வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: சகரியா 1:1-14:21
யெகோவா தம்முடைய மக்களின் ஆவியைத் தூண்டிவிடுகிறார்
“யெகோவாவுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு” யூதர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்ப வேண்டும் என்று பொ.ச.மு. 538-ன் பிற்பகுதியில் அல்லது பொ.ச.மு. 537-ன் ஆரம்பப்பகுதியில் பெர்சிய அரசனாகிய கோரேசு ஓர் உத்தரவைப் பிறப்பித்தான். (எஸ்றா 1:3) என்றபோதிலும் பொ.ச.மு. 520 வரையிலும் ஆலயம் மீண்டும் கட்டப்படாமலிருந்தது. எனவே, மக்களுடைய ஆவியைத் தூண்டிவிடுவதற்காக ஆகாயுடன் சேர்ந்து வேலை செய்ய யெகோவா சகரியா தீர்க்கதரிசியை எழுப்பினார்.
யெகோவா தேவன் அவர்களை ஆதரிக்கிறார், அவர்களுடைய வேலையை ஆசீர்வதிப்பார் என்று எடுத்துக்கூறுவதன் மூலம் சகரியாவின் ஏவப்பட்ட வார்த்தைகள் அந்த உண்மையுள்ள யூதர்களுக்குப் புத்துயிரளித்தது. இந்தப் பைபிள் புத்தகம் நமக்கும் உற்சாகமூட்டுகிறது, ஏனென்றால் அதில் நம்முடைய காலத்தில் நிறைவேற்றம் காணும் மேசியானிய தீர்க்கதரிசனங்களும் மற்ற தீர்க்கதரிசனங்களும் இருக்கின்றன.a அது மதிப்புமிகுந்த பாடங்களையும் கற்பிக்கிறது.
யெகோவா தம்முடைய மக்களை ஆசீர்வதிக்கிறார்
யெகோவா தம்முடைய மக்களைக் குறித்து அக்கறையாயிருக்கிறார். கடவுள் தங்களை சிட்சிப்பது நியாயமானது என்பதை யூதர்கள் ஒப்புக்கொண்ட பின்பு, சகரியா மூன்று தரிசனங்களைக் காண்கிறான். அவர்கள்பேரில் அவர் தொடர்ந்து அக்கறை காண்பிக்கிறார் என்பதை இவை காண்பிக்கின்றன. முதல் தரிசனத்தில் அவன் குதிரைகளையும் அவற்றில் சவாரி செய்யும் தூதர்களையும் பார்க்கிறான். யூதர்களுக்கு அழிவைக் கொண்டுவந்த தேசங்கள் “அமைதலும் அமரிக்கையுமாய்” இருப்பதைக் கண்டு ஒரு தூதன் கவலைப்படுகிறான். இரண்டாம் தரிசனத்தில் யெகோவா “நாலு கொம்புகளை”—தம்முடைய மக்களைச் சிதறடித்த அரசியல் வல்லமைகளை— விழத்தள்ள தீர்மானிக்கிறார். மூன்றாவது தரிசனம் எருசலேம் மீது யெகோவாவின் அன்பான, பாதுகாப்பான கவனிப்பை விவரிக்கிறது.—1:1–2:13.
கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களை ஒருவரும் தடை செய்ய முடியாது. நான்காவது தரிசனத்தில் யெகோவாவின் மக்களுடைய பிரதான எதிரியாகிய சாத்தான் முழு அளவில் கடிந்துகொள்ளப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 12:10-ஐ ஒப்பிடவும்.) ஐந்தாவது தரிசனத்தில், மலை போன்ற எதிர்ப்புகள் மத்தியிலும் கடவுளுடைய மக்கள் அவருடைய சித்தத்தைச் செய்வார்கள் என்பதை சகரியா கற்றுக்கொள்கிறான். எப்படி? “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.”—3:1–4:14.
கடவுளுடைய ஊழியர்கள் “தீமையை வெறுத்துவிடுகிறார்கள்.” (சங்கீதம் 97:10, 11) ஆறாவது தரிசனத்தில், இதுவரை தண்டிக்கப்படாமலிருந்த பொல்லாதவர்கள் மீது யெகோவா சாபத்தைத் தெரிவிக்கிறார். ஏழாவது தரிசனத்தில், அக்கிரமத்தின் ஒரு சின்னம் பொய்யான பாபிலோனிய மதத்தின் இடமாகிய “சிநேயார் தேசத்துக்குக்” கொண்டுசெல்லப்படுகிறது. அதற்கு நல்லதோர் இடம்! தீமை அதை வெறுக்கும் யெகோவாவின் மக்களுக்குரியதல்ல. அடுத்து சகரியா குதிரை இழுக்கும் நான்கு ரதங்களைக் காண்கிறான்—பூமியிலிருக்கும் கடவுளுடைய ஊழியர்களைப் பாதுகாக்கும் வேலையையுடைய தேவதூதரடங்கிய ஆவி சேனைகள்.—5:1–6:8.
