பைபிள் புத்தக எண் 38—சகரியா
எழுத்தாளர்: சகரியா
எழுதப்பட்ட இடம்: எருசலேம்
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 518
காலப்பகுதி: பொ.ச.மு. 520-518
ஸ்தம்பித்து நின்றுவிட்டது! சகரியா தீர்க்கதரிசனம் உரைக்க தொடங்கியபோது எருசலேமில் இருந்த யெகோவாவின் ஆலய கட்டுமான வேலை முழுமையாக நின்றுவிட்டிருந்தது. முதல் ஆலயத்தை சாலொமோன் 7 1/2 ஆண்டுகளில் கட்டிமுடித்தார். (1 இரா. 6:37, 38) யூதர்களோ தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி வந்து 17 ஆண்டுகள் ஆகியிருந்தும் அந்த ஆலயத்தை இன்னும் கட்டி முடிக்கவில்லை. அர்தசஷ்டாவின் (பார்டியா அல்லது கெளமாட்டா) தடையுத்தரவிற்கு பிறகு அந்த வேலை முழுமையாகவே ஸ்தம்பித்துவிட்டது. இந்நிலையில் கட்டட வேலையைத் திரும்ப ஆரம்பித்து, அது முடிக்கப்படும் வரை அதில் நிலைத்திருக்கும்படி ஜனங்களைத் தூண்டுவதற்காக யெகோவா ஆகாயையும் சகரியாவையும் பயன்படுத்தினார். எனவே இப்போது அதிகாரப்பூர்வ தடையுத்தரவின் மத்தியிலும் வேலை மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.—எஸ்றா 4:23, 24; 5:1, 2.
2 அவர்கள் செய்யவேண்டிய வேலை மலைபோல் பெரிதாக தோன்றியது. (சக. 4:6, 7) வேலைக்கான ஆட்களோ குறைவு, எதிரிகளோ ஏராளம். தாவீதின் வம்சாவளியில் வந்த செருபாபேல் ஒரு பிரபுவாக இருந்தபோதிலும் அவர்களை ஆள ஓர் அரசன் இல்லை, அன்னிய ஆட்சியின்கீழ் இருந்தனர். உறுதியான விசுவாசமும் சுறுசுறுப்பான நடவடிக்கையும் தேவைப்பட்ட இந்தச் சமயத்தில் பலவீனமான, சுயநல மனப்பான்மைக்கு இடம்கொடுத்துவிடுவது எவ்வளவு எளிது! கடவுளுடைய தற்போதைய நோக்கங்களுக்கும், மகத்தான எதிர்கால நோக்கங்களுக்கும் அவர்களுடைய கவனத்தை திருப்பி, செய்ய வேண்டிய வேலைக்கு அவர்களைப் பலப்படுத்துவதற்காக யெகோவா சகரியாவை பயன்படுத்தினார். (8:9, 13) நன்றிகெட்ட தங்களுடைய முற்பிதாக்களைப்போல் இருப்பதற்கு அது காலம் அல்ல.—1:5, 6.
3 சகரியா யார்? சகரியா என்ற பெயர் கொண்ட ஏறக்குறைய 30 ஆட்களைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. எனினும் இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர், தீர்க்கதரிசியாகிய “இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியா” என்று அழைக்கப்படுகிறார். (சக. 1:1; எஸ்றா 5:1; நெ. 12:12, 16) அவருடைய பெயர் (எபிரெயுவில், ஸெக்ஹர்யா [Zekhar·yahʹ]) “யெகோவா நினைவுகூர்ந்தார்” என அர்த்தப்படுகிறது. “சேனைகளின் கர்த்தர்” தம் பெயரின் காரணமாகவே தம்முடைய ஜனங்களை நல்ல முறையில் நடத்துவதற்காக அவர்களை நினைவுகூருகிறார் என்பதை சகரியா புத்தகம் தெளிவாக காட்டுகிறது. (சக. 1:3) இந்தப் புத்தகத்தில் காணப்படும் தேதிகள் காரணமாக அது குறைந்தது இரண்டு ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகிறது. “தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே” (பொ.ச.மு. 520, அக்டோபர்/நவம்பர்) ஆலய கட்டட வேலை திரும்ப தொடங்கப்பட்டது, சகரியாவும் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கினார். (1:1) மேலும், “தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம் நாலாந்தேதி” (ஏறக்குறைய பொ.ச.மு. 518, டிசம்பர் 1) என்றும் இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. (7:1) ஆகவே, சகரியாவின் தீர்க்கதரிசனம் பொ.ச.மு. 520-518 காலப்பகுதியில் உரைக்கப்பட்டு, அதே சமயம் பதிவும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.—எஸ்றா 4:24.
