சந்தோஷத்தை அள்ளித்தரும் இயேசுவின் வார்த்தைகள்
‘[இயேசு] . . . மலையின்மேல் ஏறினார்; . . . அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் . . . அவர்களுக்கு உபதேசித்தார்.’—மத். 5:1, 2.
1, 2. (அ) எந்தச் சூழ்நிலையில் இயேசு தம் மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தார்? (ஆ) இயேசு தம் சொற்பொழிவை என்ன சொல்லி ஆரம்பித்தார்?
வருடம் பொ.ச. 31. இயேசு கலிலேயாவில் ஊழியம் செய்வதைச் சற்று நிறுத்திவிட்டு பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்கு வருகிறார். (யோவா. 5:1) கலிலேயாவுக்குத் திரும்பி வந்தபின், 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்க உதவுமாறு கடவுளிடம் இரவு முழுக்க ஜெபம் செய்கிறார். மறுநாள், அவர் சுகவீனரைச் சுகப்படுத்துகிறார்; மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர் மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்து, கூடியிருக்கிற மக்களுக்கும் சீஷர்களுக்கும் போதிக்கத் தொடங்குகிறார்.—மத். 4:23–5:2; லூக். 6:12-19.
2 கடவுளோடுள்ள நல்லுறவே சந்தோஷத்திற்கு வழி என்று சொல்லி இயேசு தம் மலைப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். (மத்தேயு 5:1-12-ஐ வாசியுங்கள்.) சந்தோஷம் என்பது ‘மனத்திருப்திமுதல் பேரின்பம்வரையான எல்லா உணர்ச்சிகளையும் உட்படுத்துகிறது.’ சந்தோஷத்திற்கான ஒன்பது வழிகளை இயேசு சொன்னார்; கிறிஸ்தவர்கள் ஏன் சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. சுமார் 2,000 வருடங்களுக்குமுன் அவை எந்தளவுக்குப் பயனுள்ளவையாய் இருந்தனவோ அவ்வாறே இன்றும் பயனுள்ளவையாய் இருக்கின்றன. அந்த வழிகள் ஒவ்வொன்றையும் நாம் இப்போது சிந்திக்கலாம்.
‘ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியுள்ளவர்கள்’
3. ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருப்பதன் அர்த்தம் என்ன?
3 “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுக்குரியது.” (மத். 5:3, NW) “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள்,” ஆன்மீக ரீதியில் தாங்கள் ஏழைகள் என்பதையும் கடவுளுடைய இரக்கம் தங்களுக்குத் தேவை என்பதையும் உணருகிறார்கள்.
4, 5. (அ) ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் ஏன் சந்தோஷமானவர்கள்? (ஆ) நம் ஆர்வப்பசியை எப்படித் திருப்தி செய்யலாம்?
4 ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்; “ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுக்குரியது.” இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் அவரை மேசியாவாக ஏற்றுக்கொண்டதால், பரலோக அரசாங்கத்தில் அவரோடு ஆட்சி செய்யும் வாய்ப்பைப் பெற்றார்கள். (லூக். 22:28-30) நாம் கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆட்சி செய்யப் போகிறவர்களாக இருந்தாலும் சரி அந்த ஆட்சியின்கீழ் பூங்காவனப் பூமியில் என்றென்றும் வாழப்போகிறவர்களாக இருந்தாலும் சரி, ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருந்து, கடவுளைச் சார்ந்திருப்பதன் அவசியத்தை முழுமையாக உணர்ந்திருந்தால், நாம் சந்தோஷமாய் இருக்க முடியும்.
5 எல்லாருமே ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியுடன் இருப்பதில்லை; ஏனென்றால், அவர்களுக்கு விசுவாசமும் இல்லை, பரிசுத்த காரியங்களின்மீது மதிப்பும் இல்லை. (2 தெ. 3:1, 2; எபி. 12:16, NW) பைபிளை ஊக்கமாய்ப் படிப்பது, சீஷராக்கும் வேலையில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுவது, கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது போன்றவை நம் ஆர்வப்பசியைத் திருப்தி செய்வதற்கான சில வழிகளாகும்.—மத். 28:19, 20; எபி. 10:23-25.
