‘பாரமான யாவற்றையும் விலக்கி வைக்கக்கடவோம்’
“எனக்கு வருத்தமாகவும் சோர்வாகவும் இருக்கிறது,” என்பதாக மேரி புலம்பினாள். கிறிஸ்தவ பொறுப்புகளின் சுமையைக் குறிப்பிட்டு இந்தக் கிறிஸ்தவப் பெண் மேலுமாக இப்படியாகச் சொன்னாள்: “நண்பர்கள் சலிப்படைந்துவிடுவதை நான் காண்கிறேன். நானும்கூட களைப்பையும் அழுத்தத்தையும் உணருகிறேன். தயவுசெய்து ஏன் என்பதை புரிந்துகொள்ள எனக்கு உதவுங்கள்.”
நீங்களும்கூட அழுத்தத்தின் கீழ் இருப்பதாக, உங்கள் தேவராஜ்ய பொறுப்புகளுக்குப் போதிய கவனம் செலுத்த மிகவும் களைப்பாக இருப்பதாக உணருகிறீர்களா? கிறிஸ்தவ ஊழியம் சில சமயங்களில் ஒரு பாரமான சுமையாக, தாங்க இயலாத பளுவாக தோன்றுகிறதா? அநேக உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் சோர்வான காலப்பகுதிகளை அனுபவிக்கிறார்கள், ஏனென்றால் நம்முடைய சந்தோஷத்தைக் கெடுக்கக்கூடிய எதிர்மறையான சக்திகள் எப்போதும் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. மெய்க் கிறிஸ்தவனாக இன்று இருப்பது உண்மையில் ஒரு சவாலாக இருக்கிறது. இதன் காரணமாக, சில சமயங்களில் சிலர் கிறிஸ்தவ ஊழியம் பாரமான ஒரு சுமையாக இருப்பதாக உணரக்கூடும்.
காரணத்தைக் கண்டுபிடித்தல்
யெகோவா நம்மிடம் நியாயமில்லாத காரியங்களைக் கேட்கவில்லை என்பதை வேதவசனங்கள் தெளிவாக்குகின்றன. கடவுளுடைய “கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” என்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னார். (1 யோவான் 5:3) அதேவிதமாகவே இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:29, 30) யெகோவாவை நாம் சேவிப்பதில் அளவுக்கு அதிகமாக சுமையேற்றப்பட்டவர்களாக அல்லது பாரஞ்சுமக்கிறவர்களாக உணருவது யெகோவாவின் சித்தம் அல்ல என்பது தெளிவாக இருக்கிறது.
அப்படியென்றால் ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவன் எவ்வாறு தன்னுடைய கிறிஸ்தவ உத்தரவாதங்களை பாரமான ஒரு சுமையாக கருத ஆரம்பிக்கக்கூடும்? பல்வேறு அம்சங்கள் உட்பட்டிருக்கின்றன. அப்போஸ்தலனாகிய பவுலின் இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்: “பாரமான யாவற்றையும் விலக்கி வைத்து . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே [சகிப்புத்தன்மையோடே, NW] ஓடக்கடவோம்.” (எபிரெயர் 12:1) ஒரு கிறிஸ்தவன் சில சமயங்களில் தேவையற்ற சுமைகளைச் சுமந்துகொண்டிருக்கக்கூடும் என்பதை அப்போஸ்தனாகிய பவுலின் வார்த்தைகள் தெரிவிக்கின்றன. இது கட்டாயமாகவே வினைமையான பாவங்களை உட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் ஒரு கிறிஸ்தவன் ஒரு தீர்மானத்தைச் செய்கையில் தன்னுடைய வாழ்க்கையை வெகுவாக சிக்கலாக்கிவிடக்கூடிய தவறுகளைச் செய்துவிடக்கூடும். இது நமக்கு முன்னால் நியமிக்கப்பட்டிருக்கும் ஓட்டத்தில் ஓடுவதை நமக்குக் கடினமாக்கிவிடும்.
