திருமணப் பிணைப்புகளைப் பலப்படுத்துவது எப்படி
“எந்தக் காரணத்திற்கும் ஒருவன் தன் மனைவியை மணவிலக்குசெய்வது நியாயமா?” என்று பரிசேயர்கள், பெரிய போதகராகிய இயேசு கிறிஸ்துவைக் கேள்வியினால் மடக்கும் நோக்கத்தோடு கேட்டார்கள். அவரோ, முதல் மனித திருமணத்தைக் குறிப்பிடுவதன்மூலம் பதில் கொடுத்து, இந்த விஷயத்திற்கு ஒரு தராதரத்தை நிறுவினார்: “கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக.”
“தள்ளுதல் சீட்டைக்” கொடுப்பதன்மூலம் மணவிலக்குச் செய்வதற்கு மோசே ஏற்பாடுசெய்ததாகப் பரிசேயர்கள் வாதிட்டனர். இயேசு அவர்களுக்குப் பதிலளித்தார்: “உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் ஆதிமுதல் அது அப்படி இல்லை. நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன், வேசித்தனத்திற்காக அன்றி, எவனாகிலும் தன் மனைவியை மணவிலக்குசெய்துவிட்டு, வேறொருத்தியை திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறான்.”—மத்தேயு 19:3-9, NW.
ஆதியில், திருமணம் ஒரு நிரந்தரமான பிணைப்பாக இருக்க வேண்டியிருந்தது. முதன்முதலாகத் திருமணம் செய்த தம்பதிகளை மரணமுங்கூட பிரித்திருக்க முடியாது; ஏனென்றால் அவர்கள் பரிபூரண மானிடர்களாக, நித்திய ஜீவ வாழ்க்கை எதிர்பார்ப்போடு படைக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், அவர்கள் பாவம் செய்தார்கள். அவர்களுடைய பாவம் மனித திருமண வாழ்க்கையைக் கெடுத்துப்போட்டது. எதிரியாகிய மரணம் திருமண தம்பதிகளைப் பிரித்துப்போட ஆரம்பித்தது. கடவுள், மரணத்தைத் திருமணத்தின் முடிவாகக் கருதுகிறார்; ஏனென்றால் நாம் பைபிளில் வாசிக்கிறோம்: “மனைவி தன் கணவன் உயிரோடிருக்கும்வரை அவனுடன் பிணைக்கப்பட்டிருக்கிறாள்; ஆனால் அவளுடைய கணவன் இறந்த பின்பு, தனக்கு விருப்பமான, கர்த்தருக்கு உட்பட்டவனை மாத்திரமே மணந்துகொள்ள விடுதலையாயிருக்கிறாள்.” (1 கொரிந்தியர் 7:39, NW) சதி போன்ற மத நம்பிக்கைகளிலிருந்து இது அதிக வித்தியாசமாக இருக்கிறது. அதில், தன்னுடைய கணவன் மரிக்கையில், ஏதோவொருவகையான வரப்போகிற பிறவியிலும் திருமணப் பிணைப்புத் தொடர்கிறது என்ற நம்பிக்கையுடன் மனைவி மனமாற்றம் செய்யப்பட்டு அல்லது வற்புறுத்தப்பட்டு கணவனுடன் மரிக்கும்படித் தன்னைத்தானே எரித்துக்கொள்கிறாள்.
