உங்கள் மணவாழ்வை பலப்படுத்துவது எப்படி
ஒரு வீடு மோசமான நிலைமையில் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த வீட்டின் பெயின்ட்டெல்லாம் வந்துவிட்டது, கூரை சேதமடைந்துவிட்டது, வீட்டைச் சுற்றியிருந்த செடி கொடிகளெல்லாம் பட்டுப்போய்விட்டன. இந்தக் கட்டிடம் சிலகாலமாக கடும் புயல்களை சந்தித்திருக்கிறது, கவனிப்பாரின்றி பாழடைந்து கிடந்திருக்கிறது என்பது தெளிவாக உள்ளது. ஆகவே, இந்த வீட்டை இடித்து நொறுக்க வேண்டியதுதானா? வேண்டியதில்லை. அஸ்திவாரம் உறுதியாகவும் கட்டிடம் ஸ்திரமாகவும் இருந்தால், ஒருவேளை அந்த வீட்டை பழுதுபார்த்து பழைய நிலைமைக்கு கொண்டு வந்துவிடலாம்.
அப்படிப்பட்ட வீட்டின் நிலைமை உங்களுடைய மணவாழ்க்கையை நினைப்பூட்டுகிறதா? பிரச்சினைகள் எனும் கடும் புயல் வீசியதால் உங்களுடைய திருமண பந்தம் ஆட்டங்கண்டிருக்கலாம். ஒருவருடைய பங்கில் அல்லது இருவருடைய பங்கிலும் அசட்டை மனப்பான்மை ஓரளவு இருந்திருக்கலாம். சான்டி என்ற பெண்ணைப் போல நீங்களும் உணரலாம். 15 வருட மணவாழ்க்கைக்குப் பிறகு, அவள் இவ்வாறு கூறினாள்: “எங்களுக்கு ஏதோ கலியாணம் ஆயிடுச்சே தவிர வேறெந்த பொருத்தமும் இல்லை. ஆனால் அது மட்டும் போதாது.”
உங்களுடைய மணவாழ்க்கை இந்த நிலைமைக்கு வந்திருந்தாலும் அதற்கு முடிவுகட்ட வேண்டியதுதான் என்ற தீர்மானத்திற்கு வந்துவிடாதீர்கள். உங்களுடைய மணவாழ்க்கையை பெரும்பாலும் தூக்கிநிறுத்த முடியும். இது, உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் இடையே உள்ள திருமண கட்டு அல்லது ஒப்பந்தத்தில் உங்களுக்கிருக்கும் ஈடுபாட்டைப் பொறுத்தே இருக்கிறது. இந்தத் திருமண கட்டு அல்லது ஒப்பந்தம் கஷ்ட காலங்களில் உங்களது மணவாழ்க்கையை ஸ்திரமாக்கும். ஆனால் திருமண கட்டு அல்லது ஒப்பந்தம் என்றால் என்ன? அதை உறுதிப்படுத்துவதற்கு பைபிள் எவ்வாறு உங்களுக்கு உதவும்?
ஒப்பந்தம் கடமையை உட்படுத்துகிறது
ஒப்பந்தம் என்பது கடமையுணர்வை அல்லது உள்ளப்பூர்வ உந்துதலை குறிக்கிறது. சிலசமயங்களில், இந்த வார்த்தை வியாபாரம் போன்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, கட்டிடக் கலைஞர் ஒருவர் வீடு கட்டித் தருவதாக கையொப்பமிட்டுக் கொடுத்திருந்தால் அந்த ஒப்பந்தத்திலுள்ள எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்ற தான் கடமைப்பட்டிருப்பதாக நினைக்கலாம். அந்த வேலையை ஒப்படைத்த நபரை ஒருவேளை இவருக்கு தனிப்பட்ட விதமாக தெரியாமல் இருக்கலாம். இருந்தாலும், தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டுமென்ற உந்துதல் அவருக்கு இருக்கலாம்.
