யெகோவா நம்மிடம் எதைக் கேட்கிறார்?
“நியாயஞ்செய்து, இரக்கத்தைச் [“தயவை,” NW] சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் [“அடக்கமாய்,” NW] நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.”—மீகா 6:8.
1, 2. யெகோவாவின் ஊழியர்களில் சிலர் ஏன் சோர்ந்துவிடலாம், ஆனால் எது உதவியாக இருக்கும்?
விரா என்பவருக்கு சுமார் 75 வயது. வியாதிப்பட்டிருக்கும் இவர் விசுவாசமுள்ள ஒரு கிறிஸ்தவ பெண்மணி. “சிலசமயங்களில், என் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் வீடு வீடாக ஊழியம் செய்வதை ஜன்னல் வழியே பார்ப்பதுண்டு. அவர்களுடன் போக எனக்கு ஆசைதான், ஆனால் அப்படி யெகோவாவுக்கு சேவை செய்ய முடியாமல் வியாதி என்னை முடக்கிப் போட்டிருப்பதால் அழுகை அழுகையாக வருகிறது” என்கிறார் அவர்.
2 நீங்கள் எப்போதாவது அப்படி உணர்ந்திருக்கிறீர்களா? யெகோவாவை நேசிக்கும் அனைவரும் அவருடைய பெயரில் நடக்கவும் அவர் எதிர்பார்ப்பவற்றை செய்யவும் உண்மையிலேயே விரும்புகிறார்கள். ஆனால் நாம் சுகவீனப்படும்போது, முதுமை அடையும்போது, அல்லது குடும்பப் பொறுப்பு இருக்கும்போது என்ன செய்வது? அத்தகைய சூழ்நிலைகள் கடவுளுடைய சேவையில் நாம் செய்ய விரும்புவதையெல்லாம் செய்ய முடியாதபடி தடுக்கையில் நாம் கொஞ்சம் சோர்ந்துவிடலாம். இத்தகைய நிலையில் நாம் இருந்தால் மீகா 6-ம், 7-ம் அதிகாரங்களை ஆராய்வது ஒருவேளை நமக்கு அதிக உற்சாகத்தை அளிக்கலாம். இந்த அதிகாரங்கள் யெகோவா நம்மிடம் நியாயமான, நம்மால் செய்ய முடிந்த காரியங்களையே எதிர்பார்க்கிறார் என காட்டுகின்றன.
கடவுள் தம் ஜனங்களை நடத்தும் விதம்
3. கலகக்கார இஸ்ரவேலரை யெகோவா எவ்வாறு நடத்துகிறார்?
3 முதலில் மீகா 6:3-5-ஐ பார்ப்போம், அங்கு யெகோவா தம் ஜனங்களை நடத்தும் விதத்தை கவனிப்போம். மீகாவின் காலத்தில் யூதர்கள் கலகக்காரர்களாக இருந்ததை நினைவில் வையுங்கள். அப்படியிருந்தாலும், “என் ஜனமே” என்று இரக்கத்துடன் அவர்களை யெகோவா அழைக்கிறார். “என் ஜனமே, . . . நினைத்துக்கொள்” என்று யெகோவா கெஞ்சுகிறார். அவர் கோபாவேசத்துடன் அவர்களைக் குற்றம் சாட்டுவதில்லை, ஆனால், “நான் உனக்கு என்ன செய்தேன்?” என்று கேட்பதன் மூலம் அவர்கள் இருதயத்தை எட்ட முயலுகிறார். அவருக்கு ‘எதிரே உத்தரவு சொல்ல’ அவர்களை ஊக்கமூட்டவும் செய்கிறார்.
4. இரக்கம் காட்டுவதில் கடவுளுடைய உதாரணம் நம்மீது என்ன பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்?
