமாக நிர்வகிப்பதாலேயே சீதோஷ்ணநிலை இந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறது; இதன் காரணமாகவே சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் இன்னும் சில இடங்களில் வறட்சியும் ஏற்படுகிறது. ஆனால், நீர் சுழற்சியை உருவாக்கிய யெகோவா தேவன் இறுதியில் தலையிட்டு, ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கப்போவதாக’ வெகு காலத்துக்கு முன்பே வாக்குறுதி அளித்தார்.—வெளிப்படுத்துதல் 11:18.
இதற்கிடையில், கடவுள் தரும் பரிசாகிய மழைக்காக நீங்கள் அவருக்கு எப்படி நன்றி காட்டலாம்? அவருடைய வார்த்தையான பைபிளைக் கருத்தூன்றிப் படிப்பதன் மூலமும், படித்ததை வாழ்க்கையில் பின்பற்றுவதன் மூலமும் உங்கள் நன்றியைக் காட்டலாம். அப்படிச் செய்யும்போது, கடவுளுடைய புதிய உலகில் வாழும் நம்பிக்கையைப் பெறுவீர்கள்; அந்த உலகில் கடவுள் அருளும் எல்லா கொடைகளையும் நித்திய காலத்திற்கும் அனுபவித்து மகிழ்வீர்கள். உண்மைதான், “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” மழைக்குக் காரணரான யெகோவா தேவனிடமிருந்தே வருகின்றன.—யாக்கோபு 1:17. (w09 1/1)
[பக்கம் 26, 27-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
← ← திரவமாதல் ←
↓ ↑ ↑
மழை நீர் தாவரங்களிலுள்ள நீர் ஆவியாக வெளியேறுதல் ஆவியாதல்
↓ ஆற்று நீர் ↑
நிலத்தடி நீர் ↓
↓ → →
[பக்கம் 26-ன் படம்]
எலியா ஜெபம் செய்தபோது ஊழியக்காரன் ‘கடல் பக்கமாய்ப் பார்த்தான்’