4 சகரியா புத்தகத்தை ஆராய்கிறவர்கள் அதன் நம்பகத் தன்மைக்கு ஏராளமான அத்தாட்சிகளைக் காண்பர். தீருவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார், 13 ஆண்டுகள் முற்றுகையிட்ட பிறகே தீருவைப் பாழாக்கினான். இருந்தாலும், அப்போது தீரு முழுமையாக அழிக்கப்படவில்லை. சகரியா பல ஆண்டுகளுக்கு பிறகு, தீரு முழுமையாக அழிக்கப்படும் என முன்னறிவித்தார். மகா அலெக்ஸாந்தடர், தீருவின் தீவு நகரத்தைத் தரைமட்டம் ஆக்குவதற்காகவே கடலினூடே புகழ்பெற்ற ஒரு பாதையை அமைத்தார். அவர் அதை இரக்கமின்றி சுட்டெரித்துப்போட்டு இவ்வாறு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்ட சகரியாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.a—சக. 9:2-4.
5 எனினும், மேசியாவாகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அதன் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களே இந்தப் புத்தகம் கடவுளால் ஏவப்பட்டது என்பதற்கான உறுதியான அத்தாட்சிகளாகும். சகரியா 9:9-ஐ மத்தேயு 21:4, 5 மற்றும் யோவான் 12:14-16-உடன்; சகரியா 12:10-ஐ யோவான் 19:34-37-உடன்; சகரியா 13:7-ஐ மத்தேயு 26:31 மற்றும் மாற்கு 14:27-உடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் இதை அறியலாம். மேலும், சகரியா 8:16-க்கும் எபேசியர் 4:25-க்கும்; சகரியா 3:2-க்கும் யூதா 9-க்கும்; சகரியா 14:5-க்கும் யூதா 15-க்கும் இடையே உள்ள ஒப்புமைகள் குறிப்பிடத்தக்கவை. கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் ஒத்திசைவு உண்மையிலேயே வியக்கத்தக்கது!
6 பைபிளைக் குறைகாண்போர் சிலர், ஒன்பதாம் அதிகாரத்திலிருந்து எழுத்துநடையில் மாற்றம் காணப்படுவதால் அந்தப் பகுதியை சகரியா எழுதியிருக்க முடியாது என கூறுகின்றனர். எனினும், பொருளில் மாற்றம் ஏற்படும்போது எழுத்துநடையிலும் மாற்றம் ஏற்படுவது ஒரு பெரிய விஷயமா என்ன? முதல் எட்டு அதிகாரங்களும் சகரியாவின் நாளிலிருந்த ஜனங்களுக்கு முக்கியமாயிருந்த விஷயங்களைப் பற்றி பேசின. 9-14 அதிகாரங்களிலோ அந்தத் தீர்க்கதரிசி எதிர்காலத்தில் நிகழவிருக்கும் காரியங்கள் பற்றி பேசுகிறார். மத்தேயு, சகரியாவிலிருந்து மேற்கோள் காட்டிவிட்டு அந்த வார்த்தைகளை எரேமியா கூறியதாக ஏன் சொல்கிறார் என சிலர் கேட்கின்றனர். (மத். 27:9; சக. 11:12) பிற்பட்ட தீர்க்கதரிசிகளில் (தற்போதைய பைபிள்களில் இருப்பதுபோல் ஏசாயா புத்தகத்திற்கு பதிலாக) எரேமியா புத்தகமே முதல் என சில சமயங்களில் கருதப்பட்டதாக தோன்றுகிறது. ஆகவே, சகரியாவை “எரேமியா” என்று மத்தேயு குறிப்பிட்டபோது யூதர்களின் ஒரு பழக்கத்தை அவர் பின்பற்றியிருக்கலாம். ஏனெனில் வேதாகமத்தின் ஒரு முழு பகுதியையும் அந்தப் பகுதியின் முதல் புத்தகத்தின் பெயரால் அழைக்கும் பழக்கம் அவர்கள் மத்தியில் இருந்தது. இயேசுவும்கூட எழுத்துக்கள் என்று அறியப்பட்ட எல்லா புத்தகங்களையும் சேர்த்து ‘சங்கீதங்கள்’ என்று அழைத்தார்.—லூக். 24:44.b
7 இந்தப் புத்தகத்தின் 6-ம் அதிகாரம் 8-ம் வசனம் வரை தொடர்ச்சியான எட்டு தரிசனங்கள் அடங்கியுள்ளன. ஆலயம் திரும்ப கட்டப்படுவதுடன் சம்பந்தப்பட்ட இவை தானியேலுக்கும் எசேக்கியேலுக்கும் உண்டான தரிசனங்களை ஒத்திருக்கின்றன. இதற்கு பிறகு, உள்ளப்பூர்வமான வணக்கம், திரும்ப நிலைநாட்டப்படுதல், யெகோவாவின் யுத்த நாள் ஆகியவை பற்றிய அறிவிப்புகளும் தீர்க்கதரிசனங்களும் பின்தொடருகின்றன.
