அதிகாரம் 110
ஆலயத்தில் இயேசுவின் கடைசி நாள்
மத்தேயு 23:25–24:2 மாற்கு 12:41–13:2 லூக்கா 21:1-6
மதத் தலைவர்களை இயேசு கண்டனம் செய்கிறார்
ஆலயம் அழிக்கப்படும்
ஏழை விதவை இரண்டு சிறிய காசுகளைப் போடுகிறாள்
ஆலயத்துக்கு கடைசியாகப் போயிருக்கிற இந்தச் சமயத்திலும், வேத அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் வெளிவேஷத்தை இயேசு அம்பலப்படுத்துகிறார். அவர்களை வெளிவேஷக்காரர்கள் என்று வெளிப்படையாகவே கண்டிக்கிறார். “கிண்ணத்தையும் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் சுத்தம் செய்கிறீர்கள், ஆனால் உட்புறத்தில் அவை பேராசையாலும் கட்டுக்கடங்காத ஆசைகளாலும் நிறைந்திருக்கின்றன. குருட்டுப் பரிசேயனே, கிண்ணத்தையும் பாத்திரத்தையும் முதலாவது உள்ளே சுத்தம் செய், அப்போது அது வெளியிலும் சுத்தமாகும்” என்று உதாரணத்தோடு சொல்கிறார். (மத்தேயு 23:25, 26) தூய்மைச் சடங்கு செய்வதற்கும் தங்களுடைய வெளித்தோற்றத்துக்கும் பரிசேயர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தங்கள் இதயத்தை அவர்கள் சுத்தப்படுத்துவதில்லை.
தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டி அவற்றை அலங்கரிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதுவும்கூட அவர்கள் வெளிவேஷக்காரர்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால், அவர்கள் “தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களுடைய பிள்ளைகள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 23:31) இயேசுவைக் கொல்ல முயற்சி செய்வதன் மூலம் இது உண்மை என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டார்கள்.—யோவான் 5:18; 7:1, 25.
இந்த மதத் தலைவர்கள் மனம் திருந்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை இயேசு அடுத்ததாகச் சொல்கிறார். “பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே, கெஹென்னாவின் தண்டனையிலிருந்து நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?” என்று கேட்கிறார். (மத்தேயு 23:33) கெஹென்னா என்பது இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. இது குப்பைகள் எரிக்கப்படுகிற இடம். பொல்லாத வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் வரப்போகிற நிரந்தர அழிவுக்கு இது பொருத்தமான அடையாளமாக இருக்கிறது.
இயேசுவின் சீஷர்கள் அவரால் அனுப்பப்பட்ட ‘தீர்க்கதரிசிகளாகவும் ஞானிகளாகவும் போதகர்களாகவும்’ இருக்கிறார்கள். மதத் தலைவர்கள் அவர்களை என்ன செய்வார்கள்? ‘[என் சீஷர்களில்] சிலரை நீங்கள் கொலை செய்வீர்கள், மரக் கம்பங்களில் அறைவீர்கள், உங்கள் ஜெபக்கூடங்களில் முள்சாட்டையால் அடிப்பீர்கள், நகரத்துக்கு நகரம் போய்த் துன்புறுத்துவீர்கள். இதனால், நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல், நீங்கள் கொலை செய்த சகரியாவின் இரத்தம்வரை, உலகத்தில் கொல்லப்பட்ட எல்லா நீதிமான்களுடைய கொலைப்பழிக்கும் நீங்கள் ஆளாவீர்கள்’ என்று மதத் தலைவர்களிடம் இயேசு சொல்கிறார். பிறகு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் இந்தத் தலைமுறைமேல் நிச்சயம் வரும்” என்று எச்சரிக்கிறார். (மத்தேயு 23:34-36) கி.பி. 70-ல், ரோமப் படைவீரர்கள் எருசலேமை அழித்து, ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்றுபோட்டபோது இது நிறைவேறியது.
இந்தப் பயங்கரமான சூழ்நிலையை நினைத்துப் பார்க்கும்போதே இயேசுவுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. அதனால், “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவளே, உன்னிடம் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொன்றவளே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளின் கீழே கூட்டிச்சேர்ப்பதுபோல் நான் உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்க எத்தனையோ தடவை ஆசைப்பட்டேன்! ஆனால் மக்களே, நீங்கள் அதை விரும்பவில்லை. இதோ! உங்கள் வீடு ஒதுக்கித்தள்ளப்பட்டு உங்களிடமே விடப்படும்” என்று வருத்தத்தோடு சொல்கிறார். (மத்தேயு 23:37, 38) “வீடு” என்று எதைச் சொல்கிறார் என்று அங்கிருக்கிற மக்கள் யோசித்திருக்கலாம். எருசலேமில் இருக்கிற பிரமாண்டமான ஆலயத்தை கடவுள் பாதுகாப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஒருவேளை, அந்த ஆலயத்தைத்தான் “வீடு” என்று இயேசு குறிப்பிடுகிறாரா?
பிறகு அவர், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், ‘யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!’ என்று நீங்கள் சொல்லும்வரை இனி ஒருபோதும் என்னைப் பார்க்க மாட்டீர்கள்” என்கிறார். (மத்தேயு 23:39) சங்கீதம் 118:26-ல், “யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர். நாங்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்து உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிக்கிறோம்” என்று பதிவு செய்யப்பட்டிருக்கிற தீர்க்கதரிசன வார்த்தைகளைத்தான் அவர் இங்கே குறிப்பிடுகிறார். இந்த ஆலயம் அழிக்கப்பட்ட பிறகு, கடவுளை வணங்க யாருமே இங்கே வர மாட்டார்கள்.
ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிற பகுதிக்கு இயேசு இப்போது போகிறார். அந்தப் பெட்டிகளின் மேல் இருக்கிற சிறிய திறப்புகள் வழியாக மக்கள் காணிக்கைகளைப் போடுவார்கள். யூதர்களில் பலர், அங்கே காணிக்கை போடுவதை இயேசு பார்க்கிறார். பணக்காரர்கள் பலர் “நிறைய காசுகளை” போடுகிறார்கள். அந்தச் சமயத்தில், ஒரு ஏழை விதவை வந்து, “மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை” போடுவதை அவர் பார்க்கிறார். (மாற்கு 12:41, 42) அவள் கொடுத்த காணிக்கையைப் பார்த்து கடவுள் ரொம்பச் சந்தோஷப்பட்டிருப்பார் என்பது இயேசுவுக்குத் தெரியும்.
அவர் தன் சீஷர்களைக் கூப்பிட்டு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், காணிக்கைப் பெட்டிகளில் மற்ற எல்லாரும் போட்டதைவிட இந்த ஏழை விதவைதான் அதிகமாகப் போட்டாள்” என்று சொல்கிறார். அது எப்படி? “அவர்கள் எல்லாரும் தங்கள் தேவைக்கு அதிகமாக இருந்ததைத்தான் போட்டார்கள்; ஆனால், இவள் தனக்குத் தேவையிருந்தும், தன்னிடமிருந்த எல்லாவற்றையும், தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள்” என்று விளக்குகிறார். (மாற்கு 12:43, 44) எண்ணத்திலும் செயலிலும், இந்த விதவைக்கும் மதத் தலைவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
நிசான் 11-ஆம் தேதி அன்று இயேசு கடைசி தடவையாக ஆலயத்திலிருந்து புறப்படுகிறார். அப்போது அவருடைய சீஷர்களில் ஒருவர், “போதகரே, பாருங்கள்! எவ்வளவு அழகான கற்கள், எவ்வளவு அழகான கட்டிடங்கள்!” என்கிறார். (மாற்கு 13:1) ஆலய மதில்களில் இருக்கிற சில கற்கள் மிகப் பெரிதாக இருக்கின்றன. அதனால், இந்த மதில்களை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று நிறைய பேர் யோசித்திருக்கலாம். ஆனால் இயேசு அவரிடம், “பிரமாண்டமான இந்தக் கட்டிடங்களையா பார்க்கிறாய்? ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாமே நிச்சயமாகத் தரைமட்டமாக்கப்படும்” என்கிறார்; அதைக் கேட்டபோது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.—மாற்கு 13:2.
இவற்றைச் சொன்ன பிறகு, இயேசு தன்னுடைய சீஷர்களோடு கீதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து, ஒலிவ மலைமேல் ஏறிப் போகிறார். ஒரு இடத்தில், இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களான பேதுருவும் அந்திரேயாவும் யாக்கோபும் யோவானும் மட்டும் தனியாக இருக்கிறார்கள். அங்கிருந்து, அந்தப் பிரமாண்டமான ஆலயத்தை அவர்களால் பார்க்க முடிகிறது.