“கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்”
“‘தலைவர்’ என்றும் அழைக்கப்படாதீர்கள், கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்.”—மத். 23:10.
1. யெகோவாவின் சாட்சிகள் யாரைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறார்கள், ஏன்?
கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் மனிதர்களைத் தலைவர்களாகக் கொண்டிருக்கின்றன. ரோமிலுள்ள போப், கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளிலுள்ள முதல்வர்கள், தலைமை குருக்கள், மற்ற மதங்களிலுள்ள தலைவர்கள் ஆகியோர் இதற்கு உதாரணம். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் எந்த மனிதனையுமே தலைவராக ஏற்றுக்கொள்வதில்லை. எந்த ஒரு மனிதனையும் பின்பற்றிச் செல்வதுமில்லை. இது, தம் மகனைக் குறித்து யெகோவா தீர்க்கதரிசனமாகச் சொன்ன வார்த்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறது: “இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.” (ஏசா. 55:4) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் அவர்களுடைய தோழர்களான “வேறே ஆடுகளும்” அடங்கிய சர்வதேச சபையார், யெகோவா அளித்திருக்கும் தலைவரைத் தவிர வேறு யாரையுமே தங்களுக்குத் தலைவராகக் கொண்டிருக்க விரும்புவதில்லை. (யோவா. 10:16) “கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை இவர்கள் ஆமோதிக்கிறார்கள்.—மத். 23:10.
இஸ்ரவேலருக்குத் தலைவராய் இருந்த தூதன்
2, 3. இஸ்ரவேலருக்குத் தலைவராக கடவுளுடைய மகன் தம் பங்கை எப்படி முழு ஈடுபாடுடன் செய்தார்?
2 கிறிஸ்தவச் சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், யெகோவா தம் மக்களான இஸ்ரவேலருக்கு ஒரு தூதனைத் தலைவராகக் கொடுத்தார். இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கொண்டுவந்த பிறகு, “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது” என்று அவர்களிடம் யெகோவா சொன்னார். (யாத். 23:20, 21) ‘யெகோவாவின் நாமம் தமது உள்ளத்தில் இருந்த’ அந்தத் தேவதூதன், கடவுளுடைய தலைமகன் என்பதை நம்புவது நியாயமானதே.
3 கடவுளுடைய மகன் மனிதராகப் பிறப்பதற்கு முன், அவருக்கு மிகாவேல் என்ற பெயர் இருந்தது. தானியேல் புத்தகம், மிகாவேலை “உங்கள் [இஸ்ரவேலின்] அதிபதி” என்று அழைக்கிறது. (தானி. 10:21) தானியேலின் நாட்களுக்கு வெகு காலத்திற்கு முன்னரே இஸ்ரவேலரோடு மிகாவேல் தொடர்பு வைத்திருந்தார் என யூதா புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. மோசே மரித்த பின்பு, அவருடைய உடலைத் தனக்கு பிடித்த ஏதோவொரு விதத்தில் பயன்படுத்த சாத்தான் நினைத்தான்; ஒருவேளை இஸ்ரவேலரை உருவ வழிபாட்டில் ஈடுபட வைப்பதற்காக அவன் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், மிகாவேல் இதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கினார். இதைப் பற்றி யூதா இவ்வாறு சொல்கிறார்: “மோசேயின் உடலைக் குறித்துத் தலைமைத் தூதராகிய மிகாவேலுக்கும் பிசாசுக்கும் விவாதம் உண்டானபோது, மிகாவேல் அவனைக் கடும் சொற்களால் கண்டனம் செய்யத் துணியவில்லை; மாறாக, ‘யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்’ என்று மட்டுமே சொன்னார்.” (யூ. 9) இதற்குச் சற்று பின், அதாவது எரிகோ பட்டணம் முற்றுகையிடப்படுவதற்கு முன், யோசுவாவுக்குக் கடவுளுடைய ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர் முன் தோன்றியதும் ‘யெகோவாவுடைய சேனையின் அதிபதியாகிய’ மிகாவேல்தான் என்பதில் சந்தேகமே இல்லை. (யோசுவா 5:13-15-ஐ வாசியுங்கள்.) தீர்க்கதரிசியான தானியேலுக்கு ஒரு முக்கிய செய்தியை அறிவிப்பதற்காக வந்த தூதனை பலமிக்க ஒரு பேய் தடுக்க முயன்றபோது, தலைமைத் தூதராகிய மிகாவேலே அங்கு உதவிக்கு வந்தார்.—தானி. 10:5-7, 12-14.
