கடவுளுடைய ராஜ்யம் —அதன் கருத்தை உணருகிறீர்களா?
“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனே, வார்த்தையைக் கேட்டு அதன் கருத்தை உணருகிறவன்.”—மத்தேயு 13:23, NW.
1. ‘பரலோகங்களின் ராஜ்யத்தைக்’ குறித்தப் பொதுவான நம்பிக்கைகள் சில யாவை?
கடவுளுடைய ராஜ்யம் என்ன என்பதன் ‘கருத்தை உணர்ந்து’ இருக்கிறீர்களா? ‘பரலோகங்களின் ராஜ்யத்தைப்’ பற்றிய பொதுக்கருத்துக்கள் நூற்றாண்டுகளினூடே வெகு விரிவாய் மாறுபட்டிருக்கின்றன. இந்த ராஜ்யமானது, மதமாற்றத்தின்போது ஓர் ஆளின் இருதயத்துக்குள் கடவுள் வைக்கும் ஒன்று என்பது இன்று சில சர்ச் உறுப்பினருக்குள் பொதுவான ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. மரணத்துக்குப் பின் நித்திய ஆசீர்வாதத்தை அனுபவிப்பதற்கு நல்ல ஆட்கள் செல்லும் ஓர் இடம் என்று மற்றவர்கள் உணருகின்றனர். சமுதாய மற்றும் அரசாங்க விவகாரங்களுக்குள் கிறிஸ்தவ போதகங்களையும் பழக்கவழக்கங்களையும் படிப்படியாய்ப் புகட்டுவதற்குத் தாங்கள் உழைப்பதன் மூலம், பூமியில் இந்த ராஜ்யத்தைக் கொண்டுவரும்படி மனிதரிடமாகக் கடவுள் விட்டிருக்கிறார் என்று இன்னும் சிலர் உரிமை பாராட்டுகின்றனர்.
2. கடவுளுடைய ராஜ்யத்தை பைபிள் எவ்வாறு விளக்குகிறது, அது எதை நிறைவேற்றும்?
2 எனினும், கடவுளுடைய ராஜ்யம் பூமியிலுள்ள ஒரு நிறுவனம் அல்ல என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அது இருதயத்தின் ஒரு நிலைமையுமல்ல, மனித சமுதாயத்தைக் கிறிஸ்தவ மயமாக்குவதுமல்ல. இந்த ராஜ்யம் என்ன என்பதைப்பற்றி திருத்தமாய்ப் புரிந்துகொள்வது, அதில் விசுவாசம் காட்டுவோரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களுக்கு வழிநடத்துகிறதென்பது உண்மையே. ஆனால், அந்த ராஜ்யம் தானே கடவுளால் நிறுவப்பட்ட பரலோக அரசாங்கமாகக் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றி, பாவம் மற்றும் மரணத்தின் பாதிப்புகளை நீக்கி, பூமியில் நீதியான நிலைமைகளைத் திரும்பக் கொண்டுவருவதாக உள்ளது. ஏற்கெனவே இந்த ராஜ்யம் பரலோகங்களில் அதிகாரத்தை ஏற்றிருக்கிறது, சீக்கிரத்தில் “அது அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 11:15; 12:10.
3. இயேசு தம்முடைய ஊழியத்தைத் தொடங்கினபோது, மனிதருக்கு எது திறக்கப்பட்டது?
3 சரித்திராசிரியர் ஹெச். ஜி. வெல்ஸ் இவ்வாறு எழுதினார்: “இயேசுவின் முக்கிய போதகமாயிருந்ததும், கிறிஸ்தவ விசுவாசப் பிரமாணங்களில் அவ்வளவு மிகச் சிறிய பாகத்தை வகிக்கிறதுமான, பரலோக ராஜ்யத்தைப்பற்றிய இந்தக் கோட்பாடு, மனித எண்ணத்தை என்றாகிலும் தூண்டி மாற்றின மிக அதிக அடிப்படை மாறுபாடுகளையுடைய கோட்பாடுகளில் ஒன்றாக நிச்சயமாகவே இருக்கிறது.” தொடக்கத்திலிருந்தே இயேசுவின் ஊழியத்தினுடைய பொருளானது: “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்பதாக இருந்தது. (மத்தேயு 4:17) அபிஷேகம் செய்யப்பட்ட அரசராக, அங்கே அவர் காணக்கூடியவராக இருந்தார். மிகப் பெரும் மகிழ்ச்சிக்குரியவற்றில் ஒன்றாக, மனிதர் அந்த ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களில் பங்குகொள்வதற்கு மட்டுமல்லாமல், அந்த ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு உடனாளும் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் இருப்பதற்கும்கூட வழி இப்போது திறக்கப்பட்டதாக இருந்தது.—லூக்கா 22:28-30; வெளிப்படுத்துதல் 1:6; 5:10.
