யெகோவாவிடம் நெருங்கிவர மக்களுக்கு உதவுதல்
“என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”—யோவான் 14:6.
1. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தம்முடைய சீஷர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார், யெகோவாவின் சாட்சிகள் அதற்குக் கீழ்ப்படிந்ததால் கிடைத்த பலன் என்ன?
“சகல தேசத்தாரையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களை முழுக்காட்டுங்கள்.” இது, இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த கட்டளை. (மத்தேயு 28: 19, NW) கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே நிறைய பேருக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்திருக்கிறார்கள். முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்ய தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார்கள். கடவுளிடம் நெருங்கிவர அவர்களுக்கு உதவுவதில்தான் நமக்கு எத்தனை இன்பம்!—யாக்கோபு 4:8.
2. புதியவர்கள் பலர் முழுக்காட்டப்படுகிற போதிலும், என்ன நடந்திருக்கிறது?
2 சில நாடுகளில் பல புதிய சீஷர்கள் முழுக்காட்டப்பட்டுள்ளனர். ஆனாலும் அதற்கேற்றவாறு ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அநேகர் இறந்துபோயிருக்கலாம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஏனெனில் வருடாந்தர இறப்பு விகிதம் 1 சதவீதம். என்றபோதிலும், கடந்த சில ஆண்டுகளில், ஏராளமானோர் ஏதோ காரணத்தால் வீழ்ந்துவிட்டனர். என்ன காரணம்? ஜனங்களை யெகோவா தம்மிடம் எப்படி ஈர்க்கிறார், சிலர் என்ன காரணத்தால் வீழ்ந்துவிடுகின்றனர் என்பதை இந்தக் கட்டுரையும் இதற்கு அடுத்த கட்டுரையும் ஆராயும்.
நாம் பிரசங்கிப்பதன் நோக்கம்
3. (அ) இயேசுவின் சீஷர்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிற ஊழிய பொறுப்பு, வெளிப்படுத்துதல் 14:6-ல் குறிப்பிடப்படுகிற தேவதூதனின் வேலையோடு எவ்வாறு ஒத்திருக்கிறது? (ஆ) ராஜ்ய செய்தியில் ஜனங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கு எது திறம்பட்ட முறையாக நிரூபித்திருக்கிறது, ஆனால் இதில் என்ன பிரச்சினை இருக்கிறது?
3 இந்த ‘முடிவு காலத்தில்,’ ‘ராஜ்யத்தின் நற்செய்தியைப்’ பற்றிய ‘மெய்யான அறிவை’ பரப்பும் பொறுப்பு இயேசுவின் சீஷர்களுக்கு இருக்கிறது. (தானியேல் 12:4, NW; மத்தேயு 24:14, NW) இது, ‘பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்க நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்த’ தேவதூதனின் வேலையோடு ஒத்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:6) வாழ்க்கையின் அன்றாட விவகாரங்களிலேயே இவ்வுலகம் மூழ்கிப்போயிருக்கிறது. இப்படிப்பட்ட உலகில் வாழும் மக்களுக்கு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிச் சொல்லி ஆர்வமூட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு உதவி செய்யவும் வேண்டும். இதைத் திறம்பட்ட விதத்தில் எப்படி செய்வது? உண்மைதான், பரதீஸ் பூமியில் நித்திய வாழ்க்கை கிடைக்கப்போகிறது என்று சொல்லி ஆர்வத்தைத் தூண்டலாம். ஆனால் பரதீஸில் பிரவேசிப்பதையே தங்கள் குறிக்கோளாக வைத்து கடவுளுடைய ஜனங்களுடன் கூட்டுறவுகொள்வோர் ஜீவனுக்குச் செல்லும் இடுக்கமான பாதையில் உறுதியாய் நிற்பதில்லை.—மத்தேயு 7:13, 14.
4. இயேசுவும் வானத்தின் மத்தியில் பறக்கிற அந்தத் தூதனும் சொன்னபடி, நம்முடைய பிரசங்க ஊழியத்தின் நோக்கம் என்ன?
4 இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) வானத்தின் மத்தியில் பறக்கிற தூதன், “நித்திய சுவிசேஷத்தை” அறிவித்து, பூமியில் வாசம் செய்வோருக்கு இவ்வாறு சொல்கிறார்: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.” (வெளிப்படுத்துதல் 14:7) ஆகவே, நாம் பிரசங்கிப்பதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவாவிடம் நெருங்கிவர ஜனங்களுக்கு உதவி செய்வதுதான்.
யெகோவாவின் ஊழியத்தில் நம் பங்கு
5. நம்முடைய வேலையை அல்ல, நாம் யெகோவாவின் வேலையையே செய்கிறோம் என்பதை பவுலும் இயேசுவும் எவ்வாறு குறிப்பிட்டார்கள்?
5 அபிஷேகம் செய்யப்பட்ட உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதுகையில், “ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை” பற்றி பேசினார்; அப்போது, இயேசு கிறிஸ்து செலுத்திய மீட்பின் கிரயபலியின் அடிப்படையில் ஜனங்களை கடவுள் தம்மிடம் ஒப்புரவாக்குகிறார் என்று சொல்கிறார். இது, “தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல” இருக்கிறதென்றும், “நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று . . . வேண்டிக்கொள்ளுகிறோம்” என்றும் பவுல் சொல்லுகிறார். இருதயத்திற்கு இதமளிக்கும் எப்பேர்ப்பட்ட கருத்து! நாம் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாய் ‘கிறிஸ்துவுக்கு ஸ்தானாபதிகளாக’ இருந்தாலும்சரி, அல்லது பூமிக்குரிய நம்பிக்கையுடைய தூதுவர்களாக இருந்தாலும் சரி, இது யெகோவாவின் ஊழியம், நம்முடையதல்ல என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. (2 கொரிந்தியர் 5:18-20) மக்களை தம்மிடம் ஈர்த்து, கிறிஸ்துவிடம் வருவோருக்கு கற்பிப்பது உண்மையில் கடவுளே. இயேசு சொன்னார்: “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.”—யோவான் 6:44, 45.
6. எவ்வாறு யெகோவா சகல ஜாதிகளையும் ஆரம்பக்கட்டமாக அசையப்பண்ணுகிறார், அதே சமயத்தில் வணக்கத்திற்குரிய அவருடைய “வீட்டில்” பாதுகாப்பைக் கண்டடைவது யார்?
6 எவ்வாறு யெகோவா இந்தக் கடைசி நாட்களில் ஜனங்களை தம்மிடம் ஈர்த்து, “விசுவாசத்தின் கதவை” அவர்களுக்கு திறக்கிறார்? (அப்போஸ்தலர் 14:27; 2 தீமோத்தேயு 3:1) இரட்சிப்பை பற்றிய, இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறைக்கு எதிரான நியாயத்தீர்ப்பைப் பற்றிய செய்திகளை தம்முடைய சாட்சிகள் அறிவிக்கும்படி செய்வதே முக்கிய வழி. (ஏசாயா 43:12; 61:1, 2) உலகெங்கும் பரவலாக செய்யப்படும் இந்த அறிவிப்பு தேசங்களுக்குள் ஒருவித நடுக்கத்தை உண்டாக்குகிறது—இது, விரைவில் வரவிருக்கும் அழிவுக்கு ஒரு முன் அறிகுறி. அதே சமயத்தில், கடவுளுடைய கண்களில் ‘அருமையாக’ இருக்கிற ஜனங்கள் இந்தக் காரிய ஒழுங்குமுறையிலிருந்து வெளியே இழுக்கப்படுகிறார்கள்; இவர்கள் உண்மையான வணக்கத்திற்குரிய அவருடைய “வீட்டில்” பாதுகாப்பைக் கண்டடைகிறார்கள். இவ்வாறு, ஆகாய் மூலம் பதிவு செய்யப்பட்ட தம்முடைய வார்த்தைகளை யெகோவா நிறைவேற்றுகிறார்: “சகல ஜாதியாரையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதியாரின் அருமையானவைகளும் வரும்; இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன்.”—ஆகாய் 2:6, 7, தி.மொ.; வெளிப்படுத்துதல் 7:9, 15.
7. எவ்வாறு யெகோவாவே ஜனங்களின் இதருயங்களைத் திறந்து, ஆட்களைத் தம்மிடமாகவும் தம்முடைய குமாரனிடமாகவும் இழுக்கிறார்?
7 “சகல ஜாதியாரின் அருமையானவை” எனப்படும் கடவுள்-பயமுள்ள இவர்களின் இருதயங்களை கடவுளே திறக்கிறார். எதற்காக? சாட்சிகள் ‘சொல்லும் காரியங்களுக்குக் கவனம் செலுத்தவே.’ (ஆகாய் 2:7, ஜூயிஷ் பப்ளிக்கேஷன் சொஸைட்டி; அப்போஸ்தலர் 16:14) முதல் நூற்றாண்டில் செய்ததுபோல், உள்ளப்பூர்வமாய் உதவிக்காக தம்மை நோக்கி வேண்டிக்கொள்ளும் ஜனங்களிடம் சாட்சிகளை வழிநடத்த யெகோவா தம்முடைய தூதர்களை சில சமயங்களில் பயன்படுத்துகிறார். (அப்போஸ்தலர் 8:26-31) தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் செய்திருக்கிற அதிசயமான ஏற்பாடுகளைப் பற்றி ஒவ்வொருவரும் கற்றறிகையில், யெகோவாவின் அன்பால் அவரிடம் இழுக்கப்படுகிறார்கள். (1 யோவான் 4:9, 10) ஆம், கடவுள் தம்முடைய “அன்புள்ள தயவால்,” அல்லது “பற்றுறுதியான அன்பால்” ஜனங்களை தம்மிடமாகவும் தம்முடைய குமாரனிடமாகவும் இழுக்கிறார்.—எரேமியா 31:3, NW அடிக்குறிப்பு.
யெகோவா யாரை தம்மிடம் இழுக்கிறார்?
8. எப்படிப்பட்ட ஆட்களை யெகோவா தம்மிடமாக இழுக்கிறார்?
8 தம்மை நாடித்தேடுவோரை யெகோவா தம்மிடமாகவும் தம்முடைய குமாரனிடமாகவும் இழுக்கிறார். (அப்போஸ்தலர் 17:27) கிறிஸ்தவமண்டலத்தில், சொல்லப்போனால் உலகம் முழுவதிலும் “செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற” ஜனங்களும் இதில் உட்பட்டுள்ளனர். (எசேக்கியேல் 9:4) இவர்கள் ‘தங்கள் ஆவிக்குரிய தேவைகளைப்பற்றி உணர்வுள்ளவர்கள்.’ (மத்தேயு 5:3, NW) நிச்சயமாகவே, இவர்கள் “பூமியிலிருக்கும் பணிவுள்ளவர்கள் [“மனத்தாழ்மையானவர்கள்,” அடிக்குறிப்பு].” இவர்கள் பரதீஸ் பூமியில் என்றென்றும் வாசம் செய்வார்கள்.—செப்பனியா 2:3 NW.
9. ஆட்கள் ‘நித்திய ஜீவனுக்குச் சரியான மனச்சாய்வுள்ளோராக’ இருக்கிறார்களா என்பதை யெகோவா எவ்வாறு எடைபோட முடியும்? இவர்களை அவர் எவ்வாறு தம்மிடம் இழுக்கிறார்?
9 யெகோவாவால் ஒருவரின் இருதயத்தில் இருப்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தாவீது ராஜா தன் குமாரனாகிய சாலொமோனிடம் இவ்வாறு சொன்னார்: “யெகோவா சகல இருதயங்களையும் ஆராய்பவர், நினைவுகள் உத்தேசங்கள் எல்லாவற்றையும் அறிபவர், நீ அவரைத் தேடுவாயானால் அவர் உனக்கு வெளிப்படுவார்.” (1 நாளாகமம் 28:9, தி.மொ.) ஆகவே, ஒருவரது இருதயம் எப்படிப்பட்டது, அவரது மனோபாவம், அல்லது மனநிலை என்ன என்று யெகோவாவுக்கு நன்றாக தெரியும். இந்த நபர், பாவங்களுக்கான மன்னிப்பு ஏற்பாட்டையும் கடவுளுடைய நீதி வாசமாயிருக்கும் புதிய ஒழுங்குமுறை வரப்போவதையும் நம்புவாரா இல்லையா என்பதையும் எடைபோட்டு விடுவார். (2 பேதுரு 3:13) ‘நித்திய ஜீவனுக்குச் சரியான மனச்சாய்வுள்ளோரை’ சாட்சிகளால் பிரசங்கிக்கப்படும் மற்றும் போதிக்கப்படும் தம் வார்த்தையின் மூலம் யெகோவா தம்மிடமாகவும் குமாரனிடமாகவும் இழுக்கிறார், அதனால் இவர்கள் ‘விசுவாசிகளாகிறார்கள்.’—அப்போஸ்தலர் 13:48, NW.
10. யெகோவா சிலரை தம்மிடம் இழுப்பதும், மற்றவர்களை அவ்வாறு செய்யாதிருப்பதும் முன்விதித்தல் அல்ல என்பதை எது காட்டுகிறது?
10 யெகோவா சிலரை தம்மிடம் வரச்செய்வதும், மற்றவர்களை அவ்வாறு செய்யாதிருப்பதும் ஒருவகை முன்விதித்தலா? இல்லவே இல்லை! ஆட்களை கடவுள் தம்மிடம் வரச்செய்வது, அவரவருடைய சொந்த விருப்பத்தின்பேரில் சார்ந்துள்ளது. அவர்களுடைய சுயாதீனத்தை அவர் மதிக்கிறார். 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, மோசேயின் மூலம் பின்வருமாறு சொன்னபோது இஸ்ரவேலருக்கு முன்பாக வைத்த அதே தெரிவை இன்று பூமியில் வாசம் செய்வோருக்கு முன்பும் யெகோவா வைக்கிறார்: “இதோ ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். . . . நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, . . . உன் தேவனாகிய கர்த்தரில் [“யெகோவாவில்,” தி.மொ.] அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.”—உபாகமம் 30:15-20.
11. எவ்வாறு இஸ்ரவேலர் ஜீவனைத் தெரிந்தெடுக்க வேண்டியிருந்தது?
11 இஸ்ரவேலர் ‘யெகோவாவில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொண்டிருப்பதன்’ மூலம் ஜீவனை தெரிந்தெடுக்க வேண்டும் என்பதை கவனியுங்கள். அவ்வாறு சொல்லப்பட்டபோது, இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை இன்னும் சுதந்தரிக்கவில்லை, மோவாப் சமவெளியில் தங்கி, யோர்தானைக் கடந்து கானானுக்குள் பிரவேசிக்கத் தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். ‘பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசம்’ சீக்கிரத்தில் தங்களுக்கு கிடைக்கப்போகிறது என நம்பிக் காத்திருந்தது இயல்பானதே. என்றாலும், அவர்களுடைய கனவுகள் நனவாக வேண்டுமென்றால், யெகோவாவின்மீது அன்பு காட்ட வேண்டும்; அவருடைய சத்தத்திற்கு அவர்கள் செவிசாய்க்க வேண்டும்; அவரை விடாது பற்றிக்கொள்ள வேண்டும். இதுவே நியதி. (யாத்திராகமம் 3:8) மோசே இதை வெகு தெளிவாக சொன்னார்: ‘உன் கடவுளாகிய யெகோவாவில் அன்புகூர்ந்து அவர் வழிகளில் நடக்கவும் அவர் கட்டளைகளையும் நியமங்களையும் தீர்ப்புகளையும் கைக்கொள்ளவும் இந்நாளில் நான் உனக்குப் போதிக்கிறேன்; நீ அவைகளைக் கைக்கொண்டால் பிழைத்துப் பெருகுவாய், நீ சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்திலே உன் கடவுளாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்.’—உபாகமம் 30:16, தி.மொ.
12. இஸ்ரவேலரின் முன்மாதிரி, நம்முடைய பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் ஊழியத்தைப் பற்றி நமக்கு எதைக் கற்பிக்க வேண்டும்?
12 முன்சொல்லப்பட்ட விஷயங்கள் இந்த முடிவு காலத்தில் நம்முடைய பிரசங்க வேலையை பற்றிய ஒன்றை நமக்கு கற்பிக்க வேண்டும் அல்லவா? வரவிருக்கிற பரதீஸ் பூமியைப் பற்றி நாம் சிந்திக்கிறோம், அதைப் பற்றி ஊழியத்தில் பேசுகிறோம். ஆனால் நாமோ நாம் உண்டாக்கும் சீஷர்களோ, தன்னல காரணங்களினிமித்தம் கடவுளைச் சேவித்தால், அந்த வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்தை காண முடியாது. இஸ்ரவேலரைப் போல் நாமும் நம்மால் போதிக்கப்படுகிறவர்களும் ‘யெகோவாவில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்ளும்படி’ கற்க வேண்டும். நம் ஊழியத்தில் இதை நினைவில் வைத்திருந்தால், ஜனங்களை கடவுளிடம் கவர்ந்திழுப்பதில் நாம் உண்மையில் கடவுளுடன் சேர்ந்து உழைப்போம்.
கடவுளின் உடனுழைப்பாளர்கள்
13, 14. (அ) 1 கொரிந்தியர் 3:5-9-ன்படி, நாம் எப்படி கடவுளுடைய உடன் உழைப்பாளிகளாக ஆகிறோம்? (ஆ) அதிகரிப்பு ஏற்பட்டால் யாருக்குப் பெருமை, ஏன்?
13 கடவுளுடன் சேர்ந்து உழைப்பதை ஒரு வயலைப் பயிரிடுவதற்கு உதாரணமாக வைத்து பவுல் விளக்கினார். அவர் எழுதினார்: “பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். நாங்கள் தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணை.”—1 கொரிந்தியர் 3:5-9.
14 கடவுளுடைய உடன் வேலையாட்களாக நாம் உண்மையுடன் “ராஜ்யத்தின் வசனத்தை” ஜனங்களின் இருதயங்களில் நடவேண்டும்; அதன் பின்பு, காண்பிக்கப்பட்ட அக்கறையை, நன்றாக தயார்செய்த மறு சந்திப்புகளின் மூலமும் பைபிள் படிப்புகளின் மூலமும் தண்ணீர் பாய்ச்சி வளர்க்க வேண்டும். அந்த இருதயமாகிய மண் நல்லதாக இருந்தால், பைபிள் சத்தியத்தின் அந்த விதை பலன்தரும் செடியாக யெகோவா வளரச் செய்வார். இது அவரது பங்கு. (மத்தேயு 13:19, 23) அந்த நபரை அவர் தம்மிடமாகவும் தம்முடைய குமாரனிடமாகவும் கவர்ந்திழுப்பார். ஆகவே, கடைசியில் பார்க்கப்போனால், ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் ஏற்படும் எந்த அதிகரிப்பும் ஜனங்களின் இருதயங்களில் யெகோவா செய்த கிரியையின் காரணமாகவே ஏற்படுகிறது. இவ்வாறு சத்தியத்தின் விதையை வளரச் செய்து, அத்தகையோரை தம்மிடமாகவும் தம்முடைய குமாரனிடமாகவும் கவர்ந்திழுக்கிறார்.
நிலைத்திருக்கும் கட்டிட வேலை
15. விசுவாசத்தைப் பெருகச் செய்ய மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு உதவுகிறோம் என்பதைக் காட்ட பவுல் என்ன உதாரணத்தைப் பயன்படுத்தினார்?
15 அதிகரிப்பு ஏற்பட்டால் நமக்கு சந்தோஷம்தான்; அதேசமயத்தில், ஜனங்கள் யெகோவாவைத் தொடர்ந்து நேசித்து, அவருடைய குரலுக்குச் செவிகொடுத்து, அவரை விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும் என உள்ளப்பூர்வமாய் விரும்புகிறோம். சிலர் ஆர்வமிழந்து விலகி வீழ்ந்துபோவதைக் காண்பது நமக்கு வருத்தமே. இதைத் தவிர்க்க நாம் ஏதாகிலும் செய்ய முடியுமா? வேறொரு உதாரணத்தில், விசுவாசத்தைப் பெருகச் செய்ய மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்பதைப் பவுல் காட்டுகிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.”—1 கொரிந்தியர் 3:11-13.
16. (அ) என்ன வெவ்வேறு நோக்கத்துடன் அந்த இரண்டு உதாரணங்களைப் பவுல் பயன்படுத்தினார்? (ஆ) நம்முடைய கட்டும் வேலை, எவ்வாறு சரியில்லாமலும் அக்கினியைத் தாங்க முடியாததுமாக ஆகக்கூடும்?
16 வயலைப் பற்றிய பவுலின் உதாரணத்தில், வளர்ச்சியானது அக்கறையோடு நடுவதிலும் தவறாமல் தண்ணீர் பாய்ச்சுவதிலும் கடவுளுடைய ஆசீர்வாதத்திலுமே சார்ந்திருக்கிறது. பவுலின் இன்னொரு உதாரணம், ஒரு கிறிஸ்தவனின் கட்டிட வேலையில் அவனுடைய பொறுப்பை முக்கியப்படுத்திக் காட்டுகிறது. அவன் உறுதியான அஸ்திபாரத்தின்மீது நல்ல தரமான பொருட்களைக் கொண்டு கட்டியிருக்கிறானா? பவுல் எச்சரிக்கிறார்: “அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 3:10) பரதீஸில் நித்திய ஜீவ நம்பிக்கையைப் பற்றி ஒருவருக்குச் சொல்வதன்மூலம், அந்த நபருடைய அக்கறையைத் தூண்டியெழுப்புவது சரிதான். அதன் பின்பு, பைபிளின் அடிப்படை அறிவை புகட்டுவது மட்டுமே நம் குறிக்கோளா? மேலும், அந்த நபர் நித்திய ஜீவனடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதையே முக்கியமாய் அறிவுறுத்துகிறோமா? அப்படியென்றால், ‘பரதீஸில் நீங்கள் என்றென்றும் வாழ விரும்பினால், பைபிள் படிக்க வேண்டும், கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும், பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்ள வேண்டும்’ என்று சொல்வதுதான் நம் போதகமா? அப்படியானால், அந்த நபரின் விசுவாசத்தை உறுதியான அஸ்திபாரத்தின்மீது நாம் கட்டவில்லை; நாம் கட்டும் கட்டடம், அக்கினியைப் போன்ற சோதனைகளைத் தாங்கி நிற்காது அல்லது நீடித்து நிலைத்து நிற்காது. யெகோவாவை சில ஆண்டுகள் சேவித்தால், அவர் பரதீஸில் வாழ வைப்பார் என்று சொல்லி ஜனங்களை யெகோவாவிடம் கவர்ந்திழுக்க முயற்சி செய்யும் இப்படிப்பட்ட செயல், “மரம், புல், வைக்கோல்” ஆகியவற்றைக் கொண்டு கட்டுவதற்கு ஒப்பாயிருக்கும்.
கடவுள்மீதும் கிறிஸ்துவின்மீதும் அன்பு பெருகும்படி கட்டியெழுப்புதல்
17, 18. (அ) ஒருவரின் விசுவாசம் நிலைத்திருக்க வேண்டுமானால் எது அத்தியாவசியமானது? (ஆ)கிறிஸ்து ஒருவருடைய இருதயத்தில் குடிகொள்வதைப் போல அந்த நபருக்கு நாம் எவ்வாறு உதவலாம்?
17 விசுவாசம் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமானால், அது இயேசு கிறிஸ்துவின் மூலமாய் யெகோவா தேவனுடன் தனிப்பட்ட ஓர் உறவின்மீது ஆதாரங்கொள்ளச் செய்யப்பட வேண்டும். அபூரண மனிதராகிய நாம் கடவுளின் குமாரன்மூலம் மாத்திரமே கடவுளுடன் அத்தகைய ஒரு சமாதானமான உறவை அடைய முடியும். (ரோமர் 5:10) “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள். விசுவாசத்தைக் கட்டியெழுப்பும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்ய, “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.” இதில் என்ன உட்பட்டுள்ளது?—யோவான் 14:6; 1 கொரிந்தியர் 3:11.
18 அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின்மேல் கட்டுவது என்றால், இயேசுவின்மீது ஆழ்ந்த அன்பை பைபிள் மாணாக்கர் வளர்த்துக்கொள்ளும் முறையில் கற்பிப்பது என்றே அர்த்தம். அதாவது, இயேசுவை மீட்பராகவும் சபையின் தலைவராகவும் அன்புள்ள பிரதான ஆசாரியராகவும் ஆட்சிசெய்யும் அரசராகவும் அவர் வகிக்கும் பாகத்தைப் பற்றிய முழுமையான அறிவை மாணாக்கர் பெறுவது; அந்த அறிவின் மூலம் அவர்மீது அன்பை வளர்த்துக்கொள்ளும் வகையில் அவருக்குப் போதிப்பது. (தானியேல் 7:13, 14; மத்தேயு 20:28; கொலோசெயர் 118-20; எபிரெயர் 4:14-16) இயேசுவை நிஜமானவராக நாம் அவர்களுக்குக் காட்டுவதால், அவர்கள் இருதயங்களில் அவர் குடிகொள்வதைப்போல் செய்வதைக் குறிக்கிறது. அவர்களுக்காக நாம் செய்யும் ஜெபங்கள், எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்காக பவுல் செய்த வேண்டுகோளைப் போலவே இருக்க வேண்டும். அவர் இவ்வாறு எழுதினார்: நான் “பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, . . . விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களா[கவும்] . . . வேண்டிக்கொள்ளுகிறேன்.”—எபேசியர் 3:14-17, 19.
19. நம்முடைய பைபிள் மாணாக்கர்களின் இருதயங்களில் கிறிஸ்துவின்மீதான அன்பைப் பெருகச் செய்தால், வேறு என்னவும் நிகழும், ஆனால் எதையும் நாம் கற்பிக்கவேண்டும்?
19 நம்முடைய மாணாக்கர்களின் இருதயங்களில் கிறிஸ்துவின்மீதான அன்பு படிப்படியாக வளரத்தக்க விதத்தில் நாம் போதித்தால், யெகோவா தேவன்மீதும் அவருக்கு அன்பு பெருகும். இயேசு காட்டிய அன்பும் அக்கறையும் இரக்கமும் யெகோவாவினுடைய பண்புகளின் பிரதிபலிப்பே. (மத்தேயு 11:28-30; மாற்கு 6:30-34; யோவான் 15:13, 14; கொலோசெயர் 1:15; எபிரெயர் 1:3) ஆகையால், ஜனங்கள் இயேசுவை அறிந்து நேசிக்கையில், யெகோவாவையும் அறிந்து நேசிப்பார்கள். a (1 யோவான் 4:14, 16, 19) கிறிஸ்து மனிதவர்க்கத்திற்குச் செய்திருக்கிற எல்லாவற்றிற்கும் யெகோவா தேவனே காரணர் என்பதையும், நாம் ‘இரட்சிப்பின் தேவனாகிய’ அவருக்கே நன்றியும் துதியும் வணக்கமும் செலுத்தக் கடன்பட்டிருக்கிறோம் என்பதையும் நம் பைபிள் மாணாக்கர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.—சங்கீதம் 68:19, 20; ஏசாயா 12:2-5; யோவான் 3:16; 5:19.
20. (அ) ஆட்கள் கடவுளிடமும் அவருடைய குமாரனிடமும் நெருங்கிவர நாம் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?
20 கடவுளுடைய உடன் வேலையாட்களாக, ஜனங்கள் கடவுளிடமாகவும் அவருடைய குமாரனிடமாகவும் நெருங்கிவர நாம் உதவிசெய்வோம்; அவர்கள் இருதயங்களில் அன்பையும் விசுவாசத்தையும் பெருகச் செய்வோம். இவ்வாறு யெகோவா அவர்களுக்கு நிஜமானவராவார். (யோவான் 7:28) கிறிஸ்துவின் மூலம் கடவுளுடன் அவர்கள் நெருங்கி வருவார்கள். மேலும், அவரை நேசித்து அவரை விடாது பற்றியிருப்பார்கள். அன்பால் தூண்டப்பட்டு செய்யும் தங்கள் சேவைக்கு கால வரம்புகளை வைக்கமாட்டார்கள்; ஏனெனில், யெகோவாவின் அதிசயமான வாக்குகள் அவற்றிற்குரிய காலத்தில் நிறைவேறும் என்பதில் விசுவாசம் காட்டுவார்கள். (புலம்பல் 3:24-26; எபிரெயர் 11:6) எனினும், விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அன்பையும் பெருகச் செய்யும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்கையில், நம்முடைய சொந்த விசுவாசத்தையும் பெருகச் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் விசுவாசம் எதிர்ப்பின் புயல்களைத் தாங்கி நிலைநிற்கும் திடமான கப்பலைப்போல் இருக்கும். இது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a இயேசுவை மேலும் நன்றாக அறிவதற்கும் அவர் மூலம் பிதாவாகிய யெகோவாவை அறிவதற்கும் மிகச் சிறந்த கருவி எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம். இது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
மறுபார்வையிடுதல்
◻ பொதுவாக ராஜ்ய செய்தியில் ஜனங்களின் ஆர்வத்தை நாம் எவ்வாறு தூண்டுகிறோம், ஆனால் என்ன ஆபத்து உள்ளது?
◻ என்ன வகையான ஆட்களை யெகோவா தம்மிடமாகவும் தம்முடைய குமாரனிடமாகவும் கவர்ந்திழுக்கிறார்?
◻ வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்க வேண்டுமென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ யெகோவாவிடமும் அவருடைய குமாரனிடமும் நெருங்கிவரும்படி ஜனங்களுக்கு உதவிசெய்வதில் நம் பங்கு என்ன?
[பக்கம் 10-ன் படம்]
பரதீஸில் நித்தியமாய் வாழும் நம்பிக்கையை நாம் ஜனங்களுக்கு அளிக்கிறபோதிலும், அவர்களை யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்வதே நம்முடைய முக்கிய நோக்கம்
[பக்கம் 13-ன் படம்]
நாம் நன்றாய் தயாரித்தால், நம்முடைய மறுசந்திப்புகள் நன்கு பலன்தரலாம்