கடைசியில் சமாதானம்!—கடவுள் பேசுகையில்
“அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை.”—ஏசாயா 9:7, தி.மொ.
உலக அதிபதிகள் சமாதானத்தைப் பற்றி அடிக்கடி பேசுகின்றனர், பொதுமக்கள் அதை நாடுவதாகச் சொல்கின்றனர். எனினும், இன்றிருக்கும் நிலைமை தீர்க்கதரிசி எரேமியா பின்வருமாறு சொன்னதை நமக்கு நினைப்பூட்டுகிறது: “சமாதானத்துக்குக் காத்திருந்தோம், நன்மை வரவில்லை; சுகம் கிடைக்கும் காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ திகைப்பு.” (எரேமியா 8:15, தி.மொ.) உண்மையில், காயீன் ஆபேலைக் கொன்ற முதற்கொண்டு உலகத்துக்கு உண்மையான சமாதானமில்லை, வன்முறையால் தொல்லைப்படுத்தப்பட்டு வருகிறது. நம்முடைய 20-ம் நூற்றாண்டு மற்ற எல்லாவற்றையும்விட மிகக்கொடிய வன்முறை சகாப்தமாக இருந்துவருகிறது, போர்களினால் ஏறக்குறைய பத்துக்கோடி மக்கள் மாண்டனர். நம்முடைய காலத்தில், உலக ஜனத்தொகையில் 97 சதவீதம் குறைந்த பட்சம் ஒரு போரிலாவது உட்பட்டிருக்கின்றனர். ஆகவே உலக அதிபதிகள் சமாதானத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், தங்கள் ஜனங்களை ஒன்றன்பின் மற்றொன்றாகத் தொடரும் அழிவுக்குள் வழிநடத்தியிருக்கின்றனர்.
2 இந்த எல்லா வன்முறையோடுங்கூட அனுதினமும் வன்முறை குற்றச் செயல்களால் ஏற்படும் உயிர்ச்சேதமும் கூட்டப்பட வேண்டும். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 20,000 மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். 80,000-த்துக்கு மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், மேலும் பல கற்பழிப்புகள் அறிவிக்கப்படாமலிருக்கின்றன. ஏறக்குறைய இருபது இலட்சம் பெண்கள் தாங்கள் சேர்ந்துவாழும் மனிதனால் கடுமையாய் அடிக்கப்படுகின்றனர். எல்லா குடும்பத்தினரிலும் நான்கில் ஒரு பங்கானோர், ஏதோவொரு வகையான குற்றச் செயலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஓர் அறிவிப்பு பின்வருமாறு கூறி முடிக்கிறது: “நாம் பயங்கர வன்முறை சமுதாயமாகிவிட்டோம்.” மற்றப் பெரும்பான்மையான நாடுகளிலும் நிலைமை இதற்கொப்பாகவே இருக்கிறது.
3 எனினும், இன்றைய அணுசக்தி படைக்கலங்கள் செய்யக்கூடிய வன்முறையோடு ஒப்பிட இவையெல்லாம் ஒன்றுமில்லை எனலாம். பூமியில் வாழும் ஒவ்வொருவரையும் திரும்பத்திரும்ப 12 தடவைகள் கொல்வதற்குப் போதிய படைக்கலங்கள் இருக்கின்றன! ஒரு மருத்துவர் பின்வருமாறு கூறினார்: அணுசக்தி போருக்கு ஆளாகிறவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு நவீன மருத்துவத்தினிடம் எதுவுமிராது.” ஏன் இராது? மற்றொருவர் பதிலளித்ததாவது: “மிகப் பெரும்பான்மையரான மருத்துவரும், நோயாளிகளைக் கவனிப்பவரும், தொழில்நுட்ப வல்லுநரும் கொல்லப்பட்டிருப்பர். . . . மருத்துவமனைகள் அழிக்கப்பட்டிருக்கும். எவரையாவது காப்பாற்றுதற்கு ஒருசிலரே போதிய அறிவுடனும் கருவி சாதனங்களுடனும் விடப்பட்டிருப்பர்.”
4 நம்முடைய காலத்தில் சமாதானமில்லாததைக் குறித்து சமீப என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா வருடாந்தர புத்தகத்தின் முக்கிய கட்டுரை பின்வருமாறு தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது: “நம்முடைய சிதைவுறும் உலகம்—பூகோள அமைதிக் கேட்டின் அச்சுறுத்தும் செய்தி.” அது கூறினதாவது: 1945-க்குப் பின் ‘முன்னேற்றம்’ எவ்வாறோ உறுதியாக நிகழவிருக்கிறதெனவும் நவீன உலகத்தின் எதிர்காலம் அடிப்படையாய் ஒத்திணைந்து ஒன்றியிருக்கும் ஒன்றெனவும் கருதப்பட்டது.” ஆனால் இந்த ஊகிப்புகள், “முற்றிலும் தவறாகக் கொள்ளப்பட்டவையாக நிரூபித்திருக்கின்றன,” என்று அது கூறி, மேலும் சொன்னதாவது: “அதற்குப் பதிலாக நடந்திருப்பது என்னவெனில் . . . இந்த உலகம், மெள்ள படிப்படியாய்ச் சிதைவுறுவதால், சந்தடியில்லாமல் ஆனால் கடுமைதணியாமல் பிளக்கப்பட்டு வருகிறது. பல நாடுகள் அவற்றின் அமைப்பு முறையும் ஆவிக்குரிய ஒற்றுமையும் உண்மையென ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கையில் . . . கோத்திரங்கள், கிளைமரபுகள், மதப்[பிரிவுகள்], . . . நகரக் கலகக் கும்பல்கள், சாவுண்டாக்கும் குழுக்கள், பயங்கரவாதி இயக்கங்கள் சிறுசிறு கும்பலாகப் போரிடும் இயக்கங்கள், குறுகிய மற்றும் முரட்டுத்தனமான தன்னலத் தொகுதிகள் [ஆகப்] பிளவுற்றுப் பிரிந்துகொண்டிருக்கின்றன.”
5 இவ்வாறே, ஐக்கிய மாகாணங்களில் முந்நாள் அரசாங்க உயர் அதிகாரி ஒருவரும் பின்வருமாறு கூறினார்: “சர்வதேச நிலையில்லாமையை உண்டுபண்ணும், மேலும் நன்றாய் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒற்றுமைக்காக உழைக்கும் ஆற்றல்களுக்குமேல் என்றும் நடவாத முறையில் மேம்பட்டு வருகின்றன. பூகோளப் போக்குகளின் எந்தப் பகுதியை அலசியாராய்ந்தாலும் தவிர்க்க முடியாத முடிவு என்னவெனில், சமுதாயக் கலவரமும், அரசியல் அமைதிக் குலைவுநிலையும், பொருளாதார நெருக்கடியும், சர்வதேச பிணக்கம் இந்த நூற்றாண்டின் மீந்திருக்கும் பகுதியில் மேலுமதிக விரிவாய்ப் பொரும்பாலும் பரவக்கூடுமென்பதே.” அவர் பின்வருமாறு சொல்லி முடித்தார்: “மனிதவர்க்கத்தை எதிர்ப்படும் அச்சுறுத்தும் செய்தி, சுருக்கமாக, . . . பூகோள அமைதிக்கேடேயாகும்.”
‘வானவெளியிலிருந்து வருபவர்கள்’
6 இந்த எல்லாவற்றையும் கருதுகையில், கிளீவ்லாண்ட் செய்தித்தாளில் பதிப்பாசிரியர் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “தூரவிருக்கும் ஒரு பால்வீதி மண்டலத்திலிருந்து வருபவர்கள் அடுத்த வாரம் வந்து சேர்ந்தால், நாம் கம்யூனிஸத்தின் அல்லது முதலாளித்துவ ஆதிக்கத்தின் உயர்வை நிலைநாட்டுவதற்கு நம்மைநாமே கொல்ல வேண்டியிருந்ததென நாம் அவர்களிடம் சொல்ல முடியுமா? நாம் தேசங்களாகப் பிரிவுற்றிருக்கும் மனிதவினம் என்றும், மேலும் அந்தத் தேசங்கள் இடையிடையே இரத்தவெறிகொண்ட களியாட்டத்தில் ஒன்றையொன்று கொலை செய்யும்படி உறுதிகொண்டிருந்தனவென்றும் நாம் அவர்களுக்கு விளக்க முடியுமா? மொத்தமாய்ச் சாகடிப்பதற்குப் புதிய வழிவகைகளைக் கண்டுபிடிப்பதே எங்களுக்கு முதன்மையான அதிக முக்கியத்துவமுடையதாக இருந்ததால் எங்கள் மனிதவினத்தில் சிலர் பட்டினி கிடக்கவும் மற்றவர்கள் இழிவான நிலையிலும் அறியாமையிலும் புரண்டு கொண்டிருக்கவும் நாங்கள் விட்டோமென நாம் எப்படி விளக்குவோம்? தூர பால்வீதி மண்டலத்திலிருந்து வந்தவர்கள் தங்கள் வீடு சேருகையில் நம்மைக் காட்டுமிராண்டிகளென நிச்சயமாகவே விவரிப்பார்கள். . . . நாங்கள் பெருங்கலைகளையும் சந்தித்தோம் நீதியிலும் நம்பினோமென நாம் ஒருவேளை மறுத்துரைப்போம். அவர்கள் விசனமாய்ப் புன்முறுவல் செய்து, வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன் சென்றுவிடுவர்.”
7 ‘நிச்சயமாகவே, இத்தகைய பார்வையிட்டுக்கொண்டு “வானவெளியிலிருந்து வருகிறவர்கள்” எவரும் இல்லை,’ என்று சிலர் சொல்லலாம். இல்லை, சடப்பொருள் சார்ந்த வானவெளியிலிருந்தல்ல, ஆனால் இப்பொழுது சில ஆண்டுகளாக, வெகு வல்லமை வாய்ந்த, மிக உயர்ந்த அறிவு நுட்பமுள்ள வருகையாளர்கள் மனிதவர்க்கம் தனக்குத்தானேயும் மற்றும் இந்தப் பூமிக்கும் செய்துகொண்டிருப்பதை முற்றுமுழுமையாய்ப் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதோடுகூட, “வெடிகள் ஏற்படுவதற்கு முன்” தெளிவான ஒரு செய்தி கொடுக்கப்படும்படியும் பார்த்துக்கொள்கின்றனர்.
8 மனிதவர்க்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் இந்த வல்லமைவாய்ந்த வருகையாளர்கள் யாவர்? இவர்கள் கடவுளுடைய பிரதிநிதிகள், ஆவி மண்டலத்திலிருக்கும் உண்மையுள்ள தூதர்கள், பூமியைப் பார்வையிட கடவுள் இவர்களை அனுப்பியிருக்கிறாரென்று கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்லுகிறது. இந்த ஆவி சிருஷ்டிகளைக் குறித்து சங்கீதம் 103:20-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “யெகோவாவினுடைய சொல்லின் சத்தத்துக்குச் செவிகொடுத்து அவர் சொற்படி செய்கிற பலத்த வீரர்களே, அவர் தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.” [தி.மொ.] இந்த வல்லமை வாய்ந்த தூதர்கள் பைபிளில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றனர். உதாரணமாக, மத்தேயு 25-ம் அதிகாரத்திலுள்ள நம்முடைய காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தின் 31-ம் 32-ம் வசனங்களில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரிப்பார்.”
9 இந்த “மனுஷகுமாரன்” கடவுளுடைய முதன்மையான பிரதிநிதி இயேசு கிறிஸ்துவே. அவர் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட பின், தனக்கு இந்த விசேஷித்த வேலையை யெகோவா கொடுப்பதற்காகக் காத்திருந்தார். சங்கீதம் 110:1 அதை விவரித்தப் பிரகாரம், யெகோவா அவரிடம்: “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.” இந்த வல்லமைவாய்ந்த ஆவி சிருஷ்டியைச் செயல்படும்படி கடவுள் அனுப்புவதற்கான காலம் 1914-ம் ஆண்டில் வந்ததென்று பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் காட்டுகிறது.
10 ஆனால் அவர் தனிமையாக வருவதில்லை, ஏனெனில் அவருடன் ‘சகல தூதரும்’ இருப்பார்களென்று மத்தேயு 25:31-ல் சொல்லப்பட்டது. இவர்கள் எத்தனை பேராக இருக்கலாம்? வெளிப்படுத்துதல் 5:11-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “இன்னுங் கண்டேன் . . . அநேக தூதரின் சத்தத்தைக் கேட்டேன்; அவர்கள் கோடா கோடியானவர்கள்.” (தி.மொ.) ஆங்கிலத்தில் மிரியடுகள் (Myriads) மிரியடுகள் என்றிருக்கிறது. ஒரு மிரியட் 10,000 ஆகும். ஒரு மிரியட் தடவைகள் ஒரு மிரியட் 10,000 தடவைகள் 10,000, அதாவது மொத்தம் 10 கோடியாகும்! எனினும், வெளிப்படுத்துதலில் பன்மையில், “மிரியடுகள் மிரியடுகள்” ஆன தூதர்கள் கடவுளை சேவிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. அது எத்தனையோ பல பத்துக்கோடிகளாக, ஒருவேளை நூறுகோடிகளாக அல்லது அதற்கும் மேலாகவும் இருக்கலாம். கிறிஸ்துவின் வழிநடத்துதலின்கீழ் இந்த ஆவி சிருஷ்டிகள், மனிதவர்க்கத்தை இரண்டு தொகுதிகளாக, ஒன்று “நித்திய அறுப்புண்டுபோதலுக்கும்,” மற்றது “நித்திய ஜீவனுக்கும்” பிரிப்பதில் பூமியிலுள்ள கடவுளுடைய பிரதிநிதிகளுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார்கள்.—மத்தேயு 25:46, NW; மத்தேயு 13:41, 42-ஐயும் பாருங்கள்.
“நித்திய நற்செய்தி”
11 இந்தச் சமயத்தில் இந்தத் தேவதூத வருகையாளர்கள் பூமியில் ஆதரிக்கும் முக்கிய செய்தி என்ன? வெளிப்படுத்துதல் 14:6-ல் நமக்குத் தெரிவித்திருக்கிறது: “வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக “நித்திய சுவிசேஷத்தை [நற்செய்தியை, NW] உடையவனாயிருந்”தான். இந்த “நித்திய நற்செய்தி” என்ன? இது, நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோமென நிரூபிக்கும் பல அத்தாட்சிகளில் ஒன்றென்று இயேசு சொன்னதோடு சம்பந்தப்பட்டதாகும். மத்தேயு 24:14-ல் அவர் அறிவித்ததாவது: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—NW.
12 கடவுளுடைய ராஜ்யம், தற்போதைய மனித ஆட்சி விலக்கி அழிக்கப்பட்ட பின்பு பூமியின்மேல் ஆட்சி செய்யப்போகும் பரலோக அரசாங்கமாகும். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) அதன் அரசர் கிறிஸ்து இயேசுவே, அவர் தம்முடன் துணை அரசர்களைக் கொண்டிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 14:1-4; 20:4) இந்த ராஜ்யமே தானியேல் 7:14-ல் பின்வரும் சொற்களில் குறிப்பிட்டு பேசப்பட்டிருக்கிறது: “சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்கு ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும் கொடுக்கப்பட்டன; அவருடைய அளுகை நீங்காத நித்திய ஆளுகை, அவருடைய ராஜ்யம் அழியாதது.”—தி.மொ.
13 ராஜ்ய ஆட்சியைப் பற்றிய செய்தி ஏன் இவ்வளவு மேம்பட்ட நற்செய்தி, மிகமிகச் சிறந்த செய்தி? ஏனென்றால் அது ஒரு புதிய உலகத்தை, மனித சமுதாயத்தின் புதிய ஒழுங்கமைப்பைக் கொண்டுவரும். கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் மனிதவர்க்கம் அவ்வளவு மிக அதிசயமான ஆசீர்வாதங்களைப் பெறப்போவதனால், அப்பொழுது வாழப்போகிறவர்களைக் குறித்து சங்கீதம் 37:11-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 29:11) இன்று, ராஜ்யம் பூமியின் எல்லா விவகாரங்களின் முழு ஆட்சி அதிகாரத்தையும் ஏற்பதற்கு முன், “சமாதானபிரபு”வின் கைகளில் அதன் நிலையான சமாதான ஆட்சியைப் பற்றிய நற்செய்தி எல்லா தேசங்களிலும் பிரசங்கிக்கப்படுகிறது. இது கிறிஸ்துவின் மற்றும் தேவதூதர்களின் வழிநடத்துதலின்கீழ் கடவுளுடைய பூமிக்குரிய ஊழியர்களால் செய்யப்படுகிறது.—ஏசாயா 9:6, 7.
14 கடவுளுடைய பூமிக்குரிய இந்த ஊழியர்கள் யாவர்? ராஜ்ய நற்செய்தியைக் கொண்டு ஜனங்களைத் தவறாமல் சந்தித்துவரும் ஒரே ஆட்கள் யாவர்? யெகோவாவின் சாட்சிகளே என்று எதிரிகளுங்கூட ஒப்புக்கொள்கின்றனர். இப்பொழுது இவர்கள் முப்பது இலட்சத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருக்கிறார்கள், இந்த ராஜ்ய அறிவிப்பாளரின் அணிவரிசைகள் விரைவாய்ப் பெருகிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டில் நற்செய்தியைப் போதிக்கும் 2,25,868 புதிய ஊழியர்கள் அதிகாரப் பூர்வ நியமிப்பு பெற்றார்கள். மேலும் அந்த ஒரே ஆண்டில் யெகோவாவின் சாட்சிகளின் 2,461 புதிய சபைகள் உலகமெங்கும் ஸ்தாபிக்கப்பட்டன, அதாவது, சராசரியாக ஒரு நாளுக்கு 6-க்கு மேற்பட்ட சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன, ஆக மொத்தம் 208 நாடுகளில் 52,177 சபைகள் இருக்கின்றன. மெய்யாகவே, ஏசாயா 60:22-ன் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைகிறது: யெகோவா தம்முடைய பிரசங்க மற்றும் கூட்டிச்சேர்க்கும் வேலையை “ஏற்ற காலத்தில்” தீவிரமாய் நடப்பிக்கிறார். இதுவே அந்தக் காலம்!
15 ராஜ்ய ஆட்சியைப் பற்றிய செய்திக்கு ஆட்கள் பிரதிபலிக்கும் முறை, அவர்கள் “நித்திய அறுப்புண்டுபோதலுக்கா” அல்லது புதிய உலகத்தில் “நித்திய ஜீவனுக்கா” எதற்குப் பிரிக்கப்படுவார்களென்பதைத் தீர்மானிப்பதற்கு ஆதாரமாயிருக்கிறது. பலர் 2 நாளாகமம் 36:15, 16-ல் விவரிக்கப்பட்டவர்களைப் போல் பிரதிபலிக்கிறார்கள்: “யெகோவா . . . இரக்கமுள்ளவராய் அவர்களிடத்துக்குத் தமது ஸ்தானாபதிகளைத் திரும்பத்திரும்ப அனுப்பினார். அவர்களோ கடவுளின் ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி அவருடைய திருவார்த்தைகளை அசட்டைசெய்து அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தார்கள்; இப்படிச் செய்யச் செய்ய யெகோவாவின் கோபம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது. (தி.மொ.) ஆனால் மற்றவர்கள் ஆதரவாய்ப் பிரதிபலித்து யெகோவாவின் பாதுகாப்பின்கீழ் வருகின்றனர். “எனக்குச் [மெய் ஞானத்துக்கு] செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.”—நீதிமொழிகள் 1:20, 33; மத்தேயு 25:34-46.
பரலோகச் சேனைகள் செயல்படுதல்
16 சீக்கிரத்தில், யெகோவாவின் ஊழியரின் பிரசங்க வேலை அவர் தீர்மானித்திருக்கும் அளவுக்குச் செய்து முடிக்கப்படும். கீழ்ப்படியாத மனிதவர்க்கத்தினிடம் காட்டிவரும் கடவுளுடைய பொறுமையும் அதன் முடிவுக்கு வரும். இந்தச் சந்ததியிலுள்ள மனிதவர்க்கத்தினிடம் அவர் பேசிக்கொண்டிருக்கும் சமாதான செய்தியும் மாறும். அதற்குப் பதிலாக, “அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.” (சங்கீதம் 2:5) “என் எரிச்சலிலும் என் கோபாக்கினையிலும் நான் பேச” வேண்டுமென யெகோவா தாமே அறிவிக்கிறார். (எசேக்கியேல் 38:19, தி.மொ.) அப்பொழுது இந்தக் கலகக்கார மற்றும் அக்கிரமக்கார உலகத்துக்கு எதிராகத் தம்முடைய பரலோக சேனைகளைச் செயல்பட வைக்கும்படி அவர் இயேசு கிறிஸ்துவுக்குச் சமிக்கை கொடுப்பார்.
17 அசீரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியான கடவுளுடைய நேரம் வந்தபோது அசீரியாவுக்கு நடந்ததைக் கவனிப்பதன் மூலம், இந்தச் சேனைகள் நிறைவேற்றப்போவதைக் காண முடியும். 2 இராஜாக்கள் 19:35-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “அன்று இரவு யெகோவாவின் தூதன் வந்து அசீரியரின் பாளயத்திலே இலட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருந்தபோது, இதோ, அவர்கள் அனைவரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.” ஒரே ஒரு தூதன் இதைச் செய்தான். கோடாகோடி தூதர்கள், சீக்கிரத்தில் நிறைவேற்றவிருப்பது திகைத்து மலைக்கவைப்பதாயிருக்கும்.
18 நடக்கப்போவது எரேமியா 25:31-33-ல் பின்வரும் வார்த்தைகளில் விவரித்திருக்கிறது: “ஜாதியாரோடே யெகோவாவுக்கு வழக்குண்டு; மாம்சமான யாவரையும் அவர் நியாயம் விசாரிப்பார்; தெய்வபயமற்றவரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார்—இது யெகோவாவின் திருவாக்கு—சேனைகளின் யெகோவா சொல்லுகிறதைக் கேளுங்கள்: இதோ, ஜாதியிடமிருந்து ஜாதிக்கு ஆபத்து பரவும், பூமியின் எல்லைகளிலிருந்து பெரும் புசல் எழும்பும். அக்காலத்திலே பூமியின் ஒரு முனைதுவக்கி மறுமுனைமட்டும் யெகோவாவினால் கொல்லப்பட்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் நிமித்தம் புலம்புவாரும், அவர்களைச் சேர்ப்பாரும் அடக்கம் பண்ணுவாருமிரார்; அவர்கள் பூமியின் மேல் எருவாவார்கள்.”—தி.மொ.
19 இந்த எல்லாவற்றையும் யெகோவா எப்படி நிறைவேற்றுவார் என்பது, வெளிப்படுத்துதல் 19-ம் அதிகாரத்தில் விவரித்திருக்கிறது. 14-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறபடி தம்முடைய அரசராகிய இயேசுகிறிஸ்து, ‘பரலோகத்திலுள்ள சேனைகள் அவருக்குப் பின்செல்ல’ செயலில் உட்படும்படி செய்ய வைப்பதன் மூலமாகும். பின்பு 17-ம் 18-ம் வசனங்களில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “அப்பொழுது ஒரு தூதன் சூரியனில் நிற்கக் கண்டேன். அவன் நடுவானத்தில் பறக்கும் சகல பறவைகளையும் பார்த்து: வாருங்கள், கடவுளின் மகா விருந்துக்குக் கூடிவாருங்கள். ராஜாக்களின் மாம்சம் சேனைத்தலைவரின் மாம்சம் பலவான்களின் மாம்சம் குதிரைகளின் மாம்சம் அவைகளின் மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சம் சுயாதீனர் அடிமைகள் சிறியோர் பெரியோருடைய மாம்சம் இவற்றைப் பட்சிக்கும்படி வாருங்களென்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.” 19-லிருந்து 21 வரையான வசனங்களில் மனிதர் அமைத்த நிறுவனங்கள் எல்லாவற்றின் அழிவும் விவரிக்கப்பட்டிருக்கிறது, ஏனென்றால் தம்முடைய பூமிக்குரிய செய்தி அறிவிப்பவர்களின் மூலமாய்க் கடவுள் பேசினபோது அவர்கள் செவிகொடுக்க மறுத்துவிட்டனர்.
20 இவ்வாறு, வன்முறையான, சிதைவுற்றுக் கொண்டிருக்கும் இந்த உலக ஒழுங்குமுறைக்குக் கடவுள் முடிவைக் கொண்டுவருவதற்கான காலம் சீக்கிரமாய் வருகிறது. ஆனால் அந்த முடிவு தேசங்கள் தங்களுக்குள் அணுசக்தி போரிட்டு தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வதாயிராது. அவ்வாறு நடந்தால், நீதிமான்களும் துன்மார்க்கரோடுகூட அழிக்கப்பட்டுப் போவார்கள். எனினும், இந்த உலகத்துக்கு எதிரான கடவுளுடைய “வெடிகள்” அவ்வாறு இரா, குறிப்பிட்டவர்களை மாத்திரமே தாக்கும். புதிய உலகத்துக்குள் தப்பிப் பிழைப்பவர்கள் இருப்பார்கள். நீதிமொழிகள் 2:21, 22 சொல்லுகிற பிரகாரம்: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள், துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”
21 இத்தகைய உலகளாவிய அழிவு நெருங்கிக்கொண்டிருக்கும் இந்நிலைக்கு இவ்வுலகம் ஏன் வந்திருக்கிறது? இந்த ஒழுங்குமுறை காப்பாற்றப்படும்படி, உலக அதிபதிகள் தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் சமாதான முயற்சிகள் பலன் தரக்கூடுமா? புதிய உலகத்துக்குள் தப்பிப் பிழைத்துத் தொடர்ந்து வாழப்போகும் “செவ்வையானவர்க”ளோடும் “உத்தமர்க”ளோடும் நாமும் சேர்த்துக்கொள்ளப்பட விரும்பினால், மனித சரித்திரம் முழுவதிலுமே மிக அதிக முக்கியமான இந்தக் காலத்தில் நாம் நம்மை எவ்வாறு நடத்திக்கொள்ள வேண்டும்? நம்முடைய அடுத்தக் கட்டுரையில் இந்தக் கேள்விகள் ஆலோசிக்கப்படும். (w87 5/15)
உங்கள் பதில்கள் யாவை?
◻ முக்கியமாய் நம்முடைய காலத்தில் சமாதானமில்லாமை எப்படித் தெளிவாகத் தெரிகிறது?
◻ இன்று மனிதவர்க்கத்தைப் பிரிக்கும் வேலையில் தேவதூதர் சேனைகள் எப்படி உட்பட்டிருக்கின்றனர்?
◻ ராஜ்ய செய்தி ஏன் “நித்திய நற்செய்தி”?
◻ எந்த ஆதாரத்தின்பேரில் ஆட்கள் ஜீவனடைவதற்கு அல்லது மரணமடைவதற்குத் தீர்க்கப்படுவர்?
[கேள்விகள்]
1. உலக அதிபதிகள் சமாதானத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறபோதிலும் மனித சரித்திரம் முழுவதிலுமே என்ன நடந்திருக்கிறது?
2. கூடுதலாக, எல்லா தேசங்களிலும் எந்த வன்முறைச் செயல்களால் ஏற்படும் உயிர்ச் சேதமும் குறிப்பிடப்படுகிறது?
3. இந்த எல்லாவற்றையும்விடப் பெரிய எந்த வன்முறை இப்பொழுது மனித குடும்பத்துக்குச் செய்யப்படக்கூடும்?
4, 5. (எ) நம்முடைய காலத்தில் சமாதானமில்லாததைப் பற்றி ஒரு பிரசுரம் என்ன குறிப்பிட்டது? (பி) முன்னாள் அரசாங்க அதிகாரி ஒருவர் இதைப்போல் எவ்வாறு குறிப்புரை கொடுத்தார்?
6. வானவெளியிலிருந்து வருபவர்கள் அன்றைய உலகத்தைப் பற்றிக் கூர்ந்து கவனிக்கக்கூடியவற்றைச் செய்தித்தாள் பதிப்பாசிரியர் ஒருவர் எவ்வாறு விவரித்தார்?
7, 8. (எ) வல்லமை வாய்ந்த எந்த வருகையாளர்கள் இப்பொழுது மனிதவர்க்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர்? (பி) அவர்கள் ஏன் இங்கிருக்கிறார்கள்?
9. மனிதவர்க்கம் இவ்வாறு பார்வையிடப்படுகையில் கிறிஸ்து இயேசு என்ன பாகத்தை வகிக்கிறார்?
10. இந்தப் பிரிக்கும் வேலையில் தாங்கள் உதவி செய்கையில் கிறிஸ்துவுடன் எத்தனை தூதர்கள் இருக்கக்கூடும்?
11. இந்தச் சமயத்தில் தேவதூதர் சேனைகள் ஆதரிக்கும் “நித்திய நற்செய்தி” என்ன?
12, 13. (எ) ராஜ்ய ஆட்சி என்பது என்ன? (பி) இந்த ராஜ்ய செய்தி ஏன் மிக மிகச் சிறந்த செய்தி?
14. (எ) கடவுளுடைய பூமிக்குரிய ஊழியர்களை நாம் சந்தேகமில்லாமல் அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய ஒரு வழி என்ன? (பி) கடவுளுடைய ஆசீர்வாதம் அவர்கள் மீது இருப்பது எப்படித் தெளிவாகத் தெரிகிறது?
15. எந்த அடிப்படையின்பேரில் இன்று ஆட்கள் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள்?
16. கீழ்ப்படியாத மனிதவர்க்கத்தினிடம் கடவுள் சீக்கிரத்தில் எவ்வாறு பேசுவார்?
17. ஒரே ஒரு தூதனுக்கிருக்கும் வல்லமை எப்படி மெய்ப்பித்துக் காட்டப்பட்டது?
18. இந்த ஒழுங்குமுறையின் முடிவில் அழிவு எவ்வளவு முழுமையாக நிறைவேற்றப்படும்?
19. வெளிப்படுத்துதல் 19-ம் அதிகாரத்தில் மேலுமாக என்ன நுட்ப விவரங்கள் கூட்டப்பட்டிருக்கின்றன?
20. இந்த உலகம் ஏன் அணுசக்தி போராட்ட அழிவில் முடிவடையாது?
21. நம்முடைய அடுத்தக் கட்டுரையில் மேலுமான எந்தக் கேள்விகள் ஆலோசிக்கப்படும்?
[பக்கம் 13-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகளின் வேலை தேவதூதர்களின் சேனைகளால் ஆதரிக்கப்படுகிறது