மோசேயின் நியாயப்பிரமாண ஏற்பாடு
மோசேயின் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படும் காலத்திற்குள், யெகோவா இஸ்ரவேலர்களினுடைய கடினமான இருதயப்போக்கின் நிமித்தமாக மணவிலக்குச் செய்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்துகொடுக்கவேண்டிய அளவிற்கு திருமண உறவுகள் படுமோசமாகிவிட்டிருந்தன. (உபாகமம் 24:1) இஸ்ரவேலர்கள் சின்னஞ்சிறு குற்றங்களுக்கும் இந்தச் சட்டத்தைத் தங்களுடைய மனைவிகளை மணவிலக்குச்செய்ய தவறாகப் பயன்படுத்துவது கடவுளுடைய நோக்கமாய் இல்லை, ஏனென்றால் அது அவர்கள் மற்றவர்களிடமும் தங்களைப்போலவே அன்புகூரும்படி, அவர் கொடுத்த அந்தக் கட்டளையில் தெளிவாக இருந்தது. (லேவியராகமம் 19:18) ஒரு மணவிலக்குச் சான்றிதழை எழுதிக்கொடுப்பதுங்கூட தயங்கும்படி உணரச்செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது; ஏனென்றால், மணவிலக்கை விரும்புகிற ஒரு கணவன், சான்றிதழை எழுதுவதன் பாகமாக, சட்டப்படி அதிகாரம் கொடுக்கப்பட்ட ஒரு நபரிடம் ஆலோசனைப் பெற்றிருக்கவேண்டும், இவர் ஒன்றுகூடிவரச்செய்ய முயற்சிசெய்பவராக இருப்பார். இல்லை, கடவுள் இந்தச் சட்டத்தை, “எந்தக் காரணத்திற்கும்” ஒருவன் தன் மனைவியை விலக்கிவிடுவதற்கு உரிமையை நிலைநாட்டுவதற்காகக் கொடுக்கவில்லை.—மத்தேயு 19:3, NW.
ஆனாலும், இஸ்ரவேலர்கள் சட்டத்தின் பொது நோக்கத்தையும் உண்மை அர்த்தத்தையும் இறுதியில் புறக்கணித்து, இந்தச் சட்டப்பிரிவை தங்கள் மனம்போன போக்கில் மணவிலக்கைப் பெறுவதற்கு சுயநலமாகப் பயன்படுத்தினர். பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குள், தங்களுடைய இளம் மனைவிகளிடம் பொல்லாதமுறையில் நடந்துகொண்டிருந்தனர், அவர்களை எல்லா விதமான காரணங்களுக்கும் மணவிலக்குச் செய்து வந்தனர். யெகோவா அவர்களிடம் தாம் மணவிலக்கை வெறுப்பதாகக் கண்டிப்புடன் சொன்னார். (மல்கியா 2:14-16) இந்தப் பின்னணியில்தான் இயேசு தம்முடைய நாள்களில் இஸ்ரவேலர்கள் அதைப் பின்பற்றின போக்கின் காரணமாக, மணவிலக்குச் செய்வதைக் கண்டித்தார்.
மணவிலக்கிற்கு ஒரேயொரு சட்டப்பூர்வ அடிப்படைக் காரணம்
இருந்தபோதிலும், இயேசு மணவிலக்குச் செய்வதற்கு ஒரேயொரு சட்டப்பூர்வமான அடிப்படைக் காரணத்தைச் சொன்னார்: வேசித்தனம். (மத்தேயு 5:31, 32; 19:8, 9) விபசாரம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த வார்த்தை, வேதப்பூர்வமான திருமணத்திற்கு வெளியே செய்யப்படும் முறையற்ற பால்சம்பந்தமான உறவுகள், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரோ எதிர்பாலரோ ஒரு மிருகமோ எதுவோடுகூட செய்யப்பட்டாலும் சரி, அவையனைத்தையும் உட்படுத்துகிறது.
உண்மையற்ற துணைவர்களிடமிருந்துங்கூட மணவிலக்குச் செய்வதை இயேசு சிபாரிசு செய்துகொண்டில்லை. தவறுசெய்திராத துணை, உட்பட்டிருக்கும் பின்விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்தபிறகு, மணவிலக்குச் செய்ய விரும்புகிறாரா என்பது அவனிடமோ அவளிடமோ விட்டுவிடப்படுகிறது. இந்த வேதாகமத்தின் அடிப்படையில் ஒரு மணவிலக்கைப் பெற எண்ணங்கொள்ளும் மனைவிகள், முதல் பெண்ணிடம் அவளுடைய பாவத்திற்கு நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்போது கடவுள் சொன்ன அவருடைய வாக்கியத்தை மனதில்கொள்ள விரும்பலாம். மரணத்தீர்ப்போடு, கடவுள் குறிப்பாக ஏவாளிடம் இவ்வாறு சொன்னார்: “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” (ஆதியாகமம் 3:16) C. F. கைல்-ம் F. டெலிட்ஷ்-ம் எழுதின கமன்ட்டெரி ஆன் தி ஓல்டு டெஸ்டமென்ட், இந்த ‘ஆசையை,’ “ஏறக்குறைய ஒரு நோயைப்போல் இருக்கும் ஏக்கம்” என்று விளக்குகிறது. மறுப்புக்கிடமின்றி, இந்த ஏக்கம் ஒவ்வொரு மனைவியிடமும் அவ்வளவு செல்வாக்குச் செலுத்துவதாக இல்லை, ஆனால் ஓர் அப்பாவி மனைவி மணவிலக்கைச் செய்ய நாடும்போது, ஏவாளிடமிருந்து பெண்கள் சுதந்தரித்த உணர்ச்சி தேவைகளை மனதில்வைப்பது ஞானமான போக்காய் இருக்கும். இருந்தபோதிலும், தவறுசெய்த துணை ஈடுபட்ட திருமணத்திற்குப் புறம்பான பாலுறவு, தவறுசெய்யாத துணைக்கு எய்ட்ஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட உறவினால் கடத்தப்படும் நோய்களைக் கொடுக்கக்கூடும் என்பதால், சிலர் இயேசுவினால் விளக்கங்கொடுக்கப்பட்டதுபோல் மணவிலக்குசெய்ய தீர்மானம்செய்திருக்கின்றனர்.