முன்னறிவிக்கப்பட்ட தலைவரின் வருகை
4. மேசியாவின் வருகையைப் பற்றி என்ன தீர்க்கதரிசனம் அறிவிக்கப்பட்டது?
4 இந்தச் சம்பவத்திற்கு முன், ‘பிரபுவாகிய [தலைவராகிய] மேசியாவின்’ வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை தானியேல் தீர்க்கதரிசியிடம் தெரிவிக்க காபிரியேல் தூதனை யெகோவா அனுப்பினார். (தானி. 9:21-25)a முன்னறிவிக்கப்பட்ட அதே காலத்தில், கி.பி. 29 இலையுதிர் காலத்தில் யோவானிடம் இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அவர்மீது கடவுளுடைய சக்தி பொழியப்பட்டபோது, அவர் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாக அதாவது கிறிஸ்துவாக, மேசியாவாக ஆனார். (மத். 3:13-17; யோவா. 1:29-34; கலா. 4:4) இதனால், அவர் பிற்பாடு ஈடிணையற்ற தலைவராய் ஆகவிருந்தார்.
5. பூமிக்குரிய ஊழியத்தின்போது கிறிஸ்து எவ்விதத்தில் தலைவராகச் செயல்பட்டார்?
5 இயேசு பூமியில் ஊழியம் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே, தாம் ‘தலைவராகிய மேசியாவாக’ இருப்பதை நிரூபித்துக் காட்டினார். சில நாட்களுக்குள்ளேயே, சீடர்களை அவர் கூட்டிச் சேர்க்க ஆரம்பித்தார்; அதோடு, முதல் அற்புதத்தையும் செய்தார். (யோவா. 1:35–2:11) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் சீடர்களும் கூடவே சென்றார்கள். (லூக். 8:1) அவர்களைப் பிரசங்க வேலையில் பயிற்றுவித்தார், பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் முன்நின்று ஈடுபடுவதன்மூலம் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரி வைத்தார். (லூக். 9:1-6) இந்த விஷயத்தில், இன்று கிறிஸ்தவ மூப்பர்கள் அவரைப் பின்பற்ற வேண்டும்.
6. கிறிஸ்து எவ்வித்தில் ஒரு மேய்ப்பராகவும் தலைவராகவும் நிரூபித்தார்?
6 தம்முடைய தலைமைவகிப்பின் மற்றொரு அம்சத்தைக் குறிப்பிடுகையில், இயேசு தம்மை ஓர் அன்பான மேய்ப்பருக்கு ஒப்பிட்டார். கிழக்கத்திய நாடுகளில் மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தையைக் கண்ணும் கருத்துமாக வழிநடத்தினார்கள். தேசமும் புத்தகமும் என்ற ஆங்கில நூலில், டபிள்யூ. எம். தாம்சன் இவ்வாறு எழுதினார்: “ஒரு மேய்ப்பன் மந்தைக்கு முன் செல்வது, வழி காட்டுவதற்கு மட்டுமே அல்ல, மந்தை போகிற இடம் பாதுகாப்பானதா என்றும் மந்தையால் அவ்வழியாக போக முடியுமா என்றும் உறுதிப்படுத்துவதற்கே. . . . அவர் [தன்னுடைய] கோலால் ஆடுகளைத் தட்டி, மந்தையை பசுமையான மேய்ச்சல் இடங்களுக்கு வழிநடத்துகிறார்; எதிரிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறார்.” இயேசு, ஓர் உண்மையுள்ள மேய்ப்பராகவும் தலைவராகவும் இருப்பதைக் காட்டும் விதமாக, “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான். என் ஆடுகள் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன, நான் அவற்றை அறிந்திருக்கிறேன், அவை என்னைப் பின்பற்றி வருகின்றன” என்று சொன்னார். (யோவா. 10:11, 27) சொன்ன வார்த்தையின்படியே, இயேசு தம் ஆடுகளுக்காக தம்முடைய உயிரையே தியாகம் செய்தார்; என்றாலும், யெகோவா “அவரை அதிபதியாகவும் மீட்பராகவும் . . . உயர்த்தினார்.”—அப். 5:31; எபி. 13:20.
