“உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை”
“இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.”—மத்தேயு 13:34.
1, 2. (அ) திறம்பட்ட உவமைகளை ஏன் சுலபமாக மறந்துவிட முடியாது? (ஆ) இயேசு எப்படிப்பட்ட உவமைகளைப் பயன்படுத்தினார், அவர் உதாரணங்களை பயன்படுத்தியதைப் பற்றி என்ன கேள்விகள் எழும்புகின்றன? (அடிக்குறிப்பையும் காண்க.)
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பொதுப் பேச்சில் நீங்கள் கேட்ட உவமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? திறம்பட்ட உவமைகளை எளிதில் மறந்துவிட முடியாது. உவமைகள் “காதால் கேட்பவற்றை மனக்கண்ணால் பார்க்க செய்து, கேட்பவர்கள் மனதில் தெளிவான காட்சிகளை பதிய வைக்கின்றன” என ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவித்தார். நன்கு புரிந்துகொள்வதற்கு மனக்காட்சிகள் அற்புத கருவிகளாக இருப்பதால் உவமைகளைப் பயன்படுத்துகையில் கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும். உவமைகள் வார்த்தைகளுக்கு உயிர்ப்பூட்டி நம் நினைவைவிட்டு நீங்கா பாடங்களை நமக்கு கற்பிக்க முடியும்.
2 இயேசு கிறிஸ்துவைப் போல் உவமைகளை அவ்வளவு திறம்பட பயன்படுத்திய போதகர் இந்தப் பூமியில் எக்காலத்திலும் இருந்ததில்லை. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும்கூட இயேசுவின் பல உவமைகளை எளிதில் நினைவுபடுத்தி பார்க்க முடிகிறது.a குறிப்பிட்ட இந்தப் போதிக்கும் முறையை அவர் ஏன் மிக அதிகமாக பயன்படுத்தினார்? அவருடைய உவமைகளை அந்தளவுக்குப் பயனுள்ளதாக்கியது எது?
இயேசு ஏன் உவமைகளைப் பயன்படுத்தினார்
3. (அ) மத்தேயு 13:34, 35-ன்படி இயேசு உவமைகளை பயன்படுத்தியதற்கு ஒரு காரணம் என்ன? (ஆ) இம்முறையில் போதிப்பதை யெகோவா உண்மையிலேயே மதிப்புள்ளதாக கருதுவதை எது காட்டுகிறது?
3 இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்கு பைபிள் இரண்டு குறிப்பிடத்தக்க காரணங்களைக் கொடுக்கிறது. முதலாவதாக, அவர் அவற்றை பயன்படுத்தியது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருந்தது. அப்போஸ்தலனாகிய மத்தேயு இவ்வாறு எழுதினார்: “இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத் தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.” (மத்தேயு 13:34, 35) மத்தேயு குறிப்பிடும் ‘அந்தத் தீர்க்கதரிசி’ சங்கீதம் 78:2-ஐ இயற்றியவர். அந்த சங்கீதக்காரர் இயேசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடவுளின் ஆவியால் ஏவப்பட்டு எழுதினார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தம்முடைய குமாரன் உவமைகளை உபயோகித்து போதிப்பார் என்று யெகோவா முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது அல்லவா? இம்முறையில் போதிப்பதை யெகோவா மதிப்புள்ளதாக கருதுகிறாரென்றே தெரிகிறது!
4. இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்குரிய காரணத்தை எவ்வாறு விளக்கினார்?
4 இரண்டாவதாக, கேட்க விருப்பமில்லாதவர்களை பிரித்தெடுப்பதற்காக உவமைகளை பயன்படுத்தியதாக இயேசுவே விளக்கினார். அவர் “திரளான ஜனங்”களிடம் விதைக்கிறவனைப் பற்றிய உவமையை சொன்ன பின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடம், “ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர்”? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக் கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக் கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்க[ளின்] . . . இருதயம் கொழுத்திருக்கிறது” என்று பதிலளித்தார்.—மத்தேயு 13:2, 10, 11, 13-15; ஏசாயா 6:9, 10.