பொருள் சம்பந்தமான காரியங்களைப் பற்றிய சமநிலையான ஒரு நோக்குநிலை
உதாரணத்துக்கு உலகப்பிரகாரமான வேலையைப் பற்றிய விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அநேக தேசங்களில், பொருளாதார நிலைமைகள் நீண்ட மணிநேரங்கள் வேலை செய்வதைத் தவிர வேறு எந்த தெரிவையும் ஒரு கிறிஸ்தவனுக்கு விட்டு வைக்காதிருக்கக்கூடும். ஆனால், அநேகமாக, மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற அல்லது ஆடம்பரத்தைக் கூட்டுவதற்காகவே வேலையை எடுத்துக் கொள்கிறார்கள். தங்கள் உண்மையான தேவைகளை மறு மதிப்பீடு செய்வதன் மூலம் சில கிறிஸ்தவர்கள், தங்கள் வேலை நிலையில் மாற்றங்களைச் செய்வது ஞானமானதாக இருப்பதைக் கண்டிருக்கிறார்கள். இதுவே யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் டெபி மற்றும் அவளுடைய கணவனின் விஷயத்தில் உண்மையாக இருந்தது. அவள் சொல்கிறாள்: “எங்களுடைய பொருளாதார நிலைமை மாறிவிட்டது, இனிமேலும் தொடர்ந்து ஒரு முழு நேர வேலை செய்வதற்கு எனக்கு உண்மையான தேவை இருக்கவில்லை. ஆனால் வேலைக்குப் போவதை நிறுத்துவது கடினமாக இருந்தது.” விரைவில் அவள் அளவுக்கு அதிகமாக செய்யவேண்டியிருந்ததால் அழுத்தத்தை உணர ஆரம்பித்தாள். அவள் விளக்குகிறாள்: “வீட்டு வேலை செய்வதற்கு இருந்த ஒரே நாள் சனிக்கிழமையாக இருந்தது. அடிக்கடி வெளி ஊழியத்துக்குச் செல்ல மனமில்லாதவளாக நான் உணர்ந்தேன். என்னுடைய மனச்சாட்சி என்னைத் தொந்தரவு செய்தது, இருந்தபோதிலும் என் வேலையை நேசித்தேன்! கடைசியாக நான் நிஜத்தை எதிர்ப்பட வேண்டியிருந்தது. ஒரே ஒரு பரிகாரம் மட்டுமே இருந்தது. நான் வேலையை விட்டுவிட்டேன்.” இப்பேர்ப்பட்ட ஒரு பெரிய மாற்றம் சிலருக்குச் சாத்தியமற்றதாக இருக்கலாம் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. என்றபோதிலும், உங்கள் வேலை அட்டவணையைக் கவனமாக ஆராய்வது ஒரு சில மாற்றங்களுக்கான தேவையை வெளிப்படுத்தக்கூடும்.
அனாவசியமான சுமைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கு மற்ற வழிகள் இருக்கக்கூடும். அடிக்கடி நாம் மேற்கொள்ளும் இன்பப் பயணங்கள், விளையாட்டு நடவடிக்கைகள் அல்லது மற்ற பொழுதுபோக்குகள்—தொலைக்காட்சி பார்ப்பதில் செலவழிக்கப்படும் நேரம் உட்பட—குறைத்துக் கொள்வதைப் பற்றி என்ன? இந்தப் பகுதிகளில் விரும்பப்படும் சமநிலையை அடைந்த பின்னும்கூட, இப்படிப்பட்ட சமநிலையைக் காத்துக்கொள்வதற்குத் தொடர்ந்து மீண்டும் சரிப்படுத்தல்களைச் செய்வது அவசியமாயிருக்கலாம்.