குடும்பப் பிரச்னையின் விதைகள் விதைக்கப்படுதல்
மக்களின் கடின இருதயத்தன்மை, கடவுளுக்கு எதிராக முதல் மனித தம்பதி செய்த பாவத்தில் அதன் ஆரம்பத்தைக் காண்கிறது. (ரோமர் 5:12) குடும்ப சண்டையின் விதைகள், முதல் மனித ஜோடி அவர்களுடைய பரலோகத் தந்தைக்கு எதிராக பாவம்செய்தபோது விதைக்கப்பட்டன. என்ன விதத்தில் இது உண்மையாக இருக்கிறது? முதல் பெண் ஏவாள், விலக்கப்பட்ட விருட்சத்திலிருந்து சாப்பிடும்படி பாம்பினால் தூண்டப்பட்டபோது, அவள் தயங்காமல் கனியைச் சாப்பிட்டாள். அந்தக் குறிப்பிடத்தக்க தீர்மானத்தை எடுத்தப் பிறகுதான், பாம்பு அவளிடம் என்ன சொன்னது என்பதைப்பற்றி அவள் அவளுடைய கணவனிடம் பேசினாள். (ஆதியாகமம் 3:6) ஆம், அவள் அவளுடைய கணவனிடம் கலந்துபேசாமல் செயல்பட்டாள். இன்று அநேக குடும்பங்களால் எதிர்ப்படப்படும் பிரச்னைகளின் மாதிரிவடிவம் இதுதான்—மனம்விட்டு பேசாதிருத்தல்.
பின்பு, அவர்களுடைய பாவத்தின் விளைவுகளை எதிர்ப்பட்டபோது, இன்று அநேக தம்பதிகள் என்ன சூழ்ச்சிகளை, அதாவது ஒருவரையொருவர் பழி சுமத்துவதைச் செய்வதுபோல் ஆதாமும் ஏவாளும் நாடினார்கள். முதல் மனிதன் ஆதாம், தான் செய்த காரியத்திற்கு பழியை அவனுடைய மனைவிமீதும் யெகோவாமீதும் சுமத்தி, இவ்வாறு சொன்னான்: “எனக்குத் துணைவியாய் இருக்கும்படி நீர் எனக்குத் தந்த அந்தப் பெண்ணே அம்மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; எனவேதான் நானும் தின்றேன்.” அந்தப் பெண் பதிலளித்ததாவது: “பாம்பு—அது என்னை வஞ்சித்ததால் நான் தின்றுவிட்டேன்.”—ஆதியாகமம் 3:12, 13, NW.
