தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறது
“ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.”—யாக்கோபு 4:7.
1. நாம் வணங்கக்கூடிய கடவுளைப்பற்றி என்ன சொல்லப்படலாம்?
யெகோவா என்னே ஒரு மகத்துவமுள்ள கடவுள்! பல வழிகளில் இணையற்றவர், நிகரற்றவர், ஒப்பற்றவர், ஈடற்றவர்! அவர் மகா உன்னதமானவரும், எல்லா அதிகாரமும் அவரிடமிருக்கும் சர்வலோக பேரரசருமாய் இருக்கிறார். அவர் நித்தியத்திலிருந்து நித்தியம்வரைக்கும் இருப்பவராயும் ஒரு மனிதன் அவரைப் பார்த்துவிட்டு தொடர்ந்து உயிருடனிருக்கமுடியாத அளவிற்கு அத்தனை மகிமையுள்ளவராயும் இருக்கிறார். (யாத்திராகமம் 33:20; ரோமர் 16:25) அவர் வல்லமையிலும் ஞானத்திலும் எல்லையற்றவராயும், நியாயத்தில் முழுமையாக பரிபூரணமானவராயும், அன்பின் உருவகமாகவேயும் இருக்கிறார். அவர் நம்முடைய சிருஷ்டிகர், நம்முடைய நியாயாதிபதி, நம்முடைய நியாயப்பிரமாணிகர், நம்முடைய ராஜா. நன்மையான எந்த ஈவும் பரிபூரணமான எந்தப் பரிசும் அவரிடமிருந்து வருகிறது.—சங்கீதம் 100:3; ஏசாயா 33:22; யாக்கோபு 1:17.
2. என்ன காரியங்களைத் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் உட்படுத்துகிறது?
2 இந்த எல்லா உண்மைகளின் காரணமாக, நாம் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்க கடமைப்பட்டிருப்பதைப்பற்றி எந்தக் கேள்வியும் இருக்க முடியாது. ஆனால் இது நமக்கு எதை உட்படுத்துகிறது? பல காரியங்களை. நாம் யெகோவா தேவனைத் தனிப்பட்டவிதமாக பார்க்க முடியாத காரணத்தால், ஒரு கற்பிக்கப்பட்ட மனச்சாட்சியின் வழிநடத்துதலுக்கு இசைந்து செல்லுதல், கடவுளுடைய பூமிக்குரிய அமைப்புடன் ஒத்துழைத்தல், உலகப்பிரகாரமான அதிகாரங்களை ஏற்றுக்கொள்ளுதல், மற்றும் தலைமைத்துவ நியமத்தைக் குடும்பவட்டாரத்துக்குள் மதித்தல் ஆகியவற்றை அவருக்குக் கீழ்ப்பட்டிருத்தல் உட்படுத்துகிறது.
ஒரு நல்ல மனச்சாட்சியைப் பற்றிக்கொண்டிருத்தல்
3. ஒரு நல்ல மனச்சாட்சியைக் கொண்டிருக்க, எந்த வகையான விலக்குகளுக்கு நாம் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்?
3 ஒரு நல்ல மனச்சாட்சியைக் கொண்டிருப்பதற்கு, செயலாக்கத்திற்குக் கொண்டுவரப்பட முடியாதவற்றிற்கு—அதாவது, மனிதர்களால் கட்டாயப்படுத்தப்பட முடியாத சட்டங்கள் அல்லது நியமங்களுக்கு—நாம் கீழ்ப்படியவேண்டும். உதாரணமாக, பத்துக்கட்டளைகளிலுள்ள பேராசைக்கு எதிரான பத்தாம் கட்டளை, மனித அதிகாரிகளால் அமலுக்குக் கொண்டுவரமுடியாததாய் இருந்தது. இது பத்துக் கட்டளைகளின் தெய்வீக ஆரம்பத்திற்குச் சான்றளிக்கிறது; ஏனென்றால், ஒரு சட்டம் மீறப்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அதை அமல்படுத்தமுடியாத ஒரு சட்டத்தை எந்த மனித சட்ட அமைப்புக் குழுவும் நிறுவாது. இந்தச் சட்டத்தின் மூலமாக, யெகோவா தேவன் ஒவ்வொரு இஸ்ரவேலனும்—அவன் ஒரு நல்ல மனச்சாட்சியைக் கொண்டிருக்கவேண்டுமானால்—ஒரு போலீஸ்காரனாகத் தனக்குத் தானே இருக்கும் உத்தரவாதத்தைக் கொடுத்தார். (யாத்திராகமம் 20:17) அதேவிதமாக, மாம்சத்தின் கிரியைகளில், ஒருவரை கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமுடியாதபடி விலக்கும் காரியங்கள் “பொறாமைகள்” மற்றும் “வைராக்கியங்கள்” ஆகும்—இந்த உணர்ச்சிகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை மனித நியாயாதிபதிகளால் அமல்படுத்தமுடியாது. (கலாத்தியர் 5:19-21) ஆனால் ஒரு நல்ல மனச்சாட்சியைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமானால், நாம் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4. ஒரு நல்ல மனச்சாட்சியைக் கொண்டிருப்பதற்கு, நாம் என்ன பைபிள் நியமங்களைக்கொண்டு வாழவேண்டும்?
4 ஆம், நாம் பைபிள் நியமங்களின்படி வாழ வேண்டும். அத்தகைய நியமங்கள், மோசேயின் நியாயப்பிரமாணத்தில் பெரிய கட்டளை எது என்ற கேள்விக்குப் பதிலாக இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறிய இரண்டு கட்டளைகளில் சுருக்கப்படலாம். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக. . . . உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:36-40) இந்தக் கட்டளைகளில் இரண்டாவதில் எது உட்பட்டிருக்கிறது என்பதை விளக்குவதாய் மத்தேயு 7:12-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் உள்ளன: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.”
5. நாம் யெகோவா தேவனோடு எவ்வாறு ஒரு நல்ல உறவைக் கொண்டிருக்க முடியும்?
5 மற்றவர்கள் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும், நாம் சரி என்று அறிந்திருக்கிற காரியத்தைச் செய்யவும், தவறு என்று அறிந்திருக்கும் காரியத்தைச் செய்யாமலிருக்கவும் வேண்டும். செய்யவேண்டியதை செய்யாமலும், செய்யக்கூடாததை செய்துகொண்டும் நாம் அகப்படாமல் தப்பித்துக்கொள்ள முடியுமென்றாலும்கூட இதை நாம் கடைப்பிடிக்கவேண்டும். எபிரெயர் 4:13-ல் அப்போஸ்தலன் பவுலால் கொடுக்கப்பட்ட எச்சரிப்பை மனதில் கொண்டு நம்முடைய பரலோக தகப்பனுடன் ஒரு நல்ல உறவைத் தொடர்ந்து வைத்திருப்பதை இது உட்படுத்தும்: “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.” சரியானதைச் செய்வதில் விடாப்பிடியாயிருத்தல், பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்துப் போராடவும், உலகத்தின் அழுத்தங்களை எதிர்த்து நிற்கவும், சுதந்தரிக்கப்பட்ட நம்முடைய தன்னலத்திடமான மனச்சாய்வுடன் போராடவும் நமக்கு உதவி செய்யும்.—எபேசியர் 6:11-ஐ ஒப்பிடவும்.
கடவுளுடைய அமைப்புக்குக் கீழ்ப்பட்டிருத்தல்
6. கிறிஸ்தவத்துக்கு முன்னான காலங்களில் யெகோவா என்ன தொடர்பு கொள்ளும் வழிகளைப் பயன்படுத்தினார்?