நியாயமாயிருத்தல் அத்தியாவசியம்
இப்படிப்பட்ட விஷயங்களில் நியாயமாயிருத்தல் புதிய சூழ்நிலைமைகள் எழுகையில் அவற்றிற்கேற்ப நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள உதவியாயிருக்கும். இவ்விதமாக நம்முடைய ஊழியத்தைப் பற்றிய ஓர் உடன்பாடான நோக்குநிலையை நாம் காத்துக் கொள்ள முடியும்.—எபேசியர் 5:15–17; பிலிப்பியர் 4:5.
மற்றவர்கள் கடவுளுடைய சேவையில் செய்வது போல நீங்களும் செய்வதற்கு உங்களை அழுத்தத்தின் கீழ் காண்கிறீர்களா? இதுவும்கூட உங்களுடைய வாழ்க்கைக்குக் கவலையையும் ஏமாற்றத்தையும் கூட்டக்கூடும். மற்றவர்களுடைய நல்ல முன்மாதிரிகள் அதிகத்தைச் செய்வதற்கு உங்களுக்கு நிச்சயமாகவே உற்சாகமூட்டுவதாக இருக்கையில், நியாயமாயிருத்தல், உங்களுடைய சொந்த சூழ்நிலைமைகளுக்கும் திறமைகளுக்கும் இசைவாக நடைமுறைக்கேற்ற இலக்குகளை வைத்துக்கொள்ள உங்களுக்கு உதவிசெய்யும். வேதவசனம் நமக்கு இவ்விதமாகச் சொல்கிறது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக் கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும் போதல்ல, தன்னையே பார்க்கும் போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.”—கலாத்தியர் 6:4, 5.
உள்ளூர் பழக்க வழக்கங்களும் பாரம்பரியங்களும்கூட நம்முடைய சுமைகளைக் கூட்டக்கூடும். இயேசுவின் நாளில், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட அநேக மதசம்பந்தமான சட்டங்கள் மற்றும் பாரம்பரியங்களைக் கைக்கொள்ள முயற்சித்ததினால், மக்கள் சோர்வுற்றிருந்தனர். இன்று, யெகோவாவின் மக்கள் பொய் மத பாரம்பரியங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். (யோவான் 8:32 ஒப்பிடவும்.) இருந்தபோதிலும், ஒரு கிறிஸ்தவன் அனாவசியமாக உள்ளூர் பழக்கங்களில் அமிழ்ந்துவிடக்கூடாது. உதாரணமாக, சில சமயங்களில் திருமணங்கள் போன்ற வைபவங்களில் விரிவான மிகப் பல பழக்க வழக்கங்கள் உட்பட்டிருக்கக்கூடும். இந்த பழக்க வழக்கங்கள் தவறாக இல்லாதிருக்கலாம், அவை கவர்ச்சியுள்ளதாயும் சுவாரசியமானவையாகவும்கூட இருக்கலாம். என்றபோதிலும் இப்படிப்பட்ட எல்லாக் காரியங்களையும் கடைப்பிடிக்க, ஒரு கிறிஸ்தவனுக்கு நேரமோ அல்லது பணமோ இல்லாமலிருக்கலாம். அவ்விதமாகச் செய்ய முயற்சி செய்வது மற்ற அனாவசியமான சுமைகளைக் கூட்டக்கூடும்.
மார்த்தாள் என்ற பெயருள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்கு இயேசு சென்றபோது என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவருடைய தெய்வீக ஞானத்திலிருந்து முழுமையாக பயனடைவதற்குப் பதிலாக, “மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்தி”ருந்தாள். மிகப் பல வேலைகளினால் அவள் பாரஞ் சுமக்கிறவளாக இருந்தாள். (லூக்கா 10:40) ஆனால் இயேசு அவளிடம், அவருடைய போதகத்திலிருந்து நன்மையடைவதற்காக, சாப்பாடு ஏற்பாடுகளை அவள் எளிமையாக்கிக் கொள்ளலாம் என்று தயவாக யோசனை தெரிவித்தார். (லூக்கா 10:41, 42) உங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் சரியான சமநிலையை முயன்று அடைவதில் நல்ல நிதானிப்பும் நியாயமான தன்மையும் உதவி செய்யும் என்பதை இது நன்றாக விளக்குகிறது.—யாக்கோபு 3:17.
