நீங்கள் கடவுளுடைய இரக்கத்தைப் பின்பற்றுவீர்களா?
“நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.”—எபேசியர் 5:1.
1. மற்றவர்களை பின்பற்றுவது ஏன் நம் அனைவருக்கும் அக்கறைக்குரியதாய் இருக்கவேண்டும்?
நல்லதோ, தீயதோ, பெரும்பாலான ஆட்கள் மற்றவர்களைப் பின்பற்றுகிறார்கள். நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நாம் பின்பற்றுகிற ஆட்களும் நம்மைக் கணிசமாக பாதிக்கக்கூடும். நீதிமொழிகள் 13:20-ன் ஆவியால் ஏவப்பட்ட எழுத்தாளர் இவ்வாறு எச்சரித்தார்: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” ஆகவே நல்ல காரணத்தோடுதானே கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்.”—3 யோவான் 11.
2. நாம் யாரைப் பின்பற்ற வேண்டும்? என்ன வழிகளில்?
2 நாம் பின்பற்றக்கூடிய மிகச் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்களின் பைபிள் முன்மாதிரிகள் நமக்கிருக்கின்றன. (1 கொரிந்தியர் 4:16; 11:1; பிலிப்பியர் 3:17) என்றபோதிலும், நாம் பின்பற்றக்கூடிய, மிகச்சிறந்தவர் கடவுளே. எபேசியர் 4:31–5:2-ல் நாம் தவிர்க்க வேண்டிய பண்புகளையும் பழக்கவழக்கங்களையும் குறிப்பிட்ட பிற்பாடு, அப்போஸ்தலனாகிய பவுல் நாம் “தயவாயும் உருக்கமாயும் இருந்து . . . ஒருவருக்கொருவர் மன்னிக்க” வேண்டும் என்று துரிதப்படுத்தினார். இது பின்வரும் முக்கிய அறிவுரைக்கு வழிநடத்தியது: “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி . . . அன்பிலே நடந்து கொள்ளுங்கள்.”
3, 4. கடவுள் தம்மைப் பற்றிய என்ன வருணனையைக் கொடுத்தார், அவர் ஒரு நியாயமுள்ள கடவுளாக இருப்பது குறித்து நாம் ஏன் சிந்திக்க வேண்டும்?
3 நாம் பின்பற்ற வேண்டிய கடவுளுடைய வழிகளும் குணாதிசயங்களும் யாவை? மோசேயினிடமாக அவர் தம்மை வருணித்துகொண்ட விதத்தில் காணமுடிகிறபடி, அவருடைய ஆள்தன்மையிலும் செயல்களிலும் அநேக அம்சங்கள் இருக்கின்றன: “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும், விசாரிக்கிறவர்.”—யாத்திராகமம் 34:6, 7.
4 யெகோவா “நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படு”கிறவராக இருப்பதன் காரணமாக, நாம் நிச்சயமாகவே அவருடைய ஆள்தன்மையின் இந்த அம்சத்தை அறிந்து கொள்ளவும் பின்பற்றவும் வேண்டும். (சங்கீதம் 33:5; 37:28) அவரே சிருஷ்டிகராகவும் மனிதவர்க்கத்தின் உன்னத நியாயாதிபதியாகவும் நியாயப்பிரமாணிகராகவும் இருக்கிறார். ஆகவே அவர் அனைவரிடமும் நியாயத்தை வெளிப்படுத்துகிறார். (ஏசாயா 33:22) தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் மத்தியிலும் பின்னர் கிறிஸ்தவ சபையினுள்ளும் நியாயத்தைக் கட்டளையிட்டு அது நிறைவேறும்படியாகச் செய்த விதத்திலிருந்து இது தெளிவாக தெரிவிக்கப்படுகிறது.
தெய்வீக நியாயம் நிறைவேற்றப்படுகிறது
5, 6. இஸ்ரவேலரோடு கடவுளுடைய செயல்தொடர்புகளில் நீதி எவ்வாறு விளங்கினது?
