வசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”—மத்தேயு 7:21.
1. இயேசுவைப் பின்பற்றுபவர்கள் எதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்?
கேட்டுக் கொண்டேயிருங்கள். தேடிக்கொண்டேயிருங்கள். தட்டிக் கொண்டேயிருங்கள். ஜெபிப்பதிலும், படிப்பதிலும், மலைப்பிரசங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகளை செய்வதிலும் விடாமுயற்சியுடன் இருங்கள். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறார்கள் என்று சொல்கிறார், அவர்கள் உப்பினால் சாராமாக்கப்பட்ட பாதுகாக்கும் தன்மையுடைய ஒரு செய்தியை உடையவர்களாயிருக்கின்றனர், அது தன் சுவையையும், பாதுகாக்கும் தன்மையையும் இழந்து சுவையற்றுப் போகும்படி அவர்கள் அனுமதிக்கக்கூடாது. அவர்கள் உலகத்தின் வெளிச்சமாயிருக்கிறார்கள், அவர்கள் சொல்லும் காரியங்களினால் மட்டுமல்ல ஆனால் அவர்கள் செய்யும் காரியங்களிலும் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் யெகோவா தேவனிடமிருந்தும் வரும் வெளிச்சத்தை பிரதிபலிக்க வேண்டும். அவர்களுடைய நற்கிரியைகள் அவர்களுடைய அறிவூட்டும் வார்த்தைகளைப் போன்றே பிரகாசிக்கின்றன—அதிகமாக பேசி ஆனால் குறைவானதையே செய்யும் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பரிசேய மாய்மாலத்தனத்திற்கு பழக்கப்பட்டிருக்கும் ஓர் உலகில் அதிக சப்தமாகவும் பேசக்கூடும்.—மத்தேயு 5:13–16.
2 யாக்கோபு இவ்வாறு அறிவுறுத்துகிறான்: “அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.” (யாக்கோபு 1:22) ‘ஒரு முறை இரட்சிக்கப்பட்டவர்கள் எப்போதுமே இரட்சிக்கப்பட்டவர்கள்’ என்ற கோட்பாட்டோடு அநேகர் தங்களையே வஞ்சித்துக் கொள்கின்றனர், இப்போது அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, பரலோக வெகுமதிக்காக காத்திருப்பது போல நினைக்கின்றனர். அது ஒரு பொய்க்கோட்பாடும், வெறுமையான நம்பிக்கையுமாயிருக்கிறது. “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:13) நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் “மரணபரியந்தம் உண்மையாயிருக்க” வேண்டும்.—வெளிப்படுத்துதல் 2:10; எபிரெயர் 6:4–6; 10:26, 27.
3. நியாயந்தீர்ப்பதைப் பற்றிய என்ன அறிவுரையை இயேசு அடுத்து மலைப்பிரசங்கத்தில் கொடுக்கிறார்?
3 இயேசு தம் மலைப்பிரசங்கத்தை தொடர்ந்து சொல்கையில், கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டிய மேலுமான கூற்றுகள் அதிகரித்துக் கொண்டே சென்றன. எளிமையானதாக தோன்றும் ஒரு காரியம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அது எடுத்துப்போட வேண்டிய அதிக கடினமான மனப்பான்மைகளில் ஒன்றை கண்டனம் செய்கிறது: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின் படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டும் என்று சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போட வகைப்பார்ப்பாய்.”—மத்தேயு 7:1–5.
4. என்ன கூடுதலான அறிவுரையை லூக்காவின் பதிவு கொடுக்கிறது? அதை பொருத்துவது எதில் விளைவடையும்?
4 மலைப்பிரசங்கத்தில் லூக்காவின் பதிவில், மற்றவர்கள் பேரில் குறை கண்டுபிடிக்க வேண்டாம் என்று இயேசு தமக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பவர்களிடம் சொன்னார். மாறாக, “விடுதலை பண்ணுங்கள்” அதாவது, தங்கள் அயலானின் குறைபாடுகளை மன்னிக்க வேண்டும். இயேசு சொன்னபடி இது மற்றவர்கள் தயவாக பிரதிபலிக்கும்படி செய்விக்கும்: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.”—லூக்கா 6:37, 38.