4 நம் அனைவருக்கும் யெகோவா எப்பேர்ப்பட்ட உதாரணத்தை வைக்கிறார்! மீகாவின் காலத்திலிருந்த கலகக்காரர்களான இஸ்ரவேலரையும், யூதா தேசத்தாரையும்கூட யெகோவா இரக்கத்துடன் ‘என் ஜனம்’ என்று அழைத்து, அவர்களிடம் கெஞ்சினார். அப்படியென்றால், சபையில் உள்ளவர்களுடன் நாம் கண்டிப்பாக தயவோடும் கனிவோடும் நடந்துகொள்ள வேண்டும். சிலருடன் ஒத்துப் போவது நமக்கு சிரமமாக இருக்கலாம், அல்லது சிலர் ஆவிக்குரிய வகையில் பலவீனமாக இருக்கலாம் என்பது உண்மையே. என்றாலும், அவர்கள் யெகோவாவை நேசிக்கையில் அவர்களுக்கு உதவி செய்யவும் அவர்களிடம் இரக்கத்தை காட்டவும் விரும்புகிறோம்.
5. மீகா 6:6, 7-ல் என்ன முக்கிய குறிப்பு சொல்லப்பட்டுள்ளது?
5 அடுத்ததாக, பைபிளை மீகா 6:6, 7-க்குத் திருப்புவோம். ஒன்றன்பின் ஒன்றாக மீகா கேள்விகளை கேட்கிறார்: “என்னத்தைக் கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக் கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக் கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ? ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின் பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின் பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற்பேறானவனையும் என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக் கனியையும் கொடுக்க வேண்டுமோ?” இல்லை, ‘ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களாலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளாலும்’ யெகோவாவைப் பிரியப்படுத்த முடியாது. ஆனால் ஒரு விஷயம் யெகோவாவைப் பிரியப்படுத்தும். அது என்ன?
நாம் நியாயம் செய்ய வேண்டும்
6. கடவுள் கேட்கும் எந்த மூன்று தேவைகள் மீகா 6:8-ல் குறிப்பிடப்பட்டுள்ளன?
6 மீகா 6:8-ல், யெகோவா நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதை அறிகிறோம். மீகா கேட்கிறார்: ‘நியாயஞ்செய்து, தயவை சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக அடக்கமாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.’ இம்மூன்று தேவைகளும் நாம் எவ்வாறு உணருகிறோம், சிந்திக்கிறோம், செயல்படுகிறோம் என்பதை உட்படுத்துகின்றன. நாம் இந்தக் குணங்களை வெளிக்காட்டுவது அவசியமென உணரவும் அவற்றை எப்படி வெளிக்காட்டலாம் என சிந்திக்கவும், அவற்றை வெளிக்காட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இம்மூன்று தேவைகளையும் ஒவ்வொன்றாக கலந்தாலோசிப்போம்.
7, 8. (அ) ‘நியாயம் செய்வது’ எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) என்ன அநியாய செயல்கள் மீகாவின் நாளில் மலிந்து கிடக்கின்றன?
7 ‘நியாயம் செய்வது’ என்பது சரியானதைச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. கடவுள் செயல்படும் விதமே நியாயத்திற்கான தராதரமாக அமைகிறது. என்றாலும், மீகாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நியாயத்தை அல்ல, அநியாயத்தையே செய்கிறார்கள். எந்த வழிகளில்? மீகா 6:10-ஐ சற்று கவனியுங்கள். அந்த வசனத்தின் கடைசியில், வியாபாரிகள் ‘குறைந்த மரக்காலை,’ அதாவது மிகச் சிறிய மரக்காலை பயன்படுத்துவதாக விவரிக்கப்படுகிறது. 11-ம் வசனம் அவர்கள் ‘கள்ளப் படிக்கற்களை’ பயன்படுத்துவதாகவும் கூறுகிறது. 12-ம் வசனத்தின்படி, “அவர்கள் . . . நாவு கபடமுள்ளது.” இவ்வாறு, கள்ள மரக்காலும், கள்ள படிக்கற்களும், கபடப் பேச்சுக்களும் மீகாவின் நாளைய வியாபார உலகில் சர்வ சாதாரணமாய் இருக்கின்றன.