5 இஸ்ரவேலைத் தம்முடைய ஜனமாக தெரிந்து கொள்கையில் அவர்கள் ‘தம்முடைய வாக்கை உள்ளபடி கேட்டு, தம்முடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வார்களா’ என்பதாக கடவுள் கேட்டார். சீனாய் மலை அடிவாரத்தில் கூடிவந்திருந்த அவர்கள் இவ்விதமாக பதிலளித்தனர்: “கர்த்தர் (யெகோவா, NW) சொன்னவைகளையெல்லாம் செய்வோம்.” (யாத்திராகமம் 19:3–8) என்னே உளமார்ந்து கூறப்பட்ட ஒரு பொறுப்பேற்பு! தேவதூதர்களின் மூலமாக கடவுள் இஸ்ரவேலருக்கு சுமார் 600 சட்டங்களைக் கொடுத்தார். கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஜனமாக அதைக் கைக்கொள்ள அவர்கள் பொறுப்புள்ளவர்களாயிருந்தனர். எவராவது ஒருவர் அவ்விதமாகச் செய்யாவிட்டால் அப்போது என்ன? கடவுளுடைய சட்டத்தில் நிபுணராக இருந்தவர் விளக்கினார்: “தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்”பட்டிருந்தது.—எபிரெயர் 2:2.
6 ஆம், கீழ்ப்படியாத இஸ்ரவேலன் “நீதியான தண்டனையை” எதிர்பட்டான். இது குறைபாடுள்ள மனித நீதி அல்ல, ஆனால் நம்முடைய சிருஷ்டிகரிடமிருந்து வரும் நீதி. சட்ட மீறுதல்களுக்குக் கடவுள் பல்வேறு தண்டனைகளை விதித்திருந்தார். மிகவும் வினைமையான தண்டனை “அறுப்புண்டு போதல்” அல்லது மரண தண்டனையாகும். அது விக்கிரகாராதனை, விபசாரம், முறைதகாப் புணர்ச்சி, மிருகங்களோடு புணர்ச்சி, ஓரின புணர்ச்சி, பிள்ளைகளைப் பலிசெலுத்துவது, கொலை, இரத்தத்தின் துர்பிரயோகம் ஆகிய வினைமையான மீறுதல்களுக்கு வழங்கப்பட்டது. (லேவியராகமம் 17:14; 18:6–17, 21–29) மேலுமாக, வேண்டுமென்றே, மனந்திரும்பாமல் எந்த ஒரு சட்டத்தையும் மீறின எந்த ஓர் இஸ்ரவேலனும் “அறுப்புண்டு போக”ப்படலாம். (எண்ணாகமம் 4:15, 18; 15:30, 31) இந்தத் தெய்வீக நீதி நிறைவேற்றப்பட்ட போது, தவறு செய்பவர்களின் சந்ததி பாதிப்பை நன்றாகவே உணர்ந்து கொள்ளும்.
7. கடவுளுடைய பண்டைய மக்கள் மத்தியில் நீதி நிறைவேற்றப்பட்டதனுடைய சில விளைவுகள் யாவை?
7 இப்படிப்பட்ட தண்டனைகள் தெய்வீக சட்டத்தை மீறுவதிலுள்ள வினைமையானத் தன்மையை வற்புறுத்தின. உதாரணமாக, ஒரு மகன் குடிகாரனும் பெருந்தீனிக்காரனுமாக இருந்தால், அவன் முதிர்ச்சியுள்ள நியாயாதிபதிகளுக்கு முன்னால் கொண்டுவரப்பட வேண்டும். அவன் துணிகரமான, மனந்திரும்பாத பொல்லாங்கன் என்பதை அவர்கள் கண்டால், நீதியை நிறைவேற்றுவதில் பெற்றோர்கள் பங்கு கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். (உபாகமம் 21:18–21) நம்மில் பெற்றோராயிருப்பவர்களால், அதை செய்வது எளிதல்ல என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. என்றபோதிலும் பொல்லாப்பு மெய் வணக்கத்தார் மத்தியில் பரவாதிருப்பதற்காக அது அவசியம் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார். (எசேக்கியேல் 33:17–19) “அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்,” என்பதாக சொல்லப்படக்கூடிய அவரே இதை ஏற்பாடு செய்திருந்தார்.—உபாகமம் 32:4.
8. கிறிஸ்தவ சபையோடு கடவுளுடைய செயல்தொடர்புகளில் நீதி எவ்வாறு தனிப்படுத்திக் காட்டப்பட்டது?