5. இயேசுவின் உவமைகள் எவ்வாறு மனத்தாழ்மையுடன் செவிசாய்த்தோரை பெருமையுள்ளோரிடமிருந்து பிரித்தெடுத்தன?
5 இயேசுவின் உவமைகள் எவ்வாறு மக்களை பிரித்தெடுத்தன? சில சமயங்களில், அவருக்கு செவிசாய்த்தவர்கள் அவர் பேசியவற்றின் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்வதற்கு அதை ஆழமாக ஆராய்ந்து பார்ப்பது அவசியமாக இருந்தது. இதனால் மனத்தாழ்மையுள்ளவர்கள் கூடுதலான தகவலை கேட்டு தெரிந்துகொள்ளும்படி தூண்டப்பட்டார்கள். (மத்தேயு 13:36; மாற்கு 4:34) அதாவது, சத்தியத்தை அறிய ஆவலாய் இருந்தோருக்கு இயேசுவின் உவமைகள் அதை வெளிப்படுத்தின; அதே சமயத்தில் அவருடைய உவமைகள் பெருமையுள்ளவர்களிடம் இருந்து சத்தியத்தை மறைத்து வைத்தன. இயேசு எப்பேர்ப்பட்ட மகத்தான போதகராய் இருந்தார்! அவருடைய உவமைகளை மிகவும் பயனுள்ளவையாக்கிய சில அம்சங்களை இப்போது நாம் ஆராயலாம்.
விவரங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினார்
6-8. (அ) முதல் நூற்றாண்டில் இயேசுவுக்கு செவிசாய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு என்ன வசதி இல்லாதிருந்தது? (ஆ) இயேசு விவரங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தியதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
6 இயேசு போதிப்பதை நேரடியாக கேட்ட முதல் நூற்றாண்டு சீஷர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அவர்கள் இயேசுவின் குரலைக் கேட்கும் பாக்கியத்தை பெற்றிருந்த போதிலும், அவர் சொன்னவற்றை நினைவுபடுத்திக் கொள்வதற்கு வசதியாக ஒரு பதிவை எடுத்துப் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை தங்கள் மனதிலும் இருதயத்திலும் “எழுதி” வைத்திருக்க வேண்டும். இயேசு உவமைகளை வெகு திறமையாக பயன்படுத்தியதன் மூலம் தாம் போதித்தவற்றை அவர்கள் ஞாபகத்தில் வைப்பதை எளிதாக்கினார். எப்படி?
7 இயேசு விவரங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினார். கதைக்கு குறிப்பிட்ட விவரங்கள் பொருத்தமாயிருந்தால் அல்லது ஒரு குறிப்பை வலியுறுத்துவதற்கு அவை தேவைப்பட்டால், அவ்விவரங்களை தவறாமல் கொடுத்தார். ஆகவே மந்தையின் சொந்தக்காரர் காணாமல் போன ஒரு ஆட்டை தேடிக்கொண்டு போகையில் மீதமாக எத்தனை ஆடுகள் அவரிடம் இருந்தன, திராட்சத் தோட்டத்தில் வேலையாட்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்தார்கள், எத்தனை தாலந்துகள் ஒப்படைக்கப்பட்டன போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டார்.—மத்தேயு 18:12-14; 20:1-16; 25:14-30.
