கிறிஸ்து தமது சபையை தலைமைதாங்கி நடத்துகிறார்
“இதோ! இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையாக சகல நாட்களிலும் நான் உங்களுடன் இருக்கிறேன்.”—மத்தேயு 28:20, NW.
1, 2. (அ) சீஷராக்கும்படியான கட்டளையைக் கொடுக்கையில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தம்மைப் பின்பற்றினோருக்கு என்ன வாக்குறுதி அளித்தார்? (ஆ) ஆரம்ப கால கிறிஸ்தவ சபையை இயேசு எவ்வாறு மும்முரமாய் வழிநடத்தினார்?
உயிர்த்தெழுப்பப்பட்ட நம்முடைய தலைவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு திரும்பிச் செல்வதற்கு முன்பு தம்முடைய சீஷர்கள் முன் தோன்றி இவ்வாறு சொன்னார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல தேசத்தாரையும் சீஷராக்கி, பிதாவின் குமாரனின் பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள். இதோ! இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையாக சகல நாட்களிலும் நான் உங்களுடன் இருக்கிறேன்.”—மத்தேயு 23:10; 28:18-20; NW.
2 மேலுமதிக ஆட்களை சீஷராக்கக்கூடிய உயிர்காக்கும் ஊழியத்தை இயேசு தமது சீஷர்களுக்குக் கொடுத்தது மட்டுமல்லாமல், அவர்களோடு இருப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். தமக்குக் கொடுக்கப்பட்ட இந்த அதிகாரத்தை புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட சபையை வழிநடத்துவதற்கு கிறிஸ்து பயன்படுத்தினாரென பைபிள் புத்தகமாகிய அப்போஸ்தலருடைய நடபடிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆரம்ப கால கிறிஸ்தவ சரித்திரம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. தம்மைப் பின்பற்றினோரைப் பலப்படுத்தவும், அவர்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கவும், வாக்குறுதி செய்யப்பட்ட ‘உதவியாளனாகிய’ பரிசுத்த ஆவியை அவர் அனுப்பினார். (யோவான் 16:7, NW; அப்போஸ்தலர் 2:4, 33; 13:2-4; 16:6-10) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஆதரவளிப்பதற்கு தம்முடைய அதிகாரத்தின் கீழிருந்த தூதர்களைப் பயன்படுத்தினார். (அப்போஸ்தலர் 5:19; 8:26; 10:3-8, 22; 12:7-11; 27:23, 24; 1 பேதுரு 3:22) மேலும், தகுதிபெற்ற ஆண்கள் ஆளும் குழுவில் சேவிப்பதற்கு ஏற்பாடு செய்வதன் மூலம் சபைக்கு வழிநடத்துதலை நம்முடைய தலைவர் அளித்தார்.—அப்போஸ்தலர் 1:20, 24-26; 6:1-6; 8:5, 14-17.
3. என்ன கேள்விகள் இந்தக் கட்டுரையில் ஆராயப்படும்?
3 எனினும், ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவாகிய’ நம்முடைய காலத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? இயேசு கிறிஸ்து இன்று கிறிஸ்தவ சபையை எவ்வாறு வழிநடத்துகிறார்? அவருடைய தலைமையை ஏற்கிறோமென்று நாம் எவ்வாறு காட்டலாம்?
எஜமானருடைய உண்மையுள்ள ஓர் அடிமை
4. (அ) ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக’ இருப்போர் யார்? (ஆ) எஜமானர் அந்த அடிமையிடம் எதை ஒப்படைத்திருக்கிறார்?
4 தம்முடைய வந்திருத்தலின் அடையாளத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கொடுக்கையில் இயேசு இவ்வாறு சொன்னார்: “ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் [“அடிமை,” NW] யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே [“அடிமையே,” NW] பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:45-47) இந்த “எஜமான்” நம்முடைய தலைவராகிய இயேசு கிறிஸ்து; பூமியிலிருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதியாகிய ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ பூமிக்குரிய தம்முடைய ஆஸ்திகள் எல்லாவற்றின் மீதும் நியமித்திருக்கிறார்.
