“என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல”
“சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்துக்கு வந்தேன்.”—யோவா. 18:37.
1, 2. (அ) இந்த உலகத்தில் பிரிவினைகள் எப்படி அதிகமாகிக்கொண்டே வருகின்றன? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?
“சின்ன வயசிலிருந்தே அநியாயத்த மட்டும்தான் நான் பார்த்திருக்கேன்” என்று, தென் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு சகோதரி, தன் கடந்தகால வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறார். அதோடு, “என் நாட்டுலிருந்த அரசியல் ஆதரிக்குறதுக்குப் பதிலா, புரட்சிகரமான சிந்தனைகள்னு நிறைய பேர் நினைக்குற கருத்துகள நான் ஆதரிச்சேன். சொல்லப்போனா, ரொம்ப வருஷங்களா ஒரு தீவிரவாதியோட காதலியா இருந்தேன்” என்றும் அவர் சொல்கிறார். தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற ஒரு சகோதரர், தான் வன்முறையைக் கையில் எடுத்ததைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “என் இனம்தான் எல்லாத்தையும்விட உயர்ந்ததுனு நினைச்சேன். நான் ஒரு அரசியல் கட்சியிலயும் சேர்ந்தேன். எதிரிகள ஈட்டியால குத்திக்கொல்லணும்னு எனக்கு சொல்லிக்கொடுத்தாங்க. என் இனத்த சேர்ந்தவங்க யாராவது வேற கட்சிய ஆதரிச்சாங்கனா, அவங்களையும் கொல்லணும்னு சொல்லிக்கொடுத்தாங்க.” மத்திய ஐரோப்பாவில் இருக்கிற ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “எனக்கு தப்பெண்ணம் இருந்துச்சு. வேற நாட்டை சேர்ந்தவங்களயும் வேற மதத்த சேர்ந்தவங்களயும் நான் வெறுத்தேன்.”
2 ஒருகாலத்தில் இந்த மூன்று பேருக்கும் இப்படிப்பட்ட மனப்பான்மைதான் இருந்தது. இதே போன்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறவர்கள் இன்று அதிகமாகிக்கொண்டே வருகிறார்கள். சுதந்திரம் வேண்டுமென்பதற்காக, இன்று நிறைய அரசியல் பிரிவுகள் வன்முறையைக் கையில் எடுக்கின்றன. அரசியல் சர்ச்சைகளில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் சகஜமாக இருக்கிறது. நிறைய நாடுகளில், உள்நாட்டுக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்களை மோசமாக நடத்துவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. பைபிளில் முன்கூட்டியே சொல்லியிருப்பது போல், இந்தக் கடைசி நாட்களில், ஜனங்கள் “எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக” இருக்கிறார்கள். (2 தீ. 3:1, 3) பிரிவினைகள் அதிகமாகிக்கொண்டே வரும் இந்த உலகத்தில், கிறிஸ்தவர்கள் எப்படி ஒற்றுமையாக இருக்கலாம்? இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவருடைய காலத்திலிருந்த மக்கள் மனதிலும் சில அரசியல் கொள்கைகள் ஆழமாக வேரூன்றியிருந்தன; அதனால், அவர்களுக்கு மத்தியில் பிரிவினைகள் இருந்தன. இந்தக் கட்டுரையில், மூன்று கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். (1) எந்த அரசியல் பிரிவிலும் இயேசு ஏன் சேரவில்லை? (2) கடவுளுடைய மக்கள் எந்த அரசியல் விவகாரங்களிலும் தலையிடக் கூடாது என்பதை அவர் எப்படிக் காட்டினார்? (3) நாம் ஒருபோதும் வன்முறையைக் கையில் எடுக்கக் கூடாது என்ற பாடத்தை அவர் எப்படிக் கற்றுக்கொடுத்தார்?
சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை இயேசு ஆதரித்தாரா?
3, 4. (அ) இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களில் நிறைய பேர் எதற்காக ஆசைப்பட்டார்கள்? (ஆ) யூதர்களின் எண்ணம் இயேசுவின் அப்போஸ்தலர்களை எப்படிப் பாதித்தது?
3 இயேசு பிரசங்கித்த செய்தியைக் கேட்ட யூதர்களில் நிறைய பேர், ரோமர்களிடமிருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்று ரொம்ப ஆசைப்பட்டார்கள். யூத ஸெலட்டுகள் என்ற மத வெறிபிடித்த அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள், மக்களுடைய உணர்வுகளுக்கு இன்னும் தீனி போட்டார்கள். நிறைய ஸெலட்டுகள், கலிலேயனாகிய யூதாசை ஆதரித்தார்கள். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அவன், போலி மேசியாவாக இருந்தான்; நிறைய பேரை தவறாக வழிநடத்தினான். ரோமர்களுக்கு எதிராகக் கலகம் செய்யும்படி மக்களை அவன் தூண்டியதாகவும், ரோமர்களுக்கு வரி கட்டுவதாக ஒத்துக்கொண்டவர்களை “பயந்தாங்கொள்ளிகள்” என்று அவன் அழைத்ததாகவும், யூத சரித்திராசிரியரான ஜொசிஃபஸ் சொன்னார். கடைசியில், ரோமர்கள் அவனைத் தீர்த்துக்கட்டினார்கள். (அப். 5:37) தங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக, சில ஸெலட்டுகள் இன்னுமதிக வன்முறையில் இறங்கினார்கள்.
4 பெரும்பாலான யூதர்கள், மேசியாவுக்காக ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தார்கள். மேசியா வந்து தங்களை ரோமர்களிடமிருந்து விடுதலை செய்வாரென்றும், இஸ்ரவேலை மறுபடியும் பெரிய தேசமாக ஆக்குவாரென்றும் அவர்கள் நினைத்தார்கள். (லூக். 2:38; 3:15) இஸ்ரவேலில் மேசியா ஒரு அரசாங்கத்தை நிறுவுவார் என்றும், அப்படி நடந்தால் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களால் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியும் என்றும் நிறைய பேர் நம்பினார்கள். யோவான் ஸ்நானகர்கூட ஒரு தடவை இயேசுவிடம், “வரவேண்டியவர் நீங்கள்தானா அல்லது வேறொருவரையும் நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார். (மத். 11:2, 3) ஒருவேளை, வேறு யாராவது வந்து யூதர்களை விடுதலை செய்வார்களோ என்று அவர் நினைத்திருக்கலாம். இன்னொரு சமயத்தில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை, எம்மாவு என்ற கிராமத்துக்குப் போகும் சாலையில் இரண்டு சீஷர்கள் சந்தித்தார்கள். இஸ்ரவேலை இயேசு விடுவிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்ததாக அப்போது அவர்கள் சொன்னார்கள். (லூக்கா 24:21-ஐ வாசியுங்கள்.) கொஞ்ச நாட்களிலேயே இயேசுவின் அப்போஸ்தலர்கள், “‘எஜமானே, இந்தச் சமயத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்’ என்று அவரிடம் கேட்டார்கள்.”—அப். 1:6.
5. (அ) இயேசுவை ராஜாவாக்க வேண்டுமென்று கலிலேயா மக்கள் ஏன் ஆசைப்பட்டார்கள்? (ஆ) அவர்களுடைய எண்ணத்தை இயேசு எப்படிச் சரிசெய்தார்?
5 தங்களுடைய பிரச்சினைகளை மேசியா தீர்த்துவைப்பார் என்று யூதர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பு இருந்ததாலோ என்னவோ, இயேசு தங்களுடைய ராஜாவாக ஆக வேண்டுமென்று கலிலேயா மக்கள் ஆசைப்பட்டார்கள். அவர் சிறந்த தலைவராக இருப்பார் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்! அவர் அருமையான பேச்சாளராக இருந்தார், நோய்களைக் குணப்படுத்தினார். அதோடு, பசியில் இருந்தவர்களுக்கு உணவு கொடுத்தார். 5,000 ஆண்களுக்கு உணவு கொடுத்தபோது மக்கள் மலைத்துப்போனார்கள்! அவர்களுடைய விருப்பம் என்னவென்று இயேசு புரிந்துகொண்டார். அதனால், “அவர்கள் வந்து தன்னைப் பிடித்து ராஜாவாக்கப்போகிறார்கள் என்பதை . . . தெரிந்துகொண்டு, அந்த இடத்தைவிட்டு மறுபடியும் மலைக்குத் தனியாகப் போனார்” என்று பைபிள் சொல்கிறது. (யோவா. 6:10-15) அடுத்த நாள், மக்களிடையே இருந்த அந்தப் பரபரப்பு கொஞ்சம் தணிந்திருக்க வேண்டும்! அதனால், தான் வந்த நோக்கத்தைப் பற்றி இயேசு அவர்களிடம் விளக்கினார். அதாவது, அவர்களுடைய பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தான் வரவில்லை என்றும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொடுக்கவே வந்ததாகவும் சொன்னார். “அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள்” என்று சொன்னார்.—யோவா. 6:25-27.
6. அரசியல் செல்வாக்கு வேண்டுமென்ற விருப்பம் தனக்கு இல்லை என்பதை இயேசு எப்படித் தெளிவுபடுத்தினார்? (ஆரம்பப் படம்)
6 தன்னுடைய மரணத்துக்குக் கொஞ்சம் முன்பு, தன் சீஷர்களில் சிலர் என்ன நம்பிக்கொண்டிருந்தார்கள் என்பதை இயேசு புரிந்துகொண்டார். அதாவது, இயேசு தன்னுடைய ஆட்சியை எருசலேமில் தொடங்குவார் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அது நடக்காது என்பதை சீஷர்களுக்குப் புரியவைப்பதற்காக, மினாவைப் பற்றிய உவமையை அவர் சொன்னார். “அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்,” அதாவது இயேசு, ரொம்ப நாட்களுக்கு தூர தேசத்துக்குப் போவதைப் பற்றி அந்த உவமையில் சொன்னார். (லூக். 19:11-13, 15) அரசியலில் தான் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்பதை ரோம அதிகாரிகளிடமும் இயேசு சொன்னார். ரோமர்களுக்கு எதிராகக் கலகம் செய்யும்படி இயேசு மக்களைத் தூண்டிவிடுவாரோ என்று பொந்தியு பிலாத்து பயந்திருக்கலாம். அதனால், “நீ யூதர்களுடைய ராஜாவா?” என்று அவர் இயேசுவிடம் கேட்டிருக்கலாம். (யோவா. 18:33) அதற்கு, “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்று இயேசு தெளிவாகச் சொன்னார். (யோவா. 18:36) ஏனென்றால், அவருடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்படவிருந்தது. ‘சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதுதான்’ தன்னுடைய வேலை என்றும், அதற்காகத்தான் பூமிக்கு வந்ததாகவும் இயேசு சொன்னார்.—யோவான் 18:37-ஐ வாசியுங்கள்.
7. மனதளவில்கூட அரசியல் பிரிவுகளை ஆதரிக்காமல் இருப்பது ஏன் சவாலாக இருக்கலாம்?
7 தன்னுடைய நியமிப்பு என்னவென்று இயேசு புரிந்துவைத்திருந்தார். நாமும் நம்முடைய நியமிப்பு என்னவென்று புரிந்துகொள்ளும்போது, மனதளவில்கூட எந்த அரசியல் பிரிவையும் ஆதரிக்க மாட்டோம். ஆனால், இப்படி நடந்துகொள்வது எப்போதுமே சுலபம் கிடையாது. “எங்க பகுதியில இருக்குற ஜனங்க, இப்பெல்லாம் தங்களோட கொள்கையில தீவிரமா இருக்காங்க” என்று ஒரு வட்டாரக் கண்காணி சொல்கிறார். “தேசபக்தி அதிகமாயிட்டே போகுது. தங்களோட சொந்த ஜனங்களே தங்கள ஆட்சி செஞ்சா, நிலைமை முன்னேறும்னு மக்கள் நினைக்கிறாங்க. ஆனா நம்ம சகோதரர்கள், கடவுளோட அரசாங்கத்த பத்தி பிரசங்கிக்குறதுல மும்முரமா இருக்காங்க. அதனால கிறிஸ்தவ ஒற்றுமைய காத்துக்க முடியுது. அநீதியயும் மத்த பிரச்சினைகளயும் கடவுள் தீர்த்துவைப்பாருங்குற நம்பிக்கையோட இருக்காங்க. இத பார்க்குறப்போ, சந்தோஷமா இருக்கு” என்று சொல்கிறார்.