8 பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, கடவுள் இஸ்ரவேல் தேசத்தைப் புறக்கணித்து கிறிஸ்தவ சபையைத் தெரிந்து கொண்டார். ஆனால் யெகோவா மாறிவிடவில்லை. அவர் இன்னும் நீதிக்குக் கட்டுப்பட்டவராகவே இருக்கிறார். “பட்சிக்கிற அக்கினி” என்பதாக அவர் விவரிக்கப்படலாம். (எபிரெயர் 12:29; லூக்கா 18:7, 8) ஆகவே தவறு செய்பவர்களை வெளியேற்றுவதன் மூலம் முழு சபையிலும் தெய்வீக பயத்தைப் புகட்டுவதற்கு ஓர் ஏற்பாட்டை அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். மனந்திரும்பாத பொல்லாங்கராக மாறிவிடும் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் சபைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
9. சபை நீக்கம் என்பது என்ன? அது நிறைவேற்றுவது என்ன?
9 சபை நீக்கத்தில் உட்பட்டிருப்பது என்ன? முதல் நூற்றாண்டில் ஒரு பிரச்னை கையாளப்பட்ட முறையில் நாம் ஒரு நேரடியான பாடத்தைக் காண்கிறோம். தன் தகப்பனின் மனைவியோடு ஒழுக்கக்கேட்டை நடப்பித்த கொரிந்துவிலிருந்த ஒரு கிறிஸ்தவன் மனந்திரும்பவில்லை. ஆகவே அவன் சபையிலிருந்து புறம்பாக்கப்பட வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டார். இது கடவுளுடைய மக்களின் சுத்தத்தைப் பாதுகாக்க செய்யப்பட வேண்டியதாயிருந்தது, ஏனென்றால், “கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கும்.” அவனைப் புறம்பாக்குவது அவனுடைய பொல்லாப்பு கடவுளையும் அவருடைய மக்களையும் கனவீனப்படுத்துவதைத் தடைசெய்யும். சபைநீக்கம் செய்யப்படும் கடுமையான சிட்சை அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி உணர்வுக்குக் கொண்டு வந்து கடவுள் பயத்தை அவனிலும் சபையிலும் புகட்டுவதற்கு வழிசெய்யும்.—1 கொரிந்தியர் 5:1–13; உபாகமம் 17:2, 12, 13-ஐ ஒப்பிடவும்.
10. எவராவது ஒருவர் சபை நீக்கம் செய்யப்பட்டால் கடவுளுடைய ஊழியர்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
10 பொல்லாங்கன் ஒருவன் வெளியேற்றப்பட்டால் கிறிஸ்தவர்கள், “அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனே கூடப் புசிக்கவுங் கூடாது” என்பது தெய்வீக சட்டமாக இருக்கிறது.a இவ்விதமாக, கடவுளுடைய சட்டத்தை மதித்து அதன்படி வாழ விரும்பும் உண்மையுள்ளவர்களோடு கூடிகுலாவுவது உட்பட தோழமை கொள்வதிலிருந்து அவன் துண்டித்துவிடப்படுகிறான். இவர்களில் சிலர் அதே குடும்பத்தின் பாகமாக இல்லாமல், நெருங்கிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் உறவினர்களாக இருக்கக்கூடும். மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த எபிரெய பெற்றோர்களுக்குப் பொல்லாத மகனின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் பங்கு கொள்வது எளிதாக இல்லாதிருந்தது போலவே அந்த உறவினர்களுக்கு இந்தத் தெய்வீக கட்டளையைப் பொருத்துவது கடினமாக இருக்கலாம், என்றாலும் கடவுளுடைய கட்டளை தெளிவாக இருக்கிறது; ஆகவே சபைநீக்கம் செய்யப்படுவது நியாயமே என்று நாம் நிச்சயமாயிருக்கலாம்.—1 கொரிந்தியர் 5:1, 6–8, 11; தீத்து 3:10, 11; 2 யோவான் 9–11; ஆங்கில காவற்கோபுர பத்திரிகை செப்டம்பர் 15, 1981, பக். 26-31; ஏப்ரல் 15, 1988, பக். 28-31 பார்க்கவும்.
11. சபை நீக்கம் செய்யப்படுவதன் சம்பந்தமாக எவ்வாறு கடவுளுடைய ஆள்தன்மையின் பல்வேறு அம்சங்கள் வெளிப்படுத்தப்படுகிறது?
