பெரிய போதகரை பின்பற்றுங்கள்
‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுச் சென்று மக்களை சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்கு போதியுங்கள்.’—மத்தேயு 28:19, 20, NW.
1, 2. (அ) நாம் அனைவருமே எவ்வாறு ஒரு விதத்தில் போதகர்களாக இருக்கிறோம்? (ஆ) போதிப்பது சம்பந்தமாக உண்மை கிறிஸ்தவர்களுக்கு என்ன பிரத்தியேக பொறுப்பு உண்டு?
நீங்கள் ஒரு போதகரா? ஒரு விதத்தில் நாம் அனைவரும் போதகர்களே. வழிதெரியாமல் திண்டாடுபவருக்கு வழி காட்டும்போதும் சரி, ஒரு குறிப்பிட்ட பணியை செய்வதற்கு சக பணியாளருக்கு சொல்லிக் கொடுக்கும்போதும் சரி, ஷூ லேஸைக் கட்ட பிள்ளைக்கு கற்றுக்கொடுக்கும்போது சரி நீங்கள் போதிக்கிறீர்கள். இப்படி மற்றவர்களுக்கு உதவுவது நமக்கு ஒருவித திருப்தியளிக்கிறது அல்லவா?
2 போதிப்பது சம்பந்தமாக உண்மை கிறிஸ்தவர்களுக்கு பிரத்தியேக பொறுப்பு உண்டு. ‘மக்களை சீஷராக்கி . . . அவர்களுக்கு போதிக்க’ வேண்டுமென நமக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. (மத்தேயு 28:19, 20, NW) சபையிலும்கூட போதிக்கும் வாய்ப்பு நமக்கு உண்டு. சபையின் பக்திவிருத்திக்காக, ‘மேய்ப்பர்களாகவும் போதகர்களாகவும்’ சேவை செய்ய தகுதி வாய்ந்த ஆண்கள் நியமிக்கப்படுகிறார்கள். (எபேசியர் 4:11-13) கிறிஸ்தவ நடவடிக்கைகளில் தினமும் ஈடுபடுகையில், முதிர்வயது பெண்கள் இளவயது பெண்களுக்கு ‘நற்காரியங்களைப் போதிக்கிறவர்களாக’ இருக்க வேண்டும். (தீத்து 2:3-5) உடன் விசுவாசிகளை உற்சாகப்படுத்துமாறு நம் அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது; மற்றவர்களை கட்டியெழுப்புவதற்கு பைபிளைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் இந்த அறிவுரைக்கு செவிசாய்க்கலாம். (1 தெசலோனிக்கேயர் 5:11) கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பவராக இருப்பதும், நீண்ட கால பயன்களை அள்ளித்தரும் ஆன்மீக மதிப்பீடுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
3. போதிப்பவர்களாக நம் திறமையை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்?
3 என்றாலும், போதிப்பவர்களாக நம் திறமையை நாம் எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்? பெரிய போதகராகிய இயேசுவைப் பின்பற்றுவதே அதற்கான முக்கிய வழியாகும். ‘ஆனால் இயேசு பரிபூரணராக இருந்தாரே, நாம் எப்படி அவரை பின்பற்ற முடியும்?’ என சிலர் கேட்கலாம். நாம் பரிபூரண போதகர்களாக இருக்க முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், நாம் திறமைகளில் எவ்வளவு குறைவுபட்டாலும் இயேசு கற்பித்த விதத்தை முடிந்தளவு பின்பற்றலாம். எளிய நடை, திறம்பட்ட கேள்விகள், தர்க்கரீதியான நியாயவாதம், பொருத்தமான உவமைகள் ஆகியவை இயேசுவின் போதகத்தில் வெளிப்பட்டன. இந்த நான்கு உத்திகளை நாமும் எவ்வாறு பயன்படுத்தலாமென பார்க்கலாம்.
எளிய நடையில் போதித்தல்
4, 5. (அ) எளிய நடை எவ்வாறு பைபிள் சத்தியத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது? (ஆ) எளிய நடையில் போதிக்க வார்த்தைகளுக்கு கவனம் செலுத்துவது ஏன் அவசியம்?
4 கடவுளுடைய வார்த்தையின் அடிப்படை சத்தியங்கள் புரிந்துகொள்ள கடினமானவை அல்ல. “பிதாவே! . . . இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என இயேசு ஜெபித்தார். (மத்தேயு 11:25) நேர்மையும் தாழ்மையுமுள்ளோருக்கு யெகோவா தம் நோக்கங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். (1 கொரிந்தியர் 1:26-28) எனவே, எளிய நடையே பைபிள் சத்தியத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது.