துயரப்படுகிறவர்கள் “சந்தோஷமானவர்கள்”
6. “துயரப்படுகிறவர்கள்” யார், அவர்கள் ஏன் “சந்தோஷமானவர்கள்”?
6 “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமானவர்கள்,” NW]; அவர்கள் ஆறுதலடைவார்கள்.” (மத். 5:4) “துயரப்படுகிறவர்கள்,” ‘ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியுள்ளவர்களை’ போன்றவர்களே. அவர்கள் துயரப்படுவது, தங்களுடைய வாழ்க்கையின் கவலைகளைக் குறித்து வருந்துவதை அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, தங்களுடைய பாவ நிலையைக் குறித்தும் மனித அபூரணத்தின் விளைவுகளைக் குறித்தும் வருந்துவதை அர்த்தப்படுத்துகிறது. அப்படித் துயரப்படுகிறவர்கள் ஏன் “சந்தோஷமானவர்கள்”? ஏனென்றால், அவர்கள் கடவுள்மீதும் கிறிஸ்துமீதும் விசுவாசம் வைக்கிறார்கள்; அதோடு, யெகோவாவுடன் நல்ல பந்தத்தை அனுபவிப்பதன் மூலம் ஆறுதலைப் பெறுகிறார்கள்.—யோவா. 3:36.
7. சாத்தானுடைய உலகத்தைக் குறித்து நாம் எப்படி உணருகிறோம்?
7 சாத்தானுடைய உலகத்தில் மலிந்துகிடக்கும் அநியாயத்தைக் கண்டு நாம் தனிப்பட்ட விதத்தில் துயரப்படுகிறோமா? இந்த உலகம் நமக்கு அளிப்பவற்றைக் குறித்து உண்மையிலேயே எப்படி உணருகிறோம்? அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: ‘மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.’ (1 யோ. 2:16) ‘உலகத்தின் ஆவி,’ அதாவது யெகோவாவிடமிருந்து பிரிந்திருக்கிற மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் மனப்பான்மை, அவருடன் உள்ள நம் பந்தத்தைப் பாதிப்பதாக உணர்ந்தால் என்ன செய்யலாம்? ஊக்கமாக ஜெபம் செய்யலாம், கடவுளுடைய வார்த்தையைப் படிக்கலாம், மூப்பர்களின் உதவியை நாடலாம். யெகோவாவிடம் நாம் நெருங்க நெருங்க, எப்பேர்ப்பட்ட வேதனைகளின் மத்தியிலும் நாம் ‘ஆறுதலைக் கண்டடைவோம்.’—1 கொ. 2:12; சங். 119:52, NW; யாக். 5:14, 15.
“சாந்தகுணமுள்ளவர்கள்” எந்தளவு சந்தோஷமானவர்கள்!
8, 9. சாந்தகுணமுள்ளவர்களாய் இருப்பதன் அர்த்தம் என்ன, சாந்தகுணமுள்ளவர்கள் ஏன் சந்தோஷமானவர்கள்?
8 “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமானவர்கள்,” NW]; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” (மத். 5:5) ‘சாந்தகுணம்’ என்பது பலவீனத்தையோ பார்வைக்கு மட்டுமே மென்மையாயிருப்பதையோ அர்த்தப்படுத்துவதில்லை. (1 தீ. 6:11) நாம் சாந்தகுணமுள்ளவர்களாய் இருந்தால், யெகோவாவின் சித்தத்தைச் செய்வதன் மூலமும், அவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வதன் மூலமும் சாந்தத்தைக் காட்டுவோம். சக கிறிஸ்தவர்களிடமும் மற்றவர்களிடமும் நாம் நடந்துகொள்ளும் விதத்திலும் நாம் சாந்தத்தைக் காட்டுவோம். அப்படிப்பட்ட சாந்தம், அப்போஸ்தலன் பவுல் கொடுத்த ஆலோசனைக்கு இசைவாக இருக்கிறது.—ரோமர் 12:17-19-ஐ வாசியுங்கள்.
9 சாந்தகுணமுள்ளவர்கள் ஏன் சந்தோஷமானவர்கள்? ஏனென்றால், “அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்று சாந்தகுணம் படைத்த இயேசு சொன்னார். பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதில் அவரே பிரதானமானவர். (சங். 2:8; மத். 11:29; எபி. 2:8, 9) என்றாலும், ‘கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரரான’ சாந்தகுணமுள்ளவர்களும் அவரோடு சேர்ந்து பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். (ரோ. 8:16, 17) சாந்தகுணமுள்ள மற்றவர்கள், இயேசு பூமியை ஆட்சி செய்யும்போது அதில் என்றென்றும் வாழ்வார்கள்.—சங். 37:10, 11.
10. நமக்குச் சாந்தகுணம் இல்லையென்றால் சபையில் நாம் பெறும் பொறுப்புகளும் மற்றவர்களோடு நமக்குள்ள உறவும் எப்படிப் பாதிக்கப்படும்?
10 இயேசுவைப் போல நாமும் சாந்தகுணமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். ஆனால், நாம் சண்டைக்காரர்கள் என்ற பெயரெடுத்திருந்தால் என்ன ஆகும்? நம்முடைய முரட்டு குணத்தைப் பார்த்து மற்றவர்கள் தூர விலகிப்போவார்கள். அதோடு, நாம் சபையில் பொறுப்புகளைப் பெற விரும்புகிற சகோதரர்களாக இருந்தால் அவற்றைப் பெறுவதற்கான தகுதியை இழந்துவிடுவோம். (1 தீ. 3:1, 3) “சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும்” கிரேத்தாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்குத் தொடர்ந்து நினைப்பூட்டும்படி தீத்துவிடம் பவுல் சொன்னார். (தீத். 3:1, 2) இந்தச் சாந்தகுணம் மற்றவர்களுக்கு எப்பேர்ப்பட்ட ஒரு வரப்பிரசாதம்!
“நீதியின்மேல்” பசிதாகமுள்ளவர்கள்
11-13. (அ) நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாக இருப்பதன் அர்த்தம் என்ன? (ஆ) நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் எவ்வாறு “திருப்தியடைவார்கள்”?
11 “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமானவர்கள்,” NW]; அவர்கள் திருப்தியடைவார்கள்.” (மத். 5:6) இயேசு “நீதி” என்று சொன்னபோது, கடவுளுடைய சித்தத்திற்கும் கட்டளைகளுக்கும் ஏற்ப சரியானதைச் செய்யும் பண்பையே அர்த்தப்படுத்தினார். கடவுளுடைய நீதிநெறிகளுக்காக ‘ஏங்கி உருகுவதாக’ சங்கீதக்காரன் சொன்னார். (சங். 119:20, பொது மொழிபெயர்ப்பு) நீதியின்மேல் நமக்குப் பசிதாகம் இருக்குமளவுக்கு அதை மதிப்புமிக்கதாய்க் கருதுகிறோமா?
12 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள் என்று இயேசு சொன்னார்; ஏனென்றால், அவர்கள் “திருப்தியடைவார்கள்” என்றார். அது, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு சாத்தியமானது; அதுமுதல், யெகோவாவின் சக்தி ‘நீதியைக் குறித்து உலகத்திற்கு உணர்த்த’ ஆரம்பித்தது. (யோவா. 16:8) அந்தச் சக்தியின் மூலம், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைத் தொகுத்து எழுதும்படி மனிதரைக் கடவுள் தூண்டினார்; இந்த வேதாகமம் ‘நீதியைப் படிப்பிக்க’ மிகவும் பிரயோஜனமுள்ளது. (2 தீ. 3:17) கடவுளுடைய சக்தி, ‘மெய்யான நீதியில் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளவும்’ நமக்கு உதவுகிறது. (எபே. 4:24) பாவங்களுக்காக மனந்திரும்பி இயேசுவின் மீட்புப் பலியின் அடிப்படையில் மன்னிப்பு கேட்கிறவர்கள் கடவுளுக்குமுன் நீதியுள்ளவர்களாக இருக்க முடியும் என்பது ஆறுதல் அளிக்கிறதல்லவா?—ரோமர் 3:23, 24-ஐ வாசியுங்கள்.