8 அநியாய செயல்கள் சந்தைகளில் மட்டுமே நடப்பதில்லை. நீதிமன்றத்திலும் அவை சகஜமாய் நடக்கின்றன. “அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்” என மீகா 7:3 காட்டுகிறது. குற்றமற்றவர்களின்மீது அநியாயமான தீர்ப்புகளை வழங்குவதற்கு நியாயாதிபதிக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. “பெரியவன்,” அல்லது செல்வாக்குமிக்கவன் இந்தக் குற்றச்செயல்களில் கூட்டுச் சேருகிறான். உண்மையில், அதிபதி, நியாயாதிபதி, பெரியவன் ஆகியோர் “புரட்டுகிறார்கள்” அல்லது பொல்லாத செயல்களை செய்வதில் கைகோர்த்துக் கொள்கிறார்கள் என்று மீகா சொல்கிறார்.
9. பொல்லாதவர்கள் செய்யும் அநியாயமான செயல்களால் யூதாவும் இஸ்ரவேலும் எப்படி பாதிக்கப்பட்டிருக்கின்றன?
9 பொல்லாத தலைவர்கள் செய்யும் அநியாயமான செயல்கள் யூதாவிலும் இஸ்ரவேலிலுமுள்ள அனைவரையும் பாதிக்கின்றன. மீகா 7:5 குறிப்பிடுகிறபடி நியாயம் இல்லாததால் சிநேகிதர்களுக்கிடையிலும், நம்பகமான நண்பர்களுக்கிடையிலும், தம்பதியினர்களுக்கிடையிலும்கூட நம்பிக்கை குறைந்துபோயிருக்கிறது. வசனம் 6 காட்டுகிறபடி, இரத்த பந்தங்களுக்கு இடையில் அதாவது அப்பாவும் மகனும், அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் வெறுக்குமளவுக்கு அது சென்றுவிட்டிருக்கிறது.
10. அநியாயம் நிறைந்த இந்த உலகில் கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்?
10 இன்றைய நிலை என்ன? அதைப் போன்ற நிலைமைகளையே நாம் காண்கிறோம் அல்லவா? மீகாவைப் போல நம்மையும் நியாயமற்ற நிலை, நம்பிக்கையற்ற சூழல், சமுதாய, குடும்ப வாழ்க்கையில் சீர்குலைவு ஆகியவை நாலாபுறமும் சூழ்ந்துள்ளன. கடவுளுடைய ஊழியர்களான நாம் அநியாயம் தலைவிரித்தாடும் இந்த உலகில் வாழ்ந்தாலும், அதன் அநியாயம் செய்யும் மனப்பான்மை கிறிஸ்தவ சபைக்குள் நுழைய நாம் அனுமதிப்பதில்லை. மாறாக, நேர்மையையும் உத்தமத்தையும் குறித்த நியமங்களை கடைப்பிடிக்க முயன்று, அவற்றை அன்றாட வாழ்க்கையில் வெளிக்காட்டுகிறோம். உண்மையில், ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்கிறோம்.’ (எபிரெயர் 13:18) நியாயம் செய்யும்போது, மெய்யான நம்பிக்கையை வெளிக்காட்டும் சகோதரத்துவத்தால் மகத்தான ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா?
ஜனங்கள் ‘யெகோவாவுடைய சத்தத்தை’ எப்படி கேட்கிறார்கள்?
11. மீகா 7:12 எப்படி நிறைவேறியிருக்கிறது?
11 அநியாயம் நிறைந்த சூழ்நிலைமையிலும் எல்லா மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று மீகா தீர்க்கதரிசனம் உரைக்கிறார். யெகோவாவின் வணக்கத்தாராக ஆவதற்கு, “ஒரு சமுத்திர முதல் மறு சமுத்திரம் வரைக்கும், ஒரு பர்வதமுதல் மறு பர்வதம் வரைக்குமுள்ள ஜனங்கள்” கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என தீர்க்கதரிசி முன்னுரைக்கிறார். (மீகா 7:12) இன்று, இந்தத் தீர்க்கதரிசனத்தின் கடைசி நிறைவேற்றத்தில், குறிப்பிட்ட ஒரு தேசத்தார் அல்ல, எல்லா தேசத்திலுள்ள தனிநபர்களும் கடவுளுடைய பாரபட்சமற்ற நியாயத்தால் பயனடைகிறார்கள். (ஏசாயா 42:1) இது எப்படி உண்மையென நிரூபிக்கப்படுகிறது?
