‘சூளையைப்போல் எரிகிற’ அந்த நாள்
“இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்.” —மல்கியா 4:1.
1. மல்கியா 4:1-ன் சம்பந்தமாக என்ன கேள்விகள் எழும்புகின்றன?
இந்தக் கடைசி நாட்களில், யெகோவா தம்முடைய ஞாபகப் புஸ்தகத்தில் எழுத, யாருடைய பெயரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர்கள் சந்தோஷமுள்ளவர்கள். ஆனால், அந்தச் சிலாக்கியத்திற்கு தகுதியடைய தவறுவோரைப்பற்றியது என்ன? அவர்கள் ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, அல்லது பொதுமக்களாக இருந்தாலும் சரி, கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்பவர்களையும் அவர்களுடைய செய்தியையும் அலட்சியம் செய்தால், அவர்களுக்கு என்ன நேரிடும்? மல்கியா கணக்குக் கொடுக்கும் நாளைப் பற்றி பேசுகிறார். அதிகாரம் 4, வசனம் 1-ல் நாம் வாசிக்கிறோம்: “இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”
2. யெகோவாவின் நியாயத்தீர்ப்பைப் பற்றிய என்ன தத்ரூபமான சித்தரிப்பு எசேக்கியேலால் கொடுக்கப்படுகிறது?
2 யெகோவா தேசங்களை நியாயந்தீர்ப்பதை மற்ற தீர்க்கதரிசிகளும்கூட, ஒரு சூளையின் கடும் வெப்பத்துக்கு ஒப்பிடுகின்றனர். எசேக்கியேல் 22:19-22-ல் சொல்லப்பட்டிருப்பது விசுவாசதுரோகக் கிறிஸ்தவமண்டல பிரிவுகளைக் கடவுள் நியாயத்தீர்ப்பு செய்வதற்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது! அது வாசிக்கிறது: “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்களெல்லாரும் களிம்பாய்ப் போனபடியினால், இதோ, நான் உங்களை . . . சேர்ப்பேன். வெள்ளியையும் பித்தளையையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச்சேர்த்து வைத்து உருக்குவேன். நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள். குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்துகொள்வீர்கள் என்றார்.”
3, 4. (அ) குருமார் என்ன மாய்மாலமான உரிமைபாராட்டுதலைச் செய்தனர்? (ஆ) மதத்தின் கறைப்படிந்த பதிவு யாது?
3 அது உண்மையிலேயே ஒரு வல்லமை வாய்ந்த உவமை! யெகோவாவின் பெயரை உபயோகிப்பதைத் தவிர்த்து, அந்தப் பரிசுத்த பெயரை பழித்தும்கூட பேசும் குருமார் நீதியைச் சரிக்கட்டும் அந்த நாளை நிச்சயமாகவே எதிர்ப்பட வேண்டும். பூமியின் மீது கடவுளுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்போம் அல்லது ராஜ்யம் வருவதற்காக இந்தப் பூமியை ஒரு தகுதியான இடமாகவாது ஆக்குவோம் என்று அவர்களும் அவர்களுடைய அரசியல் கூட்டாளிகளும் அதிக கர்வத்தோடு உரிமைபாராட்டிக் கொள்கின்றனர்.