5, 6. (அ) அப்போஸ்தலன் யோவானுக்குக் கிடைத்த ஒரு தரிசனத்தில், ‘ஏழு பொன் குத்துவிளக்குகளும்,’ ‘ஏழு நட்சத்திரங்களும்’ எதை படமாக காட்டுகின்றன? (ஆ) அந்த ‘ஏழு நட்சத்திரங்கள்’ இயேசுவின் வலது கரத்தில் இருப்பது எதைத் தெரிவிக்கிறது?
5 இந்த உண்மையும் விவேகமுமுள்ள அடிமை நேரடியாக இயேசு கிறிஸ்துவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் காட்டுகிறது. ‘கர்த்தருடைய நாளைப்’ பற்றிய ஒரு தரிசனத்தில், அப்போஸ்தலன் யோவான் “ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே,” ‘தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்த மனுஷ குமாரனுக்கொப்பானவரையும்’ கண்டார். இத்தரிசனத்தை யோவானுக்கு விளக்குகையில், இயேசு இவ்வாறு சொன்னார்: “என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.”—வெளிப்படுத்துதல் 1:1, 10-20.
6 அந்த ‘ஏழு பொன் குத்துவிளக்குகள்,’ 1914-ல் தொடங்கின “கர்த்தருடைய நாளில்” இருந்துவரும் உண்மையான கிறிஸ்தவ சபைகள் எல்லாவற்றையும் படமாக குறிக்கின்றன. ஆனால் அந்த ‘ஏழு நட்சத்திரங்களைப்’ பற்றியதென்ன? ஆரம்பத்தில், முதல் நூற்றாண்டு சபைகளைக் கவனித்து வந்த ஆவியால் பிறப்பிக்கப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகள் அனைவரையும் அடையாளமாக குறித்தன.a கண்காணிகள் இயேசுவின் வலது கரத்தில் இருந்தார்கள், அதாவது, அவருடைய கட்டுப்பாட்டுக்கும் வழிநடத்துதலுக்கும் உட்பட்டிருந்தார்கள். ஆம், பலர் அடங்கிய அடிமை வகுப்பை கிறிஸ்து இயேசு வழிநடத்தினார். எனினும், அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கண்காணிகள் இப்போது எண்ணிக்கையில் வெகு சிலரே இருக்கிறார்கள். உலகெங்கும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் 93,000-க்கும் மேற்பட்ட சபைகளுக்கு கிறிஸ்துவின் தலைமை வகிப்பு எவ்வாறு செலுத்தப்படுகிறது?
7. (அ) பூமி முழுவதிலுமுள்ள சபைகளை வழிநடத்துவதற்கு ஆளும் குழுவை இயேசு எவ்வாறு பயன்படுத்துகிறார்? (ஆ) கிறிஸ்தவ கண்காணிகள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஏன் சொல்லலாம்?
7 முதல் நூற்றாண்டில் இருந்ததுபோல், அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகளில் தகுதிபெற்ற ஒரு சிறிய தொகுதியான ஆண்கள், உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் குழுவாக இப்போது சேவிக்கிறார்கள். தகுதி பெற்ற ஆண்களை—ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி—சபை மூப்பர்களாக நியமிப்பதற்கு இந்த ஆளும் குழுவை நம் தலைவர் பயன்படுத்துகிறார். இவ்விஷயத்தில், இயேசு பயன்படுத்துவதற்கு யெகோவா அதிகாரம் அளித்திருக்கிற பரிசுத்த ஆவி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. (அப்போஸ்தலர் 2:32, 33) முதலாவதாக, பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை இந்தக் கண்காணிகள் பூர்த்தி செய்ய வேண்டும். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9; 2 பேதுரு 1:20, 21) மூப்பர்களுக்கான சிபாரிசுகளும் நியமிப்புகளும், ஜெபத்தோடும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடும் செய்யப்படுகின்றன. கூடுதலாக, நியமிக்கப்பட்ட நபர்கள் அந்த ஆவியின் கனிகளைப் பிறப்பிப்பதன் அத்தாட்சியை அளிக்கிறார்கள். (கலாத்தியர் 5:22, 23) அப்படியானால், பவுலின் அறிவுரை, அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மூப்பர்கள் எல்லாருக்குமே சரிசமமாய்ப் பொருந்துகிறது: “உங்களைக் குறித்தும், . . . பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.” (அப்போஸ்தலர் 20:28) நியமிக்கப்பட்ட இவர்கள், ஆளும் குழுவினிடமிருந்து வழிநடத்துதலைப் பெற்று, மனப்பூர்வமாய் சபையைக் கண்காணிக்கிறார்கள். இவ்வாறு, கிறிஸ்து இப்போது நம்மோடிருந்து ஊக்கத்துடன் சபையை வழிநடத்துகிறார்.