13 நாம் பூமிக்குரிய நம்பிக்கை உடையவர்களா? அப்படியென்றால், நீதியின்மீது நமக்கிருக்கிற பசிதாகம், நீதியுள்ள புதிய உலகில் முடிவில்லா வாழ்வைப் பெறும்போது முழுமையாகத் தணிந்துவிடும். அதுவரை, யெகோவாவின் நெறிகள்படி வாழத் தீர்மானமாய் இருப்போமாக. “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 6:33) அப்படிச் செய்தால், கடவுளுடைய சேவையில் அதிகமதிகமாக ஈடுபட முடியும், அதனால் அளவற்ற சந்தோஷத்தைப் பெறவும் முடியும்.—1 கொ. 15:58.
“இரக்கமுள்ளவர்கள்” ஏன் சந்தோஷமானவர்கள்
14, 15. நாம் எப்படி இரக்கத்தோடு நடந்துகொள்ளலாம், “இரக்கமுள்ளவர்கள்” ஏன் சந்தோஷமானவர்கள்?
14 “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமானவர்கள்,” NW]; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” (மத். 5:7) “இரக்கமுள்ளவர்கள்” மற்றவர்கள்மேல் மனதுருகி, கரிசனை காட்டுகிறார்கள். இயேசு திரளான மக்களைக் கண்டு மனதுருகியதால் அவர்களை அற்புதமாகக் குணப்படுத்தினார். (மத். 14:14) மனந்திரும்புகிறவர்களை யெகோவா இரக்கத்தோடு மன்னிக்கிறார்; ஒருவர் தனக்குத் தீங்கு செய்தவரை மன்னிக்கையில் அவர் யெகோவாவைப் போல் இரக்கம் காட்டுகிறார். (யாத். 34:6, 7; சங். 103:10) இவ்வாறு மன்னிப்பதன் மூலமும், கஷ்டத்தில் இருப்போருக்கு அன்பான வார்த்தைகளாலும் செயல்களாலும் தெம்பளிப்பதன் மூலமும் நாம் இரக்கம் காட்டலாம். பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்வது இரக்கம் காட்டுவதற்குச் சிறந்த வழியாகும். இயேசு மக்களைக் கண்டு மனதுருகியதால் “அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.”—மாற். 6:34.
15 ‘இரக்கமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்’ என்று இயேசு சொன்னதை நாமும் ஒத்துக்கொள்ள நல்ல காரணங்கள் இருக்கின்றன. நாம் மற்றவர்களிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டால் அவர்களும் நம்மிடம் இரக்கத்தோடு நடந்துகொள்வார்கள். நாம் இப்படி இரக்கத்தோடு நடந்துகொண்டால் நியாயத்தீர்ப்பின் சமயத்தில் கடவுள் நம்மைக் கடுமையாக நியாயந்தீர்க்க மாட்டார். (யாக். 2:13) பாவங்களுக்கான மன்னிப்பும் முடிவில்லா வாழ்வும் இரக்கம் காட்டுகிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.—மத். 6:15.
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்” ஏன் சந்தோஷமானவர்கள்
16. ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய்’ இருப்பதன் அர்த்தமென்ன, அவர்கள் எப்படி “தேவனைத் தரிசிப்பார்கள்”?