4 விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலம் அரசியல் ஆட்சியாளர்களோடு சேர்ந்துகொண்டு பயங்கரமான போர்களில் ஈடுபட்டிருக்கிறது. இடைநிலைக்காலத்தில் நடந்த சிலுவைப் போர்கள், ஸ்பானிய கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைகளின் போது பலவந்தமாய் செய்யப்பட்ட மதமாற்றங்கள், 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் பெரும்பகுதியை அழித்த முப்பது வருட போர், கத்தோலிக்க மதத்தை ஸ்பெய்ன் தேசத்தில் முதன்மையாக்குவதற்கு 1930-களில் அந்தத் தேசத்தில் நடந்த ஸ்பானிய உள்நாட்டுப் போர் போன்றவற்றை சரித்திரம் பதிவுசெய்கிறது. நம்முடைய நூற்றாண்டில் நடந்த இரண்டு உலக யுத்தங்களில், கத்தோலிக்கர், புராட்டஸ்டன்டினர் அனைவரும் விதிமுறை ஏதுமின்றி தங்கள் மதத்தினரையும் மற்ற மதத்தினரையும் கண்மூடித்தனமாகப் படுகொலை செய்தபோது மிக அதிக இரத்தம் சிந்துதல் ஏற்பட்டது. வெகுசமீபத்திலும் இத்தகைய கொலைவெறித்தன சண்டைகள் அயர்லாந்தில் கத்தோலிக்கர் மற்றும் புராட்டஸ்டன்டினர் நடுவேயும், இந்தியாவில் உள்ள மதத் தொகுதிகளிடையேயும், முன்னாள் யூகோஸ்லாவியாவின் மதப் பிரிவினரிடையேயும் நடந்து வந்திருக்கின்றன. இரத்த சாட்சிகளாக ஆயிரக்கணக்கான உண்மையுள்ள யெகோவாவின் சாட்சிகள் கொல்லப்பட்டதும் மத சரித்திரத்தின் பக்கங்களை இரத்தக்கறை படிந்ததாக ஆக்கியுள்ளது.—வெளிப்படுத்துதல் 6:9, 10.
5. பொய் மதத்திற்கு என்ன நியாயத்தீர்ப்பு காத்துக்கொண்டிக்கிறது?
5 பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோன் மீதும் அதன் ஆதரவாளர்களின் மீதும் யெகோவா கொண்டு வரப்போகும் அழிவின் நியாயமானத் தன்மையை நாம் மனமார போற்றலாம். இது வெளிப்படுத்துதல் 18:21, 24-ல் விவரிக்கப்பட்டிருக்கிறது: “பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும். தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.”
6. (அ) யார் துரும்பாக ஆக வேண்டும், ஏன்? (ஆ) யெகோவாவின் பேரில் பயப்படுவோருக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
6 நீதிக்கு விரோதமாகச் செயல்படும் எல்லா எதிரிகளும், அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய ஆதரவாளர்களும், நாளடைவில் ‘துரும்பாக ஆக வேண்டும்.’ யெகோவாவின் நாள் அவர்கள் நடுவே சூளையைப்போல எரியும். அது அவர்களுக்கு ‘வேரையோ அல்லது கொப்பையோ எதையும் மீதி வைக்காமற் போகும்.’ யெகோவாவின் கணக்குக் கொடுக்கும் அந்த நாளில், இளம் பிள்ளைகள் அல்லது கொப்புகள், அவர்கள் மீது கண்காணிப்பு செய்யும் பெற்றோர்களை அல்லது வேர்களை கடவுள் எப்படி மதிப்பிடுகிறாரோ அதன்பிரகாரம் நீதியாய் நியாயந்தீர்க்கப்படுவர். துன்மார்க்க பெற்றோர்கள் தங்கள் துன்மார்க்க வழிகளை நீடித்திருக்கச் செய்வதற்கு பின்தொடரும் சந்ததியினரைக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் கடவுளுடைய ராஜ்ய வாக்குறுதிகளின் பேரில் விசுவாசம் வைப்பவர்கள் அசைக்கப்பட மாட்டார்கள். எனவே எபிரெயர் 12:28, 29 புத்திமதி கூறுகிறது: “நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.”
யெகோவா ஒரு கொடூரமான கடவுளா?
7. யெகோவாவின் நியாயத்தீர்ப்பில் எவ்வாறு அவருடைய அன்பு இடம்பெறுகிறது?
7 யெகோவா ஒரு கொடூரமான, வஞ்சம் தீர்க்கும் இயல்புடைய கடவுள் என்று இது பொருள்படுகிறதா? இல்லவே இல்லை! 1 யோவான் 4:8-ல் அப்போஸ்தலனாகிய யோவான் “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்ற அடிப்படை சத்தியத்தைக் கூறுகிறார். பிறகு 16-ம் வசனத்தில் “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்,” என்று கூறுவதன் மூலம் மேலும் வலியுறுத்துகிறார். மனிதவர்க்கத்தின் பேரிலுள்ள அன்பின் காரணமாகத்தான் யெகோவா இந்தப் பூமியை எல்லா துன்மார்க்கத்திலிருந்தும் சுத்தம் செய்ய நோக்கம் கொண்டுள்ளார். நம்முடைய அன்பான, இரக்கமுள்ள கடவுள் இவ்வாறு அறிவிக்கிறார்: “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; . . . உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார்.”—எசேக்கியேல் 33:11.