12. இன்று ‘யெகோவாவுடைய சத்தம்’ எப்படி கேட்கப்படுகிறது?
12 அதற்கான பதிலை அறிய மீகா ஆரம்பத்தில் சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள். “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான் [“பெயருக்குப் பயப்படுவான்,” NW]” என மீகா 6:9 குறிப்பிடுகிறது. சகல தேசத்தாரும் ‘யெகோவாவுடைய சத்தத்தை’ எப்படி கேட்கிறார்கள், இது நாம் நியாயம் செய்வதுடன் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது? உண்மைதான், மக்கள் இன்று கடவுளுடைய சத்தத்தை நேரடியாக கேட்பதில்லை. என்றாலும், நாம் செய்துவரும் உலகளாவிய பிரசங்க வேலையின் மூலமாக, யெகோவாவின் சத்தத்தை எல்லா இனத்தையும் சமுதாய நிலையையும் சேர்ந்தவர்களால் கேட்க முடிகிறது. இதன் பலனாக, செவிகொடுப்பவர்கள், ‘கடவுளுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்,’ அதனிடம் பயபக்தி காட்டுவார்கள். வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிக்கையில் நாம் உண்மையிலேயே நியாயத்தோடும் அன்போடும் நடந்துகொள்கிறோம். பாரபட்சமின்றி ஒவ்வொருவருக்கும் கடவுளுடைய பெயரை தெரியப்படுத்துகையில் நாம் ‘நியாயம் செய்கிறோம்.’
நாம் தயவை சிநேகிக்க வேண்டும்
13. அன்புள்ள தயவுக்கும் அன்புக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
13 அடுத்ததாக, மீகா 6:8-ல் கூறப்பட்டிருக்கும் இரண்டாவது தேவையை கலந்தாலோசிப்போம். நாம் ‘தயவை சிநேகிக்கும்படி’ யெகோவா எதிர்பார்க்கிறார். “தயவு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை, “அன்புள்ள தயவு” அல்லது “பற்றுமாறா அன்பு” என்றும்கூட மொழிபெயர்க்கப்படுகிறது. அன்புள்ள தயவு என்பது மற்றவர்களிடம் கவனம் செலுத்துவதை, அவர்களிடம் கனிவோடு அக்கறை காட்டுவதைக் குறிக்கிறது. அன்புள்ள தயவு அன்பிலிருந்து வித்தியாசமானது. எப்படி? அன்பு பலவற்றை உள்ளடக்கும் ஒரு சொல்லாகும். பொருட்களுடனும் கருத்துக்களுடனும்கூட அன்பை சம்பந்தப்படுத்தலாம். உதாரணமாக, ‘ஞானத்தில் பிரியப்படுபவரைப்’ பற்றியும் ‘உலகத்திலுள்ளவைகளில் அன்புகூருபவர்களை’ பற்றியும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 29:3; 1 யோவான் 2:15) மறுபட்சத்தில், அன்புள்ள தயவு எப்பொழுதும் மக்களை, விசேஷமாக கடவுளை சேவிப்பவர்களை உட்படுத்துகிறது. எனவே, மீகா 7:20 (NW) யெகோவா தேவனை சேவித்த ‘ஆபிரகாமுக்கு காட்டப்பட்ட அன்புள்ள தயவைப்’ பற்றி சொல்கிறது.
14, 15. அன்புள்ள தயவு எப்படி வெளிக்காட்டப்படுகிறது, அதற்கு என்ன உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது?
