மற்றவர்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்கிறீர்களா?
‘சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று அக்கறையாய் இருக்க வேண்டும்.’—1 கொ. 12:25.
1. ஆன்மீக பரதீஸுக்குள் முதன்முதலாக கால் பதித்தபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
இந்தப் பொல்லாத உலகிலிருந்து விலகி, யெகோவாவின் மக்களோடு நாம் முதன்முதலாக பழக ஆரம்பித்தபோது எப்படி உணர்ந்தோம்? அவர்கள் மத்தியில் நிலவிய அன்பையும் கரிசனையையும் கண்டு நாம் சந்தோஷப்பட்டிருப்போம்தானே! சாத்தானுடைய ஆதிக்கத்தின்கீழ் இருக்கிற மக்கள் மத்தியிலோ முரட்டுத்தனமும் பகையும் விரோதமும்தான் காணப்படுகிறது. இவர்களுக்கும் யெகோவாவின் மக்களுக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்! ஆம், இந்தப் பொல்லாத உலகிலிருந்து விலகி, சமாதானமும் ஐக்கியமும் நிலவுகிற ஓர் ஆன்மீக பரதீஸுக்குள் நாம் கால் பதித்தோம்.—ஏசா. 48:17, 18; 60:18; 65:25.
2. (அ) மற்றவர்களை நாம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு எது காரணமாய் இருக்கலாம்? (ஆ) நாம் என்ன செய்வது அவசியம்?
2 என்றாலும், காலம் செல்லச் செல்ல நம்முடைய அபூரணத்தின் காரணமாக, நம் சகோதரர்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்திருப்போம். மொத்தத்தில் யெகோவாவுக்குப் பிடித்தமான நல்ல குணங்கள் அவர்களிடம் இருப்பதை நாம் பார்க்காமல் விட்டிருப்போம்; அதற்குப் பதிலாக, நம் அபூரணத்தின் காரணமாக அவர்களுடைய குறைகளை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்க ஆரம்பித்திருப்போம். சுருக்கமாகச் சொன்னால், அவர்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்க மறந்துவிடுகிறோம். இப்படிப்பட்ட பிரச்சினை நமக்கு இருந்தால், மற்றவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்கும் யெகோவா அவர்களைப் பார்க்கும் விதமாகப் பார்ப்பதற்கும் இதுவே சமயம்.—யாத். 33:13.
நம் சகோதரர்களை யெகோவா பார்க்கும் விதம்
3. கிறிஸ்தவ சபையை பைபிள் எதனுடன் ஒப்பிடுகிறது?
3 அப்போஸ்தலன் பவுல், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையை ‘அவயவங்கள் [அதாவது, உறுப்புகள்] அநேகமுள்ள’ உடலுக்கு ஒப்பிட்டார். இதை 1 கொரிந்தியர் 12:2-26-ல் நாம் காணலாம். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசப்பட்டிருப்பதைப் போலவே, சபையின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் சுபாவத்திலும் திறமையிலும் பெருமளவு வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், சபையிலுள்ள ஒவ்வொருவரையும் யெகோவா ஏற்றுக்கொள்கிறார். அவர்களை நெஞ்சார நேசிக்கிறார், மதிப்புமிக்கவர்களாய்க் கருதுகிறார். அதனால்தான், ‘ஒருவரைக்குறித்து ஒருவர் கவலையாய் [அதாவது, அக்கறையாய்] இருக்க வேண்டும்’ என்று சபையிலுள்ள அங்கத்தினர்களுக்கு பவுல் புத்திமதி கூறுகிறார். ஆனால், நம்முடைய சுபாவம் மற்றவர்களுடைய சுபாவத்திலிருந்து வேறுபட்டிருப்பதால் இப்படி அக்கறை காட்டுவது கடினமாய் இருக்கலாம்.
4. நம் சகோதரர்களைப் பார்க்கும் விதத்தை நாம் ஏன் மாற்ற வேண்டியிருக்கலாம்?