திருமணம் என்பது உணர்ச்சியற்ற ஒரு வியாபார ஒப்பந்தம் போன்றதல்ல என்றாலும், இந்தக் கட்டில் கடமையுணர்வும் உட்பட்டுள்ளது. வாழ்க்கையில் கஷ்டமோ நஷ்டமோ எது வந்தாலும், சேர்ந்து வாழ்வதாக நீங்களும் உங்களுடைய துணையும் கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பு உறுதிமொழி எடுத்திருக்கலாம். இயேசு இவ்வாறு கூறினார்: ‘ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் . . . இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.’ இயேசு மேலும் கூறினார்: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” (மத்தேயு 19:4-6) அப்படியானால், பிணக்கங்கள் ஏற்படும்போது, நீங்களும் உங்களுடைய துணையும் செய்த திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்ற உறுதிபூண்டிருக்க வேண்டும்.a இல்லத்தரசி ஒருவர் இவ்வாறு கூறினார்: “விவாகரத்து செய்வதைப் பற்றி யோசிப்பதை நிறுத்திய பிற்பாடுதான் நிலைமை முன்னேற ஆரம்பித்தது.”
ஆனால் திருமண ஒப்பந்தத்தில் கடமையுணர்வைக் காட்டிலும் அதிக விஷயங்கள் உட்பட்டுள்ளன. அப்படியென்றால், அவை என்னென்ன?
திருமண ஒப்பந்தத்தைப் பலப்படுத்த கூட்டுமுயற்சி
திருமண கட்டு அல்லது ஒப்பந்தம் என்று சொன்னால், மணத் துணைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளே வராது என்பதை அர்த்தப்படுத்தாது. அப்படி கருத்து வேறுபாடுகள் உண்டாகும்போது, அவற்றை தீர்ப்பதற்கு ஊக்கமான ஆவல் இருக்க வேண்டும், மணமுடிக்கும்போது எடுத்த உறுதிமொழிக்கு கட்டுப்பட்டு இருப்பதால் மட்டுமே அல்ல, உணர்ச்சிப்பூர்வ கட்டுக்குள் இருப்பதாலுமே அப்படி செய்ய வேண்டும். கணவன் மனைவியைப் பற்றி இயேசு இவ்வாறு கூறினார்: “அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.”
உங்கள் துணைவருடன் ‘ஒரே மாம்சமாயிருப்பது’ என்றால் என்ன? ‘புருஷர்கள் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்’ என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 5:28, 29) அப்படியானால், ‘ஒரே மாம்சமாயிருப்பது’ என்பது உங்கள் சொந்த நலனில் அக்கறையாக இருப்பது போல உங்கள் துணைவருடைய நலனிலும் அக்கறையாக இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. மணமானவர்கள் தங்களுடைய சிந்தையை “நான்” “என்னுடைய” என்பதிலிருந்து “நாம்” “நம்முடைய” என்பதற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். ஓர் அறிவுரையாளர் இவ்வாறு கூறினார்: “இருவரும் இருதயத்தில் மணமாகாதவர்களைப் போல உணருவதை நிறுத்திக்கொண்டு, இருதயத்தில் மணமானவர்களைப் போல உணர வேண்டும்.”
நீங்களும் உங்களுடைய துணைவரும் “இருதயத்தில் மணமானவர்களாக” உணருகிறீர்களா? பல வருட காலம் ஒன்றுசேர்ந்து வாழ்ந்தாலும் இந்தக் கருத்தில் ‘ஒரே மாம்சமாக’ இல்லாமற்போகும் சாத்தியமிருக்கிறது. ஆம், அப்படி சம்பவிக்கலாம், ஆனால் பிரச்சினைகளைத் தீர்க்க காலத்தை அனுமதித்தல் என்ற ஆங்கில நூல் இவ்வாறு கூறுகிறது: “திருமணம் என்பது வாழ்க்கையை பகிர்ந்துகொள்வது; அவர்கள் எந்தளவுக்கு பகிர்ந்துகொள்கிறார்களோ அந்தளவுக்கு அவர்களுடைய மணவாழ்வு செழிக்கும்.”
