எரேமியா
23 “என் மேய்ச்சல் நிலத்திலுள்ள ஆடுகளை அழித்துக்கொண்டும் விரட்டியடித்துக்கொண்டும் இருக்கிற மேய்ப்பர்களுக்குக் கேடுதான் வரும்” என்று யெகோவா சொல்கிறார்.+
2 அவருடைய ஜனங்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என் ஆடுகளை அக்கறையாகப் பார்த்துக்கொள்ளவில்லை. அவற்றை விரட்டியடித்துக்கொண்டே இருந்தீர்கள். அவற்றைச் சிதறி ஓட வைத்தீர்கள்.”+
“நீங்கள் செய்த அக்கிரமங்களுக்காக நான் உங்களைத் தண்டிக்கப்போகிறேன்” என்று யெகோவா சொல்கிறார்.
3 “எங்கெல்லாம் என் ஆடுகளைச் சிதறிப்போக வைத்தேனோ+ அங்கிருந்தெல்லாம் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் மேய்ச்சல் நிலத்துக்கே மறுபடியும் கொண்டுவருவேன்.+ அவை ஏராளமாகப் பெருகும்.+ 4 அவற்றை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிற மேய்ப்பர்களை நியமிப்பேன்.+ என் ஆடுகள் பயமோ திகிலோ இல்லாமல் நிம்மதியாக இருக்கும். அவற்றில் ஒன்றுகூட காணாமல் போகாது” என்று யெகோவா சொல்கிறார்.
5 யெகோவா சொல்வது இதுதான்: “காலம் வருகிறது. அப்போது, தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் விவேகத்தோடும்* நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+ 6 அவருடைய நாட்களில் யூதா ஜனங்கள் விடுவிக்கப்படுவார்கள்,+ இஸ்ரவேல் ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அவர் அழைக்கப்படுவார்.”
7 “ஆனால், காலம் வருகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அதுமுதல் ஜனங்கள், ‘இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’*+ என்று சொல்ல மாட்டார்கள். 8 அதற்குப் பதிலாக, ‘இஸ்ரவேல் வம்சத்தாரை வடக்கு தேசத்திலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டிருந்த மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்றே சொல்வார்கள். அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்கள் வாழ்வார்கள்.”+
9 தீர்க்கதரிசிகளுக்கு நான் சொல்வது இதுதான்:
என் இதயம் நொறுங்கிவிட்டது.
என் எலும்புகளெல்லாம் நடுங்குகின்றன.
யெகோவாவின் பரிசுத்தமான வார்த்தைகளைக் கேட்டபோது,
குடிபோதையில் இருக்கிறவனைப் போல நான் ஆகிவிட்டேன்.
திராட்சமதுவைக் குடித்துத் தள்ளாடுகிறவனைப் போல ஆகிவிட்டேன்.
10 கடவுளுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான் தேசத்தில் நிறைந்திருக்கிறார்கள்.+
சாபத்தினால் தேசமே சோகமாக இருக்கிறது.+
வனாந்தரத்திலுள்ள மேய்ச்சல் நிலங்கள் காய்ந்துவிட்டன.+
ஜனங்கள் படுமோசமான வழியில் போகிறார்கள்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
11 “தீர்க்கதரிசிகளும் சரி, குருமார்களும் சரி, துரோகம் செய்கிறார்கள்.*+
என் வீட்டிலேயே அக்கிரமம் செய்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
தண்டனைத் தீர்ப்பின் வருஷத்திலே
நான் அவர்களை அழிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
13 “சமாரியாவின்+ தீர்க்கதரிசிகள் அருவருப்பான காரியங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனங்கள் சொல்கிறார்கள்.
என் ஜனங்களான இஸ்ரவேலர்களைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறார்கள்.
14 எருசலேமின் தீர்க்கதரிசிகள் படுமோசமான காரியங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் முறைகேடான உறவு வைத்திருக்கிறார்கள்;+ பொய் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.+
மற்றவர்களை அக்கிரமம் செய்யத் தூண்டிவிடுகிறார்கள்.
கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தாமல் இருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள் எல்லாரும்
சோதோம்,+ கொமோரா+ ஜனங்களைப் போல இருக்கிறார்கள்.”
15 அதனால், பரலோகப் படைகளின் யெகோவா அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகச் சொல்வது இதுதான்:
“இந்த ஜனங்களுக்குச் சாப்பிட எட்டியையும்,
குடிக்க விஷத் தண்ணீரையும் கொடுப்பேன்.+
ஏனென்றால், எருசலேமின் தீர்க்கதரிசிகளுடைய பேச்சைக் கேட்டு தேசமே என்னைவிட்டு விலகுகிறது.”*
16 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“அந்தத் தீர்க்கதரிசிகள் உங்களுக்குச் சொல்லும் தீர்க்கதரிசனங்களைக் கேட்காதீர்கள்.+
அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.*
17 என்னை மதிக்காதவர்களிடம்,
‘“நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்’ எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே போகிறவர்களிடம்,
‘உங்களுக்கு எந்தக் கெடுதலும் வராது’+ என்று சொல்கிறார்கள்.
18 அவர்களில் யார் யெகோவாவின் நண்பராக இருந்து,
அவருடைய வார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொண்டார்கள்?
அவர்களில் யார் அவர் பேசுவதைக் கவனித்துக் கேட்டார்கள்?
19 இதோ! யெகோவாவின் கோபம் புயல்காற்றாய் வீசும்.
கெட்டவர்களின் தலைமேல் அது சூறாவளியாகச் சுழற்றியடிக்கும்.+
20 நினைத்ததைச் செய்து முடிக்கும்வரை
யெகோவாவின் கோபம் தணியாது.
