வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
• கடவுளுடைய பரிசுத்த ஆவி ஓர் ஆளாக இல்லாதபோது அதை நாம் எப்படி துக்கப்படுத்த முடியும்?
“தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என எழுதியவர் அப்போஸ்தலனாகிய பவுல். (எபேசியர் 4:30) இந்த வார்த்தைகளை வைத்து பரிசுத்த ஆவி ஓர் ஆள் என சிலர் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியை ஓர் ஆளாகவோ உன்னதமானவருக்கு சமமான ஒரு திரித்துவ கடவுளாகவோ கருதவில்லை என்பதற்கு ‘உண்மையுள்ள விசாரணைக்கார’ வகுப்பு வெளியிடும் பிரசுரங்கள் வேதப்பூர்வ, சரித்திரப்பூர்வ அத்தாட்சிகளை அடிக்கடி அளித்திருக்கின்றன.a (லூக்கா 12:42) ஆகவே, கடவுளுடைய பரிசுத்த ஆவியை ஓர் ஆளாக பவுல் அங்கு குறிப்பிடவில்லை.
கடவுளுடைய பரிசுத்த ஆவி என்பது அவருடைய காணக்கூடாத செயல் நடப்பிக்கும் சக்தியாகும். (ஆதியாகமம் 1:2, NW) யோவான் தண்ணீரினால் முழுக்காட்டுதல் கொடுத்தது போல இயேசுவும் ‘பரிசுத்த ஆவியினால்’ முழுக்காட்டுதல் கொடுக்க இருந்தார். (லூக்கா 3:16) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று சுமார் 120 சீஷர்கள் ‘பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்’—அவர்கள் ஓர் ஆளால் நிரப்பப்படவில்லை. (அப்போஸ்தலர் 1:4, 8; 2:4, 33) பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்ற இவர்களுக்கு பரலோக நம்பிக்கை கிடைத்தது; உத்தமமாய் வாழவும் கடவுளுடைய ஆவி அவர்களுக்கு உதவியது. (ரோமர் 8:14-17; 2 கொரிந்தியர் 1:22) அந்த ஆவி அவர்களில் தேவபக்திக்கேற்ற கனியைப் பிறப்பித்தது; கடவுளுடைய அங்கீகாரத்தை இழக்கச் செய்யும் ‘மாம்சத்தின் கிரியைகளை’ தவிர்க்கவும் அவர்களுக்கு உதவியது.—கலாத்தியர் 5:19-25.
நாம் பூமியில் வாழும் நம்பிக்கையுடைய ஊழியர்களாக இருந்தால், நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றில்லை என்று அர்த்தம். இருந்தாலும், பரலோக நம்பிக்கை உடையவர்களுக்கு ஒப்பாக நாமும் கடவுளுடைய ஆவியை பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, நாமும்கூட பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தி விடக்கூடும். எப்படி?
பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட வேதப்பூர்வ ஆலோசனையை அலட்சியம் செய்தால், பரிசுத்த ஆவிக்கு எதிராக வேண்டுமென்றே பாவத்தை செய்யத் தூண்டும் மனநிலையை நாம் வளர்க்க நேரிடலாம். அதனால் யெகோவாவின் தயவை இழந்து இறுதியில் அழிந்துவிடலாம். (மத்தேயு 12:31, 32) நாம் இதுவரையில் வினைமையான பாவத்தை செய்திராவிட்டாலும், தவறான பாதையில் அடியெடுத்து வைக்க நேரிடலாம்; முடிவில் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு எதிரான காரியங்களை செய்வதற்கு அது நம்மை இழுத்துச் செல்லலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், நாம் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துகிறவர்களாய் இருப்போம்.
அப்படியானால், கடவுளுடைய ஆவியை துக்கப்படுத்துவதை நாம் எப்படி தவிர்க்கலாம்? நம்முடைய சிந்தைகளையும் செயல்களையும் நாம் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். எபேசியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில், 4-ம் அதிகாரத்தில், நேர்மையற்ற வார்த்தைகள், கோபத்தை மனதில் தொடர்ந்து வைத்திருத்தல், சோம்பேறித்தனம், கெட்ட பேச்சு ஆகியவற்றிற்கு வழிநடத்தும் மனப்பான்மைகளைத் தவிர்ப்பதைப் பற்றி பேசினார். “புதிய சுபாவத்தை” (NW) தரித்துக்கொண்ட பிறகு, மீண்டும் அந்த கெட்ட காரியங்களை செய்தால், நாம் என்ன செய்கிறோம் என்று அர்த்தம்? ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் ஆலோசனைக்கு எதிராக செல்கிறோம் என்று அர்த்தம். இவ்வாறு செய்வது பரிசுத்த ஆவியை நாம் துக்கப்படுத்துவதாக இருக்கும்.