பின்பு, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் யெகோவா கொடுத்தத் தீர்ப்பு, வரக்கூடிய பிரச்னைகளின் இன்னுமொரு அம்சத்தை முன்குறித்தது. அவளுடைய கணவனோடு அவளின் உறவைப்பற்றி, யெகோவா ஏவாளிடம் சொன்னார்: “அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” எமது முதல் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள இசாவோ-ஐப்போல், இன்று பல கணவர்கள் தங்களுடைய மனைவிகளின் உணர்ச்சிகளை மதிக்காமல், அவர்களைக் கொடுமைப்படுத்தி ஆண்டுகொள்கிறார்கள். அப்படியிருந்தாலும். அநேக மனைவிகள் தங்களுடைய கணவர்களைக் கவர்ந்திழுப்பதற்குத் தொடர்ந்து ஏக்கத்தோடிருக்கிறார்கள். அந்த ஏக்கம் திருப்திப்படுத்தப்படாதபோது, மனைவிகள் அந்தக் கவர்ச்சியை வற்புறுத்திப் பெற்று தன்னலமாய்ச் செயல்படக்கூடும். அநேக கணவன்மார்கள் அடக்குமுறையைக் கையாளுவதாலும், அநேக மனைவிகள் ஏக்கத்தில் இருப்பதாலும், தன்னலம் ஆட்டிப்படைக்கிறது; இதனால் சமாதானம் மறைந்து போய்விடுகிறது. “இன்றைய மணவிலக்குகளை எவ்வாறு ஆராய்வது,” என்ற தலைப்பைக் கொண்டிருந்த ஒரு செய்தித்தாளில், ஷுன்ஸ்க்கா செரீசாவ என்பவர் சொன்னார்: “‘ஒருவருடைய இஷ்டமான போக்கு,’ அதாவது தன்னல அக்கறைகளுக்கே முதலிடம் கொடுப்பது என்ற இந்தப் பிரச்னையின் அடிப்படை விஷயத்தை நாம் கண்டுங்காணாததுபோல் இருந்தால், இன்றுள்ள மணவிலக்குகளை நிச்சயமாகவே ஆராய முடியாது.”
எனினும், கீழ்ப்படிதலுள்ள திருமணமான தம்பதிகள் தங்களுடைய அபூரண நிலையிலும் ஓரளவிற்கு மணவாழ்க்கை சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்படி, யெகோவா அவருடைய வார்த்தையில் வழிநடத்துதலைக் கொடுத்திருக்கிறார். இசாவோ கடவுளின் வழிநடத்துதலைப் பின்பற்றி, இப்போது ஒரு சந்தோஷமான திருமண வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பைபிள் நியமங்கள் எப்படித் திருமணப் பிணைப்பைப் பலப்படுத்த உதவிசெய்கின்றன என்பதை நாம் காணலாம்.
காரியங்களை வெளிப்படையாகப் பேசுங்கள்
பல திருமணங்களில், பேச்சுத்தொடர்பு இல்லாமை, மற்றவர்களைக் குற்றஞ்சாட்டும் மனச்சாய்வு, சுயநல எண்ணங்கள் ஆகியவை கணவனும் மனைவியும் ஒருவரொருவரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதைக் கடினமாக்குகின்றன. “நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதற்கு உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வது அடிப்படையாக இருப்பதால், நெருங்கிய உறவு ஒரு முழு நம்பிக்கையைத் தேவைப்படுத்துகிறது. மேலும் இன்று அந்த நம்பிக்கை மிக அரிதாய் இருக்கிறது,” என்று சொல்கிறார் ஆராய்ச்சியாளர் கேரல் S. ஏவேரி என்பவர். பகிர்ந்துகொள்ளப்பட்ட உள்ளான உணர்ச்சிகளின் தொகுப்பு அப்படிப்பட்ட நம்பிக்கையை உருவாக்குகிறது. இது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மனம்விட்டுப் பேசுவதைத் தேவைப்படுத்துகிறது.
நெருங்கிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதை உற்சாகப்படுத்த நீதிமொழிகள் ஓர் உதாரணத்தைப் பயன்படுத்தி, இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.” (நீதிமொழிகள் 20:5) திருமணத் துணைகள் புத்தியோடு செயல்படவேண்டும்; தங்களுடைய வாழ்க்கைத் துணைகளின் இருதயங்களில் ஆழமாகப் பதிந்திருக்கும் சிந்தனைகளை மொண்டு எடுக்கவேண்டும். உங்களுடைய வாழ்க்கைத் துணை மனசஞ்சலத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். “இன்று நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்,” என்று பதில்சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் ஏன் இரக்கவுணர்வோடு, “இன்று உங்களுக்குக் கஷ்டமாக இருந்ததா? என்ன ஆச்சு?” என்று ஏன் கேட்கக்கூடாது. உங்கள் வாழ்க்கைத் துணைக்குச் செவிகொடுப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படலாம்; ஆனால் அது பொதுவாகவே இன்பகரமானதாகவும், திருப்திதருவதாகவும் இருக்கிறது. அந்த வகையில் நேரத்தைச் செலவிடுவதானது, உங்கள் துணையை அசட்டைசெய்ததால் பின்னர் எழும்பும் பலமான உணர்ச்சிகளைக் கையாளுவதற்கு செலவிடப்படும் அதிக நேரத்தைவிட, காலத்தைச் சேமிப்பதாக இருக்கும்.