11 ஆனால் நம்முடைய கடவுள் வெறுமென நீதியுள்ளவர் மட்டுமில்லை என்பதை மனதில் வையுங்கள். அவர் “மிகுந்த கிருபையும் அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவராகவும்” இருக்கிறார். (எண்ணாகமம் 14:18) சபை நீக்கம் செய்யப்பட்ட ஒரு நபர் மனந்திரும்பி, தெய்வீக மன்னிப்பை நாடக்கூடும் என்பதை அவருடைய வார்த்தை தெளிவாக்குகிறது. அப்போது என்ன? அவர் சபைநீக்கம் செய்யப்படுவதற்கு வழிநடத்திய அந்தத் தவறிலிருந்து மனந்திரும்பியதற்கு அத்தாட்சியைக் கொடுக்கிறாரா என்பதை ஜெபசிந்தையோடும், கவனமாகவும் தீர்மானிக்க அனுபவமுள்ள கண்காணிகள் அவரை சந்திக்கக்கூடும். (அப்போஸ்தலர் 26:20-ஐ ஒப்பிடவும்.) அவ்வாறு இருந்தால், கொரிந்துவிலிருந்த மனிதனுக்கு சம்பவித்ததாக 2 கொரிந்தியர் 2:6–11 குறிப்பிடுகிற விதமாகவே அவர் சபையில் திரும்பவும் நிலைநிறுத்தப்படலாம். என்றபோதிலும் வெளியேற்றப்பட்ட சிலர் கடவுளுடைய அமைப்பிலிருந்து வருடங்கள் கணக்கில் விலகியே இருந்திருக்கலாம். ஆகவே திரும்பவுமாக வழியைக் காண அவர்களுக்கு உதவிசெய்ய ஏதாவது செய்யப்பட முடியுமா?
நீதி இரக்கத்தோடு சமநிலைப்படுத்தப்படுகிறது
12, 13. நாம் கடவுளைப் பின்பற்றுவது, அவருடைய நீதியைப் பிரதிபலிப்பதைக் காட்டிலும் ஏன் அதிகத்தை உட்படுத்த வேண்டும்?
12 மேலே சொல்லப்பட்டது யாத்திராகமம் 34:6, 7-ன் அடிப்படையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுளின் குணாதிசயங்களில் ஒன்றைப் பற்றியது மட்டுமே. என்றபோதிலும், அந்த வசனங்கள், கடவுளுடைய நீதியைக் காட்டிலும் அதிகத்தைப் பற்றி பேசுகின்றன. அவரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள், வெறுமென நீதியை அமல்படுத்துவதில் மாத்திரமே கவனத்தை ஒருமுகப்படுத்துவதில்லை. சாலொமோன் கட்டிய ஆலயத்தின் ஒரு மாதிரியை நீங்கள் செய்வதாக இருந்தால், அதன் தூண்களில் ஒன்றை மாத்திரமே நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களா? (1 இராஜாக்கள் 7:15–22) இல்லை, அது ஆலயத்தின் இயல்பையும் பங்கையும் பற்றிய சமநிலையான ஓர் உருவப்படத்தை உங்களுக்கு கொடுக்காது. அதேவிதமாகவே, நாம் கடவுளைப் பின்பற்ற விரும்பினால், அவருடைய மற்ற வழிகளையும் குணாதிசயங்களையும்கூட பின்பற்றுவது அவசியமாகும். “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள”வரும் ‘ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவரும், அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவருமாக” இருக்கும் இவரைப் பின்பற்ற வேண்டும்.
13 இரக்கம் காண்பிப்பதும் மன்னிப்பதும் கடவுளுடைய அடிப்படை குணாதிசயங்களாக இருப்பதை இஸ்ரவேலோடு அவர் நடந்துகொண்ட முறையிலிருந்து நாம் காண்கிறோம். நீதியின் கடவுள், திரும்ப திரும்ப செய்த பாவங்களுக்கு அவர்களைத் தண்டிக்காமல் விடவில்லை. என்றபோதிலும் அவர் தாராளமாக இரக்கத்தையும் மன்னிப்பையும் வெளிப்படுத்தினார். “அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார்; என்றைக்கும் கோபங் கொண்டிரார்.” (சங்கீதம் 103:7–9; 106:43–46) நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவருடைய செயல்தொடர்புகளை நோக்குமிடத்து, இந்த வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபிக்கின்றன.—சங்கீதம் 86:15; 145:8, 9; மீகா 7:18, 19.