6 பைபிள் நியமங்களை நம்முடைய வாழ்க்கையில் எப்படிப் பொருத்திப்பிரயோகிக்கவேண்டும் என்று தனிப்பட்டவர்களாக நாம் தீர்மானிக்கும்படியான முழுமையான உரிமையை யெகோவா தேவன் நமக்குக் கொடுக்கவில்லை. மனிதவர்க்க சரித்திரத்தின் ஆரம்பம் முதற்கொண்டே, கடவுள் மனிதர்களைத் தொடர்புகொள்ளும் வழிகளாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவ்வாறாக, ஏவாளுக்கு ஆதாம் கடவுளின் சார்பாகப் பேசுபவராக இருந்தான். விலக்கப்பட்ட கனியைப்பற்றிய கட்டளை ஏவாள் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பாக ஆதாமிடம் கொடுக்கப்பட்டது; ஆகவே ஏவாளுக்கான கடவுளுடைய சித்தத்தைப்பற்றி ஆதாம் அவளுக்குத் தெரிவித்திருக்கவேண்டும். (ஆதியாகமம் 2:16-23) நோவா தன்னுடைய குடும்பத்துக்கும் ஜலப்பிரளயத்திற்கு முன்னிருந்த உலகிற்கும் கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருந்தார். (ஆதியாகமம் 6:13; 2 பேதுரு 2:5) ஆபிரகாம் தன்னுடைய குடும்பத்திற்கு கடவுளின் சார்பாக பேசுபவனாக இருந்தார். (ஆதியாகமம் 18:19) மோசே, இஸ்ரவேல் ஜனத்திற்குக் கடவுளுடைய தீர்க்கதரிசியும் தொடர்புகொள்ளும் வழியுமாக இருந்தார். (யாத்திராகமம் 3:15, 16; 19:3, 7) அவருக்குப்பின், முழுக்காட்டுபவனாகிய யோவான் வரையாக, கடவுள் தம்முடைய சித்தத்தை அவருடைய மக்களுக்கு அறிவிப்பதற்காக அநேக தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் ராஜாக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
7 மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் வருகையுடன், கடவுள் அவரையும் அவருடன் நெருங்கிய கூட்டுறவைக் கொண்டிருந்த அப்போஸ்தலர் மற்றும் சீஷர்கள் தன்னுடைய சார்பாகப் பேசுவோராகச் சேவிக்கும்படி பயன்படுத்தினார். பின்னர், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ளவர்கள், பைபிள் நியமங்களைத் தங்கள் வாழ்க்கையில் எப்படிப் பொருத்திப்பிரயோகிக்க வேண்டும் என்பதை யெகோவாவின் மக்களுக்குத் தெரிவிப்பதற்காக ஓர் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார”னாக சேவிக்கவேண்டியதாய் இருந்தது. யெகோவா தேவன் பயன்படுத்தும் கருவியை ஏற்றுக்கொள்வதைத் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் அர்த்தப்படுத்தியது.—மத்தேயு 24:45-47; எபேசியர் 4:11-14.
7, 8. (எ) மேசியாவின் வருகைக்குப்பின், கடவுளின் சார்பாகப் பேசுபவர்களாக யார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்? (பி) இன்று யெகோவாவின் சாட்சிகளிடம் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் எதைத் தேவைப்படுத்துகிறது?
8 இன்று “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புடையதாயும் இந்தச் சாட்சிகளின் நிர்வாகக் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டதாயும் இருப்பதாக உண்மைகள் காண்பிக்கின்றன. அந்தக் குழு முறையாக, வெவ்வேறு ஸ்தானங்களில் கண்காணிகளை—மூப்பர்கள் மற்றும் பிரயாண பிரதிநிதிகள் என்பதாக—உள்ளூரளவிலான வேலையை நடத்துவதற்காக நியமிக்கிறது. எபிரெயர் 13:17-ற்கு இசைவாக இந்தக் கண்காணிகளுக்கு ஒவ்வொரு ஒப்புக்கொடுக்கப்பட்ட சாட்சியும் கீழ்ப்பட்டிருக்கவேண்டும் என்பதை தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் தேவைப்படுத்துகிறது: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.”
சிட்சையை ஏற்றுக்கொள்ளுதல்
9. தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் அடிக்கடி எதை உட்படுத்துகிறது?
9 தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல், அடிக்கடி, கண்காணிகளாக சேவிப்பவர்களிடமிருந்து சிட்சையை ஏற்றுக்கொள்ளுவதை உட்படுத்துகிறது. நாம் எப்போதும் நமக்கு நாமே தேவையான சிட்சையை கொடுக்காவிட்டால், அவ்வாறு செய்வதற்கு நம்மைவிட அனுபவமும் அதிகாரமும் உடைய நம் சபை மூப்பர்களைப் போன்றவர்களால் ஆலோசனையளிக்கப்படவும் சிட்சையளிக்கப்படவும் தேவைப்படக்கூடும். அத்தகைய சிட்சையை ஏற்றுக்கொள்வதே ஞானமான போக்காக இருக்கிறது.—நீதிமொழிகள் 12:15; 19:20.
10. சிட்சை கொடுப்பவர்கள் என்ன கடமையைக் கொண்டிருக்கின்றனர்?
10 தெளிவாகவே, சிட்சையளிக்கும் மூப்பர்கள், அவர்கள்தாமே தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். எப்படி? கலாத்தியர் 6:1-ன்படி, மூப்பர்கள் ஒரு நல்ல முறையில் ஆலோசனை கொடுப்பவர்களாக மட்டுமல்ல, ஆனால் முன்மாதிரியானவர்களாய் இருக்க வேண்டும்: “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.” அதாவது, அந்த மூப்பரின் ஆலோசனை அவர் வகிக்கும் முன்மாதிரிக்கு இசைந்துசெல்வதாய் இருக்கவேண்டும். அது 2 தீமோத்தேயு 2:24, 25 மற்றும் தீத்து 1:9-ல் கொடுக்கப்பட்ட அறிவுரைக்கு ஒத்திசைந்து செல்வதாக இருக்கும். ஆம், கடிந்துகொள்ளுதலை அல்லது திருத்தத்தைக் கொடுப்பவர்கள் ஒருபோதும் கடுமையாய் இருந்துவிடாதபடி மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் எப்பொழுதும் சாந்தமாகவும், தயவாகவும், அதே நேரத்தில் கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களை நிலைநாட்டுவதற்கு உறுதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் பட்சபாதமில்லாமல் செவிகொடுப்பவர்களாகவும், பாரம் சுமந்து சோர்ந்திருப்பவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.—மத்தேயு 11:28-30-ஐ ஒப்பிடவும்.
மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருத்தல்
11. உலகப்பிரகாரமான அதிகாரிகளோடுள்ள தொடர்புகளில் கிறிஸ்தவர்களிடம் தேவைப்படுவது என்ன?
11 தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல், நாம் உலகப்பிரகாரமான அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிவதைத் தேவைப்படுத்துகிறது. ரோமர் 13:1-ல் நாம் இவ்விதமாக அறிவுறுத்தப்படுகிறோம்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.” மற்ற காரியங்களோடு சாலைப் போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிவதையும், அப்போஸ்தலன் பவுல் ரோமர் 13:7-ல் குறிப்பிட்டபடி வரிகளையும் தீர்வைகளையும் செலுத்துவதில் நேர்மையுள்ளவர்களாக இருப்பதையும் இந்த வார்த்தைகள் தேவைப்படுத்துகின்றன.
12. நாம் இராயனுக்குக் கீழ்ப்பட்டிருத்தல் என்ன அர்த்தத்தில் சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதலாக இருக்கிறது?
12 இருப்பினும், தெளிவாகவே, இராயனுக்குக் காண்பிக்கவேண்டிய அத்தகைய எல்லா கீழ்ப்பட்டிருத்தலும், சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதலாக இருக்கவேண்டும். மத்தேயு 22:21-ல் பதிவுசெய்யப்பட்ட, இயேசு கிறிஸ்துவால் குறிப்பிடப்பட்ட நியமத்தை நாம் எப்போதும் மனதில் கொண்டிருக்கவேண்டும்: “அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” ஆக்ஸ்ஃபோர்ட் NIV [நியூ இன்டர்நேஷனல் வெர்ஷன்] ஸ்கோஃபெல்ட் ஸ்டடி பைபிள், ரோமர் 13:1-ன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறது: “இது அவன் ஒழுக்கயீனமான, கிறிஸ்தவத்திற்கு எதிரான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. அதுபோன்ற காரியங்களில், மனிதனைவிட கடவுளுக்குக் கீழ்ப்படிவதே அவனுடைய கடமையாய் இருக்கிறது (அப்போஸ்தலர் 5:29; ஒப்பிடவும் தானி. 3:16-18; 6:10ff).”
குடும்ப வட்டாரத்துக்குள் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல்
13. குடும்ப வட்டாரத்தில் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல், அதன் அங்கத்தினரிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறது?