5 நீங்கள் பைபிள் படிப்பை நடத்தும்போது அல்லது ஆர்வமுள்ளவர்களை மீண்டும் சந்திக்கும்போது எவ்வாறு எளிய நடையில் போதிக்கலாம்? பெரிய போதகரிடமிருந்து எதைக் கற்றுக்கொண்டோம்? இயேசுவுக்கு செவிகொடுத்தவர்கள் பெரும்பாலும் ‘கல்வியறியாத சாமான்ய மனிதராக’ இருந்தனர்; அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவர் சாதாரண மொழிநடையை பயன்படுத்தினார். (அப்போஸ்தலர் 4:13, தி.மொ.) அப்படியென்றால், எளிய நடையில் போதிப்பதற்கு முதலில் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்துவது அவசியம். கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு ‘மிகுந்த சொல்வன்மையோடு’ பேசுவது மற்றவர்களுக்கு, அதுவும் அதிக படிப்போ திறமையோ இல்லாதவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம். (1 கொரிந்தியர் 2:1, 2, பொது மொழிபெயர்ப்பு) எளிய வார்த்தைகளை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்துகையில் சத்தியத்தை திறம்பட்ட விதத்தில் போதிக்க முடியும் என்பதற்கு இயேசுவே சிறந்த உதாரணம்.
6. எக்கச்சக்கமான விஷயங்களை சொல்லி பைபிள் மாணாக்கரை திக்குமுக்காட வைப்பதை நாம் எப்படி தவிர்க்கலாம்?
6 எளிய நடையில் போதிக்க எக்கச்சக்கமான விஷயங்களை சொல்லாதிருப்பதும் அவசியம்; இல்லையென்றால் பைபிள் மாணாக்கர் திக்குமுக்காடிப் போவார். சீஷர்களின் வரம்புகளை மனதில் வைத்தே இயேசு அவர்களிடம் நடந்துகொண்டார். (யோவான் 16:12) நாமும் நம் மாணாக்கரின் குறைநிறைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை பயன்படுத்தி படிப்பு நடத்தும்போது எல்லா நுட்பவிவரங்களையும் விலாவாரியாக விளக்க வேண்டியதில்லை.a குறிப்பிட்ட அளவு படித்து முடிப்பதே மிக முக்கியம் என்பதுபோல் அவசர அவசரமாக படிப்பை நடத்த வேண்டியதும் இல்லை. மாறாக, மாணாக்கரின் தேவைகளையும் திறமைகளையும் பொறுத்து எந்தளவுக்குப் படிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதே ஞானமானது. இயேசுவின் சீஷராகவும் யெகோவாவின் வணக்கத்தாராகவும் ஆக மாணாக்கருக்கு உதவுவதே நம் இலட்சியம். எவ்வளவு நேரம் செலவழிந்தாலும் ஆர்வமுள்ள மாணவர் தெளிவாக புரிந்துகொள்ளும் வரை கற்பிப்பது அவசியம். அப்போதுதான் சத்தியம் அவரது இருதயத்தில் பதியும், அவரை செயல்படத் தூண்டும்.—ரோமர் 12:2.
7. சபையில் பேச்சுக்கள் கொடுக்கையில் என்ன குறிப்புகளை மனதில் வைப்பது எளிய நடையில் போதிக்க உதவும்?
7 நாம் சபையில், அதுவும் சபைக்கு புதியவர்கள் வந்திருக்கையில் பேச்சுக் கொடுக்கும்போது எவ்வாறு ‘எளிதாக புரிந்துகொள்ளப்படும்’ விதத்தில் பேசலாம்? (1 கொரிந்தியர் 14:9, NW) உதவியளிக்கும் மூன்று குறிப்புகளை கவனியுங்கள். முதலாவதாக, பழக்கமில்லாத பதங்களை பயன்படுத்தினால் அவற்றை விளக்குங்கள். நாம் கடவுளுடைய வார்த்தையை படித்துப் புரிந்துகொண்டிருப்பதால் நமக்கு மட்டுமே பழக்கப்பட்ட பதங்கள் இருக்கலாம். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,” “வேறே ஆடுகள்,” “மகா பாபிலோன்” போன்ற பதங்களை பயன்படுத்துகையில் அவற்றின் அர்த்தத்தை எளிய வார்த்தைகளில் விளக்க வேண்டியிருக்கலாம். இரண்டாவதாக, அதிகமான வார்த்தைகளை தவிருங்கள். வளவளவென்று பேசி, மிக விலாவாரியாக விளக்கினால் கேட்பவர்கள் ஆர்வம் இழந்துவிடுவர். தேவையற்ற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தவிர்க்கையில் தெளிவு பிறக்கும். மூன்றாவதாக, அளவுக்கு அதிகமான தகவலை திணிக்க முயலாதீர்கள். ஆராய்கையில் ஆர்வத்திற்குரிய அநேக விவரங்களை நாம் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் தகவலை ஒருசில முக்கிய குறிப்புகளாக பிரித்துக்கொண்டு, அவற்றை ஆதரிக்கும் விஷயங்களையும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தெளிவாக விளக்க முடிந்த விஷயங்களையும் மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.