16 “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமானவர்கள்,” NW]; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.” (மத். 5:8) நாம் ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய்’ இருந்தால் நம் ஆசைகளும் விருப்பங்களும் உள்ளெண்ணங்களும் சுத்தமாக இருக்கும். மேலும், ‘சுத்தமான இருதயத்திலிருந்து பிறக்கும் அன்பை’ நாம் வெளிக்காட்டுவோம். (1 தீ. 1:5) நாம் உள்ளத்தில் சுத்தமாக இருந்தால் ‘தேவனைத் தரிசிப்போம்.’ யெகோவாவை நேருக்குநேர் பார்ப்போமென்று இது அர்த்தப்படுத்துவதில்லை; ஏனெனில், ‘எந்தவொரு மனுஷனும் கடவுளைக் கண்டு உயிரோடிருக்க’ முடியாது. (யாத். 33:20) என்றாலும், இயேசு அச்சுப்பிசகாமல் கடவுளுடைய குணங்களை வெளிக்காட்டியதால் “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவா. 14:7-9) பூமியில் யெகோவாவை வழிபடுகிற நாமும், அவர் நமக்காகச் செய்யும் காரியங்களைக் கவனிக்கையில் ‘அவரைத் தரிசிக்க’ முடியும். (யோபு 42:5) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோ உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு செல்லும்போது நிஜமாகவே தேவனை நேருக்குநேர் தரிசிப்பார்கள்.—1 யோ. 3:2.
17. நாம் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய் இருந்தால் எப்படி நடந்துகொள்வோம்?
17 சுத்தமான இருதயம் ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தூய்மையாய் இருக்கிறது; ஆகவே, அது யெகோவாவின் பார்வையில் அசுத்தமாய் இருக்கிற காரியங்களுக்கு இடமளிக்காது. (1 நா. 28:9; ஏசா. 52:11) நம்முடைய இருதயம் சுத்தமாக இருந்தால், நம் சொல்லும் செயலும் சுத்தமாக இருக்கும்; அதோடு, யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையில் துளியும் போலித்தனம் இருக்காது.
“சமாதானம்பண்ணுகிறவர்கள்” தேவனுடைய புத்திரராகிறார்கள்
18, 19. “சமாதானம்பண்ணுகிறவர்கள்” எப்படி நடந்துகொள்வார்கள்?
18 “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமானவர்கள்,” NW]; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” (மத். 5:9) ஒருவர் என்ன செய்கிறார் என்பதையும் என்ன செய்யாதிருக்கிறார் என்பதையும் வைத்து அவர் ‘சமாதானம்பண்ணுகிறவரா’ இல்லையா எனத் தெரிந்துகொள்ளலாம். இயேசு குறிப்பிட்ட விதமாக நாம் சமாதானம்பண்ணுகிறவர்களாய் இருந்தால், ‘ஒருவருக்கும் தீமைக்குத் தீமைசெய்ய’ மாட்டோம். மாறாக, ‘யாவருக்கும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுவோம்.’—1 தெ. 5:15.
19 நாம் சமாதானம்பண்ணுகிறவர்களாய் இருப்பதற்கு, சமாதானத்தைக் கட்டிக்காக்கத் தீவிரமாய் முயல வேண்டும். சமாதானம்பண்ணுகிறவர்கள் ‘சிநேகிதரைப் பிரித்துவிடுகிற’ எதையும் செய்யமாட்டார்கள். (நீதி. 16:28) சமாதானம்பண்ணுகிறவர்களாகிய நாம் “யாவரோடும் சமாதானமாயிருக்க” எல்லா முயற்சியும் எடுப்போம்.—எபி. 12:14.
20. இப்போது ‘தேவனுடைய புத்திரராக’ இருப்பவர்கள் யார், எதிர்காலத்தில் யாரும்கூட தேவனுடைய பிள்ளைகளாக ஆவார்கள்?
20 சமாதானம்பண்ணுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால், “அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் உண்மையோடு நிலைத்திருக்கும்போது யெகோவாவால் தத்தெடுக்கப்பட்டு அவருடைய ‘புத்திரராகிறார்கள்.’ அவர்கள் கிறிஸ்துமீது விசுவாசம் வைப்பதாலும் ‘அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவனை’ முழு இருதயத்தோடு வழிபடுவதாலும் ஏற்கெனவே யெகோவாவின் பிள்ளைகளாக அவருடன் நெருக்கமான பந்தத்தை அனுபவிக்கிறார்கள். (2 கொ. 13:11; யோவா. 1:12) சமாதானம்பண்ணுகிறவர்களாகிய இயேசுவின் ‘வேறே ஆடுகளை’ பற்றி என்ன சொல்லலாம்? இயேசு தமது ஆயிரவருட ஆட்சியில் அவர்களுக்கு ‘நித்திய பிதாவாக’ இருப்பார்; ஆனால், அதன் முடிவில் அவர் தம்மையே யெகோவாவுக்கு ஒப்படைக்கும்போது அவர்கள் முழுமையான அர்த்தத்தில் தேவனுடைய பிள்ளைகளாக ஆவார்கள்.—யோவா. 10:16; ஏசா. 9:6; ரோ. 8:20; 1 கொ. 15:27, 28.