8 அதே சமயத்தில், உவமைகளின் அர்த்தத்தை தெளிவாக புரிந்துகொள்வதற்கு தடையாக இருக்கும் தேவையற்ற விவரங்களை இயேசு சொல்லாமல் தவிர்த்தார். உதாரணமாக, இரக்கமில்லாத அடிமை பற்றிய உவமையில், அவனுக்கு எப்படி 6,00,00,000 வெள்ளிப் பணம் கடன் ஏற்பட்டது என்பதைப் பற்றிய எந்த விவரமும் சொல்லப்படவில்லை. இயேசு இங்கே மன்னிப்பதன் அவசியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். எனவே அந்த அடிமை எப்படி கடன்பட்டான் என்பது முக்கியமல்ல, ஆனால் அவனுடைய கடன் எப்படி மன்னிக்கப்பட்டது, அப்படியிருக்க அவனோ அதைவிட குறைந்த தொகையே தன்னிடம் கடன்பட்டிருந்த உடன் அடிமையை எவ்வாறு நடத்தினான் என்பதே முக்கியம். (மத்தேயு 18:23-35) அதேவிதமாகவே, கெட்ட குமாரன் பற்றிய உவமையில், திடீரென்று இளைய மகன் சொத்தில் தன் பங்கை பிரித்துக் கொடுக்க சொல்லி ஏன் கேட்டான் என்பதையோ அல்லது அதை ஏன் அவன் விரயம் செய்தான் என்பதையோ இயேசு விளக்க முற்படவில்லை. ஆனால் தன் மகன் மனந்திருந்தி மறுபடியும் வீடு திரும்பியபோது தகப்பன் எவ்வாறு உணர்ந்தார், எப்படி நடந்துகொண்டார் என்பதை விலாவாரியாக அவர் விவரித்தார். யெகோவா ‘மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்’ என இயேசு விளக்கின குறிப்புக்கு அந்தத் தகப்பன் நடந்துகொண்ட விதத்தைப் பற்றிய விவரங்கள் மிக அவசியமாக இருந்தன.—ஏசாயா 55:7; லூக்கா 15:11-32.
9, 10. (அ) இயேசு தம் உவமைகளில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றி விவரிக்கையில் எதன்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினார்? (ஆ) இயேசுவுக்கு செவிசாய்த்தவர்களும் மற்றவர்களும் அவருடைய உவமைகளை நினைவுபடுத்திப் பார்ப்பதை எவ்வாறு எளிதாக்கினார்?
9 இயேசு தம் உவமைகளில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றி விவரிக்கையில் விவேகமாகவும் இருந்தார். கதாபாத்திரங்களின் தோற்றத்தை விலாவாரியாக வர்ணிப்பதற்கு பதிலாக, அவர்கள் என்ன செய்தார்கள் அல்லது எப்படி நடந்துகொண்டார்கள் என்பதற்கே இயேசு அதிக கவனம் செலுத்தினார். ஆகவேதான் அயலகத்தாராக இருந்த அந்த சமாரியன் பார்ப்பதற்கு எப்படி இருந்தான் என இயேசு சொல்வதற்கு பதிலாக அதைவிட முக்கியமான விஷயத்தைப் பற்றி சொன்னார்; அதாவது, வழியில் காயப்பட்டுக் கிடந்த ஒரு யூதன் மீது இரக்கப்பட்டு உதவி செய்ய அந்த சமாரியன் எவ்வாறு முன்வந்தான் என்பதை சொன்னார். அயலகத்தாரை நேசிப்பது என்பது நம்முடைய சொந்த இனத்தாருக்கு அல்லது நாட்டவருக்கு உதவுவதோடு நின்றுவிடாமல் அதையும் கடந்து செல்வதாக இருக்க வேண்டும் என்பதை கற்பிப்பதற்கு தேவையான விவரங்களை இயேசு கொடுத்தார்.—லூக்கா 10:29, 33-37.
10 உவமைகளில் விவரங்களை இயேசு வெகு கவனமாக பயன்படுத்தியதால் அவை சுருக்கமாக இருந்தன, ஏராளமான தகவல்கள் அதில் சேர்க்கப்படவில்லை. இவ்வாறு, முதல் நூற்றாண்டில் அவர் பேசியதைக் கேட்டவர்களும் சரி, ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட சுவிசேஷங்களை பின்னர் படிக்கவிருந்த எண்ணிலடங்கா மற்றவர்களும் சரி, அந்த உவமைகளையும் அவை போதித்த பாடங்களையும் நினைவுபடுத்தி பார்ப்பதை எளிதாக்கினார்.
அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட உதாரணங்கள்
11. இயேசு கலிலேயாவில் வளர்ந்து வந்த காலத்தில் பெரும்பாலும் கவனித்த விஷயங்கள் அவருடைய உவமைகளில் காணப்பட்டதற்கு ஒரு உதாரணத்தைக் கொடுங்கள்.