திறம்பட்ட கேள்விகள்
8, 9. கேட்பவரின் ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகளை நாம் எவ்வாறு தேர்ந்தெடுப்பது? உதாரணங்கள் தருக.
8 கேள்விகளைப் பயன்படுத்துவதில் இயேசு மாமேதையாக திகழ்ந்தார்; சீஷர்களின் மனதிலிருப்பதை வெளிக்கொண்டு வருவதற்கும் அவர்களது சிந்தனைத் திறனை தூண்டுவதற்கும் அதைப் பயிற்றுவிப்பதற்கும் அவர் கேள்விகளைப் பயன்படுத்தினார். இயேசு தமது கேள்விகளால் கனிவோடு அவர்களது இருதயங்களை எட்டினார், செயல்பட தூண்டினார். (மத்தேயு 16:13, 15; யோவான் 11:26) இயேசுவைப் போல் நாமும் எவ்வாறு கேள்விகளை திறம்பட பயன்படுத்தலாம்?
9 வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கையில், ஆர்வத்தைத் தூண்டுவதற்காக நாம் கேள்விகளை பயன்படுத்தலாம்; இது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேச வழிவகுக்கும். கேட்பவரின் ஆர்வத்திற்கு ஏற்ற கேள்விகளை நாம் எப்படி தேர்ந்தெடுப்பது? கூர்ந்து கவனியுங்கள். ஒரு வீட்டிற்குள் நுழைகையில் சுற்றும் முற்றும் பாருங்கள். வீட்டில் எங்கும் பொம்மைகள் கிடக்கின்றனவா? அப்படியென்றால் வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள் என அர்த்தம். ஆகவே, ‘உங்கள் பிள்ளைகள் பெரியவர்களாகையில் இந்த உலகம் எப்படியிருக்கும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?’ என நாம் கேட்கலாம். (சங்கீதம் 37:10, 11) கதவில் அநேக பூட்டுகள் தொங்குகின்றனவா, அல்லது கெடுபிடியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? அப்படியென்றால், ‘நீங்களும் நானும் வீட்டிலும் வெளியிலும் பாதுகாப்பாக இருக்கும் காலம் எப்போதாவது வருமென நினைக்கிறீர்களா?’ என கேட்கலாம். (மீகா 4:3, 4) வீல்சேரை பார்க்கிறீர்களா? அப்படியென்றால், ‘எல்லாருமே ஆரோக்கியத்தோடு வாழும் காலம் எப்போதாவது வருமா?’ என கேட்கலாம். (ஏசாயா 33:24) வேதவாக்கியங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் அநேக ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.b
10. பைபிள் மாணாக்கரின் இருதயத்திலுள்ள எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ‘மொண்டெடுக்க’ நாம் எவ்வாறு கேள்விகளைப் பயன்படுத்தலாம், ஆனால் எதை மறந்துவிடக்கூடாது?
10 பைபிள் படிப்புகளை நடத்தும்போது நாம் எவ்வாறு கேள்விகளை திறம்பட பயன்படுத்தலாம்? இயேசுவைப் போல் நம்மால் இருதயங்களை அறிய முடியாது. இருந்தாலும் சாதுரியத்தோடும் விவேகத்தோடும் கேள்விகளை பயன்படுத்தினால், மாணாக்கரின் இருதயத்திலுள்ள எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ‘மொண்டெடுக்க’ முடியும். (நீதிமொழிகள் 20:5) உதாரணமாக, அறிவு புத்தகத்தில், “தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது ஏன் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது” என்ற அதிகாரத்தை நடத்துவதாக வைத்துக் கொள்வோம். நேர்மையின்மை, வேசித்தனம் போன்ற பல காரியங்களில் கடவுளின் கண்ணோட்டத்தை அது விளக்குகிறது. கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு மாணாக்கர் சரியான பதில் சொன்னாலும் கற்றுக்கொள்வதை அவர் உண்மையில் நம்புகிறாரா? ‘இந்தக் காரியங்களில் யெகோவாவின் கண்ணோட்டம் உங்களுக்கு நியாயமானதாக தோன்றுகிறதா?’ என்றும் ‘இந்த பைபிள் நியமங்களை நீங்கள் எப்படி கடைப்பிடிக்கலாம்?’ என்றும் நாம் கேட்கலாம். இருந்தாலும் மாணாக்கரின் கண்ணியம் குறையாதவாறு அவரிடம் மரியாதையோடு பேச வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். பைபிள் மாணாக்கரை தர்மசங்கடப்படுத்தும் அல்லது அவமானப்படுத்தும் கேள்விகளை நாம் கேட்க விரும்ப மாட்டோம்.—நீதிமொழிகள் 12:18.
