‘பரலோகத்திலே செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுதல்’
“இறுதியில் நடக்கும் நான்கு காரியங்களைப் பற்றி கத்தோலிக்க மதம் குறிப்பிடுகிறது: மரணம், நியாயத்தீர்ப்பு, நரகம், பரலோகம்.”—கேத்தலிஸிஸம், ஜார்ஜ் ப்ரான்டில் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது.
மனிதகுலத்திற்கு முன் இருக்கும் இந்த நான்கு காரியங்களில், பூமி குறிப்பிடப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். இது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல; ஏனெனில், எண்ணற்ற பிற மதங்களைப் போலவே கத்தோலிக்க மதமும் இந்தப் பூமி ஒரு நாள் அழிந்துவிடும் என நம்புகிறது. டிக்ஷியானார் ட டேயாலாஜி கத்தாலிக் என்ற அகராதி, “உலக முடிவு” என்ற சொற்றொடரின் கீழ் பூமியைக் குறித்து இவ்வாறு விளக்குகிறது: “கடவுள் படைத்து, இன்று வரை நிலைத்திருக்கும் இந்த உலகம் என்றென்றைக்கும் நீடித்திருக்காது என்று கத்தோலிக்க மதம் நம்புகிறது, போதிக்கிறது.” கத்தோலிக்க மதத்தின் சமீபத்திய வேதபாடத்திலும் இந்தக் கருத்து உள்ளது: “நமது உலகம் . . . ஒழிந்துபோவது உறுதி.” இவர்கள் சொல்வதுபோல் இந்தக் கிரகம் ஒழிந்துபோய்விடுமென்றால், அது ஒரு பரதீஸாக மாறப்போவதைப் பற்றிய பைபிளின் வாக்குறுதிகள் எப்படி நிறைவேறும்?
எதிர்காலத்தில் பரதீஸாக பூமி மாறப்போவதைப் பற்றி பைபிள் மிகத் தெளிவாகச் சொல்கிறது. உதாரணமாக, பூமியையும் அதன் குடிமக்களையும் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி இவ்விதமாய் விவரித்தார்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.” (ஏசாயா 65:21, 22) இவை யூதர்களுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகள். தங்களுடைய தேசம், சொல்லப்போனால் முழு பூமியும், ஒருநாள் மனிதகுலத்திற்கு நித்திய நன்மைகளை அளிக்கிற பரதீஸாக மாறும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
37-ஆம் சங்கீதம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்,’ அதாவது சொந்தமாக்கிக் கொள்வார்கள் என அது சொல்கிறது. (சங்கீதம் 37:11) இஸ்ரவேலர் சிறிது காலத்திற்கு மட்டுமே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் புதிய வாழ்க்கையை அனுபவிப்பார்கள் என இந்த வசனம் சொல்வதில்லை. அதே சங்கீதம் இவ்வாறும் குறிப்பிடுகிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29)a பூமியில் நித்தியகால வாழ்க்கை என்பது ‘சாந்தகுணமுள்ளவர்களுக்கு’ அளிக்கப்படும் ஒரு வெகுமதி என்பதைக் கவனியுங்கள். பிரெஞ்சு பைபிள் ஒன்று இந்த வசனத்திற்குப் பின்வரும் விளக்கத்தை அளிக்கிறது: “சாந்தகுணமுள்ளவர்கள்” என்ற வார்த்தைக்கு “பல மொழிபெயர்ப்புகள் தரும் அர்த்தத்தைவிட விரிவான அர்த்தம் உள்ளது; அவல நிலையிலிருப்போர், யாவேயின் [யெகோவாவின்] நிமித்தம் கஷ்டப்படுவோர் அல்லது துன்புறுத்தப்படுவோர், கடவுளுக்குக் கீழ்ப்படிகிற தாழ்மையுள்ளம் படைத்தோர் ஆகியோரும் இதில் அடங்குவர்.”