நம்பிக்கையைச் சம்பாதிக்க, ஒவ்வொருவரும் நேர்மையோடிருந்து மற்ற துணைப் புரிந்துகொள்ளும் வகையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயலவேண்டும். ‘உண்மையே பேசு,’ என்று கடவுளுடைய வார்த்தை தூண்டுகிறது, ‘ஏனென்றால் நாம் ஒருவருக்கொருவர் உறுப்புகளாயிருக்கிறோம்.’ (எபேசியர் 4:25) உண்மையைப் பேசுவது பகுத்துணர்வைத் தேவைப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு மனைவி தான் காதுகொடுத்துக் கேட்கப்படாததுபோல் உணர்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் பேசுவதற்கு முன், இந்த நீதிமொழியைக் கவனத்தில் வைக்கவேண்டும்: “அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.” (நீதிமொழிகள் 17:27) “நீங்க என்னைக்குத்தான் நான் சொல்றதைக் கேட்டீங்க!” என்று தன்னுடைய கணவனைக் குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, குழப்பமும் ஏமாற்ற உணர்ச்சியும் தனக்குள் தோன்றுவதற்கு முன்பே அவள், அவளுடைய உணர்ச்சிகளை அமைதலாக வெளிப்படுத்துவது சாலச் சிறந்தது. ஒருவேளை, அவள் எப்படி உணர்கிறாள் என்பதை, “நீங்க ரொம்ப வேலையாய் இருக்கிறீங்க என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் உங்களோடு நான் கூட கொஞ்ச நேரம் செலவிடுவது, எனக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுக்குங்க,” என்பதைப் போன்று சொல்வதன்மூலம் வெளிப்படுத்தலாம்.
உண்மையிலேயே, “கலந்து ஆலோசியாவிடின் எண்ணிய காரியம் பலியாது.” (நீதிமொழிகள் 15:22, திருத்திய மொழிபெயர்ப்பு) உங்கள் துணைவி உங்கள்மீது அன்புகாட்டுகிறாள்தான், ஆனால் அது நீங்கள் நினைப்பதை அவள் அறிந்திருப்பாள் என்று அர்த்தப்படுத்துவதில்லையே. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை சாதுரியமான வழியில் உங்கள் துணைக்குத் தெரியப்படுத்தவேண்டும். இது ஒரு கிறிஸ்தவத் தம்பதியாக, “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு,” அன்பான சரிப்படுத்துதல்களைச் செய்ய உங்களுக்கு உதவிசெய்யும்.—எபேசியர் 4:2, 3.
உதாரணமாக, காஸுவோ-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். அவர் மனைவிக்குப் பயந்த ஒரு கணவனாகவும் சூதாட்ட வெறியுணர்வு உடையவராகவும் இருந்தார். பல லட்சக்கணக்கான டாலர்கள் கடன்களில் மூழ்கிப்போயிருப்பவராக அவர் தன்னைக் கண்டார். அவருடைய கடன்களை அடைப்பதற்காக மீண்டும் கடன் வாங்கியதால், அந்தக் கடன்தொல்லையில் இன்னுமதிகமாக அமிழ்ந்துபோனார். பின்பு அவர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்; இறுதியில் தன் மனைவியிடம் தன்னுடைய பிரச்னைகளைச் சொல்வதற்குத் தைரியத்தை வளர்த்துக்கொண்டார். அவளுடைய குற்றச்சாட்டுகளையெல்லாம் சகித்துகொள்ள தன்னைத் தயார்நிலையில் வைத்துக்கொண்டார். ஆனால், அவர் ஆச்சரியப்பட்டுப்போனார்; அவருடைய மனைவி, கூடுதல் காலமாக பைபிளைப் படித்துவந்தவள், அமைதியாக இவ்வாறு பதிலளித்தாள்: “நாம் கடன்களை எப்படித் தீர்ப்பது என்பதைத் திட்டமிடலாங்க.”
