யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
லூக்கா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
மத்தேயு சுவிசேஷம் முக்கியமாய் யூதர்களுக்காக எழுதப்பட்டது என்றும் மாற்கு சுவிசேஷம் யூதரல்லாதவர்களுக்காக எழுதப்பட்டது என்றும் தெரிகிறது. ஆனால், லூக்காவின் சுவிசேஷமோ யூதர்கள், யூதரல்லாதவர்கள் என எல்லா தேசத்து மக்களுக்காகவும் எழுதப்பட்டது. இப்புத்தகம் சுமார் பொ.ச. 56-58 வருடங்களில் எழுதப்பட்டது. இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய விவரங்களை இப்புத்தகம் விலாவாரியாக அளிக்கிறது.
லூக்கா, மருத்துவருக்கே உரிய கரிசனையோடும் கவனத்தோடும் ‘ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து’ எழுதியுள்ளார். 35 வருட காலப்பகுதியில் அதாவது, பொ.ச.மு. 3-லிருந்து பொ.ச. 33 வரையில் நடந்த சம்பவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். (லூக். 1:3) லூக்காவின் சுவிசேஷத்தில் உள்ள 60 சதவீத தகவல்கள் மற்ற சுவிசேஷங்களில் காணப்படுவதில்லை.
ஊழியத்தின் ஆரம்பக் கட்டம்
முழுக்காட்டுபவரான யோவானின் பிறப்பையும் இயேசுவின் பிறப்பையும் பற்றிய விவரங்களை லூக்கா முதலில் அளிக்கிறார். அதன் பிறகு, திபேரியு ராயனுடைய ஆட்சியின் 15-ஆம் வருடத்தில், அதாவது பொ.ச. 29-ஆம் வருடத்தின் வசந்த காலத்தில் முழுக்காட்டுபவரான யோவான் ஊழியம் செய்ய ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார். (லூக். 3:1, 2) இயேசு, அந்த வருடத்தின் இலையுதிர் காலத்தில் யோவானால் முழுக்காட்டப்படுகிறார். (லூக். 3:21, 22) பொ.ச. 30-க்குள், ‘இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிப் போய் ஜெப ஆலயங்களில் உபதேசிக்கிறார்.’—லூக். 4:14, 15.
கலிலேயா எங்கும் பயணித்து தம்முடைய முதல் கட்டப் பிரசங்க வேலையை இயேசு ஆரம்பிக்கிறார். “நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும்” என கூடிவந்திருந்த மக்களிடம் அவர் சொல்கிறார். (லூக். 4:43) மீன்பிடிப்பவரான சீமோனையும் இன்னும் சிலரையும் தம்மோடு அழைத்துச் செல்கிறார். ‘இதுமுதல் நீங்கள் மனுஷரைப் பிடிக்கிறவர்களாய் இருப்பீர்கள்’ என்று அவர்களிடம் கூறுகிறார். (லூக். 5:1-11; மத். 4:18, 19) கலிலேயாவில் இரண்டாவது கட்டமாக இயேசு பிரசங்கிக்கையில், 12 அப்போஸ்தலர்களும் அவருடன் இருக்கிறார்கள். (லூக். 8:1) மூன்றாம் கட்டப் பயணத்தில், “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும்” 12 அப்போஸ்தலர்களை அனுப்புகிறார்.—லூக். 9:1, 2.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:35—மரியாள் கருத்தரிப்பதற்கு அவருடைய கருமுட்டை ஏதேனும் விதத்தில் பங்களித்ததா? மரியாளுக்குப் பிறக்கும் குழந்தை ஆபிரகாம், யூதா, தாவீது ஆகியோரின் உண்மையான வாரிசாக இருக்கும் என கடவுள் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி பார்த்தால், மரியாள் கருத்தரிப்பதற்கு அவருடைய கருமுட்டை பங்களித்திருக்க வேண்டும். (ஆதி. 22:15, 18; 49:10; 2 சா. 7:8, 16) என்றாலும், தம்முடைய குமாரனின் பரிபூரண உயிரை மரியாளின் கருப்பைக்கு மாற்றுவதற்கும், கருத்தரிக்கும்படி செய்வதற்கும் யெகோவா தமது பரிசுத்த ஆவியையே பயன்படுத்தினார். (மத். 1:18) இது, மரியாளின் கருமுட்டையிலிருந்த அபூரணத்தை துடைத்தழித்துவிட்டிருக்கும் எனத் தெரிகிறது; அதோடு, மரியாள் கருவுற்றதுமுதல் அக்கருவின் வளர்ச்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதபடி இது பாதுகாத்திருக்கும் என்பதாகவும் தெரிகிறது.
