எசேக்கியேல்
38 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, மேசேக் மற்றும் தூபாலின்+ முக்கியத் தலைவனாகிய மாகோகு தேசத்தின் கோகுவுக்கு நேராக+ உன் முகத்தை வைத்துக்கொண்டு, அவனுக்கு எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்:+ 3 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மேசேக் மற்றும் தூபாலின் முக்கியத் தலைவனாகிய கோகுவே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன். 4 நான் உன்னை எதிர்த்திசையில் திருப்பி, உன் வாயில் கொக்கிகளை மாட்டி,+ உன்னுடைய எல்லா படைகளோடும் குதிரைகளோடும் குதிரைவீரர்களோடும் வெளியே வர வைப்பேன்.+ உன் வீரர்கள் எல்லாரும் கம்பீரமாக உடை உடுத்திக்கொண்டு, பெரிய கேடயங்களோடும் சிறிய கேடயங்களோடும் திரண்டு வருவார்கள். அவர்கள் எல்லாருமே வாள் ஏந்திய வீரர்கள். 5 பெர்சியர்கள், எத்தியோப்பியர்கள், பூத்தியர்கள்+ எல்லாரும் சிறிய கேடயங்களோடும் தலைக்கவசங்களோடும் அவர்களுடன் இருக்கிறார்கள். 6 உன்னோடு கோமரும் கோமருடைய எல்லா படைவீரர்களும், வடகோடியில் இருக்கிற தொகர்மா+ வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா படைவீரர்களும் ஒரு பெரிய கூட்டமாகத் திரண்டிருக்கிறார்கள்.+
7 நீ தயாராக இரு. உன்னோடு திரண்டிருக்கிற எல்லா படைகளையும் தயார்படுத்து. நீதான் அந்தப் படைகளின் தலைவனாக இருப்பாய்.
8 பல நாட்களுக்குப் பிறகு நான் உன்மேல் கவனத்தைத் திருப்புவேன்.* கடைசி வருஷங்களிலே, வாளின் பயங்கர தாக்குதலிலிருந்து மீண்ட ஜனங்களுடைய தேசத்தை நீ தாக்குவாய். அந்த ஜனங்கள், வெகு காலமாகப் பாழாய்க் கிடந்த இஸ்ரவேலின் மலைகளுக்கு மறுபடியும் கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் மற்ற தேசங்களின் நடுவிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்டு, பாதுகாப்பாகக் குடியிருக்கிறவர்கள்.+ 9 நீ ஒரு புயலைப் போல அவர்களுக்கு எதிராக வருவாய். நீயும் உன்னுடைய எல்லா படைவீரர்களும் ஏராளமான ஆட்களும் அவர்களுடைய தேசத்தை மேகம் போல மூடுவீர்கள்.”’
10 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த நாளில் உன்னுடைய உள்ளத்தில் சில யோசனைகள் வரும். நீ ஒரு சதித்திட்டம் தீட்டி, 11 “மதில்கள் இல்லாத ஊர்களின்* தேசத்துக்கு எதிராக நான் படைதிரண்டு போவேன்.+ அங்கே தொல்லை இல்லாமல் பாதுகாப்பாக வாழ்கிற ஜனங்களுக்கு விரோதமாகப் போர் செய்வேன். அவர்கள் எல்லாருமே மதில்களோ கதவுகளோ தாழ்ப்பாள்களோ இல்லாத ஊர்களில் வாழ்கிறவர்கள்” என்று சொல்வாய். 12 ஒருகாலத்தில் பாழாய்க் கிடந்த அவர்களுடைய இடங்களைத் தாக்கவும் அங்கிருக்கிற எல்லாவற்றையும் கைப்பற்றவும் நீ நினைப்பாய்.+ அவர்கள் மற்ற தேசங்களிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்டவர்கள்.+ நிறைய சொத்துப்பத்துகளைச் சேர்த்து வைக்கிறவர்கள்.+ பூமியின் நடுப்பகுதியில் குடியிருக்கிறவர்கள்.
13 தர்ஷீசின்+ வியாபாரிகளான சேபாவும்+ தேதானும்+ அவர்களுடைய எல்லா போர்வீரர்களும்* உன்னைப் பார்த்து, “எல்லாவற்றையும் சூறையாடிக்கொண்டு போவதற்காக அந்தத் தேசத்தைத் தாக்குகிறாயா? வெள்ளியையும் தங்கத்தையும் சொத்துப்பத்துகளையும் இஷ்டம்போல் வாரிக்கொண்டு போவதற்காக உன்னுடைய படைகளைத் திரட்டியிருக்கிறாயா?” என்று கேட்பார்கள்.
14 அதனால் மனிதகுமாரனே, நீ கோகுவிடம் இந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “அந்த நாளில், என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வதை நீ நிச்சயம் கவனிப்பாய்.+ 15 வடகோடியில் இருக்கிற உன்னுடைய இடத்திலிருந்து நிறைய ஆட்களோடு நீ வருவாய்.+ அவர்கள் எல்லாருமே மாபெரும் படையாகவும் பெரிய கூட்டமாகவும் குதிரைகளின் மேல் வருவார்கள்.+ 16 தேசத்தை மூடுகிற மேகம் போல நீ என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கு எதிராக வருவாய். கடைசி நாட்களில் நான் உன்னை என்னுடைய தேசத்துக்கு எதிராக வர வைப்பேன்.+ கோகுவே, மற்ற ஜனங்களுக்குமுன் நான் பரிசுத்தமானவர் என்று உன் மூலமாகக் காட்டுவேன். அப்போது, நான் யார் என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”’+
17 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உன்னைப் பற்றித்தானே என் ஊழியர்களான இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளின் மூலம் பல காலத்துக்கு முன்னாலேயே சொன்னேன்? நீ இஸ்ரவேலர்களுக்கு எதிராக வருவாய் என்று அவர்களும் பல வருஷங்களாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்களே.’
18 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் தேசத்தை கோகு தாக்கப்போகிற அந்த நாளில் என்னுடைய கோபம் நெருப்பாகப் பற்றியெரியும்.+ 19 நான் பயங்கர கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் தீர்ப்பு சொல்வேன். அந்த நாளில், இஸ்ரவேல் தேசத்தில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும். 20 எனக்கு முன்னால் கடல் மீன்களும், வானத்துப் பறவைகளும், காட்டு மிருகங்களும், ஊரும் பிராணிகளும் நடுநடுங்கும். உலகத்திலுள்ள எல்லா மனுஷர்களும் நடுங்குவார்கள். மலைகள் தரைமட்டமாகும்.+ செங்குத்தான பாறைகள் சரிந்து விழும். எல்லா சுவர்களும் இடிந்து விழும்.’
21 ‘என்னுடைய எல்லா மலைகளிலும் கோகுவுக்கு எதிராக ஒரு வாளை வர வைப்பேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘வீரர்கள் தங்கள் படையிலுள்ள வீரர்களையே வாளால் வெட்டுவார்கள்.+ 22 நான் அவனுக்கும் அவனுடைய படைவீரர்களுக்கும் எதிராகக் கொள்ளைநோயையும் சாவையும் வர வைத்து அவர்களைத் தண்டிப்பேன்.+ நான் அவன்மேலும் அவனுடைய படைகளின்மேலும் அவனுடைய பெரிய கூட்டத்தின்மேலும்+ பலத்த மழையையும் ஆலங்கட்டி* மழையையும்+ நெருப்பையும்+ கந்தகத்தையும் கொட்டுவேன்.+ 23 எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் நான் என்னை மகிமைப்படுத்துவேன். நான் பரிசுத்தமானவர் என்று நிரூபிப்பேன். நான் யார் என்று காட்டுவேன். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்’” என்றார்.