‘சந்தோஷமுள்ள கடவுளை’ வணங்கும் மக்கள் சந்தோஷமானவர்கள்!
“யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள்!”—சங். 144:15
1. யெகோவாவின் சாட்சிகளால் மட்டும் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடிகிறது? (ஆரம்பப் படம்)
யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப ரொம்பச் சந்தோஷமானவர்கள்! கூட்டங்கள், மாநாடுகள், ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடும் சமயங்கள் என அவர்கள் எங்கே கூடினாலும் சரி, ஒருவருக்கொருவர் சந்தோஷமாகப் பேசிக்கொள்கிறார்கள். அவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்க முடிகிறது? ‘சந்தோஷமுள்ள கடவுளான’ யெகோவாவை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள், அவரை வணங்குகிறார்கள், அவரைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அதனால்தான், அவர்களால் சந்தோஷமாக இருக்க முடிகிறது. (1 தீ. 1:11; சங். 16:11) சந்தோஷம் யெகோவாவிடமிருந்துதான் வருகிறது! நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். அதற்காக, ஏராளமான விஷயங்களைச் செய்திருக்கிறார்.—உபா. 12:7; பிர. 3:12, 13.
2, 3. (அ) சந்தோஷமாக இருப்பது என்றால் என்ன? (ஆ) சந்தோஷமாக இருப்பது ஏன் இன்று கஷ்டமாக இருக்கிறது?
2 நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? சந்தோஷமாக இருப்பதென்றால், மனநிறைவோடு இருப்பதையும், நம்மிடம் இருப்பதை வைத்துத் திருப்தியோடு வாழ்வதையும், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதையும் குறிக்கிறது. யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமென்று பைபிள் சொல்கிறது. ஆனால், இன்றிருக்கும் உலகத்தில் சந்தோஷமாக இருப்பது பெரும்பாடாக இருக்கிறது. ஏன்?
3 மோசமான சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது சந்தோஷமாக இருப்பது ரொம்பவே கஷ்டம்! உதாரணத்துக்கு, நம் அன்பானவர்கள் இறந்துபோகும்போது அல்லது சபை நீக்கம் செய்யப்படும்போது... விவாகரத்து ஆகும்போது... வேலை பறிபோகும்போது... வீடு போர்க்களமாக ஆகும்போது... கூடப்படிப்பவர்களோ கூடவேலை செய்பவர்களோ கேலி கிண்டல் செய்யும்போது... யெகோவாவுக்குச் சேவை செய்வதால் துன்புறுத்தப்படும்போது அல்லது சிறையில் போடப்படும்போது... உடல்நிலை மோசமாகிக்கொண்டே போகும்போது... தீராத வியாதியால் கஷ்டப்படும்போது... மனச்சோர்வால் அவதிப்படும்போது... நம் சந்தோஷம் காணாமல் போய்விடலாம். ஆனால், ‘சந்தோஷமானவரும், ஒரே மாமன்னருமான’ இயேசு மக்களை ஆறுதல்படுத்தினார், சந்தோஷப்படுத்தினார்; அதையெல்லாம் அவர் விருப்பப்பட்டுச் செய்தார். (1 தீ. 6:15; மத். 11:28-30) சாத்தானுடைய இந்த உலகத்தில் நமக்கு நிறைய பிரச்சினைகள் வருவதால் சந்தோஷமாக இருப்பது கஷ்டம்தான்! ஆனால், பிரச்சினைகள் மத்தியிலும் சந்தோஷமாக இருப்பதற்கு உதவும் சில குணங்களைப் பற்றி இயேசு தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் சொன்னார்.
யெகோவா இல்லாமல் நமக்கு சந்தோஷம் இல்லை
4, 5. சந்தோஷமாக இருப்பதற்கும், அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?
4 இயேசு சொன்ன முதல் விஷயம் முக்கியமானது! “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது” என்று அவர் சொன்னார். (மத். 5:3) ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருந்தால், நாம் ஒரு உண்மையைப் புரிந்துகொள்வோம். அதாவது, கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வது ரொம்பவே முக்கியம் என்பதையும், நமக்கு அவருடைய உதவியும் வழிநடத்துதலும் அவசியம் என்பதையும் புரிந்துகொள்வோம். பைபிளைத் தவறாமல் படித்தால்... கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்... அவருடைய வணக்கத்துக்கு முதலிடம் கொடுத்தால்... நமக்கு ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசி இருக்கிறது என்பதைக் காட்டுவோம். இப்படிச் செய்யும்போது, நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். அதோடு, கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் சீக்கிரத்தில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் பலமாகும். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் அந்த “சந்தோஷமான எதிர்பார்ப்பு,” நம்மை உற்சாகப்படுத்தும்.—தீத். 2:13.
5 வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும், தொடர்ந்து சந்தோஷத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவோடு இருக்கும் நட்பைப் பலப்படுத்திக்கொண்டே இருங்கள்! “நம் எஜமானுடைய சேவையில் எப்போதும் சந்தோஷமாக இருங்கள். மறுபடியும் சொல்கிறேன், சந்தோஷமாக இருங்கள்!” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலி. 4:4) யெகோவாவின் நெருங்கிய நண்பராக இருக்க வேண்டுமென்றால், நமக்கு தெய்வீக ஞானம் தேவை. அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஞானத்தைக் கண்டுபிடிப்பவனும், பகுத்தறிவைப் பெறுகிறவனும் சந்தோஷமானவன். அதை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது வாழ்வளிக்கிற மரம் போன்றது. அதை உறுதியாகப் பிடித்துக்கொள்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—நீதி. 3:13, 18.
6. சந்தோஷத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்?
6 சந்தோஷத்தைத் தக்கவைத்துக்கொள்ள நாம் இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். அதாவது, பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்! இப்படிச் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரியவைக்க இயேசு இப்படிச் சொன்னார்: “இதையெல்லாம் இப்போது தெரிந்துகொண்டீர்கள், ஆனால் இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்.” (யோவா. 13:17; யாக்கோபு 1:25-ஐ வாசியுங்கள்.) நம்முடைய ஆன்மீகப் பசியைத் திருப்தி செய்யவும், சந்தோஷத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் நாம் இயேசுவின் அறிவுரைக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆனால், நம் சந்தோஷத்தைக் கெடுக்கும் நிறைய விஷயங்கள் நம்மைச் சுற்றியிருக்கும்போது நம்மால் எப்படித் தொடர்ந்து சந்தோஷமாக இருக்க முடியும்? மலைப் பிரசங்கத்தில் இயேசு என்ன சொன்னார் என்று பார்க்கலாம்.
சந்தோஷமாக இருப்பதற்குத் தேவையான குணங்கள்
7. துக்கப்படுகிறவர்களால் சந்தோஷமாக இருக்க முடியுமென்று எப்படிச் சொல்லலாம்?
7 “துக்கப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.” (மத். 5:4) ‘துக்கப்படுறவங்களால எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?’ என்று நாம் யோசிக்கலாம். ஆனால், துக்கப்படுகிற எல்லாரையும் பற்றி இயேசு இங்கு சொல்லவில்லை. ஏனென்றால், ‘சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கிற’ இந்த “கடைசி நாட்களில்,” பொல்லாத மக்கள்கூட பயங்கரப் பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள். (2 தீ. 3:1) இப்படிப்பட்டவர்கள் தங்களைப் பற்றியே யோசிக்கிறார்கள். கடவுளோடு நட்பு வைத்துக்கொள்வதைப் பற்றி அவர்கள் யோசிப்பதே கிடையாது. அதனால், அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. இதிலிருந்து, ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருப்பவர்களை மனதில் வைத்துதான் இயேசு பேசினார் என்பது தெரிகிறது. நிறைய பேர் கடவுளை வெறுத்து ஒதுக்குவதையும், அவர் சொல்வதன்படி வாழ விரும்பாததையும் நினைத்து இவர்கள் துக்கப்படுகிறார்கள். அதோடு, தங்களுக்கு இருக்கும் பாவ இயல்பையும் உலகத்தில் நடக்கிற அநியாயங்களையும் பார்த்து இவர்கள் துக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை யெகோவா கவனிக்கிறார். தன்னுடைய வார்த்தையின் மூலம் அவர்களுக்கு ஆறுதல் தருகிறார். அதோடு, சந்தோஷத்தையும் வாழ்வையும் தருகிறார்.—எசேக்கியேல் 5:11-ஐயும் 9:4-ஐயும் வாசியுங்கள்.
8. சந்தோஷமாக இருக்க சாந்த குணம் எப்படி உதவும்?
8 “சாந்தமாக இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.” (மத். 5:5) சந்தோஷமாக இருக்க சாந்த குணம் எப்படி உதவும்? இந்த உலகத்தில் இருக்கிற பெரும்பாலான மக்கள், முரட்டுத்தனமாகவும் வெறித்தனமாகவும் நடந்துகொள்கிறார்கள்; அது பிரச்சினையில்தான் போய் முடிகிறது. இப்படிப்பட்டவர்கள், சத்தியத்தைக் கற்றுக்கொண்டதும் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்; “புதிய சுபாவத்தை” அணிந்துகொள்கிறார்கள். “கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் பொறுமையையும்” காட்டுகிறார்கள். (கொலோ. 3:9-12) அதனால், அவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கிறது. மற்றவர்களோடு சமாதானமாக இருக்கிறார்கள்; சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், பைபிள் சொல்வதுபோல் “பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”—சங். 37:8-10, 29.
9. (அ) சாந்த குணமுள்ளவர்களுக்கு இந்தப் பூமி சொந்தமாகும் என்று எந்த அர்த்தத்தில் இயேசு சொன்னார்? (ஆ) நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் எப்படிச் சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்?
9 சாந்த குணமுள்ளவர்களுக்கு இந்தப் பூமி சொந்தமாகும் என்று சொன்னபோது, இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது, இந்தப் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும். (வெளி. 20:6) பரலோக நம்பிக்கை இல்லாத கோடிக்கணக்கான மக்களைப் பற்றி என்ன சொல்லலாம்? பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்களும் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் பரிபூரணமானவர்களாக இருப்பார்கள்; சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள். இந்த இரண்டு விதமான நம்பிக்கையுள்ளவர்களைப் பற்றி இயேசு இப்படியும் சொன்னார்: “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்.” (மத். 5:6) எல்லா அக்கிரமத்தையும் யெகோவா நீக்கும்போது, நீதியின் மேல் இவர்களுக்கு இருக்கும் பசிதாகம் தீரும். (2 பே. 3:13) புதிய உலகத்தில், நீதிமான்கள் சந்தோஷமாக இருப்பார்கள். ஏனென்றால், மோசமான செயல்களைச் செய்வதற்கு, பொல்லாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதனால், துக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்காது.—சங். 37:17.
10. இரக்கம் காட்டுவது என்றால் என்ன?
10 “இரக்கம் காட்டுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு இரக்கம் கிடைக்கும்.” (மத். 5:7) இரக்கம் காட்டுவது என்றால், கனிவான பாசத்தோடும் கரிசனையோடும் நடந்துகொள்வது என்று அர்த்தம். அதாவது, ஒருவர் படும் வேதனையைப் பார்த்து மனம் உருகுவது என்று அர்த்தம். அதேசமயத்தில், இரக்கம் என்பது வெறுமனே ஓர் உணர்ச்சி மட்டுமே அல்ல. பைபிளைப் பொறுத்தவரை, மற்றவர்களுக்கு உதவுவதற்காக எதையாவது செய்வதும் இரக்கம் காட்டுவதில் உட்பட்டிருக்கிறது.
11. நல்ல சமாரியனைப் பற்றிய உவமையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
11 லூக்கா 10:30-37-ஐ வாசியுங்கள். இரக்கம் காட்டுவது என்றால் என்ன என்பதை ஓர் உவமையின் மூலம் இயேசு அழகாக விளக்கினார். நல்ல சமாரியனைப் பற்றிய உவமைதான் அது! வேதனையில் தவித்துக்கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தபோது அந்தச் சமாரியனின் மனம் உருகியது. அவனுக்கு அந்தளவுக்கு கரிசனையும் இரக்கமும் இருந்ததால், அந்த மனிதனுக்கு உதவ அவன் விரும்பினான். அந்த உவமையைச் சொன்ன பிறகு, “நீயும் போய் அதேபோல் நடந்துகொள்” என்று இயேசு சொன்னார். அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: “நானும் அதே மாதிரி நடந்துக்குறேனா? அந்த சமாரியன் செஞ்ச மாதிரியே நானும் செய்றேனா? மத்தவங்க கஷ்டப்படுறப்போ, அவங்களுக்கு உதவுறதுக்கு என்னால முடிஞ்சதையெல்லாம் செய்றேனா? உதாரணத்துக்கு, சபையில இருக்குற வயசானவங்க... துணையை இழந்து தவிக்கிறவங்க... சத்தியத்தில தனியா இருக்குற பிள்ளைங்க... இவங்களுக்கெல்லாம் நான் எப்படி உதவலாம்? ‘மனச்சோர்வால வாடுறவங்ககிட்ட ஆறுதலா பேசறதுக்கு’ நான் என்ன செய்யலாம்?”—1 தெ. 5:14; யாக். 1:27.
12. மற்றவர்களுக்கு இரக்கம் காட்டினால் நமக்குச் சந்தோஷம் கிடைக்குமென்று எப்படிச் சொல்லலாம்?
12 இரக்கம் காட்டினால் நமக்குச் சந்தோஷம் கிடைக்குமா? கண்டிப்பாக! ஏனென்றால், இரக்கம் காட்டும்போது நாம் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கிறோம். அப்படிக் கொடுக்கும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்குமென்று இயேசு சொன்னார். அதுமட்டுமல்ல, நாம் யெகோவாவின் மனதையும் சந்தோஷப்படுத்துவோம். (அப். 20:35; எபிரெயர் 13:16-ஐ வாசியுங்கள்.) இரக்கம் காட்டுவதால் கிடைக்கும் ஆசீர்வாதத்தைப் பற்றி தாவீது இப்படிச் சொன்னார்: “[இரக்கம் காட்டுகிறவனை] யெகோவா . . . பாதுகாத்து, உயிரோடு வைப்பார். இந்தப் பூமியில் அவன் சந்தோஷமானவன் என்று புகழப்படுவான்.” (சங். 41:1, 2) இரக்கம், கரிசனை போன்ற குணங்களைக் காட்டும்போது யெகோவாவும் நமக்கு இரக்கம் காட்டுவார். அதோடு, நம்மால் என்றென்றும் சந்தோஷமாக இருக்க முடியும்.—யாக். 2:13.
சுத்தமான இதயமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்—எப்படி?
13, 14. இதயத்தை ‘சுத்தமாக’ வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்?
13 “சுத்தமான இதயமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளைப் பார்ப்பார்கள்.” (மத். 5:8) இதயம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால், நம்முடைய யோசனைகளையும் விருப்பங்களையும் தூய்மையானதாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது ரொம்பவே முக்கியம். ஏனென்றால், நம்முடைய இதயம் சுத்தமாக இருந்தால்தான் யெகோவா நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்வார்.—2 கொரிந்தியர் 4:2-ஐ வாசியுங்கள்; 1 தீ. 1:5.
14 சுத்தமான இதயமுள்ளவர்களால் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும். “தங்கள் அங்கிகளைத் துவைத்தவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று அவரே சொல்லியிருக்கிறார். (வெளி. 22:14) ‘அங்கிகளைத் துவைப்பது’ என்றால் என்ன? பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, யெகோவாவின் பார்வையில் சுத்தமானவர்களாக இருப்பதையும், பரலோகத்தில் சாவாமையைப் பெற்றுக்கொள்ளப் போவதையும், என்றென்றும் சந்தோஷத்தை அனுபவிக்கப் போவதையும் அது அர்த்தப்படுத்துகிறது. பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய திரள் கூட்டத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? யெகோவாவின் பார்வையில் நீதிமான்களாக இருப்பதையும், அதன் மூலம் அவருடைய நண்பர்களாக இருக்கும் வாய்ப்பைப் பெறுவதையும் அது அர்த்தப்படுத்துகிறது. ஏனென்றால், இவர்களும் “தங்களுடைய உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியவர்கள்.”—வெளி. 7:9, 13, 14.
15, 16. சுத்தமான இதயமுள்ளவர்கள் எந்த அர்த்தத்தில் “கடவுளைப் பார்ப்பார்கள்”?
15 “என்னைப் பார்க்கிற எந்த மனுஷனும் உயிரோடு இருக்க முடியாது” என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (யாத். 33:20) அப்படியென்றால், சுத்தமான இதயமுள்ளவர்களால் எப்படி ‘கடவுளைப் பார்க்க’ முடியும்? ‘பார்ப்பது’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைக்கு, கற்பனை செய்வது, புரிந்துகொள்வது அல்லது நன்றாகத் தெரிந்துகொள்வது என்றும் அர்த்தம். அதனால், ‘கடவுளை மனக்கண்களால் பார்ப்பது’ என்பது, கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்வதையும், அவருடைய அருமையான குணங்களை நேசிப்பதையும் குறிக்கிறது. (எபே. 1:18) யெகோவாவின் குணங்களை இயேசு அச்சுப்பிசகாமல் அப்படியே வெளிக்காட்டினார். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று அவரால் சொல்ல முடிந்தது.—யோவா. 14:7-9.
16 யெகோவா எப்படியெல்லாம் நமக்கு உதவுகிறார் என்பதை உணரும்போதும், நாம் அவரைப் ‘பார்க்கிறோம்.’ (யோபு 42:5) சுத்தமான இதயமுள்ளவர்களுக்காகவும், தனக்கு உண்மையாக சேவை செய்பவர்களுக்காகவும் யெகோவா என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்ற விஷயத்தின் மேல் நம் கவனத்தை ஒருமுகப்படுத்தும்போதும் நாம் அவரைப் ‘பார்க்கிறோம்’. ஆனால், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், உயிர்த்தெழுந்து பரலோகத்துக்குப் போன பிறகு யெகோவாவை நேரடியாகவே பார்ப்பார்கள்.—1 யோ. 3:2.
பிரச்சினைகள் மத்தியிலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்
17. சமாதானம் பண்ணுவதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?
17 அடுத்து, “சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:9) மற்றவர்களோடு சமாதானம் பண்ணுவதற்கு நாம் முதலில் முயற்சி செய்யும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கும். “சமாதானம் பண்ணுகிறவர்களுக்காக சமாதானச் சூழலில் நீதியின் விதை விதைக்கப்பட்டு, அதன் கனி அறுவடை செய்யப்படுகிறது” என்று சீஷரான யாக்கோபு எழுதினார். (யாக். 3:18) அதனால், குடும்பத்தில் அல்லது சபையில் இருக்கும் யாருடனாவது ஒத்துப்போவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், சமாதானம் பண்ணுகிறவராக இருப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள். அப்போது, அவர் தன்னுடைய சக்தியை உங்களுக்குத் தருவார். கிறிஸ்தவ குணங்களைக் காட்ட அந்தச் சக்தி உங்களுக்கு உதவும்; நீங்களும் சந்தோஷமாக இருப்பீர்கள். சமாதானம் பண்ணுவதற்கு நாம் முதலில் முயற்சி எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “அதனால், பலிபீடத்தில் காணிக்கை செலுத்த நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதோ மனவருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.”—மத். 5:23, 24.
18, 19. துன்புறுத்தப்படும்போதுகூட கிறிஸ்தவர்களால் சந்தோஷமாக இருக்க முடியுமென்று எப்படிச் சொல்லலாம்?
18 “நீங்கள் என் சீஷர்கள் என்பதற்காக மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போதும், உங்களைத் துன்புறுத்தும்போதும் சந்தோஷப்படுங்கள்” என்றும், “மகிழ்ச்சியில் துள்ளிக் குதியுங்கள்” என்றும் இயேசு சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார்? “ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும்; உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் அப்படித்தான் துன்புறுத்தினார்கள்” என்று அவர் விளக்கினார். (மத். 5:11, 12) பிரசங்கிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டபோதும், அதற்காக தாங்கள் அடிக்கப்பட்டபோதும், “அப்போஸ்தலர்கள் சந்தோஷமாக நியாயசங்கத்தைவிட்டுப் போனார்கள்” என்று பைபிள் சொல்கிறது. அடிக்கப்பட்டதை நினைத்து அவர்கள் சந்தோஷப்படவில்லை, இயேசுவுடைய ‘பெயருக்காகத் தாங்கள் அவமானப்படத் தகுதியுள்ளவர்களெனக் கருதப்பட்டதை நினைத்துதான்’ சந்தோஷப்பட்டார்கள்.—அப். 5:41.
19 இன்று, இயேசுவுடைய பெயருக்காக நாம் துன்புறுத்தலை அனுபவிக்கும்போது, அதைச் சந்தோஷத்தோடு சகித்துக்கொள்கிறோம். (யாக்கோபு 1:2-4-ஐ வாசியுங்கள்.) அப்போஸ்தலர்களைப் போலவே, துன்புறுத்தப்படுவதை நினைத்து நாம் சந்தோஷப்படுவதில்லை. நாம் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தால், சகித்திருப்பதற்குத் தேவையான தைரியத்தை அவர் தருவார். ஹென்றிக் டார்நிக் மற்றும் அவருடைய சகோதரரின் அனுபவம் அதுதான்! ஆகஸ்ட் 1944-ல், அவர்கள் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கிருந்த அதிகாரிகள் இப்படிச் சொன்னார்கள்: “இவங்க எதுக்கும் மசிய மாட்டாங்க. உயிர்த்தியாகம் செய்றதகூட இவங்க சந்தோஷமா செய்வாங்க.” சகோதரர் ஹென்றி இப்படிச் சொன்னார்: “உயிர்த்தியாகம் செய்றதுல எனக்கு விருப்பமில்லதான். இருந்தாலும், யெகோவாவுக்கு உண்மையா இருக்குறதுக்காக கஷ்டங்கள தைரியமா சகிச்சுக்கிட்டேன். அத கௌரவமாவும் நினைச்சேன். அது எனக்கு சந்தோஷத்த கொடுத்துச்சு. . . . நான் ஊக்கமா யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சதால அவர்கிட்ட நெருங்கி போக முடிஞ்சுது. யெகோவாவ நம்பியிருக்கிறவங்கள அவர் எப்பவுமே கைவிடமாட்டாருங்குறத அவர் நிரூபிச்சாரு.”
20. ‘சந்தோஷமுள்ள கடவுளுக்கு’ சேவை செய்யும்போது நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமென்று ஏன் சொல்லலாம்?
20 ‘சந்தோஷமுள்ள கடவுளான’ யெகோவா நம்மேல் பிரியமாக இருக்கும்போது, நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். நாம் துன்புறுத்தப்பட்டாலும் சரி, குடும்பத்தார் நம்மை எதிர்த்தாலும் சரி, உடல்நிலை மோசமானாலும் சரி, வயதானாலும் சரி, நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்! (1 தீ. 1:11) ‘பொய் சொல்ல முடியாத கடவுளான’ யெகோவா, அருமையான வாக்குறுதிகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்; அதை நினைத்தும் நாம் சந்தோஷப்படலாம். (தீத். 1:3) அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றும் சமயத்தில், இன்று நாம் படும் கஷ்டங்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோம். பூஞ்சோலை பூமியும், அதில் நாம் அனுபவிக்கப்போகிற சந்தோஷமான வாழ்க்கையும் எப்படியிருக்கும் என்று நம்மால் ஓரளவுதான் கற்பனை செய்ய முடியும். பூஞ்சோலை பூமியில் “அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும்” நாம் நிச்சயம் அனுபவிப்போம்!—சங். 37:11.