சகரியாவின் பொருளடக்கம்
8 முதலாம் தரிசனம்: நான்கு குதிரைவீரர் (1:1-17). “என்னிடத்தில் திரும்புங்கள் . . . அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்” என்று யெகோவா சொல்கிறார். பிறகு, “தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ?” என்று கேட்கிறார். (1:3, 6) நியாயப்படி தங்களுக்கு சேர வேண்டியதையே தாங்கள் பெற்றதாக ஜனங்கள் ஒப்புக்கொள்கின்றனர். சகரியாவிற்கு முதல் தரிசனம் இப்போது தோன்றுகிறது. இரவில் எருசலேமுக்கு அருகிலுள்ள மரங்களின் பக்கத்தில் நான்கு குதிரைவீரர்கள் நிற்கிறார்கள். இவர்கள் பூமி முழுவதையும் சுற்றிப்பார்த்து அது அமைதலாகவும் அமரிக்கையாகவும் இருப்பதைக் கண்டு திரும்பி வந்திருக்கின்றனர். ஆனால் அவர்களைச் சந்தித்துப் பேசும் யெகோவாவுடைய தூதன் எருசலேமின் நிலைமையைக் கண்டு கலக்கமடைகிறார். சீயோனுக்கு விரோதமாக தீங்குசெய்த தேசங்களுக்கு எதிரான தம்முடைய கடுங்கோபத்தை யெகோவாவே தெரிவிக்கிறார். மேலும் தாம் “மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்”புவதாகவும் கூறுகிறார். தம்முடைய சொந்த ஆலயம் அதில் கட்டப்படும், அதின் பட்டணங்கள் “நன்மையினால் பரம்பியிருக்கும்” என்றும் அவர் சொல்கிறார்.—1:16, 17.
9 இரண்டாம் தரிசனம்: கொம்புகளும் தொழிலாளிகளும் (1:18-21). யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த நான்கு கொம்புகளை சகரியா காண்கிறார். பின்பு யெகோவா நான்கு தொழிலாளிகளை அவருக்கு காண்பித்து, யூதாவை எதிர்க்கிற தேசங்களின் கொம்புகளைத் தகர்த்துப்போடுவதற்கு இவர்கள் வருவார்கள் என்று விளக்குகிறார்.
10 மூன்றாம் தரிசனம்: எருசலேமின் செழுமை (2:1-13). ஒரு மனிதன் எருசலேமை அளக்கிறான். அந்த நகரம் பெருகும்படி ஆசீர்வதிக்கப்படும், யெகோவா அதைச் சுற்றிலும் அக்கினிமயமான மதிலாகவும் அதின் நடுவில் மகிமையாகவும் இருப்பார். “சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்” என்று கூறுகிறார். மேலும், “உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” என்ற எச்சரிக்கையையும் கூட்டுகிறார். (2:7, 8, NW) யெகோவா அதில் தங்கியிருப்பதால் சீயோன் களிகூரும், பல தேசத்தார் யெகோவாவிடம் சேர்ந்துகொள்வார்கள். மாம்சமான யாவும் யெகோவாவுக்கு முன்பாக மெளனமாயிருக்கும்படி கட்டளையிடப்படுகின்றன, ஏனெனில், “அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார்.”—2:13.
11 நான்காம் தரிசனம்: யோசுவாவின் விடுவிப்பு (3:1-10). பிரதான ஆசாரியனாகிய யோசுவா சோதனையில் இருக்கிறார், சாத்தான் அவரை எதிர்க்கிறான், யெகோவாவின் தூதன் சாத்தானைக் கடிந்துகொள்கிறார். யோசுவா “அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா”? (3:2) யோசுவா சுத்தமானவராக அறிவிக்கப்படுகிறார், அவருடைய அழுக்கு வஸ்திரங்கள் மாற்றப்பட்டு சுத்தமான ‘அரசுக்குரிய அங்கிகள்’ அவருக்கு கொடுக்கப்படுகின்றன. அவர் யெகோவாவின் வழிகளில் நடக்கும்படி உற்சாகத்தைப் பெறுகிறார். யெகோவாவே ‘தம்முடைய ஊழியனாகிய முளையைக் கொண்டுவருகிறவர்,’ மேலும் யோசுவாவுக்கு முன்பாக ஒரு கல்லை வைக்கிறவர், அதன்மீது ஏழு கண்கள் உள்ளன.—3:4, 8, NW.
12 ஐந்தாம் தரிசனம்: குத்துவிளக்கு தண்டும் ஒலிவ மரங்களும் (4:1-14). அந்தத் தூதன் சகரியாவை எழுப்புகிறார், அப்போது ஏழு விளக்குகளைக் கொண்ட பொன் விளக்குத்தண்டு ஒன்றையும் அதன் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு ஒலிவ மரம் இருப்பதையும் பார்க்கிறார். யெகோவா செருபாபேலுக்கு சொல்லும் இந்த வார்த்தையை அவர் கேட்கிறார்: “பலத்தினாலுமல்ல, பராக்கிரமத்தினாலுமல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” செருபாபெலுக்கு முன்பாக ஒரு “பெரிய மலை” சமபூமி ஆக்கப்படும். “எவ்வளவு அழகு! எவ்வளவு அழகு!” என்ற ஆர்ப்பரிப்போடு ஆலய தலைக்கல் கொண்டுவரப்படும். செருபாபேல் ஆலய அஸ்திவாரங்களைப் போட்டார், அவரே அந்த வேலையை முடிப்பார். அந்த ஏழு விளக்குகள், “பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற” யெகோவாவின் கண்களாகும். (4:6, 7, 10, NW) அந்த இரண்டு ஒலிவ மரங்களும் யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட இரண்டு பேர் ஆவர்.