4 நம் சகோதரர்களுடைய குறைகளையே உற்றுப்பார்ப்பதற்கான எண்ணமும் நமக்குள் தலைதூக்கலாம். இவ்வாறு செய்வது ஒரு ஓவியத்தின் ஒரு பகுதியை மட்டுமே நாம் உற்றுப்பார்ப்பது போல் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், யெகோவாவோ நம்மைப்போல் பார்ப்பது கிடையாது, அவர் அந்த முழு ஓவியத்தையுமே பார்க்கிறார். ஒரு நபரிடம் நமக்குப் பிடிக்காத விஷயத்தையே உற்று பார்ப்பதற்கான ஆர்வம் நமக்குள் தலைகாட்டலாம். ஆனால், யெகோவாவோ அந்த நபரை, அவருடைய எல்லா நல்ல குணங்களையும் சேர்த்து முழுமையாகப் பார்க்கிறார். இந்த விஷயத்தில் யெகோவாவைப் பின்பற்ற நாம் எந்தளவுக்கு முயலுகிறோமோ அந்தளவுக்கு சபையில் அன்பும் ஐக்கியமும் நிலவ நாம் உதவுவோம்.—எபே. 4:1-3; 5:1, 2.
5. மற்றவர்களை நியாயந்தீர்ப்பது ஏன் சரியல்ல?
5 பொதுவாக, அபூரண மனிதருக்கு மற்றவர்களை நியாயந்தீர்க்கும் மனப்பான்மை இருப்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். அதனால்தான் “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள். அப்பொழுது நீங்களும் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்” என்று அவர் அறிவுரை வழங்கினார். (மத். 7:1, NW) இயேசு இங்கு சொன்னதைக் கவனியுங்கள்: “நியாயம் தீர்க்காதீர்கள்” என்று அவர் சொல்லவில்லை, மாறாக “நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்” என்றே அவர் சொன்னார். தம்முடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அநேகருக்கு மற்றவர்களுடைய குறைகளை விமர்சிக்கும் பழக்கம் இருந்ததை அவர் அறிந்திருந்தார். அப்படிப்பட்ட பழக்கம் நமக்குள்ளும் தலைதூக்கியிருக்கிறதா? மற்றவர்களுடைய குறைகளைப்பற்றி சதா பேச வேண்டுமென்ற எண்ணம் நம்மிடம் இருந்தால், அதை மாற்றிக்கொள்ள நாம் கடும் முயற்சி எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் நாம் பாதகமாக நியாயந்தீர்க்கப்பட மாட்டோம். யெகோவா பொறுப்பில் நியமித்திருக்கும் ஒருவரை நியாயந்தீர்க்கவோ சபையின் அங்கத்தினராக அவர் இருக்கக்கூடாது என்று சொல்வதற்கோ நாம் யார்? ஒரு சகோதரரிடம் சில குறைகள் இருக்கலாம். ஆனால், சபையின் அங்கத்தினராக அவர் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்பும் பட்சத்தில், அவரை நீக்க வேண்டுமென்று நாம் நினைப்பது எவ்விதத்தில் நியாயம்? (யோவா. 6:44) யெகோவா தமது அமைப்பை வழிநடத்துகிறார் என்றும் மாற்றங்கள் அவசியமென அவர் நினைத்தால் உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பார் என்றும் நாம் உண்மையிலேயே நம்புகிறோமா?—ரோமர் 14:1-4-ஐ வாசியுங்கள்.
6. யெகோவா தம் ஊழியர்களை எப்படிப் பார்க்கிறார்?
6 புதிய உலகில் பரிபூரணத்தை எட்டிய பிறகு ஒவ்வொரு கிறிஸ்தவரும் எப்படிப்பட்ட நபராக இருப்பார் என்பதை யெகோவாவால் இப்போதே பார்க்க முடியும்; இது அவரால் மட்டுமே முடிந்த ஓர் அற்புதம். அத்தகைய நபர்கள் இப்போதே ஆன்மீக ரீதியில் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே, அவர்களிடமிருக்கும் சிறுசிறு குறைகளை உற்றுப்பார்க்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்” என்பதாக சங்கீதம் 103:12-ல் நாம் வாசிக்கிறோம். அதற்காக நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்!—சங். 130:3.