4. முதல் நூற்றாண்டில், திரளானபேர் ‘ராஜ்யத்தின் நற்செய்திக்கு’ எவ்வாறு பிரதிபலித்தனர், இது என்ன நியாயத்தீர்ப்புக்கு வழிநடத்தினது?
4 உணர்ச்சியார்வம் ஊட்டின ‘ராஜ்யத்தின் நற்செய்தியை’ திரளான மக்கள் கேட்டபோதிலும், சிலர் மாத்திரமே நம்பினர். மதத் தலைவர்கள், ‘மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போட்டிருந்தது’ இதற்கு ஓரளவான காரணமாக இருந்தது. அவர்கள் தங்கள் பொய்ப் போதகங்களால் ‘அறிவின் திறவுகோலை எடுத்துவிட்டார்கள்.’ பெரும்பான்மையரான மக்கள் இயேசுவை மேசியாவாகவும் கடவுளுடைய ராஜ்யத்தின் அபிஷேகம் செய்யப்பட்ட அரசராகவும் ஏற்காது தள்ளிவிட்டதால், இயேசு அவர்களிடம்: “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்,” என்று சொன்னார்.—மத்தேயு 4:23; 21:43; 23:13; லூக்கா 11:52, தி.மொ.
5. இயேசுவின் உவமைகளைக் கேட்டவர்களில் பெரும்பான்மையர் தெளிந்துணர்வுடன் தாங்கள் கேட்கவில்லையென்று எவ்வாறு காட்டினர்?
5 ஒரு பெரிய கூட்டத்துக்கு இயேசு போதித்துக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தின்போது அவர், அந்தக் கூட்டத்தைச் சோதிக்கவும், ராஜ்யத்தில் மேலீடான அக்கறையை மாத்திரமே உடையோராக இருந்தவர்களைத் தனிப்படுத்தவும், தம்முடைய வழக்கத்தின்படி ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த உவமைகளைப் பயன்படுத்தினார். முதலாவது உவமையானது, நான்கு வகை நிலங்களில் விதைகளை விதைத்த, விதைப்பவன் ஒருவன் உட்பட்டதாக இருந்தது. முதல் மூன்று வகைகள் பயிர்கள் வளருவதற்கு சாதகமல்லாதவையாக இருந்தன, ஆனால் கடைசியானது நல்ல பலனை விளைவித்த ‘நல்ல நிலமாக’ இருந்தது. இந்தக் குறுகிய உவமை: “காதுகளுள்ளவன் கவனித்துக் கேட்கக்கடவன்” என்ற அறிவுரையுடன் முடிந்தது. (மத்தேயு 13:1-9, NW) அங்கிருந்த பெரும்பான்மையர் அவர் சொன்னதைக் கேட்டனர், ஆனால் அவர்கள் ‘கவனித்துக் கேட்கவில்லை.’ பல்வேறு நிலைமைகளில் விதைக்கப்பட்ட விதை எவ்வாறு பரலோகங்களின் ராஜ்யத்தைப்போல் இருந்ததென்பதை அறிவதில் அவர்களுக்கு உள்ளத்தூண்டுதலும் இல்லை, உண்மையான அக்கறையுமில்லை. அவர்கள் வீட்டுக்குத் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்றனர். இயேசுவின் உவமைகள் ஒழுக்க உட்பொருள்களைக் கொண்ட கதைகளைப் பார்க்கிலும் அதிகமானவையல்ல என்று ஒருவேளை எண்ணி சென்றிருக்கலாம். அவர்களுடைய இருதயம் உணர்ந்து செயல்படாததால் எத்தகைய நிறைவான பகுத்துணர்வையும், மகத்தான சிலாக்கியங்களையும் வாய்ப்புகளையும் அவர்கள் இழந்தார்கள்!
6. ‘ராஜ்யத்தின் பரிசுத்த இரகசியங்களைத்’ தெளிந்துணர்வது ஏன் இயேசுவின் சீஷர்களுக்கு மாத்திரமே அருளப்பட்டது?
6 இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “பரலோகங்களின் ராஜ்யத்தின் பரிசுத்த இரகசியங்களைப் பகுத்துணர்ந்து கொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது, ஆனால் அந்த ஜனங்களுக்கோ அருளப்படவில்லை.” ஏசாயாவிலிருந்து மேற்கோள் எடுத்துக் கூறி, அவர் மேலும் சொன்னார்: “‘ஏனெனில் இந்த ஜனத்தின் இருதயம் மந்தமாகிவிட்டது, தங்கள் காதுகளால் பதில் குறிப்பு இல்லாமல் அவர்கள் கேட்டிருக்கிறார்கள், தங்கள் கண்களை மூடியிருக்கிறார்கள்; தங்கள் இருதயங்களால் அதன் கருத்தை உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை குணமாக்காமலும் இருக்கும்படிக்கு’ தங்கள் கண்களால் ஒருபோதும் காணாமலும் தங்கள் காதுகளால் கேளாமலும் இருக்கிறார்கள். எனினும், உங்கள் கண்கள் காண்பதாலும், உங்கள் காதுகள் கேட்பதாலும் சந்தோஷமுள்ளவை.”—மத்தேயு 13:10-16, NW; மாற்கு 4:11-13.
‘ராஜ்யத்தைப் பற்றிய கருத்தை உணருதல்’
7. ராஜ்யத்தைப் பற்றிய ‘கருத்தை உணர்வது’ ஏன் முக்கியம்?
7 இயேசு அந்தப் பிரச்சினையைத் திட்டமாய்க் குறிப்பிட்டார். அது, ராஜ்ய செய்தியின் ‘கருத்தை உணருவது’ சம்பந்தப்பட்டதாக இருந்தது. தனிமையில் தம்முடைய சீஷரிடம் இவ்வாறு கூறினார்: “அவ்வாறெனில், விதைத்த மனிதனின் உவமைக்கு நீங்கள் செவிகொடுங்கள். எவனாவது ராஜ்யத்தின் செய்தியைக் கேட்டு ஆனால் அதன் கருத்தை உணருகிறதில்லை என்றால், பொல்லாங்கன் வந்து அவனுடைய இருதயத்தில் விதைக்கப்பட்டிருக்கிறதைப் பறித்துக்கொள்கிறான்.” அவர் மேலும் தொடர்ந்து, அந்த நான்கு நில வகைகள், “ராஜ்யத்தின் செய்தி” அவற்றிற்குள் விதைக்கப்படும் பல்வேறு இருதய நிலைமைகளைக் குறிப்பிட்டன என்று விளக்கினார்.—மத்தேயு 13:18-23, NW; லூக்கா 8:9-15.
8. முதல் மூன்று நில வகைகளில் விதைக்கப்பட்ட “விதை” பலன் விளைவிப்பதை எது தடுத்தது?