11. பொதுப் பேச்சுக் கொடுப்பவர்கள் என்ன விதங்களில் கேள்விகளை திறம்பட பயன்படுத்தலாம்?
11 பொதுப் பேச்சாளர்களும் கேள்விகளை திறம்பட பயன்படுத்தலாம். சிந்தனையைத் தூண்டும் கேள்விகள்—கேட்பவர்கள் வாய் திறந்து பதிலளிக்கும்படி எதிர்பார்க்காமல் கேட்கும் கேள்விகள்—சிந்திக்கவும் நியாயப்படுத்திப் பார்க்கவும் கேட்போரை தூண்டலாம். அப்படிப்பட்ட கேள்விகளை இயேசு அவ்வப்போது பயன்படுத்தினார். (மத்தேயு 11:7-9) அதோடு, ஆரம்பக் குறிப்புகளுக்குப் பிறகு, கலந்தாலோசிக்கவிருக்கும் முக்கிய குறிப்புகளை சொல்வதற்கு ஒரு பேச்சாளர் கேள்விகளைப் பயன்படுத்தலாம். “இந்தப் பேச்சில் நாம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்கப் போகிறோம் . . . ” என அவர் சொல்லலாம். பிறகு முடிவுரையில் முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்ய அந்தக் கேள்விகளை மீண்டும் பயன்படுத்தலாம்.
12. கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆறுதலைக் கண்டடைய உடன் விசுவாசிக்கு உதவுவதில் கிறிஸ்தவ மூப்பர்கள் எவ்வாறு கேள்விகளைப் பயன்படுத்தலாம் என்பதற்கு உதாரணம் தருக.
12 கிறிஸ்தவ மூப்பர்கள் மேய்ப்பு சந்திப்புகள் செய்கையில், யெகோவாவின் வார்த்தையிலிருந்து ஆறுதலைப் பெற “மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு” உதவுவதற்காக கேள்விகளைப் பயன்படுத்தலாம். (1 தெசலோனிக்கேயர் 5:14, பொ.மொ.) உதாரணத்திற்கு, சோர்வுற்றிருக்கும் ஒருவரை உற்சாகப்படுத்த சங்கீதம் [திருப்பாடல்கள்] 34:18-ஐ ஒரு மூப்பர் பயன்படுத்தலாம். “உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்” (பொ.மொ.) என அது சொல்கிறது. இது எவ்வாறு தனக்குப் பொருந்துகிறது என சோர்வுற்றவர் புரிந்துகொள்வதற்கு மூப்பர் இவ்வாறு கேட்கலாம்: ‘யெகோவா யாருக்கு அருகில் இருக்கிறார்? ‘உள்ளம் உடைந்துவிட்டதுபோல்,’ ‘நெஞ்சம் நைந்துவிட்டதுபோல்’ சிலசமயத்தில் நீங்கள் உணருகிறீர்களா? பைபிளின்படி யெகோவா அப்படிப்பட்டவர்களுக்கு அருகில் இருக்கிறார் என்றால், உங்கள் அருகிலும் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?’ இப்படி கனிவாக நம்பிக்கையூட்டுவது மனமுடைந்தவரின் ஆவியை உயிர்ப்பிக்கலாம்.—ஏசாயா 57:15.
தர்க்கரீதியான நியாயவாதம்
13, 14. (அ) பார்க்க முடியாத ஒரு கடவுளை நம்புவதில்லை என சொல்பவரிடம் நாம் எவ்வாறு நியாயங்காட்டி பேசலாம்? (ஆ) நாம் சொல்வதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களென ஏன் எதிர்பார்க்க முடியாது?