14. இயேசு, எவ்விதமாக தாம் கடவுளின் இரக்கத்தைப் பின்பற்றியதைக் காண்பித்தார்?
14 இயேசு கிறிஸ்து “அவருடைய [கடவுள்] மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமு”மாயிருப்பதால் அவர் அதே விதமான இரக்கத்தையும் மன்னிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்த நாம் எதிர்பார்க்க வேண்டும். (எபிரெயர் 1:3) மற்றவர்களிடமாக அவருடைய செயல்கள் அவர் அதைச் செய்ததைக் காண்பிக்கின்றன. (மத்தேயு 20:30–34) நாம் லூக்கா 15-ம் அதிகாரத்தில் வாசிக்கிற அவருடைய வார்த்தைகளில் இரக்கத்தையும்கூட அழுத்திக்காண்பித்தார். அங்கே காணப்படும் மூன்று உவமைகள், இயேசு யெகோவாவை பின்பற்றினார் என்பதை நிரூபிக்கின்றன. அவை நமக்கு அத்தியாவசியமான பாடங்களை அளிக்கின்றன.
காணாமற்போனதைக் குறித்த கவலை
15, 16. லூக்கா 15-லுள்ள உவமைகளைக் கொடுக்க இயேசுவைத் தூண்டியது எது?
15 அந்த உவமைகள் பாவிகளிடம் கடவுளுடைய இரக்கமுள்ள அக்கறையை உறுதிப்படுத்துகின்றன. இவை நாம் பின்பற்றுவதற்கு இணக்கமான காட்சிகளை உருவகப்படுத்திக் காண்பிக்கின்றன. உவமைகளின் பின்னணியைச் சிந்தித்துப் பாருங்கள். “சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் [இயேசுவிடத்தில்] வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.”—லூக்கா 15:1, 2.
16 சம்பந்தப்பட்டிருந்த அனைவரும் யூதர்களாயிருந்தனர். பரிசேயர்களும் வேதபாரகரும், சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகையான நீதியாக இருந்த மோசேயின் நியாயப்பிரமாணத்தை ஆசார நுணுக்கத்தோடு கடைப்பிடிப்பதாக கருதி அதில் பெருமைப்பாராட்டிக் கொண்டனர். ஆனால் கடவுளோ இப்படி சுயமாக–அறிவிக்கப்பட்ட நீதியை ஒப்புக்கொள்ளவில்லை. (லூக்கா 16:15) இங்கு பேசப்பட்ட ஆயக்காரர்கள் ரோமுக்காக வரிவசூல் செய்த யூதர்களாக இருந்தனர். உடன்விசுவாசிகளிடமிருந்து அநேகர் அளவுக்கு அதிகமாக பணத்தை வற்புறுத்தி பெற்றதன் காரணமாக ஆயக்காரர்கள் இழிவாகக் கருதப்பட்ட ஒரு தொகுதியாக இருந்தனர். (லூக்கா 19:2, 8) இவர்கள் ஒழுக்கங் கெட்ட ஆட்களை, வேசிகளையும்கூட உட்படுத்திய “பாவிகளோடு” வகைப்படுத்தப்பட்டிருந்தனர். (லூக்கா 5:27–32; மத்தேயு 21:32) ஆனால் இயேசு, குறைக்கூறும் மதத் தலைவர்களிடம் இவ்விதமாகக் கேட்டார்:
17 “உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும்கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” ஆடுகளும் மேய்ப்பர்களும் பழக்கப்பட்டிருந்த காட்சியாக இருந்தபடியால் மதத் தலைவர்கள் உருவக அணி பேச்சை புரிந்து கொள்ள முடியும். அக்கறையின் காரணமாக, மேய்ப்பன் 99 ஆடுகளைப் பழக்கப்பட்ட மேய்ச்சல் நிலத்தில் மேயவிட்டுவிட்டு, காணாமற்போனதைத் தேடிச் சென்றான். அவன் அதைக் கண்டுபிடிக்கும் வரையாக விடாமுயற்சியுடன் தேடி, அவன் மிரண்டுபோயிருந்த ஆட்டை மந்தையிடமாக பரிவோடு சுமந்து வந்தான்.—லூக்கா 15:4–7.