8. தன்னை இடிமுழக்க புத்திரனாக காட்டிக்கொண்ட போதிலும்கூட, யோவான் எவ்வாறு அன்பை வலியுறுத்தினார்?
8 யோவான் அகாப்பே என்ற நியமங்களின் பேரில் சார்ந்த அன்பைக் குறித்து மற்ற மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களைக் காட்டிலும் அநேக முறை குறிப்பிடுகிறார். இருந்தபோதிலும், மாற்கு 3:17-ல் (NW) யோவான் ‘இடிமுழக்க புத்திரன்’ என்று விவரிக்கப்படுகிறார். யெகோவாவின் ஆவியினால் ஏவப்பட்டு இந்த இடிமுழக்க புத்திரன் பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் வெளிக்காட்டப்பட்ட செய்திகளை எழுதினார். அது யெகோவாவை நியாயம் தீர்க்கும் கடவுளாக விவரிக்கிறது. “தேவனுடைய கோபாக்கினை யென்னும் பெரிய ஆலையிலே,” ‘தேவனுடைய ஏழு கோபகலசங்கள்,’ ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபம்’ போன்ற நியாயத்தீர்ப்பு சம்பந்தப்பட்ட பதங்கள் இப்புத்தகம் முழுவதும் காணப்படுகின்றன.—வெளிப்படுத்துதல் 14:19; 16:1; 19:15.
9. யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளின் பேரில் இயேசு என்ன கூற்றுகளை அளித்தார் மற்றும் அவருடைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேற்றமடைந்தன?
9 ‘அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமாய்’ இருக்கும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பூமியில் இருக்கையில் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை தைரியமாக அறிவித்தார். (கொலோசெயர் 1:15) உதாரணமாக, அவர் தம் நாளில் இருந்த மத மாய்மாலக்காரர்களுக்கு எதிராக மத்தேயு 23-ஆம் அதிகாரத்தில் ஏழு ஆபத்துக்களை ஒளிவுமறைவின்றி அறிவித்தார். கண்டனம் செய்யும் அந்த நியாயத்தீர்ப்பை அவர் பின்வரும் வார்த்தைகளில் முடித்தார்: “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.” முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, ரோம சேனைகள் தளபதி டைட்டஸின் தலைமையின்கீழ் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றியது. அது ஒரு பயங்கரமான நாளாக இருந்தது, மானிட அனுபவத்திலேயே மிகவும் பயங்கரமான நாளை—விரைவில் வரவிருக்கும் யெகோவாவின் நாளை அது முன்னுரைப்பதாக இருந்தது.
“சூரியன்” ஒளி வீசுகிறது
10. “நீதியின் சூரியன்” எவ்வாறு கடவுளின் ஜனங்களுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவருகிறார்?
10 அவருடைய நாளைத் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். இவர்களைக் குறித்து அவர் மல்கியா 4:2-ல் இவ்வாறு சொல்கிறார்: “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்.” அந்த நீதியின் சூரியன் இயேசு கிறிஸ்துவேயன்றி வேறு யாருமில்லை. அவர் ஆவிக்குரிய அர்த்தத்தில் ‘உலகத்தின் ஒளியாக’ இருக்கிறார். (யோவான் 8:12) அவர் எவ்வாறு ஒளி வீசுகிறார்? அவர் தம்முடைய செட்டைகளின்கீழ் ஆரோக்கியத்துடன் குணமாக்கும் வல்லமையோடு எழுந்தருளுவார்—முதலில் ஆவிக்குரிய சுகப்படுத்துதல், அதை நாம் இன்றும்கூட அனுபவித்து வருகிறோம், அதற்குப் பிறகு, வரப்போகும் புதிய உலகில் எல்லா தேசங்களிலுமிருந்து வரும் ஜனங்களுக்கு சரீரப்பிரகாரமான சுகப்படுத்துதல். (மத்தேயு 4:23; வெளிப்படுத்துதல் 22:1, 2) அடையாள அர்த்தத்தில், மல்கியா கூறியதைப்போல் குணமாக்கப்பட்டவர்கள், அப்போதுதான் தொழுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதுபோல ‘வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவார்கள்.’ மனித பரிபூரணத்தை அடையும் எதிர்பார்ப்போடு உயிர்த்தெழுப்பப்படும் நபர்களும்கூட எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அனுபவிப்பர்!