8 ஒவ்வொரு காரியத்திலும் அந்த “விதை” நல்லதாக இருந்தது, ஆனால் பலன் அந்த நிலத்தின் நிலைமையின்பேரில் சார்ந்திருக்கும். அந்த இருதய நிலம், சந்தடியான, நெருக்கமுள்ள பாதையைப்போல், ஆவிக்குரியதல்லாத நடவடிக்கைகள் பலவற்றால் கடினப்பட்டு இருந்தால், ராஜ்ய செய்தியைக் கேட்பவர், ராஜ்யத்துக்காக நேரமில்லை என்று சாக்குச் சொல்லி, தன்னை விலக்கிக் கொள்வது எளிதாயிருக்கும். கவனியாமல் விடப்பட்ட அந்த விதை, வேர்கொள்வதற்கு முன்பாக எளிதில் பறித்துச் செல்லப்படக்கூடும். ஆனால் கற்பாறை நிலத்துக்கு ஒப்பான இருதயத்தில் அந்த விதை விதைக்கப்பட்டிருந்தால் என்னவாயிருக்கும்? அந்த விதை முளைக்கலாம், ஆனால் உணவுக்காகவும் உறுதிநிலைக்காகவும் அதன் வேர்களை கீழே எந்த ஆழத்துக்கும் உட்செலுத்துவது கடினமாயிருக்கும். கடவுளுடைய கீழ்ப்படிதலுள்ள ஊழியனாயிருப்பது, முக்கியமாய்த் துன்புறுத்தலின்போது அவ்வாறிருக்கும் எதிர்பார்ப்பு, மீறிய சவாலை அளிப்பதாயிருக்கும், அந்த ஆள் தடுமாறுவார். மறுபடியுமாக, இருதய நிலம் முட்களைப்போன்ற கவலைகளால் அல்லது செல்வத்துக்கான பொருளாசையால் அவ்வளவு அதிகமாக நிரம்பியிருந்தால், மெல்லிய ராஜ்ய செடி நெருக்கப்பட்டுப் போகும். வாழ்க்கையின் இந்த மூன்று வகை நிலைமைகளிலும் ராஜ்ய கனி விளைவிக்கப்படாது.
9. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை ஏன் நல்ல பலனை விளைவிக்கக்கூடியதாக இருந்தது?
9 எனினும், நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட ராஜ்ய விதையைப் பற்றியதென்ன? இயேசு பதிலளிக்கிறார்: “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனே, வார்த்தையைக் கேட்டு அதன் கருத்தை உணருகிறவன், இவன் உண்மையில் பலன் தந்து, இந்த ஒன்று நூறுமடங்காகவும், அந்த ஒன்று அறுபதாகவும், மற்றது முப்பதாகவும் விளைவிக்கிறான்.” (மத்தேயு 13:23, NW) ராஜ்ய ‘கருத்தை உணர்ந்ததில்’, அவர்கள் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைமைகளுக்குத் தக்கவாறு நல்ல கனிகளைப் பிறப்பிப்பார்கள்.
தெளிந்துணருவதோடு பொறுப்பும் வருகிறது
10. (அ) ராஜ்யத்தைப் பற்றிய ‘கருத்தை உணர்வது,’ ஆசீர்வாதங்களையும் பொறுப்பையும் இரண்டையும் கொண்டுவருகிறது என்பதை இயேசு எவ்வாறு காட்டினார்? (ஆ) போய் சீஷராக்கும்படி இயேசு கட்டளையிட்ட பொறுப்பு முதல் நூற்றாண்டு சீஷர்களுக்கு மாத்திரமே பொருந்தினதா?
10 ராஜ்யத்தின் பல்வேறு அம்சங்களை விளக்குவதற்கு ஆறு உவமைகளைக் கூறின பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: “இந்தக் காரியங்கள் எல்லாவற்றின் கருத்தையும் உணர்ந்தீர்களா?” என்று கேட்டார். “ஆம்” என்று அவர்கள் பதிலளித்தபோது, அவர்: “காரியம் அவ்வாறிருக்க, ஒவ்வொரு பொதுப் போதகனும், பரலோகங்களின் ராஜ்யத்தைக் குறித்து கற்பிக்கப்பட்டபோது, தன் பொக்கிஷ சேமிப்பிலிருந்து புதியவையும் பழையவையுமானவற்றை வெளிக் கொண்டுவருகிற, வீட்டுக்காரனான ஒரு மனிதனைப்போல் இருக்கிறான்,” என்றார். இயேசு அருளின போதகங்களும் பயிற்றுவிப்பும் அவருடைய சீஷர்களைத் தங்கள் ‘சேமிப்பறையிலிருந்து’ நிறைவான ஆவிக்குரிய உணவின் முடிவற்ற தேவைப்பொருட்களை வெளிக் கொண்டுவரக்கூடிய முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களாகக் கட்டியமைக்கும், இதில் பேரளவானது கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்டதாக இருந்தது. ராஜ்யத்தைப் பற்றிய ‘கருத்தை உணர்வது,’ ஆசீர்வாதங்களை மட்டுமல்லாமல் பொறுப்பையும் கொண்டுவரும் என்று இயேசு தெளிவாக்கினார். அவர் இவ்வாறு கட்டளையிட்டார்: “ஆகையால் போய் சகல தேசத்தாரின் ஜனங்களையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற எல்லாவற்றையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள். இதோ! இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடன் இருக்கிறேன்.”—மத்தேயு 13:51, 52; 28:19, 20; NW.