13 ஆறாம் தரிசனம்: பறக்கும் புஸ்தகச்சுருள் (5:1-4). சுமார் 9 மீட்டர் நீளமும் 4.5 மீட்டர் அகலமும் உள்ள பறக்கும் ஒரு புஸ்தகச்சுருளை சகரியா காண்கிறார். அது திருடுகிறவர்கள், யெகோவாவின் பெயரில் பொய்யாய் ஆணையிடுகிறவர்கள் ஆகியோருக்காக புறப்பட்டுப் போகிற சாபம் என தூதன் விளக்குகிறார்.
14 ஏழாவது தரிசனம்: அளவிடும் மரக்கால் (5:5-11). அந்த அளவிடும் மரக்காலின் (சுமார் 22 லிட்டர்) மீதுள்ள மூடி திறக்கப்படுகிறது, அதில் “அக்கிரமம்” என்று பெயரிடப்பட்ட ஒரு பெண் இருக்கிறாள். அவள் அந்த மரக்காலுக்குள் திரும்ப தள்ளி மூடப்படுகிறாள். பின்பு ‘அவளுக்குரிய ஸ்தானத்திலே அவளை வைக்க,’ சிறகுகளையுடைய இரண்டு பெண்கள் அந்த மரக்காலை சிநெயாருக்கு (பாபிலோனுக்கு) கொண்டுசெல்ல வானத்தை நோக்கி தூக்கி செல்கின்றனர்.—5:8, 11, தி.மொ.
15 எட்டாம் தரிசனம்: நான்கு இரதங்கள் (6:1-8). இதோ! இரண்டு வெண்கல மலைகளுக்கு இடையிலிருந்து வெவ்வேறு நிற குதிரைகள் பூட்டிய நான்கு இரதங்கள் தோன்றுகின்றன. அவை பரலோகங்களின் நான்கு ஆவிகள். அந்தத் தூதனின் கட்டளைப்படி அவை பூமியில் சுற்றித் திரிகின்றன.
16 அந்த முளை; உண்மையற்ற உபவாசம் (6:9–7:14). பிரதான ஆசாரியனாகிய யோசுவாவின் தலைமீது சிறப்பான ஒரு கிரீடத்தை வைக்கும்படி யெகோவா இப்பொழுது சகரியாவுக்கு கட்டளையிடுகிறார். யெகோவாவின் ஆலயத்தைக் கட்டி, சிங்காசனத்தில் ஆசாரியராக இருந்து ஆளப்போகிற “முளை” பற்றி அவர் தீர்க்கதரிசனமாக பேசுகிறார்.—6:12, NW.
17 சகரியா தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெத்தேலிலிருந்து ஒரு தூதுக்குழு வந்து சேருகிறது. குறிப்பிட்ட காலப்பகுதிகளில் அழுது, உபவாசம் இருப்பதைத் தொடர்ந்து கைக்கொள்ள வேண்டுமா என அவர்கள் ஆலய ஆசாரியர்களிடம் கேட்கின்றனர். யெகோவா அந்த ஜனங்களிடமும் ஆசாரியர்களிடமும் அவர்கள் உண்மையோடு உபவாசம் செய்கிறார்களா என சகரியா மூலம் கேட்கிறார். யெகோவா விரும்புவது ‘கீழ்ப்படிதலும், உண்மையான நியாயமும், அன்புள்ள தயவும், இரக்கங்களுமே.’ (7:7, 9, NW) கீழ்ப்படியாத தோள்களுடனும் வைரம் போன்ற இருதயத்துடனும் அவர்கள் கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால் அவர் அவர்களை எல்லா தேசங்களுக்குள்ளும் பறக்கடிப்பார்.
18 திரும்ப நிலைநாட்டப்படுதல்; “பத்து மனுஷர்” (8:1-23). யெகோவா சீயோனிடம் திரும்பி எருசலேமில் வாசம்பண்ணுவார் என்றும் அது “சத்திய நகரம்” என அழைக்கப்படும் என்றும் அறிவிக்கிறார். அதன் பொதுவிடங்களில் முதிர்வயதான ஆட்கள் உட்காருவார்கள், பிள்ளைகள் அங்கே விளையாடுவார்கள். உண்மையும் நீதியுமுள்ள கடவுளாகிய யெகோவாவுக்கு இது அதிக கடினமான காரியமல்ல! யெகோவா தம்முடைய ஜனத்தில் மீதியானோருக்கு சமாதான வித்தை வாக்குறுதியளித்து, “பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது” என்று சொல்கிறார். (8:3, 13) அவர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் இவைகளே: ஒருவரோடொருவர் உண்மையைப் பேசி உண்மையோடு நியாயந்தீர்த்து, இருதயத்திலிருந்து தீங்கான சதி திட்டங்களையும் பொய் ஆணைகளையும் விலக்க வேண்டும். பல நகரங்களின் ஜனங்கள் யெகோவாவை ஊக்கமாய் தேடிச் செல்வதற்காக ஒருவரையொருவர் அழைக்கும் காலம் வரும். அப்போது எல்லா பாஷைக்காரரிலுமிருந்து வரும் “பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு” கடவுளுடைய ஜனங்களோடு செல்வார்கள்.—8:23.