1:62—சகரியா வாய் பேசாதவராயும் காது கேளாதவராயும் ஆகிவிட்டிருந்தாரா? இல்லை. அவரது பேச்சுத்திறன் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறாரென சகரியாவிடம் மற்றவர்கள் “சைகையினால்” கேட்டார்கள்; அதை வைத்து அவர் காது கேளாதவராய் இருந்தார் என்ற முடிவுக்கு நாம் வரமுடியாது. தங்களுடைய மகனுக்குப் பெயர் வைப்பதுபற்றி அவருடைய மனைவி சொன்னதை அவர் கேட்டிருக்க வேண்டும். ஒருவேளை இதைப்பற்றி சகரியா என்ன நினைக்கிறார் என்பதை அறிய மற்றவர்கள் அவரிடம் சைகையினால் கேட்டிருக்கலாம். தன்னுடைய பேச்சுத் திறனை மட்டுமே அவர் மீண்டும் பெற்றது, கேட்பதில் அவருக்கு எந்தப் பாதிப்பும் இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.—லூக். 1:13, 18-20, 60-64.
2:1, 2—“முதலாம் குடிமதிப்பு, [அதாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு]” என்று சொல்லப்பட்டிருப்பது, இயேசு பிறந்த காலத்தைக் கணக்கிட எப்படி உதவுகிறது? அகஸ்து ராயனின் காலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை மக்கள்தொகை கணக்கிடப்பட்டது. முதலாம் கணக்கெடுப்பு, தானியேல் 11:20-ன் நிறைவேற்றமாக பொ.ச.மு. 2-ஆம் வருடத்தில் எடுக்கப்பட்டது; இரண்டாம் கணக்கெடுப்பு பொ.ச. 6-ஆம் அல்லது 7-ஆம் வருடத்தில் எடுக்கப்பட்டது. (அப். 5:37) இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் சீரியா நாட்டிலே சிரேனியு என்பவர் தேசாதிபதியாகப் பணியாற்றினார்; அவர் இரண்டு முறை அந்தப் பதவியில் இருந்ததாகத் தெரிகிறது. லூக்காவின் பதிவில் முதலாம் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ள குறிப்பு, பொ.ச.மு. 2-ஆம் வருடத்தில் இயேசு பிறந்தார் என்பதைக் காட்டுகிறது.
2:35—மரியாளின் ஆத்துமாவை “ஒரு பட்டயம் உருவிப்போகும்” எனச் சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? பெரும்பாலான மக்கள், இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் பார்த்து மரியாள் வருந்துவார் என்பதையும் இயேசு பாடுபட்டு மரிப்பதைப் பார்த்து அவர் விசனப்படுவார் என்பதையுமே இது அர்த்தப்படுத்துகிறது.—யோவா. 19:25.
9:27, 28—தாம் தேவனுடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் சீஷர்களில் சிலர் “மரணத்தை ருசிபார்ப்பதில்லை” என இயேசு தெரிவித்து “ஆறு நாளைக்குப்” பின்பு அவர் மறுரூபமானார் என்று மத்தேயுவும் மாற்குவும் குறிப்பிடுகிறார்கள்; அப்படியிருக்க, “எட்டு நாளான” பின்பு அவர் மறுரூபமானார் என்று லூக்கா குறிப்பிடுவது ஏன்? (மத். 17:1; மாற். 9:2) லூக்கா கூடுதலாக இரண்டு நாட்களைச் சேர்த்துக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது; அதாவது, இயேசு அந்த வாக்குறுதியைச் சொன்ன நாளையும் அது நிறைவேற்றமடைந்த நாளையும் சேர்த்து குறிப்பிடுவதாய்த் தெரிகிறது.