கிறிஸ்தவச் சபையின் கண்காணி
7. கிறிஸ்தவச் சபையை இயேசு எதன் மூலம் கண்காணிக்கிறார்?
7 உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்குச் சற்று முன்பு தம்முடைய சீடர்களிடம், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார். (மத். 28:18) சீடர்கள் சத்தியத்தில் திடமாய் இருப்பதற்கு தம்முடைய சக்தியை அளிக்கும் பொறுப்பை யெகோவா இயேசுவுக்குக் கொடுத்தார். (யோவா. 15:26) கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று, ஆரம்ப கால கிறிஸ்தவர்கள்மீது இயேசு இந்தச் சக்தியைப் பொழிந்தார். (அப். 2:33) அவ்வாறு கடவுளுடைய சக்தி பொழியப்பட்ட சமயத்தில்தான் கிறிஸ்தவச் சபை உருவானது. பரலோகத்தில் இருக்கிற தம் மகனைப் பூமியிலுள்ள சபைக்குத் தலைவராக யெகோவா நியமித்தார். (எபேசியர் 1:22-ஐயும் கொலோசெயர் 1:13, 18-ஐயும் வாசியுங்கள்.) ஆகவே, கிறிஸ்தவச் சபையை யெகோவாவுடைய சக்தியின் மூலம் இயேசு வழிநடத்துகிறார்; அவருக்கு உதவியாக “அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிற” தூதர்களும் இருக்கிறார்கள்.—1 பே. 3:22.
8. கிறிஸ்து தம்முடைய சீடர்களை வழிநடத்த முதல் நூற்றாண்டில் யாரைப் பயன்படுத்தினார், இன்று யாரைப் பயன்படுத்துகிறார்?
8 கிறிஸ்து சபையை வழிநடத்துவதற்கு கடவுளுடைய சக்தியின் மூலமாக வேறொரு காரியத்தையும் செய்தார்; அதாவது சிலர் சபையில் “மேய்ப்பவர்களாகவும் போதகர்களாகவும்” இருப்பதற்கு “மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுத்தார்.” (எபே. 4:8, 11) கிறிஸ்தவக் கண்காணிகளுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “உங்களுக்கும் மந்தை முழுவதற்கும் கவனம் செலுத்துங்கள்; கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்ப்பதற்குக் கடவுளுடைய சக்தி உங்களைக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது.” (அப். 20:28) கிறிஸ்தவச் சபை ஆரம்பமான சமயத்தில், இந்தக் கண்காணிகள் எல்லாருமே கடவுளுடைய சக்தியால் பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். எருசலேம் சபையிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஆளும் குழுவாகச் செயல்பட்டார்கள். பரலோக நம்பிக்கையுள்ள தமது ‘சகோதர்களின்’ முழு தொகுதியையும் வழிநடத்த கிறிஸ்து இந்தக் குழுவைப் பயன்படுத்தினார். (எபி. 2:11; அப். 16:4, 5) இந்த முடிவின் காலத்தில், கிறிஸ்து தம்முடைய “உடமைகள் எல்லாவற்றையும்,” அதாவது பூமியில் கடவுளுடைய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும், கவனிக்கும் பொறுப்பை “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பிடமும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற பரலோக நம்பிக்கையுள்ள ஆளும் குழுவிடமும் ஒப்படைத்திருக்கிறார். (மத். 24:45-47) தற்போதுள்ள இந்த ஆளும் குழுவின் வழிநடத்துதலைப் பின்பற்றுவது, உண்மையில் தங்கள் தலைவரான கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகும் என்பதைப் பரலோக நம்பிக்கையுள்ள இந்தக் கிறிஸ்தவர்களும் அவர்களுடைய தோழர்களான வேறே ஆடுகளும் அறிந்திருக்கிறார்கள்.
கிறிஸ்து பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்துகிறார்
9, 10. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பரப்புவதற்காக இயேசு என்ன செய்தார்?
9 துவக்கத்திலிருந்தே இயேசு, உலகெங்கும் நடக்கிற பிரசங்க வேலையையும் கற்பிக்கும் வேலையையும் நேரடியாக வழிநடத்தியிருக்கிறார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை பூமியிலுள்ள மக்கள் எல்லாருக்கும் எப்படி அறிவிக்க வேண்டும் என்பதில் ஓர் ஒழுங்கை நிலைநாட்டினார். தம்முடைய ஊழியத்தின்போது, அப்போஸ்தலர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “புறதேசத்தாருடைய பகுதிக்குள் போகாதீர்கள்; சமாரியருடைய நகருக்குள் நுழையாதீர்கள்; இஸ்ரவேல் வீட்டாரில் வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிறவர்களிடமே போங்கள்; அப்படிப் போகும்போது, ‘பரலோக அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது’ என்று பிரசங்கியுங்கள்.” (மத். 10:5-7) முக்கியமாக, இந்த வேலையை கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, யூதர்கள் மற்றும் யூத மதத்திற்கு மாறியவர்கள் மத்தியில் அவர்கள் பக்திவைராக்கியத்துடன் செய்தார்கள்.—அப். 2:4, 5, 10, 11; 5:42; 6:7.
10 பிற்பாடு இயேசு, கடவுளுடைய சக்தியின் உதவியோடு சமாரியர்களுக்கும், அதன் பிறகு யூதரல்லாதவர்களுக்கும் பரலோக அரசாங்கத்தைப் பற்றிய செய்தி எட்டும்படி செய்தார். (அப். 8:5, 6, 14-17; 10:19-22, 44, 45) புற தேசத்தாருக்கும் நற்செய்தி எட்ட வேண்டுமென்பதற்காக, தர்சு நகரைச் சேர்ந்த சவுலைக் கிறிஸ்தவராக மாறும்படி தூண்டுவதற்கு இயேசு தாமே செயல்பட்டார். அவர் தம்முடைய சீடரான அனனியாவுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “நீ எழுந்து, நேர் தெரு எனப்படும் தெருவுக்குப் போ; யூதாஸ் என்பவருடைய வீட்டில் தர்சு நகரைச் சேர்ந்த சவுல் என்ற மனிதனைப் போய்ப் பார். . . . நீ புறப்பட்டுப் போ, ஏனென்றால், புறதேசத்தாருக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் என்னுடைய பெயரை அறிவிப்பதற்கு அவனை ஒரு கருவியாக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.” (அப். 9:3-6, 10, 11, 15) அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பிற்பாடு அப்போஸ்தலன் பவுல் ஆனார்.—1 தீ. 2:7.
11. கடவுளுடைய சக்தியால் கிறிஸ்து எவ்வாறு புற தேசங்களிலும் நற்செய்தி எட்டும்படி செய்தார்?
11 யூதரல்லாதவர்களின் தேசங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான சமயம் வந்தபோது, கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்பட்ட பவுல் ஆசியா மைனருக்கும் ஐரோப்பாவுக்கும் மிஷனரி பயணங்களை மேற்கொண்டார். அப்போஸ்தலர் புத்தகத்திலுள்ள லூக்காவின் பதிவு இவ்வாறு சொல்கிறது: “அவர்கள் [சீரியாவின் அந்தியோகியாவிலுள்ள சபையைச் சேர்ந்த தீர்க்கதரிசிகளும் போதகர்களும்] யெகோவாவுக்கு ஊழியம் செய்தும் விரதமிருந்தும் வந்தபோது, ‘பர்னபாவையும் சவுலையும் எந்த வேலைக்காக நான் அழைத்திருக்கிறேனோ அந்த வேலைக்காக அவர்களை எனக்கென்று ஒதுக்கிவையுங்கள்’ என்று கடவுளுடைய சக்தி தெரிவித்தது. அதன்பின் அவர்கள் விரதமிருந்து, ஜெபம் செய்து, அவ்விருவர்மீதும் கைகளை வைத்து அவர்களை அனுப்பினார்கள்.” (அப். 13:2, 3) தம்முடைய பெயரைப் புற தேசத்தாருக்கு அறிவிப்பதற்காக தர்சு நகரைச் சேர்ந்த சவுலை இயேசு ‘ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்திருந்தார்’; ஆகவே, சாட்சி கொடுக்கும் வேலையில் இந்தப் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் சபையின் தலைவரான கிறிஸ்துவே. இயேசு, இந்த வேலையை வழிநடத்துவதற்கு கடவுளுடைய சக்தியைப் பயன்படுத்தினார் என்பதை பவுலின் இரண்டாம் மிஷனரி பயணம் தெளிவுபடுத்தியது. பவுலும் அவருடைய பயணத் தோழர்களும் எங்கு பயணிக்க வேண்டும், எப்போது பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க “இயேசுவுக்கு அருளப்பட்ட கடவுளுடைய சக்தி” அவர்களுக்கு உதவியது என அந்தப் பதிவு குறிப்பிடுகிறது; அதுமட்டுமல்ல அவர்கள் கண்ட ஒரு தரிசனமே ஐரோப்பாவுக்குச் செல்ல அவர்களைத் தூண்டியது என்றும் அது குறிப்பிடுகிறது.—அப்போஸ்தலர் 16:6-10-ஐ வாசியுங்கள்.
சபைமீது இயேசுவின் தலைமைவகிப்பு
12, 13. கிறிஸ்து ஒவ்வொரு சபையிலும் நடப்பதை உற்று கவனித்து வருகிறார் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் எப்படிக் காட்டுகிறது?
12 முதல் நூற்றாண்டிலிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் சபைகளில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை இயேசு உற்று கவனித்தார். ஒவ்வொரு சபையின் ஆன்மீக நிலையையும் அவர் நன்கு அறிந்திருந்தார். வெளிப்படுத்துதல் 2, 3 அதிகாரங்களை நாம் வாசிக்கும்போது இது தெளிவாகிறது. அந்த அதிகாரங்களில் ஏழு சபைகளின் பெயரை அவர் குறிப்பிடுகிறார்; அவை எல்லாமே ஆசியா மைனரிலிருந்த சபைகள். (வெளி. 1:11) அப்படியானால், அந்தச் சமயத்தில் பூமியிலிருந்த தம்முடைய சீடர்களின் மற்ற எல்லாச் சபைகளிலும் இருந்த ஆன்மீக நிலையையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.—வெளிப்படுத்துதல் 2:23-ஐ வாசியுங்கள்.
13 அந்தச் சபைகளில் சில சபைகளை இயேசு பாராட்டினார்; அச்சபையினர் காட்டிய சகிப்புத்தன்மை, கஷ்டத்தின் மத்தியிலும் காட்டிய உண்மைத்தன்மை, தம்முடைய வார்த்தையின் மீது வைத்த பற்றுறுதி, விசுவாசதுரோகிகளை நிராகரித்தது ஆகியவற்றிற்காக அவர்களைப் பாராட்டினார். (வெளி. 2:2, 9, 13, 19; 3:8) அதே சமயம், மற்ற சபைகளை அவர் வன்மையாகக் கண்டித்தார்; ஏனெனில், தம்மீதுள்ள அன்பு அவர்களுக்கு தணிந்துவிட்டிருந்தது, உருவ வழிபாட்டையும் பாலியல் முறைகேட்டையும் அவர்கள் கண்டும் காணாமல் விட்டிருந்தார்கள், அதோடு அவர்கள் மத்தியில் பிரிவினைகளும் இருந்தன. (வெளி. 2:4, 14, 15, 20; 3:15, 16) தாம் வன்மையாக கடிந்துகொண்ட சபைகளுக்கும் அன்புள்ள கண்காணியாக இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “என் பாசத்திற்குரிய அனைவரையும் நான் கடிந்துகொண்டு திருத்துவேன். ஆகவே, பக்திவைராக்கியத்தோடு இரு, மனந்திரும்பு.” (வெளி. 3:19) இயேசு பரலோகத்தில் இருக்கிறபோதிலும், பூமியிலிருந்த தம்முடைய சீடர்களின் சபைகளைக் கடவுளுடைய சக்தியின் மூலம் வழிநடத்தி வந்தார். அந்தச் சபைகளுக்குத் தெரிவித்த செய்திகளின் முடிவில், “கடவுளுடைய சக்தி சபைகளுக்குத் தெரிவிப்பதைக் காதுள்ளவன் கேட்கட்டும்” என்று அறிவித்தார்.—வெளி. 3:22.