5. நம்மிடம் இருக்கும் குறைகளைக் காட்டிலும் மற்றவர்களில் இருக்கும் குறைகளை காண்பது ஏன் அவ்வளவு சுலபமானதாயிருக்கிறது?
5 பொ.ச. முதலாம் நூற்றாண்டின் போது, வாய்மொழியான பாரம்பரியங்களின் காரணமாக பரிசேயர்கள் பொதுவாக மற்றவர்களை கடுமையாக நியாயந்தீர்த்தனர். இயேசுவுக்கு செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் எவருக்காவது அதை செய்வது பழக்கமாக இருந்தால் அதை நிறுத்த வேண்டும். நம்முடைய கண்களில் இருக்கும் உத்திரங்களை விட மற்றவர்கள் கண்களில் இருக்கும் துரும்பைப் பார்ப்பது அதிக சுலபமானதாயிருக்கும்—நம்முடைய பெருமித தன்மைக்கு திரும்பவும் நம்பிக்கையூட்டுவதாய் இருக்கும்! ஒரு மனிதன் இவ்வாறு சொன்னான், “மற்றவர்களை குறைகூறுவதை நான் விரும்புகிறேன், ஏனென்றால் அது நான் நல்லவிதமாக உணரும்படி செய்கிறது!” பழக்கமாக மற்றவர்களை கண்டிப்பது நாம் மறைக்க விரும்பும் நம்முடைய தவறுகளை ஈடுசெய்யும் சுயநீதியான உணர்வுகளை நமக்கு கொடுக்கக்கூடும். ஆனால் திருத்தம் தேவைப்படுமேயானால், அது சாந்தமான முறையில் கொடுக்கப்பட வேண்டும். திருத்துபவர் தன் சொந்த குறைகளைப் பற்றி எப்போதும் உணர்வுள்ளவராய் இருக்க வேண்டும்.—கலாத்தியர் 6:1.
நியாயந்தீர்ப்பதற்கு முன் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்
6. அவசியமாயிருக்கும் போது என்ன அடிப்படையில் நம்முடைய நியாயத்தீர்ப்புகள் செய்யப்பட வேண்டும்? அளவுக்கு அதிகமாக குறைகாண்பவர்களாக இல்லாதபடிக்கு என்ன உதவியை நாம் நாட வேண்டும்?
6 இயேசு உலகத்தை நியாயந்தீர்க்க வரவில்லை, ஆனால் அதை இரட்சிக்கவே வந்தார். அவர் செய்த எந்த நியாயத்தீர்ப்பும் அவருடைய சொந்தமானதாக இல்லை, ஆனால் கடவுள் அவருக்கு பேசக் கொடுத்த வார்த்தைகளின் பேரில் சார்ந்திருந்தது. (யோவான் 12:47–50) நாம் செய்யும் எந்தத் தீர்மானமும்கூட யெகோவாவின் வார்த்தைக்கு இசைவாக இருக்க வேண்டும். குற்றம்கண்டுபிடிக்கும் மனித இயல்பை நாம் ஒழித்துவிட வேண்டும். இதை செய்வதற்கு, யெகோவாவின் உதவிக்காக நாம் விடாப்பிடியாக ஜெபிக்க வேண்டும்: “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” (மத்தேயு 7:7, 8) இயேசுவும்கூட இவ்வாறு சொன்னார்: “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.”—யோவான் 5:30.
7. பொன்விதியை கடைப்பிடிப்பதற்கு நமக்கு உதவியாயிருக்கும் என்ன பழக்கத்தை நாம் வளர்க்க வேண்டும்?
7 ஜனங்களை நியாயந்தீர்க்கும் பழக்கத்தையல்ல, ஆனால் நம்மை அவர்களுடைய இடத்தில் வைத்துப் பார்ப்பதன் மூலம் அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டிய பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்—இதை செய்வது ஓர் எளிய காரியம் அல்ல, ஆனால் இயேசு அடுத்து அறிவித்த பொன்விதியின்படி வாழ வேண்டுமென்றால் இது அவசியமான ஒரு காரியமாகும்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” (மத்தேயு 7:12) ஆகையால் இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மற்றவர்களின் மன சம்பந்தமான, உணர்ச்சி சம்பந்தமான மற்றும் ஆவிக்குரிய நிலையை கண்டுணர்ந்து அதற்கு உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவி செய்வதில் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். (பிலிப்பியர் 2:2–4) பல வருடங்களுக்குப் பின்பு பவுல் இவ்வாறு எழுதினான்: “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”—கலாத்தியர் 5:14.
8. என்ன இரண்டு பாதைகளை இயேசு கலந்தாலோசித்தார்? பெரும்பான்மையான ஜனங்கள் அவைகளில் ஒன்றை ஏன் தேர்ந்தெடுக்கின்றனர்?
8 “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும் வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) அந்நாட்களில் இருந்த அநேகர் அழிவுக்குச் செல்லும் பாதையை தேர்ந்தெடுத்தனர், இன்றும் அநேகர் அவ்வாறு தான் இருக்கின்றனர். விசாலமான வழி ஜனங்கள் அவர்கள் விரும்பும்படி சிந்திக்கவும், அவர்கள் விரும்பும்படி வாழவும் அனுமதிக்கிறது: சட்டங்கள் இல்லை, பொறுப்புகள் இல்லை, ஓய்வான வாழ்க்கை முறை, எல்லா காரியங்களும் சுலபம். “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” என்பதெல்லாம் அவர்களுக்கில்லை!—லூக்கா 13:24.
9. இடுக்கமான பாதை வழியாய் நடப்பது எதை கேட்பதாய் இருக்கிறது? அதில் நடப்பவர்களுக்கு இயேசு என்ன எச்சரிப்பு கொடுக்கிறார்?
9 ஆனால் இடுக்கமான வாசல் தான் நித்திய ஜீவனுக்கு செல்லும் பாதையை திறந்து வைக்கிறது. அது தன்னடக்கத்தை கேட்கும் ஒரு போக்காக இருக்கிறது. அது ஒருவேளை சிட்சையை உட்படுத்தி உங்களுடைய உள்நோக்கங்களை சோதித்துப் பார்த்து உங்கள் ஒப்புக்கொடுத்தலின் மனவுறுதியை சோதிக்கும். துன்புறுத்தல்கள் வரும் போது பாதை கரடுமுரடாகிறது, அது சகிப்புத்தன்மையை தேவைப்படுத்துகிறது. இந்தப் பாதையில் நடப்பவரை இயேசு இவ்வாறு எச்சரிக்கிறார்: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.” (மத்தேயு 7:15) இந்த விவரிப்பு பரிசேயர்களுக்கு சரியாக பொருந்தினது. (மத்தேயு 23:27, 28) அவர்கள் “மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்,” மனிதரின் பாரம்பரியங்களை பின்பற்றிக் கொண்டு கடவுளுக்காக பேசுவதாக உரிமைப்பாராட்டி வந்தனர்.—மத்தேயு 23:2.
பரிசேயர்கள் எவ்வாறு “ராஜ்யத்தை பூட்டிப் போடுகிறார்கள்”
10. என்ன திட்டவட்டமான விதத்தில் வேதபாரகரும் பரிசேயர்களும் ‘மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறார்கள்’?