13 ஊழியத்தில், இணங்க வைக்கும் விதத்தில் வலுவான நியாயங்களை காட்டி இருதயங்களை எட்ட நாம் விரும்புகிறோம். (அப்போஸ்தலர் 19:8, NW; 28:23, 24, NW) அப்படியென்றால் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை மற்றவர்கள் நம்புவதற்கு, தர்க்கரீதியில் மிகவும் சிக்கல் வாய்ந்த வாதங்களை பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என அர்த்தமா? இல்லவே இல்லை. நியாயமான வாதம் சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. எளிய நடையில் தர்க்கரீதியாக விவாதிப்பதே பெரும்பாலும் மிகத் திறம்பட்ட முறையாகும். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்.
14 கடவுளை பார்க்க முடியாததால் அவர் இருப்பதை நம்புவதில்லை என சொல்பவரிடம் நாம் எவ்வாறு பேசலாம்? காரணகாரியம் என்ற இயற்கை நியதியின் அடிப்படையில் நியாயங்காட்டிப் பேசலாம். ஒரு காரியத்தை அல்லது விளைவை நாம் பார்க்கும்போது அதற்கு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டுமென ஒப்புக்கொள்கிறோம். நாம் இப்படிச் சொல்லலாம்: ‘நீங்கள் ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் அழகாக கட்டப்பட்ட ஒரு வீட்டைப் பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த வீட்டில் உணவுப்பொருட்கள் (காரியம்) சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன; யாரோ ஒருவர் (காரணம்) அந்த வீட்டைக் கட்டி அதன் அலமாரிகளில் பொருட்களை நிரப்பி வைத்திருக்கிறார் என்று உடனடியாக நினைப்பீர்கள் அல்லவா? அதேவிதமாக இயற்கையில் காணப்படும் வடிவமைப்பிற்கும் பூமியென்ற “அலமாரியில்” நாம் காணும் ஏராளமான உணவுக்கும் (காரியம்) யாரோ ஒருவர் (காரணம்) பொறுப்புள்ளவராக இருப்பதை ஏற்றுக்கொள்வது நியாயம்தானே?’ இந்த உண்மையை பைபிள் எளிய வார்த்தைகளில் இவ்வாறு தெளிவாக குறிப்பிடுகிறது: “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரெயர் 3:4) இருந்தாலும் எவ்வளவுதான் நியாயமாக நாம் பேசினாலும் எல்லாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “சரியான மனச்சாய்வுள்ளவர்கள்” மட்டுமே விசுவாசிகளாவார்கள் என பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 13:48, NW; 2 தெசலோனிக்கேயர் 3:2.
15. யெகோவாவின் பண்புகளையும் வழிகளையும் வலியுறுத்துவதற்கு எவ்விதமாக நியாயங்காட்டிப் பேசலாம், இதற்கு என்ன இரு உதாரணங்கள் இருக்கின்றன?
15 வெளி ஊழியத்திலோ சபையிலோ நாம் போதிக்கையில், யெகோவாவின் பண்புகளையும் வழிகளையும் வலியுறுத்துவதற்கு தர்க்கரீதியான நியாயவாதத்தைப் பயன்படுத்தலாம். முக்கியமாக, இரு காரியங்களை ஒப்பிட்டு ‘அதிக நிச்சயம் அல்லவா . . .’ என இயேசு சிலசமயங்களில் நியாயங்காட்டி பேசியதைப் போல் நாமும் பேசுவது அதிக பயன்தரும். (லூக்கா 11:13; 12:24) இவ்வாறு ஒப்பிட்டு, நியாயங்காட்டி பேசுவது விஷயத்தை மனதில் ஆழமாக பதிய வைக்கலாம். எரிநரக கோட்பாடு எவ்வளவு அபத்தமானது என்பதைச் சுட்டிக்காட்ட நாம் இவ்வாறு சொல்லலாம்: ‘அன்புள்ள எந்த அப்பாவும் பிள்ளையைத் தண்டிப்பதற்காக அவன் கையை நெருப்பில் பொசுக்கிக்கொண்டே இருக்க மாட்டார். அப்படியிருக்கையில் நம் அன்பான பரலோகத் தகப்பனுக்கு எரிநரகத்தை பற்றிய எண்ணமே வெறுக்கத்தக்கதாக இருப்பது அதிக நிச்சயம் அல்லவா!’ (எரேமியா 7:31) யெகோவா தம் ஊழியர்கள் ஒவ்வொருவர்மீதும் அக்கறை காட்டுவதை புரிய வைக்க இவ்வாறு சொல்லலாம்: “யெகோவா கோடானு கோடி நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் பெயரையும் அறிந்திருக்கிறார் என்றால், தம்மை நேசிக்கும் மனிதர்களிடம் அக்கறை காட்டுவது அதிக நிச்சயம் அல்லவா; அதுவும் தம் குமாரனின் மதிப்புமிக்க இரத்தத்தால் அவர்களை வாங்கியிருக்கிறாரே!’ (ஏசாயா 40:26; அப்போஸ்தலர் 20:28, NW) இப்படிப்பட்ட வலுவான நியாயவாதம் மற்றவர்களின் இருதயத்தை எட்ட நமக்கு உதவலாம்.
பொருத்தமான உவமைகள்
16. போதிப்பதில் உவமைகள் ஏன் மதிப்பு வாய்ந்தவை?
16 திறம்பட்ட உவமைகள் நம் போதனைக்கு அதிக சுவையூட்டி, கேட்பதற்கான ஆவலைத் தூண்டுகின்றன. போதிப்பதைப் பொறுத்ததில் உவமைகள் ஏன் மதிப்பு வாய்ந்தவை? “பார்க்க முடியாததைக் குறித்து சிந்திப்பது மனிதனுக்கு மிகக் கடினமான ஒன்று” என ஒரு ஆசிரியர் கூறினார். உவமைகள், கருத்தாழமிக்க காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, மனதில் பதிய வைக்கின்றன, இவ்வாறு புதிய கருத்துக்களை இன்னும் முழுமையாக கிரகிக்க உதவுகின்றன. உவமைகளை பயன்படுத்துவதில் இயேசு தலைசிறந்து விளங்கினார். (மாற்கு 4:33, 34) போதிப்பதில் நாம் எப்படி இந்த உத்தியைப் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
17. என்ன நான்கு அம்சங்கள் உவமைகளை திறம்பட்டதாக்கும்?
17 உவமைகள் எப்போது திறம்பட்டவையாக ஆகின்றன? முதலாவதாக அவை கேட்போருக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும்; கேட்போரால் உடனடியாக சம்பந்தப்படுத்திப் பார்க்க முடிந்த விதத்தில் அவை இருக்க வேண்டும். கேட்போர் அன்றாடம் பார்த்து பழக்கப்பட்டிருந்த காரியங்களை பயன்படுத்தியே இயேசு அநேக உவமைகளைச் சொன்னார் என்பதை ஞாபகம் வையுங்கள். இரண்டாவதாக, சொல்லவரும் குறிப்புக்கு உவமை பொருத்தமானதாக இருக்க வேண்டும். ஒப்புமை பொருத்தமாக இல்லாவிட்டால் உவமையானது கேட்போரின் கவனத்தை திசைதிருப்பவே செய்யும். மூன்றாவதாக, ஒரு உவமையில் தேவையற்ற விவரங்களை அநாவசியமாக திணிக்கக் கூடாது. இயேசு அவசியமற்றதை தவிர்த்து தேவையான விவரங்களை மட்டுமே குறிப்பிட்டதை நினைவில் வையுங்கள். நான்காவதாக, நாம் ஒரு உவமையைப் பயன்படுத்தினால் அதன் பொருத்தம் தெளிவாக இருக்க வேண்டுமென்பதை மறந்துவிடக்கூடாது. இல்லையென்றால் சிலர் குறிப்பை தவறவிட்டுவிடுவார்கள்.
18. எப்படி பொருத்தமான உவமைகளை சிந்திப்பது?
18 நாம் எப்படி பொருத்தமான உவமைகளை சிந்திப்பது? நீண்ட, விலாவாரியான கதைகளை நாம் உபயோகிக்க வேண்டியதில்லை. சுருக்கமான உவமைகளே மிகத் திறம்பட்டவை. சொல்லவரும் குறிப்புக்கு உதவும் சில உதாரணங்களை மட்டுமே யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, கடவுளுடைய மன்னிக்கும் குணத்தைப் பற்றி பேசுவதாக வைத்துக்கொள்ளலாம். அப்போஸ்தலர் 3:19-ல் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை ஒரு உவமையால் விளக்க நாம் விரும்பலாம். அந்த வசனத்தில் யெகோவா நம் தவறுகளை ‘துடைத்தழித்து விடுவதாக’ (NW) சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே தத்ரூபமான ஒரு அணிநடைதான்; ஆனால் அந்தக் குறிப்பை சிறப்பித்துக் காட்ட என்ன அன்றாட உதாரணத்தை பயன்படுத்தலாம்? ரப்பர் அல்லது ஸ்பாஞ்சை பயன்படுத்தலாமா? ‘யெகோவா நம் பாவங்களை மன்னிக்கும்போது, ஒரு ஸ்பாஞ்சை (அல்லது ரப்பரை) எடுத்து அவற்றை அவர் துடைத்து அழித்துவிடுவதைப்போல் இருக்கிறது’ என நாம் சொல்லலாம். இவ்வளவு எளிய உவமையை புரிந்துகொள்வது கடினமாகவே இருக்காது.
19, 20. (அ) நல்ல உவமைகளை நாம் எங்கே பெறலாம்? (ஆ) நம் பிரசுரங்களில் வெளிவந்த திறம்பட்ட உவமைகளுக்கு சில உதாரணங்கள் தருக. (பெட்டியையும் காண்க.)
19 நிஜ வாழ்க்கை உதாரணங்கள் உட்பட பொருத்தமான உவமைகளை எங்கே பெறலாம்? உங்கள் சொந்த வாழ்க்கையையும் உடன் விசுவாசிகளுடைய பல்வேறு பின்னணிகளையும் அனுபவங்களையும் அலசிப் பார்த்துப் பெறலாம். இன்னும் பல காரியங்களிலிருந்தும் உவமைகளைத் தேர்ந்தெடுக்கலாம்; உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்கள், வீட்டு சாமான்கள், யாவரும் அறிந்த சமீப சம்பவம் ஒன்று என எதிலிருந்தும் அவற்றை தேர்ந்தெடுக்கலாம். நல்ல உவமைகளை கண்டடைவதற்கான சிறந்த வழி விழிப்புணர்வுடன் இருந்து, நம்மைச் சுற்றியிருக்கும் அன்றாட சூழ்நிலைகளை ‘கவனித்துப் பார்ப்பதாகும்.’ (அப்போஸ்தலர் 17:22, 23) பொதுப் பேச்சு சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “மனித வாழ்க்கையையும் அதன் பல்வேறு பணிகளையும் கூர்ந்து கவனிக்கும் பேச்சாளர் எல்லா விதமான ஆட்களோடும் பேசுகிறார், காரியங்களை உன்னிப்பாக ஆராய்கிறார், அவற்றை புரிந்துகொள்ளும் வரை கேள்விகள் கேட்கிறார், தேவைப்படுகையில் பயன்படுத்த ஏராளமான உவமைகளை சேகரித்து வைக்கிறார்.”
20 திறம்பட்ட உவமைகளின் மற்றொரு களஞ்சியம், யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளும், மற்ற பிரசுரங்களும் ஆகும். இவற்றில் பயன்படுத்தப்படும் உவமைகளை கவனிப்பதன் மூலம் நீங்கள் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம்.c உதாரணத்திற்கு அறிவு புத்தகத்தில் 17-ஆம் அதிகாரத்தில் 11-ஆம் பாராவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமையை எடுத்துக் கொள்ளுங்கள். சபையிலுள்ளவர்களின் வித்தியாசமான ஆளுமைகளை, சாலையில் உங்கள் வாகனத்தோடு சேர்ந்து பயணிக்கும் பல வாகனங்களுக்கு அது ஒப்பிடுகிறது. இது ஏன் திறம்பட்ட ஒரு உவமை? ஏனெனில் இது அன்றாட சூழ்நிலைகளின் அடிப்படையிலானது, சொல்லவரும் குறிப்போடு சரியாக பொருந்துகிறது, அதன் பொருத்தமும் தெளிவாக இருக்கிறது. பிரசுரிக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற உவமைகளை நாம் பயன்படுத்தலாம்; ஒருவேளை பைபிள் மாணாக்கரின் தேவைகளுக்கு அல்லது கொடுக்கவிருக்கும் பேச்சிற்கு ஏற்ப அவற்றை சற்று மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
21. கடவுளுடைய வார்த்தையை திறம்பட போதிப்பதால் கிடைக்கும் பயன்கள் யாவை?