11, 12. (அ) துன்மார்க்கருக்கு என்ன முடிவு காத்துக்கொண்டிருக்கிறது? (ஆ) கடவுளுடைய ஜனங்கள் எவ்வாறு ‘துன்மார்க்கரை மிதிக்கிறார்கள்’?
11 என்றபோதிலும், துன்மார்க்கரைப் பற்றியென்ன? மல்கியா 4:3-ல் நாம் வாசிக்கிறோம்: “துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” கடவுள் தம்மை நேசிக்கிறவர்களைக் காப்பாற்றுவதோடு, நம்முடைய மாவீர கடவுள் கொடூரமான விரோதிகளைப் பூமியிலிருந்து துடைத்தழித்து விடுவார். சாத்தானும் அவனுடைய பேய்களும் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பார்கள்.—சங்கீதம் 145:20; வெளிப்படுத்துதல் 20:1-3.
12 துன்மார்க்கரை அழிப்பதில் கடவுளுடைய ஜனங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அப்படியென்றால் அவர்கள் எவ்வாறு ‘துன்மார்க்கரை மிதிப்பார்கள்’? பெரும் வெற்றி கொண்டாட்டத்தில் பங்குகொள்வதன் மூலம் அவர்கள் இதை அடையாள அர்த்தத்தில் செய்கின்றனர். யாத்திராகமம் 15:1-21 அப்படிப்பட்ட கொண்டாட்டத்தை விவரிக்கிறது. அது பார்வோனும் அவனுடைய சேனைகளும் சிவந்த சமுத்திரத்தில் அழிக்கப்பட்டதைப் பின்தொடர்ந்தது. ஏசாயா 25:3-9-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக ‘கொடூரமானவர்கள்’ நீக்கப்படுவர். அதற்குப் பின்பு, கடவுளின் வாக்குறுதியோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு வெற்றி பெருவிருந்து தொடரும்: “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், . . . இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.” இம்மகிழ்ச்சியில் பழிவாங்கும் மனப்பான்மையோ அல்லது கெட்ட எண்ணமோ இல்லை. ஆனால் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுத்தப்படுவதைப் பார்ப்பதாலும் ஐக்கியப்படுத்தப்பட்ட மனிதவர்க்கம் சமாதானமாக வாழ்வதற்கு பூமி சுத்தமாக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பதாலும் ஏற்படும் சந்தோஷம் அதில் இருக்கிறது.
ஒரு மாபெரும் கல்விபுகட்டும் திட்டம்
13. ‘புதிய பூமியில்’ எத்தகைய கல்வி புகட்டுதல் நடைபெறும்?
13 ‘மோசேயின் நியாயப்பிரமாண கட்டளைகளை நினைக்கும்’படி மல்கியா 4:4-ல் [NW] யூதர்களுக்குப் புத்திமதி கொடுக்கப்பட்டது. ஆகவே, இன்று நாம் கலாத்தியர் 6:2-ல் குறிப்பிடப்பட்டுள்ள “கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை” பின்பற்றுவது அவசியம். இந்தப் பிரமாணத்தின் அடிப்படையில் அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களுக்குக் கூடுதலான போதனைகள் கொடுக்கப்படும். வெளிப்படுத்துதல் 20:12-ல் சொல்லப்பட்டிருக்கும் “புஸ்தகங்களில்” இப்போதனைகள் எழுதப்பட்டிருக்கும். அவை உயிர்த்தெழுதலின் போது திறக்கப்படும். மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவோர் “புதிய பூமி”யின் வாழ்க்கை பாணியை ஏற்றுக்கொள்வதற்காக கல்வி புகட்டப்படும்போது, அது எப்படிப்பட்ட ஓர் மகத்தான நாளாய் இருக்கும்!—வெளிப்படுத்துதல் 21:1.
14, 15. (அ) நவீன-நாளைய எலியா எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்? (ஆ) எலியா வகுப்பார் என்ன உத்தரவாதத்தை நிறைவேற்றுகிறார்கள்?