18. லூக்கா 15-லுள்ள இரண்டாவது உவமையில் உயர்த்திக் காண்பிக்கப்பட்டபடியே, சந்தோஷத்துக்குக் காரணமாயிருந்தது என்ன?
18 இயேசு இரண்டாவது உவமையைத் தொடர்ந்து கூறினார். “அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்த பின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும்கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (லூக்கா 15:8–10) ஒரு வெள்ளிக்காசு என்பது ஒரு தொழிலாளிக்கு சுமார் ஒரு நாள் கூலி மதிப்புள்ளதாக இருந்தது. அந்த ஸ்திரீயின் காசு பரம்பரையாக வந்த உடைமையாக அல்லது ஓர் அணிகலனாக செய்யப்பட்ட ஒரு தொகுதியின் பாகமாக இருந்திருக்கலாம். அது காணாமற்போன போது, காசை கண்டுபிடிக்க மிகுதியாக முயற்சி செய்து, அவளும் அவளுடைய சிநேகிதிகளும் சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள். இது கடவுளைப் பற்றி நமக்கு என்ன சொல்லுகிறது?
பரலோகத்தில் சந்தோஷம்—எதற்காக?
19, 20. லூக்கா 15-லுள்ள இயேசுவின் முதல் இரண்டு உவமைகள், அடிப்படையில் யாரைப் பற்றியவை? அவை வலியுறுத்தின மைய குறிப்பு என்ன?
19 ஒருசில மாதங்களுக்கு முன்பாக ஆடுகளுக்காக தம்முடைய ஜீவனையும் கொடுக்கும் “நல்ல மேய்ப்பனாக” தம்மை அடையாளப்படுத்தியிருந்த இயேசுவின் பேரில் குறை கூறப்பட்டதற்கு பதிலாக இந்த இரண்டு உவமைகளும் அமைந்திருந்தன. (யோவான் 10:11–15) என்றபோதிலும், உவமைகள் அடிப்படையில் இயேசுவைப் பற்றியதல்ல. வேதபாரகரும் பரிசேயரும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்த பாடங்கள் கடவுளுடைய மனநிலையையும் வழிகளையும் மையமாகக் கொண்டிருந்தன. இதன் காரணமாக, மனந்திரும்புகிற பாவியினிமித்தம் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாகிறது என்பதாக இயேசு சொன்னார். அந்த மதவாதிகள் யெகோவாவைச் சேவிப்பதாக உரிமைப்பாராட்டினார்கள், என்றாலும் அவர்கள் அவரைப் பின்பற்றிக்கொண்டில்லை. மறுபட்சத்தில் இயேசுவின் இரக்கமான பண்பு அவருடைய பிதாவின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது.—லூக்கா 18:10–14; யோவான் 8:28, 29; 12:47–50; 14:7–11.
20 நூற்றில் ஒன்று, சந்தோஷத்துக்குக் காரணமாக இருந்ததனால் பத்தில் ஒரு காசு, இன்னும் அதிகமாக அவ்விதமாக இருந்தது. இன்றும்கூட காசைக் கண்டுபிடித்து அதைக் குறித்து சந்தோஷப்படும் பெண்களின் உணர்ச்சிகளை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது! இங்கும்கூட “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம்” யெகோவாவோடு சேர்ந்து “தேவனுடைய தூதர்கள்” சந்தோஷப்படுவதால் பாடம் பரலோகத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. “மனந்திரும்புகிற” என்ற அந்தக் கடைசி வார்த்தையைக் கவனியுங்கள். இந்த உவமைகள் உண்மையில் மனந்திரும்புகிற பாவிகளைப் பற்றியவை. இரண்டுமே, அவர்களுடைய மனந்திரும்புதலைக் குறித்துச் சந்தோஷமடைவது பொருத்தமானது என்பதை வலியுறுத்தின.
21. லூக்கா 15-லுள்ள இயேசுவின் உவமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?
