சகரியா
14 “இதோ, யெகோவாவின் நாள் வருகிறது! அப்போது, உன்னிடம்* கைப்பற்றப்பட்ட பொருள்கள் உனக்கு முன்னாலேயே பங்குபோடப்படும். 2 எருசலேமுடன் போர் செய்ய நான் எல்லா தேசங்களையும் ஒன்றுகூட்டுவேன். அந்த நகரம் கைப்பற்றப்படும், வீடுகள் சூறையாடப்படும், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். நகர ஜனங்களில் பாதிப் பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள். மீதிப் பேர் நகரத்திலேயே விடப்படுவார்கள்.
3 யெகோவா புறப்பட்டுப் போய், முன்பு எதிரிகளோடு போர் செய்தது போலவே+ அந்தத் தேசங்களோடு போர் செய்வார்.+ 4 அந்த நாளில், எருசலேமுக்குக் கிழக்கிலுள்ள ஒலிவ மலைமேல் அவர் நிற்பார்.+ அது கிழக்கிலிருந்து மேற்குவரை இரண்டாகப் பிளக்கும். அதன் நடுவே மிகப் பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும். மலையின் ஒருபாதி வடக்கே நகர்ந்து போகும், மறுபாதி தெற்கே நகர்ந்து போகும். 5 ஆத்சேல்வரை நீண்டிருக்கும் என்னுடைய மலைகளின் பள்ளத்தாக்குக்கு நீங்கள் தப்பித்து ஓடுவீர்கள். யூதாவின் ராஜாவான உசியாவின் காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது+ தப்பித்து ஓடியது போலவே ஓடுவீர்கள். அப்போது, என் கடவுளான யெகோவா வருவார், பரிசுத்தவான்கள் எல்லாரும் அவரோடு வருவார்கள்.+
6 அந்த நாளில், பிரகாசமான ஒளியே இருக்காது;+ எல்லாம் உறைந்துபோகும்.* 7 அந்த நாள் அசாதாரணமான நாள், அது யெகோவாவின் நாள் என்று அழைக்கப்படும்.+ அப்போது, பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசமே இருக்காது. சாயங்காலத்திலும் வெளிச்சமாக இருக்கும். 8 அந்த நாளில், வாழ்வு தரும் தண்ணீர்+ எருசலேமிலிருந்து புறப்பட்டு வரும்.+ அதில் ஒருபாதி கிழக்குக் கடலிலும்,*+ மறுபாதி மேற்குக் கடலிலும்*+ போய்க் கலக்கும். அது கோடைக் காலத்திலும் சரி, குளிர் காலத்திலும் சரி, ஓடிக்கொண்டே இருக்கும். 9 முழு பூமிக்கும் யெகோவா ராஜாவாக இருப்பார்.+ அந்த நாளில், எல்லாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவார்கள்,+ அவருடைய பெயரை மட்டும்தான் புகழ்வார்கள்.+
10 கெபாமுதல்+ எருசலேமுக்குத் தெற்கே உள்ள ரிம்மோன்வரை+ முழு தேசமும் அரபா+ பள்ளத்தாக்கைப் போலாகும். ஆனால் எருசலேம் மேன்மை அடைந்து, அதன் இடத்திலேயே மறுபடியும் குடிமக்களால் நிறைந்திருக்கும்.+ ‘பென்யமீன் நுழைவாசல்’+ தொடங்கி ‘முதல் நுழைவாசல்’ வரையும், அங்கிருந்து ‘மூலை நுழைவாசல்’ வரையும், அனானெயேல் கோபுரம்+ தொடங்கி ராஜாவின் திராட்சரச ஆலைகள் வரையும் ஜனங்கள் நிறைந்திருப்பார்கள். 11 ஜனங்கள் அங்கே குடியிருப்பார்கள். இனி அவர்கள் சாபத்துக்கு ஆளாகி அழிந்துபோக மாட்டார்கள்;+ எருசலேமில் பாதுகாப்பாக வாழ்வார்கள்.+
12 எருசலேமை எதிர்த்துப் போர் செய்கிற எல்லாரையும் யெகோவா பயங்கரமான நோயால் தண்டிப்பார்.+ அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களுடைய சதை அழுகும், அவர்களுடைய கண்கள் இமைகளுக்குள்ளேயே அழுகிப்போகும், அவர்களுடைய நாவுகள் வாய்க்குள்ளேயே அழுகிவிடும்.
13 அந்த நாளில், யெகோவா அவர்கள் நடுவே பெரிய குழப்பத்தை உண்டாக்குவார். ஒவ்வொருவனும் அடுத்தவன்மேல் கை வைப்பான். அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்குவார்கள்.+ 14 எருசலேமில் நடக்கும் போரில் யூதாவும் கலந்துகொள்ளும். சுற்றியுள்ள தேசங்கள் குவித்து வைத்திருக்கிற தங்கமும் வெள்ளியும் துணிமணிகளும் கணக்குவழக்கில்லாமல் வாரிக்கொள்ளப்படும்.+
15 போர் செய்ய வருகிறவர்களைத் தாக்கும் அதேபோன்ற நோய், அந்த முகாம்களில் உள்ள குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகள்,* ஒட்டகங்கள், ஆடுமாடுகள் ஆகியவற்றையும் தாக்கும்.
16 எருசலேமுக்கு எதிராக வருகிற தேசங்களில் மீதியாக இருப்பவர்கள் ராஜாவாகிய பரலோகப் படைகளின் யெகோவாவை வணங்குவதற்கும்,+ கூடாரப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கும்+ வருஷா வருஷம் வருவார்கள்.+ 17 ஆனால், ராஜாவாகிய பரலோகப் படைகளின் யெகோவாவை வணங்குவதற்கு எந்தத் தேசத்தாராவது எருசலேமுக்கு வராமல் போனால், அவர்களுடைய தேசத்தில் மழை பெய்யாது.+ 18 எகிப்து தேசத்தார் வராமல் போனால் அவர்களுடைய தேசத்திலும் மழை பெய்யாது. கூடாரப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு வராத தேசங்களைப் பயங்கரமான நோயால் தண்டிப்பதுபோல் அவர்களையும் யெகோவா தண்டிப்பார். 19 எகிப்தின் பாவத்துக்கும், கூடாரப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு வராத தேசங்களின் பாவத்துக்கும் கிடைக்கப்போகிற தண்டனை இதுதான்.
20 அந்த நாளில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்ற வார்த்தைகள் குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் எழுதப்பட்டிருக்கும். யெகோவாவின் ஆலயத்திலுள்ள சமையல் பாத்திரங்கள்,+ பலிபீடத்துக்கு முன்னால் உள்ள கிண்ணங்களைப்+ போல இருக்கும். 21 எருசலேமிலும் யூதாவிலும் உள்ள சமையல் பாத்திரங்கள் எல்லாமே பரிசுத்தமாக இருக்கும். அவை, பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுக்குச் சொந்தமாக இருக்கும். பலி செலுத்த வருகிற எல்லாரும் அந்தப் பாத்திரங்கள் சிலவற்றில் இறைச்சியை வேக வைப்பார்கள். அந்த நாளில், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தில் கானானியன்* ஒருவனும் இருக்க மாட்டான்.”+