எபேசியர் 5-ம் அதிகாரத்தில் வேசித்தனத்தைக் குறித்ததில் தகாத ஆசை கொள்வதைத் தவிர்ப்பது பற்றி பவுல் கொடுத்த ஆலோசனையை நாம் வாசிக்கிறோம். இழிவான நடத்தை, கீழ்த்தரமான கேலி பேச்சுகள் ஆகியவற்றைத் தவிர்க்கும்படியும் அப்போஸ்தலன் அறிவுறுத்துகிறார். கடவுளுடைய பரிசுத்த ஆவியை நாம் துக்கப்படுத்த விரும்பவில்லை என்றால், பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கும் போது இந்த ஆலோசனையை மனதில் வைப்பது அவசியம். அத்தகைய காரியங்களைக் குறித்து பேசுவது, வாசிப்பது, டிவி-யிலோ வேறு இடங்களிலோ அவற்றைப் பார்ப்பது ஆகியவற்றின் மூலம் நாம் ஏன் அந்தக் காரியங்களில் ஆர்வம் காட்ட வேண்டும்?
மற்ற வழிகளிலும் நாம் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. யெகோவாவின் ஆவி சபையில் ஒற்றுமையை உருவாக்குகிறது, ஆனால் தீங்கிழைக்கும் வீண்பேச்சை ஒருவேளை நாம் சபையில் பரப்புவதாக அல்லது பிரிவினையை உண்டாக்குவதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால், ஒற்றுமைக்கு வழிகாட்டும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் நாம் செயல்படுபவர்களாய் இருப்போம் அல்லவா? பொதுவாக சொன்னால், கொரிந்து சபையில் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்களைப் போல, நாமும் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துகிறவர்களாக இருப்போம். (1 கொரிந்தியர் 1:10; 3:1-4, 16, 17) சபையில் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டவர்களை வேண்டுமென்றே நாம் அவமதித்தால்கூட நாம் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துகிறவர்களாய் இருப்போம்.—அப்போஸ்தலர் 20:28; யூதா 8.
அப்படியானால், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல்களைக் குறித்து பைபிள் வாயிலாகவும் கிறிஸ்தவ சபையின் வாயிலாகவும் நாம் கற்றுக்கொண்டிருக்கும் காரியங்களின் அடிப்படையில் நம் சிந்தைகளையும் செயல்களையும் சீர்தூக்கிப் பார்ப்பது ஞானமானது. ‘பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணிக்கொண்டும்’ இருப்போமாக; அதன் செல்வாக்கிற்கு இடமளித்து, கடவுளுடைய ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைக்கு இசைவாக எப்போதும் செயல்படுவோமாக. (யூதா 20) பரிசுத்த ஆவியை ஒருபோதும் துக்கப்படுத்தாமல், யெகோவாவின் பரிசுத்த பெயருக்கு கனத்தை சேர்க்கும் வண்ணம் எப்போதும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதே நம் தீர்மானமாக இருக்கட்டும்.
• கடவுளுடைய ராஜ்யத்தில் ஐசுவரியவான் பிரவேசிப்பது கடினம் என்பதை ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைய கஷ்டப்படுவதோடு இயேசு கிறிஸ்து ஒப்பிட்டார். அப்படியானால் ஒரு நிஜமான ஒட்டகத்தையும் ஊசியையும் இயேசு குறிப்பிட்டாரா?
நமது பைபிளில் மத்தேயு 19:24; மாற்கு 10:25 மற்றும் லூக்கா 18:25 ஆகிய மூன்று இடங்களிலும் இந்த வார்த்தைகள் ஒரேவிதமாக சொல்லப்பட்டுள்ளன. மத்தேயுவில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி இயேசு இவ்வாறு சொன்னார்: “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்”—மத்தேயு 19:24.
எருசலேமின் பெரிய கதவுகள் ஒன்றில் இருந்த சிறிய கதவே இந்த ‘ஊசியின் காது’ என சில புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. இரவில் இந்தப் பெரிய கதவு அடைக்கப்பட்டிருந்தால், அதன் சிறிய கதவு திறந்து வைக்கப்படலாம். இதன் வழியாக ஒட்டகம் செல்ல முடியும் என நம்பப்படுகிறது. இதைத்தான் இயேசு குறிப்பிட்டாரா?
இல்லை, தையல் ஊசியின் காதைத்தான் இயேசு குறிப்பிட்டதாக தெரிகிறது. எலும்பினாலோ உலோகத்தாலோ செய்யப்பட்ட பண்டைக் கால ஊசிகள் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அவை பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பின்படி, லூக்கா 18:25-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் எந்தவொரு சந்தேகத்தையும் நீக்கிப்போடுகின்றன. ஏனென்றால் அது இவ்வாறு சொல்கிறது: “உண்மையில், பணக்காரன் ஒருவன் கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட தையல் ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.”
புதிய உலக மொழிபெயர்ப்பைப் போல் அந்த வார்த்தையை “தையல் ஊசி” என்று மொழிபெயர்ப்பதை பல்வேறு அகராதி ஆசிரியர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். மத்தேயு 19:24, மாற்கு 10:25 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள “ஊசி” என்பதன் கிரேக்க வார்த்தை (ராஃபிஸ்) “தை” என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. லூக்கா 18:25-ல் காணப்படும் கிரேக்க வார்த்தை (வெலானி) அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தையல் ஊசியைக் குறிக்கிறது. வைன்ஸ் எக்ஸ்பாசிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் ஓல்ட் அண்ட் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் இவ்வாறு கூறுகிறது: “‘ஊசியின் காது’ சிறிய கதவுகளை குறித்தது என்ற கருத்து நவீன காலத்தில்தான் தோன்றியதாக தெரிகிறது. பண்டைய காலத்தில் அந்தக் கதவுகள் இருந்ததற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. மனிதரால் முடியாத ஒன்று என்பதை வலியுறுத்தவே கர்த்தர் அப்படி சொன்னார். ராஜ்யத்தில் பிரவேசிப்பது ஐசுவரியவான்களுக்கு கடினம் என்பதை குறைத்துக் கூறுவதற்காக சாதாரண ஊசிக்குப் பதிலாக வேறு ஏதேதோ அர்த்தம் சொல்ல முயல வேண்டிய அவசியமில்லை.”—1981, தொகுதி 3, பக்கம் 106.
இந்த வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள “ஒட்டகம்” என்ற வார்த்தை “கயிறு” என்றுதான் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என சிலர் குறிப்பிடுகிறார்கள். கயிறு (கமிலாஸ்) என்பதற்குரிய கிரேக்க வார்த்தையும் ஒட்டகம் (காமிலாஸ்) என்பதற்குரிய கிரேக்க வார்த்தையும் ஒரேவிதமாக ஒலிக்கின்றன. என்றாலும், இப்போது இருக்கும் மத்தேயு சுவிசேஷத்தின் பழைய கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் (சினியாட்டிக், வாடிகன் எண் 1209 மற்றும் அலெக்ஸாண்டிரின்) மத்தேயு 19:24-ல் “கயிறு” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை அல்ல, ஆனால் “ஒட்டகம்” என்பதற்குரிய வார்த்தையே காணப்படுகிறது. மத்தேயு தனது சுவிசேஷத்தை முதலில் எபிரெயுவில் எழுதினார் என்றும் பிற்பாடு அவரே கிரேக்கில் மொழிபெயர்த்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் இயேசு எதைப் பற்றி சொன்னார் என்பதை அவர் அறிந்திருந்தார், ஆகவே அந்த சரியான வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.
அப்படியானால், நிஜ தையல் ஊசியையும் ஒட்டகத்தையுமே இயேசு குறிப்பிட்டார். முடியாத ஒரு காரியத்தை வலியுறுத்தவே அவற்றை அவர் பயன்படுத்தினார். ஆனால், பணக்காரர் யாரும் கடவுளுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவே முடியாது என்று இயேசு அர்த்தப்படுத்தினாரா? இல்லை, அவருடைய வார்த்தைகளை சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் உயர்வு நவிர்ச்சி அணியைத்தான் இயேசு பயன்படுத்தினார். ஒரு நிஜ தையல் ஊசியின் காது வழியாக ஓர் ஒட்டகம் எப்படி செல்லவே முடியாதோ அப்படித்தான் செல்வத்திலேயே ஆசை வைத்து யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்காத ஒரு பணக்காரனும் கடவுளுடைய ராஜ்யத்திற்குள் செல்லவே முடியாது என்பதை விளக்குவதற்காக அதை பயன்படுத்தினார்.—லூக்கா 13:24; 1 தீமோத்தேயு 6:17-19.
தம்முடைய சீஷனாக ஆகும் சிலாக்கியத்தை ஓர் இளம் பணக்கார அதிபதி உதறித் தள்ளிவிட்டு சென்ற சமயத்தில்தான் இயேசு இந்த வார்த்தைகளை சொன்னார். (லூக்கா 18:18-24) ஆவிக்குரிய காரியங்களுக்கு மேலாக தன் சொத்துபத்துகள் மீது ஆசை வைத்திருக்கும் ஒரு பணக்காரன், கடவுளுடைய ராஜ்யத்தில் நித்திய ஜீவனைப் பெறலாம் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் பணக்காரர் சிலரும் உண்டு. (மத்தேயு 27:57; லூக்கா 19:2, 9) ஆகவே தன்னுடைய ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வோடிருந்து, கடவுளுடைய உதவியை நாடும் ஒரு பணக்காரன் கடவுளின் இரட்சிப்பைப் பெற முடியும்.—மத்தேயு 5:3; 19:16-26.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டை காண்க.