உண்மையான வணக்கத்துக்குரிய வெற்றி நெருங்கி வருகிறது
“பூமி முழுவதன்மீதும் யெகோவா அரசராக வேண்டும்.”—சகரியா 14:9, NW.
1. முதல் உலகப் போரின்போது, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் அனுபவம் என்னவாக இருந்தது, இது எவ்வாறு முன்னறிவிக்கப்பட்டது?
அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், முதல் உலகப் போரின்போது, போரிட்ட தேசங்களின் கைகளில் பல இக்கட்டுகளையும் சிறையிருப்புகளையும் அனுபவித்தனர். யெகோவாவுக்குச் செலுத்தும் அவர்களுடைய துதியின் பலிகள் கடுமையாய்க் கட்டுப்படுத்தப்பட்டன, ஆவிக்குரிய ஒரு சிறையிருப்பு நிலைக்குள் அவர்கள் வீழ்ந்தனர். இவை யாவும், எருசலேமின்மீது சர்வதேச தாக்குதல் ஒன்றை விவரிக்கிற சகரியா 14:2-ல் முன்னறிவிக்கப்பட்டன. இந்தத் தீர்க்கதரிசனத்தின் நகரம், ‘பரம எருசலேமாகிய’ கடவுளுடைய பரலோக ராஜ்யமும் “தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம்” உள்ள இடமும் ஆகும். (எபிரெயர் 12:22, 28; 13:14; வெளிப்படுத்துதல் 22:3) பூமியிலிருந்த, கடவுளுடைய அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் அந்த நகரத்தைப் பிரதிநிதித்துவம் செய்தனர். அவர்களுக்குள் உண்மையுள்ளவர்களாக இருந்தவர்கள் அந்தத் தாக்குதலைத் தப்பிப் பிழைத்தனர், ‘அந்த நகரத்திலிருந்து’ கடத்தப்பட தங்களை அனுமதிக்கவில்லை.a
2, 3. (அ) யெகோவாவின் வணக்கம் 1919 முதற்கொண்டு எவ்வாறு வெற்றிசிறந்திருக்கிறது? (ஆ) 1935 முதற்கொண்டு, என்ன முன்னேற்றம் நடந்தேறியிருக்கிறது?
2 உண்மையுள்ளவர்களாயிருந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் தங்கள் சிறையிருப்பு நிலையிலிருந்து 1919-ல் விடுதலை செய்யப்பட்டார்கள். போருக்குப் பின் வந்த சமாதான காலப்பகுதியை அவர்கள் உடனடியாகப் பயன்படுத்தினார்கள். பரலோக எருசலேமின் அரசப்பிரதிநிதிகளாக, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும், 1,44,000 பேரின் கடைசி உறுப்பினரைக் கூட்டிச்சேர்ப்பதில் உதவிசெய்வதற்கும் இந்தச் சிறந்த வாய்ப்பை அவர்கள் விரைவில் பற்றிக்கொண்டனர். (மத்தேயு 24:14; 2 கொரிந்தியர் 5:20) 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பொருத்தமான வேதப்பூர்வ பெயரை அவர்கள் ஏற்றனர்.—ஏசாயா 43:10, 12.
3 அதுமுதற்கொண்டு, கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட சாட்சிகள் ஒருபோதும் பின்வாங்கவில்லை. ஹிட்லருங்கூட தன் நாஜி அரசியல் இராணுவ அமைப்பைக் கொண்டு அவர்கள் வாயை அடைக்க முடியவில்லை. உலகமெங்கும் துன்புறுத்தப்பட்டபோதிலும், அவர்களுடைய ஊழியம் பூமி முழுவதிலும் பலன் தந்திருக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்ட சர்வதேச ‘திரள் கூட்டத்தார்,’ முக்கியமாய் 1935-ம் ஆண்டு முதற்கொண்டு, அவர்களோடு சேர்ந்துகொண்டிருக்கின்றனர், இவர்களுங்கூட ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாகவும், “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய [இயேசு கிறிஸ்துவினுடைய] இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்க”ளாகவும் இருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 14) எனினும், இவர்கள், பரலோக வாழ்க்கையின் நம்பிக்கையையுடைய அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் அல்லர். ஆதாமும் ஏவாளும் இழந்ததை, அதாவது, பரதீஸ் பூமியில் பரிபூரண மனித வாழ்க்கையைச் சுதந்தரிப்பதே இவர்களுடைய நம்பிக்கை. (சங்கீதம் 37:29; மத்தேயு 25:34) இன்று, இந்தத் திரள் கூட்டம் 50 லட்ச ஆத்துமாக்களைப் பார்க்கிலும் அதிகமான எண்ணிக்கையுடையதாக உள்ளது. யெகோவாவின் உண்மையான வணக்கம் வெற்றிசிறக்கிறது, ஆனால் அதன் முடிவான வெற்றி இன்னும் வரவிருக்கிறது.
கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தில் அந்நியர்கள்
4, 5. (அ) இந்தத் திரள் கூட்டத்தார் எங்கே யெகோவாவை வணங்குகின்றனர்? (ஆ) என்ன சிலாக்கியங்களை அவர்கள் அனுபவிக்கின்றனர், எந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக?
4 முன்னறிவித்தபடி, இந்தத் திரள் கூட்டத்தார் “இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் [கடவுளை] சேவிக்கிறார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:15) இவர்கள், ஆவிக்குரிய, ஆசாரிய இஸ்ரவேலராக இராததனால், ஆலயத்தில் புறஜாதியாரின் வெளிப்பிரகாரத்தில் நிற்பதை யோவான் கண்டிருக்கலாம். (1 பேதுரு 2:5) யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயம் எவ்வளவு மகிமையானதாகிவிட்டிருக்கிறது, அதன் எல்லைகள் இந்த மாபெரும் கூட்டத்தால் நிரப்பப்பட்டதாகி, இவர்கள், ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதிபேரோடுகூட யெகோவாவை துதித்துக்கொண்டிருக்கின்றனர்!
5 ஆசாரிய உட்பிரகாரத்தால் படமாகக் குறிக்கப்படுகிற நிலைமையில் இந்தத் திரள் கூட்டத்தார் கடவுளைச் சேவிக்கிறதில்லை. கடவுளுடைய ஆவிக்குரிய குமாரராக புத்திர சுவிகாரம் செய்யப்படும் நோக்கத்துக்காக இவர்கள் நீதியுள்ளோராய்த் தீர்க்கப்படுகிறதில்லை. (ரோமர் 8:1, 15) இருப்பினும், இயேசுவினுடைய மீட்பின் கிரயத்தில் விசுவாசம் காட்டுவதன்மூலம், யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான ஒரு நிலைநிற்கையை இவர்கள் கொண்டுள்ளனர். அவருடைய நண்பர்களாக இருக்கும்படியான நோக்கத்துடன் இவர்கள் நீதியுள்ளோராகத் தீர்க்கப்படுகின்றனர். (யாக்கோபு 2:21, 23-ஐ ஒப்பிடுக.) இவர்களும், கடவுளுடைய ஆவிக்குரிய பலிபீடத்தின்மீது ஏற்கத்தக்க பலிகளைச் செலுத்துவதற்குச் சிலாக்கியம் அளிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு, இந்தப் பெரும் கூட்டத்தைக் குறித்ததில், ஏசாயா 56:6, 7-ன் (தி.மொ.) தீர்க்கதரிசனம் மகிமையான நிறைவேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது: “யெகோவாவைச் சேவிக்கவும் அவர் நாமத்தை நேசிக்கவும் . . . அவரைச் சேர்ந்துகொள்ளுகிற அந்நியரையும் . . . நான் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து, என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய தகனபலிகளும் அவர்களுடைய இரத்த பலிகளும் என் பலிபீடத்தின்மேல் உகந்தனவாகும்; என் வீடு சகல ஜாதியாருக்கும் ஜெபவீடு என்னப்படும்.”
6. (அ) இந்த அந்நியர்கள் என்ன வகையான பலிகளைச் செலுத்துகிறார்கள்? (ஆ) ஆசாரிய பிரகாரத்திலுள்ள அந்தத் தண்ணீர் கொள்கலம் எதை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது?
6 இந்த அந்நியர்கள் செலுத்தும் பலிகளுக்குள், “[மென்மையாக ஆயத்தம் செய்யப்பட்ட தானிய பலிகளைப்போல்], [கடவுளுடைய] ‘பெயரை யாவரறிய அறிவிக்கும் உதடுகளின் கனியும் நன்மை செய்வதும் காரியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும்’ இருக்கின்றன. (எபிரெயர் 13:15, 16, NW) ஆசாரியர்கள் தங்களைக் கழுவிக்கொள்ளும்படி பயன்படுத்த வேண்டியிருந்த அந்தப் பெரிய தண்ணீர் கொள்கலமும் இந்த அந்நியர்களுக்கு முக்கியமான ஒன்றின் நினைப்பூட்டுதலாக உள்ளது. கடவுளுடைய வார்த்தை இவர்களுக்குப் படிப்படியாய்த் தெளிவாக்கப்பட்டு வருகையில் இவர்களும் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கப்பிரகாரமான சுத்திகரிப்புக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தி வரவேண்டும்.
பரிசுத்த ஸ்தலமும் அதன் பொருட்களும்
7. (அ) பரிசுத்த ஆசாரியத்துவத்தின் சிலாக்கியங்களை இந்தத் திரள் கூட்டத்தார் எவ்வாறு கருதுகின்றனர்? (ஆ) இந்த அந்நியர்களில் சிலர் என்ன கூடுதலான சிலாக்கியங்களைப் பெற்றிருக்கின்றனர்?
7 பரிசுத்த ஸ்தலமும் அதன் பொருட்களும் இந்த அந்நியரின் திரள் கூட்டத்துக்கு ஏதாவது உட்பொருளை உடையனவாக இருக்கின்றனவா? இந்தப் பரிசுத்த ஸ்தலத்தால் சித்தரிக்கப்பட்ட நிலைமையில் இவர்கள் ஒருபோதும் இருக்கமாட்டார்கள். பரலோகக் குடியுரிமையுடையோரான கடவுளுடைய ஆவிக்குரிய குமாரரைப்போல் இவர்கள் மறுபடியும் பிறந்தில்லை. இது இவர்களைப் பொறாமை உணர்ச்சியடையும்படி செய்விக்கிறதா? இல்லை. மாறாக, 1,44,000 பேரில் மீதியானோருக்கு ஆதரவாயிருக்கும் தங்கள் சிலாக்கியத்தில் இவர்கள் களிகூருகிறார்கள். மேலும் மனிதவர்க்கத்தைப் பரிபூரணத்துக்கு உயர்த்துவதில் கிறிஸ்துவுடன் பங்குகொள்ளப்போகிற இந்த ஆவிக்குரிய குமாரரைப் புத்திரசுவிகாரம் செய்ததில் கடவுளுடைய நோக்கத்துக்கு மனமார்ந்த மதித்துணர்வை இவர்கள் காட்டுகின்றனர். மேலும், இந்த அந்நியர்களாகிய திரள் கூட்டத்தினர், பரதீஸில் நித்திய ஜீவனை அடைவதன் பூமிக்குரிய ஒரு நம்பிக்கையைத் தங்களுக்கு அளித்ததில் கடவுளுடைய பெரும் தகுதியற்ற தயவை மனதார போற்றுகிறார்கள். பூர்வ நிதனீமியரைப்போல், பரிசுத்த ஆசாரியத்துவத்துக்கு உதவிசெய்வதில் கண்காணிப்பு சிலாக்கியங்கள், இந்த அந்நியர்களில் சிலருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.b (ஏசாயா 61:5) இவர்களுக்குள்ளிருந்தே சிலரை இயேசு, “பூமியெங்கும் பிரபுக்களாக” நியமிக்கிறார்.—சங்கீதம் 45:16.
8, 9. பரிசுத்த ஸ்தலத்தின் பொருட்களைக் கவனிப்பதிலிருந்து என்ன நன்மையை இந்தத் திரள் கூட்டத்தார் அடைகிறார்கள்?
8 மாதிரி முன்குறித்த உண்மையான பரிசுத்த ஸ்தலத்துக்குள் தாங்கள் ஒருபோதும் பிரவேசிக்கப் போவதில்லையெனினும், இந்த அந்நியர்களின் திரள் கூட்டத்தினர், அதன் பொருட்களிலிருந்து பயனுள்ள பாடங்களைக் கற்கின்றனர். அந்தக் குத்துவிளக்கு இடைவிடாது எண்ணெய் நிரப்பப்பட்டிருப்பது தேவையாக இருந்ததுபோல், இந்த அந்நியர்களுக்கும், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாக, கடவுளுடைய வார்த்தையிலிருந்து அருளப்படுகிற படிப்படியாய் வெளிப்படும் சத்தியங்களைப் புரிந்துகொள்ள உதவிசெய்வதற்கு, பரிசுத்த ஆவி தேவையாக இருக்கிறது. (மத்தேயு 24:45-47, NW) மேலுமாக, பின்வரும் இந்த அழைப்புக்குச் செயல்படும்படி கடவுளுடைய ஆவி அவர்களுக்கு உதவிசெய்கிறது: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) இவ்வாறு, கிறிஸ்தவர்களாக ஒளிவீசும்படியான அவர்கள் கடமைக்கும் மனப்பான்மையிலோ, நினைவிலோ, வார்த்தையிலோ, அல்லது செயலிலோ, கடவுளுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தும் எதையும் தவிர்க்கும்படிக்கும், திரள் கூட்டத்தாருக்கு இந்தக் குத்துவிளக்கு ஒரு நினைப்பூட்டுதலாக உள்ளது.—எபேசியர் 4:30.
9 ஆவிக்குரியப்பிரகாரமாக ஆரோக்கியமாய் நிலைத்திருப்பதற்கு, இந்தத் திரள் கூட்டத்தார், பைபிளிலிருந்தும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” பிரசுரிக்கும் பிரசுரங்களிலிருந்தும் வரும் ஆவிக்குரிய உணவை, தவறாமல் உட்கொண்டு வரவேண்டுமென்று, சமுகத்தப்பங்கள் வைக்கும் அந்த மேசை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது. (மத்தேயு 4:4) அவர்கள் தங்கள் உத்தமத்தைத் தொடர்ந்து காத்துக்கொள்வதற்கு, உதவிக்காக யெகோவாவிடம் ஊக்கமாய் ஜெபிப்பதன் முக்கியத்துவத்தை, தூபபீடம் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது. (லூக்கா 21:36) அவர்களுடைய ஜெபங்கள், துதியும் நன்றிசெலுத்துதலும் அடங்கிய இருதயப்பூர்வ வெளிக்காட்டுகள் உட்பட்டவையாக இருக்க வேண்டும். (சங்கீதம் 106:1) கிறிஸ்தவ கூட்டங்களில் முழு இருதயத்தோடும் ராஜ்ய பாட்டுகளைப் பாடுவது, மற்றும் ‘இரட்சிப்புண்டாக யாவரறிய அறிவிப்பு செய்வதை’ பலன்தரத்தக்க முறையில் நிறைவேற்றுவதற்கு நன்றாய் ஆயத்தம் செய்வது, ஆகியவற்றைப் போன்ற மற்ற வழிகளிலும் கடவுளைத் துதிப்பதற்கான அவசியத்தையும் இந்தத் தூப பீடம் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது.—ரோமர் 10:10, NW.
உண்மையான வணக்கத்தின் பூரண வெற்றி
10. (அ) என்ன மகத்தான எதிர்பார்ப்பை நாம் ஆவலோடு நோக்கியிருக்கலாம்? (ஆ) என்ன காரியங்கள் முதலாவதாக ஏற்பட வேண்டும்?
10 இன்று சகல தேசங்களிலுமிருந்து “திரளான ஜனங்கள்,” வணக்கத்துக்குரிய யெகோவாவின் வீட்டுக்குத் திரண்டோடி வருகின்றனர். (ஏசாயா 2:2, 3) இதை உறுதி செய்வதாய் வெளிப்படுத்துதல் 15:4 இவ்வாறு கூறுகிறது: “கர்த்தாவே [“யெகோவாவே,” NW], யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின.” பின்வருவதை சகரியா 14-ம் அதிகாரம் விவரிக்கிறது. சமீப எதிர்காலத்தில், பூமியிலுள்ள பெரும்பான்மையான ஜனங்கள், எருசலேமுக்கு—பூமியிலிருக்கும், பரலோக எருசலேமின் பிரதிநிதிகளுக்கு—விரோதமாய்க் கடைசி தடவையாகப் போரிடும்படி கூடுகையில், அவர்களுடைய பகைமையான மனப்பான்மை உச்ச நிலையை எட்டும். அப்போது யெகோவா செயல்படுவார். போர்வீரரான கடவுளாக, அவர் “புறப்பட்டு,” இந்தத் தாக்குதல் செய்ய தைரியங்கொள்ளும் “அந்த ஜாதிகளோடே போராடுவார்.”—சகரியா 14:2, 3.
11, 12. (அ) தம்முடைய ஆலயத்திலுள்ள வணக்கத்தாரின்மீது வரவிருக்கும் உலகளாவிய தாக்குதலுக்கு யெகோவா எவ்வாறு பிரதிசெயல்படுவார்? (ஆ) கடவுளுடைய போரின் பலன் என்னவாயிருக்கும்?
11 “எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணவந்த சகல ஜாதியார்மேலும் யெகோவா அனுப்பும் வாதை இதுவே: அவர்கள் காலூன்றி நிற்கையிலேயே அவர்கள் சதை அழுகிப் போகச்செய்வார், அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே அழுகிப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும். அந்நாளிலே யெகோவா பெரிய கலக்கத்தை அவர்களுக்குள் அனுப்புவார். ஒவ்வொருவனும் தன்தன் அயலான்மேல் கைபோடுவான், ஒவ்வொருவன் கையும் அவனவன் அயலான் கைக்கு விரோதமாக எழும்பும்.”—சகரியா 14:12, 13, தி.மொ.
12 இந்த வாதை சொல்லர்த்தப்படியானதாக இருக்குமோ, அல்லது அடையாளக் கருத்தின்படியானதாக இருக்குமோ என்பதை நாம் காத்திருந்து காண வேண்டும். எனினும், ஒரு காரியம் நிச்சயமாக உள்ளது. கடவுளுடைய சத்துருக்கள், யெகோவாவின் ஊழியர்களின்மீது, முழு உலகளாவிய தங்கள் தாக்குதலைச் செய்யும்படி நடவடிக்கை எடுக்கையில், கடவுளுடைய சர்வவல்ல ஆற்றலின் அசாதாரண நடவடிக்கைகளால் அவர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் வாய்கள் அடக்கப்படும். அறைகூவலிடும் அவர்கள் நாவுகள் அழுகிவிட்டன என்பதுபோல் இருக்கும். அவர்களுடைய கண்கள் அழுகிவிட்டன என்பதுபோல் அவர்களுடைய ஒன்றுபட்ட இலக்கு அவர்களுடைய பார்வைக்கு மங்கலாகிவிடும். தாக்குதல் செய்வதற்கு அவர்களைத் தைரியங்கொள்ள செய்த அவர்களுடைய உடல்சார்ந்த வல்லமைகள் பயன்படாமல் அழிந்துபோகும். மனக்குழப்பத்தில், ஒருவரையொருவர் தாக்கி படுகொலை செய்வார்கள். இவ்வாறு, கடவுளுடைய வணக்கத்தின் பூமிக்குரிய சத்துருக்கள் யாவரும் முழுமையாக ஒழிக்கப்பட்டு போவார்கள். கடைசியாக, தேசங்கள் யாவும் யெகோவாவின் சர்வலோக பேரரசாட்சியை உணர்ந்து ஒப்புக்கொள்ள வற்புறுத்தப்பட்ட நிலையில் இருப்பர். “யெகோவா பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்,” என்ற தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடையும். (சகரியா 14:9, தி.மொ.) அதன்பின்பு, மனிதவர்க்கத்துக்கு மிகுந்த ஆசீர்வாதங்கள் வரவிருக்கும் நிலையில் கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சி தொடங்குகையில், சாத்தானும் அவனுடைய பேய்களும் கட்டப்படுவர்.—வெளிப்படுத்துதல் 20:1, 2; 21:3, 4.
பூமிக்குரிய உயிர்த்தெழுதல்
13. ‘சகல ஜாதியாரிலும் மீதியானவர்கள்’ யார்?
13 சகரியாவின் தீர்க்கதரிசனம், 14-ம் அதிகாரம், 16-ம் (தி.மொ.) வசனத்தில் இவ்வாறு தொடருகிறது: “எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த சகல ஜாதியாரிலும் மீதியான யாவரும் சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவைத் தொழுதுகொள்வதற்கும் கூடார உற்சவத்தை ஆசரிப்பதற்கும் வருஷாவருஷம் வருவார்கள்.” இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு வரையாகத் தொடர்ந்து வாழ்ந்து, உண்மையான வணக்கத்துக்குச் சத்துருக்களாக இருப்பதாய் நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிற இன்று உயிரோடிருப்போரான எல்லா ஜனங்களும், பைபிள் குறிப்பிடுகிற பிரகாரம், “நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.” (2 தெசலோனிக்கேயர் 1:7-10; மத்தேயு 25:31-33, 46-ஐயும் காண்க.) அவர்களுக்கு உயிர்த்தெழுதல் இராது. அவ்வாறெனில், “மீதியான யாவரும்” என்பது, ஜனத்தாரில் கடவுளுடைய கடைசி போருக்கு முன்பாக மரித்தவர்களும் பைபிளில் ஆதாரங்கொண்ட உயிர்த்தெழுதலின் நம்பிக்கையுடையோருமான உறுப்பினரை உட்படுத்துவதாகத் தெரிகிறது. “[“ஞாபகார்த்த,” NW] பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்,” என்று இயேசு வாக்களித்தார்.—யோவான் 5:28, 29.
14. (அ) உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் நித்திய ஜீவனையடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? (ஆ) யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து உண்மையான வணக்கத்தை அனுசரிக்க மறுப்போருக்கு என்ன ஏற்படும்?
14 உயிர்த்தெழுப்பப்பட்ட இவர்கள் யாவரும், தங்கள் உயிர்த்தெழுதல் ஆக்கினைக்கு ஏதுவாக இராமல் ஜீவனுக்கு ஏதுவானதாக முடிவடையும்படி ஒன்றை செய்ய வேண்டும். யெகோவாவினுடைய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களுக்கு அவர்கள் வந்து, இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலில் பணிந்து தொழுதுகொள்ள வேண்டும். உயிர்த்தெழுப்பப்பட்டவர்களில் இதைச் செய்ய மறுக்கும் எவரும் தற்கால தேசத்தினருக்கு ஏற்படும் அதே வாதையை அனுபவிப்பர். (சகரியா 14:18) உயிர்த்தெழுப்பப்பட்ட எத்தனை பேர், மாதிரி முன்குறித்த உண்மையான கூடாரப் பண்டிகையை ஆசரிப்பதில், திரள் கூட்டத்தாரோடு மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொள்வரென்பதை யார் அறிவர்? சந்தேகமில்லாமல், பலர் அவ்வாறு செய்வர், அதன் பலனாக, யெகோவாவின் ஆவிக்குரிய பெரிய ஆலயம் இன்னும் அதிக மகிமையுள்ளதாகும்!
மாதிரி முன்குறித்த உண்மையான கூடாரப் பண்டிகை
15. (அ) பூர்வ இஸ்ரவேலரின் கூடாரப் பண்டிகையினுடைய முக்கியமான அம்சங்களில் சில யாவை? (ஆ) அந்தப் பண்டிகையின்போது ஏன் 70 காளைகள் பலிசெலுத்தப்பட்டன?
15 ஒவ்வொரு ஆண்டிலும் இந்தக் கூடாரப் பண்டிகையை ஆசரிக்கும்படி பூர்வ இஸ்ரவேலர் கட்டளையிடப்பட்டனர். இது ஒரு வாரம் நீடித்தது, அவர்கள் தங்கள் அறுப்பைக் கூட்டிச் சேர்த்ததன் முடிவில் வந்தது. நன்றி செலுத்துவதற்குரிய மகிழ்ச்சியுள்ள காலமாக இது இருந்தது. ஒரு வார காலத்துக்கு, அவர்கள், மரங்களின் இலைகளால், முக்கியமாய் ஓலைகளால் மூடப்பட்ட தற்காலிக கூடாரங்களில் வாழ வேண்டியிருந்தது. கடவுள் எவ்வாறு அவர்களுடைய முற்பிதாக்களை எகிப்திலிருந்து காப்பாற்றியிருந்தார் என்றும், வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்கு அவர்கள் போய்ச் சேரும் வரையில் வனாந்தரத்தில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் அலைந்து திரிகையில் அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தபோது அவர்களை எவ்வாறு அவர் கவனித்துக் காத்தார் என்பதையும் இந்தப் பண்டிகை இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டினது. (லேவியராகமம் 23:39-43) இந்தப் பண்டிகையின்போது, ஆலய பலிபீடத்தின்மீது 70 காளைகள் பலிசெலுத்தப்பட்டன. பண்டிகையின் இந்த அம்சமானது, இயேசு கிறிஸ்து நடப்பித்த பரிபூரணமும் பூர்த்தியானதுமான உயிரைக் காக்கும் ஊழியத்தின் தீர்க்கதரிசன முன்குறிப்பாக இருந்ததெனத் தோன்றுகிறது. அவருடைய மீட்பின் கிரய பலியினுடைய நன்மைகள், நோவாவிலிருந்து தலைமுறையாக வந்த மனிதவர்க்கத்தின் 70 குடும்பத்தாரினுடைய எண்ணற்ற சந்ததியாருக்கு முடிவில் செல்லக்கூடும்.—ஆதியாகமம் 10:1-29; எண்ணாகமம் 29:12-34; மத்தேயு 20:28.
16, 17. (அ) மாதிரி முன்குறித்த உண்மையான கூடாரப் பண்டிகை எப்போது தொடங்கினது, அது எவ்வாறு தொடர்ந்தது? (ஆ) இந்தக் கொண்டாட்டத்தில் திரள் கூட்டத்தார் எவ்வாறு பங்குகொள்கின்றனர்?
16 இவ்வாறு இந்தப் பூர்வ கூடாரப் பண்டிகை, மீட்கப்பட்ட பாவிகளை யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்துக்குள் மகிழ்ச்சியுடன் கூட்டிச் சேர்ப்பதைக் குறிப்பிட்டுக் காட்டினது. இந்தப் பண்டிகையின் நிறைவேற்றம் பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தேயின்போது, ஆவிக்குரிய இஸ்ரவேலரைக் கிறிஸ்தவ சபைக்குள் மகிழ்ச்சியுடன் கூட்டிச் சேர்ப்பது ஆரம்பித்ததோடு தொடங்கினது. (அப்போஸ்தலர் 2:41, 46, 47) அபிஷேகஞ்செய்யப்பட்ட இவர்கள், தங்களுடைய உண்மையான ‘குடியிருப்போ பரலோகத்திலிருப்பதால்,’ சாத்தானுடைய உலகத்தில் தாங்கள் ‘பரதேசிகளாக’ இருந்தனர் என்பதை மதித்துணர்ந்தனர். (1 பேதுரு 2:11; பிலிப்பியர் 3:20) அந்த மகிழ்ச்சியான பண்டிகை, கிறிஸ்தவமண்டலம் உருவாகியதில் விளைவடைந்த விசுவாசதுரோகத்தால் தற்காலிகமாக மறைக்கப்பட்டது. (2 தெசலோனிக்கேயர் 2:1-3) எனினும், 1919-ல் ஆவிக்குரிய இஸ்ரவேலரின் 1,44,000 பேரில் கடைசியாக மீந்திருக்கும் உறுப்பினரை மகிழ்ச்சியுடன் கூட்டிச் சேர்ப்பதோடு இந்தப் பண்டிகை திரும்பவும் தொடங்கப்பட்டது, அதைப் பின்தொடர்ந்து வெளிப்படுத்துதல் 7:9-ன் சர்வதேச திரள் கூட்டத்தார் கூட்டிச் சேர்க்கப்படுகின்றனர்.
17 திரள் கூட்டத்தார் தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருப்பதாகச் சித்தரித்துக் காட்டப்படுகின்றனர். இது, மாதிரி முன்குறித்த உண்மையான கூடாரப் பண்டிகையை அவர்களும் மகிழ்ச்சியுடன் ஆசரிக்கிறவர்களாக இருக்கின்றனரெனக் காட்டுகிறது. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக அவர்கள், மேலுமதிக வணக்கத்தாரை யெகோவாவின் ஆலயத்துக்குள் கூட்டிச் சேர்க்கும் ஊழியத்தில் மகிழ்ச்சியுடன் பங்குகொள்கின்றனர். மேலும், தாங்கள் பாவிகளாக இருப்பதால், பூமியில் நிலையாக வாழும் உரிமைகள் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணருகின்றனர். எதிர்காலத்தில் உயிர்த்தெழுப்பப்படுவோரோடுகூட, அவர்கள், கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவில் மனித பரிபூரணத்தைத் தாங்கள் அடையும் வரையில், கிறிஸ்துவினுடைய மீட்பின் கிரய பலியில் தொடர்ந்து விசுவாசம் காட்டி வரவேண்டும்.—வெளிப்படுத்துதல் 20:5.
18. (அ) இயேசு கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவில் என்ன நடக்கும்? (ஆ) யெகோவாவின் உண்மையான வணக்கம் முடிவில் எவ்வாறு வெற்றிசிறக்கும்?
18 அப்போது, பூமியிலிருக்கும் கடவுளுடைய வணக்கத்தார், பரலோக ஆசாரியத்துவத்தின் தேவை இல்லாமல் அவருக்கு முன்பாக மனித பரிபூரணத்தில் நிற்பார்கள். இயேசு கிறிஸ்து ‘தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுக்கும்’ சமயம் வந்திருக்கும். (1 கொரிந்தியர் 15:24) பரிபூரணமாக்கப்பட்ட மனித இனத்தைச் சோதிப்பதற்கு, சாத்தான் “கொஞ்சக்காலம்” விடுதலையாக்கப்படுவான். உண்மையற்றோராக இருப்போர் எவரும், சாத்தானோடும் அவனுடைய பேய்களோடும் என்றென்றுமாக அழிக்கப்படுவார்கள். உண்மையுள்ளோராக நிலைத்திருப்பவர்களுக்கு நித்திய ஜீவன் அளிக்கப்படும். பூமிக்குரிய பரதீஸில் அவர்கள் நிலையான குடியிருப்பாளராவார்கள். இவ்வாறு, மாதிரி முன்குறித்த உண்மையான கூடாரப் பண்டிகை, மகிமையான வெற்றிகரமுள்ள முடிவுக்கு வந்திருக்கும். யெகோவாவுக்கு நித்திய மகிமையும் மனிதவர்க்கத்துக்கு நித்திய மகிழ்ச்சியும் உண்டாக, உண்மையான வணக்கம் வெற்றிசிறந்திருக்கும்.—வெளிப்படுத்துதல் 20:3, 7-10, 14, 15.
[அடிக்குறிப்புகள்]
a சகரியா 14-ம் அதிகாரத்தின்பேரில் வசனவசனமான விளக்கவுரைக்கு, 1972-ல் உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட பரதீஸ் மனிதவர்க்கத்துக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டது—தேவாட்சியால்! (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் 21 மற்றும் 22-ம் அதிகாரங்களைப் பாருங்கள்.
b தற்கால நிதனீமியரின்பேரில் மேலுமான தகவலைப் பெற, காவற்கோபுரம், ஏப்ரல் 15, 1992, பக்கம் 16-ஐக் காண்க.
மறுபார்வைக்குரிய கேள்விகள்
◻ முதல் உலகப் போரின்போது “எருசலேம்” எவ்வாறு தாக்குதலின்கீழ் இருந்தது?—சகரியா 14:2.
◻ 1919 முதற்கொண்டு கடவுளுடைய ஜனங்களுக்கு என்ன ஏற்பட்டிருக்கிறது?
◻ மாதிரி முன்குறித்த உண்மையான கூடாரப் பண்டிகையின் ஆசரிப்பில் இன்று யார் பங்குகொள்கின்றனர்?
◻ உண்மையான வணக்கம் எவ்வாறு முழுமையாக வெற்றிசிறக்கும்?
[பக்கம் 23-ன் படம்]
கூடாரப் பண்டிகை ஆசரிப்பின்போது குருத்தோலைகள் பயன்படுத்தப்பட்டன