7. யெகோவா தாவீதை பார்த்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
7 ஒரு நபரிடமுள்ள நல்ல குணங்களைப் பார்க்கும் ஒப்பற்ற திறமை யெகோவாவுக்கு இருக்கிறது. இதற்கான அத்தாட்சிகளை நாம் பைபிளில் காண்கிறோம். தாவீதைப்பற்றி யெகோவா கூறுகையில், ‘என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீது’ என்று சொன்னார். (1 இரா. 14:8) தாவீது சில தவறுகளைச் செய்தார் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். இருந்தாலும், அவரிடமுள்ள நல்ல குணங்களைப் பார்க்கவே யெகோவா விரும்பினார்; ஏனென்றால், தாவீதின் இருதயம் செம்மையாக இருந்ததை அவர் அறிந்திருந்தார்.—1 நா. 29:17.
உங்கள் சகோதரர்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பாருங்கள்
8, 9. (அ) எவ்விதத்தில் நாம் யெகோவாவைப்போல் இருக்கலாம்? (ஆ) இதை எப்படி உதாரணத்தோடு விளக்கலாம், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 ஒருவருடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பது யெகோவாவுக்குத் தெரியும்; ஆனால் நமக்குத் தெரியாது. நாம் ஏன் மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது என்பதற்கு இந்தக் காரணமே போதுமானது. மற்றவர்களுடைய உள்ளெண்ணங்கள் எல்லாவற்றையும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது. நாம் மனிதருடைய அபூரணத்தின்மீது கவனத்தை ஊன்றாமல் இருப்பதன்மூலம் யெகோவாவைப் பின்பற்ற முயல வேண்டும்; ஏனென்றால், மனித அபூரணமெல்லாம் பிற்காலத்தில் சுவடுதெரியாமல் மறைந்துவிடும். ஆகவே, இவ்விஷயத்தில் யெகோவாவைப் போலிருக்க முயல்வது சிறந்த காரியம், அல்லவா? நாம் அவ்வாறு செய்வது, நம் சகோதர சகோதரிகளோடு சமாதானமாய் நடந்துகொள்ள பெரிதும் உதவும்.—எபே. 4:23, 24.
9 உதாரணத்திற்கு, மோசமான நிலையிலுள்ள ஒரு வீட்டைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன் குழாய்கள் பெயர்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன, ஜன்னல்கள் உடைந்து கிடக்கின்றன, கூரையின் மரச்சட்டங்கள் இற்றுப்போயிருக்கின்றன. ‘இப்படிப் பாழடைந்து கிடக்கும் இந்த வீட்டை இடித்துதான் போட வேண்டும்’ என அதைப் பார்க்கும் பலர் நினைக்கலாம். ஆனால், யாரேனும் ஒருவர் அதை முற்றிலும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கலாம். மேலோட்டமாகத் தெரிகிற பிரச்சினைகளுக்கு அவர் அதிக கவனம் செலுத்தாமல் அதன் கட்டமைப்பு உறுதியாக இருப்பதையும் அதைப் புதுப்பிக்க முடியுமென்பதையும் பார்க்கலாம். அவர் அந்த வீட்டை வாங்கி, அதைப் பழுதுபார்த்து மீண்டும் ஓர் அழகிய வீடாக மாற்றுகிறார். அதன் பிறகு, அவ்வழியே கடந்துசெல்வோர், ‘ஆஹா! எவ்வளவு அருமையான வீடு’ என்று புகழுவார்கள். வீட்டைப் பழுதுபார்ப்பதற்கு அல்லது புதுப்பித்துக் கட்டுவதற்கு முயன்ற அந்த நபரைப்போல் நாமும் இருக்கலாம், அல்லவா? நம் சகோதரர்களிடம் மேலோட்டமாகத் தெரியும் குறைகளுக்குக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களிடமுள்ள நல்ல குணங்களைப் பார்க்கலாம், அல்லவா? ஆன்மீக ரீதியில் அவர்கள் முன்னேறுவதற்கு வாய்ப்பிருப்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம், அல்லவா? அப்படிச் செய்வோமானால், நம் சகோதரர்களுடைய ஆன்மீக அழகைப் பார்த்து யெகோவாவைப் போல நாமும் அவர்களை நேசிக்க ஆரம்பிப்போம்.—எபிரெயர் 6:10-ஐ வாசியுங்கள்.