21. “கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நாம் நடந்துவந்தால்” என்ன செய்வோம்?
21 “கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நாம் நடந்துவந்தால்” (NW) நாம் சமாதானம்பண்ணுகிறவர்கள் என்பது மற்றவர்களுக்குப் பளிச்செனத் தெரிய வரும். நாம் ‘ஒருவரையொருவர் கோபமூட்ட’ மாட்டோம். (கலா. 5:22-26) மாறாக, ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்க’ பாடுபடுவோம்.—ரோ. 12:18.
துன்பப்பட்டாலும் சந்தோஷமானவர்கள்!
22-24. (அ) நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் சந்தோஷப்படுவதற்கான காரணங்கள் என்ன? (ஆ) அடுத்த இரண்டு கட்டுரைகளில் எதைச் சிந்திப்போம்?
22 “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமானவர்கள்,” NW]; பரலோகராஜ்யம் அவர்களுடையது.” (மத். 5:10) இதைக் குறித்து இயேசு மேலும் இவ்வாறு விளக்கினார்: “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் [“சந்தோஷமானவர்களாய் இருப்பீர்கள்,” NW]; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.”—மத். 5:11, 12.
23 முற்கால தீர்க்கதரிசிகளைப் போல, கிறிஸ்தவர்களும் “நீதியினிமித்தம்” நிந்திக்கப்படலாம், துன்புறுத்தப்படலாம், பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்படலாம். என்றாலும், அப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் உண்மையோடு சகிக்கையில், யெகோவாவைப் பிரியப்படுத்தி கனப்படுத்துகிறோம் என்ற திருப்தி நமக்கு இருக்கும். (1 பே. 2:19-21) நமக்கு வருகிற துன்பம், யெகோவாவின் சேவையில் நாம் அனுபவிக்கிற இன்பத்தை இப்போது மட்டுமல்ல எப்போதுமே நம்மிடமிருந்து பறிக்க முடியாது. அதோடு, பரலோக அரசாங்கத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யும் சந்தோஷத்தையும் சரி அந்த அரசாங்கத்தின் குடிமக்களாக பூமியில் என்றென்றும் வாழும் சந்தோஷத்தையும் சரி, நம்மிடமிருந்து பறிக்க முடியாது. இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம், கடவுளுடைய தயவுக்கும், கருணைக்கும், தாராளகுணத்துக்கும் அத்தாட்சி அளிக்கின்றன.
24 மலைப்பிரசங்கத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அடுத்த இரண்டு கட்டுரைகளில் அவற்றை நாம் ஆராயலாம். இயேசு கிறிஸ்து சொன்னவற்றை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதையும் சிந்திக்கலாம்.
என்ன பதில் சொல்வீர்கள்?
• “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள்” ஏன் சந்தோஷமானவர்கள்?
• “சாந்தகுணமுள்ளவர்கள்” சந்தோஷமாயிருப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
• கிறிஸ்தவர்கள் துன்பப்பட்டாலும் ஏன் சந்தோஷமாய் இருக்கிறார்கள்?
• சந்தோஷத்திற்கான வழிகளைப் பற்றி இயேசு சொன்னவற்றில் உங்களைக் கவர்ந்தது எது?
[பக்கம் 7-ன் படம்]
சந்தோஷத்திற்கான ஒன்பது வழிகளைப் பற்றி இயேசு சொன்னவை அன்று எந்தளவுக்குப் பயனுள்ளவையாய் இருந்தனவோ அவ்வாறே இன்றும் பயனுள்ளவையாய் இருக்கின்றன
[பக்கம் 8-ன் படம்]
பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்வது இரக்கம் காட்டுவதற்குச் சிறந்த வழியாகும்