11. 1914 வந்தபோது, ராஜ்யம் சம்பந்தப்பட்ட என்ன நிகழ்ச்சிகள் நிறைவேறின?
11 வாக்களித்தபடியே இயேசு, நூற்றாண்டுகளினூடே இந்நாள் வரையில் தம்முடைய உண்மையான சீஷர்களுடன் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார். இந்தக் கடைசி நாட்களில், அவர் தொடர்ந்து படிப்படியாய்த் தெளிந்துணர்வை அவர்களுக்கு அருளி, சத்தியத்தின் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் இந்த ஒளியைப் பயன்படுத்துவதற்கு அவர்களைப் பொறுப்புள்ளோராகவும் வைத்திருக்கிறார். (லூக்கா 19:11-15, 26) 1914-ல் ராஜ்ய நிகழ்ச்சிகள் விரைவாகவும் ஒன்றன்பின் ஒன்றாகவும் வெளிப்படத் தொடங்கின. அந்த ஆண்டில், நெடுங்காலம் நம்பி காத்திருந்த ராஜ்யத்தின் ‘பிறப்பு’ ஏற்பட்டது மட்டுமல்லாமல், ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவும்’ தொடங்கினது. (வெளிப்படுத்துதல் 11:15; 12:5, 10; தானியேல் 7:13, 14, 27) உண்மையான கிறிஸ்தவர்கள், தற்போதைய நிகழ்ச்சிகளின் உட்பொருளைத் தெளிந்தறிந்து, சரித்திரத்திலேயே மிகப் பெரிதான ராஜ்ய-பிரசங்க மற்றும் கற்பிப்பு ஊழிய ஏற்பாட்டை நிறைவேற்றி வந்திருக்கின்றனர். இயேசு இதை முன்னறிவித்து, இவ்வாறு கூறினார்: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சகல தேசத்தாருக்கும் ஒரு சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14, NW.
12. (அ) தற்கால மிகப் பரந்த ராஜ்ய சாட்சியின் பலன் என்னவாக இருந்திருக்கிறது? (ஆ) சந்தேக மனப்பான்மையுள்ள இந்த உலகத்தில், கிறிஸ்தவர்களுக்கு என்ன ஆபத்து உள்ளது?
12 இந்த மிகப் பரந்த ராஜ்ய சாட்சி 230-க்கும் மேற்பட்ட நாடுகளை எட்டியுள்ளது. உண்மையான சீஷர்கள் 50 லட்சத்திற்கும் மேலானோர் இந்த ஊழியத்தில் ஏற்கெனவே பங்குகொள்கின்றனர், இன்னும் மற்றவர்களும் கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சீஷர்களின் இந்த எண்ணிக்கையை, பூமியின் 560 கோடி குடிமக்களோடு நாம் ஒப்பிட்டால், இயேசுவின் நாளில் இருந்ததைப்போல், மனிதவர்க்கத்தின் மிகப் பெரும்பான்மையர், ராஜ்யத்தின் ‘கருத்தை உணருகிறதில்லை’ என்பது தெளிவாயுள்ளது. முன்னறிவித்தபடியே, பலர் பரியாசம் செய்து: “வாக்களிக்கப்பட்ட அவருடைய இந்த வந்திருத்தல் எங்கே?” என்று சொல்லுகிறார்கள். (2 பேதுரு 3:3, 4, NW) அவர்களுடைய மனதிலுள்ள, சந்தேக, பொருளாசைமிக்க மனப்பான்மை, நம்முடைய ராஜ்ய சிலாக்கியங்களை நாம் கருதும் நோக்கைச் சிறிதுசிறிதாய்ப் பாதிக்கக்கூடியதென்பது, கிறிஸ்தவர்களாக நமக்கு இருக்கும் ஆபத்தாகும். இந்த உலகத்தின் ஜனங்களால் சூழப்பட்டிருப்போராய், அவர்களுடைய மனப்பான்மைகள் மற்றும் பழக்கவழக்கச் செயல்கள் சிலவற்றை நாம் எளிதில் ஏற்கக்கூடும். நாம் கடவுளுடைய ராஜ்யத்தின் ‘கருத்தை உணர்ந்து’ அதை விடாமல் பற்றியிருப்பது எவ்வளவு மிக முக்கியமானதாக இருக்கிறது!