கடைசி நாட்களில் இதை நன்றாகப் புரிந்துகொள்வீர்கள்.
21 நான் அந்தத் தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை, அவர்களாகவே முந்திக்கொண்டு போனார்கள்.
நான் அவர்களிடம் பேசவில்லை, அவர்களாகவே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+
22 அவர்கள் என் நண்பர்களாக இருந்திருந்தால்
என் ஜனங்களுக்கு என்னுடைய வார்த்தைகளைச் சொல்லியிருப்பார்கள்.
கெட்ட வழியையும் அக்கிரமங்களையும் விட்டுத் திருந்த அவர்களுக்கு உதவியிருப்பார்கள்.”+
23 “நான் பக்கத்தில் இருப்பதை மட்டும் பார்க்கிற கடவுளா? தூரத்தில் இருப்பதையும் பார்க்கிற கடவுள் இல்லையா?” என்று யெகோவா கேட்கிறார்.
24 “என் கண்ணில் படாதபடி மனுஷன் எங்காவது ஒளிந்துகொள்ள முடியுமா?”+ என்று யெகோவா கேட்கிறார்.
“வானத்திலும் பூமியிலும் இருக்கிற எதுவுமே என் பார்வைக்குத் தப்பாதே”+ என்று யெகோவா சொல்கிறார்.
25 “என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது! எனக்கு ஒரு கனவு வந்தது!’+ என்று சொல்வதைக் கேட்டேன். 26 எவ்வளவு காலம்தான் இந்தத் தீர்க்கதரிசிகள் இப்படிப் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்? இவர்கள் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள்.+ 27 என் ஜனங்களுடைய முன்னோர்கள் பாகாலை+ வணங்கி என் பெயரை மறந்துவிட்டது போல இவர்களும் என் பெயரை மறந்துவிட வேண்டும் என்பதற்காக இந்தத் தீர்க்கதரிசிகள் தங்களுடைய கனவுகளைப் பற்றி இவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 28 கனவு கண்ட தீர்க்கதரிசிகள் அந்தக் கனவைச் சொல்லட்டும். ஆனால், என்னுடைய செய்தியைப் பெற்றவர்கள் அதை உண்மையோடு சொல்லட்டும்.”
“வைக்கோலும் தானியமும் ஒன்றா?” என்று யெகோவா கேட்கிறார்.
29 “என்னுடைய வார்த்தை நெருப்பு போலவும்,+ பாறையை உடைக்கிற சம்மட்டி போலவும்+ இருக்கிறது, அல்லவா?” என்று யெகோவா கேட்கிறார்.
30 “மற்றவர்களிடம் என் வார்த்தைகளை மாற்றிப் பேசுகிற*+ தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
31 “‘கடவுள் சொல்கிறார்!’+ என்று தாங்களாகவே சொல்லிக்கொள்கிற தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
32 “கனவு கண்டதாகக் கதையடித்து, பெருமையடித்து என் ஜனங்களை ஏமாற்றுகிற தீர்க்கதரிசிகளை+ நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
“ஆனால், நான் அவர்களை அனுப்பவோ அவர்களுக்குக் கட்டளை கொடுக்கவோ இல்லை. அதனால், அவர்கள் இந்த ஜனங்களுக்கு எந்த விதத்திலும் நல்லது செய்ய மாட்டார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
33 “இந்த ஜனங்களிலோ தீர்க்கதரிசிகளிலோ குருமார்களிலோ ஒருவன் உன்னிடம், ‘யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறது!’* என்று சொன்னால், ‘“நீங்கள் எல்லாரும்தான் அவருக்குப் பாரமாக இருக்கிறீர்கள்! நான் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்’ எனச் சொல்ல வேண்டும். 34 இந்த ஜனங்களிலோ தீர்க்கதரிசிகளிலோ குருமார்களிலோ ஒருவன், ‘யெகோவாவின் செய்திதான் பாரமாக இருக்கிறது’ என்று சொன்னால் நான் அவனையும் அவன் குடும்பத்தாரையும் தண்டிப்பேன். 35 நீங்கள் உங்களுடைய சகோதரனிடமும் மற்றவர்களிடமும், ‘யெகோவா என்ன சொல்கிறார்? யெகோவாவின் செய்தி என்ன?’ என்று கேட்கிறீர்கள். 36 அதேசமயத்தில், யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறதென்று சொல்கிறீர்கள். இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள். உங்களுடைய வார்த்தைகள்தான் பாரமாக இருக்கின்றன. ஏனென்றால், நம்முடைய கடவுளும் உயிருள்ள கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொன்ன வார்த்தைகளை நீங்கள்தான் மாற்றிப் பேசுகிறீர்கள்.
37 நீ தீர்க்கதரிசியிடம், ‘யெகோவா உன்னிடம் என்ன சொன்னார்? யெகோவாவின் செய்தி என்ன?’ என்று கேட்டுவிட்டு, 38 ‘“யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டு இருந்தால், யெகோவா உனக்குச் சொல்லும் செய்தி இதுதான்: “‘யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறது!’ என்று நீ சொல்லக் கூடாதென நான் சொல்லியும், நீ ‘யெகோவாவின் செய்தி பாரமாக இருக்கிறது!’ என்று சொல்வதால், 39 நான் உன்னை என் முன்னாலிருந்து தூக்கியெறிந்துவிடுவேன். உனக்கும் உன் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த நகரத்தை அழித்துவிடுவேன். 40 நீ என்றென்றைக்கும் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகிப் போவாய். உனக்கு வரும் அவமானம் ஒருநாளும் மறக்கப்படாது”+ என்று சொல்ல வேண்டும்.’”