14 மீகா 7:18-ன்படி (NW) கடவுள் “அன்புள்ள தயவில் பிரியப்படுகிறார்” என தீர்க்கதரிசி சொல்கிறார். அன்புள்ள தயவை காட்டும்படி மட்டுமல்லாமல், அந்தப் பண்பை சிநேகிக்கும்படியும் மீகா 6:8 நமக்கு சொல்கிறது. இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அன்புள்ள தயவை நாம் காட்ட விரும்புவதால், அதை மனமுவந்து, தாராளமாய் வெளிக்காட்டுகிறோம். யெகோவாவைப் போல், தேவையில் இருப்போருக்கு அன்புள்ள தயவைக் காட்டுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், அதைக் காட்டவும் விரும்புகிறோம்.
15 இன்று, அப்படிப்பட்ட அன்புள்ள தயவு கடவுளுடைய ஜனங்களின் அடையாள சின்னமாக இருக்கிறது. அதற்கு ஒரேவொரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஜூன் 2001-ல், வெப்பமண்டலப் பகுதியில் வீசிய புயல் காற்றால், அ.ஐ.மா., டெக்ஸஸ்ஸில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன; இவற்றில் யெகோவாவின் சாட்சிகளுடைய நூற்றுக்கணக்கான வீடுகளும் பாழாகியிருந்தன. தேவையிலிருந்த தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவ, சுமார் 10,000 சாட்சிகள் தாராளமாய் தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிட முன்வந்தார்கள். பகல் என்றோ இரவு என்றோ வார இறுதிநாட்கள் என்றோ பாராமல் ஆறு மாதங்களுக்கும் மேலாக, வாலண்டியர்கள் இடைவிடாமல் உழைத்து தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களுக்காக 8 ராஜ்ய மன்றங்களையும் 700-க்கும் அதிக வீடுகளையும் திரும்பவும் கட்டிக்கொடுத்தார்கள். அந்த விதத்தில் கைகொடுத்து உதவ முடியாதவர்கள், உணவுப்பொருட்கள், தேவையான பிற பொருட்கள், பணம் ஆகியவற்றை நன்கொடையாக அளித்தார்கள். ஆயிரக்கணக்கான இந்த சாட்சிகள் தங்கள் சகோதரர்களுக்கு உதவி செய்ய ஏன் வந்தார்கள்? ஏனெனில் அவர்கள் ‘தயவை சிநேகிக்கிறார்கள்.’ அன்புள்ள தயவை வெளிக்காட்டும் இப்படிப்பட்ட செயல்களை, உலகெங்குமுள்ள நம் சகோதரர்கள் செய்வதை அறிவது நம் இதயத்தை எவ்வளவாய் கனிவிக்கிறது! ஆம், ‘தயவை சிநேகிப்பதற்கு’ நம்மிடம் எதிர்பார்க்கப்படுபவற்றை செய்வது பாரமானதல்ல, மகிழ்ச்சியானதே!
அடக்கத்துடன் கடவுளோடு நடந்து செல்லுங்கள்
16. அடக்கத்துடன் கடவுளோடு நடந்து செல்வதன் அவசியத்தை வலியுறுத்த எந்த உதாரணம் உதவுகிறது?
16 மீகா 6:8-ல் காணப்படும் மூன்றாவது தேவை, ‘உன் தேவனுக்கு முன்பாக அடக்கமாய் நடப்பது’ என்பதாகும். நம் வரம்புகளை உணர்ந்து, கடவுளின்மீது சார்ந்திருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. உதாரணமாக: தன் அப்பாவுடன் நடந்து செல்லும் சிறுமி புயல் வீசுகையில் அவருடைய கையை இறுக்கமாக பிடித்துக்கொள்வதை ஒருகணம் கற்பனை செய்து பாருங்கள். தனக்கு அதிக சக்தி இல்லை என்பது அந்தச் சிறுமிக்கு நன்கு தெரியும்; ஆனால் தன் அப்பாவிடம் அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சிறுமியைப் போலவே, நாமும் நம்முடைய வரம்புகளை உணர்ந்து, நம் பரம தகப்பனிடம் நம்பிக்கையாய் இருக்க வேண்டும். இந்த நம்பிக்கையை நாம் எவ்வாறு காத்துக்கொள்ளலாம்? அதற்கு ஒரு வழி, யெகோவாவிடம் நெருங்கி இருப்பது ஏன் ஞானமானது என்பதை மனதில் வைத்திருப்பதே. மூன்று காரணங்களை மீகா நமக்கு நினைப்பூட்டுகிறார்: யெகோவா நம் மீட்பர், நம் வழிகாட்டி, நம் பாதுகாவலர்.