ராஜ்யத்தின் சம்பந்தமாக நம்மை சோதித்தறிதல்
13. ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியான இந்தப் பொறுப்பளிப்பைக் குறித்ததில், நாம் தெளிந்துணர்வுடன் தொடர்ந்து ‘கேட்கிறோமா’ என்பதை எவ்வாறு சோதித்தறியலாம்?
13 நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற அறுப்பு காலத்தைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “மனுஷகுமாரன் தமது தூதரையனுப்புவார்; அவர்கள் அவர் ராஜ்யத்தில் இடறிவிழக் காரணமாயிருக்கிற யாவற்றையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்[ப்பார்கள்] . . . அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். காதுள்ளவன் கேட்கக்கடவன்.” (மத்தேயு 13:41, 43, தி.மொ.) ராஜ்யத்தைப் பிரசங்கிக்கும்படியும் சீஷராக்கும்படியுமான இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிதலுடன் செயல்படுபவராக நீங்கள் தொடர்ந்து ‘கேட்கிறீர்களா?’ “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ” ‘வார்த்தையைக் கேட்டு அதன் கருத்தை உணர்ந்து’ நல்ல கனியை விளைவித்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.—மத்தேயு 13:23, NW.
14. போதனை கொடுக்கப்படுகையில், அந்த அறிவுரையின் ‘கருத்தை உணர்ந்துகொள்கிறோம்’ என்பதை நாம் எவ்வாறு காட்டுகிறோம்?
14 தனிப்பட்ட படிப்பின்போதும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்திருக்கும்போதும், நாம் ‘நம் இருதயங்களைத் தெளிந்துணர்வுக்குச் சாய்க்க வேண்டும்.’ (நீதிமொழிகள் 2:1-4, NW) நடத்தை, உடை, இசை, மற்றும் பொழுதுபோக்கைக் குறித்து அறிவுரை கொடுக்கப்படுகையில், அது நம்முடைய இருதயங்களுக்குள் ஆழப் பதிந்து, தேவைப்படும் எந்தச் சரிப்படுத்தல்களையும் செய்யும்படி நம்மைத் தூண்டியியக்க நாம் அனுமதிக்க வேண்டும். சுய விருப்பத்தைச் சாதிக்க ஒருபோதும் வாதிடாதீர்கள், சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள், அல்லது வேறு வகையில் சொல்லவேண்டுமானால் செயல்படத் தவறாதீர்கள். ராஜ்யம் நம்முடைய வாழ்க்கையில் மெய்யானதாக இருக்கிறதென்றால், நாம் அதன் தராதரங்களின்படி வாழ்ந்து ஆர்வத்துடன் அதை மற்றவர்களுக்கு வெளிப்படையாக அறிவிப்போம். இயேசு இவ்வாறு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”—மத்தேயு 7:21-23.
15. ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவது’ ஏன் முக்கியம்?
15 தேவைப்படும் உணவு, உடை, மற்றும் தங்குமிடம் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படுவது மனித இயல்பேயாகும், ஆனால் இயேசு இவ்வாறு சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33, 34) முக்கியமானவையாக முதல் வரவேண்டியவற்றைத் தீர்மானிப்பதில், ராஜ்யத்தையே உங்கள் வாழ்க்கையில் முதலாவதாக வையுங்கள். அவசியமானவற்றோடு திருப்தியுடன் இருப்போராய், உங்கள் வாழ்க்கையை எளிதாக வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையைத் தேவைப்படாத நடவடிக்கைகளாலும் சேமிப்புப் பொருட்களாலும் நிரப்புவதும், இந்தக் காரியங்கள் அவற்றில்தானே தீயவை அல்லாததால் அவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதேயென ஒருவேளை வாதிடுவதும் மடமையேயாகும். அது உண்மையாக இருக்கலாமென்றாலும், அவசியமல்லாத அத்தகையவற்றை முயன்று பெற்று பயன்படுத்துவது, நம்முடைய தனிப்பட்ட படிப்புக்கு நேரத்தைத் திட்டமிடுதலையும், கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்லுதலையும், பிரசங்க ஊழியத்தில் ஈடுபடுதலையும் எவ்வாறு பாதிக்கும்? ராஜ்யமானது, ‘விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிற’ வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறதென்று இயேசு சொன்னார். (மத்தேயு 13:45, 46) கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி இவ்வாறே நாம் உணர வேண்டும். ‘தற்போதைய காரிய ஒழுங்குமுறையை நேசித்ததனால்’ ஊழியத்தை விட்டுவிட்ட தேமாவைப்போல் இராமல், பவுலின் மாதிரியையே நாம் பின்பற்ற வேண்டும்.—2 தீமோத்தேயு 4:10, 18, NW; மத்தேயு 19:23, 24; பிலிப்பியர் 3:7, 8, 13, 14; 1 தீமோத்தேயு 6:9, 10, 17-19.
“அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை”
16. கடவுளுடைய ராஜ்யத்தின் ‘கருத்தை உணர்வது,’ தவறான நடத்தையைத் தவிர்க்க எவ்வாறு நமக்கு உதவிசெய்யும்?
16 கொரிந்திய சபை ஒழுக்கக்கேட்டு நடத்தையைக் கண்டியாது விட்டிருந்தபோது, பவுல் இவ்வாறு வெளிப்படையாகக் கூறினார்: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) நாம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய ‘கருத்தை உணர்ந்தால்,’ கிறிஸ்தவ சேவையில் நாம் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருப்பதை யெகோவா காண்கிற வரையில், ஏதோ ஒரு ஒழுக்கக்கேடான நடத்தை நம்மில் இருப்பதை அவர் பொறுத்துக்கொள்வார் என்று எண்ணி நம்மை நாமே வஞ்சித்துக்கொள்ள மாட்டோம். அசுத்தமானது நமக்குள் குறிப்பிடப்படவும் கூடாது. (எபேசியர் 5:3-5) இந்த உலகத்தின் அருவருக்கத்தக்க சிந்தனை அல்லது பழக்கவழக்கங்கள் சில உங்கள் வாழ்க்கையில் மெல்ல நுழையத் தொடங்குவதை நீங்கள் காண்கிறீர்களா? அவற்றை உங்கள் வாழ்க்கையிலிருந்து உடனடியாகத் துண்டித்து அகற்றுங்கள்! அத்தகைய காரியங்களுக்காக இழப்பதற்கு ராஜ்யம் மிக மிக அருமையானதாயுள்ளது.—மாற்கு 9:47.
17. கடவுளுடைய ராஜ்யத்துக்கான மதித்துணர்வு எவ்வகைகளில் மனத்தாழ்மையை முன்னேற்றுவித்து, இடறுதலுக்கான காரணங்களை விலக்கிப்போடும்?
17 இயேசுவின் சீஷர்கள் இவ்வாறு கேட்டனர்: “பரலோக ராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்”? இயேசு அதற்குப் பதிலளிப்பவராய், ஒரு சிறு பிள்ளையை அவர்கள் நடுவில் நிறுத்தி: “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்,” என்று சொன்னார். (மத்தேயு 18:1-6) அகந்தையுள்ளோரும், வலியுறுத்தி வாங்குவோரும், அக்கறையற்றோரும், அக்கிரமக்காரரும் கடவுளுடைய ராஜ்யத்தில் இருக்கப்போவதில்லை, அந்த ராஜ்யத்தின் குடிமக்களாகவும் இருக்கப்போவதில்லை. உங்கள் சகோதரர் பேரிலுள்ள உங்கள் அன்பு, உங்கள் மனத்தாழ்மை, உங்கள் பயபக்தி, உங்கள் நடத்தையால் மற்றவர்களை இடறச் செய்வதைத் தவிர்க்கும்படி உங்களைத் தூண்டியியக்குகிறதா? அல்லது இந்த மனப்பான்மையும் நடத்தையும் மற்றவர்களை எவ்வாறு பாதித்தாலும் கவலையில்லாமல், உங்கள் ‘உரிமைகளையே’ விடாப்பிடியாக வலியுறுத்துகிறீர்களா?—ரோமர் 14:13, 17.
18. கடவுளுடைய சித்தம் ‘பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படும்படி’ கடவுளுடைய ராஜ்யம் செய்கையில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு என்ன பலனுண்டாகும்?
18 “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக,” என்ற ஊக்கமான ஜெபத்துக்கு நம்முடைய பரமத் தகப்பனாகிய யெகோவா, சீக்கிரத்தில் முழுமையாகப் பதிலளிப்பார். ஆட்சி செய்கிற அரசராகிய இயேசு கிறிஸ்து, ‘செம்மறியாடுகளை’ ‘வெள்ளாடுகளிலிருந்து’ பிரிப்பதற்கு, நியாயத்தீர்ப்பளிப்பதற்கானத் தம்முடைய சிங்காசனத்தில் உட்காரும் கருத்தில் வெகு சீக்கிரத்தில் வருவார். குறிக்கப்பட்ட அந்தச் சமயத்தில், “ராஜா, தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்,” என்று சொல்லுவார். வெள்ளாடுகள் “நித்திய ஆக்கினை அடையவும் [“அறுப்புண்டு போதலுக்கும்,” NW] நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.” (மத்தேயு 6:10; 25:31-34, 46) ‘பெரிதான உபத்திரவம்’ இந்தப் பழைய ஒழுங்குமுறையையும் ராஜ்யத்தைப்பற்றிய ‘கருத்தை உணர’ மறுப்போர் யாவரையும் முற்றிலுமாக ஒழித்துப்போடும். ஆனால் ‘பெரிதான உபத்திரவத்தைத்’ தப்பிப் பிழைத்திருக்கும் பத்து லட்சக்கணக்கானோரும், உயிர்த்தெழுப்பப்படவிருப்போரான நூற்றுக்கோடிக்கணக்கானோரும், திரும்ப நிலைநாட்டப்பட்ட பூமிக்குரிய பரதீஸில் முடிவற்ற ராஜ்ய ஆசீர்வாதங்களைச் சுதந்தரிப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:14, தி.மொ.) ராஜ்யமானது, பூமியின் புதிய அரசாங்கமாக, பரலோகங்களிலிருந்து ஆளுகிறது, பூமியையும் மனிதவர்க்கத்தையும் குறித்த யெகோவாவின் நோக்கத்தை அது முழுமையாக நிறைவேற்றி முடிக்கும். எல்லாம் அவருடைய மகா பரிசுத்தப் பெயர் பரிசுத்தப்படுவதற்கேயாகும். அதற்காக உழைப்பதற்கும், தியாகம் செய்வதற்கும், காத்திருப்பதற்கும் அது மிகத் தகுந்த சுதந்தரமல்லவா? அந்த ராஜ்யத்தைப் பற்றிய ‘கருத்தை உணருவது’ இதையே நமக்குக் குறிக்க வேண்டும்!
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?
◻ இயேசு சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரும்பான்மையர் ஏன் ராஜ்யத்தைப்பற்றிய ‘கருத்தை உணரவில்லை?’
◻ ராஜ்யத்தைப்பற்றிய ‘கருத்தை உணருவது’ எவ்வாறு ஆசீர்வாதங்களையும் பொறுப்பையும் கொண்டுவருகிறது?
◻ பிரசங்கிப்பதைக் குறித்ததில் நாம், ராஜ்யத்தைப்பற்றிய ‘கருத்தை உணர்ந்துகொண்டோமா’ என்பதை எது காட்டுகிறது?
◻ கொடுக்கப்பட்ட அறிவுரையின் ‘கருத்தை உணர்ந்துகொண்டோம்’ என்பதை நம்முடைய நடத்தையால் நாம் எவ்வாறு காட்டுகிறோம்?
[பக்கம் 17-ன் படங்கள்]
இயேசுவின் சீஷர்கள் ராஜ்யத்தைப்பற்றிய ‘கருத்தை உணர்ந்து’ நல்ல கனியைப் பிறப்பித்தனர்