19 தேசங்களுக்கும் போலி மேய்ப்பர்களுக்கும் எதிரான அறிவிப்புகள் (9:1–11:17). 9 முதல் 14 அதிகாரங்கள் அடங்கிய இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பகுதியில் சகரியா உருவகக்கதையை அல்ல, வழக்கமான தீர்க்கதரிசன நடையை உபயோகிக்கிறார். பல்வேறு நகரங்களுக்கு எதிரான கடுமையான அறிவிப்புகளோடு அவர் இந்தப் பகுதியை தொடங்குகிறார், அதில் மலைப்பாங்கான தீவு நகரமான தீருவும் உட்பட்டுள்ளது. எருசலேம் வெற்றிக்களிப்புடன் ஆர்ப்பரிக்கும்படி சொல்லப்படுகிறது, ஏனெனில், “இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மே[ல்] . . . ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.” (9:9) இவர் போர் இரதங்களையும் வில்லையும் முறித்துப்போட்டு, தேசங்களுக்கு சமாதானத்தைக் கூறி, பூமியின் எல்லைகள் வரை ஆளுவார். யெகோவா தம்முடைய ஜனத்திற்காக கிரேக்க ராஜ்யத்திற்கு எதிராக போரிட்டு அவர்களை ரட்சிப்பார். “அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது?” (9:17) மழையை அருளுகிறவராகிய யெகோவா, குறிசொல்வோரையும் போலி மேய்ப்பர்களையும் கண்டனம் செய்கிறார். அவர் யூதா வீட்டாரை மேன்மைப்படுத்துவார், எப்பிராயீம் வீட்டாரைப் பராக்கிரமசாலியைப் போலாக்குவார். மீட்கப்பட்டவர்களுடைய “இருதயம் யெகோவாவில் களிகூரும். . . . அவருடைய நாமத்திலே அவர்கள் நடந்துகொள்வார்கள்.”—10:7, 12, NW.
20 சகரியா மந்தையை மேய்க்கும் ஒரு நியமிப்பைப் பெறுகிறார். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம்” என்று சொல்லும் இரக்கமற்ற மேய்ப்பர்கள் அந்த மந்தையை கொல்லப்படுவதற்காக விற்றுப்போட்டனர். (11:5) இந்தத் தீர்க்கதரிசி இரண்டு கோல்களை எடுத்து ஒன்றிற்கு “இனிமை” என்றும் மற்றொன்றிற்கு “ஒற்றுமை” என்றும் பெயரிடுகிறார். (11:7, NW) “இனிமை” என்ற கோலை முறித்து, ஓர் உடன்படிக்கை முறிந்துபோனதை அடையாளமாக காட்டுகிறார். பின்பு தன் கூலியைத் தரும்படி கேட்கிறார், அவர்கள் 30 வெள்ளிக் காசுகளை நிறுத்துக் கொடுக்கிறார்கள். அதைக் கருவூலத்திற்குள் எறிந்துவிடும்படி யெகோவா சகரியாவிடம் கட்டளையிடுகிறார். பின்னர், “இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு” என்று கடும் ஏளனத்துடன் சொல்கிறார். (11:13) இப்போது “ஒற்றுமை” என்ற கோல் முறிக்கப்படுகிறது, இது யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையிலுள்ள சகோதரத்துவம் முறிக்கப்படுவதைக் குறிக்கிறது. யெகோவாவின் ஆடுகளைக் கவனியாமல்விட்ட போலி மேய்ப்பர்கள் மீது பட்டயம் நிச்சயமாய் வரும்.
21 யெகோவா போரிடுகிறார், அரசராகிறார் (12:1–14:21). மற்றொரு கண்டன அறிவிப்பு தொடங்குகிறது. யெகோவா எருசலேமை, ஜனங்களை வெறித்து தள்ளாட செய்யும் ஒரு பாத்திரமாகவும், தூக்குவோர் யாவரையும் கீறிப்போடுகிற பாரமான கல்லாகவும் ஆக்குவார். எருசலேமுக்கு விரோதமாக வருகிற எல்லா தேசங்களையும் அவர் முற்றிலுமாக அழித்துப்போடுவார். தாவீதின் வீட்டார் மீது யெகோவா கிருபை மற்றும் விண்ணப்பங்களின் ஆவியை ஊற்றுவார். ஜனங்கள் தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்த்து “ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல” அவருக்காக புலம்புவார்கள். (12:10) எல்லா விக்கிரகங்களையும் கள்ளத் தீர்க்கதரிசிகளையும் அழித்துப்போடுவதாக சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். அத்தகைய கள்ளத் தீர்க்கதரிசி ஒருவனின் பெற்றோரே அவனைக் காயப்படுத்துவதால் அவன் வெட்கப்பட்டு தீர்க்கதரிசியின் அங்கியைக் கழற்றிப்போடுவான். யெகோவாவின் உடன் மேய்ப்பர் அடிக்கப்படுவார், மந்தை சிதறடிக்கப்படும். ஆனால் தம்முடைய பெயரில் கூப்பிடும்படி யெகோவா “மூன்றாம் பங்கை” புடமிட்டு சுத்திகரிப்பார். யெகோவா, “இது என் ஜனம்” என்று சொல்லுவார். அவர்களோ, “யெகோவா எங்கள் கடவுள்” என்று சொல்வார்கள்.—13:9, தி.மொ.
22 “இதோ கர்த்தருடைய நாள் வருகிறது.” சகல தேசங்களும் எருசலேமை தாக்கும்போது நகரத்திலுள்ள பாதிபேர் நாடுகடத்தப்படுவார்கள், மீதியானோர் கொஞ்சம் பேர் மீந்திருப்பர். அப்போது யெகோவா புறப்பட்டு, “யுத்த நாளிலே போராடுவதுபோல்” அந்தத் தேசங்களுக்கு எதிராக போரிடுவார். (14:1, 3) எருசலேமுக்கு கிழக்கேயுள்ள ஒலிவ மரங்களின் மலை, கிழக்கு மேற்காக பிளந்து அடைக்கலம் புகுவதற்கான பள்ளத்தாக்கு ஒன்று உண்டாகும். அந்நாளில் ஜீவதண்ணீர் எருசலேமிலிருந்து கிழக்கேயும் மேற்கேயும், கோடைகாலத்திலும் மாரிகாலத்திலும் பாய்ந்தோடும். “யெகோவா பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்.” (14:9, NW) எருசலேம் பாதுகாப்பை அனுபவித்து மகிழ்கையில் அதற்கு எதிராக போர் செய்வோரை யெகோவா தண்டிப்பார். நிற்கையிலேயே அவர்கள் சதையும், கண்களும், நாவுகளும் அழுகிப்போகும். அவர்கள் கலக்கமடைவார்கள். ஒவ்வொருவன் கையும் அவனுடைய அயலானுக்கு விரோதமாக எழும்பும். சகல தேசங்களிலும் மீந்திருப்போர் யாவரும் ‘சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்வதற்காக . . . வருஷாவருஷம் வருவார்கள்.’—14:16.
ஏன் பயனுள்ளது
23 சகரியா தீர்க்கதரிசனத்தைப் படித்து அதை தியானிப்போர் யாவரும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் அறிவைப் பெறுவார்கள். “சேனைகளின் யெகோவா” என்ற பதத்தை சகரியா 50 தடவைக்கும் மேலாக உபயோகிக்கிறார்; அந்தச் சமயங்களில் எல்லாம், அவர் தம்முடைய ஜனத்துக்காக போரிட்டு அவர்களைப் பாதுகாப்பவரும், அவர்களுடைய தேவைக்கேற்ப வல்லமையால் அவர்களை நிரப்புகிறவருமாக இருக்கிறார் என கூறுகிறார். ஆலயம் கட்டி முடிக்கப்படுவதற்கு மலைபோன்ற எதிர்ப்புகள் எழும்பியபோது சகரியா பின்வருமாறு அறிவித்தார்: “செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்.” யெகோவாவுடைய ஆவியின் உதவியால் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. அவ்வாறே இன்றும் யெகோவாவில் நம்பிக்கை வைத்து இடையூறுகளை எதிர்கொண்டால் அவை கரைந்துபோகும். இது, இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னது போலவே உள்ளது: “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம்விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது.”—சக. 4:6, 7; மத். 17:20.
24 பதிமூன்றாம் அதிகாரம் 2 முதல் 6 வசனங்களில், இன்றுவரை யெகோவாவின் அமைப்பை தனியே பிரித்துக் காட்டும் உண்மைப்பற்றுறுதியை சகரியா சித்தரித்துக் காட்டுகிறார். இந்தப் பற்றுறுதி மிக நெருங்கிய இரத்த சம்பந்தமான உறவுகளுக்கும் மேலாக இருக்கவேண்டும். நெருங்கிய உறவினர் ஒருவர் யெகோவாவின் பெயரில் பொய் தீர்க்கதரிசனம் உரைத்தால், அதாவது ராஜ்ய செய்திக்கு எதிராக பேசி, கடவுளுடைய ஜனங்களின் சபையிலுள்ள மற்றவர்கள்மீது தவறான செல்வாக்கு செலுத்த முயன்றால் அவருடைய குடும்ப அங்கத்தினர்கள், சபை எடுக்கும் எந்த நீதிவிசாரணை நடவடிக்கையையும் உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரிக்க வேண்டும். பொய் தீர்க்கதரிசனம் உரைக்கிற மிக நெருங்கிய கூட்டாளியின் விஷயத்திலும்கூட இந்த நியமமே பொருந்த வேண்டும். அப்போதுதான் அவர் தன்னுடைய தவறான செயலின் காரணமாக வெட்கப்பட்டு இருதயத்தில் குத்தப்பட்டவராக உணருவார்.