14 மல்கியா 4:5-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி, யெகோவா குறிப்பிட்டிருக்கும் கல்வி புகட்டும் வேலையின் விரிவாக்கமாக அது இருக்கும்: “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” அந்த நவீன-நாளைய எலியா யார்? மத்தேயு 16:27, 28-ல் காண்பிக்கப்பட்டிருக்கிறபடி, ‘தம்முடைய ராஜ்யத்தில் வருவதாக’ இயேசு தம்முடைய வருகையைக் குறித்து சொல்லும்போது இவ்வாறு சொன்னார்: “மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.” ஆறு நாட்களுக்குப் பின், ஒரு மலையின் மீது பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரோடு இருக்கையில் அவர் “அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.” இத்தரிசனத்தில் அவர் தனியாக இருந்தாரா? இல்லை, ஏனென்றால், “அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.”—மத்தேயு 17:2, 3.
15 இது எதை அர்த்தப்படுத்தக்கூடும்? நியாயந்தீர்ப்பதற்காக வரும் சமயத்தில் இயேசு தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்ட ஒரு பெரிய மோசேயாக இருப்பார் என்பதை அது குறிப்பிட்டுக் காட்டியது. (உபாகமம் 18:18, 19; அப்போஸ்தலர் 3:19-23) யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன், பூமிமுழுவதும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் முக்கியமான வேலையை நிறைவேற்றுவதற்கு அவர் நவீன-நாளைய எலியாவோடு சம்பந்தப்பட்டவராக இருப்பார். இந்த “எலியா”வின் வேலையை விவரித்து, மல்கியா 4:6 குறிப்பிடுகிறது: “நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.” இவ்வாறாக, இந்த “எலியா” பூமியிலுள்ள அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் என அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடத்தில் எஜமானாகிய இயேசு தம்முடைய ஆஸ்திகளையெல்லாம் ஒப்படைத்திருக்கிறார். விசுவாச வீட்டாருக்குத் தேவையான ஆவிக்குரிய ‘ஆகாரத்தை ஏற்ற வேளையிலே’ கொடுப்பதையும் இது உட்படுத்துகிறது.—மத்தேயு 24:45, 46, NW.
16. எலியா வகுப்பாரின் வேலை என்ன மகிழ்ச்சியான விளைவுகளை விளைவித்துள்ளது?
16 அந்தப் போஷிக்கும் திட்டத்தின் மகிழ்ச்சியான விளைவுகளை நாம் இன்று உலகமுழுவதும் காணலாம். ஒவ்வொரு பிரதியும் 120 மொழிகளில் 1,61,00,000 பிரதிகள் என அச்சடிக்கப்படும் காவற்கோபுர பத்திரிகை, இவற்றுள் 97 மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் இது, பூமியை ‘ராஜ்யத்தின் நற்செய்தியால்’ நிரப்பியிருக்கிறது. (மத்தேயு 24:14, NW) அநேக மொழிகளில் வேறு பிரசுரங்கள், யெகோவாவின் சாட்சிகளின் பிரசங்கிக்கும், கற்பிக்கும் வேலையின் பல்வேறு அம்சங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ‘ஆவிக்குரியத் தேவையைக் குறித்து உணர்வுள்ளோராய் இருப்பவர்களுக்கு’ உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாகிய எலியா வகுப்பார் ஏராளமாக அளிக்க விழிப்புள்ளவர்களாய் இருக்கின்றனர். (மத்தேயு 5:3, NW) மேலும், இந்த ராஜ்ய நம்பிக்கையை ஏற்று அதன் பேரில் செயல்படுவோர் ஒரு மகத்தான உலகளாவிய ஐக்கியத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். ‘சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வரும் திரளான கூட்டமாகிய ஜனங்களை’ இது உள்ளடக்கியுள்ளது. (வெளிப்படுத்துதல் 7:9) யெகோவாவுக்கு வேண்டுமென்ற அளவுக்கு இந்த வேலை நிறைவேற்றப்பட்ட பின்பு, யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளின் போது முடிவு வரும்.
17. யெகோவாவின் பயங்கரமான நாள் எப்போது திடீரென்று வரும்?
