மூப்பர்களே—கடவுளுடைய மந்தையைக் கனிவோடு நடத்துங்கள்!
“பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறது போல உங்களிடத்தில் பட்சமாய் நடந்து கொண்டோம்.”—1 தெசலோனிக்கேயர் 2:7, NW.
1. யெகோவாவின் ஒவ்வொரு உண்மையுள்ள ஊழியனும் ஏன் பாதுகாப்பாக உணரலாம்?
யெகோவா பெரிய மேய்ப்பராயிருக்கிறார். அவர் செம்மறியாடுகளைப் போன்ற தம்முடைய ஊழியர்களுக்கு ஏராளமான ஏற்பாடுகளைச் செய்து தம்முடைய பரிசுத்த நாமத்தினிமித்தம் அவர்களை “நீதியின் பாதைகளில்” நடத்துகிறார். ஆகவே, அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்கள் பொல்லாப்புக்குப் பயப்படாமல் ஆறுதலுக்காக தங்களுடைய இரக்கமுள்ள கடவுளை நோக்கியிருக்கலாம். ஆம், யெகோவாவின் ஒவ்வொரு உண்மையுள்ள ஊழியனும் கடவுளுடைய அன்பான கவனிப்பின் கீழ் பாதுகாப்பாக உணருவதற்கு நல்ல காரணமிருக்கிறது.—சங்கீதம் 23:1–4.
2. கடவுளுடைய மகிமையின் பிரகாசமாக, இயேசு என்ன குணாதிசயங்களை காண்பிக்கிறார்?
2 இயேசு கிறிஸ்து, “[கடவுளுடைய] மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார்.” (எபிரெயர் 1:1–4) ஆகவே நல்ல மேய்ப்பராகிய இயேசுவும்கூட அன்பையும் இரக்கத்தையும் காண்பிக்கிறார். (யோவான் 10:14, 15) உதாரணமாக ஒரு சமயம், “அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.”—மாற்கு 6:34.
3. (எ) யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் போல, கிறிஸ்தவ உதவி மேய்ப்பர்கள் என்ன குணாதிசயங்களைக் காண்பிக்க வேண்டும்? (பி) அப்போஸ்தலனாகிய பவுல் கண்காணிகளுக்கு என்ன புத்திமதியும் எச்சரிக்கையும் கொடுக்கிறான்?
3 எல்லா கிறிஸ்தவர்களும் ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாக, கிறிஸ்து அவர்கள் மேல், அன்புகூர்ந்தது போல அன்பிலே நடந்து கொண்டிருக்க வேண்டும்.’ (எபேசியர் 5:1, 2) ஆகவே அவர்கள் அன்புள்ளவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். விசேஷமாக கடவுளுடைய மந்தையின் உதவி மேய்ப்பர்களின் விஷயத்தில் இது உண்மையாக இருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்: “உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தினாலே (NW) சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 20:28–30.
4. (எ) காலப்போக்கில், அப்போஸ்தலர் 20:29, 30-லுள்ள பவுலின் எச்சரிப்புக்கிசைவாக என்ன சம்பவித்தது? (பி) என்ன கேள்விகள் சிந்திப்பதற்கு இப்பொழுது தகுதிவாய்ந்ததாக இருக்கிறது?
4 காலப்போக்கில் விசுவாசதுரோக “கொடிதான ஓநாய்கள்” தோன்றி, “மந்தையை கனிவாக நடத்தவில்லை.” ஆனால் யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலுள்ள மூப்பர்கள் இப்படிப்பட்ட கொடுங்கோன்மையை அப்பியாசியாதிருப்பதற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம்! என்றபோதிலும், ஆவியால் நியமனம் செய்யப்பட்ட இந்த மூப்பர்களிடமிருந்து உடன் விசுவாசிகள் என்ன விதமாக நடத்தப்பட எதிர்பார்க்கலாம்? மேலுமாக இப்படியாக நியமனம் பெறுகிறவர்கள் யெகோவாவின் ஆடுகளுக்கு எவ்விதமாக கனிவான அக்கறையைக் காண்பிக்கலாம்?
மந்தை மேல் இறுமாப்பாய் ஆளக்கூடாது
5. (எ) உலகப்பிரகாரமான ஆட்சியாளர்கள் அநேகமாக தங்கள் குடிமக்களை எவ்வாறு நடத்துகிறார்கள்? (பி) தம்மைப் பின்பற்றுகிறவர்கள் மத்தியில் கொடுங்கோன்மைச் செயலுக்கு இடமில்லை என்பதை இயேசு எவ்விதம் காண்பித்தார்?
5 கிறிஸ்தவ மூப்பர்கள் நம்மை இரக்கமான முறையில் நடத்த நாம் சரியாகவே எதிர்பார்க்கலாம். அநேகமாக தங்கள் குடிமக்களை இறுமாப்பாய் ஆளுகிற உலகப்பிரகாரமான ஆட்சியாளர்களைப் போல் அவர்கள் இல்லை. உதாரணமாக, (பொ.ச. 768–814 வரை ஆட்சி செய்த) ஃபிரெஞ்சு அரசன் சார்லிமேன் “மரணதண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று பயமுறுத்தி வட ஜெர்மானிய இனத்தவரை ஞானஸ்நானம் பெற கட்டாயப்படுத்தி, நாற்பது நாள் நோன்பை மீறுகிறவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்கி, இணங்க வைப்பதற்கு பலாத்காரத்தை எல்லா இடங்களிலும் பிரயோகித்தான்” என்று சொல்லப்படுகிறது. (வில்லியம் ஜோன்ஸ் எழுதிய கிறிஸ்தவ சர்ச்சின் வரலாறு) இயேசுவை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் கொடுங்கோன்மைச் செயலுக்கு இடமில்லை, ஏனென்றால் இயேசு சொன்னார்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.”—மத்தேயு 20:25–28.
6. (எ) மூப்பர்களைக் குறித்ததில், என்ன அடிப்படை உண்மைகள் தெளிவாக தெரிகின்றன? (பி) மூப்பர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க சபையாருக்குக் காரணமிருக்கிறது? இந்த மனிதர்கள் தங்களை எவ்வாறு நோக்கவேண்டும்?
6 ‘கண்காணிப்பு ஸ்தானத்துக்குத் தகுதி பெற நாடுகிற’ கிறிஸ்தவன் ‘ஒரு நல்ல வேலையை விரும்புகிறான்.’ (1 தீமோத்தேயு 3:1) இதையும் இப்போதுதானே மேற்கோள் காட்டப்பட்ட இயேசுவின் புத்திமதியையும் நாம் சிந்திக்கையில், இந்த அடிப்படை உண்மைகள் தெளிவாக தெரியவருகின்றன: (1) கிறிஸ்தவ மூப்பர்கள் மற்றவர்கள் மீது கொடுங்கோலாட்சி செய்யக்கூடாது; (2) இயேசுவை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்கிறவர்கள், அவர்களுடைய எஜமானர்களாக இல்லாமல், ஊழியக்காரராக இருக்க வேண்டும்; மேலும் (3) கண்காணிப்பு ஸ்தானத்துக்கு தகுதி பெற நாடும் ஆண்கள், அதை ஓர் உயர்த்தப்பட்ட ஸ்தானமாக அல்ல, ஆனால் “ஒரு நல்ல வேலை”யாக நோக்க வேண்டும். (நீதிமொழிகள் 25:27; 1 கொரிந்தியர் 1:31) “மூப்பர்” என்ற பதமானது, யெகோவாவின் மற்ற வணக்கத்தாருக்கு மேலாக எந்த ஒரு மனிதனையும் உயர்த்துவது இல்லை. மாறாக, எல்லா மூப்பர்களும் ஆவிக்குரிய முதிர்ச்சியுடையவர்களாகவும், அனுபவமுள்ளவர்களாகவும் மற்றும் பரிசுத்த சேவையின் முன்சென்றும் நடத்தும் மனத்தாழ்மையுள்ள மனிதர்களாகவும் இருக்கும்படியாக சபையார் எதிர்பார்க்க காரணமிருக்கிறது. ஆம், மூப்பர்கள் தங்களை யெகோவா தேவனுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும், உடன் கிறிஸ்தவர்களுக்கும் தாழ்மையுள்ள ஊழியக்காரராகக் கருத வேண்டும்.—ரோமர் 12:11; கலாத்தியர் 5:13; கொலோசெயர் 3:24.
7. (எ) மற்றவர்களோடு கொள்ளும் செயல் தொடர்புகளில் மூப்பர்கள் எவ்விதமாக 2 கொரிந்தியர் 1:24-ஐ பொருத்த வேண்டும்? (பி) ஆளும் குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அறிவுரைகளைக் குறித்து மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?
7 மற்றவர்கள் சார்பாக மனத்தாழ்மையுடன் ஊழியஞ் செய்வது, அவர்கள் மீது ‘இறுமாப்பாய்’ ஆள முயற்சி செய்வதிலிருந்து ஒரு மூப்பரை இயற்கையாகவே தடைசெய்கிறது. பவுலினுடையதைப் போன்ற அதே மனநிலையை நம்முடைய கண்காணிகள் வெளிக்காட்டுவது எத்தனை சிறந்ததாக இருக்கிறது! கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் அவன் சொன்னான்: “உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 1:24) ஆதலால் அன்புள்ள கண்காணிப்பைச் செய்பவர்கள், அனாவசியமான மனித விதிமுறைகளால் உடன் விசுவாசிகள் மீது சுமை ஏற்றுவதில்லை. மாறாக, யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் கண்காணிகள் வேதாகம நியமங்களால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக, தயவுள்ள பிரயோஜனமான சேவையை செய்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் அறிவுரைகளை உடனடியாக பின்பற்றுவதன் மூலம் அவர்கள் கடவுளுடைய மந்தைக்கு ஆழ்ந்த மரியாதையையும்கூட காண்பிக்கின்றனர்.—அப்போஸ்தலர், அதிகாரம் 15.
8. உடன் விசுவாசிகளிடமாக பவுல் என்ன மனநிலையைக் கொண்டிருந்தான்? இது எவ்விதமாக 20-ம் நூற்றாண்டு மூப்பர்களை பாதிக்க வேண்டும்?
8 பவுல் கடவுளுடைய மந்தையினிடமாக கனிவான மரியாதையைக் கொண்டிருந்ததன் காரணமாக, தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு சொல்ல முடிந்தது: “உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறது போல, நாங்கள் உங்கள் மேல் வாஞ்சையாயிருந்து தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” (1 தெசலோனிக்கேயர் 2:7, 8) தன்னுடைய பிள்ளைகளை அத்தனை ஆழமாக நேசிப்பதன் காரணமாக தன்னுடைய சொந்த அக்கறைகளுக்கு முன்னால் அவர்களுடையதை வைத்து, அவர்களிடமாக கனிவான மதிப்பைக் கொண்டிருக்கும் பால் கொடுக்கிற தாயைப் போல பவுல் நடந்து கொண்டான். கடவுளுடைய மந்தையை கனிவோடு நடத்துவதற்கு 20-ம் நூற்றாண்டு மூப்பர்களை இது எவ்விதமாக அசைவிக்க வேண்டும்!
துயர்தீர்ப்புக்கும் இளைப்பாறுதலுக்கும் மூலகாரணம்
9. இன்றைய–நாளின் யெகோவாவின் மக்களின் என்ன சூழ்நிலைமைகள் ஏசாயா 32:1, 2-ல் முன்னறிவிக்கப்பட்டன?
9 இயேசு கிறிஸ்துவினுடைய ராஜ்ய ஆட்சியின் இந்த நாளைச் சுட்டிக் காண்பிப்பவனாய், ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு ராஜா “நீதியாக அரசாளுவார்” என்றும் “பிரபுக்கள்” “நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள்” என்றும் முன்னுரைத்தான். ஆகவே, இன்றைய–நாளின் தேவாட்சி அமைப்பிலுள்ள மூப்பர்கள் ஸ்தாபிக்கப்பட்ட பரலோக ராஜ்யத்தின் அக்கறைகளை கையாளுகிறார்கள்—நிச்சயமாகவே பிரபுக்களினுடைய சேவை! பொறுப்புள்ள இந்த மனிதர்களுக்கு ஏசாயாவின் மேலுமான தீர்க்கதரிசன வார்த்தைகள் பொருந்துகின்றன: “அவர்கள் ஒவ்வொருவரும் (NW) காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்கள்.”—ஏசாயா 32:1, 2.
10. யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலுள்ள ஒவ்வொரு மூப்பரும் எதற்கு மூலகாரணமாக இருக்க வேண்டும்?
10 கிறிஸ்தவமண்டலத்தின் ஒடுக்குகின்ற மதத் தலைவர்களைப் போலில்லாமல், யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலுள்ள மூப்பர்கள் துயர் தீர்ப்புக்கும் இளைப்பாறுதலுக்கும் மூல காரணமாக இருக்கின்றனர். மூப்பர்களின் தொகுதிகளாக அவர்கள் யெகோவாவின் மக்கள் மத்தியில் சமாதானத்தையும், அமைதியையும், பாதுகாப்பையும் முன்னேற்றுவிக்கிறார்கள். தனிப்பட்டவர்களாக ஒவ்வொருவரும் கடவுளுடைய மந்தையைக் கனிவோடு நடத்துவதன் மூலம் இந்த நேர்த்தியான நிலைமைக்கு உதவி செய்ய முடியும்.
நியாயத்தோடும் நீதியோடும்
11. (எ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மத்தியிலிருந்த என்ன பொதுவான நிலைமை இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய பெரும்பாலான சபைகளில் காணப்படுகிறது? (பி) கண்காணிகள் சபையினிடமாக என்ன உத்தரவாதத்தைக் கொண்டவர்களாயிருக்கிறார்கள், ஏன்?
11 ஒருசில முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகளில் பிரச்னைகள் எழுந்தபோதிலும், அவர்களுடைய பொதுவான நிலைமை சமாதானமும், ஐக்கியமும், சந்தோஷமுமாக இருந்தது. (1 கொரிந்தியர் 1:10–12; 3:5–9; எபேசியர் 1:2; யாக்கோபு 2:1–9; 3:2–12; 4:11, 12; 1 யோவான் 1:3, 4) கடவுளுடைய ஆசீர்வாதம், கிறிஸ்துவின் தலைமைத்துவம், நியமிக்கப்பட்ட கண்காணிகளின் உண்மையுள்ள வேலையின் காரணமாக இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய பெரும்பாலான சபைகளிலும்கூட நேர்த்தியான ஆவிக்குரிய நிலைமை காணப்படுகிறது. சபையின் சமாதானத்தையும், ஐக்கியத்தையும், சந்தோஷத்தையும் நிச்சயப்படுத்திக் கொள்ள, இந்த மனிதர்கள் தெய்வீக உதவியை நாடி கடவுளுடைய அமைப்பை ஒழுக்க சம்பந்தமாகவும், ஆவிக்குரிய வகையிலும் சுத்தமாக வைத்திருக்க ஊக்கமாக உழைக்கிறார்கள். (ஏசாயா 52:11) அசுத்தமான ஓர் அமைப்பு ஒருபோதும் சமாதானமாயும் சந்தோஷமாயும் இருக்க முடியாது, அது நிச்சயமாகவே கடவுளுடைய அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் கொண்டிருக்காது. அவர் தவற்றை பொறுத்துக்கொள்ள, “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக் கண்ணை”யுடையவராக இருக்கிறார். (ஆபகூக் 1:13) அப்படியென்றால் மற்ற காரியங்களோடு கூட, மூப்பர்கள் நீதிவிசாரணை சம்பந்தப்பட்ட விஷயங்களை நேர்மையான வேதப்பூர்வமான முறையில் கவனித்துக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட வழக்குகளைக் கையாளும் போது நினைவுகூர வேண்டிய சில காரியங்கள் யாவை?
12. பைபிள் சட்டங்கள் அல்லது நியமங்களை மீறாத தனிப்பட்ட விவகாரங்களுக்குள் நுணுக்கமாக ஆராயும்படியாக மூப்பர்கள் எதிர்பார்க்கப்படாவிட்டாலும் கலாத்தியர் 6:1-ஐ முன்னிட்டுப் பார்க்கையில் என்ன செய்யப்பட வேண்டும்?
12 ஒரு காரியமானது, தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை உட்படுத்தும் வழக்குகளில், தனிப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் காரியங்களை தீர்த்துக் கொள்வது சாத்தியமாக இருக்கலாம். (மத்தேயு 18:15–17) மூப்பர்கள் ‘நம்முடைய விசுவாசத்துக்கு எஜமான்களாக’ இல்லாதிருப்பதன் காரணமாக, பைபிள் சட்டங்கள் அல்லது நியமங்களின் வினைமையான மீறுதல்களை உட்படுத்தாத முற்றிலும் தனிப்பட்ட விவகாரங்களை நுணுக்கமாக ஆராயும்படியாக எதிர்பார்க்கப்படுவதில்லை. இயல்பாகவே, ஒரு நபர், ‘தான் அறியாமலே யாதொரு குற்றத்தில் அகப்பட்டிருப்பதற்கான’ அத்தாட்சி இருக்குமேயானால் ஆவிக்குரிய தகுதிபெற்றவர்கள் “சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப் பண்ண” வேண்டும்.—கலாத்தியர் 6:1.
13. மூப்பர்கள் கேள்விப்பட்ட செய்தியின் பேரில் அல்ல, ஆனால் குற்றத்தினுடைய அத்தாட்சியின் பேரில் மட்டுமே செயல்பட வேண்டும் என்பதை வேதாகமம் எவ்விதமாக காண்பிக்கிறது?
13 மூப்பர்கள் “நியாயத்துக்காகவே” வேலை செய்து எப்பொழுதும் பாரபட்சமில்லாதவர்களாக இருக்க வேண்டும். ஆகவே வெறுமென கேள்விப்பட்ட செய்தியின் பேரில் அல்ல, குற்றத்தினுடைய அத்தாட்சியின் பேரில் அவர்கள் செயல்பட வேண்டும். பவுல் புத்திமதி கூறினான்: “மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக் கொள்ளக்கூடாது.” (1 தீமோத்தேயு 5:19) யெகோவாவின் தராதரத்தின்படி, பூர்வ இஸ்ரவேலில் மரணதண்டனைக்குரிய பாவத்துக்காக குற்றஞ்சாட்டப்பட்ட மனிதன், ‘இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்பட வேண்டும்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலை செய்யப்படலாகாது.’ மேலுமாக குற்றஞ்சாட்டப்பட்டவன், தன் மீது குற்றஞ்சாட்டியவர்களை எதிர்ப்பட சந்தர்ப்பத்தைக் கொண்டிருந்தான், அத்தாட்சி போதுமானதாக இருந்தால், ‘அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தி அவன் மேல் இருக்க வேண்டும்.’—உபாகமம் 17:6, 7.
14. (எ) தியோத்திரேப்பு தவறாக என்ன செய்ய முயற்சி செய்தான்? (பி) நீதி விசாரணை சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையாளும் போது கடவுள் மூப்பர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
14 நீதி விசாரணை நடவடிக்கைக்கு சரியான வேத ஆதாரம் இருக்க வேண்டும். சபைக் கண்காணிகள், பொ.ச. முதல் நூற்றாண்டில் மனமேட்டிமையாயிருந்த தியோத்திரேப்பு போல் இல்லாதிருப்பதற்காக நாம் எவ்வளவு சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறோம்! அவன் பிரயாண சகோதரர்களை உபசரணையோடு ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தவர்களை தவறாக “சபைக்குப் புறம்பே தள்ள” முயற்சி செய்தான். அப்போஸ்தலனாகிய யோவான், இதையும் மற்ற தவறுகளையும் முக்கியத்துவமற்றதாக எடுத்துக்கொள்ளாமல் பின்வருமாறு எச்சரித்தான்: “நான் வந்தால் . . . அவன் கிரியைகளை நினைத்துக் கொள்வேன்.” (3 யோவான் 9, 10) இவ்விதமாக, இன்றைய–நாளைய நீதி விசாரணைக் குழு அவர்கள் எடுக்கும் எந்தச் சபை நீக்க நடவடிக்கைக்கும் பைபிள் ஆதாரம் இருப்பதைக் குறித்து நிச்சயமாயிருக்க வேண்டும்.a நிச்சயமாகவே கிறிஸ்தவ மூப்பர்கள் மற்றவர்களோடு செயல் தொடர்பு கொள்வதில் நியாயமாக இருக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறார். ஆம், யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பின் விவகாரங்களை நிர்வகிப்பவர்கள், ‘திறமையுள்ள மனிதர்களும், தேவனுக்குப் பயந்தவர்களும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுமாய்’ இருக்க வேண்டும்.—யாத்திராகமம் 18:21.
15. நீதி விசாரணையின் போது ஜெபம் என்ன பங்கை வகிக்க வேண்டும்?
15 ஒவ்வொரு கிறிஸ்தவ நீதி விசாரணைக் குழுவும், இருதயப் பூர்வமான ஜெபத்தில் யெகோவாவின் உதவியை நாட வேண்டும். வினைமையான தவறுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரியோடு ஒரு கூட்டம் ஜெபத்தோடு ஆரம்பிக்கப்பட வேண்டும். உண்மையில், கடவுளுடைய உதவிக்காக குறிப்பிட்ட ஒரு தேவை எழுமானால் கலந்து பேசிக் கொண்டிருக்கையிலேயே எந்தச் சமயத்திலும் ஜெபம் பண்ணுவது பொருத்தமாக இருக்கும்.—யாக்கோபு 5:13–18.
16. நீதி விசாரணைகளை மூப்பர்கள் என்ன முறையில் நடத்த வேண்டும்? ஏன்?
16 தவறுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட உடன்விசுவாசி கடவுளுடைய மந்தையில் ஒரு “செம்மறியாடாக” இருப்பதையும் அவர் கனிவோடு நடத்தப்பட வேண்டும் என்பதையும் மூப்பர்கள் அறிவார்கள். (எசேக்கியேல் 34:7–14 ஒப்பிடவும்.) சொல்லர்த்தமான ஆடுகளுக்கு மென்மையான கவனம் தேவை, ஏனென்றால் பாதுகாப்புக்காகத் தங்கள் மேய்ப்பன் மீது சார்ந்திருக்கும் சாதுவான உயிரினங்களாக அவை இருக்கின்றன. ஆகவே, உள்ளூர் சபையிலுள்ள அடையாள அர்த்தமுள்ள ஆட்டைப் பற்றியதென்ன? அவர்கள் பெரிய மேய்ப்பனாகிய யெகோவா தேவன் மற்றும் நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவின் கவனிப்பில் பாதுகாப்பாக உணருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மந்தையின் உதவி மேய்ப்பர்கள், யெகோவாவின் செம்மறியாட்டைப் போன்ற ஊழியர்களின் உள்ளான சமாதானத்துக்கும் பாதுகாப்பான உணர்வுக்கும் ஏதுவான வழிகளில் செயல்பட வேண்டும். நீங்கள் ஒரு கிறிஸ்தவ உதவி மேய்ப்பராக இருப்பீர்களேயானால், அப்போது, உங்களுடைய கவனிப்பில் உங்களுடைய சகோதர சகோதரிகள் பாதுகாப்பாகவும் கலக்கமில்லாமலும் உணருகிறார்களா? உண்மைதான், மூப்பர்கள் பைபிள் சட்டங்களையும் நியமங்களையும் உறுதியாகக் கடைப்பிடிக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஆனால் ஆடுகளோடு அன்பான வழியில் நடந்து கொள்ளவும், நீதி விசாரணைகளை அமைதியான, ஒழுங்கான, தயவான மற்றும் கரிசனையான முறையிலும் நடத்தும்படியும் வேதாகமத்தால் தேவைப்படுத்தப்படுகிறார்கள்.
17. விசேஷமாக நீதி விசாரணை சமயங்களில் மூப்பர்கள் என்ன வேதாகம குறிப்புகளை மனதில் வைக்க வேண்டும்?
17 அபூரணராக இருப்பதால், நாம் சொல்லில் “அநேக சமயங்களில் தவறுகிறோம்.” (யாக்கோபு 3:2) நம் ஒவ்வொருவருக்கும் கடவுளுடைய இரக்கமும் கிறிஸ்துவின் “கிருபாதார பலி”யும் தேவையாக இருக்கிறது. (1 யோவான் 1:8–2:2; சங்கீதம் 130:3) ஆகவே ஒரு கிறிஸ்தவ உதவி மேய்ப்பன் தன்னைப் பற்றிய மனத்தாழ்மையான நோக்கைக் கொண்டிருக்கவேண்டும். அவர் இயேசுவின் வார்த்தைகளையும்கூட மனதில் கொள்ள வேண்டும்: “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (லூக்கா 6:31) விசேஷமாக நீதி விசாரணையின் சமயங்களில் இந்தப் புத்திமதி பின்பற்றப்பட வேண்டும். ஆவிக்குரிய தகுதிபெற்ற மனிதர்கள், தவறு செய்யும் கிறிஸ்தவனை ‘சாந்தமுள்ள ஆவியோடே சீர்பொருந்தப் பண்ண’ முயற்சி எடுக்க வேண்டும். ‘அவர்களும் சோதிக்கப்படாதபடிக்கு தங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.’—கலாத்தியர் 6:1; 1 கொரிந்தியர் 10:12.
18. (எ) நீதி விசாரணைகளின் போது மூப்பர்கள் மற்றவர்களை கடுமையாக நடத்துவார்களேயானால், என்ன விளைவடையும்? (பி) மாற்கு 9:42-ஐ முன்னிட்டுப் பார்க்கையில், மூப்பர்களும் மற்ற கிறிஸ்தவர்களும் எதைச் செய்வதற்கு எதிராக எச்சரிப்பாயிருக்க வேண்டும்?
18 மூப்பர்கள் நீதி விசாரணைகளின் போது, மற்றவர்களைக் கடுமையாக நடத்துவார்களேயானால், இது இப்படிப்பட்ட தனி நபர்களுக்கு தீங்கிழைத்துவிடும். ஆனால் உணர்ச்சி சம்பந்தமாக அல்லது சரீரப் பிரகாரமாக தீங்கு ஏற்படாவிட்டாலும்கூட, அங்கு ஆழமான ஆவிக்குரிய காயம் ஏற்பட்டு, கண்காணிகள் தகுதிகள் குறித்து சந்தேகம்கூட எழும்பக்கூடும். (யாக்கோபு 2:13 ஒப்பிடவும்.) ஆகவே நீதி விசாரணைகளின் போதும் மற்ற எல்லாச் சமயங்களிலும், மூப்பர்கள் தயவுள்ளவர்களாக இருந்து மற்றவர்களை இடறலடையச் செய்வதற்கு எதிராக எச்சரிக்கையாயிருக்க வேண்டும். நிச்சயமாகவே, எல்லா கிறிஸ்தவர்களும் இந்த விஷயத்தில் கவனமாயிருப்பது அவசியமாகும். ஏனென்றால் இயேசு சொன்னார்: “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.” (மாற்கு 9:42) ஓர் எந்திரக்கல்லின் மேற்பாகம் அத்தனை பெரிதாக இருப்பதால் அதைச் சுற்றுவதற்கு பொதுவாக மிருக பலம் தேவையாக இருக்கும். தன்னுடைய கழுத்தைச் சுற்றி இப்படிப்பட்ட ஒரு சுமையோடு சமுத்திரத்தில் தள்ளப்படும் எவரும் உயிர்ப்பிழைக்க முடியாது. அப்படியென்றால், நிச்சயமாகவே ஒரு மூப்பர் தனக்கும், இப்படியாக இடறிவிடும் எந்த ஒரு நபருக்கும் நிலையான ஆவிக்குரிய சேதத்தில் விளைவடையக்கூடிய இடறுதலை உண்டுபண்ணாதபடி கவனமாயிருக்க வேண்டும்.—பிலிப்பியர் 1:9–11.
கனிவான மதிப்பைத் தொடர்ந்து காண்பியுங்கள்
19. பேதுரு உடன் மூப்பர்களுக்கு என்ன புத்திமதியைக் கொடுத்தான்? இதற்கு சரியாக பிரதிபலிப்பது அவர்களுடைய எதிர்பார்ப்புகள் மீது என்ன தொடர்புடையதாக இருக்கிறது?
19 அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு எழுதியபோது, உடன் கண்காணிகள் மந்தையை எவ்வாறு மேய்க்க வேண்டும் என்பதைக் காண்பித்தான்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும் போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.” (1 பேதுரு 5:2–4) இப்படிப்பட்ட புத்திமதியைப் பின்பற்றி கடவுளுடைய மந்தைக்கு கனிவான மதிப்பைக் காண்பிப்பதன் மூலம் மாத்திரமே, அபிஷேகம் பண்ணப்பட்ட கண்காணிகள் சாவாமையுள்ள ஆவி சிருஷ்டிகளாக தங்கள் பரலோக வெகுமதியையும் பூமிக்குரிய நம்பிக்கையுள்ள மூப்பர்கள் வரப்போகிற உலகளாவிய பரதீஸில் நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்ள முடியும்.
20. (எ) கிறிஸ்தவ உதவி மேய்ப்பர்கள் தங்கள் உடன்விசுவாசிகளோடு எவ்விதமாக செயல்தொடர்பு கொள்ள வேண்டும்? (பி) அன்புள்ள மூப்பர்களின் முன்மாதிரியான சேவையையும் கனிவான அக்கறையையும் குறித்து நீங்கள் எவ்விதமாக உணருகிறீர்கள்?
20 யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் அன்புள்ள, இரக்கமுள்ள மேய்ப்பர்களாக இருக்கின்றனர். ஆகவே கிறிஸ்தவ உதவி மேய்ப்பர்கள் தெய்வீக தராதரங்களை உறுதியாக கடைப்பிடிக்கையில், செம்மறியாடுகளைப் போன்ற உடன்விசுவாசிகளோடு செயல் தொடர்புகளில் அவர்கள் அன்பையும் இரக்கத்தையும் காண்பிக்க வேண்டும். நிச்சயமாகவே, யெகோவாவின் எல்லா உண்மையுள்ள சாட்சிகளும், தங்கள் பொறுப்பைக் காத்துக்கொண்டு கடவுளுடைய மந்தையை மென்மையோடு நடத்தும் இப்படிப்பட்ட சுய தியாகம் செய்யும் மூப்பர்களின் முன்மாதிரியான சேவையை ஆழமாகப் போற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். நம்மை நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிவதன் மூலம் சரியான மரியாதையோடு கூட அந்தப் போற்றுதல் காண்பிக்கப்படலாம். (w89 9/15)
[அடிக்குறிப்புகள்]
a தீர்ப்பில் வினைமையான தவறிழைக்கப்பட்டிருப்பதாக ஒரு நபர் நம்புவாரேயானால், அவரைச் சபைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தின் பேரில் அவர் மேல்முறையீடு செய்யலாம்.
உங்களுடைய கருத்து என்ன?
◻ தம்மைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் கொடுங்கோன்மைக்கு இடமில்லை என்பதை இயேசு கிறிஸ்து எவ்விதமாக காண்பித்தார்?
◻ ஆளும் குழுவிடமிருந்து அறிவுரைகளைப் பெறும் போது, மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?
◻ ஏசாயா 32:1, 2-ன் பிரகாரம் மூப்பர்கள் எதற்கு மூலகாரணமாக இருக்க வேண்டும்?
◻ வெறுமென கேள்விப்படும் செய்திகளின் பேரில் மூப்பர்கள் செயல்படக்கூடாது என்பதை வேதாகமம் எவ்விதமாக காண்பிக்கிறது?
◻ கிறிஸ்தவ உதவி மேய்ப்பர்கள் மந்தையை எவ்வாறு நடத்த வேண்டும்?
[பக்கம் 20-ன் படம்]
நீதி விசாரணைக் குழு ஓர் உடன்விசுவாசியோடு கூடும் போது இருதயப்பூர்வமான ஜெபம் இன்றியமையாததாகும்