17. யெகோவா தம் பூர்வ கால ஜனங்களை எப்படி மீட்டார், வழிநடத்தினார், பாதுகாத்தார்?
17 மீகா 6:4, 5-ன்படி கடவுள் இவ்வாறு சொல்கிறார்: ‘நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினேன்.’ ஆம், யெகோவா இஸ்ரவேலின் மீட்பர். யெகோவா மேலுமாக இவ்வாறு சொல்கிறார்: ‘மோசே ஆரோன் மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.’ அந்தத் தேசத்தாரை வழிநடத்த மோசேயும் ஆரோனும் பயன்படுத்தப்பட்டார்கள்; மிரியாம் வெற்றி நடனத்தில் இஸ்ரவேல பெண்களை வழிநடத்தினாள். (யாத்திராகமம் 7:1, 2; 15:1, 19-21; உபாகமம் 34:12) தம் ஊழியர்களின் மூலம் யெகோவா வழிநடத்துதல் அளித்தார். 5-ம் வசனத்தின்படி, இஸ்ரவேல் தேசத்தாரை பாலாக், பிலேயாம் ஆகியோரிடமிருந்து யெகோவா பாதுகாத்ததையும் அவர்களுடைய பயணத்தின் கடைசி கட்டத்தின்போது மோவாபிலிருந்த சித்தீம் தொடங்கி, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்த கில்கால் மட்டும் அவர்களை பாதுகாத்ததையும் இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டினார்.
18. யெகோவா எப்படி இன்று நம் மீட்பராக, வழிகாட்டியாக, பாதுகாவலராக செயல்படுகிறார்?
18 நாம் கடவுளுடன் நடக்கையில், அவர் நம்மை சாத்தானிய உலகிலிருந்து மீட்கிறார்; அவருடைய வார்த்தை, அமைப்பு ஆகியவற்றின் மூலமாக வழிநடத்துகிறார்; எதிரிகள் நம்மை தாக்குகையில் ஒரு தொகுதியாக நம்மை பாதுகாக்கிறார். எனவே, இந்தக் கொந்தளிப்பான கடைசி கட்டத்தில், பூர்வ கால வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைவிட மிகச் சிறந்ததான கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகை நோக்கி பரலோக தகப்பனுடன் சேர்ந்து நடக்கும்போது அவருடைய கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொள்வதற்கு நமக்கு போதுமான காரணங்கள் உள்ளன.
19. அடக்கம் எந்த விதத்தில் நம் வரம்புகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது?
19 அடக்கத்தோடு கடவுளுடன் நடந்து செல்வது நம் சூழ்நிலைகளை எதார்த்தத்துடன் நோக்குவதற்கும் நமக்கு உதவுகிறது. அதற்குக் காரணம், அடக்கத்தை வெளிக்காட்டுவதில் நம்முடைய வரம்புகளை உணர்ந்திருப்பதும் அடங்கும். யெகோவாவின் சேவையில் நம்மால் செய்ய முடிந்தவற்றின்மீது முதிர்வயது அல்லது சுகவீனம் சில வரம்புகளை வைக்கலாம். எனினும் இது நம்மை சோர்வடைய செய்ய அனுமதிக்காமல், ‘நமக்கு இல்லாததின்படியல்ல, நமக்கு உள்ளதின்படியே’ கடவுள் நம்முடைய முயற்சிகளையும் தியாகங்களையும் ஏற்றுக்கொள்கிறார் என்பதை நினைவில் வைக்க வேண்டும். (2 கொரிந்தியர் 8:12) உண்மையில், நம் சூழ்நிலைகள் அனுமதிப்பதற்கேற்ப, முழு ஆத்துமாவோடு, தம்மை சேவிக்கும்படி யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார். (கொலோசெயர் 3:23, NW) அவருக்கு செய்யும் சேவையில் நம்மால் முடிந்த அனைத்தையும் ஊக்கத்துடனும் வைராக்கியத்துடனும் செய்கையில் நம்மை கடவுள் அபரிமிதமாக ஆசீர்வதிக்கிறார்.—நீதிமொழிகள் 10:22.