21 மேலெழுந்தவாரியாக நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பது குறித்து மகிழ்ந்துகொண்டிருந்த தவறாக வழிநடத்தப்பட்ட அந்த மதத் தலைவர்கள், கடவுள் “இரக்கமும் கிருபையும்,” உள்ளவராயும் “அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவராகவும்” இருப்பதை கவனிக்கத் தவறினர். (யாத்திராகமம் 34:6, 7) கடவுளுடைய வழிகள் மற்றும் ஆள்தன்மையின் இந்த அம்சத்தை அவர்கள் பின்பற்றியிருந்தார்களேயானால், மனந்திரும்பிய பாவிகளிடம் இயேசு காண்பித்த இரக்கத்தைப் போற்றியிருப்பர். நம்மைப் பற்றியதென்ன? பாடத்தை இருதயத்தில் ஏற்று அதைப் பொருத்துகிறோமா? சரி, இயேசுவின் மூன்றாவது உவமையைக் கவனியுங்கள்.
மனந்திரும்புதலும் இரக்கமும் செயலிலே
22. சுருக்கமாக, இயேசு லூக்கா 15-ல் என்ன மூன்றாவது உவமையைக் கொடுத்தார்?
22 இது அநேகமாக கெட்ட குமாரனின் உவமை என்பதாக அழைக்கப்படுகிறது. இருந்தபோதிலும், அதை வாசிக்கையில், அது ஏன் ஒரு தகப்பனின் அன்பைப் பற்றிய உவமை என்பதாக சிலர் நினைக்கின்றனர் என்பதை நீங்கள் காணக்கூடும். தன் தகப்பனிடமிருந்து தனக்கு சேரவேண்டிய ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு குடும்பத்திலுள்ள இளையக் குமாரனைப் பற்றி அது சொல்லுகிறது. (உபாகமம் 21:17 ஒப்பிடுக.) இந்தக் குமாரன் தூர தேசத்துக்குப் பயணப்பட்டு போகிறான், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி தன் ஆஸ்தியை அழித்துப் போடுகிறான், பன்றிகளை மேய்க்கும் வேலையை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது, பன்றிகளின் உணவைத் தின்ன ஆசையாய் இருக்கும் நிலைக்கும் தாழ்த்தப்படுகிறான். கடைசியாக அவன் தன் உணர்வுகளுக்கு வந்து, வீட்டுக்குத் திரும்ப தீர்மானிக்கிறான், தகப்பனுடைய வீட்டிலே ஒரு கூலிக்காரனாக வேலை செய்ய விரும்புகிறான். அவன் வீட்டை நெருங்கி வரும்போது, அவனுடைய தகப்பன் அவனை வரவேற்கும் உடன்பாடான படியை எடுக்கிறார், ஒரு விருந்தையும்கூட ஏற்பாடு செய்கிறார். வேலை செய்து கொண்டு வீட்டில் தங்கியிருக்கும் மூத்த சகோதரன், காண்பிக்கப்பட்ட இரக்கத்தைக் கண்டு கோபங் கொள்கிறான். ஆனால் மரித்துப் போன குமாரன் இப்போது திரும்பவும் உயிரோடிருப்பதால் அவர்கள் சந்தோஷப்பட வேண்டும் என்று தகப்பன் சொல்கிறார்.—லூக்கா 15:11–32.
23. கெட்ட குமாரனின் உவமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?
23 சில வேதபாரகரும் பரிசேயரும் இளைய குமாரனைப் போலிருந்த பாவிகளுக்கு எதிர்மாறாக தாங்கள் மூத்த குமாரனுக்கு ஒப்பிடப்படுவதாக உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் உவமையின் முக்கிய குறிப்பை அவர்கள் கிரகித்துக் கொண்டார்களா? நாம் கிரகித்துக் கொள்கிறோமா? இது நம்முடைய இரக்கமுள்ள பரம தகப்பனின் முதன்மையான ஒரு பண்பை உயர்த்திக் காண்பிக்கிறது. அதாவது ஒரு பாவியின் இருதயப்பூர்வமான மனந்திரும்புதல் மற்றும் மனமாற்றத்தின் அடிப்படையில் மன்னிப்பதற்கு அவருக்கிருக்கும் விருப்பம். மனந்திரும்பும் பாவிகளின் மீட்பைக் குறித்து சந்தோஷத்தோடு பிரதிபலிக்க செவிசாய்த்துக்கொண்டிருப்பவர்களை அது தூண்டியிருக்க வேண்டும். இவ்விதமாகத்தான் கடவுள் காரியங்களை நோக்குகிறார், மற்றும் செயல்படுகிறார், அவரைப் பின்பற்றுகிறவர்களும் அதையேச் செய்கிறார்கள்.—ஏசாயா 1:16, 17; 55:6, 7.
