மணவாழ்வில் விரிசலா... மனம் தளராதீர்கள்
“திருமணமானவர்களுக்கு நான் கொடுக்கும் அறிவுரைகள் —உண்மையில் நான் அல்ல, நம் எஜமானர் கொடுக்கும் அறிவுரைகள்.”—1 கொ. 7:10.
உங்களால் விளக்க முடியுமா?
கடவுளே ஓர் ஆணையும் பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?
குடும்பத்தில் பிரச்சினைகளை எதிர்ப்படும் தம்பதிகளுக்கு மூப்பர்கள் எப்படி உதவலாம்?
திருமண பந்தத்தை நாம் எப்படிக் கருத வேண்டும்?
1. திருமணப் பந்தத்தைக் கிறிஸ்தவர்கள் எப்படிக் கருதுகிறார்கள், ஏன்?
திருமண நாளன்று கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு முன் ஓர் உறுதிமொழியை எடுக்கிறார்கள். அதை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. (பிர. 5:4-6) திருமண பந்தத்தை ஏற்படுத்தியவர் யெகோவா என்பதால் ஓர் ஆணையும் பெண்ணையும் திருமண பந்தத்தில் ‘இணைப்பவரும்’ அவரே. (மாற். 10:9) எந்த நாட்டின் திருமணச் சட்டத்தின்கீழ் தம்பதிகள் இணைந்திருந்தாலும் சரி, அவர்களை இணைத்திருப்பது கடவுள்தான். யெகோவாவை வணங்குபவர்கள் தங்கள் பந்தத்தை நிலையான... நிரந்தரமான... பந்தமாகக் கருத வேண்டும்—சத்தியம் கிடைக்கும் முன்பே அவர்கள் திருமணம் செய்திருந்தாலும் சரி.
2. என்ன கேள்விகளைக் குறித்து இக்கட்டுரையில் சிந்திப்போம்?
2 அன்புக்கும் பாசத்திற்கும் பஞ்சமில்லாத மணவாழ்வில் சந்தோஷம் கொடிகட்டிப் பறக்கும். ஆனால், மணவாழ்வில் விரிசல் விழுந்திருந்தால் என்ன செய்வது? வறண்டுபோன மணவாழ்வில் மீண்டும் வசந்தம் வீசுமா? மணவாழ்வில் நிம்மதியைத் தொலைத்து நிற்கும் தம்பதிகளுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
இனிப்பதும் கசப்பதும்—உங்கள் கையில்
3, 4. மணத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் தவறான தீர்மானம் எடுத்தால் என்ன ஆகலாம்?
3 ஒரு கிறிஸ்தவரின் மணவாழ்வில் அன்பும் பாசமும் பொங்கி வழிந்தால் வாழ்க்கை தேனாய்த் தித்திக்கும், கடவுளுக்கும் புகழ் சேர்க்கும். ஆனால், அந்த அன்பும் பாசமும் பறந்துபோகும்போது அதே வாழ்க்கை எட்டிக்காயாய்க் கசக்கும். மணவாழ்வில் இணைய விரும்பும் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ஆலோசனைகளைப் பின்பற்றினால் தங்கள் வாழ்வை வசந்தமாக்க முடியும். ஆனால், துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தவறான தீர்மானம் எடுக்கும்போது அது விரக்தியிலும் வேதனையிலும் போய் முடிவடையலாம். உதாரணத்திற்கு, சில இளைஞர்கள் மணவாழ்வின் பொறுப்புகளை ஏற்கும் பக்குவம் வருவதற்கு முன்பே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சிலர் வலைதளத்திலேயே வரனைத் தேடி அவசரப்பட்டு கல்யாணமும் செய்துகொள்கிறார்கள். கடைசியில் அவர்களுக்கு மிஞ்சுவதெல்லாம் ஏமாற்றமே. இன்னும் சிலர் காதலிக்கும்போதே எல்லைமீறி போய்விடுவதால் வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். அதனால், ஒருவர்மீதொருவர் வைத்திருந்த மதிப்பு மரியாதையை இழந்துவிடுகிறார்கள்.