மகிழ்ச்சியற்ற தம்பதியினர் சிலர் தங்களுடைய பிள்ளைகளுக்காக அல்லது பொருளாதார பாதுகாப்பிற்காக சேர்ந்து வாழ்கிறார்கள். வேறு சிலரோ சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள், ஏனென்றால் விவாகரத்து செய்துகொள்வது தார்மீக ரீதியில் மாபெரும் தவறு என நினைக்கிறார்கள் அல்லது பிரிந்துபோனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என பயப்படுகிறார்கள். இத்தகைய திருமணங்கள் நிலைத்திருப்பது மெச்சத்தக்கதே என்றாலும், உங்களுடைய இலக்கு அன்பான உறவை அனுபவிப்பதே, வெறுமனே உறவை தொடர்ந்திருக்கச் செய்வதல்ல.
சுயநலமின்மை திருமண ஒப்பந்தத்தைப் பலப்படுத்துகிறது
“கடைசி நாட்களில்” ஜனங்கள் ‘தற்பிரியராக’ இருப்பார்கள் என பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1, 2) அந்தத் தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக, ஜனங்கள் தங்களையே புகழ்ந்து மலர் மாலை சூட்டிக்கொள்வது இன்றைய போக்காக இருக்கிறது. அநேக திருமணங்களில், ஏதாவது பெற்றுக்கொள்வோம் என்ற உத்தரவாதம் இல்லாத பட்சத்தில் தன்னையே கொடுப்பது பலவீனத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. இருந்தாலும், வெற்றிகரமான மணவாழ்வில், துணைவர்கள் இருவருமே சுயதியாக மனப்பான்மையை காண்பிக்கிறார்கள். இத்தகைய மனப்பான்மையை நீங்கள் எவ்வாறு காண்பிக்கலாம்?
‘இந்த உறவினால் எனக்கென்ன நன்மை?’ என்ற கேள்வியின் மீதே கவனத்தை ஊன்ற வைப்பதற்குப் பதிலாக, ‘என்னுடைய மணவாழ்க்கையை பலப்படுத்த தனிப்பட்ட விதமாக நான் என்ன செய்து வருகிறேன்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கிறிஸ்தவர்கள் ‘தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்க’ வேண்டும் என பைபிள் கூறுகிறது. (பிலிப்பியர் 2:4) இந்த பைபிள் நியமத்தை சிந்தித்துப் பார்க்கையில், கடந்த வாரத்தில் நீங்கள் செய்த செயல்களையும் அலசிப் பாருங்கள். உங்களுடைய துணையின் நன்மைக்கென்றே எத்தனை தடவை நீங்கள் அன்பான செயல்களை செய்தீர்கள்? உங்களுடைய துணை உங்களிடம் பேச விரும்பியபோது, உங்களுக்கு மனமில்லாதபோதிலும்கூட செவிகொடுத்துக் கேட்டீர்களா? உங்களுடைய விருப்பத்தைவிட உங்களுடைய துணையின் விருப்பத்திற்காக எத்தனை காரியங்களில் ஈடுபட்டீர்கள்?
இத்தகைய கேள்விகளை எடை போட்டுப் பார்க்கையில், உங்களுடைய நல்ல செயல்கள் கவனிக்கப்படாமல் அல்லது பலனளிக்கப்படாமல் போய்விடும் என கவலைப்படாதீர்கள். “பெரும்பாலான உறவுகளில், அன்பான செயல்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். ஆகவே உங்கள் பங்கில் அன்புடன் செயல்படுவதன் மூலம் உங்கள் துணையும் அன்புடன் செயல்பட உற்சாகப்படுத்துவதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.” சுயதியாக செயல்கள் உங்களுடைய மணவாழ்வை பலப்படுத்தும், ஏனென்றால் அதை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்கள் என்பதையும், அதை கட்டிக்காக்க விரும்புகிறீர்கள் என்பதையும் அவை தெரியப்படுத்துகின்றன.
நீண்ட கால கண்ணோட்டம் அவசியம்
உண்மைப் பற்றுறுதியை யெகோவா உயர்வாய் மதிக்கிறார். “உண்மைப் பற்றுறுதியுள்ளவரிடம் நீர் [யெகோவா] உண்மைப் பற்றுறுதியுடன் செயல்படுவீர்” என பைபிள் குறிப்பிடுகிறது. (2 சாமுவேல் 22:26, NW) கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பது, அவர் செய்திருக்கும் திருமண ஏற்பாட்டிற்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதைக் குறிக்கிறது.—ஆதியாகமம் 2:24.
நீங்களும் உங்களுடைய துணையும் ஒருவருக்கொருவர் உண்மைப் பற்றுறுதியுடன் நிலைத்திருந்தால், உங்களுடைய உறவு நிரந்தரமாயிருக்கும் என்ற நம்பிக்கையில் சந்தோஷமாக இருப்பீர்கள். மாதங்கள், வருடங்கள், பல பத்தாண்டுகள் என காலம் உருண்டோடினாலும், நீங்கள் இருவரும் என்றும் இணைந்திருப்பதாகவே உணருவீர்கள். பிரிந்து வாழ்வது என்பது உங்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும், இத்தகைய கண்ணோட்டம் உங்களுடைய உறவுக்கு பாதுகாப்பளிக்கும். ஒரு மனைவி இவ்வாறு கூறுகிறார்: “[என்னுடைய வீட்டுக்காரர் மீது] எனக்கு பயங்கர கோபம் வரும்போதுகூட, எங்க மணவாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துடுமோன்னு கவலைப்படறதில்லை, ஆனா எங்களுக்குள்ள இப்படி நடந்துகிட்டு இருக்கேன்னுதான் பெரும்பாலும் நான் கவலைப்படுவேன். நாங்க ஒன்னுசேந்து வாழ்வோமாங்கறதல எனக்கு எந்த சந்தேகமுமில்லை, ஆனா முன்ன மாதிரி நெருக்கத்தை எப்படி பெறுவோமுன்னுதான் கவலைப்படுவேன்—அப்போதைக்கு அந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்றதுன்னுதான் எனக்குத் தெரியறதில்லை.”
துணையுடன் செய்யப்படும் ஒப்பந்தத்தின் முக்கிய பாகம், நீண்ட கால கண்ணோட்டம் ஆகும். ஆனால் அநேக திருமணங்களில் இத்தகைய கண்ணோட்டம் இல்லாதிருப்பது வருந்தத்தக்கது. காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கும்போது, “உன்னைவிட்டு எங்காவது போயிடறேன்!” அல்லது “என்னை உண்மையிலேயே மதிச்சு நடக்கிற ஒருத்தியை கட்டிக்கப் போகிறேன்!” என வெடுக்கென்று சொல்லிவிடலாம். பெரும்பாலும் இந்த வார்த்தைகளை நாம் மனப்பூர்வமாக சொல்வதில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், நாவு “சாவுக்கேதுவான விஷம் நிறைந்த”தாயிருக்கிறது என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:8) ‘நம்முடைய கலியாணத்தை ஒரு நிரந்தர பந்தமாக நான் நினைப்பதில்லை, எந்த நேரம் வேண்டுமானாலும் பிரிந்துவிடலாம்’ என்ற செய்தியைத்தான் உங்கள் பயமுறுத்துதல்களும் கோரிக்கைகளும் எதிரொலிக்கின்றன. இப்படிப்பட்ட செய்தியை மறைமுகமாக சொல்வதுகூட தாம்பத்திய வாழ்க்கையை நாசமாக்கிவிடலாம்.
உங்களுக்கு நீண்ட கால கண்ணோட்டம் இருக்கும்போது, இன்பத்திலும் துன்பத்திலும் உங்களுடைய துணையுடன் சேர்ந்திருக்கவே விரும்புவீர்கள். இது கூடுதலான நன்மையைத் தருகிறது. அதோடு, பலவீனங்கள் மற்றும் தவறுகளை ஏற்றுக்கொள்வதையும், ஒருவருக்கொருவர் தொடர்ந்து பொறுத்துப் போவதையும், ஒருவரையொருவர் தாராளமாக மன்னிப்பதையும் அதிக சுலபமாக்குகிறது. (கொலோசெயர் 3:13) “நல்லதொரு திருமண வாழ்க்கையில், நீங்கள் இருவருமே தவறு செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்; அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் திருமணம் முறிந்து போகாமல் உறுதியாக இருக்கும்” என்று ஒரு கையேடு சொல்கிறது.
உங்களுடைய மண நாளில் உறுதிமொழி எடுத்தீர்கள், அந்த உறுதிமொழியை திருமணம் எனும் ஏற்பாட்டிடம் அல்ல, ஆனால் உயிருள்ள ஒரு நபரிடம், அதாவது உங்களுடைய துணையிடம் எடுத்தீர்கள். இந்த உண்மை, மணமான ஒரு நபராக நீங்கள் சிந்திக்கும், செயல்படும் விதத்தை ஆழமாய் பாதிக்க வேண்டும். திருமணத்தின் புனிதத்தன்மையில் பலமாக நம்பிக்கை வைப்பதால் மட்டுமல்ல, நீங்கள் மணமுடித்துள்ள நபரை நேசிப்பதாலுமே உங்களுடைய துணைவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா?
[அடிக்குறிப்பு]
a தவிர்க்க முடியா சந்தர்ப்பங்களில், திருமணமானவர்கள் பிரிந்துபோக நியாயமான காரணங்கள் இருக்கலாம். (1 கொரிந்தியர் 7:10, 11; யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் 160-1 பக்கங்களைக் காண்க.) மேலும், வேசித்தன (பாலியல் ஒழுக்கக்கேடு) குற்றத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வதை பைபிள் அனுமதிக்கிறது.—மத்தேயு 19:9.
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
இப்பொழுது நீங்கள் என்ன செய்யலாம்
உங்களுடைய திருமண ஒப்பந்தம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறது? அது முன்னேற வாய்ப்பிருக்கிறது என ஒருவேளை நீங்கள் உணரலாம். உங்களது திருமண கட்டு அல்லது ஒப்பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு பின்வரும் காரியங்களை முயன்று பாருங்கள்:
● சுய பரிசோதனை செய்யுங்கள். உங்களையே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ‘நான் உண்மையிலேயே இருதயத்தில் மணமுடித்திருக்கிறேனா, அல்லது இன்னும் மணமாகாத ஒரு நபரைப் போலவே நினைத்துக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறேனா?’ இந்த விஷயத்தில் உங்களைப் பற்றி உங்களுடைய துணை எப்படி உணருகிறார் என்பதை கண்டுபிடியுங்கள்.
● இந்தக் கட்டுரையை உங்களுடைய துணையுடன் சேர்ந்து படியுங்கள். பிறகு, உங்களுடைய திருமண கட்டு அல்லது ஒப்பந்தத்தைப் பலப்படுத்துவதற்குரிய வழிகளைப் பற்றி அமைதலாக பேசுங்கள்.
● உங்களுடைய திருமண ஒப்பந்தத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் உங்கள் துணையுடன் சேர்ந்து ஈடுபடுங்கள். உதாரணமாக, உங்களுடைய திருமண போட்டோ ஆல்பத்தைப் பாருங்கள், நெஞ்சைவிட்டு நீங்கா வேறுசில சம்பவங்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் காதலித்த நாட்களில் அல்லது உங்களுடைய திருமணத்தின் ஆரம்ப நாட்களில் அனுபவித்து மகிழ்ந்த காரியங்களை செய்யுங்கள். உங்கள் மணவாழ்க்கை சம்பந்தமாக காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் உள்ள பைபிள் அடிப்படையிலான கட்டுரைகளை சேர்ந்து படியுங்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
திருமணத்தில், ஒப்பந்தம் என்பது . . .
● கடமை “நீ நேர்ந்து கொண்டதைச் செய். நீ நேர்ந்து கொண்டதைச் செய்யாமற் போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்.”—பிரசங்கி 5:4, 5.
● கூட்டுமுயற்சி “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; . . . ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்.”—பிரசங்கி 4:9, 10.
● சுயதியாகம் “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி.”—அப்போஸ்தலர் 20:35, NW.
● நீண்ட கால கண்ணோட்டம் “அன்பு . . . சகலத்தையும் சகிக்கும்.”—1 கொரிந்தியர் 13:4, 7.
[பக்கம் 7-ன் படங்கள்]
உங்கள் துணை உங்களுடன் பேச விரும்பும்போது நீங்கள் செவிகொடுத்துக் கேட்கிறீர்களா?