10. பிலிப்பியர் 2:3, 4-ல் உள்ள அறிவுரை நமக்கு எப்படி உதவும்?
10 சபையிலுள்ள எல்லாரிடமும் சமாதானமாய் நடந்துகொள்வதற்கு உதவும் சில அறிவுரைகளை அப்போஸ்தலன் பவுல் கொடுத்தார். “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்று கிறிஸ்தவர்களை அவர் ஊக்குவித்தார். (பிலி. 2:3, 4) மற்றவர்களைப்பற்றி நல்ல கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு மனத்தாழ்மை நமக்கு உதவும். அதோடு, மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட அக்கறை காட்டுவதும் அவர்களிடமுள்ள நல்லதைப் பார்ப்பதும் யெகோவாவைப் போலவே நாமும் மற்றவர்களைப் பார்ப்பதற்கு உதவும்.
11. உலகளவில் ஏற்பட்டுள்ள என்ன சூழ்நிலையை சபைகளிலும் காண முடிகிறது?
11 நவீன காலத்தில், உலகளவில் ஏற்படுகிற பல்வேறு மாற்றங்களின் காரணமாக, மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு குடிமாறிச் செல்கிறார்கள். இதனால், இன்று சில நகரங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடியிருக்கிறார்கள். நாம் வாழும் பகுதிக்கு குடிமாறி வந்த சிலர் பைபிள் சத்தியத்தில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள், நம்மோடு சேர்ந்து யெகோவாவை வழிபடும் நபர்களாக மாறியிருக்கிறார்கள். இவர்கள், ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்தவர்கள்.’ (வெளி. 7:9) இதன் விளைவாக, நம்முடைய அநேக சபைகள் பல நாட்டு மக்களடங்கிய சபைகளாக மாறியிருக்கின்றன.
12. சபையிலுள்ள மற்றவர்களிடத்தில் எதைப் பார்ப்பது அவசியம், சில சமயங்களில் இது ஏன் கடினமாய் இருக்கலாம்?
12 சபையிலுள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களிடத்தில் உள்ள நல்ல குணங்களைப் பார்ப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். இதற்காக, அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த அறிவுரையை நாம் கருத்தில் கொள்வது அவசியம். ‘மாயமற்ற சகோதர சிநேகத்தை’ காட்டும்படியும் ‘சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூரும்படியும்’ அவர் அறிவுரை வழங்கினார். (1 பே. 1:22) பல நாட்டு மக்கள் அடங்கிய சபையில் ஒருவருக்கொருவர் உள்ளப்பூர்வமான அன்பையும் பாசத்தையும் காட்டுவது கடினமாக இருக்கலாம். ஏனென்றால், நம்முடைய கலாச்சாரமும் நம் சக வணக்கத்தாரின் கலாச்சாரமும் பெருமளவு வேறுபட்டிருக்கலாம்; அவர்களுடைய கல்வி, பொருளாதாரம், இனம் போன்றவையும் வேறுபட்டிருக்கலாம். இத்தகைய பின்னணியை உடைய சிலர் எப்படிச் சிந்திக்கிறார்கள் அல்லது எப்படிப் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடினமாக இருக்கிறதா? அவர்களும்கூட உங்களைப்பற்றி அவ்வாறே நினைக்கலாம். என்றாலும், ‘சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டும்படி’ நம் அனைவருக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.—1 பே. 2:17, NW.
