“ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்”
“‘ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்’ என்று யெகோவா உரைப்பதாக அவருடைய தூதுவன் சொல்கிறார்.”—ஆகாய் 1:13, NW.
1. எந்த நாட்களை நம்முடைய நாட்களோடு இயேசு ஒப்பிட்டார்?
சரித்திரத்திலேயே மிக முக்கியமான ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பைபிள் தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டுகிறபடி, 1914 முதற்கொண்டு நாம் “கர்த்தருடைய நாளில்” வாழ்ந்து வருகிறோம். (வெளிப்படுத்துதல் 1:10) அதைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். அப்படியானால், ராஜ்ய வல்லமையில் ‘மனுஷகுமாரன் வரும் நாட்களை,’ ‘நோவாவின் நாட்களுக்கும்’ ‘லோத்துவின் நாட்களுக்கும்’ இயேசு ஒப்பிட்டுப் பேசியதும் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். (லூக்கா 17:26, 28) ஆக, நோவா மற்றும் லோத்துவின் நாட்களோடு நம்முடைய நாட்கள் ஒத்திருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. அவற்றைத் தவிர, நம்முடைய நாட்கள் எபிரெய தீர்க்கதரிசிகளான ஆகாய், சகரியாவின் நாட்களோடும் ஒத்திருக்கின்றன; அவற்றிற்கு நாம் ஆழ்ந்த கவனம்செலுத்த வேண்டும்.
2. ஆகாய் மற்றும் சகரியாவுக்கு யெகோவா நியமித்த வேலை என்ன?
2 ஆகாய் மற்றும் சகரியாவின் நாட்களில் நடந்த சம்பவங்களை இப்போது நாம் சிந்தித்துப் பார்க்கலாம். பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பிய யூதர்களுக்கு ஆகாயும் சகரியாவும் ‘யெகோவாவின் தூதுவர்களாக’ இருந்தார்கள். ஆலயத்தைத் திரும்பக் கட்ட கடவுள் பக்கத் துணையாக இருப்பார் என்று அந்த யூதர்களுக்கு உறுதி அளிப்பதற்காக அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். (ஆகாய் 1:13, NW; சகரியா 4:8, 9) ஆகாயும் சகரியாவும் எழுதிய புத்தகங்கள் சிறியவையாக இருந்தாலும், அவை ‘தேவ ஆவியினால் அருளப்பட்ட வேதவாக்கியங்களின்’ பாகமாக இருக்கின்றன; ‘உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமாய் இருக்கின்றன.’ (2 தீமோத்தேயு 3:16, 17) அப்படியானால், விசுவாசமிக்க அவ்விரு தீர்க்கதரிசிகளும், நம்முடைய நாளிலுள்ள யெகோவாவின் மக்களுக்குக் குறிப்பாக என்ன செய்தியைச் சொன்னார்கள்?
கவனம்செலுத்த வேண்டிய தீர்க்கதரிசனங்கள்
3, 4. ஆகாய், சகரியாவின் தீர்க்கதரிசன செய்திகளுக்கு நாம் ஏன் ஆர்வம்காட்ட வேண்டும்?
3 ஆகாய், சகரியாவின் தீர்க்கதரிசன செய்திகள் அக்காலத்தில் நிறைவேறியதும், யூதர்களுக்குப் பயனளித்ததும் உண்மைதான். ஆனால், இன்று நாம் ஏன் அவற்றிற்குக் கவனம்செலுத்த வேண்டும்? அதற்கான ஒரு குறிப்பு, எபிரெயர் 12:26-29-ல் இருக்கிறது. இவ்வசனங்களில், ஆகாய் 2:6-ஐ அப்போஸ்தலன் பவுல் மேற்கோள் காண்பிக்கிறார்; அது, ‘வானத்தையும் பூமியையும் [கடவுள்] அசையப்பண்ணுவது’ பற்றி குறிப்பிடுகிறது. அப்படி அசையப்பண்ணும்போது, கடைசியில் ‘ராஜ்யங்களின் சிங்காசனம் கவிழ்க்கப்படும், ஜாதிகளுடைய [அதாவது, தேசங்களுடைய] ராஜ்யங்களின் பெலமும் அழிந்துவிடும்.’—ஆகாய் 2:22.
4 ஆகாய் சொன்னதை மேற்கோள் காண்பித்த பிறகு, ‘தேசங்களுடைய ராஜ்யங்களுக்கு’ என்ன நடக்குமென்று பவுல் தெரிவிக்கிறார்; அதோடு அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கப்போகிற அசைவில்லாத ராஜ்யத்தின் சிறப்பைப் பற்றியும் தெரிவிக்கிறார். (எபிரெயர் 12:28) ஆக, பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் எபிரெய புத்தகம் எழுதப்பட்ட சமயத்திற்கு வெகு காலம் பிந்தி நடைபெறவிருந்த காரியங்களையே ஆகாய், சகரியாவின் தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டின என்பதை பவுலுடைய வார்த்தைகள் காண்பிக்கின்றன. மேசியானிய ராஜ்யத்தில் இயேசுவின் சக அரசர்களாக இருக்கப்போகும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் மீதிப்பேர் இன்னும் பூமியில் இருக்கிறார்கள். அப்படியானால், ஆகாய், சகரியாவின் தீர்க்கதரிசனங்கள் நம்முடைய நாளுக்கு மிகுந்த அர்த்தமுடையவையாய் இருக்க வேண்டும்.
5, 6. ஆகாயும் சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்வதற்கு முன் என்ன சூழல் நிலவியது?
5 அந்தத் தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்படுவதற்கு முன் நிலவிய சூழலைப் பற்றி எஸ்றா புத்தகம் சில விவரங்களை அளிக்கிறது. பொ.ச.மு. 537-ல், யூதர்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து தாயகம் திரும்பினார்கள்; பிறகு, பொ.ச.மு. 536-ல், ஆளுநர் செருபாபேல், பிரதான ஆசாரியர் யெசுவா ஆகியோரின் மேற்பார்வையில் புதிய ஆலயத்திற்கு அஸ்திவாரம் போட ஆரம்பித்தார்கள். (எஸ்றா 3:8-13; 5:1) அதை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்தபோதிலும், சீக்கிரத்திலேயே பயப்பட ஆரம்பித்தார்கள். ஏனெனில் எதிரிகள், அதாவது, “அந்தத் தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி” வந்தார்கள். (எஸ்றா 4:4) அந்த எதிரிகள், குறிப்பாக சமாரியர்கள், யூதர்களுக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். ஏன், ஆலயக் கட்டுமானப் பணிக்குத் தடையுத்தரவு பிறப்பிப்பதற்காக பெர்சிய ராஜாவைத் தூண்டியும்விட்டார்கள்.—எஸ்றா 4:10-21.
6 இதனால், ஆலயத்தைக் கட்டுவதில் யூதர்களுக்கு துவக்கத்திலிருந்த உற்சாகம் படிப்படியாகக் குறைந்துபோனது. அவர்கள் தங்களுடைய சொந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள். எனவே, ஆலயக் கட்டுமானப் பணியைத் திரும்ப ஆரம்பிப்பதற்கு அவர்களுடைய மனதைத் தட்டியெழுப்புவதற்காக பொ.ச.மு. 520-ல், அதாவது ஆலயத்தின் அஸ்திவாரம் போடப்பட்டு 16 வருடங்கள் கழித்து, ஆகாயையும் சகரியாவையும் யெகோவா நியமித்தார். (ஆகாய் 1:1; சகரியா 1:1) அந்தத் தூதுவர்கள் கொடுத்த உற்சாகத்தினால் ஜனங்கள் புதுத்தெம்பு அடைந்தார்கள்; யெகோவா தங்களுக்குத் துணைநிற்பதைத் தெளிவாகக் கண்டார்கள்; ஆகவே, ஆலயக் கட்டுமானப் பணியை மீண்டும் ஆரம்பித்து, பொ.ச.மு. 515-ல் அதை வெற்றிகரமாக முடித்தார்கள்.—எஸ்றா 6:14, 15.
7. ஆகாய், சகரியா தீர்க்கதரிசிகளுடைய நாட்களின் நிலைமை நம்முடைய நாட்களின் நிலைமையோடு எப்படி ஒத்திருக்கிறது?
7 அந்தச் சம்பவங்களெல்லாம் நமக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? ‘ராஜ்ய நற்செய்தியை’ பிரசங்கிக்கும் வேலை சம்பந்தமாக நாம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்பதையே அவை அர்த்தப்படுத்துகின்றன. (மத்தேயு 24:14, NW) முதல் உலகப் போருக்குப் பின் அந்த வேலைக்கு விசேஷ கவனம் செலுத்தப்பட்டது. பண்டைய யூதர்கள் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதுபோல, யெகோவாவின் நவீன நாளைய மக்கள் பொய்மத உலகப் பேரரசான மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட அவர்கள் பிரசங்க வேலையில் ஊக்கந்தளராமல் ஈடுபட்டு, ஜனங்களை மெய் வணக்கத்திடம் வழிநடத்தினார்கள். அந்த வேலை இன்று மிகப் பெரியளவில் நடைபெற்று வருகிறது; நீங்களும்கூட ஒருவேளை அதில் ஈடுபட்டு வரலாம். அதைச் செய்வதற்கான தக்க சமயம் இதுவே; ஏனெனில், இந்தப் பொல்லாத உலகிற்கு அதிவிரைவில் முடிவு வரப்போகிறது! யெகோவாவால் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வேலை ‘மிகுந்த உபத்திரவம்’ ஆரம்பமாகும்வரை தொடர்ந்து நடைபெற வேண்டும். (மத்தேயு 24:21) மிகுந்த உபத்திரவத்திற்குப் பிறகு அக்கிரமங்களெல்லாம் அடியோடு அகற்றப்பட்டிருக்கும், அதுமட்டுமல்ல, பூமியெங்குமே மெய் வணக்கம் தழைத்தோங்கியிருக்கும்.
8. பிரசங்க வேலையை யெகோவா ஆதரிக்கிறார் என்பதில் நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
8 பிரசங்க வேலையில் முழு இருதயத்தோடு நாம் பங்குகொள்ளும்போது யெகோவாவின் ஆதரவும் ஆசியும் நமக்கு கண்டிப்பாக இருக்கும்; இதைத்தான் ஆகாய், சகரியா தீர்க்கதரிசனங்கள் காண்பிக்கின்றன. ஆம், யெகோவாவின் ஊழியர்களை ஒடுக்குவதற்கும் அவர்களுடைய வேலைக்குத் தடைவிதிப்பதற்கும் சிலர் முயன்றபோதிலும், பிரசங்க வேலை முன்னேறுவதை எந்த அரசாங்கத்தினாலும் இதுவரை தடுத்துநிறுத்த முடியவில்லை. முதல் உலகப் போரிலிருந்து நம்முடைய நாள்வரை, யெகோவா இந்த ராஜ்ய வேலையை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். ஆனாலும், செய்வதற்கு இன்னும் நிறைய காரியங்கள் நமக்கு இருக்கின்றன.
9. பண்டைய காலத்தில் நிலவிய என்ன சூழ்நிலைக்கு நாம் கவனம்செலுத்த வேண்டும், ஏன்?
9 பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் ஈடுபட வேண்டுமென்ற தெய்வீகக் கட்டளைக்குக் கீழ்ப்படிய ஆகாய், சகரியா புத்தகங்கள் எவ்விதத்தில் நம்மை இன்னும் அதிகமாகத் தூண்டுகின்றன? இவ்விரு பைபிள் புத்தகங்களிலுள்ள சில பாடங்களுக்கு இப்போது நாம் கவனம்செலுத்துவோம். உதாரணத்திற்கு, தாயகம் திரும்பிய யூதர்கள் செய்ய வேண்டியிருந்த ஆலயக் கட்டுமானப் பணி சம்பந்தமான சில விவரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிய யூதர்கள் ஆலயக் கட்டுமானப் பணியில் தொடர்ந்து ஈடுபடவில்லை. அஸ்திவாரம் அமைத்த பிறகு, அவ்வேலையில் தளர்ந்துபோனார்கள். என்ன தவறான கண்ணோட்டத்திற்கு அவர்கள் இடங்கொடுத்தார்கள்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
சரியான கண்ணோட்டம் தேவை
10. யூதர்கள் என்ன தவறான கண்ணோட்டத்திற்கு இடமளித்தார்கள், அதன் விளைவு என்ன?
10 தாயகம் திரும்பிய யூதர்கள் “ஏற்ற காலம் இன்னும் வரவில்லை” என்று சொல்லிக்கொண்டார்கள். (ஆகாய் 1:2) பொ.ச.மு. 536-ல் ஆலயத்திற்கு அஸ்திவாரம் அமைத்து, அதன் கட்டுமானப் பணியை ஆரம்பித்தபோது அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் சீக்கிரத்தில் அண்டை தேசங்கள் எதிர்த்தபோதும், அரசாங்கம் தடைவிதித்தபோதும் அப்படிச் சொல்ல ஆரம்பித்தார்கள். இவ்வாறு தவறான கண்ணோட்டத்திற்கு இடமளித்தார்கள். தங்களுடைய சொந்த வீடுகளுக்கும் சொந்த சௌகரியங்களுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள். எனவே, விலையுயர்ந்த மரங்களினால் கட்டப்பட்ட அவர்களுடைய வீடுகளையும் அரைகுறையாக விடப்பட்டிருந்த ஆலயத்தையும் ஒப்பிட்டு, யெகோவா இவ்வாறு அவர்களிடம் கேட்டார்: “இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட [“மரவேலைப்பாடுகள் நிறைந்த,” NW] உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?”—ஆகாய் 1:4.
11. ஆகாயின் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு யெகோவா ஏன் ஆலோசனை வழங்க வேண்டியிருந்தது?
11 எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தில் யூதர்களுடைய கண்ணோட்டம் மாறிப்போயிருந்தது. ஆலயத்தைத் திரும்பக் கட்ட வேண்டுமென்ற யெகோவாவின் நோக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு, தங்களையும் தங்கள் வீடுகளையும் பற்றிய நினைப்பிலேயே மூழ்கியிருந்தார்கள். தேவனுடைய ஆலயத்தின் கட்டுமானப் பணியைப் புறக்கணித்திருந்தார்கள். ஆகாய் 1:5-ல் கூறப்பட்டுள்ளபடி, ‘தங்கள் வழிகளை [அதாவது, தங்களுக்கு நிகழ்ந்திருப்பதை] சிந்தித்துப் பார்க்கும்படி’ யெகோவா அவர்களை ஊக்குவித்தார். ஆம், தங்களுடைய வாழ்க்கைப் போக்கைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்படியும், ஆலயக் கட்டுமானப் பணிக்கு முதலிடம் கொடுக்காததால் ஏற்பட்ட பாதிப்புகளை எண்ணிப் பார்க்கும்படியுமே அவர்களிடம் யெகோவா சொல்லிக்கொண்டிருந்தார்.
12, 13. யூதர்களின் நிலைமையை ஆகாய் 1:6 எவ்வாறு விவரிக்கிறது, அந்த வசனத்தின் அர்த்தம் என்ன?
12 முதலிடம் கொடுக்க வேண்டிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்காததால், அந்த யூதர்கள் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கப்பட்டார்கள். யெகோவா என்ன சொன்னார் என்பதை ஆகாய் 1:6-ல் கவனியுங்கள்: “நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை [அதாவது, “போதை ஏறவில்லை,” NW]; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.”
13 அந்த யூதர்கள் கடவுள் கொடுத்திருந்த தேசத்தில்தான் வாழ்ந்துவந்தார்கள், என்றாலும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அது விளைச்சலைத் தரவில்லை. யெகோவா முன்கூட்டியே எச்சரித்திருந்தபடி தமது ஆசீர்வாதங்களை வழங்காதிருந்தார். (உபாகமம் 28:38-48) அவருடைய ஆதரவு இல்லாததால், யூதர்கள் விதை விதைத்தும் கொஞ்சமாய்த்தான் அறுவடை செய்தார்கள், திருப்தியாகும் விதத்தில் போதிய உணவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவருடைய ஆசீர்வாதம் இல்லாததால், குளிருக்கு இதமான உடைகளை அவர்களால் உடுத்திக்கொள்ள முடியாமல்போனது. அவர்கள் சம்பாதித்த பணமெல்லாம் பொத்தலான பைக்குள் போடப்பட்டது போல எந்தப் பிரயோஜனமும் இல்லாமல்போனது. “குடித்தும் போதை ஏறவில்லை” என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன? போதை ஏற குடிப்பது கடவுளுடைய ஆசீர்வாதத்தைக் குறித்ததென அது அர்த்தப்படுத்தாது; ஏனெனில் குடித்துவெறிப்பதை யெகோவா கண்டனம்தான் செய்கிறார். (1 சாமுவேல் 25:36; நீதிமொழிகள் 23:29-35) ஆக, யூதர்கள்மீது கடவுளுடைய ஆசீர்வாதம் இல்லாததையே அந்தச் சொற்றொடர் மீண்டும் குறிப்பிட்டுக் காட்டியது. அவர்கள் எவ்வளவுதான் திரட்சரசத்தைத் தயாரித்தாலும், போதை ஏறுமளவுக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. பொது மொழிபெயர்ப்பு பைபிள் ஆகாய் 1:6-ஐ இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறது: “நீங்கள் குடிக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை.”
14, 15. ஆகாய் 1:6-லிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
14 அவை எல்லாவற்றிலிருந்தும் இன்று நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், வீட்டைக் கட்டி அலங்கரிப்பது பற்றியது மட்டுமே அல்ல. பாபிலோனில் நாடுகடத்தப்படுவதற்கு வெகு காலம் முன்பே, ‘யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகளை’ கட்டியதற்காகவும், ‘தந்தக் கட்டில்களில் படுத்ததற்காகவும்’ இஸ்ரவேலிலிருந்த செல்வந்தவர்களை ஆமோஸ் தீர்க்கதரிசி கண்டனம் செய்திருந்தார். (ஆமோஸ் 3:15; 6:4) ஆம், ஆடம்பரமான அந்த வீடுகளும் அலங்காரப் பொருள்களும் கடைசிவரை நிலைக்கவில்லை. எதிரி தேசத்தார் அவற்றைச் சூறையாடிச் சென்றார்கள். ஆனாலும், பல வருடங்கள் கழித்து, அதாவது 70 வருடங்களுக்கு நாடுகடத்தப்பட்ட பிறகும்கூட, அந்த ஜனங்களில் ஏராளமானோர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. நாம் கற்றுக்கொள்வோமா? நம்மில் ஒவ்வொருவரும் பின்வருமாறு கேட்டுக்கொள்வது பொருத்தமாக இருக்கும்: ‘என் வீட்டுக்கும் வீட்டு அலங்காரத்திற்கும் எந்தளவு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்? நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆன்மீகக் காரியங்களுக்குத் தடையாய் இருக்கிற மேற்படிப்புக்கு, அதுவும் நிறைய வருஷத்தை எடுத்துக்கொள்கிற மேற்படிப்புக்கு, நான் திட்டமிடுகிறேனா?’—லூக்கா 12:20, 21; 1 தீமோத்தேயு 6:17-19.
15 நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய ஆசீர்வாதம் கண்டிப்பாகத் தேவை என்ற குறிப்பையே ஆகாய் 1:6 நமக்கு உணர்த்த வேண்டும். பண்டைய யூதர்களுக்கு அந்த ஆசீர்வாதம் இல்லாததால்தான் அவர்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். எனவே, ஏராளமான பொருட்செல்வங்கள் நமக்கு இருந்தாலும், யெகோவாவின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால், அவரோடு நமக்குள்ள பந்தம் நிச்சயமாகவே படுமோசமாய்ப் பாதிக்கப்படும். (மத்தேயு 25:34-40; 2 கொரிந்தியர் 9:8-12) அப்படியானால், கடவுளுடைய ஆசீர்வாதத்தை நாம் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்?
யெகோவா தமது ஆவியின் மூலம் ஆசீர்வதிக்கிறார்
16-18. பண்டைய சூழலில், சகரியா 4:6 எதை அர்த்தப்படுத்தியது?
16 அக்காலத்தில் வாழ்ந்த தேவபக்திமிக்க ஆட்களின் மனதை யெகோவா தூண்டிய விதத்தையும், அவர்களை ஆசீர்வதித்த விதத்தையும் சிறப்பித்துக்காட்ட ஆகாயின் காலத்தில் வாழ்ந்த இன்னொரு தீர்க்கதரிசியான சகரியா ஏவப்பட்டார். உங்களையும்கூட யெகோவா எப்படி ஆசீர்வதிப்பார் என்பதை அவர் எழுதிய பின்வரும் வசனம் காட்டுகிறது: ‘பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.’ (சகரியா 4:6) இந்த வசனம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்; ஆனால் ஆகாய், சகரியாவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு அவ்வசனம் எதை அர்த்தப்படுத்தியது? உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
17 ஆகாயும் சகரியாவும் ஏவப்பட்டுச் சொன்ன வார்த்தைகள் அக்காலத்தில் எப்படி மிகச் சிறந்த பலனை அளித்தன என்று யோசித்துப் பாருங்கள். அவ்விருவருடைய வார்த்தைகளும் விசுவாசமிக்க யூதர்களைத் தட்டியெழுப்பின. பொ.ச.மு. 520-ம் வருடத்தின் ஆறாம் மாதத்தில் ஆகாய் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தார். அதே வருடத்தின் எட்டாம் மாதத்தில் சகரியா தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தார். (சகரியா 1:1) ஆகாய் 2:18 காட்டுகிறபடி, ஆலயத்தின் அஸ்திவார வேலை ஒன்பதாம் மாதத்தில் தீவிரமடைந்தது. ஆம், கட்டுமானப் பணியில் ஈடுபட யூதர்கள் தூண்டுவிக்கப்பட்டார்கள், யெகோவாவின் ஆதரவு இருக்குமென்ற நம்பிக்கையோடு அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆக, சகரியா 4:6-ல் உள்ள வார்த்தைகள் கடவுளுடைய ஆதரவைக் குறித்தே பேசின.
18 பொ.ச.மு. 537-ல், யூதர்கள் தாயகத்திற்குத் திரும்பியபோது, அவர்களிடம் படைபலம் இருக்கவில்லை. என்றாலும், பாபிலோனிலிருந்து பயணித்த சமயத்தில் அவர்களுக்கு யெகோவாவின் பாதுகாப்பும் வழிநடத்துதலும் இருந்தது. தாயகம் திரும்பிய கொஞ்ச நாளில் ஆலயக் கட்டுமானப் பணியை அவர்கள் தொடங்கிய சமயத்திலும் அவருடைய ஆவியின் வழிநடத்துதல் இருந்தது. அவ்வாறே, அந்த வேலையை அவர்கள் மீண்டும் முழு இருதயத்தோடு ஆரம்பித்தார்களென்றால், தமது பரிசுத்த ஆவியின் மூலம் தொடர்ந்து ஆதரிப்பதாக அவர் உறுதி அளித்தார்.
19. எந்தத் தீய செல்வாக்கை கடவுளுடைய ஆவி முறியடித்தது?
19 தமது ஜனங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்பதை யெகோவா எட்டு தரிசனங்கள் மூலம் சகரியாவுக்கு உறுதி அளித்தார்; அந்த ஜனங்கள் முழு ஈடுபாட்டுடன் ஆலயத்தைக் கட்டி முடிப்பார்கள் என்றும் உறுதி அளித்தார். அதில் நான்காவது தரிசனம், ஆலயத்தைக் கட்டி முடிக்காதபடி அவர்களது முயற்சிகளை சாத்தான் மும்முரமாகத் தடுத்துவந்ததைப் பற்றியதாகும். (சகரியா 3:1) பிரதான ஆசாரியரான யெசுவா, யூதர்கள் சார்பாக புதிய ஆலயத்தில் சேவை செய்யப்போவது சாத்தானுக்கு நிச்சயமாகவே சந்தோஷத்தை அளித்திருக்காது. எனவே, ஆலயத்தைக் கட்டுவதிலிருந்து அவர்களைத் தடுக்க அவன் தீவிரமாக முயன்றான்; இருந்தபோதிலும், யெகோவாவின் ஆவி அந்தத் தடைகளையெல்லாம் தகர்த்தெறிவதற்கும், புதுத்தெம்புடன் ஆலயத்தைக் கட்டி முடிப்பதற்கும் அந்த யூதர்களுக்குப் பெருமளவு உதவியது.
20. கடவுளுடைய கட்டளைப்படி ஆலயத்தைக் கட்டிமுடிக்க பரிசுத்த ஆவி யூதர்களுக்கு எப்படி உதவியது?
20 தகர்க்க முடியாதது போல் தோன்றிய மலைபோன்ற எதிர்ப்பு அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வந்தது; ஆலயக் கட்டுமானப் பணிக்கு அவர்கள் தடையுத்தரவுகூட பிறப்பித்தார்கள். என்றாலும், ‘மலைபோல்’ தோன்றிய அந்தத் தடை ‘சமபூமியாகிவிடும்’ என்று யெகோவா வாக்குறுதி அளித்தார். (சகரியா 4:7; NW) அது அப்படியே நிறைவேறியது! முதலாம் தரியு ராஜாவுடைய கட்டளையின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக யூதர்களுக்கு கோரேசு விடுத்திருந்த அரசாணைப் பத்திரம் சிக்கியது. உடனே கட்டுமானப் பணிக்கான தடையுத்தரவை தரியு ரத்துசெய்தார், அதோடு அரசு கஜானாவிலிருந்து அதற்காக நிதி வழங்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டார். எப்பேர்ப்பட்ட தலைகீழ் மாற்றம்! இப்படியொரு நிலைமை ஏற்பட கடவுளுடைய ஆவி காரணமாக இருந்ததா? ஆம், அதில் சந்தேகமே இல்லை. பொ.ச.மு. 515-ல், முதலாம் தரியுவுடைய ஆட்சிக் காலத்தின் ஆறாம் வருடத்திலே ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.—எஸ்றா 6:1, 15.
21. (அ) பண்டைய காலங்களில், கடவுள் எவ்வாறு ‘சகல தேசங்களையும் அசையப்பண்ணினார்,’ ‘விரும்பப்பட்டவர்கள்’ எவ்வாறு கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள்? (ஆ) அதன் நவீன நாளைய நிறைவேற்றம் என்ன?
21 சீனாய் மலையடிவாரத்தில், அந்த “மலை முழுவதும் மிகவும் அதிர்ந்த” சமயத்தில், யூதர்களோடு கடவுள் செய்த உடன்படிக்கையைப் பற்றி ஆகாய் 2:5-ல் தீர்க்கதரிசி நினைப்பூட்டினார். (யாத்திராகமம் 19:18) ஆகாய், சகரியாவின் நாட்களில், யெகோவா மற்றொரு விதத்தில் பூமியைப் பயங்கரமாக அசையப்பண்ண இருந்தார்; 6, 7 வசனங்களில் அடையாள மொழியில் அது விவரிக்கப்பட்டிருக்கிறது. பெர்சிய ராஜ்யத்தில் பிரச்சினைகளும் குழப்பங்களும் நிலவுமென்றும், ஆலயக் கட்டுமானப் பணியோ தொடர்ந்து நடைபெற்று முடிவுறுமென்றும் முன்னறிவிக்கப்பட்டது. பிறகு, யூதரல்லாத ‘சகல தேசங்களைச் சேர்ந்த விரும்பப்பட்டவர்கள்’ யூதர்களோடு சேர்ந்து அந்த ஆலயத்தில் கடவுளை மகிமைப்படுத்துவார்கள் என்றும் முன்னறிவிக்கப்பட்டது. இன்று, நம்முடைய காலத்தில் நடைபெறும் பிரசங்க வேலையின் மூலம் கடவுள் மிகப் பெரிய அளவில் ‘தேசங்களை அசையப்பண்ணியிருக்கிறார்,’ அதோடு, ‘சகல தேசங்களைச் சேர்ந்த விரும்பப்பட்டவர்கள்’ அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருடன் சேர்ந்து கடவுளை வணங்குவதற்காகக் கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகிறார்கள். உண்மையிலேயே, வேறே ஆடுகளாகிய அவர்களும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் யெகோவாவின் வீட்டை இப்போது மகிமையால் நிரப்பிவருகிறார்கள். அத்தகைய மெய் வணக்கத்தார், மற்றொரு அர்த்தத்தில் யெகோவா ‘வானங்களையும் பூமியையும் அசையப்பண்ணுகிற’ சமயத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆம், யெகோவா தேசங்களுடைய ராஜ்யங்களைக் கவிழ்த்து, அவற்றின் பலத்தை அழிக்கப்போகும் சமயத்திற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.—ஆகாய் 2:22.
22. தேசங்கள் எவ்வாறு ‘அசைவிக்கப்படுகின்றன,’ அதன் விளைவு என்ன, சீக்கிரத்தில் என்ன நடக்கப்போகிறது?
22 ‘வானத்திலும் பூமியிலும் சமுத்திரத்திலும் வெட்டாந்தரையிலும்’ ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களைப் பற்றி நாம் நினைப்பூட்டப்படுகிறோம். அதில் ஒன்று, பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய்களும் பூமியின் சுற்றுவட்டாரத்திற்குத் தள்ளப்பட்டதாகும். (வெளிப்படுத்துதல் 12:7-12) மற்றொன்று, தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் முன்னின்று நடத்தும் பிரசங்க வேலை மனித அமைப்புகளை அசையப்பண்ணியிருப்பதாகும். (வெளிப்படுத்துதல் 11:18) ஆனாலும், சகல தேசங்களிலிருந்து வந்திருக்கும் விரும்பப்பட்டவர்களான ‘திரள் கூட்டத்தார்,’ யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு சேர்ந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10) அர்மகெதோன் யுத்தத்தில் கடவுள் வெகு சீக்கிரமாக சகல தேசங்களையும் அசையப்பண்ணப் போகிறார் என்ற நல்ல செய்தியை அவ்விரு வகுப்பாரும் பிரசங்கித்து வருகிறார்கள். அந்த யுத்தத்திற்குப் பிறகு, பூமியெங்குமே மெய் வணக்கம் பூரண நிலையை அடையும்.
நினைவிருக்கிறதா?
• ஆகாயும் சகரியாவும் எப்போது, என்ன சூழ்நிலையில் சேவை செய்தார்கள்?
• ஆகாயும் சகரியாவும் அளித்த தீர்க்கதரிசன செய்தியை நீங்கள் எவ்வாறு பொருத்திப் பிரயோகிக்கலாம்?
• சகரியா 4:6 உங்களுக்கு ஏன் ஊக்கமூட்டுகிறது?
[பக்கம் 20-ன் படங்கள்]
கடவுளுடைய ஆதரவு நமக்கு இருக்கிறதென ஆகாய், சகரியாவின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன
[பக்கம் 23-ன் படம்]
‘தேவனுடைய வீடு பாழாய்க் கிடக்கும்போது, மரவேலைப்பாடுகள் நிறைந்த உங்கள் வீடுகளில் நீங்கள் குடியிருப்பதற்குக் காலம் இதுவோ?’
[பக்கம் 24-ன் படம்]
‘சகல தேசங்களைச் சேர்ந்த விரும்பப்பட்ட’ ஜனங்களிடம் யெகோவாவின் மக்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்