அடுத்த நாளிலிருந்து, அவர்களுக்குக் கடன்கொடுத்தவர்களை அவர்கள் சந்தித்து, அவர்களுடைய கடன்களையெல்லாம் அவர்களுடைய வீட்டையுங்கூட விற்று தீர்க்க ஆரம்பித்தனர். அவர்களுடைய கடன்களையெல்லாம் தீர்த்துமுடிப்பதற்கு ஏறக்குறைய ஒரு வருடம் எடுத்தது. அவருடைய மனைவியாகிய கீமீ-ஐ மாற்றியது என்ன? அவள் சொல்கிறாள்: “பிலிப்பியர் 4, வசனங்கள் 6, 7-ல் காணப்படும் வார்த்தைகள் நிஜமாகவே உண்மையாய் இருக்கின்றன. ‘ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.’” அவள் தொடர்ந்து சொன்னாள்: “பிரச்னைகளுக்கு மத்தியிலும் நான் எவ்வளவு சந்தோஷமாய் இருந்தேன் என்பதைக் காண்பதில் என் தோழி ஆச்சரியப்பட்டு, என்னோடு பைபிள் படிக்க ஆரம்பித்துவிட்டாள்.” காஸுவோவும் அவருடைய மனைவியும் முழுக்காட்டப்பட்டதிலிருந்து இப்போது ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள்.
மேற்கூறப்பட்ட அனுபவங்களைக் கொண்டிருந்த கணவன்மார்களும் மனைவிமார்களும், உண்மையைச் சொல்வதன்மூலம் ஒருவரையொருவர் நம்புகின்றனர்; அதோடுகூட தம்பதிகளின் திருமண வாழ்க்கை சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவியாயிருக்கும் சில காரியங்களையும் அவர்கள் செய்தார்கள். அவர்கள் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்தவராகிய யெகோவா தேவனோடு தொடர்புகொண்டார்கள். அழுத்தங்களையும் கஷ்டங்களையும் தம்பதிகள் எதிர்ப்பட்டாலும், அவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு கடவுளுடைய நியமங்களைப் பொருத்திப் பிரயோகிக்க முயற்சிசெய்து, மற்றவற்றை அவரிடம் ஒப்படைத்துவிட்டார்கள் என்றால், எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தினால் அவர் அவர்களை ஆசீர்வதிப்பார். இருவரும் சேர்ந்து ஜெபிப்பது விசேஷமாகப் பயனுள்ளதாய் இருக்கிறது. கணவன் இதை முன்னிருந்து நடத்தி, தானும் தன் மனைவியும் எதிர்ப்படும் எந்தப் பிரச்னைக்கும் அவருடைய அறிவுரையையும் வழிநடத்துதலையும் நாடித்தேடும்படி கடவுளுக்கு முன்பாக ‘தன்னுடைய இருதயத்தை ஊற்ற’ வேண்டும். (சங்கீதம் 62:8) அப்படிப்பட்ட ஜெபங்களுக்கு யெகோவா தேவன் நிச்சயமாகவே செவிசாய்ப்பார்.
ஆம், திருமணப் பிணைப்பைப் பலப்படுத்துவது கூடிய காரியம்தான். இப்பொழுதுங்கூட, கொந்தளிப்பான சமுதாயத்தில் நம்முடைய அனைத்து அபூரணங்களோடு வாழும்பொழுதும், திருமணமான தம்பதிகள் தங்களுடைய உறவில் கணிசமான சந்தோஷத்தைக் காண முடியும். இன்னுமதிக நடைமுறையான ஆலோசனைகளையும் தெய்வீக அறிவுரைகளையும் நீங்கள், உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியினால் பிரசுரிக்கப்பட்ட உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தில் காணலாம். மேலும், பைபிள் நியமங்களைப் பொருத்தி பின்பற்றுவதற்கு முழுமனதோடு உழைக்கும் தம்பதிகள், கடவுள் தயார்செய்யும் சீக்கிரம்-வரும் புதிய உலகில் அன்பினாலே பிணைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம்.