11 மக்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட உவமைகளை பயன்படுத்துவதில் இயேசு மிகவும் கைதேர்ந்தவர். அவர் பயன்படுத்திய உவமைகளில் பல, கலிலேயாவில் அவர் வளர்ந்து வந்த காலத்தில் கவனித்த காரியங்களாகவே இருந்திருக்க வேண்டும். அவருடைய ஆரம்ப கால வாழ்க்கையை சற்று எண்ணிப் பாருங்கள். தன் தாய் புளிப்புள்ள அப்பம் சுடுவதற்கு முந்தின நாளின் புளித்த மாவில் கொஞ்சத்தை எடுத்து மாவோடு கலப்பதை அவர் எத்தனை தடவை பார்த்திருப்பார்? (மத்தேயு 13:33) தெள்ளிய நீலநிற கலிலேய கடலில் மீனவர்கள் தங்கள் வலைகளை வீசுவதை அவர் எத்தனை தடவை பார்த்திருப்பார்? (மத்தேயு 13:47) சந்தை வெளிகளில் எத்தனை பிள்ளைகள் விளையாடுவதை அவர் கவனித்திருப்பார்? (மத்தேயு 11:16, 17) இயேசு மற்ற காரியங்களையும்கூட கவனித்திருக்க வேண்டும்; அவற்றையும் அவர் தம் உவமைகளில் பயன்படுத்தினார்; விதை விதைத்தல், சந்தோஷமான திருமண விருந்துகள், சூரிய வெப்பத்தில் பயிர்கள் வளர்ந்து பயிராதல் ஆகியவை அவற்றில் சில.—மத்தேயு 13:3-8; 25:1-12; மாற்கு 4:26-29.
12, 13. (அ) இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட யூதர்களுக்கு அவை எதை அர்த்தப்படுத்தின என்பதை சிந்திப்பது ஏன் பயனுள்ளது? (ஆ) கோதுமைகளையும் களைகளையும் பற்றிய இயேசுவின் உவமை அவர் உள்ளூர் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருந்ததை எப்படி காட்டுகிறது?
12 அப்படியென்றால், அன்றாட வாழ்க்கை சூழல்களும் சம்பவங்களும் இயேசுவின் பல உவமைகளில் ஆங்காங்கே காணப்படுவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகவே இந்தப் போதிக்கும் முறையில் அவருக்கிருந்த திறமையை இன்னும் நன்கு புரிந்துகொள்வதற்கு, அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்களுக்கு அவை எதை அர்த்தப்படுத்தின என்பதை சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும். இதற்கு இரண்டு உதாரணங்களை நாம் பார்க்கலாம்.
13 முதலாவதாக, கோதுமைகளையும் களைகளையும் பற்றிய உவமையில், நிலத்தில் நல்ல கோதுமை மணியை விதைத்த ஒருவனைப் பற்றியும், அதன் பிறகு “சத்துரு” வந்து அதன்மீது களைகளை விதைத்ததைப் பற்றியும் இயேசு சொன்னார். இயேசு ஏன் குறிப்பிட்ட இந்த துரோகச் செயலை தம் உவமைக்காக தேர்ந்தெடுத்தார்? இந்த உவமையை கலிலேய கடல் அருகே இருக்கையில் அவர் சொன்னதையும் கலிலேயர்களின் முக்கிய தொழில் விவசாயமாக இருந்ததையும் மறந்துவிடாதீர்கள். இரகசியமாக சத்துரு வந்து தன் நிலத்தில் பயிர்களை அழிக்கும் களைகளை விதைத்துவிட்டு போவதைவிட வேறு எது ஒரு விவசாயிக்கு அதிக சேதம் விளைவிப்பதாய் இருக்க முடியும்? இப்படிப்பட்ட சம்பவங்கள் அந்தச் சமயத்தில் நிகழ்ந்ததை அப்போது அமலில் இருந்த சட்டங்கள் காட்டுகின்றன. கேட்பவர்களால் புரிந்துகொள்ள முடிந்த ஒரு நிலைமையையே இயேசு உவமையாக பயன்படுத்தினார் என்பது தெளிவாக இருக்கிறது அல்லவா?—மத்தேயு 13:1, 2, 24-30.
14. நல்ல சமாரியனைப் பற்றிய உவமையில், இயேசு தம்முடைய குறிப்பை வலியுறுத்த “எருசலேமிலிருந்து எரிகோவுக்கு” போகும் வழியை உதாரணமாக பயன்படுத்தியது ஏன் குறிப்பிடத்தக்கது?
14 இரண்டாவதாக, நல்ல சமாரியனைப் பற்றிய உவமையை எடுத்துக்கொள்ளுங்கள். இயேசு அதை இவ்வாறு ஆரம்பித்தார்: “ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப்போனார்கள்.” (லூக்கா 10:30) தம்முடைய குறிப்பை வலியுறுத்துவதற்கு இயேசு “எருசலேமிலிருந்து எரிகோவுக்கு” போகும் வழியை பயன்படுத்தியது மிகவும் பொருத்தமானது. இந்த உவமையை அவர் சொல்லுகையில் எருசலேமுக்கு அருகில் இருந்த யூதேயாவில் இருந்தார்; ஆகவே அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உவமையில் சொல்லப்பட்ட அந்த சாலையைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் சாலை, முக்கியமாக தனியாக பயணிப்பவர்களுக்கு அதிக ஆபத்தானதாக இருந்தது. அது மிகவும் வளைந்து நெளிந்து சென்ற தனிமையான பாதையாக இருந்ததால் திருடர்கள் பதுங்கியிருக்க வசதியாக பல மறைவான இடங்கள் இருந்தன.
15. நல்ல சமாரியனை பற்றிய உவமையில் ஆசாரியனும் லேவியனும் கண்டும் காணாதது போல போனதை ஏன் யாரும் நியாயப்படுத்த முடியாது?
15 உவமையில் “எருசலேமிலிருந்து எரிகோவுக்கு” போகும் வழியை இயேசு பயன்படுத்தியதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. உவமையின்படி, முதலில் ஒரு ஆசாரியனும் பின்னர் ஒரு லேவியனும் அதே வழியில் போனார்கள்—இவர்களில் ஒருவருமே காயப்பட்டிருந்த மனிதனுக்கு உதவி செய்ய அங்கே நிற்கவில்லை. (லூக்கா 10:31, 32) ஆசாரியர்கள் எருசலேமிலிருந்த ஆலயத்தில் சேவை செய்தார்கள், லேவியர்கள் அவர்களுக்கு உதவி செய்தார்கள். ஆலய சேவை செய்யாத நாட்களில் அநேக ஆசாரியர்களும் லேவியர்களும் எரிகோவில் தங்கியிருந்தார்கள், ஏனென்றால் எரிகோ எருசலேமிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருந்தது. ஆகவே, அவர்கள் அந்த வழியில் பயணம் செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டதில் சந்தேகமில்லை. ஆசாரியனும் லேவியனும் அந்த சாலையில் “எருசலேமிலிருந்து” போய்க் கொண்டிருந்தார்கள், அதாவது ஆலயத்திலிருந்து மறு திசையில் போய்க்கொண்டிருந்தார்கள் என்பதை கவனியுங்கள். ‘காயப்பட்டுக் கிடந்தவன் செத்தவன் போல அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும், ஒரு சவத்தை தொடப் போய் தீட்டுப்பட்டு தற்காலிகமாக ஆலயத்தில் சேவை செய்ய முடியாமல் போய்விடுமோ என அவர்கள் நினைத்திருக்கலாம்’; ஆகவே அவர்கள் கண்டும் காணாதது போல கடந்து போயிருக்கலாம் என்று யாரும் அவர்களுடைய செயலை நியாயப்படுத்த முடியாது. (லேவியராகமம் 21:1; எண்ணாகமம் 19:11, 16) கேட்பவர்களுக்கு பழக்கமான காரியங்களையே இயேசு தம் உவமையில் பயன்படுத்தியது தெளிவாக தெரிகிறது அல்லவா?
படைப்பிலிருந்து உவமைகள்
16. இயேசு படைப்புகளைப் பற்றி நன்கு அறிந்திருந்து ஏன் ஆச்சரியம் அளிப்பதாக இல்லை?