காத்திருக்கும் மனப்பான்மை ஆசீர்வாதங்களை அளிக்கிறது
20. எதை அறிந்திருப்பது மீகாவைப் போல் காத்திருக்கும் மனப்பான்மையைக் காட்ட நமக்கு உதவ வேண்டும்?
20 கடவுளுடைய ஆசீர்வாதத்தை அனுபவிப்பது, மீகாவின் மனோபாவத்தை பின்பற்றும்படி நம்மையும் உந்துவிக்கிறது. “நானோவென்றால் . . . என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்” என அவர் அறிவிக்கிறார். (மீகா 7:7) அடக்கமாய் கடவுளோடு நடப்பதுடன் இவ்வார்த்தைகள் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளன? காத்திருக்கும் மனப்பான்மை அல்லது பொறுமை, யெகோவாவின் நாள் இன்னும் வராதிருப்பதை எண்ணி ஏமாற்றமடையாதிருக்க நமக்கு உதவுகிறது. (நீதிமொழிகள் 13:12) சொல்லப்போனால், இந்தப் பொல்லாத உலகம் எப்பொழுது முடிவடையும் என்றுதான் நாம் அனைவருமே ஆவலுடன் காத்திருக்கிறோம். என்றாலும், வாரா வாரம் ஆயிரக்கணக்கானோர் இப்பொழுதுதான் கடவுளுடன் நடக்க ஆரம்பிக்கிறார்கள். இதை அறிவது, காத்திருக்கும் மனப்பான்மையோடு இருக்க நமக்கு காரணத்தை அளிக்கிறது. நீண்ட கால சாட்சி ஒருவர் இவ்வாறு கூறினார்: “பிரசங்க வேலையில் 55 வருடத்திற்கும் மேலாக செலவிட்டதை எண்ணிப் பார்க்கும்போது, யெகோவாவிற்காக காத்திருந்ததால் நான் எதையும் இழக்கவில்லை என உறுதியாக கூற முடியும். அதற்கு பதிலாக வேதனைமிக்க பல அனுபவங்களிலிருந்து தப்பியிருக்கிறேன்.” இதைப் போல் நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா?
21, 22. நம் நாளில் மீகா 7:14 எவ்வாறு நிறைவேறியிருக்கிறது?
21 யெகோவாவுடன் நடப்பது நமக்குப் பயனளிப்பதில் சந்தேகமே இல்லை. மீகா 7:14-ல் நாம் வாசிப்பதுபோல் கடவுளுடைய ஜனங்களை, மேய்ப்பரோடு பாதுகாப்பாய் தங்கியிருக்கும் செம்மறியாடுகளுக்கு மீகா ஒப்பிடுகிறார். இன்று, இத்தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றத்தில், ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியானோரும் ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்தோரும் தாங்கள் நம்பியிருக்கும் மேய்ப்பரான யெகோவாவிடம் பாதுகாப்பை நிச்சயமாக அனுபவிக்கிறார்கள். அவர்கள், ‘கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கின்றனர்,’ தொல்லைகளும் ஆபத்துகளும் நிறைந்த உலகிலிருந்து ஆவிக்குரிய அர்த்தத்தில் தனித்திருக்கிறார்கள்.—யோவான் 10:16; உபாகமம் 33:28; எரேமியா 49:31; கலாத்தியர் 6:16.
22 அத்துடன், மீகா 7:14 மேலும் முன்னுரைத்தபடி, யெகோவாவின் ஜனங்கள் செழுமையை அனுபவிக்கிறார்கள். கடவுளுடைய ஆடுகளைப் பற்றி அல்லது ஜனங்களைப் பற்றி பேசுகையில் மீகா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.” பாசானிலும் கீலேயாத்திலும் உள்ள வளமான மேய்ச்சல் நிலங்களில் மேயும் செம்மறியாடுகளைப் போலவே, இன்று கடவுளுடைய ஜனங்கள் ஆவிக்குரிய வகையில் செழுமையாய் இருக்கிறார்கள்; இது அடக்கத்தோடு கடவுளுடன் நடப்பவர்களுக்கு கிடைக்கும் மற்றொரு ஆசீர்வாதம்.—எண்ணாகமம் 32:1; உபாகமம் 32:14.
23. மீகா 7:18, 19-லிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?
23 மீகா 7:18, 19-ல் மனந்திரும்புவோரை மன்னிக்க யெகோவா விரும்புவதை தீர்க்கதரிசி சிறப்பித்துக் காட்டுகிறார். யெகோவா ‘அக்கிரமத்தை பொறுப்பவர்’ என்றும், ‘மீறுதலை மன்னிக்கிறவர்’ என்றும் 18-ம் வசனம் குறிப்பிடுகிறது. 19-ம் வசனத்தின்படி அவர், ‘அவர்களுடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.’ இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? இவ்விஷயத்தில் நாம் யெகோவாவை பின்பற்றுகிறோமா என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம். நமக்கு விரோதமாக மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கிறோமா? அப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி, தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள முற்படும்போது, முற்றிலுமாகவும் நிரந்தரமாகவும் மன்னிக்கும் யெகோவாவின் குணத்தை நாம் நிச்சயமாகவே வெளிக்காட்ட விரும்புவோம்.
24. மீகாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து நீங்கள் எப்படி பயனடைந்திருக்கிறீர்கள்?
24 மீகா தீர்க்கதரிசனத்தை இப்படி கலந்தாலோசித்ததிலிருந்து நாம் எவ்வாறு பயனடைந்திருக்கிறோம்? தம்மிடம் நெருங்கி வருபவர்களுக்கு மெய் நம்பிக்கையை யெகோவா அளிக்கிறார் என்பதை அது நமக்கு நினைப்பூட்டியிருக்கிறது. (மீகா 2:1-13) சதாகாலங்களிலும் கடவுளுடைய பெயரில் நடக்கும்படி மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய நம்மை ஊக்குவித்திருக்கிறது. (மீகா 4:1-4) எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் இருந்தாலும் யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பவற்றை செய்ய முடியும் என உறுதியளித்துள்ளது. ஆம், யெகோவாவுடைய பெயரில் நடக்க மீகா தீர்க்கதரிசனம் உண்மையிலேயே நம்மை பலப்படுத்துகிறது.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• மீகா 6:8-ன்படி யெகோவா நம்மிடம் என்ன கேட்கிறார்?
• ‘நியாயம் செய்வதற்கு’ நமக்கு என்ன தேவைப்படுகிறது?
• ‘தயவை சிநேகிப்பதை’ நாம் எப்படி வெளிக்காட்டலாம்?
• ‘தேவனுக்கு முன்பாக அடக்கத்துடன் நடப்பதில்’ என்ன உட்பட்டுள்ளது?
[பக்கம் 21-ன் படங்கள்]
தன் நாளில் நிலவிய பொல்லாத நிலைமைகளின் மத்தியிலும் மீகா யெகோவா எதிர்பார்ப்பவற்றிற்கு இசைவாக வாழ்ந்தார். நீங்களும் அவ்வாறே வாழலாம்
[பக்கம் 23-ன் படம்]
எல்லா விதமான ஜனங்களுக்கும் சாட்சி கொடுப்பதன் மூலம் நியாயம் செய்யலாம்
[பக்கம் 23-ன் படங்கள்]
மற்றவர்களின் தேவைகளுக்கு உதவுவதன் மூலம் தயவை சிநேகிப்பதைக் காட்டுங்கள்
[பக்கம் 23-ன் படம்]
அடக்கத்துடன் உங்கள் வரம்புகளை புரிந்துகொண்டு உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள்