மாற்கு எழுதியது
9 அதோடு அவர், “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், கடவுளுடைய அரசாங்கம் முழு அதிகாரத்தோடு வந்துவிட்டதைப் பார்ப்பதற்கு முன்னால் சாகவே மாட்டார்கள்”+ என்று அவர்களிடம் சொன்னார். 2 ஆறு நாட்களுக்குப் பின்பு, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் மட்டும் கூட்டிக்கொண்டு உயரமான ஒரு மலைக்கு இயேசு போனார்; அங்கே அவர்கள் முன்னால் அவருடைய தோற்றம் மாறியது.+ 3 அவருடைய மேலங்கி பளபளவென்று மின்ன ஆரம்பித்தது. பூமியில் இருக்கிற எந்தச் சலவைக்காரராலும் வெண்மையாக்க முடியாதளவுக்கு வெள்ளைவெளேரென ஆனது. 4 அதோடு, எலியாவும் மோசேயும் தோன்றி இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். 5 அப்போது பேதுரு, “ரபீ,* இங்கே இருப்பது எங்கள் பாக்கியம். உங்களுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை நாங்கள் போடுகிறோம்” என்று இயேசுவிடம் சொன்னார். 6 உண்மையில், என்ன சொல்வதென்றே தெரியாமல் அப்படிச் சொன்னார். ஏனென்றால், அவர்கள் எல்லாரும் மிகவும் பயந்துபோயிருந்தார்கள். 7 பின்பு, ஒரு மேகம் தோன்றி அவர்கள்மேல் நிழலிட்டது; அப்போது, “இவர் என் அன்பு மகன்;+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல்+ ஒலித்தது. 8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள், ஆனால் இயேசுவைத் தவிர வேறு யாரையும் காணவில்லை.
9 அந்த மலையிலிருந்து அவர்கள் இறங்கி வந்துகொண்டிருந்தபோது இயேசு அவர்களிடம், ‘நீங்கள் பார்த்ததை மனிதகுமாரன் உயிர்த்தெழும்வரை யாரிடமும் சொல்லக் கூடாது’+ என்று கண்டிப்புடன் கட்டளையிட்டார்.+ 10 அதை அவர்கள் மனதில் வைத்துக்கொண்டார்கள்;* ஆனால், உயிர்த்தெழுவதைப் பற்றி அவர் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். 11 அப்போது அவரிடம், “எலியா+ முதலில் வர வேண்டும் என்று வேத அறிஞர்கள் ஏன் சொல்கிறார்கள்?”+ என்று கேட்டார்கள். 12 அதற்கு அவர், “எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சரிப்படுத்துவார்+ என்பது உண்மைதான்; ஆனால், மனிதகுமாரன் பல பாடுகள் படுவார்+ என்றும், அவமதிக்கப்படுவார்+ என்றும் எழுதப்பட்டிருக்கிறதே, அது எப்படி? 13 நான் உங்களுக்குச் சொல்கிறேன், எலியா+ வந்துவிட்டார்; அவர்கள் தங்களுடைய இஷ்டப்படியெல்லாம் அவரை நடத்தினார்கள்; அவரைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறபடியே அவை நடந்தன”+ என்று சொன்னார்.
14 பின்பு, அவர்கள் மற்ற சீஷர்களிடம் வந்தார்கள்; அப்போது, அந்தச் சீஷர்களைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருப்பதையும், வேத அறிஞர்கள் அவர்களோடு வாக்குவாதம் செய்வதையும் பார்த்தார்கள்.+ 15 ஆனால், அந்தக் கூட்டத்தார் எல்லாரும் அவரைப் பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிப்போய் வரவேற்றார்கள். 16 அப்போது அவர்களிடம், “எதைப் பற்றி இவர்களோடு வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். 17 கூட்டத்திலிருந்த ஒருவர், “போதகரே, பேய் பிடித்ததால் என் மகன் ஊமையாகிவிட்டான்.+ அதனால் அவனை உங்களிடம் கூட்டிக்கொண்டு வந்தேன். 18 அவனுக்குப் பேய் பிடிக்கும்போதெல்லாம், அது அவனைத் தரையில் வீசியடிக்கிறது; அப்போது அவன் வாயில் நுரை தள்ளுகிறது, பற்களை நறநறவென்று கடிக்கிறான், பின்பு அப்படியே துவண்டுவிடுகிறான். அந்தப் பேயை விரட்டச் சொல்லி உங்கள் சீஷர்களிடம் கேட்டேன், அவர்களால் முடியவில்லை” என்று சொன்னார். 19 அதற்கு அவர், “விசுவாசமில்லாத தலைமுறையே,+ நான் இன்னும் எத்தனை காலம்தான் உங்களோடு இருக்க வேண்டுமோ? எத்தனை காலம்தான் உங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமோ?” என்று சொல்லிவிட்டு, “அவனை என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள்”+ என்றார். 20 அவர்கள் அந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவரைப் பார்த்ததுமே அந்தப் பேய் அவனுக்கு வலிப்பு உண்டாக்கியது. அவன் தரையில் விழுந்து உருண்டான், அவனுடைய வாயில் நுரை தள்ளியது. 21 அப்போது அவர், “எவ்வளவு காலமாக இவனுக்கு இப்படி நடக்கிறது?” என்று அவனுடைய அப்பாவிடம் கேட்டார். அதற்கு அவர், “சிறுவயதிலிருந்தே” என்று சொல்லிவிட்டு, 22 “அவனைக் கொல்வதற்காக அந்தப் பேய் அடிக்கடி அவனைத் தண்ணீரிலும் நெருப்பிலும் தள்ளிவிடுகிறது; உங்களால் முடிந்தால், எங்களுக்குக் கருணை காட்டி உதவி செய்யுங்கள்” என்று சொன்னார். 23 அதற்கு இயேசு, “‘உங்களால் முடிந்தால்’ என்று சொல்கிறாயே! ஒருவருக்கு விசுவாசம் இருந்தால் எல்லாமே முடியும்”+ என்று சொன்னார். 24 உடனே அந்தப் பையனின் அப்பா, “எனக்கு விசுவாசம் இருக்கிறது! என் விசுவாசம் இன்னும் பலமாவதற்கு உதவி செய்யுங்கள்!”+ என்று சத்தமாகச் சொன்னார்.
25 மக்கள்கூட்டம் தன்னிடம் வேகமாக வருவதை இயேசு பார்த்தபோது அந்தப் பேயை அதட்டி, “ஊமையாக்கும் பேயே! செவிடாக்கும் பேயே! நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், இவனைவிட்டு வெளியே போ, இனிமேல் இவனுக்குள் நுழையாதே”+ என்று சொன்னார். 26 அப்போது அந்தப் பேய் கத்திக் கூச்சல்போட்டு, அவனுக்குப் பயங்கரமாக வலிப்பு உண்டாக்கி, அவனைவிட்டு வெளியே போனது. அவன் பேச்சுமூச்சில்லாமல் கிடந்தான். அதனால் அங்கிருந்த பெரும்பாலோர், “அவன் செத்துவிட்டான்!” என்று பேசிக்கொண்டார்கள். 27 ஆனால், இயேசு அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார்; அவன் எழுந்துகொண்டான். 28 இயேசு ஒரு வீட்டுக்குள் போன பின்பு, அவருடைய சீஷர்கள் தனியாக வந்து, “எங்களால் ஏன் அந்தப் பேயை விரட்ட முடியவில்லை?”+ என்று கேட்டார்கள். 29 அதற்கு அவர், “இப்படிப்பட்ட பேயை ஜெபத்தினால் மட்டும்தான் விரட்ட முடியும்” என்று சொன்னார்.
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கலிலேயா வழியாகப் போனார்கள்; ஆனால், அது யாருக்கும் தெரியக் கூடாதென்று அவர் நினைத்தார். 31 ஏனென்றால், “மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்பட்டு, மக்களுடைய கையில் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் கொலை செய்யப்படுவார்;+ ஆனாலும், மூன்று நாட்களுக்குப் பிறகு உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று தன்னுடைய சீஷர்களிடம் விளக்கிக்கொண்டிருந்தார். 32 அவர் சொன்ன விஷயம் அவர்களுக்குப் புரியவில்லை; அதைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்கவும் பயந்தார்கள்.
33 அதன் பின்பு, அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள்; அவர் வீட்டுக்குள் இருந்தபோது, “வழியில் எதைப் பற்றி வாக்குவாதம் செய்துகொண்டிருந்தீர்கள்?”+ என்று அவர்களிடம் கேட்டார். 34 அவர்கள் பதிலே சொல்லவில்லை; ஏனென்றால், தங்களில் யார் உயர்ந்தவர் என்பதைப் பற்றித்தான் வழியில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். 35 அதனால் அவர் உட்கார்ந்து, பன்னிரண்டு பேரையும்* கூப்பிட்டு, “உங்களில் யாராவது முதலானவராக இருக்க விரும்பினால், அவர் எல்லாருக்கும் கடைசியானவராக இருக்க வேண்டும், எல்லாருக்கும் சேவை செய்கிறவராக இருக்க வேண்டும்”+ என்று சொன்னார். 36 பின்பு, ஒரு சின்னப் பிள்ளையைக் கொண்டுவந்து அவர்கள் நடுவில் நிறுத்தி, அதைத் தன் கைகளால் அணைத்து, 37 “இப்படிப்பட்ட ஒரு சின்னப் பிள்ளையை எனக்காக* ஏற்றுக்கொள்கிறவன்+ என்னையும் ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை மட்டுமல்ல, என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்”+ என்று அவர்களிடம் சொன்னார்.
38 யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உங்களுடைய பெயரைச் சொல்லி பேய்களை விரட்டுவதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றி வராததால், அவனைத் தடுக்க முயற்சி செய்தோம்”+ என்று சொன்னார். 39 ஆனால் இயேசு, “அவனைத் தடுக்காதீர்கள், ஏனென்றால் என் பெயரைச் சொல்லி அற்புதம் செய்கிற யாருமே அவ்வளவு சீக்கிரத்தில் என்னைப் பற்றி மோசமாகப் பேச மாட்டார்கள். 40 நமக்கு விரோதமாக இல்லாதவன் நம் பக்கம் இருக்கிறான்.+ 41 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதால், உங்களுக்குக் குடிக்க ஒரு குவளை தண்ணீர் கொடுக்கிறவனும்கூட+ கண்டிப்பாகத் தன்னுடைய பலனைப் பெறுவான்.+ 42 ஆனால், என்மேல் விசுவாசம் வைக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவரை யாராவது பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை* அவனுடைய கழுத்தில் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது.+
43 உன் கை உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு; அணையாமல் எரிந்துகொண்டிருக்கிற கெஹென்னாவுக்குள்* நீ இரண்டு கைகளோடு போவதைவிட, ஊனமான கையோடு வாழ்வை* பெறுவது நல்லது.+ 44 *—— 45 உன் கால் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு; நீ இரண்டு கால்களோடு கெஹென்னாவுக்குள்* வீசப்படுவதைவிட, ஊனமான காலோடு வாழ்வை* பெறுவது நல்லது.+ 46 *—— 47 உன் கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கிப்போடு;+ நீ இரண்டு கண்களோடு கெஹென்னாவுக்குள்* வீசப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணோடு கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போவது நல்லது.+ 48 கெஹென்னாவில் புழுக்கள் சாவதில்லை, நெருப்பும் அணைவதில்லை.+
49 உப்பைப் போல நெருப்பு எல்லார்மேலும் கொட்டப்பட வேண்டும்.+ 50 உப்பு நல்லதுதான்; ஆனால், உப்பு என்றாவது அதன் சுவையை இழந்தால், எதை வைத்து அதற்கு மறுபடியும் சுவை சேர்க்க முடியும்?+ நீங்கள் சுவை இழக்காத உப்புபோல் இருங்கள்.+ அப்படி இருந்தால், ஒருவருக்கொருவர் சமாதானமாக இருக்க முடியும்”+ என்று சொன்னார்.