17 ஆனால் அந்தப் பயங்கரமான நாள் எப்போது திடீரென்று நம்மீது வரும்? அப்போஸ்தலனாகிய பவுல் பதிலளிக்கிறார்: “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று [ஒருவேளை பிரத்தியேக முறையில்] அவர்கள் சொல்லும்போது கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.”—1 தெசலோனிக்கேயர் 5:2, 3.
18, 19. (அ) எவ்வாறு “சமாதானமும் சவுக்கியமும்” அறிவிக்கப்படுகிறது? (ஆ) யெகோவாவின் ஜனங்கள் எப்போது ஆறுதலடைவார்கள்?
18 இந்தத் தீர்க்கதரிசனத்தில் “அவர்கள்” யார்? அவர்கள் அரசியல் தலைவர்கள். பிரிவினை நிறைந்த இந்த வன்முறையான உலகத்திலிருந்து, தங்களால் புதிய ஒழுங்குமுறையைக் கட்டியமைக்க முடியும் என்று அவர்கள் உரிமைபாராட்டுகிறார்கள். இதில் அவர்களுடைய டாம்பீகமான ஏதுக்களாகிய சர்வதேச சங்கமும் ஐக்கிய நாடுகளும் தோல்வியடைந்திருக்கின்றன. யெகோவாவின் தீர்க்கதரிசி முன்னுரைத்ததைப் போல், இப்பொழுதும்கூட அவர்கள், ‘சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்கிறார்கள்.’—எரேமியா 6:14; 8:11; 14:13-16.
19 அந்நாள் வருவதற்கு முன் இருக்கும் காலப்பகுதியில், யெகோவாவின் ஜனங்கள் இந்தக் கடவுள் பயமற்ற உலகத்தின் அழுத்தங்களையும் துன்புறுத்துதல்களையும் சகித்துக்கொள்ள வேண்டும். ஆனால், 2 தெசலோனிக்கேயர் 1:7, 8-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, விரைவில் “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது” அவர்கள் ஆறுதல் அடைவார்கள்.
20. (அ) ‘சூளையைப்போல் எரிகிற’ அந்த நாளைப் பற்றி செப்பனியாவும் ஆபகூக்கும் என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்? (ஆ) என்ன உற்சாகத்தையும் ஆலோசனையையும் இந்தத் தீர்க்கதரிசனங்கள் கொடுக்கின்றன?
20 அது எவ்வளவு விரைவில் நடைபெறும்? நம்மில் அநேகர் நீண்டகாலமாக காத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையில், செப்பனியா 2:2, 3-ல் உள்ள அழைப்புக்கு, தப்பிப்பிழைக்கப் போகும் அநேக மனத்தாழ்மையுள்ள நபர்கள் பதிலளித்துக் கொண்டிருக்கின்றனர்: ‘கர்த்தரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.’ பிறகு செப்பனியா 3:8-ல் இந்தப் புத்திமதியடங்கியுள்ளது: “ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.” முடிவு அண்மையில் உள்ளது! அந்த நாளையும் நாழிகையையும் யெகோவா அறிந்திருக்கிறார். அவர் தம் கால அட்டவணையை மாற்ற மாட்டார். நாம் பொறுமையோடு சகித்துக்கொண்டிருப்போமாக. “குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:3) யெகோவாவின் நாள் இன்னும் அருகில் விரைந்து வருகிறது. நினைவில் வையுங்கள், அந்த நாள் தாமதிக்காது!
மறுபார்வை செய்கையில்:
◻ ஆட்சியாளர்களும் ஆளப்படுகிறவர்களும் யெகோவாவின் பயங்கரமான நாளில் எவ்வாறு தேர்ச்சி பெறுவர்?
◻ யெகோவா எத்தகைய ஒரு கடவுள்?
◻ கடவுளுடைய ஜனங்களுக்கு எந்த விதமான கல்வி புகட்டுதல் விவரிக்கப்பட்டுள்ளது?
◻ முடிவு நெருங்குவதை முன்னிட்டு கடவுளின் தீர்க்கதரிசிகள் எவ்வாறு நம்மை அறிவுறுத்துகிறார்கள்?
[பக்கம் 21-ன் படம்]
ஸ்பானிய கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைகளின் போது அநேகர் கத்தோலிக்க மதத்துக்கு மாற பலவந்தம் செய்யப்பட்டார்கள்
[படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck