கொரிந்தியருக்கு முதலாம் கடிதம்
2 அதனால் சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது கடவுளுடைய பரிசுத்த ரகசியத்தைப்+ பகட்டான வார்த்தைகளாலோ+ மனித ஞானத்தாலோ அறிவிக்கவில்லை. 2 இயேசு கிறிஸ்துவைப் பற்றித்தான், அதுவும் மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட அவரைப் பற்றித்தான்,+ உங்களுக்கு அறிவிக்கத் தீர்மானித்திருந்தேன், வேறெந்த விஷயத்தைப் பற்றியும் அல்ல. 3 நான் பலவீனத்தோடும் பயத்தோடும் அதிக நடுக்கத்தோடும் உங்களிடம் வந்தேன். 4 என்னுடைய பேச்சிலும் பிரசங்கத்திலும் வசீகரமான வார்த்தைகளோ மனித ஞானமோ இருக்கவில்லை, அவற்றில் கடவுளுடைய சக்தியும் வல்லமையும்தான் வெளிப்பட்டன.+ 5 ஏனென்றால் உங்கள் விசுவாசம், மனிதர்களுடைய ஞானத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது, கடவுளுடைய வல்லமையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
6 இப்போது முதிர்ச்சியுள்ளவர்களிடம் ஞானத்தைப் பற்றிப் பேசுகிறோம்.+ இந்த உலக* ஞானத்தைப் பற்றியோ அழியப்போகிற இந்த உலகத் தலைவர்களுடைய+ ஞானத்தைப் பற்றியோ அல்ல. 7 பரிசுத்த ரகசியத்தில்+ இருக்கிற கடவுளுடைய ஞானத்தை, அதாவது மறைவான ஞானத்தை, பற்றித்தான் பேசுகிறோம்; நாம் மகிமையடைய வேண்டும் என்பதற்காகச் சகாப்தங்கள்* தோன்றுவதற்கு முன்னால் கடவுள் இதை முன்தீர்மானித்தார். 8 அந்த ஞானத்தைப் பற்றி இந்த உலகத்தின்* தலைவர்களில் ஒருவருக்குக்கூட தெரியவில்லை;+ அது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் மகிமையுள்ள நம் எஜமானைக் கொன்றுபோட்டிருக்க* மாட்டார்கள். 9 ஆனால் எழுதப்பட்டிருக்கிறபடி, “தன்மீது அன்பு காட்டுகிறவர்களுக்காகக் கடவுள் தயார் செய்திருக்கிறவற்றைக் கண்கள் பார்க்கவும் இல்லை, காதுகள் கேட்கவும் இல்லை, அவை மனிதர்களுடைய இதயத்தில் தோன்றவும் இல்லை.”+ 10 அவற்றை நமக்குத்தான் கடவுள் தன்னுடைய சக்தியின்+ மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்;+ அந்தச் சக்தி எல்லா காரியங்களையும், சொல்லப்போனால் கடவுளுடைய ஆழமான காரியங்களையும்கூட, ஆராய்கிறது.+
11 ஒருவனுடைய யோசனைகளை அவனுடைய உள்ளத்தைத் தவிர வேறெந்த மனிதனாலும் தெரிந்துகொள்ள முடியாது. அதுபோலவே, கடவுளுடைய யோசனைகளை அவருடைய சக்தி வெளிப்படுத்தினால் தவிர எந்த மனிதனாலும் தெரிந்துகொள்ள முடியாது. 12 நாம் இந்த உலகத்தின் சிந்தையைப் பெறவில்லை, கடவுளுடைய சக்தியைத்தான் பெற்றிருக்கிறோம்.+ அதனால்தான், கடவுள் நமக்குத் தயவுடன் வெளிப்படுத்தியிருக்கிற விஷயங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. 13 இவற்றை நாம் பேசும்போது மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட வார்த்தைகளில் பேசாமல்,+ கடவுளுடைய சக்தியால் கற்றுக்கொண்ட வார்த்தைகளில் பேசுகிறோம்.+ ஆன்மீக விஷயங்களை விளக்குவதற்கு ஆன்மீக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.
14 உலகச் சிந்தையுள்ள மனிதனோ கடவுளுடைய சக்தி வெளிப்படுத்துகிற விஷயங்களை ஏற்றுக்கொள்வதில்லை, அவை அவனுக்கு முட்டாள்தனமாக இருக்கின்றன; அவற்றை அவனால் தெரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், கடவுளுடைய சக்தியின் உதவியால் மட்டுமே அவற்றை ஆராய முடியும். 15 ஆனால், ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதன் எல்லா காரியங்களையும் ஆராய்கிறான்;+ இருந்தாலும், அவனை வேறெந்த மனிதனாலும் ஆராய முடியாது. 16 ஏனென்றால், “யெகோவாவுக்கு* அறிவுரை கொடுப்பதற்கு அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?”+ நமக்கோ கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது.+