16 தாவரங்கள், விலங்குகள், இயற்கை சக்திகள் ஆகியவற்றைப் பற்றி இயேசு நன்கு அறிந்திருந்ததை அவருடைய பல உவமைகள் காட்டுகின்றன. (மத்தேயு 6:26, 28-30; 16:2, 3) இவற்றைப் பற்றிய தகவலை அவர் எங்கிருந்து பெற்றார்? கலிலேயாவில் வளர்ந்து வருகையில், யெகோவாவின் படைப்புகளைக் கூர்ந்து கவனிக்க உண்மையிலேயே அவருக்கு போதிய நேரமிருந்தது. மேலும், இயேசு “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்;” எல்லாவற்றையும் படைப்பதற்கு யெகோவா அவரை ‘கைதேர்ந்த வேலையாளாக’ பயன்படுத்தியிருந்தார். (கொலோசெயர் 1:15, 16; நீதிமொழிகள் 8:30, 31, NW) இயேசு படைப்பைப் பற்றி அத்துப்படியாக அறிந்திருந்ததைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டுமா? தாம் பெற்ற இந்த அறிவை, போதிப்பதில் இயேசு எவ்வாறு திறம்பட பயன்படுத்தினார் என்பதை நாம் காணலாம்.
17, 18. (அ) இயேசு ஆடுகளின் குணங்களை நன்கு அறிந்திருந்ததை யோவான் 10-ஆம் அதிகாரத்திலுள்ள அவருடைய வார்த்தைகள் எவ்வாறு காட்டுகின்றன? (ஆ) மேய்ப்பர்களுக்கும் ஆடுகளுக்கும் இடையே நிலவும் பந்தத்தைக் குறித்து பைபிள் நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கவனித்திருப்பது என்ன?
17 இயேசு சொன்ன உவமைகளில் மிகவும் கனிவானது யோவான் 10-ஆம் அதிகாரத்தில் உள்ளது. அதில் தமக்கும் தம்மை பின்பற்றுவோருக்கும் இடையே நிலவும் நெருக்கமான உறவை மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் இடையே நிலவும் உறவுக்கு ஒப்பிட்டார். வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளின் குணங்களை அவர் நன்கு அறிந்திருந்ததை அவருடைய வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. ஆடுகள் மேய்ப்பனால் வழிநடத்தப்பட முனமுள்ளவையாக இருப்பதையும் அவை உண்மையாக அவன் பின்னே செல்வதையும் அவர் சுட்டிக்காட்டினார். (யோவான் 10:2-4) பைபிள் நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மேய்ப்பர்களுக்கும் மேய்ப்பனுக்குமிடையே நிலவும் விசேஷித்த பந்தத்தை கவனித்திருக்கிறார்கள். 19-வது நூற்றாண்டில், இயற்கை நிபுணர் ஹெச். பி. டிரிஸ்டிராம் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு மேய்ப்பன் தன் மந்தையோடு விளையாடிக் கொண்டிருப்பதை ஒரு சமயம் பார்த்திருக்கிறேன். அவன் ஓடிப்போவது போல பாசாங்கு செய்தபோது ஆடுகள் அவன் பின்னால் சென்று அவனை சுற்றி வளைத்துக்கொண்டன. . . . கடைசியாக, மந்தை அவனைச் சுற்றி வட்டமாக துள்ளிக் குதித்து விளையாடின.”
18 ஆடுகள் ஏன் தங்கள் மேய்ப்பனின் பின்னே போகின்றன? “ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால்” என்று இயேசு சொன்னார். (யோவான் 10:4) ஆடுகளால் மேய்ப்பனின் சத்தத்தை உண்மையில் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? ஜார்ஜ் ஏ. ஸ்மித் என்பவர் த ஹிஸ்டாரிக்கல் ஜியோகிரஃபி ஆஃப் த ஹோலிலேண்ட் என்ற தன் புத்தகத்தில் தான் கவனித்ததை இவ்வாறு எழுதினார்: “சில சமயங்களில் மத்தியான வேளைகளில் அந்த யூதேய கிணறுகளில் ஒன்றின் அருகில் நாங்கள் ஓய்வெடுப்போம். அங்குதான் மூன்று அல்லது நான்கு மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு வருவார்கள். அப்போது எல்லாருடைய மந்தையின் ஆடுகளும் கலந்துவிடும்; எப்படி இந்த மேய்ப்பர்கள் தங்கள் மந்தையின் ஆடுகளை பிரித்து அழைத்து செல்வார்கள் என்று நாங்கள் யோசித்ததுண்டு. ஆடுகள் தண்ணீரெல்லாம் குடித்து, விளையாடி முடிந்த பின்பு, மேய்ப்பர்கள் ஒவ்வொருவரும் பள்ளத்தாக்கின் வெவ்வேறு பக்கங்களில் போய் நின்றுகொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய முறையில் பிரத்தியேகமாக குரல் கொடுப்பார்கள்; அப்போது அந்தந்த மந்தையைச் சேர்ந்த ஆடுகள் கூட்டத்திலிருந்து பிரிந்து அதனதன் மேய்ப்பனிடம் போய் நின்றுகொள்ளும்; மந்தைகள் எப்படி வந்தனவோ அப்படியே ஒழுங்காக பிரிந்து சென்றுவிடும்.” இயேசு தாம் சொல்ல வந்த குறிப்பை வலியுறுத்த இதைவிட சிறந்த உதாரணத்தை பயன்படுத்தியிருக்க முடியாது. நாம் அவருடைய போதனைகளை தெளிவாக அறிந்துகொண்டு அவற்றுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய வழிநடத்தலைப் பின்பற்றினால், ‘நல்ல மேய்ப்பனின்’ கனிவான, கரிசனையான கவனிப்பின்கீழ் வரலாம்.—யோவான் 10:11.
கேட்போர் அறிந்திருந்த சம்பவங்களை பயன்படுத்தினார்
19. ஒரு கருத்து தவறு என்பதை சுட்டிக்காட்ட இயேசு எவ்வாறு உள்ளூர் துயர சம்பவம் ஒன்றை திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தினார்?
19 அனுபவங்களும் உதாரணங்களும் அவை கற்பிக்கும் பாடங்களும்கூட பயனுள்ள உவமைகளாக இருக்கலாம். யார் துன்பம் அனுபவித்தாக வேண்டுமோ அவர்களுக்குத்தான் அது வரும் என்ற கருத்து தவறு என்பதை நிரூபிப்பதற்கு அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை இயேசு ஒருமுறை பயன்படுத்தினார். அவர் இவ்வாறு சொன்னார்: “சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?” (லூக்கா 13:4) முன்விதிக்கப்படுதல் என்ற கோட்பாடு தவறானது என்பதை இயேசு திறமையாக விளக்கினார். அந்த 18 பேரும் கடவுளின் கோபத்தை தூண்டிய ஏதோ பாவம் செய்ததால் இறக்கவில்லை. மாறாக, சமயமும் எதிர்பாராத சம்பவமுமே அவர்களுடைய துக்கமான முடிவுக்கு காரணம். (பிரசங்கி 9:11, NW) இப்படியாக தமக்கு செவிகொடுத்தவர்களுக்கு நன்கு தெரிந்திருந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு ஒரு பொய் போதனையை தவறென சுட்டிக்காட்டினார்.
20, 21. (அ) பரிசேயர்கள் எவ்வாறு இயேசுவின் சீஷர்களிடம் குற்றம் கண்டுபிடித்தார்கள்? (ஆ) ஓய்வுநாள் சட்டம் கண்டிப்போடு கடைப்பிடிக்கப்படும்படி கடவுள் எதிர்பார்க்கவே இல்லை என்பதை விளக்குவதற்கு வேதாகமத்திலுள்ள என்ன பதிவை இயேசு பயன்படுத்தினார்? (இ) அடுத்த கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?
20 இயேசு போதித்தபோது வேதாகமத்தில் இருந்த உதாரணங்களையும்கூட பயன்படுத்தினார். ஓய்வுநாளில் சீஷர்கள் கதிர்களைக் கொய்து தின்றதற்காக பரிசேயர்கள் அவருடைய சீஷர்களைக் குறை சொன்ன சந்தர்ப்பத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். உண்மையில் சீஷர்கள் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறவில்லை; ஆனால் ஓய்வுநாளில் இது சட்டவிரோதமான வேலை என பரிசேயர்கள் நியாயப்பிரமாணத்துக்கு கற்பித்த விளக்கத்தையே அவர்கள் மீறிக்கொண்டிருந்தார்கள். ஓய்வுநாள் சட்டம் இப்படி தேவையில்லாத கண்டிப்போடு கடைப்பிடிக்கும்படி கடவுள் எதிர்பார்க்கவே இல்லை என்பதை விளக்குவதற்கு இயேசு 1 சாமுவேல் 21:3-6-ல் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டினார். பசியாயிருந்தபோது தாவீதும் அவருடன் இருந்தவர்களும் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சென்று, தேவசமூகத்தில் வைக்கப்பட்டிருந்த அப்பங்களை எடுத்து சாப்பிட்டார்கள். பொதுவாக பழைய அப்பங்களை ஆசாரியர்களே சாப்பிட்டார்கள். ஆனால், அந்தச் சூழ்நிலைமையில், அவற்றை சாப்பிட்டதற்காக தாவீதும் அவரை சேர்ந்தவர்களும் குற்றவாளிகளாக கருதப்படவில்லை. பழைய அப்பங்களை ஆசாரியராக அல்லாதவர்கள் சாப்பிட்டதைப் பற்றி பைபிளிலுள்ள ஒரேவொரு பதிவு இதுவே. சரியாக எந்த சமயத்தில் எந்தப் பதிவை பயன்படுத்த வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார், கேட்டுக்கொண்டிருந்த யூதர்களும் அந்த பதிவை நன்கு அறிந்திருந்தார்கள்.—மத்தேயு 12:1-8.
21 ஆம், இயேசு மிகப் பெரிய போதகர்! கேட்போர் புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் முக்கியமான சத்தியங்களை எடுத்துச் சொல்வதில் அவருக்கிருந்த ஈடிணையற்ற திறமையை பார்த்து நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஆனால் நாம் போதிக்கையில் அவரை எப்படி பின்பற்றலாம்? இது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a இயேசு பலதரப்பட்ட உவமைகளை உபயோகித்தார். உதாரணங்கள், ஒப்புமைகள், உருவகங்கள் ஆகியவை அவற்றில் சில. அவர் நீதிக் கதையை பயன்படுத்துவதில் பிரசித்தி பெற்றிருந்தார். நீதிக்கதை என்பது “பொதுவாக கற்பனையான, சிறிய கதை” என்று விளக்கப்படுகிறது. “இதிலிருந்து தார்மீக அல்லது ஆன்மீக சத்தியம் பெறப்படுகிறது.”
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இயேசு ஏன் உவமைகளால் போதித்தார்?
• முதல் நூற்றாண்டில் கேட்போர் புரிந்துகொள்ளத்தக்க உவமைகளையே இயேசு பயன்படுத்தியதை என்ன உதாரணம் காட்டுகிறது?
• படைப்பைப் பற்றி தாம் அறிந்திருந்தவற்றை இயேசு எவ்வாறு தம் உவமைகளில் திறம்பட பயன்படுத்தினார்?
• கேட்போர் அறிந்திருந்த சம்பவங்களை இயேசு எந்த விதங்களில் பயன்படுத்திக் கொண்டார்?
[பக்கம் 15-ன் படங்கள்]
சில வெள்ளிப் பணங்களே கடன்பட்டிருந்தவனை ஓர் அடிமை மன்னிக்க மறுத்ததையும், வீட்டிலிருந்து தனக்குரிய சொத்து அனைத்தையும் எடுத்துச் சென்ற கெட்ட குமாரனை தகப்பன் மன்னித்ததையும் பற்றி இயேசு கூறினார்
[பக்கம் 16-ன் படம்]
நல்ல சமாரியனின் உவமையில் இயேசு என்ன குறிப்பை வலியுறுத்தினார்?
[பக்கம் 17-ன் படம்]
ஆடுகள் உண்மையில் மேய்ப்பனின் சத்தத்தை அறிந்து அதற்கு கீழ்ப்படிகின்றனவா?