8. தம்மைப் பின்பற்றுகிறவர்களை வழிநடத்துவதற்கு கிறிஸ்து தூதர்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்?
8 தம்மைப் பின்பற்றுவோரை வழிநடத்துவதற்கு இன்றும் நிஜமான தூதர்களை இயேசு பயன்படுத்துகிறார். கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமையின்படி, அறுவடை காலம், ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில்’ (NW) வரும். அறுவடை செய்வதற்கு எஜமான் யாரை பயன்படுத்துவார்? “அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்” என்று கிறிஸ்து சொன்னார். அவர் மேலும் சொன்னார்: “மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்[ப்பார்கள்].” (மத்தேயு 13:37-41) மேலும், எத்தியோப்பிய மந்திரியைக் காணும்படி பிலிப்புவை தேவதூதர் ஒருவர் வழிநடத்தினதுபோல், இன்று நேர்மை இருதயமுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் உண்மையான கிறிஸ்தவர்களின் ஊழியத்தை வழிநடத்துவதற்கு தம்முடைய தூதர்களை கிறிஸ்து பயன்படுத்துகிறார் என்பதற்கு ஏராளமான அத்தாட்சி இருக்கிறது.—அப்போஸ்தலர் 8:26, 27; வெளிப்படுத்துதல் 14:6.
9. (அ) இன்று, எந்த வழிகளில் கிறிஸ்தவ சபையை கிறிஸ்து வழிநடத்துகிறார்? (ஆ) கிறிஸ்துவின் தலைமையிலிருந்து பயனடைய விரும்பினால் என்ன கேள்வியை நாம் சிந்திக்க வேண்டும்?
9 ஆளும் குழு, பரிசுத்த ஆவி, தூதர்கள் என பல வழிகளில் இன்று தம்முடைய சீஷர்களை இயேசு கிறிஸ்து வழிநடத்துகிறார் என்பதை அறிவது எவ்வளவு நம்பிக்கையூட்டுகிறது! துன்புறுத்துதல் அல்லது அதைப் போன்ற மற்ற காரணங்களின் நிமித்தமாக யெகோவாவின் வணக்கத்தாரில் சிலர் ஆளும் குழுவினிடமிருந்து தற்காலிகமாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் மூலமாயும் தேவதூதரின் மூலமாயும் கிறிஸ்து தொடர்ந்து வழிநடத்துதலை அளிப்பார். எனினும், அவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிலிருந்து நாம் நன்மையடைவோம். கிறிஸ்துவின் தலைமையை ஏற்கிறோமென்று நாம் எவ்வாறு காட்டலாம்?
“கீழ்ப்படிந்து அடங்குங்கள்”
10. சபையில் நியமிக்கப்பட்ட மூப்பர்களுக்கு நாம் எவ்வாறு மரியாதை காட்டலாம்?