பூமியிலா பரலோகத்திலா?
இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் கொடுத்த வாக்குறுதி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் [அதாவது, சொந்தமாக்கிக் கொள்வார்கள்].” (மத்தேயு 5:5) ஆகவே, இந்தப் பூமி உண்மையுள்ளோருக்கு நித்திய வெகுமதியாக அளிக்கப்படும். ஆனால், தம்முடைய அப்போஸ்தலர்களிடம் பேசுகையில், தம் “பிதாவின் வீட்டில்” அவர்களுக்காக ஓர் இடத்தை தயார் செய்யப் போவதையும் பரலோகத்தில் அவர்கள் தம்முடன் இருக்கப் போவதையும் இயேசு தெளிவுபடுத்தினார். (யோவான் 14:1, 2; லூக்கா 12:32; 1 பேதுரு 1:3, 4) அப்படியானால், பூமியில் ஆசீர்வாதங்களைப் பெறப்போவதைப் பற்றிய வாக்குறுதிகளை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? அந்த வாக்குறுதிகள் இன்றைக்கும் பொருந்துகின்றனவா, அந்த ஆசீர்வாதங்களை யார் பெற்றுக்கொள்வார்கள்?
இயேசுவின் மலைப்பிரசங்கத்திலும் சங்கீதம் 37-லும்கூட ‘பூமி’ என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில்தான் குறிப்பிடப்பட்டுள்ளதென பைபிள் அறிஞர்கள் பலர் கூறுகிறார்கள். இந்த வசனங்கள் “பரலோகத்தையும் சர்ச்சையுமே அடையாளப்படுத்துகின்றன” என பீபள் ட க்ளெர் என்ற பைபிளில் எஃப். விகூரூ குறிப்பிடுகிறார். எம். லாக்ரான்ஸ் என்ற பிரெஞ்சு பைபிள் ஆய்வாளரின் கருத்துபடி, இந்த வாக்குறுதி “சாந்தகுணமுள்ளவர்கள் தாங்கள் வாழ்கிற இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வதைப் பற்றிய வாக்குறுதியும் அல்ல, எதிர்காலத்தில் ஒரு பரிபூரணமான பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வதைப் பற்றிய வாக்குறுதியும் அல்ல, மாறாக அந்த இடம் எங்கிருந்தாலும், அவர்கள் பரலோக ராஜ்யத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதைப் பற்றிய வாக்குறுதியாகும்.” மற்றொரு ஆய்வாளர் இவ்வாறு சொல்கிறார்: “பரலோகத்தைக் குறித்துக் காட்ட பூமிக்குரிய காரியங்கள் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.” இன்னும் சிலரோ, “வாக்குப்பண்ணப்பட்ட கானான் தேசத்தை ஆன்மீக கருத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்; அதுமட்டுமல்ல, இது மேலான தேசத்தை, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தை, அர்த்தப்படுத்துகிறது என்றும் சாந்தகுணமுள்ளவர்கள் இதை சொந்தமாக்கிக் கொள்வார்கள் என்றும் கருதுகிறார்கள். சங்கீதம் 37-லும் பிற பகுதிகளிலும் இந்த அர்த்தத்தையே இது தருகிறது” என்று சொல்கிறார்கள். அப்படியானால், பூமியைக் குறித்த கடவுளுடைய வாக்குறுதிகளை நாம் சட்டென ஓரங்கட்டிவிட வேண்டுமா?
பூமிக்கான நித்திய நோக்கம்
ஆரம்பத்தில், மனிதருக்கான கடவுளுடைய நோக்கத்திற்கும் இந்தப் பூமிக்கும் நேரடி தொடர்பு இருந்தது. “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்” என சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 115:16) ஆகவே, மனிதருக்கான கடவுளுடைய ஆரம்ப நோக்கம் பரலோகத்தோடு அல்ல, ஆனால் பூமியோடு தொடர்புடையதாய் இருந்தது. ஏதேன் தோட்டத்தை விரிவுபடுத்தி, பூமி முழுவதையும் பூங்காவனமாக மாற்றும் வேலையை முதல் மனித தம்பதியருக்கு யெகோவா கொடுத்தார். (ஆதியாகமம் 1:28) இந்த நோக்கம் தற்காலிகமானது அல்ல. இந்தப் பூமி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலம் உறுதிப்படுத்துகிறார்: “ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.”—பிரசங்கி 1:4; 1 நாளாகமம் 16:30; ஏசாயா 45:18.
கடவுளுடைய வாக்குறுதிகள் ஒருபோதும் பொய்த்துப் போகாது; ஏனெனில் அவர் மிக உயர்ந்தவர், அதோடு அந்த வாக்குறுதிகள் நிறைவேறும்படி அவர் பார்த்துக்கொள்கிறார். இயற்கையில் நிகழும் நீர்சுழற்சியை உதாரணமாகப் பயன்படுத்தி, கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்பதை பைபிள் இவ்வாறு விளக்குகிறது: ‘மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்வது, . . . எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் [கடவுளுடைய வார்த்தையும்] இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.’ (ஏசாயா 55:10, 11) மனிதர்களுக்குக் கடவுள் வாக்குறுதிகளை அளிக்கிறார். அவை நிறைவேறுவதற்கு சில காலமானாலும் அவை நிறைவேறாமல் போகாது. அவர் சொன்ன எல்லாம் நிறைவேறிய பிறகே அவை அவரிடம் ‘திரும்பும்.’
மனிதகுலத்திற்காகப் பூமியைப் படைப்பதில் யெகோவா உண்மையிலேயே ‘விருப்பம்’ காட்டினார். படைப்பின் ஆறாம் நாள் இறுதியில், அவர் எல்லாவற்றையும் பார்த்து “மிகவும் நன்றாயிருந்தது” என்று சொன்னார். (ஆதியாகமம் 1:31) பூமியை நிரந்தர பரதீஸாக மாற்றுவது கடவுளுடைய நோக்கத்தின் ஒரு பாகமாகும், இது இன்னும் நிறைவேறவில்லை. இருந்தாலும், கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறாமல் ‘வெறுமையாய் அவரிடம் திரும்பாது.’ மனிதர்கள் பூமியில் பரிபூரணமாக, சமாதானத்தோடும் பாதுகாப்போடும் நித்தியமாக வாழ்வதைப் பற்றிய எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறும்.—சங்கீதம் 135:6; ஏசாயா 46:10.
கடவுளுடைய நோக்கம் நிச்சயம் நிறைவேறும்
முதல் பெற்றோரான ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால், இந்தப் பூமியைப் பரதீஸாக ஆக்குவதைப் பற்றிய கடவுளுடைய ஆரம்ப நோக்கம் தற்காலிகமாகத் தடைபட்டது. அவர்கள் கீழ்ப்படியாமல் போனதால் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதனால், பரதீஸ் பூமியில் பரிபூரண மனிதர்கள் என்றும் வாழ வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் தங்களுக்கு இருந்த அருமையான வாய்ப்பை இழந்தார்கள். இருந்தாலும், தம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்குக் கடவுள் ஏற்பாடுகள் செய்தார். எப்படி?—ஆதியாகமம் 3:17-19, 23.
ஏதேனில் நிலவிய சூழ்நிலை, மிகச் சிறந்த இடத்தில் ஒருவர் வீடுகட்ட ஆரம்பித்ததைப் போல் இருந்தது. அவர் அஸ்திவாரத்தை மட்டும் போட்டிருக்கிறார், அதற்குள் வேறொருவர் வந்து அதை இடித்துப்போடுகிறார். கட்டுமான பணியை அவர் கைவிடுவதற்குப் பதிலாக, வீட்டைக் கட்டிமுடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கிறார். இந்தக் கூடுதலான வேலைக்கு அதிக பணம் செலவழிகிறபோதிலும், ஆரம்பித்த வேலை முடிவடையும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல, கடவுளும் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஏற்பாடுகள் செய்தார். நம் முதல் பெற்றோர் பாவம் செய்தவுடனேயே, அவர்களுடைய வருங்கால சந்ததியாருக்காக ஒரு நம்பிக்கையைக் கொடுத்தார். அதாவது, இந்தப் பாதிப்பை ஒரு “வித்து” சரிசெய்யும் என அறிவித்தார். இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதில், அந்த வித்துவின் முக்கிய பாகமாகக் கடவுளுடைய குமாரனான இயேசு இருந்தார்; அவர் மனிதகுலத்தை மீட்டுக்கொள்வதற்காகப் பூமிக்கு வந்து தம் உயிரைப் பலியாகக் கொடுத்தார். (கலாத்தியர் 3:16; மத்தேயு 20:28) அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்குப் போனதும், கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆனார். அவரே பூமியைச் சொந்தமாக்கிக் கொள்ளும் சாந்தகுணமுள்ளவர்களில் முதன்மையானவர். தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையுள்ள மனிதரும் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டு, இந்த ராஜ்யத்தில் அவரோடுகூட ராஜாக்களாக இருப்பார்கள்; இவர்களும் பூமியைச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். (சங்கீதம் 2:6-9) பிற்பாடு, இந்த அரசாங்கம் ஆட்சி செய்யும்போது, கடவுளுடைய ஆரம்ப நோக்கத்தை நிறைவேற்றி, பூமியை ஒரு பரதீஸாக மாற்றும். சாந்தகுணமுள்ள கோடிக்கணக்கானோர் ‘பூமியைச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.’ அதாவது, இயேசு கிறிஸ்துவும் அவருடைய உடன் ஆட்சியாளரும் ஆளும் இந்த ராஜ்யத்தின் மூலம் அவர்கள் நன்மை அடைவார்கள்.—ஆதியாகமம் 3:15; தானியேல் 2:44; அப்போஸ்தலர் 2:32, 33; வெளிப்படுத்துதல் 20:5, 6.
‘பரலோகத்திலே செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுதல்’
பரலோக வாழ்க்கைக்கும் பூமிக்குரிய வாழ்க்கைக்கும் மீட்கப்படுகிறவர்களைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் கண்ட காட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவர், கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பரலோக சிங்காசனங்களில் ராஜாக்களாக அமர்ந்திருப்பதைக் கண்டார். கிறிஸ்துவின் இந்தக் கூட்டாளிகளைப் பற்றி பைபிள் திட்டவட்டமாக இவ்வாறு சொல்கிறது: ‘அவர்கள் பூமியிலே அரசாளுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:9, 10) கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதில் இரண்டு அம்சங்கள் உட்பட்டிருப்பதைக் கவனியுங்கள்: இயேசு கிறிஸ்துவாலும் அவருடைய உடன் சுதந்தரவாளிகளாலும் ஆளப்படும் பரலோக ராஜ்யத்தின் மூலம் பூமி மீண்டும் பரதீஸாக மாறும். கடவுளுடைய இந்த எல்லா ஏற்பாடுகளின் மூலமாக அவரது ஆரம்ப நோக்கத்திற்கு இசைய கடைசியில் பூமி ஒரு பரதீஸாக மாறும்.
இயேசுவின் மாதிரி ஜெபத்தில், கடவுளுடைய சித்தம் ‘பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படும்படி’ தம் சீஷர்களிடம் ஜெபிக்கச் சொன்னார். (மத்தேயு 6:9, 10) இந்தப் பூமி ஒழிந்துபோனால் அல்லது இது பரலோகத்திற்கு அடையாளமாக இருந்தால் இந்த வார்த்தைகள் நிறைவேறுவது எப்படி? அதுபோலவே, நீதிமான்கள் எல்லாருமே பரலோகத்திற்குப் போனால் இது நிறைவேறுவது எப்படி? பூமியைக் குறித்த கடவுளின் சித்தம், பைபிளில் உள்ள படைப்பு பற்றிய பதிவுமுதல் தீர்க்கதரிசன காட்சிகள் அடங்கிய வெளிப்படுத்துதல் புத்தகம்வரை தெளிவாக உள்ளது. கடவுளுடைய நோக்கத்தின்படியே இந்தப் பூமி ஒரு பரதீஸாக மாறப்போகிறது. இந்தச் சித்தத்தைத்தான் நிறைவேற்றப்போவதாக கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். பூமியிலுள்ள உண்மையுள்ள மக்கள் இந்தச் சித்தம் நிறைவேறுவதற்காக ஜெபிக்கிறார்கள்.
‘மாறாத’ கடவுளாகிய படைப்பாளரின் ஆரம்ப நோக்கம் மனிதர்கள் பூமியில் நித்தியமாக வாழ வேண்டுமென்பதுதான். (மல்கியா 3:6; யோவான் 17:3; யாக்கோபு 1:17) கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தில் உட்பட்டுள்ள இந்த இரண்டு அம்சங்களையும் காவற்கோபுரம் என்ற இந்தப் பத்திரிகை 100 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கியிருக்கிறது. பூமி மீண்டும் பரதீஸாக மாறப்போவதைப் பற்றிய பைபிள் வாக்குறுதிகளைப் புரிந்துகொள்ள இது நமக்கு உதவுகிறது. யெகோவாவின் சாட்சிகளுடன் கலந்துபேசுவதன் மூலமோ இப்பத்திரிகையைப் பிரசுரிப்போருடன் தொடர்புகொள்வதன் மூலமோ இந்த விஷயத்தைப் பற்றி கூடுதலாக ஆராய்ந்து பார்க்கும்படி உங்களை அழைக்கிறோம்.
[அடிக்குறிப்பு]
a பல பைபிள் மொழிபெயர்ப்புகள், ஈரெட்ஸ் என்ற எபிரெய வார்த்தையை “பூமி” என மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக “தேசம்” என மொழிபெயர்த்திருக்கின்றன; எனினும், சங்கீதம் 37:11, 29-ல் பயன்படுத்தப்பட்டுள்ள ஈரெட்ஸ் என்ற வார்த்தையை இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட தேசமாக மட்டுமே கருத வேண்டிய அவசியமில்லை. வில்லியம் வில்சன் எழுதிய ஓல்ட் டெஸ்டமன்ட் உவார்ட் ஸ்டடீஸ் என்ற நூலில் ஈரெட்ஸ் என்ற வார்த்தையை அவர் இவ்வாறு விளக்குகிறார்: “பூமி என்பது விரிவான கருத்தில், மக்கள் குடியிருக்க முடிந்த, குடியிருக்க முடியாத என இரு பகுதிகளையும் குறிக்கிறது; குறுகிய கருத்தில் அது பூமியில் உள்ள ஒரு தேசத்தையோ நாட்டையோ குறிப்பிடுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது.” ஆக, இந்த எபிரெய வார்த்தை நமது கிரகத்தை, அதாவது பூமியையே முக்கியமாகக் குறிக்கிறது.—காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1987, பக்கம் 31-ஐக் காண்க.
[பக்கம் 4-ன் படம்]
இந்தப் பூமி எதிர்காலத்தில் ஒரு பரதீஸாக மாற்றப்படுமென பைபிள் தெளிவாகச் சொல்கிறது
[பக்கம் 7-ன் படம்]
இந்தப் பூமி ஒழிந்துபோனால், இயேசுவின் மாதிரி ஜெபம் நிறைவேறுவது எப்படி?