13 குடும்ப வட்டாரத்துக்குள், கணவனும் தகப்பனுமானவர் தலைவராக சேவிக்கிறார். இது மனைவிகள் எபேசியர் 5:22, 23-ல் கொடுக்கப்பட்டுள்ள புத்திமதிக்கு இசைந்து செல்வதைத் தேவைப்படுத்தும்: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்த புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.”a பிள்ளைகள் தங்களுக்காக சொந்த சட்டங்களை உருவாக்குவதில்லை, ஆனால் எபேசியர் 6:1-3-ல் பவுல் விவரிக்கிறபடி, தங்கள் தகப்பன் மற்றும் தாயாகிய இருவருக்கும் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பிக்க கடமைப்பட்டிருக்கின்றனர்: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.”
14. தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் குடும்பத் தலைவர்களிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறது?
14 சந்தேகமின்றி, கணவன்மாரும் தகப்பன்மாரும் அவர்கள்தாமே தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டும்போது, அது மனைவிகளும் பிள்ளைகளும் அத்தகைய தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பிப்பதை எளிதாக்குகிறது. அவர்கள் இதை எபேசியர் 5:28, 29 மற்றும் 6:4-ல் காணப்படுவதைப்போன்ற பைபிள் நியமங்களுக்கு இசைவாக தங்கள் தலைமைத்துவத்தைக் காட்டுவதன்மூலம் செய்கின்றனர்: “அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.” “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.”
தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டுவதற்கு உதவிகள்
15. தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டுவதற்கு எந்த ஆவியின் கனி உதவி செய்யும்?
15 இந்த வெவ்வேறு அம்சங்களில் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டுவதற்கு நமக்கு எது உதவிசெய்யும்? முதலாவதாக இருப்பது தன்னலமற்ற அன்பு—யெகோவா தேவனுக்கும் அவர் நமக்கு மேலாக வைத்திருப்பவர்களுக்கும் அன்பைக் கொண்டிருத்தல். நாம் 1 யோவான் 5:3-ல் இவ்வாறு சொல்லப்படுகிறோம்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” இயேசு அதே குறிப்பைத்தான் யோவான் 14:15-ல் குறிப்பிட்டார்: “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.” உண்மையாகவே, அன்பு—ஆவியின் கனிகளில் முதன்மையானதாக இருப்பது—யெகோவா நமக்குச் செய்திருக்கும் எல்லாவற்றிற்கும் நம்மைப் போற்றுதல் காண்பிக்கச் செய்து, அவ்வாறாக நாம் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பிக்க உதவி செய்யும்.—கலாத்தியர் 5:22.
16. தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பிப்பதில் தேவபக்தியுடன்கூடிய பயம் எவ்வாறு உதவும்?
16 இரண்டாவதாக இருப்பது தேவபக்தியுடன்கூடிய பயம். யெகோவா தேவனைப் பிரியப்படுத்தாமல் இருந்துவிடுமோ என்ற பயம் உதவும் ஏனென்றால், அது ‘தீமையை வெறுப்பதை அர்த்தப்படுத்துகிறது.’ (நீதிமொழிகள் 8:13) கேள்விக்கிடமின்றி, யெகோவாவைப் பிரியப்படுத்தாமல் இருந்துவிடக்கூடாதென்ற பயம், மனிதருக்குப் பயப்படுவதால் விட்டுக்கொடுக்காமல் இருக்க உதவி செய்யும். எப்பேர்ப்பட்ட கஷ்டங்களை மேற்கொள்ளவேண்டியதாய் இருந்தாலும், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் அது உதவி செய்யும். மேலுமாக, சோதனைகளுக்கு இணங்கிச்செல்வதை அல்லது தவறான காரியங்களைச் செய்வதற்கான மனச்சாய்வுகளைத் தவிர்க்கவும் அது உதவும். யெகோவாவிடமான பயம், ஆபிரகாம் தன்னுடைய பிரியமான மகனாகிய ஈசாக்கை பலிசெலுத்த முயற்சிசெய்ய உதவியது, யெகோவாவைப் பிரியப்படுத்தாமல் இருந்துவிடக்கூடாது என்ற பயம் யோசேப்பைப் போத்திப்பாரின் மனைவியிடமிருந்து வந்த ஒழுக்கயீனமான துணிதல்களை வெற்றிகரமாக எதிர்க்க உதவியது.—ஆதியாகமம் 22:12; 39:9.
17. நாம் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பிப்பதில் விசுவாசம் என்ன பங்கை வகிக்கிறது?
17 மூன்றாவது உதவி, யெகோவா தேவனிடம் விசுவாசம். நீதிமொழிகள் 3:5, 6-லுள்ள அறிவுரைக்குக் கவனம் செலுத்த விசுவாசம் நமக்கு உதவி செய்யும்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” நாம் அநியாயமாக துன்பப்படுகிறோம் என்று தோன்றும்போது அல்லது நம்முடைய இனம் அல்லது தேசம் அல்லது தனிப்பட்டவர்களிடம் ஏற்பட்ட ஏதோவொரு கருத்துமுரண்பாடு காரணமாக நாம் வேறுபடுத்தப்பட்டவர்களாக உணரும்போது விசேஷமாக விசுவாசம் நமக்கு உதவி செய்யும். ஒரு மூப்பராக அல்லது ஓர் உதவி ஊழியராக சேவிக்க சிபாரிசு செய்யப்படாதபோது, சிலர் தாங்கள் தவறாக புறக்கணிக்கப்பட்டதாகவும் உணரக்கூடும். நமக்கு விசுவாசம் இருந்தால், யெகோவா அவருடைய குறித்த நேரத்தில் காரியங்களைச் சரிசெய்வதற்காக நாம் காத்திருப்போம். அதேநேரத்தில், நாம் பொறுமையுடன் சகித்திருக்கும் தன்மையை வளர்த்துக்கொள்வது அவசியமாய் இருக்கக்கூடும்.—புலம்பல் 3:26.
18. தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பிப்பதில் நமக்கு உதவும் நான்காவது காரியம் என்ன?
18 மனத்தாழ்மை நான்காவது உதவியாக இருக்கிறது. ஒரு மனத்தாழ்மையுள்ள ஆளுக்கு தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டுவது கஷ்டமாக இருப்பதில்லை ஏனென்றால், ‘மனத்தாழ்மையினாலே அவர் மற்றவர்களைத் தன்னைவிட மேன்மையானவர்களாகக் கருதுகிறார்.’ ஒரு மனத்தாழ்மையுள்ள ஆள் தன்னை ‘ஒரு சிறியவராக’ நடத்திக்கொள்ள மனமுள்ளவராய் இருக்கிறார். (பிலிப்பியர் 2:2-4; லூக்கா 9:48) ஆனால் ஒரு பெருமையுள்ள ஆள் கீழ்ப்பட்டிருப்பதை வெறுக்கிறார், அதைக்குறித்து எரிச்சல் அடைகிறார். அத்தகைய ஓர் ஆள், குறைக்கூறப்பட்டுப் பாதுகாக்கப்படுவதைவிட பாராட்டுதல்களால் கெடுக்கப்படுவதைத் தெரிந்துகொள்கிறார் என்பதாகச் சொல்லப்படுகிறது.
19. உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முன்னாள் தலைவர் மனத்தாழ்மைக்கான என்ன நல்ல உதாரணமாக இருந்தார்?
19 உவாட்ச் டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸையிட்டியின் இரண்டாம் தலைவராகிய ஜோசப் ரதர்ஃபோர்ட், மனத்தாழ்மைக்கும் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கும் ஒரு நல்ல உதாரணம் வகித்தார். ஹிட்லர் ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் வேலையைத் தடைசெய்தபோது, அவர்களுடைய கூட்டங்களுக்கும் பிரசங்க வேலைக்கும் தடைவிதிக்கப்பட்டதால் அவர்கள் என்ன செய்யவேண்டுமென சகோதரர்கள் அவருக்கு எழுதி கேட்டனர். அவர் இதை பெத்தேல் குடும்பத்திடம் கூறிவிட்டு, அவர்களை உட்படுத்தும் கடுமையான தண்டனைகளைக் குறிப்பாக கருத்தில்கொண்டு, அந்த ஜெர்மனியிலுள்ள சகோதரர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். அவர்களுக்கு என்ன சொல்வது என்று எவராவது அறிந்திருந்தால், அதைக் கேட்பதற்கு அவர் சந்தோஷப்படுவார் என்று அவர் கூறினார். என்னே ஒரு மனத்தாழ்மையான ஆவி!b
தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டுவதால் வரும் நன்மைகள்
20. தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டுவதால் என்ன ஆசீர்வாதங்கள் விளைகின்றன?
20 தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டுவதால் வரும் நன்மைகள் என்ன என்பதாக நன்றாகவே கேட்கப்படலாம். நிச்சயமாகவே, நிறைய நன்மைகள் உள்ளன. தன்னிச்சையாக நடப்பவர்கள் அனுபவிக்கும் கவலைகளையும் ஏமாற்றங்களையும் நாம் தப்பித்துக்கொள்வோம். நாம் யெகோவா தேவனுடன் ஒரு நல்ல உறவை அனுபவித்துக் களிப்போம். நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களுடன் மிகச் சிறந்த கூட்டுறவைக் கொண்டிருப்போம். மேலுமாக, நாம் சட்டத்துக்கு இசைவாக நடந்துகொள்வதால், உலகப்பிரகாரமான அதிகாரிகளுடன் தேவையற்ற தொந்தரவுகளை நாம் தவிர்க்கிறோம். கணவன்மார், மனைவிமாராக, பெற்றோர் மற்றும் பிள்ளைகளாக நாம் ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் அனுபவிக்கிறோம். மேலும், தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காத்துக்கொள்வதன்மூலமாக, நீதிமொழிகள் 27:11-ன் அறிவுரைக்கு இசைவாக நாம் செயல்படுகிறோம்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”
[அடிக்குறிப்புகள்]
a ஒரு பயனியர் ஊழியர் தன்னுடைய மனைவியின் மரியாதையையும் அன்பான ஆதரவையும் ஒரு மணமாகாத பயனியரிடம் பாராட்டிப்பேசினார். தன்னுடைய மனைவியின் மற்ற குணநலன்களைக் குறித்தும் அவருடைய நண்பர் ஏதாவது சொல்லியிருக்கவேண்டும் என்பதாக அந்த மணமாகாத பயனியர் நினைத்தார். ஆனால் சில வருடங்கள் கழித்து, அந்த மணமாகாத பயனியர் மணம்செய்தபின், திருமண சந்தோஷத்திற்கு மனைவியின் அன்பான ஆதரவு எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்ந்தார்.
b அதிக ஜெபத்திற்கும், கடவுளுடைய வார்த்தையின் படிப்பிற்கும் பின்னர், ஜோசப் ரதர்ஃபோர்ட், ஜெர்மனியிலுள்ள சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டிய பதிலைத் தெளிவாகக் கண்டார். அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்ய வேண்டாம் என்பதைச் சொல்லவேண்டியது அவருடைய உத்தரவாதம் அல்ல. கூட்டம் கூடுதல் மற்றும் சாட்சிகொடுத்தல் சம்பந்தமாக அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லும் கடவுளுடைய வார்த்தையை அவர்கள் கொண்டிருந்தனர். ஆகவே ஜெர்மனியிலுள்ள சகோதரர்கள் தலைமறைவாக இருந்தாலும், கூட்டம் கூடுதல் அவருடைய நாமம் மற்றும் ராஜ்யத்தைப்பற்றி சாட்சி கொடுக்கவேண்டும் என்ற யெகோவாவின் கட்டளைகளுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்து வந்தனர்.
விமரிசனக் கேள்விகள்
◻ தொடர்பு கொள்ளும் வழிகளாக கடவுள் எந்த மனிதர்களை பயன்படுத்தியுள்ளார், அவருடைய ஊழியர்கள் அவருக்கு எதைச் செய்ய கடன்பட்டிருக்கின்றனர்?
◻ என்ன பல்வேறு உறவுகளில் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் பொருந்துகிறது?
◻ தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பிப்பதற்கு என்ன குணங்கள் நமக்கு உதவி செய்யும்?
◻ தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் என்ன ஆசீர்வாதங்களில் விளைவடையும்?
[பக்கம் 16-ன் படம்]
கடவுள் தமது சித்தத்தைத் தமது மக்களுக்குத் தெரிவிக்கும்படியாக எருசலேமின் ஆலய அமைப்பைப் பயன்படுத்தினார்
[பக்கம் 18-ன் படம்]
நாம் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டக்கூடிய அம்சங்கள்