10 நம் தலைவர், சபைகளுக்கு ‘மனிதரில் வரங்களை’ அளித்திருக்கிறார்—“சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும்” அளித்திருக்கிறார். (எபேசியர் 4:8, 11, 12, NW) அவர்களிடமாக நம் மனப்பான்மையும் நாம் நடந்துகொள்ளும் விதமும், கிறிஸ்துவின் தலைமையை நாம் ஏற்கிறோமா என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்து அருளியிருக்கிற, ஆவிக்குரிய தகுதி பெற்றிருக்கிற மனிதருக்காக நாம் ‘நன்றியறிதலைக்’ காட்டுவது நிச்சயமாகவே தகுதியானது. (கொலோசெயர் 3:15) அவர்கள் நம் மரியாதையைப் பெற தகுதியானவர்கள். “நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ண வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 5:17) சபையிலுள்ள கண்காணிகளாகிய மூப்பர்களுக்கு நம்முடைய நன்றியையும் ஆழ்ந்த மதிப்பையும் எவ்வாறு காட்டலாம்? ‘உங்களை நடத்துகிறவர்களுக்கு . . . கீழ்ப்படிந்து அடங்குங்கள்’ என்று பவுல் பதிலளிக்கிறார். (எபிரெயர் 13:17) ஆம், நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருக்க வேண்டும்.
11. மூப்பர் ஏற்பாட்டை மதிப்பது ஏன் நம்முடைய முழுக்காட்டுதலுக்கு இசைவாய் வாழ்வதன் ஓர் அம்சமாக இருக்கிறது?
11 நம்முடைய தலைவர் பரிபூரணர். வரங்களாக அவர் கொடுத்திருக்கிற மனிதரோ பரிபூரணரல்லர். ஆகையால், அவர்கள் சில சமயங்களில் தவறலாம். இருப்பினும், கிறிஸ்துவின் ஏற்பாட்டுக்கு நாம் பற்றுறுதியுள்ளவர்களாக நிலைத்திருப்பது முக்கியம். உண்மையில், நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் இசைவாய் நடப்பது, சபையில் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்ட அதிகாரத்தை அங்கீகரித்து அதற்கு மனப்பூர்வமாக கீழ்ப்படிவதை அர்த்தப்படுத்துகிறது. ‘பரிசுத்த ஆவியின் பெயரில்’ நாம் முழுக்காட்டப்படுவது, பரிசுத்த ஆவி இன்னதென்பதையும், யெகோவாவின் நோக்கங்களில் அது வகிக்கும் பாகத்தையும் நாம் அறிந்து ஏற்கிறோம் என்பதை யாவரறிய தெரிவிப்பதாகும். (மத்தேயு 28:19, NW) இத்தகைய ஒரு முழுக்காட்டுதல், பரிசுத்த ஆவியோடு நாம் ஒத்துழைக்கிறோம் என்பதையும், கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் மத்தியில் அது செயல்படுவதற்கு எவ்விதத்திலும் தடங்கல் ஏற்படுத்த மாட்டோம் என்பதையும் மறைமுகமாக குறிப்பிடுகிறது. மூப்பர்களை சிபாரிசு செய்வதிலும் நியமிப்பதிலும் முக்கியமான பாகத்தை பரிசுத்த ஆவி வகிப்பதால், சபையில் மூப்பர் ஏற்பாட்டுடன் ஒத்துழைக்க தவறுவோமானால், நம் ஒப்புக்கொடுத்தலுக்கு மெய்யாகவே உண்மையுள்ளவர்களாக இருக்க முடியுமா?
12. அதிகாரத்திலிருப்போருக்கு அவமரியாதை காட்டினதைப் பற்றிய எந்த உதாரணங்களை யூதா குறிப்பிடுகிறார், அவை நமக்கு எதை கற்பிக்கின்றன?