9:49, 50—பிசாசுகளைத் துரத்திய மனிதன் தம்முடைய சீஷனாக இல்லாதிருந்தும் அவனை இயேசு ஏன் தடுக்கவில்லை? கிறிஸ்தவ சபை இன்னும் ஸ்தாபிக்கப்படாமல் இருந்ததே அதற்குக் காரணம். எனவே, இயேசுவின் பெயரில் விசுவாசம் வைத்து பிசாசுகளைத் துரத்துவதற்கு அந்த மனிதன் இயேசுவுடன் செல்ல வேண்டுமென்ற அவசியம் இருக்கவில்லை.—மாற்கு 9:38-40.
நமக்குப் பாடம்:
1:32, 33; 2:19, 51. தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருந்த சம்பவங்களையும் சங்கதிகளையும் மரியாள் தன்னுடைய இருதயத்திலே வைத்து சிந்தித்துப் பார்த்தார். இந்த ‘உலகத்தின் முடிவை’ குறித்து இயேசு முன்னறிவித்த காரியங்களை இன்று நடந்துவரும் காரியங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதன்மூலம் அதை நாம் இருதயத்தில் வைத்து சிந்தித்துப் பார்க்கிறோமா?—மத். 24:3.
2:37. நாம் யெகோவாவை உண்மையோடு வழிபட வேண்டும், ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்க’ வேண்டும், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ‘கூடிவர’ வேண்டும் என்ற பாடங்களை அன்னாளின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம்.—ரோ. 12:12; எபி. 10:24, 25.
2:41-50. வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு யோசேப்பு தன் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தார்; அதோடு குடும்பத்தின் பொருளாதார காரியங்களையும் ஆன்மீக காரியங்களையும் கவனித்துக்கொண்டார். இவ்வாறு, குடும்பத் தலைவர்களுக்கு அவர் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
4:4. நாம் ஒருநாள்கூட கடவுளுடைய வார்த்தையைப் படித்து தியானிக்காமல் இருந்துவிடக்கூடாது.
6:40. கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் ஒருவர் தன்னுடைய மாணவருக்குச் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவருடைய சொல்லும் செயலும் ஒரேபோல் இருக்க வேண்டும்.
8:15. வசனத்தை ‘காத்துப் பொறுமையுடனே பலன்கொடுப்பதற்கு’ நாம் கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொண்டு, அதை உயர்வாய் மதித்து, இருதயத்தில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வாசிக்கையில், ஜெபத்தோடு சிந்தித்துப் பார்ப்பதும் அவசியம்.
ஊழியத்தின் இறுதிக் கட்டம்
இயேசு தமக்கு முன்னே 70 பேரை யூதேயாவிலுள்ள பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அனுப்புகிறார். (லூக். 10:1) அவர் ‘பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் பண்ணிக்கொண்டே’ போகிறார்.—லூக். 13:22.
பொ.ச. 33-ஆம் வருடத்தில் பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கையில், இயேசு கழுதைக்குட்டியின் மீது சவாரிசெய்து எருசலேமுக்கு வருகிறார். “மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும்” என்று இயேசு தம் சீஷர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் நிறைவேறுவதற்கான காலம் இப்போது வந்துவிட்டது.—லூக். 9:22, 44.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
14:26—கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்ன கருத்தில் தங்களுடைய சொந்தபந்தங்களை ‘வெறுக்க’ வேண்டும்? ‘வெறுப்பது’ என்ற சொல், ஒரு நபரை மற்றொரு நபரைவிடவோ ஒரு பொருளை மற்றொரு பொருளைவிடவோ குறைவாக நேசிப்பது என்ற கருத்திலும் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதி. 29:30, 31) கிறிஸ்தவர்கள் இயேசுவைவிட அதிகமாய் தங்கள் சொந்தபந்தங்களை நேசிக்கக்கூடாது என்ற கருத்திலேயே அவர்களை வெறுக்க வேண்டும்.—மத். 10:37.
17:34-37—“கழுகுகள்” மற்றும் “பிணம்” எதைக் குறிக்கின்றன? ‘ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள்,’ அதாவது இரட்சிக்கப்படுபவர்கள் தொலைதூரப் பார்வையுடைய கழுகுகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். “பிணம்” என்பது, காணக்கூடாத விதத்தில் பிரசன்னமாயிருக்கிற உண்மையான கிறிஸ்துவையும், இரட்சிக்கப்படுபவர்களுக்காக யெகோவா அளிக்கிற ஆன்மீக உணவையும் குறிக்கிறது.—மத். 24:28.
22:44—இயேசு ஏன் மிகவும் வியாகுலப்பட்டார்? பல காரணங்களின் நிமித்தம் அவர் வியாகுலப்பட்டார். தாம் ஒரு குற்றவாளியாக மரிப்பது யெகோவா தேவனுக்கும் அவரது பெயருக்கும் நிந்தையைக் கொண்டு வருமே என நினைத்து கவலைப்பட்டார். அதுமட்டுமல்ல, தம்முடைய நித்திய வாழ்வும் முழு மனிதகுலத்தின் எதிர்காலமும் தாம் உண்மையுடன் நிலைத்திருப்பதன் பேரிலேயே சார்ந்திருக்கிறது என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
23:44—மூன்று மணிநேரம் இருள் உண்டானதற்குக் காரணம் சூரிய கிரகணமா? இல்லை. அமாவாசை சமயத்தில் மட்டுமே சூரிய கிரகணம் நிகழ்கிறது; ஆனால், பஸ்காவின்போது பௌர்ணமியாக இருந்ததால், சூரிய கிரகணம் ஏற்பட வாய்ப்பில்லை. அப்படியானால், இயேசு மரித்த நாளில் உண்டான இருள் கடவுள் செய்த அற்புதமே.
நமக்குப் பாடம்:
11:1-4. இந்த அறிவுரைகளையும், சுமார் 18 மாதங்களுக்கு முன்பு மலைப் பிரசங்கத்தில் இயேசு சொல்லிக்கொடுத்த மாதிரி ஜெபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சற்று வித்தியாசம் இருப்பதைக் காணலாம். ஜெபிக்கும்போது சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லக்கூடாது என்பதை இது நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.—மத். 6:9-13.
11:5, 6, 13. நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க யெகோவா மனமுள்ளவராய் இருக்கிறபோதிலும், நாம் விடாமல் ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.—1 யோ. 5:14.
11:41. நாம் அன்போடும் மனமுவந்தும் தானதர்மம் செய்ய வேண்டும்.
12:47, 48. அதிகமான பொறுப்புகள் இருந்தும் அதை வேண்டுமென்றே தட்டிக்கழிக்கும் ஒரு நபர், தன் கடமைகளைப்பற்றி அறியாமலோ முழுமையாகப் புரிந்துகொள்ளாமலோ இருப்பவரைவிட அதிக குற்றமுள்ளவராய் இருக்கிறார்.
14:28, 29. நம்முடைய வருமானத்திற்குத் தக்கதாய் செலவு செய்வதே ஞானமான செயல்.
22:36-38. பாதுகாப்புக்காகவோ தற்காப்புக்காகவோ ஆயுதத்தை எடுத்துக்கொள்ளும்படி தம் சீஷர்களிடம் இயேசு சொல்லவில்லை. என்றாலும், இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அவர்களிடம் பட்டயங்கள் இருந்ததால், அவர்களுக்கு ஒரு முக்கிய பாடத்தை இயேசுவால் கற்றுக்கொடுக்க முடிந்தது. “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்பதே அந்தப் பாடம்.—மத். 26:52.
[பக்கம் 31-ன் படம்]
குடும்பத் தலைவராக யோசேப்பு ஒரு சிறந்த முன்மாதிரி வைத்தார்
[பக்கம் 32-ன் படம்]
இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய விவரத்தை லூக்கா விலாவாரியாக எழுதியிருக்கிறார்