4 சில கிறிஸ்தவர்கள் ‘எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரை’ திருமணம் செய்யாததால் புயலில் சிக்கிய படகுபோல் தத்தளிக்கிறார்கள். (1 கொ. 7:39) உங்களுடைய நிலைமையும் அதுதான் என்றால், கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுங்கள், அவருடைய உதவியை நாடுங்கள். நீங்கள் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்றாலும், நீங்கள் மனந்திரும்பி வரும்போது அவர் உங்களுக்கு உதவி செய்வார், சகித்திருக்க பலம் தருவார். (சங். 130:1-4) எனவே, இன்றும்... என்றும்... யெகோவாவுக்குப் பிரியமாய் நடக்க முயற்சி செய்யுங்கள். ‘யெகோவாவுடைய மகிழ்ச்சி’ உங்களைத் தாங்கும் சக்தியாய் இருக்கும்.—நெ. 8:10.
மணவாழ்வு ஆட்டம்காணும்போது...
5. மணவாழ்வில் பிரச்சினைகள் தலைதூக்கும்போது எதைப் பற்றி யோசிக்கக் கூடாது?
5 சுகமாய் நகர்ந்த வாழ்வு சுமையாக மாறுகையில்... ‘இவரோடு/இவளோடு சேர்ந்து குடும்பம் நடத்தித்தான் ஆகணுமா? இந்த நேரத்துக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருந்தா எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேன்!’ என்று சிலர் யோசிக்கலாம். தங்கள் உறவை அறுத்துக்கொண்டால் சந்தோஷமாய் இருக்கலாம் என ஆசைக் கனவு காணலாம். ‘அவரிடமிருந்து/அவளிடமிருந்து ஒரேயடியாக விலகி வந்துவிட்டால் எவ்வளவு நிம்மதியாய் இருக்கும். அதற்கு டைவர்ஸ்தான் ஒரே வழி. பைபிள் அடிப்படையில எனக்கு டைவர்ஸ் கிடைக்காவிட்டாலும் பரவாயில்ல. நான் பிரிஞ்சுதான் போவேன். அப்போதான் என்னால சந்தோஷமா வாழ முடியும்’ என்றெல்லாம் அவர்கள் நினைக்கலாம். இப்படியெல்லாம் உட்கார்ந்து கணக்கு போடுவதற்குப் பதிலாக... கனவு காண்பதற்குப் பதிலாக... இப்போது இருக்கிற சூழ்நிலையைச் சமாளிப்பதற்குக் கடவுளுடைய ஆலோசனையைப் பின்பற்ற கிறிஸ்தவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
6. மத்தேயு 19:9-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை விளக்குங்கள்.
6 கிறிஸ்தவர் ஒருவர் விவாகரத்து பெற்றிருந்தாலும், பைபிள் அடிப்படையில் அவரால் மறுமணம் செய்துகொள்ள முடியலாம், முடியாமலும் போகலாம். “பாலியல் முறைகேட்டைத் தவிர, வேறெந்தக் காரணத்திற்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணந்துகொள்கிறவன் தவறான உறவுகொள்கிறான்” என்று இயேசு சொன்னார். (மத். 19:9) இங்கே ‘பாலியல் முறைகேடு’ என்பது, மணத்துணைக்குத் துரோகம் செய்வதையும் படுமோசமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதையும் குறிக்கிறது. பாலியல் முறைகேடு அல்லாமல் வேறு காரணத்திற்காக ஒரு கிறிஸ்தவர் விவாகரத்து பெற நினைத்தால்... கடவுளிடம் வழிநடத்துதல் கேட்டு ஜெபம் செய்வது அவசியம்.
7. ஒரு கிறிஸ்தவ தம்பதியின் மணவாழ்வு முறிந்துபோனால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?
7 ஒரு தம்பதியின் மணவாழ்வு முறிந்துபோகிறதென்றால்... கடவுளிடம் அவர்கள் வைத்திருக்கிற பந்தம் பலவீனமாகியிருக்கிறது என்றே அர்த்தம். “ஒருவர் தன்னுடைய குடும்பத்தையே நடத்தத் தெரியாதிருந்தால் கடவுளுடைய சபையை எப்படிக் கவனித்துக்கொள்வார்?” என்று சிந்திக்க வைக்கும் கேள்வியை பவுல் கேட்டார். (1 தீ. 3:5) கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தம்பதிகளின் மணவாழ்வு முறிந்துபோனால் அவர்களைப் பார்ப்பவர்கள்... ‘ஊருக்கெல்லாம் உபதேசம் பண்றாங்க, இவங்க அதன்படி நடக்கமாட்டேங்கிறாங்களே’ என்றுதானே நினைப்பார்கள்.—ரோ. 2:21-24.