12 கீழ்ப்படிந்து அடங்கியிருப்பதன் நன்மதிப்பை நமக்குக் கற்பிக்கும் முன்மாதிரிகள் பைபிளில் உள்ளன. சபையில் நியமிக்கப்பட்ட மனிதரைப் பழித்துப் பேசினவர்களைப் பற்றி குறிப்பிடுகையில், சீஷனாகிய யூதா எச்சரிக்கைக்குரிய இந்த மூன்று உதாரணங்களை அளித்தார்: “இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.” (யூதா 11) யெகோவாவின் அன்புள்ள அறிவுரையை காயீன் புறக்கணித்து, கொலை செய்யுமளவுக்கு பகையை வேண்டுமென்றே வளர்த்தான். (ஆதியாகமம் 4:4-8) கடவுளுடைய எச்சரிக்கையை பிலேயாம் மறுபடியும் மறுபடியுமாக பெற்றபோதிலும், பணத்திற்காக கடவுளுடைய ஜனங்களை சபிப்பதற்கு முயற்சி செய்தான். (எண்ணாகமம் 22:5-28, 32-34; உபாகமம் 23:5) இஸ்ரவேல் ஜனங்களின் மத்தியில் கோராகுக்கு பொறுப்புள்ள சிறந்த ஸ்தானம் இருந்தது, ஆனால் அவன் திருப்தியடையவில்லை. பூமியிலிருந்த எவரைப் பார்க்கிலும் அதிக சாந்த குணமுள்ளவராக இருந்த, கடவுளுடைய ஊழியராகிய மோசேக்கு எதிராக கலகத்தைத் தூண்டிவிட்டான். (எண்ணாகமம் 12:3; 16:1-3, 32, 33) காயீன், பிலேயாம், கோராகு ஆகியோருக்கு தீங்கு நேரிட்டது. பொறுப்புள்ள ஸ்தானங்களில் யெகோவாவால் பயன்படுத்தப்படுபவர்களின் அறிவுரைக்குச் செவிகொடுக்கும்படியும், அவர்களுக்கு மரியாதை கொடுக்கும்படியும் இந்த உதாரணங்கள் எவ்வளவு தெளிவாக நமக்குக் கற்பிக்கின்றன!
13. மூப்பர் ஏற்பாட்டிற்கு கீழ்ப்படிந்திருப்போருக்கு என்ன ஆசீர்வாதங்களை தீர்க்கதரிசியாகிய ஏசாயா முன்னறிவித்தார்?
13 கிறிஸ்தவ சபையில் நம்முடைய தலைவர் ஏற்பாடு செய்திருக்கிற கண்காணிப்புக்குரிய மகத்தான ஏற்பாட்டிலிருந்து நன்மையடைய யாருக்குத்தான் விருப்பம் இராது? இதனால் உண்டாகும் ஆசீர்வாதங்களை முன்னறிவித்து தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு சொன்னார்: “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள். அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.” (ஏசாயா 32:1, 2) மூப்பர்கள் ஒவ்வொருவரும் அத்தகைய பாதுகாப்பான ‘ஒதுக்கிடமாக’ இருக்க வேண்டும். அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டு இருப்பது நமக்குக் கடினமாக இருந்தாலும், சபையில் கடவுள் நியமித்திருக்கும் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கும்படி ஜெபத்துடன் முயற்சி செய்வோமாக.
கிறிஸ்துவின் தலைமைக்கு மூப்பர்கள் எவ்வாறு கீழ்ப்படிகிறார்கள்
14, 15. சபையில் தலைமை வகிப்போர், கிறிஸ்துவின் தலைமைக்கு தங்களைக் கீழ்ப்படுத்துவதை எவ்வாறு காட்டுகிறார்கள்?
14 கிறிஸ்துவின் தலைமையை ஒவ்வொரு கிறிஸ்தவனும், முக்கியமாய் மூப்பர்கள் பின்பற்ற வேண்டும். கண்காணிகளுக்கு அல்லது மூப்பர்களுக்கு சபையில் ஓரளவு அதிகாரம் இருக்கிறது. ஆனால் தங்கள் உடன் விசுவாசிகளின் வாழ்க்கையை அடக்கியாள முயலுவதன் மூலம் அவர்கள் ‘விசுவாசத்தின்மீது அதிகாரிகளாயிருக்க’ நாடுகிறதில்லை. (2 கொரிந்தியர் 1:24) இயேசுவின் இவ்வார்த்தைகளை மூப்பர்கள் கவனத்தில் ஏற்கிறார்கள்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது.” (மத்தேயு 20:25-27) மூப்பர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுகையில், மற்றவர்களுக்குச் சேவை செய்ய உள்ளப்பூர்வமாய் முயற்சி செய்கிறார்கள்.
15 கிறிஸ்தவர்கள் இவ்வாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்: “உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” (எபிரெயர் 13:7) மூப்பர்கள் தலைமை வகிப்பதால் கிறிஸ்தவர்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்ற நியதியில்லை. இயேசு சொன்னார்: “உங்கள் தலைவர் ஒருவரே, அவர் கிறிஸ்துவே.” (மத்தேயு 23:10, NW) மூப்பர்களின் விசுவாசத்தையே கிறிஸ்தவர்கள் பார்த்துப் பின்பற்ற வேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் நம்முடைய மெய்யான தலைவராகிய கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். (1 கொரிந்தியர் 11:1) சபையில் மற்றவர்களுடன் வைத்திருக்கும் உறவில் கிறிஸ்துவைப் போன்று இருக்க மூப்பர்கள் முயற்சி செய்யும் சில வழிகளைக் கவனியுங்கள்.
16. தமக்கு அதிகாரம் இருந்தபோதிலும் இயேசு தம்மைப் பின்பற்றினோரை எவ்வாறு நடத்தினார்?
16 இயேசு எல்லா வகையிலும் அபூரண மனிதருக்கு மேலானவராகவும் தமது பிதாவிடமிருந்து ஒப்பற்ற அதிகாரத்தைப் பெற்றவராகவும் இருந்தபோதிலும், தமது சீஷர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டார். தமக்கிருந்த அறிவை பகட்டாக காட்டிக்கொண்டு, தமக்குச் செவிகொடுத்துக் கேட்போரைத் திணறடிக்கவில்லை. இயேசு தம்மைப் பின்பற்றுவோரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பரிவு காட்டி, மனிதருக்கே உரிய அவர்களுடைய தேவைகளை கவனத்தில் வைத்து செயல்பட்டார். (மத்தேயு 15:32; 26:40, 41; மாற்கு 6:31) தம்முடைய சீஷர்கள் செய்ய முடிந்ததற்கும் அதிகமாக அவர் ஒருபோதும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் புரிந்துகொள்ள முடிந்ததற்கும் அதிகமான விஷயங்களை அவர் ஒருபோதும் அவர்கள்மீது திணிக்கவில்லை. (யோவான் 16:12) இயேசு “சாந்தமும் மனத்தாழ்மையும்” உள்ளவராக இருந்தார். பலர் அவரில் புத்துணர்ச்சியைக் கண்டடைந்ததில் ஆச்சரியமில்லை.—மத்தேயு 11:28-30.
17. மூப்பர்கள் சபையிலுள்ள மற்றவர்களிடம் வைத்திருக்கும் உறவில் எவ்வாறு கிறிஸ்துவைப் போன்ற பணிவை காட்ட வேண்டும்?
17 தலைவராகிய கிறிஸ்துவே பணிவுடன் நடந்துகொண்டார் என்றால், சபையில் தலைமை வகிப்பவர்கள் எவ்வளவு அதிகமாக அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்! ஆம், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட எந்த அதிகாரத்தையும் தவறான முறையில் பயன்படுத்தாதபடி அவர்கள் கவனமாயிருக்கிறார்கள், மேலும் அவர்கள் மற்றவர்களை கவருவதற்காக ‘சிறந்த வசனிப்போடு வருவதில்லை.’ (1 கொரிந்தியர் 2:1, 2) மாறாக, வேதப்பூர்வ சத்தியத்தின் வார்த்தைகளை எளிதான முறையிலும் உள்ளப்பூர்வமாயும் பேசும்படி பிரயாசப்படுகிறார்கள். மேலும், மற்றவர்களிடம் தாங்கள் எதிர்பார்ப்பவற்றில் நியாயமாயிருக்கவும், அவர்களுடைய தேவைகளை கவனத்தில் ஏற்று செயல்படவும் மூப்பர்கள் கடினமாய் முயற்சி செய்கிறார்கள். (பிலிப்பியர் 4:5) எல்லோருக்கும் வரையறைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு சகோதரரை நடத்தும்போது இவற்றை கவனத்தில் வைக்கிறார்கள். (1 பேதுரு 4:8) மனத்தாழ்மையும் சாந்த குணமுமுள்ள மூப்பர்கள் மெய்யாகவே புத்துணர்ச்சி அளிப்பவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? நிச்சயமாகவே இருக்கிறார்கள்.
18. பிள்ளைகளை இயேசு நடத்தின முறையிலிருந்து மூப்பர்கள் எதைக் கற்றுக்கொள்ளலாம்?
18 தாழ்ந்தவர்களும்கூட இயேசுவை எளிதில் அணுக முடிந்தது. ‘சிறு பிள்ளைகளை அவரிடத்தில் கொண்டுவந்தவர்களை’ அவருடைய சீஷர்கள் அதட்டினபோது, இயேசு நடந்துகொண்ட விதத்தைக் கவனியுங்கள். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்” என்று கூறினார். பின்னர் “அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.” (மாற்கு 10:13-16) இயேசு பாசமும் கனிவும் மிகுந்தவராக இருந்தார். மற்றவர்கள் அவரிடமாக வசீகரிக்கப்பட்டார்கள். ஜனங்களுக்கு இயேசுவிடம் எந்தப் பயமும் இருக்கவில்லை. பிள்ளைகளுங்கூட அவர் முன்னிலையில் தயக்கமின்றி வந்தார்கள். எனவே மூப்பர்களுங்கூட அணுகக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அன்போடும் பாசத்தோடும் கனிவோடும் நடந்துகொள்கையில், மற்றவர்கள், ஆம், பிள்ளைகளுங்கூட அவர்களிடம் தயங்காமல் வருவார்கள்.
19. ‘கிறிஸ்துவின் சிந்தையை’ உடையோராக இருப்பது எதை உட்படுத்துகிறது, இதற்கு என்ன முயற்சி தேவை?
19 கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரியை மூப்பர்கள் எந்த அளவுக்குப் பின்பற்றலாம் என்பது அவரை அவர்கள் எவ்வளவு நன்றாய் அறிந்திருக்கிறார்கள் என்பதையே சார்ந்திருக்கிறது. “கர்த்தருக்குப் [“யெகோவாவுக்கு,” NW] போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” என்று பவுல் கேட்டார். பின்பு அவர் இவ்வாறு மேலும் சொன்னார்: “எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 2:16) கிறிஸ்துவின் சிந்தையை உடையோராக இருப்பது, அவர் சிந்திக்கும் முறையையும் அவருடைய குணாதிசயத்தின் எல்லா அம்சங்களையும் நன்கு அறிந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் என்ன செய்வாரென்று அறிந்திருப்பதைக் குறிக்கிறது. நம்முடைய தலைவரை அவ்வளவு நன்றாய் அறிவதைக் கற்பனை செய்து பாருங்கள்! ஆம், இது சுவிசேஷ விவரங்களுக்கு கூர்ந்து கவனம் செலுத்துவதை தேவைப்படுத்துகிறது; அதுமட்டுமல்ல, இயேசுவின் வாழ்க்கையையும் முன்மாதிரியையும் புரிந்துகொள்வதுடன் தவறாமல் அவற்றை நம்முடைய மனதில் தொடர்ந்து நிரப்பி வருவதையும் தேவைப்படுத்துகிறது. இந்தளவுக்கு மூப்பர்கள் கிறிஸ்துவின் வழிநடத்துதலைப் பின்பற்ற முயற்சி செய்கையில், சபையிலுள்ளவர்கள் அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்துப் பின்பற்றும்படி மேன்மேலும் தூண்டப்படுவார்கள். அப்போது, தலைவரின் அடிச்சுவடுகளை மகிழ்ச்சியுடன் மற்றவர்கள் பின்பற்றுவதைக் காணும் மனதிருப்தி மூப்பர்களுக்கு இருக்கும்.
கிறிஸ்துவின் தலைமைக்கு தொடர்ந்து கீழ்ப்பட்டிருங்கள்
20, 21. வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகை நாம் எதிர்நோக்குகையில், நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
20 கிறிஸ்துவின் தலைமைக்கு நாம் எல்லாரும் தொடர்ந்து கீழ்ப்பட்டிருப்பது மிகவும் முக்கியம். இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை நாம் நெருங்குகையில், நம்முடைய நிலைமை, பொ.ச.மு. 1473-ல் மோவாப் சமவெளிகளில் இருந்த இஸ்ரவேலரின் நிலைமைக்கு ஒப்பாக இருக்கிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வாசலில் அவர்கள் இருந்தார்கள்; அப்போது தீர்க்கதரிசியாகிய மோசேயின் மூலமாய் கடவுள் இவ்வாறு கூறினார்: “யெகோவா இவர்களுக்குக் கொடுப்பதாக இவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ [யோசுவா] இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படி செய்வாய்.” (உபாகமம் 31:7, 8, தி.மொ.) யோசுவா நியமிக்கப்பட்ட தலைவராக இருந்தார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு இஸ்ரவேலர் யோசுவாவின் தலைமைத்துவத்திற்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.
21 நமக்கு பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உங்கள் தலைவர் ஒருவரே, அவர் கிறிஸ்துவே.” நீதி வாசமாயிருக்கும் வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகத்திற்குள் கிறிஸ்து ஒருவரே நம்மை வழிநடத்துவார். (2 பேதுரு 3:13) ஆகையால் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அவருடைய தலைமைத்துவத்திற்குக் கீழ்ப்படியும்படி நாம் தீர்மானித்திருப்போமாக.
[அடிக்குறிப்பு]
a இந்த ‘நட்சத்திரங்கள்’ சொல்லர்த்தமான தூதர்களை குறிக்கிறதில்லை. காணக்கூடாத ஆவி சிருஷ்டிகளின் நன்மைக்கான தகவலை பதிவு செய்வதற்கு ஒரு மனிதனை இயேசு நிச்சயமாக பயன்படுத்த மாட்டார். ஆகையால் இந்த ‘நட்சத்திரங்கள்’ இயேசுவின் செய்தியாளராக சித்தரிக்கப்பட்ட சபையிலுள்ள மனித கண்காணிகளை அல்லது மூப்பர்களை குறிக்க வேண்டும். அவர்களுடைய எண்ணிக்கை ஏழு என குறிப்பிடப்பட்டிருப்பது, கடவுளுடைய தராதரத்தின்படி முழுமையைக் குறிக்கிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஆரம்ப கால சபையை கிறிஸ்து எவ்வாறு வழிநடத்தினார்?
• இன்று கிறிஸ்து தம்முடைய சபையை எவ்வாறு வழிநடத்துகிறார்?
• சபையில் முன்நின்று நடத்துபவர்களுக்கு நாம் ஏன் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்?
• கிறிஸ்து தங்கள் தலைவர் என்பதை என்ன வழிகளில் மூப்பர்கள் காட்டலாம்?
[பக்கம் 15-ன் படம்]
கிறிஸ்து தம்முடைய சபையை வழிநடத்துகிறார், கண்காணிகளை தமது வலது கரத்தில் தாங்குகிறார்
[பக்கம் 16-ன் படங்கள்]
‘உங்களை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்’
[பக்கம் 18-ன் படம்]
இயேசு அன்புள்ளவராயும் அணுகக்கூடியவராயும் இருந்தார். கிறிஸ்தவ மூப்பர்கள் அவரைப் போலிருக்க பிரயாசப்படுகிறார்கள்