உங்கள் தோழர்களைத் தெரிந்து கொள்ளும்போதுகூட நல்ல நிதானிப்பு தேவைப்படுகிறது. நீதிமொழிகள் 27:3 இவ்வாறு எச்சரிக்கிறது: “கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.” உங்கள் நெருங்கிய கூட்டாளிகள் எப்போதும் உங்கள் சிந்தனையின் மீது பலமான செல்வாக்கைச் செலுத்துகிறவர்களாக இருப்பார்கள். குறைகண்டுபிடிக்க விரைந்து, சபையில் மற்றவர்களை விமர்சிக்கும் ஆட்களோடு தோழமைக் கொள்வது உங்களில் சோர்வு மற்றும் எதிர்மறையான எண்ணங்களின் விதைகளை விதைக்கக்கூடும். (1 கொரிந்தியர் 15:33) இது பிரச்னையாக இருப்பதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் கூட்டாளிகளில் ஒரு சில ஞானமான மாற்றங்கள் உங்கள் பாரத்தைக் குறைக்கக்கூடும்.
கடவுளோடு நடப்பதில் அடக்கமாயிருங்கள்
மீகா 6:8-ல் சிந்தனையைத் தூண்டும் இந்தக் கேள்வியை நாம் காண்கிறோம். “உன் தேவனுக்கு முன்பாக அடக்கமாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை கர்த்தர் (யெகோவா, NW) கேட்கிறார்?” அடக்கம் என்பது ஒருவருடைய வரையறைகளைப் பற்றிய ஓர் உணர்வு என்பதாக விளக்கப்படுகிறது. தங்கள் வரையறைகளை உணராத ஆட்கள் மிக அதிகமான பொறுப்புகளை ஏற்று திணறிக்கொண்டிருக்கக்கூடும். இது கண்காணிகள் உட்பட முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களுக்குச் சம்பவித்திருக்கிறது. இதன் விளைவு சோர்வு, ஏமாற்றம் மற்றும் மகிழ்ச்சி இழப்பாக இருந்திருக்கிறது. ஒரு கிறிஸ்தவ மூப்பராகிய கென்னத் இதை ஒப்புக்கொண்டார்: “நான் மனச்சோர்வுக்குள் சென்றுகொண்டிருப்பதைக் கண்டு, ‘இது எனக்கு சம்பவிக்க நான் அனுமதிக்கப் போவதில்லை,’ என்று சொன்னேன். ஆகவே என்னுடைய பொறுப்புகளில் சிலவற்றைக் குறைத்துக் கொண்டு என்னால் செய்ய முடிந்தவற்றில் மாத்திரமே கவனத்தை ஒருமுகப்படுத்தினேன்.”
மனத்தாழ்மையுள்ள தீர்க்கதரிசியான மோசேகூட தன்னுடைய சொந்த வரையறைகளை உணர்ந்து கொள்வதில் பிரச்னையுடையவராக இருந்தார். ஆகவே அவருடைய மாமனாகிய எத்திரோ, அவர் தானாகவே கையாளுவதற்கு முயன்று கொண்டிருந்த, அளவுக்கு அதிகமான வேலையின் சம்பந்தமாக அவரை அவருடைய உணர்வுகளுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. “நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன?” என்று எத்திரோ கேட்டார். “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல; . . . தொய்ந்து போவீர்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது . . . ஜனங்கள் எல்லாருக்குள்ளும் . . . திறமையுள்ள மனிதரைத் தெரிந்து கொண்டு . . . அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.” மோசே உடனடியாக தன்னுடைய வேலைகளில் சிலவற்றை மற்றவர்களிடம் ஒப்படைக்க ஆரம்பித்தார். இவ்விதமாக தாங்கமுடியாத ஒரு சுமையாகிக்கொண்டு வந்தக் காரியத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.—யாத்திராகமம் 18:13–26.