21 திறம்பட்ட போதகருக்கு கிடைக்கும் பயன்கள் பல. நாம் போதிக்கையில், மற்றவர்களோடு கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறோம்; அவர்களுக்கு உதவ நம்மிடம் உள்ளதை கொடுக்கிறோம். அப்படி கொடுப்பது சந்தோஷத்தைத் தருகிறது; ஏனெனில், “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதிலே அதிக மகிழ்ச்சி” என பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 20:35, NW) கடவுளுடைய வார்த்தையை போதிப்பவர்களுக்கு, உண்மையான, நிரந்தர மதிப்புள்ள ஒன்றை—யெகோவாவைப் பற்றிய சத்தியத்தை—மற்றவர்களுக்கு கொடுப்பது சந்தோஷத்தை அளிக்கிறது. பெரிய போதகராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதை அறிந்திருப்பதில் கிடைக்கும் திருப்தியையும் நாம் அனுபவிக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b பக்கங்கள் 9-15-ல், “அறிமுகங்கள்—வெளி-ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு” என்ற பகுதியைக் காண்க.—யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
c உதாரணங்களைக் கண்டுபிடிக்க, உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 1986-2000, “உவமைகள்” என்ற தலைப்பின்கீழ் காண்க.—யெகோவாவின் சாட்சிகளால் பல மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• பைபிள் படிப்பு நடத்தும்போதும், சபையில் பேச்சுக் கொடுக்கும்போதும் நாம் எவ்வாறு எளிய நடையில் போதிக்கலாம்?
• வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கையில் நாம் எவ்வாறு கேள்விகளை திறம்பட பயன்படுத்தலாம்?
• யெகோவாவின் பண்புகளையும் வழிகளையும் வலியுறுத்துவதற்கு நாம் எவ்வாறு தர்க்கரீதியான நியாயவாதங்களை பயன்படுத்தலாம்?
• பொருத்தமான உவமைகளை நாம் எங்கே கண்டடையலாம்?
[பக்கம் 23-ன் பெட்டி/படம்]
இந்த உவமைகள் ஞாபகம் இருக்கிறதா?
இங்கே சில திறம்பட்ட உவமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட கட்டுரையை எடுத்துப் பார்த்து, அதில் கலந்தாலோசிக்கப்பட்ட குறிப்பை வலியுறுத்த அந்த உவமை எவ்வாறு உதவியது என கவனிக்கலாம் அல்லவா?
• திருமண வாழ்க்கை எனும் ஆற்றுக்குள் அதிலுள்ள பொறுப்புகளைப் பற்றி கொஞ்சமும் அறியாமல் அநேகர் கண்ணைக் கட்டிக் கொண்டு குதிப்பது, நீச்சல் தெரியாமல் ஆற்றில் துணிந்து குதிப்பதைப் போன்றது—காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1999, பக்கம் 4.
• உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது ஒரு பந்தை வீசுவதை போன்றது. அதை நீங்கள் மெதுவாக வீசலாம் அல்லது காயப்படுத்தும் அளவுக்கு காட்டுத்தனமாக வீசலாம்.—விழித்தெழு!, ஜனவரி 8, 2001, பக்கம் 10.
• அன்பு காட்ட பழகுவது வேறொரு பாஷையைக் கற்றுக் கொள்வதைப் போன்றது.—காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1999, பக்கங்கள் 18, 22-3.
• ஒரு கல்லில் செதுக்கப்பட்ட சாசனத்தைப் போல, பாவம் நம்முடைய முதல் பெற்றோரின் ஜீன்களுக்குள் ஆழமாக பதிந்துவிட்டது—நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு, பக்கம் 58.
• கண்ணியில் வைக்கப்படும் இரை வேட்டையாடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது; அதாவது அது பிடிக்கவிருக்கும் பிராணியை கவர்ந்திழுக்கிறது. அதைப் போலவே ஆவியுலகத் தொடர்பும் பேய்களுக்கு உதவுகிறது.—நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு, பக்கம் 111.
• இயேசு ஆதாமின் சந்ததியாருடைய உதவிக்கு வருவது வசதி படைத்த தர்மப்பிரபு ஒருவர் தாமாவே முன்வந்து, (நேர்மையற்ற மானேஜரின் ஊழலால் ஏற்பட்ட) கம்பெனியின் கடனைத் தீர்த்து, தொழிற்சாலை பழையபடி செயல்பட வைத்து அதன் அநேக பணியாட்களுக்கு நன்மை செய்வதைப் போன்றது.—காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1999, பக்கம் 16.
• பாறையின் மீதுள்ள கலங்கரை விளக்கம் போல கடவுளுடைய சட்டம் உறுதியானது, மாறாதது—காவற்கோபுரம், ஏப்ரல் 15, 2002, பக்கம் 25.
[பக்கம் 20-ன் படங்கள்]
உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையை போதிக்கிறார்கள்
[பக்கம் 21-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆறுதலைக் கண்டடைய உடன் விசுவாசிகளுக்கு உதவ மூப்பர்கள் கேள்விகளைப் பயன்படுத்தலாம்