10 மேலும், இடுக்கமான வாசல் வழியாய் பிரவேசிக்க நாடுபவர்களை யூத மதத்தலைவர்கள் தடைசெய்ய முயன்றனர். “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்க போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.” (மத்தேயு 23:13) பரிசேயர்களுடைய முறை இயேசு எச்சரித்தது போலவே இருந்தது. அவர்கள் “மனுஷகுமாரன் நிமித்தமாக அவர்களுடைய [அவருடைய சீஷர்கள்] நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடுவார்கள்.” (லூக்கா 6:22) இயேசுவால் குணப்படுத்தப்பட்ட குருடனாக பிறந்த மனிதன் இயேசுவை மேசியா என்று நம்பினதால், ஜெப ஆலயத்திலிருந்து அவனை புறம்பே தள்ளினார்கள். ஜெப ஆலயத்திலிருந்து புறம்பே தள்ளப்படுவார்கள் என்ற பயத்தினால் அவனுடைய பெற்றோர்கள் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்தார்கள். அதே காரணத்துக்காக, இயேசுவை மேசியா என்று நம்பின மற்றவர்கள் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள தயங்கினர்.—யோவான் 9:22, 34; 12:42; 16:2.
11. அடையாளங் காட்டும் என்ன கனிகளை கிறிஸ்தவமண்டல குருமார் பிறப்பிக்கின்றனர்?
11 “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று இயேசு சொன்னார். “அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.” (மத்தேயு 7:16–20) அதே நியதி இன்றைக்கும் பொருந்துகிறது. கிறிஸ்தவ மண்டல குருமார்களில் அநேகர் ஒரு காரியத்தை சொல்வர், ஆனால் வேறொரு காரியத்தை செய்வர். பைபிளை போதிக்கிறோம் என்று அவர்கள் உரிமை பாராட்டினாலும், திரித்துவம், நரக அக்கினி போன்ற தேவதூஷணங்களை ஆதரிக்கின்றனர். மற்றவர்கள் மீட்கும் பொருளை மறுதலிக்கின்றனர், படைப்புக்குப் பதிலாக பரிணாமத்தை பிரசங்கிக்கின்றனர், மேலும் அவர்களுடைய செவிகளுக்கு இனிமையாக இருக்கும் பிரசங்கத்தையும் நவீன இசையையும் பயன்படுத்துகின்றனர். பரிசேயர்களைப் போன்று இன்றுள்ள குருமார்களில் அநேகர் பணப்பிரியராய், ஆயிரக்கணக்கான ரூபாய்களை தங்கள் மந்தைகளிடமிருந்து பறிக்கின்றனர். (லூக்கா 16:14) எல்லாரும் “கர்த்தாவே, கர்த்தாவே” என்று கூச்சலிடுகின்றனர், ஆனால் அவர்களுக்கு இயேசுவின் பிரதிபலிப்பு இவ்வாறு இருந்தது: “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்.”—மத்தேயு 7:21–23.
12. ஒரு சமயம் இடுக்கமான பாதையில் நடந்த சிலர் ஏன் அவ்வாறு செய்வதை நிறுத்திவிட்டிருக்கிறார்கள்? என்ன விளைவுகளுடன்?
12 ஒரு சமயம் இடுக்கமான பாதையில் நடந்துகொண்டிருந்த சிலர், இப்போது அவ்வாறு செய்வதை நிறுத்தி விட்டிருக்கின்றனர். அவர்கள் யெகோவாவை நேசிக்கிறோம் என்று சொல்கின்றனர், ஆனால் பிரசங்கிக்க வேண்டும் என்ற அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் இருக்கின்றனர். அவர்கள் இயேசுவை நேசிக்கிறோம் என்று சொல்கின்றனர், ஆனால் அவருடைய ஆடுகளை போஷிப்பதில்லை. (மத்தேயு 24:14; 28:19, 20; யோவான் 21:15–17; 1 யோவான் 5:3) இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பவர்களோடு இணைந்திருக்க அவர்கள் விரும்புவதில்லை. இடுக்கமான வாசல் அதிக இடுக்கமானதாக இருத்ததாக அவர்கள் கண்டனர். நன்மை செய்வதில் அவர்கள் சோர்வடைந்தனர், ஆகையால் “அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே.” (1 யோவான் 2:19) அவர்கள் இருட்டுக்குள் திரும்பிச் சென்றனர், “அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கிறது!” (மத்தேயு 6:23) யோவானின் வேண்டுகோளை அவர்கள் புறக்கணித்தனர்: “என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக் கடவோம்.”—1 யோவான் 3:18.
13, 14. நம்முடைய வாழ்க்கையில் அவருடைய வார்த்தைகளைப் பொருத்துவதைப் பற்றி என்ன உவமையை இயேசு கொடுத்தார்? பலஸ்தீனாவில் இருந்தவர்களுக்கு அது ஏன் அவ்வளவு பொருத்தமானதாயிருந்தது?
13 இயேசு தம் மலைப்பிரசங்கத்தை மனதில் பதிகிற ஓர் உவமையோடு முடித்தார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.”—மத்தேயு 7:24, 25.
14 பலஸ்தீனாவில் வறண்ட நீரோட்ட பள்ளத்தாக்குகளில் பலத்த மழை தண்ணீரை கீழே பாயச் செய்து அழிவுண்டாக்கும் திடீர் வெள்ளங்களை ஏற்படுத்தும். வீடுகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அவைகள் உறுதியான பாறையின் மேல் அஸ்திபாரமிடப்பட்டிருப்பது அவசியம். அந்த மனிதன் “ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போட்டான்” என்று லூக்காவின் பதிவு காண்பிக்கிறது. (லூக்கா 6:48) அது கடினமான வேலையாயிருந்தது, ஆனால் புயல் வீசிய போது அது நிலைத்து நின்றது. இயேசுவின் வார்த்தைகளின் பேரில் கிறிஸ்தவ குணாதிசயங்களை வளர்ப்பது, இன்னல் என்ற திடீர் வெள்ளம் வரும்போது பலனளிக்கக்கூடியதாயிருக்கும்.
15. இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக மனிதர்களின் பாரம்பரியங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு என்ன விளைவு ஏற்படும்?
15 அடுத்த வீடு மணல் மீது கட்டப்பட்டது: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதின போது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.” “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லிக்கொண்டு, இயேசுவின் வார்த்தைகளின்படி செய்யாதவர்களுக்கு அப்படியே இருக்கும்.—மத்தேயு 7:26, 27.
“வேதபாரகரைப் போல் அல்லாமல்”
16. மலைப்பிரசங்கத்தை கேட்டவர்களுக்கு என்ன பாதிப்பு இருந்தது?
16 மலைப்பிரசங்கத்தின் விளைவு என்ன? “இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்த போது, அவர் வேதபாரகரைப் போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத்தேயு 7:28, 29) அவர்கள் இதுவரை உணர்ந்திராத அதிகாரத்தோடு பேசிய அவரால் அவர்கள் முற்றிலும் கிளர்ச்சியுற்றனர்.
17. வேதபாரகர் தங்கள் போதனைகளை ஏற்கும்படிச் செய்ய என்ன செய்யவேண்டும்? மேற்கோள் காண்பிக்கப்பட்ட மரித்துப்போன சாதுக்களைப் பற்றி அவர்கள் என்ன உரிமைப்பாராட்டினார்கள்?
17 இந்தச் சரித்திர பதிவு காண்பிக்கிறபடி எந்த வேதபாரகனும் தன் சொந்த அதிகாரத்தின் பேரில் பேசியதில்லை. “வேதபாரகர் தங்கள் கோட்பாட்டுக்கான மதிப்பை பாரம்பரியங்களிலிருந்தும் முற்பிதாக்களிடமிருந்தும் கடன் வாங்கினர்: ரபீக்களுக்கு இப்படி ஒரு பாரம்பரியம் இருக்கிறது அல்லது ஞானிகள் இப்படி சொல்லுகின்றனர் என்று மேற்கோள் காட்டாவிட்டால் . . . எந்த வேதபாரகனின் பிரசங்கத்துக்கும் எவ்வித அதிகாரமோ மதிப்போ கிடையாது. மகா ஹில்லேல் உண்மையாக கற்பித்தான், ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்தை பற்றிய விஷயம் அது. ‘ஆனால் தான் முழுவதும் அதைக் குறித்து பேசியும் . . . அவனுடைய போதனையை அவர்கள் ஏற்கவில்லை. இறுதியில் அவன் நான் இதை ஷெமியா மற்றும் அப்டாலியனிடம் [ஹில்லேலுக்கு முன்பிருந்த அதிகாரம் பெற்றவர்கள்] இதை கேட்டறிந்தேன் என்று சொன்ன பிறகே ஏற்றனர்.” (டால்முட் மற்றும் இப்ராயிகாவிலுள்ள புதிய ஏற்பாட்டின் பேரில் விளக்கவுரை, ஜான் லைட் புட் எழுதியது) பரிசேயர்கள் வெகு காலத்துக்கு முன்பே மரித்துவிட்டிருந்த சாதுக்கள் சொல்லியதென கூட உரிமைப்பாராட்டினர்: “நீதிமான்களின் உதடுகள், அவர்களுடைய பெயரில் எவராவது ஒருவர் சட்டத்தின் போதனையை மேற்கோள் காண்பிக்கையில்—அவர்களுடைய உதடுகள் கல்லறையில் அவர்களோடுகூட முணுமுணுக்கின்றன.”—தோரா—வளர்ந்து வரும் யூதேய மதத்தில் சுருளிலிருந்து சின்னம் வரையாக.
18. (எ) வேதபாரகரின் போதகத்துக்கும் இயேசுவின் போதகத்துக்கும் இடையே என்ன வித்தியாசம் இருந்தது? (பி) என்ன வழிகளில் இயேசுவின் போதகம் முதன்மையானதாக இருந்தது?
18 வேதபாரகர் இறந்துபோன மனிதரின் வார்த்தைகளை அதிகாரப்பூர்வமானதாக மேற்கோள் காட்டினர்; இயேசுவோ ஜீவனுள்ள தேவனுடைய அதிகாரத்தின் பேரில் பேசினார். (யோவான் 12:49, 50; 14:10) ரபீக்கள் மூடப்பட்டிருந்த நீர்த்தொட்டிகளிலிருந்து பழைய நீரை இறைத்தனர்; உள்ளார்ந்த தாகத்தை திருப்தி செய்த தூய்மையான நீரின் ஊற்றுகளை இயேசு கொண்டு வந்தார். அவர் இரா முழுவதும் ஜெபித்து ஆழ்ந்து தியானித்தார். அவர் பேசிய போது இதற்கு முன் அவர்கள் அறிந்திராத அளவுக்கு ஜனங்களின் ஆழத்தை அவர் தொட்டார். அவர்கள் உணரும் அளவான வல்லமையோடு அவர் பேசினார், வேதபாரகர், பரிசேயர்கள், சதுசேயர்களும்கூட இறுதியில் சவால்விட பயந்தனர். (மத்தேயு 22:46; மாற்கு 12:34; லூக்கா 20:40) இதைப் போன்று வேறு எந்த மனிதனும் பேசியதில்லை! பிரசங்கத்தின் முடிவில் ஜனக்கூட்டத்தார் வியப்படைந்த நிலையில் இருந்தனர்.
19. இன்று யெகோவாவின் சாட்சிகளால் உபயோகிக்கப்படும் சில கற்பிக்கும் முறைகள் எவ்வாறு மலைப்பிரசங்கத்தில் இயேசுவால் உபயோகப்படுத்தப்பட்ட முறைகளுக்கு ஒத்ததாய் இருக்கிறது?