8. தம்பதிகள் பிரிந்துபோக நினைப்பதற்கு எது காரணமாக இருக்கலாம்?
8 ஞானஸ்நானம் பெற்ற தம்பதிகள் பைபிள் சொல்லும் காரணத்திற்காக அல்லாமல் வேறு காரணத்திற்காகப் பிரிந்து வாழ அல்லது விவாகரத்துப் பெற தீர்மானிக்கிறார்கள் என்றால்... யெகோவாவோடு அவர்களுக்கு நெருக்கமான பந்தம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பைபிள் நியமங்களை அவர்களில் ஒருவர் அல்லது இருவருமே பின்பற்றாததும் பிரச்சினைக்குக் காரணமாய் இருக்கலாம். இருவருமே ‘முழு இருதயத்தோடு யெகோவாவில் நம்பிக்கையாயிருந்தால்’ அவர்களால் நிச்சயம் தங்கள் மணவாழ்வில் மகிழ்ச்சி காண முடியும்.—நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.
9. தம்பதியர் சிலர் பிரிந்து போகாமல் இருந்ததால் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்கள்?
9 சீரழிந்துபோகவிருந்த எத்தனையோ மணவாழ்க்கை மீண்டும் சீரடைந்திருக்கிறது. மணவாழ்வில் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது உடனடியாகப் பிரிந்துபோக நினைக்காமல் கைகோர்த்து சமாளிக்கும் தம்பதிகள் சிறந்த பலனைப் பெறுகிறார்கள். உதாரணத்திற்கு, கணவன் சத்தியத்தில் இல்லாத ஒரு குடும்பத்தில் மனைவி என்ன செய்யலாம் என்று பாருங்கள். “மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும், உங்கள் கற்புள்ள நடத்தையையும் நீங்கள் காட்டுகிற ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து உங்கள் நடத்தையினாலேயே விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்; ஆம், நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே அவர் விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்” என்றார் அப்போஸ்தலன் பேதுரு. (1 பே. 3:1, 2) உண்மைதான், மனைவியின் நல்ல முன்மாதிரியைப் பார்த்து கணவன் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளலாம்! இப்படி... தம்பதியர் பிரிந்து போகாமல் இணைந்து வாழும்போது கடவுளுக்குப் புகழ் சேர்க்கிறார்கள். தங்கள் முழு குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைத் தேடித் தருகிறார்கள்.
10, 11. எதிர்பாராத என்ன பிரச்சினைகள் மணவாழ்வில் வரலாம், எதைக் குறித்து கிறிஸ்தவர்கள் நம்பிக்கையாய் இருக்கலாம்?
10 யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புவதால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அவரை வணங்கும் ஒருவரையே கரம்பிடிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையிலும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம். உதாரணத்திற்கு, தம்பதியரில் ஒருவருக்குப் பயங்கரமான மனக்கோளாறு ஏற்படலாம். அல்லது, திருமணத்திற்குப் பிறகு அவர்களில் ஒருவர் செயலற்ற பிரஸ்தாபியாய் ஆகிவிடலாம். லிண்டாa என்பவரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் கடவுள்பக்திமிக்க சகோதரி மட்டுமல்ல அன்பான தாயும்கூட. ஆனால், இவரது வாழ்க்கையில் ஓர் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஞானஸ்நானம் பெற்ற அவருடைய கணவர் மனந்திரும்பாமல் பைபிளுக்கு விரோதமான ஒரு காரியத்தைச் செய்துகொண்டே இருந்ததால் சபையிலிருந்து நீக்கப்பட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் லிண்டா விக்கித்து நின்றார். தங்கள் மணவாழ்வில் இப்படி ஓர் இடிவிழும்போது... இனி சேர்ந்து வாழ முடியாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
11 ‘என்ன பிரச்சினை வந்தாலும் இவரோடு/இவளோடு சேர்ந்து நான் வாழ்ந்துதான் ஆகணுமா?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்த விஷயத்தில் உங்களுக்காக மற்றவர்கள் தீர்மானம் எடுக்க முடியாது, எடுக்கவும் கூடாது. என்றாலும், தகர்ந்துவிழும் நிலையிலுள்ள மணவாழ்வைத் தூக்கி நிறுத்துவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. மனசாட்சியின் நிமித்தம்... மணவாழ்வில் எதிர்ப்படும் பிரச்சினைகளைச் சகித்துக்கொள்ளும் தம்பதிகளைக் கடவுள் நெஞ்சார நேசிக்கிறார். (1 பேதுரு 2:19, 20-ஐ வாசியுங்கள்.) விரிசல் விழுந்த மணவாழ்வை ஒட்டவைக்கப் பாடுபடும் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் மூலமாகவும் தமது சக்தி மூலமாகவும் யெகோவா உதவி செய்வார்.
உதவிக்கரம் நீட்டுகிறார்கள்
12. உதவிக் கேட்டு போகும்போது மூப்பர்கள் நம்மை எப்படிக் கருதுவார்கள்?
12 மணவாழ்வில் பிரச்சினைகளை எதிர்ப்பட்டால் மூப்பர்களை அணுகத் தயங்காதீர்கள். மூப்பர்கள் சபையை வழிநடத்தும் மேய்ப்பர்கள். அதனால், பைபிளிலுள்ள ஆலோசனைகளை உங்களுக்குச் சந்தோஷமாய் எடுத்துச் சொல்வார்கள். (அப். 20:28; யாக். 5:14, 15) உங்கள் குடும்பத்தில் எதிர்ப்படும் ஒரு பெரிய பிரச்சினையைத் தீர்க்க மூப்பர்களிடம் போய் உதவி கேட்டால்... எங்கே உங்களைப் பற்றி அவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்று பயப்படாதீர்கள். உண்மையைச் சொன்னால், கடவுளைப் பிரியப்படுத்த நீங்கள் ஆசைப்படுவதைப் பார்க்கும்போது அவர்களுக்கு உங்கள் மேலுள்ள மதிப்பு மரியாதைதான் அதிகமாகும்.
13. ஒன்று கொரிந்தியர் 7:10-16 என்ன ஆலோசனையைக் கொடுக்கிறது?
13 தனியாகச் சத்தியத்தில் இருக்கும் துணை உதவி கேட்டு வரும்போது பவுல் கொடுத்த பின்வரும் அறிவுரையை மூப்பர்களும் கொடுக்கலாம்: “திருமணமானவர்களுக்கு நான் கொடுக்கும் அறிவுரைகள்—உண்மையில் நான் அல்ல, நம் எஜமானர் கொடுக்கும் அறிவுரைகள்—இவையே: மனைவி தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக் கூடாது; அப்படியே பிரிந்துபோனாலும், அவள் மறுமணம் செய்யாதிருக்க வேண்டும் அல்லது மறுபடியும் தன் கணவனோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும்; கணவனும் தன் மனைவியைவிட்டுப் பிரிந்துபோகக் கூடாது. . . . ஏனென்றால், மனைவியே, உன்னால் உன் கணவன் மீட்படையலாம் அல்லவா? கணவனே, உன்னால் உன் மனைவி மீட்படையலாம் அல்லவா?” (1 கொ. 7:10-16) சத்தியத்தில் இல்லாத துணை யெகோவாவை வணங்க ஆரம்பிப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!
14, 15. பிரிந்துபோக வேண்டுமென ஒரு மனைவி எப்போது தீர்மானிக்கலாம், ஆனால் அந்தச் சமயத்தில் ஜெபம் செய்து, நியாயமாய் யோசித்துப் பார்ப்பது ஏன் அவசியம்?
14 என்ன காரணங்களுக்காக ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவனை விட்டுப் ‘பிரிந்துபோகலாம்’? கணவன் குடும்பத்தைக் கொஞ்சமும் கவனிக்காமல் போகும்போது... அடி உதை என்று தன் உயிருக்கே உலைவைக்கும்போது... அல்லது தான் கடவுளுக்குச் சேவை செய்வதை முற்றிலும் தடைசெய்யும்போது... பிரிந்துபோக சிலர் முடிவு செய்திருக்கிறார்கள்.
15 பிரிந்துபோவதா சேர்ந்திருப்பதா என்பது ஒருவருடைய சொந்தத் தீர்மானம். என்றாலும், ஞானஸ்நானம் பெற்ற துணை இதைக் குறித்து யெகோவாவிடம் ஜெபம் செய்து நியாயமாய் யோசித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு... ஒரு கிறிஸ்தவர் யெகோவாவைச் சேவிக்க முடியாமல் போனதற்குச் சத்தியத்தில் இல்லாத அவரது துணை காரணமா அல்லது அவரே காரணமா? அதாவது, அந்தக் கிறிஸ்தவர் ஒழுங்காக பைபிள் படிக்காமல், கூட்டங்களுக்குத் தொடர்ந்து போகாமல், ஊழியத்தில் சரிவர கலந்துகொள்ளாமல் போனதே காரணமா?