24, 25. கடவுளுடைய என்ன வழிகளை நாம் பின்பற்ற நாடிக் கொண்டிருக்க வேண்டும்?
24 தெளிவாகவே, நீதி கடவுளுடைய எல்லா வழிகளையும் தனிப்படுத்திக் காண்பிக்கின்றது, ஆகவே யெகோவாவை பின்பற்ற விரும்புகிறவர்கள் நீதியை பொக்கிஷமாகப் பேணி நாடுகிறார்கள். இருந்தபோதிலும், நம்முடைய கடவுள் வெறுமென கோட்பாட்டளவான அல்லது கண்டிப்பான நீதியினால் தூண்டப்படுவதில்லை. மெய்யான மனந்திரும்புதலின் அடிப்படையில் மன்னிக்க மனமுள்ளவராயிருப்பதன் மூலம் இதை அவர் காண்பிக்கிறார். அப்படியென்றால், நாம் மன்னிப்பவர்களாயிருப்பதை, கடவுளை நாம் பின்பற்றுகிறவர்களாயிருப்பதோடு பவுல் சம்பந்தப்படுத்தியது பொருத்தமாகவே உள்ளது: “கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுங்கள்.”—எபேசியர் 4:32–5:2.
25 மெய்க் கிறிஸ்தவர்கள் நீண்ட காலமாக யெகோவாவின் நீதியையும் அவருடைய இரக்கத்தையும் மன்னிப்பதற்கான விருப்பத்தையும் பின்பற்ற முயற்சித்து வந்திருக்கிறார்கள். நாம் அதிகமாக அவரை அறிய வரும்போது இந்த விஷயங்களில் அவரைப் பின்பற்றுவது நமக்கு அதிக எளியதாக இருக்க வேண்டும். ஆனால் பாவமுள்ள ஒரு போக்கை நாடியதன் காரணமாக கடுமையான சிட்சையை நியாயமாக பெற்றிருக்கும் ஒரு நபரிடமாக நாம் இதை எவ்வாறு பொருத்தலாம்? நாம் பார்க்கலாம். (w91 4/15)
[அடிக்குறிப்புகள்]
a சபை விலக்கம் என்பது, அதன் பொதுவான கருத்தில், ஒருசமயம் நல்ல நிலைநிற்கையிலிருந்த உறுப்பினர்களுக்கு, ஒரு தொகுதி அதன் உறுப்பினர் நிலையின் சிலாக்கியங்களைக் கொடுக்க மறுப்பதற்கு ஆழ்ந்து ஆராய்ந்து எடுக்கும் நடவடிக்கையாகும். . . . ஒரு மத சமுதாயம் தவறிழைத்தவர்களுக்குப் புனித சடங்குகள், சபை ஆராதனை, ஒருவேளை எந்த வகையான ஒரு சமூக தொடர்பையும்கூட மறுக்கும் ஒரு வெளியேற்ற நடவடிக்கையைக் குறிப்பிடுவதற்காக சபைவிலக்கம் கிறிஸ்தவ சகாப்தத்தில் ஏற்பட்டது.—சர்வதேச ஸ்டான்டர்டு பைபிள் என்சைக்ளோபீடியா [The International Standard Bible Encyclopedia].
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
◻கடவுளுடைய நீதி எவ்வாறு இஸ்ரவேல் சபையிலும் கிறிஸ்தவ சபையிலும் வெளிப்படுத்திக் காண்பிக்கப்பட்டது?
◻கடவுளுடைய நீதியோடுகூட நாம் ஏன் அவருடைய இரக்கத்தைப் பின்பற்றவேண்டும்?
◻லூக்கா 15-ம் அதிகாரத்திலுள்ள மூன்று உவமைகள் சொல்லப்பட்டதற்குக் காரணம் என்ன? அவை நமக்கு என்ன பாடங்களைக் கற்பிக்க வேண்டும்?
17. லூக்கா 15-ல் இயேசுவின் முதல் உவமை என்னவாக இருந்தது?
[பக்கம் 16 , 17-ன் படம்]
சீனாய் மலைக்கு முன்னால் ஏர்–ரெகா சமவெளி (இடது பின்னணி)
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
Garo Nalbandian