கிறிஸ்துவின் பிரசன்னம் —அதன் அர்த்தம் என்ன?
“இவையெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்திற்கும் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம் என்ன?”—மத். 24:3, NW.
1. சுவாரஸ்யமான என்ன கேள்வியை இயேசுவின் அப்போஸ்தலர் கேட்டார்கள்?
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. ஒலிவமலையின்மேல் நான்கு அப்போஸ்தலர் தங்களுடைய எஜமானராகிய இயேசுவிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார்கள். “இவையெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்திற்கும் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம் என்ன?” என்று அவர்கள் கேட்டார்கள். (மத். 24:3, NW) தாங்கள் கேட்ட இந்தக் கேள்வியில் சுவாரஸ்யமான இரண்டு விஷயங்களை அப்போஸ்தலர் குறிப்பிட்டார்கள். ஒன்று, ‘உங்களுடைய பிரசன்னம்’ மற்றொன்று, ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்.’ இந்தச் சொற்றொடர்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
2. ‘இறுதிக்கட்டம்’ என்ற பதம் எதைக் குறிக்கிறது?
2 அப்போஸ்தலர் குறிப்பிட்ட இரண்டாவது விஷயத்தை முதலில் எடுத்துக்கொள்வோம். ‘இறுதிக்கட்டம்’ என்ற இந்தப் பதம் ஸின்டேலியா என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாக இருக்கிறது. புதிய உலக மொழிபெயர்ப்பில் இந்த வார்த்தை எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் ‘இறுதிக்கட்டம்’ என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதோடு சம்பந்தப்பட்ட டெலாஸ் என்ற கிரேக்க வார்த்தை ‘முடிவு’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பதங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள, ராஜ்ய மன்றத்தில் கொடுக்கப்படும் ஒரு பேச்சை நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். பேச்சின் இறுதிக்கட்டம் என்பது பேச்சின் இறுதி பாகத்தைக் குறிக்கிறது. அந்தச் சமயத்தில், பேச்சாளர் அதுவரை சபையாருடன் கலந்தாலோசித்த விஷயங்களை கொஞ்ச நேரம் மறுபார்வை செய்வார். அந்த விஷயங்கள் சபையாருக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதையும் விளக்குவார். ஆனால், பேச்சின் முடிவு என்பதோ பேச்சை முடித்துவிட்டு பேச்சாளர் மேடையிலிருந்து இறங்கி செல்வதைக் குறிக்கிறது. அதுபோலவே, பைபிளின்படி, ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்’ என்பது முடிவுக்கு வழிநடத்தும் காலக்கட்டத்தையும் முடிவையும் குறிக்கிறது.
3. இயேசுவின் பிரசன்னத்தின்போது சம்பவிக்கும் சில காரியங்கள் யாவை?
3 அப்போஸ்தலர் கேட்ட கேள்வியில் ‘பிரசன்னம்’ எதைக் குறிக்கிறது? பிரசன்னம் என்ற வார்த்தை பரோஸியா என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாக இருக்கிறது.a கிறிஸ்துவின் பரோஸியா அதாவது, பிரசன்னம் 1914-ல் இயேசு பரலோகத்தில் ராஜாவாக முடிசூட்டப்பட்டபோது ஆரம்பித்தது. ‘மிகுந்த உபத்திரவத்தில்’ கெட்ட ஜனங்களை அழிப்பதற்கு அவர் வரும்வரை அது தொடர்கிறது. (மத். 24:21) இயேசுவின் இந்தப் பிரசன்னத்தின்போது துன்மார்க்கமான இந்தச் சகாப்தத்தின் ‘கடைசி நாட்கள்’ உட்பட வித்தியாசமான அநேக காரியங்கள் சம்பவிக்கும். அப்போது, தெரிந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்த்தல், பரலோக வாழ்க்கைக்கு அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுதல் ஆகியவை சம்பவிக்கும். (2 தீ. 3:1; 1 கொ. 15:23; 1 தெ. 4:15-17; 2 தெ. 2:1) கிறிஸ்துவின் பிரசன்னம் (பரோஸியா) என்று அழைக்கப்படும் காலப்பகுதியும் ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தை’ (ஸின்டேலியா) உள்ளடக்கும் காலப்பகுதியும் ஒரே சமயத்தைக் குறிக்கிறது எனலாம்.
ஒரு நீண்ட காலப்பகுதி
4. இயேசுவின் பிரசன்னம் எவ்வாறு நோவாவின் நாட்களில் நடந்த சம்பவங்களோடு ஒத்திருக்கிறது?
4 பரோஸியா என்ற வார்த்தை நீண்ட காலப்பகுதியைக் குறிக்கிறது என்ற உண்மை, தம் பிரசன்னம் சம்பந்தமாக இயேசு சொன்னவற்றோடு ஒத்திருக்கிறது. (மத்தேயு 24:37-39-ஐ வாசிக்கவும்.) நோவாவின் நாட்களில் ஜலப்பிரளயம் வந்த அந்தக் குறுகிய காலப்பகுதியுடன் மட்டும் இயேசு தம் பிரசன்னத்தை ஒப்பிடவில்லை; ஆனால், ஜலப்பிரளயத்திற்கு வழிநடத்தின நீண்ட காலப்பகுதியுடன் அதை ஒப்பிட்டார் என்பதைக் கவனியுங்கள். ஜலப்பிரளயம் வரும்வரையாக நோவா பேழையைக் கட்டியதும், அவர் பிரசங்கித்ததும் அந்தக் காலப்பகுதியில் உட்படுகின்றன. இந்தச் சம்பவங்கள் பல பத்தாண்டுகளாக நடந்துவந்தன. அதுபோலவே, கிறிஸ்துவின் பிரசன்னமும் மிகுந்த உபத்திரவத்திற்கு வழிநடத்தும் சம்பவங்களையும் மிகுந்த உபத்திரவத்தையும் உட்படுத்துகிறது.—2 தெ. 1:6-9.
5. இயேசுவின் பிரசன்னம் நீண்ட காலப்பகுதியை உட்படுத்துகிறது என்பதை, வெளிப்படுத்துதல் ஆறாம் அதிகாரத்தில் பதிவாகியுள்ள வார்த்தைகள் எவ்வாறு சுட்டிக்காட்டுகின்றன?
5 கிறிஸ்துவின் பிரசன்னம் என்பது வெறுமனே கெட்ட ஜனங்களை அழிப்பதற்கு அவர் வருவதை குறிப்பதில்லை, மாறாக நீண்ட காலப்பகுதியைக் குறிக்கிறது என்பதை பைபிளின் மற்ற தீர்க்கதரிசனங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இயேசு ஒரு வெள்ளை குதிரைமீது சவாரி செய்வதாகவும், அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டதாகவும் வெளிப்படுத்துதல் புத்தகம் விவரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 6:1-8-ஐ வாசிக்கவும்.) 1914-ல் இயேசு ராஜாவாக முடிசூட்டப்பட்ட பிறகு, ‘ஜெயிக்கிறவராகவும் ஜெயிப்பவராகவும் புறப்பட்டார்’ என அதில் சித்தரிக்கப்படுகிறார். வெவ்வேறு நிற குதிரைகள்மீது சவாரி செய்பவர்கள் அவரைப் பின்தொடர்வதாக அந்தப் பதிவு மேலும் சொல்கிறது. இந்தச் சித்தரிப்பு போர், உணவு பற்றாக்குறை, கொள்ளைநோய் ஆகியவற்றை தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கிறது. இவை எல்லாமே ‘கடைசி நாட்கள்’ என்று அழைக்கப்படும் நீண்ட காலப்பகுதியில் சம்பவித்திருக்கின்றன. இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நம்முடைய காலங்களில் நாம் பார்க்கிறோம்.
6. கிறிஸ்துவின் பிரசன்னத்தைப்பற்றி புரிந்துகொள்ள வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரம் எவ்வாறு உதவுகிறது?
6 கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக கூடுதல் தகவல்களை வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரம் அளிக்கிறது. காணக்கூடாத விதத்தில் பரலோகத்தில் நடந்த யுத்தத்தைப்பற்றி அதில் நாம் வாசிக்கிறோம். பரலோகத்தில் மிகாவேல் என்று அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவும் அவருடைய தேவதூதர்களும் சேர்ந்து பிசாசுக்கும் அவனுடைய பேய்களுக்கும் எதிராகப் போரிட்டார்கள். அதன் விளைவாக, பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய்ப் பட்டாளமும் பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். அந்தச் சமயத்தில், ‘பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து’ மிகுந்த கோபங்கொண்டவனாய் இருப்பதாக அந்தப் பதிவு சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:7-12-ஐ வாசிக்கவும்.) அப்படியானால், பரலோகத்தில் கிறிஸ்துவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு பூமிக்கும் அதில் குடியிருப்பவர்களுக்கும் “ஐயோ” என்று சொல்லுமளவு ஆபத்தான காலப்பகுதி ஆரம்பிக்கும் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
7. இரண்டாவது சங்கீதம் எதைக் குறித்து பேசுகிறது, யாருக்கு என்ன வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக அது சொல்கிறது?
7 பரலோக சீயோன் மலைமீது இயேசு, ராஜாவாக ஸ்தாபிக்கப்படுவதைக் குறித்து இரண்டாவது சங்கீதமும் தீர்க்கதரிசனமாக உரைக்கிறது. (சங்கீதம் 2:5-9; 110:1, 2-ஐ வாசிக்கவும்.) பூமியின் ஆட்சியாளர்களுக்கும், அவர்களுடைய குடிமக்களுக்கும் கிறிஸ்துவின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிற ஒரு காலப்பகுதியைக் குறித்தும் இந்த சங்கீதம் சுட்டிக்காட்டுகிறது. அந்தக் காலப்பகுதியில், அவர்கள் ‘விவேகமடைந்து . . . எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளும்படி’ [திருத்திய மொழிபெயர்ப்பு] அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆம், இந்த அறிவுரையின்படி, யெகோவாவுக்கும் அவர் நியமித்திருக்கும் ராஜாவுக்கும் சேவை செய்வதன்மூலம் அவரை [கடவுளை] “அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.” அரசதிகாரத்தோடு இயேசு பிரசன்னமாயிருக்கும்போது பூமியின் ஆட்சியாளர்களும் அவர்களுடைய குடிமக்களும் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.—சங். 2:10-12.
அடையாளத்தைப் புரிந்துகொள்ளுதல்
8, 9. கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குரிய அடையாளத்தையும் அதன் அர்த்தத்தையும் யார் புரிந்துகொள்வார்கள்?
8 கடவுளுடைய ராஜ்யம் எப்போது வரும் என்று பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டபோது, அவர்கள் நினைத்தபடி “பிரத்தியட்சமாய்” அதாவது, பளிச்சென்று தெரியும் விதத்தில் வராது என்று அவர் கூறினார். (லூக். 17:20, 21) அவிசுவாசிகளால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அவர்கள்தான் இயேசுவை தங்களுடைய வருங்கால ராஜாவாகவே ஏற்றுக்கொள்ளவில்லையே! அப்படியானால், யார்தான் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குரிய அடையாளத்தையும் அதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்வார்கள்?
9 இயேசு மேலுமாகச் சொன்னதைக் கவனியுங்கள். “மின்னல் வானத்தின் ஒரு திசையில்தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல” அந்தளவு தெளிவாக தம் பிரசன்னத்தின் அடையாளத்தை தமது சீஷர்கள் பார்ப்பார்கள் என்று அவர் சொன்னார். (லூக்கா 17:24-29-ஐ வாசிக்கவும்.) இயேசு கிறிஸ்து தம் பிரசன்னத்தின் அடையாளத்தைக் குறித்துதான் பேசினார் என்பதை மத்தேயு 24:23-27-லுள்ள பதிவு இன்னும் தெளிவாக்குகிறது.
இந்த அடையாளத்தைப் பார்க்கிற சந்ததி
10, 11. (அ) மத்தேயு 24:34-ல் பதிவாகியுள்ள “சந்ததி” என்ற வார்த்தைக்கு, முன்பு என்ன விளக்கம் கொடுக்கப்பட்டது? (ஆ) அந்தச் “சந்ததி”யில் யாரெல்லாம் உட்படுவார்கள் என்று இயேசுவின் சீஷர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்?
10 மத்தேயு 24:34-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘இந்தச் சந்ததி,’ முதல் நூற்றாண்டில், அன்று வாழ்ந்த ‘மனந்திருந்தாத யூதர்களின் கூட்டத்தைக்’ குறித்ததாக முன்பு இந்தப் பத்திரிகை விளக்கியது.b இந்த விளக்கம் நியாயமாகத் தோன்றியது. ஏனெனில், பைபிள் பதிவுகள் காட்டுகிறபடி எங்கெல்லாம் “சந்ததி” என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தினாரோ அங்கெல்லாம் அவர் அதை நல்ல அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. அநேக இடங்களில் அந்தச் சந்ததியைப்பற்றி குறிப்பிடும்போது “பொல்லாத” போன்ற எதிர்மறையான வார்த்தைகளை அதோடு சேர்த்து குறிப்பிட்டார். (மத். 12:39; 17:17; மாற். 8:38) எனவே, நவீனகால நிறைவேற்றத்தில், ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தை’ (ஸின்டேலியா) குறிப்பிட்டுக் காட்டும் அம்சங்களை மட்டுமல்லாமல், இந்தச் சகாப்தத்தின் முடிவையும் (டெலாஸ்) பார்க்கப்போகும் அவிசுவாசிகளான பொல்லாத “சந்ததி”யையே இயேசு, “இந்தச் சந்ததி” என்று குறிப்பிட்டதாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
11 தம்முடைய காலத்தில் வாழ்ந்த பொல்லாத மக்களைப்பற்றி பேசுகையில் அல்லது பொல்லாத மக்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் “சந்ததி” என்ற வார்த்தையை இயேசு எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால், மத்தேயு 24:34-ல் பதிவாகியுள்ள “சந்ததி”யையும் அவர் அதே அர்த்தத்தில்தான் குறிப்பிட்டார் என்று சொல்லமுடியுமா? இயேசுவின் நான்கு சீஷர்கள் மட்டுமே “தனித்துவந்து” அவரிடம் பேசினார்கள் என்பதை நினைவுபடுத்தி பாருங்கள். (மத். 24:3) அவர்களிடம் பேசியபோது, “இந்தச் சந்ததி”யைப்பற்றி விவரிப்பதற்காக எதிர்மறையான வார்த்தைகளை இயேசு பயன்படுத்தவில்லை. எனவே, ‘இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே ஒழிந்துபோகாத’ அந்தச் “சந்ததி”யின் பாகமாக தாங்களும் தங்கள் சக சீஷர்களும் இருப்பார்கள் என்றே அந்த அப்போஸ்தலர் புரிந்துகொண்டிருப்பார்கள்.
12. “சந்ததி” என்று குறிப்பிட்டபோது இயேசு யாரைக் குறித்து பேசினார் என்பதை சூழமைவிலிருந்து நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
12 எதன் அடிப்படையில் நாம் அந்த முடிவுக்கு வரலாம்? அந்த வசனத்தின் சூழமைவை கவனமாகச் சிந்திப்பதன் மூலமே. மத்தேயு 24:32, 33-ல் பதிவாகியுள்ளபடி இயேசு கூறியதாவது: ‘அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.’ (மாற்கு 13:28-30; லூக்கா 21:30-32-ஐ ஒப்பிடவும்.) இவ்வாறு கூறிய பிறகு மத்தேயு 24:34-ல் வாசிக்கிறபடி, ‘இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று அவர் சொன்னார்.
13, 14. “சந்ததி” என்று இயேசு கூறியபோது தம் சீஷர்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நாம் எப்படிச் சொல்லலாம்?
13 சீக்கிரத்தில் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படவிருந்த தம்முடைய சீஷர்கள்தான் “இவைகளையெல்லாம்” பார்க்கையில் அவற்றின் அர்த்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என்று இயேசு கூறினார். அதுமட்டுமல்ல, “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று” இயேசு கூறியபோது அவர் தம்முடைய சீஷர்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
14 அவிசுவாசிகளைப் போல் அல்லாமல், இயேசுவின் சீஷர்களோ அடையாளத்தை பார்ப்பதோடு அவற்றின் அர்த்தத்தையும் புரிந்துகொள்வார்கள். அந்த அடையாளத்தின் பல அம்சங்களிலிருந்து ‘கற்றுக்கொள்வதோடு’ அதன் உண்மையான அர்த்தத்தையும் ‘அறிந்துகொள்வார்கள்.’ “அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்” என்பதை இவர்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். இயேசு கூறிய இந்த வார்த்தைகள் முதல் நூற்றாண்டில், சிறிய அளவில் நிறைவேறியதை அவிசுவாசிகளான யூதர்களும் அபிஷேகம் செய்யப்பட்ட விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களும் பார்த்தார்கள் என்பது உண்மைதான். என்றாலும், அந்தச் சமயத்தில் வாழ்ந்த இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களால் மட்டுமே இந்தச் சம்பவங்களைப் பார்த்து கற்றுக்கொள்ள முடிந்தது; அதாவது, தாங்கள் பார்த்த காரியங்களின் உண்மையான அர்த்தத்தை கிரகித்துக்கொள்ள முடிந்தது.
15. (அ) இயேசு குறிப்பிட்ட அந்த நவீனகால “சந்ததி” யார்? (ஆ) “இந்தச் சந்ததி”யின் காலப்பகுதி எவ்வளவு நீண்டதாக இருக்கும் என்பதை நம்மால் ஏன் திட்டவட்டமாகக் கணக்கிட முடிவதில்லை? (பக்கம் 25-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
15 இன்று கடவுளுடைய சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள், இயேசுவின் பிரசன்னத்திற்குரிய அடையாளம் எவ்விதத்திலும் “பிரத்தியட்சமாய்” அதாவது பளிச்சென தெரியும் வகையில் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து எல்லாமே அப்படியே தொடருவதாக சொல்கிறார்கள். (2 பே. 3:4) மறுபட்சத்தில், கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள சகோதரர்களோ, அதாவது நவீனகால யோவான் வகுப்பாரோ, இந்த அடையாளத்தை மின்னலின் பிரகாசத்தைப் போல் தெளிவாகக் கண்டிருக்கிறார்கள், அதன் உண்மையான அர்த்தத்தையும் புரிந்திருக்கிறார்கள். ஒரு தொகுதியாய் இந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே” ஒழிந்துபோகாத, நவீனகால “சந்ததி”யாக இருக்கிறார்கள்.c அப்படியானால், முன்னுரைக்கப்பட்ட மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது, கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களில் சிலர், இந்தப் பூமியில் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்பதை இது தெளிவாக்குகிறது.
“விழித்திருங்கள்”
16. கிறிஸ்துவின் எல்லா சீஷர்களும் என்ன செய்ய வேண்டும்?
16 ஆனால், அடையாளத்தைக் கண்டுகொள்வது மட்டுமே போதாது. ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்’ என்று இயேசு கூறினார். (மாற். 13:37) நாம் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி திரள் கூட்டத்தாராக இருந்தாலும் சரி, நாம் அனைவருமே விழித்திருக்க வேண்டியுள்ளது. 1914-ஆம் வருடம் பரலோகத்தில் இயேசு ராஜாவாக முடிசூட்டப்பட்டு இப்போது 90-க்கும் அதிகமான வருடங்கள் கடந்துவிட்டன. என்றாலும் நாம் விழித்திருக்க வேண்டும். நமக்கு ஒருவேளை கடினமாக இருந்தாலும், நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். காணக்கூடாத விதத்தில் கிறிஸ்து அரசராக ஆட்சி செய்கிறார் என்பதை புரிந்துகொள்வது அதைச் செய்ய நமக்கு உதவுகிறது. “[நாம்] நினையாத நேரத்தில்,” இயேசு தம்முடைய விரோதிகளை அழிப்பதற்கு சீக்கிரத்தில் வருவார் என்பதை நினைவில் வைக்கவும் அது உதவுகிறது.—லூக். 12:40.
17. கிறிஸ்துவின் பிரசன்னத்தை புரிந்திருப்பது எதைச் செய்ய நமக்கு உதவுகிறது? என்ன செய்ய நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
17 கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் அர்த்தத்தை நாம் புரிந்திருப்பது நம்முடைய அவசரத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இயேசுவின் பிரசன்னம் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது என்றும் 1914 முதல் அவர் பரலோகத்தில் காணக்கூடாத விதத்தில் ராஜாவாக ஆட்சி செய்துவருகிறார் என்றும் நமக்குத் தெரியும். பொல்லாத ஜனங்களை அழிப்பதற்கு சீக்கிரத்தில் அவர் வருவார். பூமி முழுவதிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறார். எனவே, இயேசு நமக்கு முன்னறிவித்த வேலையில் முன்பைவிட அதிக உற்சாகமாய் ஈடுபட நாம் திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும். இயேசு முன்னறிவித்த அந்த வேலை இதுவே: ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு (டெலாஸ்) வரும்.’—மத். 24:14.
[அடிக்குறிப்புகள்]
a இதைக் குறித்து விவரமாகத் தெரிந்துகொள்ள வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 676-9-ஐக் காண்க.
c “இந்தச் சந்ததி” வாழும் காலப்பகுதி, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள முதல் தரிசனம் நிறைவேறும் காலப்பகுதியுடன் ஒத்திருப்பதாகத் தெரிகிறது. (வெளி. 1:10–3:22) கர்த்தருடைய நாளின் இந்த அம்சம், 1914-ல் ஆரம்பித்து, அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் கடைசி நபர் மரித்து உயிர்த்தெழுப்பப்படும் வரையாக நீடிக்கும்.—வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது புத்தகம், பக்கம் 24-ல் பாரா 4-ஐக் காண்க.
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• இயேசுவின் பிரசன்னம் நீண்ட காலப்பகுதியைக் குறிக்கிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?
• இயேசுவுடைய பிரசன்னத்தின் அடையாளத்தையும் அதன் அர்த்தத்தையும் யார் புரிந்துகொள்கிறார்கள்?
• மத்தேயு 24:34-ல் குறிப்பிடப்பட்டுள்ள நவீனகால சந்ததி யாரைக் குறிக்கிறது?
• “இந்தச் சந்ததி”யின் திட்டவட்டமான காலப்பகுதியை நம்மால் ஏன் கணக்கிட முடிவதில்லை?
[பக்கம் 25-ன் பெட்டி]
“இந்தச் சந்ததி”யின் காலப்பகுதியை நம்மால் கணக்கிட முடியுமா?
“சந்ததி” எனும் வார்த்தை பொதுவாக ஒரு காலக்கட்டத்தில் அல்லது ஒரு சம்பவம் நடக்கையில் வாழும் பல வயதைச் சேர்ந்த மக்களைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு, யாத்திராகமம் 1:6 இவ்வாறு சொல்கிறது: ‘யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் (அதாவது, சந்ததியார்) எல்லாரும் மரணமடைந்தார்கள்.’ யோசேப்பும் அவருடைய சகோதரர்களும் வயதில் வித்தியாசப்பட்டவர்களாக இருந்தார்கள், என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் அனைவருக்கும் ஒரேவிதமான அனுபவங்கள் இருந்தன. யோசேப்புக்கு முன்பு பிறந்த சிலரும் ‘அந்தத் தலைமுறையில்’ அதாவது, சந்ததியில் இருந்தார்கள். இவர்களில் சிலர் யோசேப்பு இறந்த பிறகும் வாழ்ந்தார்கள். (ஆதி. 50:24) “அந்தத் தலைமுறை”யை அதாவது, சந்ததியைச் சேர்ந்த மற்றவர்கள், உதாரணத்திற்கு, பென்யமீன் போன்றவர்கள் யோசேப்புக்கு பிறகு பிறந்தவர்கள்; அவர்கள் யோசேப்பு இறந்த பிறகும் வாழ்ந்திருக்கலாம்.
எனவே, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களைக் குறிப்பதற்கு “சந்ததி” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகையில், அது எவ்வளவு காலம் நீண்டதாக இருக்கும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது. ஆனால், அந்தக் காலக்கட்டத்திற்கு ஒரு முடிவு இருக்கிறது, அந்தக் காலப்பகுதி அளவுக்கதிகமாக நீண்டுகொண்டு போகாது என்று மட்டுமே சொல்ல முடியும். ஆகவே, மத்தேயு 24:34-ல் “இந்தச் சந்ததி” என்று இயேசு குறிப்பிட்டபோது, கடைசிநாட்கள் எப்போது முடிவடையும் என்பதை தம் சீஷர்கள் கணக்கிடுவதற்கு ஒரு வழிமுறையாக அதைக் கொடுக்கவில்லை. மாறாக, “அந்த நாளையும் அந்த நாழிகையையும்” அவர்களால் தெரிந்துகொள்ள முடியாது என்பதை அவர் வலியுறுத்திக் காட்டினார்.—2 தீ. 3:1, மத். 24:36.
[பக்கம் 22, 23-ன் படம்]
1914-ல் இயேசு ராஜாவாக முடிசூட்டப்பட்ட பிறகு, ‘ஜெயிக்கிறவராக’ சித்தரிக்கப்படுகிறார்
[பக்கம் 24-ன் படம்]
‘இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது’