கடைசி நாட்கள் ‘ராஜ்யங்களுக்கு விரோதமாய் ராஜ்யங்களும்’
“1914 முதல் 1918 வரை தேசங்களுக்கிடையே நடந்த போர் ‘ஏதோ இன்னொரு போரைப் பற்றிய தெளிவற்ற வதந்தி’ அல்ல. அந்தப் போர்நிலை போருக்குப் புதியதோர் வழியைத் திறந்தது, மனித அனுபவத்தில் மொத்த அளவிலான முதல் போராக இருந்தது. அதன் கால அளவும், வன்மையும், பரப்பும் அதற்கு முன்னால் அறியப்பட்ட அல்லது பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட எதையும் மிஞ்சிவிட்டது. மிகப்பெரிய அளவில் போர் புரிவதற்கான நாள் வந்துவிட்டது.”—பெர்னடாட் E. ஷ்மிட் மற்றும் ஹரால்டு C. வெடலர் எழுதிய உருக்கலத்தில் உலகம் (The World in the Crucible).
1914–1918 போரின் அழிவும் உயிரிழப்பும் அவ்வளவு பெரியதாக இருந்ததால், ஃப்ரான்சில் லா கிராண்டே குவரே (la Grande Guerre) என்ற இடத்தில் மகா யுத்தத்தில் மாண்டவர்களுக்காக அற்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை இன்றுவரை நீங்கள் காணலாம். அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே, “இதுவரை பூமியில் நடந்திராதளவுக்கு மிகப் பெரியளவிலான பயங்கரமும், கொலையும், கொடிய சித்தரவதையுமாகும்,” என்று அதைக் குறிப்பிட்டார். உலகம் இரண்டாவது மகா யுத்தத்தின் (1939–45) பேரழிவுக்குள்ளான போது, அந்த மகா யுத்தத்துக்கு முதல் உலக மகா யுத்தம் என்று மறு பெயர் வழங்கப்பட்டது.
முதல் உலக மகா யுத்தம் அதற்கு முன்னான யுத்தங்களிலிருந்து குறிப்பாய் அநேக வழிகளில் வித்தியாசப்பட்டிருந்தது. இலட்சக்கணக்கானோரடங்கிய பிரமாண்டமான சேனைகள் மேற்கு ஐரோப்பிய வயல்களிலும் வனங்களிலும் ஒருவரையொருவர் கொன்று குவித்தன. இயந்திர துப்பாக்கிகள் முன்வந்துகொண்டிருக்கும் தரைப்படை வீரர்களின் தலைகளைப் புல்லென அரித்துக் குவித்தன. போர் (War) என்ற தன்னுடைய புத்தகத்தில் குவைன் டையர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “[போர் ஆரம்பித்து] இரண்டே மாதங்களுக்குள், பத்து இலட்சத்திற்கும் ஆதிகமான ஆட்கள் மாண்டனர் . . . இயந்திர போராயுதங்கள்—விரைவில் செயலாற்றும் பீரங்கிப்படையும் நிமிடத்துக்கு அறுநூறு குண்டுகளைக் கக்கித்தள்ளும் இயந்திர துப்பாக்கிகளும்—காற்றைக் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த இரும்பு மழையால் நிரப்பியது.” பீரங்கிகளைத் தாங்கிய இயந்திர வண்டிகளும், நீர்மூழ்கிக் கப்பல்களும், விமானங்களும் சிந்தனையையும் செயல் தந்திரங்களையும் மாற்றியது. இப்பொழுது மரணம் வானிலிருந்து வந்தது, நீரிலிருந்து உயர்ந்தது.
அகழிச் சண்டைகளும், விஷ வாயுக்கள் அதிகப்படியாக பயன்படுத்தப்படுதலும் மனிதரைச் சகிப்பு, இன்னல் மற்றும் இழிவின் எல்லைக்குக் கொண்டுசென்றுவிட்டது. அந்த மகா யுத்தம் மற்றொரு வழியிலும் குறிப்பாக வித்தியாசப்பட்டிருந்தது: “யுத்தக் கைதிகள் இலட்சக்கணக்கில் (மொத்தத்தில் 84,00,000) இருந்ததும் நீண்ட காலப்பகுதிக்குக் கைதிகளாக வைக்கப்பட்டதும் முதல்முறையாக இருந்தது இந்த யுத்தத்தில்தான்.” [உருக்கலத்தில் உலகம் (The World in the Crucible)] படைத்துறை சாராத மக்கள்தொகை முழுவதையும் உட்படுத்தியதில், தற்காப்புப் பணியிலும் ஆயுத உற்பத்தியிலும் அல்லது படையெடுப்பிலும் போரிலும் பலியானவர்களை உட்படுத்தியதில் இதுவே முதல் போராக இருந்தது.
யெகோவாவின் சாட்சிகள் அந்தப் போரில், 1914-ல், இயேசு முன்னறிவித்த முடிவு சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தின் ஆரம்பத்தை காண்பவர்களாயிருந்தனர். ஆனால் அதைவிட மோசமான காரியங்கள் சம்பவிக்கவேண்டியதாயிருந்தது.
இரண்டாம் உலக மகா யுத்தம்—தனித்தன்மைவாய்ந்த அழிக்கும் சக்திபடைத்தது
மனித நோக்குநிலையிலிருந்து பார்க்கும்போதுகூட, இவை கடைசி நாட்கள் என்பதற்கு மற்றொரு அத்தாட்சி, தன்னைத்தானே அழித்துக்கொள்வதற்கு மனிதனிடம் இருக்கும் சக்தியாகும். டாக்டர் பெர்னார்ட் லோன் தன்னுடைய நோபல் சமாதான பரிசுப் பேச்சில் குறிப்பிட்டதாவது: “இரண்டாம் உலக மகா யுத்தம் மொத்த அளவிலான போரை அறிமுகப்படுத்தியது—நியமத்துக்கு உட்படாத போர் முறையும், வரம்பற்ற வன்முறையும், கண்மூடித்தனமான கொலைகளும் கொண்டிருந்த போரை அறிமுகப்படுத்தியது. மானிட கொடுமைகளின் சரித்திரத்தில் ஆஷ்விட்ஸ் உலைக்களங்களும் ஹிரோஷிமா, நாகசாக்கியின் அணுயியக்க எரிக்களங்களும் இன்னும் அதிக இருண்டதோர் அத்தியாயத்தையே பதிவுசெய்தன.”
இந்தப் பயங்கர அனுபவத்திலிருந்து மனிதகுலம் தயவையும் இரக்கத்தையும் கற்றுக்கொண்டதா? அவர் தொடர்ந்து கூறுகிறார்: “ஐந்து கோடி மக்களின் [ஏறக்குறைய பிரிட்டன், ஃப்ரான்ஸ் அல்லது இத்தாலியின் மொத்த மக்கள்தொகை] சவத்தை விட்டுச்சென்ற அந்த நீடித்த வேதனை காட்டுமிராண்டித்தனமான கொலைக்கு எதிராகப் போர் நிறுத்தத்துக்கான ஒரு நிலையான ஆதாரத்தை அளிக்கவில்லை. மாறாக, அநேக ஆயிரக்கணக்கான இரண்டாம் உலக மகா யுத்தங்களுக்குச் சமமாக உயிரினங்களை அடியோடு அழித்துவிடும் சக்திகொண்ட ஆயுத உற்பத்திச்சாலைகள் மலர்ந்தன.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
‘தேசத்துக்கு விரோதமாய் தேசமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பியிருப்பதையும்,’ வெளிப்படுத்துதலின் சிவப்புநிற குதிரையில் சவாரி செய்பவன் பூமியெங்கும் படுகொலையைப் பரப்பியிருப்பதையும் நாம் பார்த்துவந்திருக்கிறோம். (மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:4) ஆனால் அணு ஆயுதங்களின் கண்டுபிடிப்பும் பெருக்கமும் நம்முடைய “கடைசி நாட்களுக்கு” இன்னும் எந்த விதத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக அமையும்?—2 தீமோத்தேயு 3:1. (g88 4⁄8)
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
“20-வது நூற்றாண்டு அதற்கு முன்னான இரண்டு நூற்றாண்டுகளுடன் ஒப்பிடப்படுகையில் வன்முறை அதிகரிப்பால் குறிக்கப்பட்டிருக்கிறது. . . . 20-வது நூற்றாண்டு ஏற்கெனவே 237 போர்களின் பதிவைக் கொண்டிருக்கிறது, அதாவது, மரணத்தில் விளைவடைந்திருக்கும் விரோதங்கள், இதனால் விளைந்த மரண எண்ணிக்கை ஆண்டுதோறும் 1,000-க்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.”
“அதிகமான போர்கள் என்பது மட்டுமல்ல, ஆனால் அதன் அழிக்கும் தன்மையும் அதிகரித்துவிட்டிருக்கிறது. 20-வது நூற்றாண்டு போர்கள் இதுவரை 9.9 கோடி மக்களைக் கொன்றிருக்கிறது, 19-வது நூற்றாண்டைவிட இது 12 மடங்கு அதிகமாகும், 18-வது நூற்றாண்டைவிட 22 மடங்கு அதிகமாகும். . . . கடந்த நூற்றாண்டில் 10 இலட்சத்திற்கும் அதிகமான இறப்புகளைக் கொண்டிருந்த இரண்டு யுத்தங்கள் இருந்தன; இந்த நூற்றாண்டில் அப்படிப்பட்ட யுத்தங்களின் எண்ணிக்கை 13.”—ரூத் லெகர் சிவார்டு எழுதிய 1986 உலக இராணுவமும் சமூக செலவுகளும் (World Military and Social Expenditures 1986).