16. விவாகரத்து செய்வது குறித்து ஒரு கிறிஸ்தவர் ஏன் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது?
16 விவாகரத்துதான் ஒரே வழி என்று நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. ஏனென்றால், கடவுளோடு நமக்குள்ள பந்தத்தைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிறோம்; மணவாழ்வைக் கடவுள் கொடுத்த பரிசாய் மதிக்கிறோம். நாம் யெகோவாவின் ஊழியர்களாய் இருப்பதால் அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த விரும்புகிறோம். அப்படியென்றால், இன்னொருவரைக் கல்யாணம் செய்வதற்காகத் தன் சொந்த மணத்துணையைக் கைவிடுவதைப் பற்றிக் கனவிலும் நினைத்துப்பார்க்க மாட்டோம்.—எரே. 17:9; மல். 2:13-16.
17. “சமாதானமாக இருப்பதற்கே கடவுள் உங்களை அழைத்திருக்கிறார்” என்று எந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லலாம்?
17 மணத்துணை யெகோவாவை வணங்காதவராக இருந்தாலும் ஒரு கிறிஸ்தவர் தன் மணவாழ்வு மணம்வீச முடிந்தளவு முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்தும் தன்னோடு சேர்ந்து வாழ தன் துணை ஒத்துக்கொள்ளாமல் போனால்... அந்தக் கிறிஸ்தவர் வருத்தப்படத் தேவையில்லை. “கணவன் மனைவி ஆகிய இருவரில் விசுவாசியாக இல்லாத ஒருவர் பிரிந்துபோக முற்பட்டால் பிரிந்துபோகட்டும்” என்றார் பவுல். “இப்படிப்பட்ட சூழ்நிலையில் விசுவாசியாக இருக்கிற கணவனுக்கோ மனைவிக்கோ சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் இல்லை; என்றாலும், சமாதானமாக இருப்பதற்கே கடவுள் உங்களை அழைத்திருக்கிறார்” என்றும் அவர் சொன்னார்.—1 கொ. 7:15.b
யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள்
18. மணவாழ்வைக் கட்டிக்காக்க முடியாமல் போனாலும் முயற்சி எடுப்பதால் வேறென்ன பலன்களைப் பெறலாம்?
18 குடும்பத்தில் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குத் தைரியம் தரும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள், எப்போதும் அவருக்காகக் காத்திருங்கள், அதாவது அவர்மீது நம்பிக்கை வையுங்கள். (சங்கீதம் 27:14-ஐ வாசியுங்கள்.) முன்பு குறிப்பிடப்பட்ட லிண்டாவின் உதாரணத்தை மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வருடக்கணக்கில் போராடியும் அவரது விவாகம் விவாகரத்தில்தான் போய் முடிவடைந்தது. ‘எடுத்த முயற்சியெல்லாம் வீணாகிவிட்டதே’ என்று அவர் நினைத்தாரா? “இல்லவே இல்லை” என்று அவரே சொல்கிறார். “நான் எடுத்த முயற்சிகள் மற்றவர்களுக்குச் சாட்சியாய் அமைந்தது. என்னுடைய மனசாட்சி இப்போது சுத்தமாய் இருக்கிறது. நான் இத்தனை வருடங்கள் பாடுபட்டது வீண்போகவில்லை. ஏனென்றால், எங்கள் செல்ல மகள் சத்தியத்தை இறுகப் பற்றிக்கொள்ள அது உதவியது. யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணிக்கவும் ஊக்கமாய் ஊழியம் செய்யவும் அவளுக்குத் தூண்டுகோலாய் இருந்தது.”
19. மணவாழ்வு முறிந்துபோகாதிருக்க முயற்சி எடுத்தால் என்ன பலன் கிடைக்கலாம்?
19 மார்லின் என்ற சகோதரியின் அனுபவத்தையும் கவனியுங்கள். கடவுள்மீது நம்பிக்கை வைத்ததற்காகவும் தன் மணவாழ்வு முறிந்துபோகாதிருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததற்காகவும் அவர் சந்தோஷப்படுகிறார். “குடும்பத்துக்காக என் கணவர் சல்லிக்காசு செலவு செய்ய மாட்டார். கூட்டம், ஊழியம் என்று எதற்குமே போக விடமாட்டார். அதனால், அவரைவிட்டு பிரிந்துபோக வேண்டுமென்ற எண்ணம் பல முறை எனக்குள் எட்டிப்பார்த்தது” என்று அவர் சொல்கிறார். “ஒருகாலத்தில் என் கணவரும் மூப்பராக இருந்தவர்தான். அப்புறம்தான் வியாபார விஷயத்தில் தவறான தீர்மானங்களை எடுத்துவிட்டார். கூட்டங்களைத் தவறவிட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் எங்களுக்குள் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. ஒருசமயம் எங்கள் ஊரில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது நான் ரொம்பவே பயந்துபோய் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியிருந்தேன். என் பங்கிலும் தவறு இருக்கிறது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். பின்பு, பழையபடி நாங்கள் மனம்விட்டு பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்... குடும்பப் படிப்பை அனுபவித்து மகிழ்ந்தோம்... கூட்டங்களுக்கும் தவறாமல் சென்றோம். மூப்பர்கள் எங்களிடம் அன்பாய் நடந்துகொண்டார்கள். எங்களுக்கு ரொம்ப உதவி செய்தார்கள். மீண்டும் எங்கள் வாழ்வில் வசந்தம் பிறந்தது. என் கணவர் திரும்பவும் சபையில் பொறுப்புகளை ஏற்றார். அடிபட்ட பின்புதான் எங்களுக்குப் புத்தி தெளிந்தது. இப்போது ஆனந்தமாய் கழிகிறது எங்கள் இல்லற வாழ்வு!”
20, 21. மணவாழ்வில் பிரச்சினை வந்தால் என்ன செய்ய தீர்மானமாய் இருக்க வேண்டும்?
20 நாம் மணமானவராக இருந்தாலும் சரி மணமாகாதவராக இருந்தாலும் சரி, எப்போதும் தைரியமாய்ச் செயல்பட வேண்டும், யெகோவாமீது நம்பிக்கை வைக்க வேண்டும். மணவாழ்வில் இணைந்தவர்கள் ‘இருவராக அல்ல, ஒரே உடலாக இருப்பதை’ மனதில் வைத்து குடும்பத்தில் எதிர்ப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஊக்கமாய் வழி தேட வேண்டும். (மத். 19:6) பிரச்சினைகள் மத்தியிலும்... யெகோவாவை வணங்காத துணையோடு சகித்து வாழ்ந்தோமானால் அவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெறுவோம்.
21 நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி, நம்முடைய நடத்தை சத்தியத்தில் இல்லாதவர்களுக்கு எப்போதும் நற்சாட்சியாய் அமைய வேண்டும். மணவாழ்வு முறியும் நிலையில் இருந்தால், உருக்கமாய்க் கடவுளிடம் ஜெபம் செய்ய வேண்டும், நம் எண்ணங்களை நேர்மையாய் ஆராய்ந்து பார்க்க வேண்டும், வேதவசனங்களை ஆழமாய்த் தியானிக்க வேண்டும், மூப்பர்களின் ஆலோசனையை நாட வேண்டும். மிக முக்கியமாக... எல்லா விஷயத்திலும் யெகோவா தேவனைப் பிரியப்படுத்தத் தீர்மானமாய் இருக்க வேண்டும், கடவுள் தந்த மணவாழ்வு எனும் அருமையான பரிசை மனமார மதித்து வாழ வேண்டும்!
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கங்கள் 251-253-ஐப் பாருங்கள்; ஆங்கில காவற்கோபுரத்தில் நவம்பர் 1, 1988 தேதியிட்ட இதழில் பக்கங்கள் 26-27-ஐயும், செப்டம்பர் 15, 1975 தேதியிட்ட இதழில் பக்கம் 575-ஐயும் பாருங்கள்.
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
மணவாழ்வில் விரிசல் விழுகையில் உடனடியாகப் பிரிந்துபோகாத தம்பதிகள் சிறந்த பலனைப் பெறுகிறார்கள்
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
எப்போதும் யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள், தைரியம் தரும்படி அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
[பக்கம் 9-ன் படம்]
விரிசல் விழுந்த மணவாழ்வை ஒட்டவைக்க பாடுபடும் தம்பதிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
[பக்கம் 11-ன் படம்]
கிறிஸ்தவ சபை ஆன்மீக உதவியும் ஆறுதலும் அளிக்கிறது