25 அறிமுக பாராக்களில் பார்த்தபடி, இயேசு ‘தாழ்மையுள்ளவராய், கழுதையின்மேல் ஏறி வருகிறவராய்’ எருசலேமுக்குள் அரசராக பிரவேசித்தது, ‘முப்பது வெள்ளிக் காசுகளுக்கு’ காட்டிக்கொடுக்கப்பட்டது, அந்தச் சமயத்தில் அவருடைய சீஷர்கள் சிதறடிக்கப்பட்டது, கழுமரத்தில் போர்ச்சேவகனின் ஈட்டியால் அவர் குத்தப்பட்டது ஆகியவை நுட்பமான விதத்தில் சகரியாவால் முன்னறிவிக்கப்பட்டன. (சக. 9:9; 11:12; 13:7; 12:10) அந்த “முளை” யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார் என்றும் இந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. ஏசாயா 11:1-10; எரேமியா 23:5, (NW); லூக்கா 1:32, 33 ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த முளை இயேசு கிறிஸ்து என்பது தெளிவாகிறது. அவர் “யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்.” இந்த “முளை” “தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்” என்று சகரியா விவரிக்கிறார். இது, “இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய்” இருக்கிறார் என்றும் “பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கி”றார் என்றும் கூறிய அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளோடு பொருந்துகிறது. (சக. 6:12, 13, NW; எபி. 6:20; 8:1) இவ்வாறு, இந்த ‘முளை’ பரலோகங்களில் கடவுளுடைய வலதுபாரிசத்தில் பிரதான ஆசாரியராகவும் அரசராகவும் வீற்றிருப்பார் என இந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. அதேசமயம் யெகோவாவே அனைவர் மீதும் சர்வலோக பேரரசர் எனவும் அறிவிக்கிறது: “அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.”—சக. 14:9.
26 அந்தக் காலத்தைக் குறிப்பிடுபவராய் “அந்நாளிலே” என்ற சொற்றொடரை இத்தீர்க்கதரிசி ஏறக்குறைய 20 தடவை கூறுகிறார். அவருடைய தீர்க்கதரிசனத்தின் முடிவிலும்கூட இதே வார்த்தைகளை உபயோகிக்கிறார். இந்தச் சொற்றொடர் தோன்றும் இடங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால், யெகோவா விக்கிரகங்களின் பெயர்களை அழித்து கள்ளத் தீர்க்கதரிசிகளை அகற்றிப்போடும் அந்த நாளையே இது குறிக்கிறது என தெரிகிறது. (13:2, 4) அப்போது கொடூரமான தேசங்கள்மீது யெகோவா போரிட்டு அவர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணி அவர்களை முற்றிலுமாக அழிப்பார். அந்நாளிலே ‘அவருடைய மலைகளின் பள்ளத்தாக்கைத்’ தம் சொந்த ஜனத்திற்கு அடைக்கலமாக கொடுப்பார். (14:1-5, 13; 12:8, 9) ஆம், “அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்.” அவர்கள் திராட்சச்செடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் அமர்ந்து ஒருவரையொருவர் வரவழைப்பார்கள். (சக. 9:16; 3:10; மீ. 4:4) அந்த மகிமையான நாளிலே சேனைகளின் யெகோவா தம்முடைய ஜனத்தின் ‘நடுவில் வாசமாயிருப்பார்.’ அப்போது “ஜீவத்தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு” ஓடும். ஆகவே, ‘அந்நாளின்’ சம்பவங்கள் ‘புதிய வானம், புதிய பூமி’ பற்றிய ராஜ்ய வாக்குறுதிக்கு முன்னோடிகளாக உள்ளன என்று சகரியாவின் இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.—சக. 2:11; 14:8; வெளி. 21:1-3; 22:1.
27 “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணக்கூடும்?” என்று யெகோவா கேட்கிறார். இதோ! முழு பூமியிலும் இந்தச் செழுமை உண்டாகியிருக்கும்: ‘அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேட வருவார்கள், “பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்” என்று சொல்வார்கள்.’ “அந்நாளிலே” குதிரையின் மணிகளிலும்கூட “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்ற வார்த்தைகள் எழுதியிருக்கும். இருதயத்திற்கு மகிழ்வூட்டும் இந்தத் தீர்க்கதரிசனங்களை சிந்தித்துப் பார்ப்பது அதிக பயனுள்ளது. ஏனென்றால் யெகோவாவின் பெயர் அவருடைய ராஜ்ய வித்தின் மூலம் நிச்சயமாகவே பரிசுத்தமாக்கப்படும் என்று அவை காட்டுகின்றன!—சக. 4:10; 8:22, 23; 14:20.