மற்றொரு சந்தர்ப்பத்தில் மோசே யெகோவாவிடம் இவ்விதமாகச் சொன்னார்: “இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.” மறுபடியுமாக, பதில், பொறுப்புகளில் சிலவற்றை மற்றவர்களிடம் ஒப்படைப்பதாக இருந்தது. அளவுக்கு அதிகமான பொறுப்புகளினால் நீங்கள் திணறிக்கொண்டிருப்பதாக உணர்ந்தால், உங்களுடைய இக்கட்டான நிலைமைக்கு இதுவும்கூட ஒரு பரிகாரமாக இருக்கக்கூடும்.—எண்ணாகமம் 11:14–17.
யெகோவா பாரத்தைச் சுமக்க நமக்கு உதவிசெய்கிறார்
இயேசு தம்முடைய நுகம் மெதுவாயும், தம் சுமை பாரமற்றது என்று சொல்லாமல் இலகுவாயும் இருக்கிறது என்று சொன்னார். நம்மை ஏற்றுக்கொள்ளும்படியாக இயேசு அழைத்த அந்த நுகம், சோம்பியிருக்கும் நுகம் அல்ல. அது இயேசுவின் சீஷனாக கடவுளுக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கும் நுகமாகும். ஆகவே, ஓர் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதனால், ஓரளவு பாரம் அல்லது அழுத்தம் வருகிறது. (மத்தேயு 16:24–26; 19:16–29; லூக்கா 13:24) உலக நிலைமைகள் மோசமாகும்போது, அழுத்தங்கள் அதிகரிக்கும். என்றபோதிலும் நம்முடைய நோக்குநிலையில் நாம் உடன்பாடாக இருப்பதற்குக் காரணமிருக்கிறது. ஏனென்றால், இயேசுவின் அழைப்பு அவரோடுகூட மற்றவர்கள் அவருடைய நுகத்தின் கீழ் வருவார்கள், அவர் அவர்களுக்கு உதவி செய்வார் என்பதை குறிப்பாக காண்பிக்கிறது.a இவ்விதமாக, நாம் கிறிஸ்துவின் அறிவுரைகளைப் பின்பற்றுகிற வரை, நம்முடைய பாரம் சமாளிக்க முடிகிற அளவில் இருக்கும், ஏனென்றால் அவர் நமக்கு உதவி செய்வார்.
கடவுள் தம்மை நேசிக்கிறவர்களைக் குறித்து அக்கறையுள்ளவராக இருக்கிறார், தம் மீது ஜெபசிந்தையோடு தங்கள் பாரத்தை வைத்து விடுகிறவர்களின் இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்கிறார். (சங்கீதம் 55:22; பிலிப்பியர் 4:6, 7; 1 பேதுரு 5:6, 7) “எந்நாளும் நம்முடைய பாரத்தைச் சுமக்கிற இரட்சிப்பை அருளும் தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக,” என்று சங்கீதக்காரன் சொன்னார். (சங்கீதம் 68:19) ஆம், பாரமான யாவற்றையும் விலக்கி வைத்து உங்களுக்கு முன்னால் நியமித்திருக்கிற ஓட்டத்தில் சகிப்புத்தன்மையோடே ஓடுவீர்களேயானால் எந்நாளும் உங்களுக்கும் கூட கடவுள் பாரத்தைச் சுமப்பார் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். (w91 10/15)
[அடிக்குறிப்புகள்]
a அடிக் குறிப்பு வாசிப்பதாவது: “என் நுகத்தின் கீழ் என்னோடேகூட வாருங்கள்.”
[பக்கம் 24-ன் படம்]
ஞானமுள்ள மூப்பர்கள் ஒருசில வேலைகளைப் பிறரிடம் ஒப்படைக்கவும் அவர்களுடைய சுமைகளைப் பகிர்ந்து கொள்ளவும் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்