13. நாம் சிந்திக்கும் விதத்தில் என்ன மாற்றங்களைச் செய்வது அவசியமாய் இருக்கலாம்?
13 நம் சகோதரர்கள் எல்லாரிடமும் பூரிப்பாவதற்கு, அதாவது எல்லாரிடமும் அன்பாய் பழகுவதற்கு, நாம் சிந்திக்கும் விதத்தில் சில மாற்றங்களைச் செய்வது அவசியமாய் இருக்கலாம். (2 கொரிந்தியர் 6:12, 13-ஐ வாசியுங்கள்.) “மொழி, இனம் என்றெல்லாம் எனக்கு எந்தப் பாகுபாடும் கிடையாது, ஆனால் . . . . ” என்பதுபோல் சொல்லிவிட்டு, குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களைப்பற்றி ‘இவர்கள் எல்லாருமே இப்படித்தான் என அவர்களுடைய வித்தியாசமான சில சுபாவங்களைப்பற்றி நாமே விமர்சிப்பதைக் கவனித்திருக்கிறோமா? அப்படிச் சொல்வது, நம் அடிமனதில் இன்னும் குடியிருக்கிற இனப்பாகுபாட்டை நாம் பிடுங்கியெறிவது அவசியம் என்பதைக் காட்டுகிறது. ஆகவே, ‘வித்தியாசப்பட்ட கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்களிடம் பழகுவதற்கு நான் எப்போதும் முயற்சி செய்கிறேனா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு நம்மைநாமே சீர்தூக்கிப் பார்ப்பது, பல நாடுகளைச் சேர்ந்த நம் சகோதர சகோதரிகளிடம் அன்பாய் பழகுவதிலும், அவர்களைச் சரிசமமாய் நடத்துவதிலும் முன்னேற நமக்கு உதவலாம்.
14, 15. (அ) மற்றவர்களைப் பார்க்கும் விதத்தில் மாற்றங்களைச் செய்தவர்களின் உதாரணங்களைத் தருக. (ஆ) நாம் அவர்களை எப்படிப் பின்பற்றலாம்?
14 மற்றவர்களைப் பார்க்கும் விதத்தில் மாற்றங்களைச் செய்தவர்களுடைய சிறந்த உதாரணங்கள் பைபிளில் உள்ளன. அவர்களில் ஒருவரே அப்போஸ்தலன் பேதுரு. யூதராயிருந்த அவர், பிற மதத்தவரின் வாசற்படியைக்கூட மிதித்திருக்க மாட்டார். அப்படியிருக்க, விருத்தசேதனம் செய்யப்படாதவரும் வேறு மதத்தவருமான கொர்நேலியுவின் வீட்டிற்குப் போகும்படி அவரிடம் சொல்லப்பட்டபோது அவர் எப்படி உணர்ந்திருப்பார் என்பதைச் சற்று கற்பனைசெய்து பாருங்கள்! எல்லா தேசத்து மக்களும் கிறிஸ்தவ சபையின் பாகமாக வேண்டுமென்பது கடவுளுடைய சித்தம் என்பதை பேதுரு உணர்ந்துகொண்டபோது தன் எண்ணத்தை மாற்றினார். (அப். 10:9-35) அப்போஸ்தலன் பவுலாக மாறிய சவுலும்கூட மாற்றங்களைச் செய்தார், தன் மனதிலிருந்த இனப்பாகுபாட்டைக் களைந்தார். கிறிஸ்தவர்களைத் தான் அந்தளவுக்கு வெறுத்ததாகவும், அதனால், ‘தேவனுடைய சபையை மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கிக்கொண்டிருந்ததாகவும்’ அவர் ஒத்துக்கொண்டார். இருந்தாலும், கர்த்தராகிய இயேசு அவரைத் திருத்தியபோது, அவர் பெரும் மாற்றங்களைச் செய்தார், தான் முன்பு துன்புறுத்தியவர்களிடமிருந்து கிடைத்த அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.—கலா. 1:13-20.