[அடிக்குறிப்புகள்]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 531, 1136.
b என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா, 1973, தொ. 4, பத்தி. 828; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 1080-1.
[கேள்விகள்]
1. சகரியா தீர்க்கதரிசனம் உரைக்க தொடங்கியபோது எருசலேமிலிருந்த ஆலயம் என்ன நிலையில் இருந்தது?
2. அந்த வேலை ஏன் மலைபோல் தோன்றியது, ஆனால் சகரியா எதனிடமாக அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார்?
3. (அ) சகரியா எவ்வாறு அடையாளம் காட்டப்படுகிறார், அவருடைய பெயர் ஏன் பொருத்தமாய் உள்ளது? (ஆ) சகரியாவின் தீர்க்கதரிசனம் எப்போது உரைக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது?
4, 5. (அ) தீரு நகரத்தை நேபுகாத்நேச்சார் பாழாக்கி வெகுகாலம் சென்றபிறகு அந்நகரின் வீழ்ச்சியை சகரியா ஏன் முன்னறிவித்தார்? (ஆ) குறிப்பிடத்தக்க விதமாக நிறைவேறிய எந்தத் தீர்க்கதரிசனங்கள், இந்தப் புத்தகம் தேவாவியால் ஏவப்பட்டதை நிரூபிக்கின்றன?
6. (அ) சகரியா 9-ம் அதிகாரம் முதற்கொண்டு எழுத்துநடையில் உள்ள மாற்றத்திற்கு காரணமென்ன? (ஆ) சகரியாவை “எரேமியா” என மத்தேயு குறிப்பிடுவதற்கு காரணம் என்னவாக இருக்கலாம்?
7. சகரியாவின் புத்தகம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது?
8. அந்த நான்கு குதிரைவீரர்களின் தரிசனம் எருசலேமையும் தேசங்களையும் பற்றி என்ன காட்டுகிறது?
9. கொம்புகளையும் தொழிலாளிகளையும் பற்றிய தரிசனத்தை யெகோவா எவ்வாறு விளக்குகிறார்?
10. எருசலேமின் செழுமையோடு யெகோவா எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார்?
11. பிரதான ஆசாரியனாகிய யோசுவா எவ்வாறு நியாயநிரூபணம் செய்யப்படுகிறார், என்ன செய்யும்படி அவர் உந்துவிக்கப்படுகிறார்?
12. ஆலய கட்டட வேலை பற்றி என்ன உற்சாகமும் உறுதியும் அளிக்கப்படுகின்றன?
13-15. பறக்கும் புஸ்தகச்சுருள், அளவிடும் மரக்கால், நான்கு இரதங்கள் ஆகியவற்றின் தரிசனங்களில் காண்பது என்ன?
16. “முளை” பற்றி என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது?
17. வணக்கம் சம்பந்தப்பட்டதில் யெகோவா விரும்புவது என்ன, அவருடைய வார்த்தைகளை எதிர்ப்போருக்கு என்ன நேரிடும்?
18. திரும்ப நிலைநாட்டுதல் பற்றிய என்ன மகிமையான வாக்குறுதிகளை யெகோவா கொடுக்கிறார்?
19. பின்னர் என்ன கடுமையான அறிவிப்புகள் செய்யப்படுகின்றன, ஆனால் எருசலேமின் அரசனைக் குறித்து என்ன சொல்லப்படுகிறது?
20. “இனிமை” மற்றும் “ஒற்றுமை” என்ற கோல்களை அடையாளமாக வைத்து என்ன நடித்துக் காட்டப்படுகிறது?
21. (அ) எருசலேமுக்கு விரோதமாக போரிடுவோர் பற்றிய யெகோவாவின் தீர்ப்பு என்ன? (ஆ) என்ன சிதறடிப்பும் சுத்திகரிப்பும் முன்னறிவிக்கப்படுகின்றன?
22. ‘யெகோவாவுக்குரிய நாளில்’ தேசங்களுக்கும் எருசலேமுக்கும் என்ன நடக்கப் போகிறது?
23. சகரியாவின் பதிவு எவ்வாறு விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது?
24. சகரியா 13-ம் அதிகாரத்தில் உண்மைப்பற்றுறுதி பற்றி என்ன சித்தரிப்பு கொடுக்கப்பட்டுள்ளது?
25. அந்த “முளை”யாகிய மேசியாவையும், யெகோவாவின்கீழ் பிரதான ஆசாரியரும் அரசருமாயிருக்கும் அவருடைய பதவியையும் அடையாளம் காட்டுவதில் சகரியாவின் தீர்க்கதரிசனம் மற்ற வேதவசனங்களோடு எவ்வாறு ஒத்திருக்கிறது?
26. என்ன மகிமையான ‘நாளைப்’ பற்றி சகரியா திரும்பத் திரும்ப குறிப்பிடுகிறார்?
27. யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுத்தப்படுவதில் சகரியா தீர்க்கதரிசனம் எவ்வாறு கவனத்தை ஊன்றவைக்கிறது?