14-16. (அ) பூமியிலுள்ள யெகோவாவின் மக்களுக்கு இயேசு எப்படி வீரதீரமிக்க தலைவராய் இருந்திருக்கிறார்? (ஆ) “இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும்” இயேசு தம்முடைய சீடர்களோடு “கூட” இருப்பதால் என்ன விளைவடைந்திருக்கிறது? (இ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றி கவனிப்போம்?
14 தலைமைத் தூதரான மிகாவேல் (இயேசு), இஸ்ரவேலருக்கு வலிமைமிக்கத் தலைவராய் இருந்தார் என்பதை நாம் பார்த்தோம். பிற்பாடு, அவர் தம்முடைய ஆரம்பகால சீடர்களுக்கு வீரதீரமிக்க தலைவராகவும் அன்பான மேய்ப்பராகவும் இருந்தார். அவர் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது, பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்தினார். உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி எங்கும் பிரசங்கிக்கப்படுவதற்காக அதை நன்கு மேற்பார்வை செய்தார்.
15 கடவுளுடைய சக்தியின் உதவியால், இந்த வேலை பிற்பாடு பூமியின் கடைக்கோடியிலும் செய்யப்படும்படி இயேசு பார்த்துக்கொள்வார். அவர் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன் தம்முடைய சீடர்களிடம் இவ்வாறு சொன்னார்: “கடவுளுடைய சக்தி உங்கள்மீது வரும்போது நீங்கள் பலம் பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.” (அப். 1:8; 1 பேதுரு 1:12-ஐ வாசியுங்கள்.) முதல் நூற்றாண்டில், கிறிஸ்துவின் வழிநடத்துதலால் மாபெரும் சாட்சி கொடுக்கப்பட்டது.—கொலோ. 1:23.
16 ஆனால், இந்த வேலை முடிவு காலம்வரையாகத் தொடரும் என இயேசுதாமே குறிப்பாகத் தெரிவித்தார். எல்லாத் தேசங்களிலும் பிரசங்கித்து மக்களைச் சீடராக்கும்படி தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் கட்டளையிட்ட பிறகு, “இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்” என்ற உறுதியையும் அவர்களுக்கு அளித்தார். (மத். 28:19, 20) கிறிஸ்துவுக்கு 1914-ல் ராஜ அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதால், முன்பைவிட இப்போது அவர் முழுக்க முழுக்க தம்முடைய சீடர்களோடு “கூட” இருந்து, அவர்களுடைய தலைவராக விறுவிறுப்புடன் செயல்படுகிறார். குறிப்பாக, 1914-லிருந்து அவர் எப்படித் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் என்பதை அடுத்த கட்டுரையில் கவனிக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள, தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தின் 11-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.
மறுபார்வைக்கு
• இஸ்ரவேலில் கடவுளுடைய மகன் எவ்வாறு விறுவிறுப்பான தலைவராகச் செயல்பட்டார்?
• கிறிஸ்து பூமியிலுள்ள தம்முடைய சபையை எதன் மூலம் வழிநடத்துகிறார்?
• நற்செய்தி எங்கும் பிரசங்கிக்கப்படுவதை கிறிஸ்து எப்படி வழிநடத்தியிருக்கிறார்?
• ஒவ்வொரு சபையின் ஆன்மீக நிலையை கிறிஸ்து உற்று கவனிக்கிறார் என்பதை எது காட்டுகிறது?
[பக்கம் 21-ன் படம்]
“நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்”
[பக்கம் 23-ன் படம்]
பூர்வத்தில் செய்ததுபோல் இன்றும் கிறிஸ்து தம் மந்தையைக் கவனிக்க ‘மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுக்கிறார்’