15 இவ்விஷயத்தில், யெகோவாவுடைய ஆவியின் உதவியோடு நம்முடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை. இனப் பாகுபாடு நம் மனதுக்குள் இன்னும் தேங்கி இருப்பது தெரியவந்தால், அதை வேரோடு பிடுங்கி எறியவும் ‘சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளவும்’ உழைப்போமாக. (எபே. 4:3-6) “பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது.—கொலோ. 3:14.
ஊழியத்தில் யெகோவாவைப் பின்பற்றுங்கள்
16. மக்களைக் குறித்ததில் கடவுளுடைய சித்தம் என்ன?
16 “தேவனிடத்தில் பட்சபாதமில்லை” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 2:11) எல்லா தேசத்து மக்களும் தம்மை வழிபட வேண்டும் என்பதே யெகோவாவின் சித்தம். (1 தீமோத்தேயு 2:3, 4-ஐ வாசியுங்கள்.) அதை நிறைவேற்றுவதற்காக, “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் . . . நித்திய சுவிசேஷத்தை” அறிவிப்பதற்கு அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். (வெளி. 14:6) “நிலம் உலகம்” என்பதாக இயேசு சொன்னார். (மத். 13:38) இது, உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் என்ன செய்யும்படி தூண்டுகிறது?
17. எல்லாவித மக்களுக்கும் நாம் எப்படி உதவலாம்?
17 எல்லாராலும் உலகின் தொலைதூர பகுதிகளுக்குச் சென்று ராஜ்ய நற்செய்தியை அறிவிக்க முடியாதுதான். இருந்தாலும், உலகின் பல பகுதிகளிலிருந்து வந்து நம் பிராந்தியத்தில் குடியிருப்பவர்களுக்கு இந்தச் செய்தியை நாம் அறிவிக்க முடியும். வருடக்கணக்காக நாம் பிரசங்கித்து வருகிற மக்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாவித மக்களுக்கும் சாட்சிகொடுப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறோமா? இதுவரை நற்செய்தியை கேள்விப்பட்டிராத மக்களிடத்தில் நாமாகவே சென்று பிரசங்கிப்பதற்குத் தீர்மானிக்கலாம், அல்லவா?—ரோ. 15:20, 21.
18. மக்கள்மீது இயேசு எப்படிப்பட்ட அக்கறையைக் காட்டினார்?
18 அனைவருக்கும் உதவ வேண்டுமென்ற உள்ளப்பூர்வமான அக்கறை இயேசுவுக்கு இருந்தது. அவர் ஒரு பகுதியில் மட்டுமே பிரசங்கிக்கவில்லை. “சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து” பிரசங்கித்தார் என ஒரு பைபிள் பதிவு கூறுகிறது. அதன் பிறகு, “திரளான ஜனங்களைக் கண்ட பொழுது . . . அவர்கள்மேல் மனதுருகி” அவர்களுக்கு உதவுவதற்கான அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.—மத். 9:35-37.
19, 20. யெகோவாவும் இயேசுவும் எல்லாவித மக்களிடமும் கொண்டுள்ள அக்கறையை நாம் என்னென்ன வழிகளில் காட்டலாம்?
19 இதுபோன்ற மனப்பான்மையை நீங்கள் என்னென்ன வழிகளில் காட்டலாம்? சிலர் தங்களுடைய பிராந்தியத்தில் அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பகுதிகளுக்குச் சென்று சாட்சிகொடுக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள். வியாபார பகுதிகள், பூங்காக்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும், நுழைவதற்கு அனுமதியில்லாத குடியிருப்பு பகுதிகளின் முன்பும் ஊழியம் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்திருக்கிறார்கள்; அதன்மூலம் தங்களுடைய பகுதியில் தற்போது குடியிருக்கிற ஒரு இனத்தவரிடம் அல்லது இதற்குமுன் அடிக்கடி சாட்சிகொடுக்கப்பட்டிராத சில இனத்தவரிடம் சென்று பிரசங்கிக்கிறார்கள். அவர்களுடைய மொழியில் ‘வணக்கம்’ சொல்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது அவர்களுடைய நலனில் உங்களுக்கு அதிக அக்கறை இருப்பதைக் காட்டலாம். மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்ளும் நிலையில் நாம் இல்லையென்றால், அவ்வாறு செய்பவர்களை ஊக்குவிக்கலாம், அல்லவா? நாம் ஒருபோதும், வேறொரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பிரசங்கிக்கச் செல்பவர்களின் ஆர்வத்தைக் குறைத்துப்போடவோ அவர்களுடைய உள்ளெண்ணங்களைக் குறித்துக் கேள்வி கேட்கவோ மாட்டோம். எல்லாருடைய உயிரும் கடவுளுடைய பார்வையில் அருமையானது, ஆகவே அவரைப் போலவே நாமும் மற்றவர்களைக் கருத வேண்டும்.—கொலோ. 3:10, 11.
20 மக்களைக் கடவுள் பார்க்கும் விதமாகப் பார்ப்பது, எல்லாவித சூழ்நிலையிலும் உள்ள மக்களுக்குப் பிரசங்கிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. சிலர் வீடு வாசலின்றி இருக்கலாம், அழுக்குப்படிந்த தோற்றத்தில் இருக்கலாம், அல்லது ஒழுக்கக்கேடாய் வாழலாம். ஒருசிலர் நம்மைத் தரக்குறைவாக நடத்தினார்கள் என்பதற்காக, ‘அந்த ஊர்க்காரர்களே அப்படித்தான்’ என்றோ ‘அந்த இனத்தவரே அப்படித்தான்’ என்றோ நாம் முடிவுகட்டக் கூடாது. பவுலைச் சிலர் ஈவிரக்கமற்ற விதத்தில் நடத்தினார்கள்; ஆனாலும், அந்தப் பின்னணியைச் சேர்ந்த மக்களிடத்தில் பிரசங்கிப்பதை அவர் நிறுத்திவிடவில்லை. (அப். 14:5-7, 19-22) அவர்களில் சிலர் நல்மனதோடு ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
21. மற்றவர்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்ப்பது உங்களுக்கு எப்படி உதவும்?
21 நம் உள்ளூர் சகோதர சகோதரிகளையும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளையும், ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களையும் சரியான விதத்தில் பார்ப்பது, அதாவது யெகோவா பார்க்கும் விதமாகப் பார்ப்பது அவசியம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நாம் எந்தளவுக்கு யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டிக்காப்போம். அதோடு, எவரையும் ‘ஒருதலைச்சார்பாய் நடத்தாதவரும்’ எல்லாரிடமும் அன்பான கரிசனையைக் காட்டுகிறவருமான யெகோவாவை நேசிப்பதற்கு நம்மால் மற்றவர்களுக்கு நன்கு உதவ முடியும். “ஏனெனில், அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?”—யோபு 34:19, பொது மொழிபெயர்ப்பு.
உங்கள் பதில்?
• நம் சகோதரர்களை எப்படிப் பார்ப்பதை நாம் தவிர்க்க வேண்டும்?
• நம் சகோதரர்களை பார்க்கும் விதத்தில் யெகோவாவை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
• பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நம் சகோதர சகோதரிகளைக் கருதும் விதத்தைக் குறித்ததில் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?
• மக்களைக் குறித்த யெகோவாவின் கண்ணோட்டத்தை ஊழியத்தில் எப்படிப் பின்பற்றலாம்?
[பக்கம் 26-ன் படம்]
மற்ற கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களிடம் நீங்கள் எப்படிப் பழகலாம்?
[பக்கம் 28-ன் படங்கள்]
என்னென்ன வழிகளில் அதிகமதிகமான மக்களுக்கு நீங்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கலாம்?