இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
நான்கு சீஷர்கள் அழைக்கப்படுகிறார்கள்
இயேசுவின் சொந்த ஊராகிய நாசரேத்தில் அவர் மீது செய்யப்பட்ட கொலை முயற்சிக்குப் பின்பு அவர் கலிலேயாக் கடலருகேயுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வருகிறார். இது ஏசாயாவின் மற்றொரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருக்கிறது. கடற்கரையருகில் வாசஞ் செய்யும் கலிலேயா ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காண்பார்கள் என்று அது முன்னறிவிக்கிறது.
ராஜ்ய பிரசங்கிப்பாகிய, வெளிச்சத்தை தாங்கிச் செல்லும் வேலையை இயேசு இங்கே செய்கையில், தம்முடைய நான்கு சீஷர்களைத் தேடி கண்டுபிடிக்கிறார். இவர்கள் இதற்கு முன்னால் இவரோடே கூட பிரயாணம் செய்திருக்கிறார்கள். ஆனால் யூதேயாவிலிருந்து, இயேசுவோடு திரும்பி வந்த பின்பு, அவர்கள் தங்கள் மீனவத் தொழிலுக்கு திரும்பி விட்டிருந்தார்கள். இப்பொழுது இயேசு அவர்களைத் தேடி கண்டு பிடிக்கிறார். ஏனென்றால் அவர் போன பின்பு ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்குப் பயிற்றுவிக்க நிலையான, ஒழுங்கான உதவியாளர்களைக் கொண்டிருப்பதற்கு இது சமயமாக இருக்கிறது.
ஆகவே இயேசு கடலோரமாய் நடந்து போகையில் வலைகளை அலசிக் கொண்டிருந்த சீமோன் பேதுருவையும் அவனுடைய தோழர்களையும் அவர் கண்டு அவர்களிடத்துக்குப் போகிறார். அவர் பேதுருவின் படகின் மீது ஏறி, அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொள்கிறார். அவர்கள் கொஞ்ச தூரம் சென்ற பின்பு, இயேசு அந்தப் படகிலே உட்கார்ந்து கரையிலிருந்த திரளான ஜனங்களுக்குப் போதகம் பண்ணத் தொடங்குகிறார். அதற்குப் பின்பு இயேசு பேதுருவிடம்: “ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்,” என்கிறார்.
அதற்கு பேதுரு: “ஐயரே, இரா முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையை போடுகிறேன்” என்கிறான்.
வலைகளை ஆழத்திலே போட்ட போது, வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களை அவர்கள் பிடிக்கிறார்கள். அப்பொழுது மற்ற படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்கு அவசரமாக சைகைக் காட்டுகிறார்கள். விரைவில் இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக அவர்கள் அதை மீன்களால் நிரப்புகிறார்கள். இதைப் பார்த்த பேதுரு இயேசுவின் பாதத்தில் விழுந்து: “ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னை விட்டுப் போக வேண்டும்” என்கிறான்.
அப்பொழுது இயேசு, “பயப்படாதே, இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்கிறார்.
இயேசு பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயாவையும் கூட அழைக்கிறார். “என் பின்னே வாருங்கள்” என்று அவர்களைத் துரிதப்படுத்துகிறார். “உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்.” அவர்களுடைய மீனவ கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபுக்கும் யோவானுக்கும் அதே அழைப்பு கொடுக்கப்படுகிறது. அவர்களும் கூட தயங்காமல் அவருக்குப் பின் செல்லுகிறார்கள். ஆகவே இந்த நால்வரும் தங்கள் மீனவ தொழிலை விட்டு விட்டு இயேசுவின் முதல் நான்கு நிலையான, ஒழுங்கான சீஷர்களாகிறார்கள். லூக்கா 5:1-11; மத்தேயு 4:13-22; மாற்கு 1:16-20; ஏசாயா 9:1, 2.
◆ இயேசு தமக்கு பின்னே வரும்படியாக தம்முடைய சீஷர்களுக்கு ஏன் அழைப்புக் கொடுத்தார்? இவர்கள் யாவர்?
◆ என்ன அற்புதத்தினால் பேதுரு பயந்து விடுகிறான்?
◆ இயேசு என்ன விதமான மீன் பிடிக்கும் வேலையைச் செய்ய தம்முடைய சீஷர்களை அழைக்கிறார்? (w86 3/1)