தீர்க்கதரிசன முன் காட்சிகள்
யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேற்றம் கிளர்ச்சியூட்டுவதாயும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாயும் இருக்கிறது. நம்முடைய நாளுக்கான சகரியாவின் தீர்க்கதரிசன முன்காட்சிகளைக் குறித்ததில் இது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்த யூதர்களால் அளிக்கப்பட்ட வெள்ளியும் பொன்னும் கொண்டு அவன் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு ஓர் அழகான கிரீடத்தைச் செய்வதாயிருந்தது. மேலும், “[பாபிலோனில்] தூரத்திலுள்ளவர்கள் வந்து யெகோவாவுடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்,” என்பது போல் 1919-க்குப் பின்பு ஆலய வேலையில் உதவி செய்ய அநேகர் மகா பாபிலோனை விட்டுவந்தனர். உபவாசம் பற்றிய தவறான கருத்துக்களைத் திருத்துதல் எருசலேமுக்கு வரவிருக்கும் சந்தோஷமான நிலை குறித்த விவரத்துக்கு வழிநடத்தியது. “புறஜாதியாரில் பத்து மனுஷர்” உண்மை வணக்கத்தில் ஆவிக்குரிய யூதர்களைச் சேர்ந்துகொள்வார்கள் என்று முன்னறிவிக்கப்பட்டது. (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 7:4-10) “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு” என்கிறார் யெகோவா; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் கழுதையின்மேல் வருகிறார்; அவர் ஜாதிகளுக்குச் “சமாதானம் கூறுவார்.”—6:9–9:11.
கடவுளும் மேய்ப்பர்களும்
கண்காணிகளுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது, வைராக்கியத்துடன் சேவிக்க வேண்டும். தம்முடைய மக்களைப் பாதுகாப்பதாக வாக்குக்கொடுத்த பின்பு, உண்மையற்ற மேய்ப்பர்களுக்கு எதிராக யெகோவா தம்முடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார். கடவுள் தம்முடைய எல்லா உடன்படிக்கையை மீறுகிற அளவில் “மூன்று மேய்ப்பர்கள்” மந்தையைக் கெடுக்கின்றனர். எருசலேம் ஒரு “பாரமான கல்லாகும்.” அவளை தாக்கும் எவரும் “சிதைக்கப்படுவார்கள்.” ஆனால் “யூதாவின் தலைவர்கள்”—கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் மீது கண்காணிப்பைக் கொண்டிருப்பவர்கள்—“எரிகிற தீவட்டி”யைப்போல வைராக்கியத்தில் சிறந்து விளங்க வேண்டும்.—9:12–12:14.
யெகோவா போலிகளை வெறுக்கிறார். கடவுளுடைய சபையில் பொய் பேசுகிறதில் தொடரும் எவரையும் விசுவாச துரோகிகளாக மறுத்து ‘குத்திப்போடுவார்கள்.’ தேசத்தில் “இரண்டு பங்கு” மனுஷர் அழிக்கப்படும், ஆனால் மூன்றாவது பங்கு அக்கினியில் புடமிடப்படும். இதற்கு இணைப்பொருத்தமாக, கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டும் பெரும்பான்மையினர்—கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்தவர்கள்—யெகோவாவால் அழிக்கப்படுவார்கள். 1919 முதல் உண்மையுள்ள அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவ சிறுபான்மையினர் யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொண்டு, அவருடைய பரிசுத்தப்படுத்துதல் முறைக்குக் கீழ்ப்பட்டார்கள். —13:1–9.
யெகோவாவின் மக்கள் அவர் அளிக்கும் பாதுகாப்பில் நம்பியிருக்கலாம். பகைவர்கள் உண்மை வணக்கத்தாரை அழித்திட முயலும்போது, கடவுள் தம்முடைய மக்களைப் பாதுகாத்து சாத்தானின் கூட்டத்தை நிர்மூலமாக்குவார். ஒலிவ மலையை இரண்டாக பிளப்பது அடையாள அர்த்தமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் விளைவடைகிறது. அதில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் யெகோவாவின் சர்வலோக ராஜ்யத்தின் கீழும் அவருடைய குமாரனாகிய மேசியானிய ஆட்சியின் கீழும் பாதுகாப்பை அனுபவிப்பர். கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு வெளிச்சம் இருக்கும், தேசங்களுக்கு இருள் கிடக்கும். மனிதவர்க்கம் கண்டிப்பாக தெரிந்தெடுக்க வேண்டும். ஒன்று அவருடைய மக்களோடு சேர்ந்து யெகோவாவைத் துதியுங்கள், அல்லாவிடில், நித்திய அழிவை அனுபவியுங்கள். (w89 6⁄15)
[அடிக்குறிப்புகள்]
a சகரியா தீர்க்கதரிசனத்தின் வசன விளக்கம் உவாட்ச்டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்த மனிதவர்க்கத்துக்குப் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுகிறது—தேவாட்சிமுறை மூலம்! (Paradise Restored to Mankind—By Theocracy!) என்ற புத்தகத்தில் காணப்படுகிறது.
[பக்கம் 32-ன் பெட்டி]
வேதவசனங்களை ஆராய்தல்
○ 1:3—யூதர்கள் பாபிலோனிலிருந்து பொ.ச.மு. 537-ல் திரும்பியபோதிலும், அவர்கள் முழு ஆத்துமோவோடுகூடிய கீழ்ப்படிதலுடன் யெகோவாவிடம் திரும்பும்படியாகத் துரிதப்படுத்தப்பட்டனர். இந்தத் திரும்புதலுக்கான வெளிப்படையான அத்தாட்சியை, ஆலயம் கட்டிமுடிக்கப்படும்வரை அந்தக் கட்டும் பணியில் ஈடுபடுவதன் மூலம் அளிப்பார்கள்.
○ 2:1–5—எருசலேமைச் சுற்றி ஒரு பாதுகாப்பான மதிலைக் கட்டுவதற்காக அந்த இளம் மனிதன் அளந்திருக்கலாம். ஆனால் அந்த நகரத்தின் வளர்ச்சி ஒரு மதிலால் கட்டுப்படுத்தப்படுவதற்கல்ல என்பதைக் கடவுளுடைய தூதன் குறிப்பிட்டான். எருசலேமின் தொடர்ச்சியான வளர்ச்சியை எந்த மனிதனும் தடை செய்ய முடியாது. பரலோக புதிய எருசலேமின் பாகமாக இருக்கப்போகும் அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானவர்களை இன்று அவர் பாதுகாக்கிறது போல யெகோவா தாமே அதன் பாதுகாப்பு.—வெளிப்படுத்துதல் 21:2.
○ 6:11–15—பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை முடிசூட்டுவதுதானே அவனை ஓர் அரச–ஆசாரியனாக ஆக்கிடவில்லை. மாறாக, யோசுவாவை மேசியாவுக்கு ஒரு தீர்க்கதரிசன படமாக ஆக்கியது. அவரில்தானே “கிளை” பற்றிய தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறியது. (சகரியா 3:8; எரேமியா 23:5) எருசலேமில் ஆலயத்தைத் திரும்ப கட்டும் பணியை முடித்திட யோசுவா உதவினான். பரலோகத்திலிருக்கும் அரச-ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய ஆலயத்தில் வேலையை முற்றுபெறச் செய்கிறார்.
○ 11:4–11—செம்மறியாடுகள் போன்ற மக்களே “கொலையுண்கிற ஆடுகள்,” அதாவது அரசாங்க மேய்ப்பர்கள் அவர்களை பட்சித்தார்கள். ஒரு கோல் “இனிமை” என்றும் மற்றொரு கோல் “ஒற்றுமை” என்றும் அழைக்கப்பட, சகரியா ஒரு மேய்ப்பனாக மந்தையை வழிநடத்திட ஒரு கோலையும், கொடிய விலங்குகளைத் துரத்திட ஒரு தடியையும் கொண்டிருக்கிறான். (சங்கீதம் 23:4) அவன் இயேசுவுக்கு முன் நிழலாக இருந்தான். அவர் ஓர் ஆவிக்குரிய மேய்ப்பனாக இருக்க அனுப்பப்பட்டார், ஆனால் யூதர்களால் தள்ளப்பட்டார். சகரியா “இனிமை” என்ற கோலை உடைத்ததுபோல, கடவுள் யூதர்களுடன் நல்லவிதத்தில் தொடர்பு கொள்வதை விட்டுவிட்டார், அவர்களோடிருந்த உடன்படிக்கையை முறித்துக்கொண்டார். சகரியா “ஒற்றுமை” என்ற கோலை உடைத்ததுபோல, கடவுள் இஸ்ரவேலுடன் செய்த நியாயப்பிரமாண உடன்படிக்கையை ரத்து செய்த காரியம், யூதர்களுக்கு ஒரு தேவாட்சி முறைபடியான ஐக்கியத்தின் கட்டு இல்லாமல் ஆக்கினது. பொ.ச. 70-ல் எருசலேம் ரோமரால் அழிக்கப்படுவதுடன்கூட அவர்கள் மதசம்பந்தமாக ஐக்கியப்படாதிருத்தல் அவர்களுக்குப் பேரழிவில் விளைந்தது.
○ 12:11—“ஆதாத்ரிம்மோனின் புலம்பல்” யூதாவின் அரசனாகிய யோசியாவின் மரணத்தின்பேரில் துக்கித்தலைக் குறிப்பிடக்கூடும். ஆதாத்ரிம்மோன் மெகிதோ பள்ளத்தாக்கில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். அங்குதான் பார்வோன் நேக்கோவுடன் போர்புரிந்து மரித்தான். யோசியாவின் மரணம் துக்கிக்கப்பட்டது. எரேமியாவும் பாடகரும் அரசனைத் தங்கள் புலம்பலில் குறிப்பிடுகிறார்கள்.—2 நாளாகமம் 35:20–25.
[பக்கம் 32-ன் பெட்டி]
சகரியா முன்னறிவித்தபடி, ஆவிக்குரிய இஸ்ரவேலுடன் புறஜாதியாரைச் சேர்ந்த மக்கள் கூட்டுறவு கொள்கிறார்கள்