19 இப்போது எப்படி? வீட்டுக்கு–வீடு ஊழியர்களாக, யெகோவாவின் சாட்சிகள் இதே போன்ற முறைகளை பயன்படுத்துகின்றனர். ஒரு வீட்டுக்காரர் உங்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “பூமி எரிக்கப்படும் என்று என்னுடைய சர்ச் சொல்கிறது.” நீங்கள் இவ்வாறு பிரதிபலிப்பீர்கள்: “உங்களுடைய சொந்த கிங் ஜேம்ஸ் பைபிள் பிரசங்கி 1:4-ல் இவ்வாறு வாசிக்கிறது: ‘பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.’” அந்த நபர் ஆச்சரியப்படுகிறார். “ஏன், அது என் பைபிளில் இருந்தது என்று எனக்குத் தெரியாது!” மற்றொருவர் சொல்கிறார்: “பாவிகள் நரக அக்கினியில் எரிக்கப்படுவார்கள் என்று நான் எப்போதும் கேட்டிருக்கிறேன்.” “ஆனால் உங்களுடைய சொந்த பைபிளே ரோமர் 6:23-ல் இவ்வாறு சொல்கிறது: ‘பாவத்தின் சம்பளம் மரணம்.’” அல்லது திரித்துவத்தின் பேரில்: “இயேசுவும் அவருடைய பிதாவும் சமமாயிருக்கின்றனர் என்று என் பிரசங்கியார் சொல்கிறார்.” “ஆனால் யோவான் 14:28-ல் உங்களுடைய பைபிள் இயேசு இவ்வாறு சொல்வதாக குறிப்பிடுகிறது: ‘என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.’” மற்றொரு நபர் உங்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “கடவுளுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.” உங்களுடைய பிரதிபலிப்பு: “தானியேல் 2:44-ல் உங்களுடைய பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.’ அது எவ்வாறு உங்களுக்குள் இருக்கும்?”
20. (எ) சாட்சிகளின் கற்பிக்கும் முறைக்கும் கிறிஸ்தவமண்டல குருமார்களின் கற்பிக்கும் முறைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? (பி) இப்போது எதை செய்வதற்கான நேரமாக இருக்கிறது?
20 கடவுளிடமிருந்து வந்த அதிகாரத்தோடு இயேசு பேசினார். யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையின் அதிகாரத்தோடு பேசுகின்றனர். கிறிஸ்தவ மண்டல குருமார் பாபிலோன், எகிப்து ஆகிய இடங்களிலிருந்து வந்த கோட்பாடுகளினால் கறைப்படுத்தப்பட்ட மத சம்பந்தமான பாரம்பரியங்களை பேசுகின்றனர். உண்மை மனதுள்ள ஆட்கள் தங்கள் நம்பிக்கைகளை பைபிள் தவறென காட்டுகிறது என்பதைக் கேட்டால் அவர்கள் ஆச்சரியப்பட்டு இவ்வாறு சொல்கின்றனர்: ‘அது என் பைபிளில் இருந்தது என்பதை நான் அறியவில்லை!’ ஆனால் அது பைபிளில் இருக்கிறது. தங்கள் ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் அனைவரும் மலைப்பிரசங்கத்தில் உள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்பதற்கு இதுவே காலமாயிருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம் நிலைத்து நிற்கக்கூடிய கற்பாறையான அஸ்திபாரத்தின் மேல் கட்டுங்கள். (w90 10/1)
விமர்சன கேள்விகள்
◻ நியாயந்தீர்ப்பதற்கு பதிலாக, நாம் என்ன செய்ய முயற்சி செய்ய வேண்டும்? ஏன்?
◻ ஏன் இன்று அநேகர் அகலமான பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்?
◻ இயேசு போதித்த முறை வேதபாரகர் போதித்த முறையிலிருந்து ஏன் அவ்வளவு வித்தியாசமானதாக இருந்தது?
◻ மலைப்பிரசங்கத்தை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு என்ன பாதிப்பு இருந்தது?
2. யாக்கோபு என்ன புத்திமதி கொடுக்கிறான்? ஆனால் என்ன செளகரியமான நிலையை சிலர் தவறாக மேற்கொள்கின்றனர்?