அரசியல் விவகாரங்களில் இயேசு எப்படி நடுநிலைமையோடு இருந்தார்?
8. இயேசுவின் நாட்களில் வாழ்ந்த யூதர்களில் நிறைய பேர், என்ன அநீதியை அனுபவித்தார்கள்?
8 தங்களைச் சுற்றி நடக்கும் அநீதிகளைப் பார்க்கும்போது, மக்கள் அரசியலில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். இயேசுவின் நாட்களில், வரி கட்டுவது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது; அதனால், அரசியல் பிரிவுகளை மக்கள் ஆதரித்தார்கள். எல்லாரும் வரி கட்டுகிறார்களா என்பதை உறுதி செய்துகொள்வதற்காக மக்களைப் பெயர்ப்பதிவு செய்யும்படி ரோமர்கள் சொன்னார்கள். அதனால், ரோம அரசாங்கத்துக்கு எதிராக கலிலேயனாகிய யூதாஸ் கலகம் செய்தான். சொத்து வரி, நில வரி, வீட்டு வரி என்று ஏராளமான வரிகள் இருந்தன! அதோடு, வரி வசூலிப்பவர்கள் ஊழல் பேர்வழிகளாக இருந்ததால் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. சிலசமயங்களில், அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்கள் தங்கள் பதவியை வாங்கினார்கள். பிறகு, அந்தப் பதவியைப் பயன்படுத்தி அதிக பணம் சம்பாதித்தார்கள். எரிகோவில் வரி வசூலிப்பவர்களின் தலைவனாக இருந்த சகேயுவும் அப்படிப்பட்டவன்தான்! ஜனங்களிடமிருந்து அபகரித்து, அவன் பணக்காரனாக ஆனான்.—லூக். 19:2, 8.
9, 10. (அ) அரசியல் விவகாரங்களில் இயேசுவைத் தலையிட வைப்பதற்கு, அவருடைய எதிரிகள் எப்படி முயற்சி செய்தார்கள்? (ஆ) இயேசு சொன்ன பதிலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆரம்பப் படம்)
9 வரி கட்டும் விவகாரத்தில் இயேசுவை சிக்க வைப்பதற்காக, அவருடைய எதிரிகள் முயற்சி செய்தார்கள்; ‘தலைவரியை’ பற்றி அவரிடம் கருத்துக் கேட்டார்கள். எல்லா யூதர்களும் ஒரு தினாரியுவை தலைவரியாகக் கட்ட வேண்டியிருந்தது. (மத்தேயு 22:16-18-ஐ வாசியுங்கள்.) தாங்கள் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருப்பதற்கு அந்த வரி அடையாளமாக இருந்ததால், யூதர்கள் அதை வெறுத்தார்கள். யூதர்கள் வரி கட்ட வேண்டியதில்லை என்று இயேசு சொன்னால், ரோம சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று சொல்லி அவர்மீது குற்றம்சாட்டலாம் என்று ‘ஏரோதுவின் ஆதரவாளர்கள்,’ அதாவது ஏரோதுவின் அரசியல் கொள்கைகளை ஆதரித்தவர்கள், நினைத்தார்கள். ஒருவேளை, வரி கட்ட வேண்டுமென்று அவர் சொன்னால், அவரைப் பின்பற்றுவதை மக்கள் நிறுத்திவிடுவார்கள். இந்தச் சூழ்நிலையில் இயேசு என்ன செய்தார்?
10 இந்த விஷயத்தில் நடுநிலைமையோடு இருப்பதற்கு இயேசு மிகவும் கவனமாக இருந்தார். “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று சொன்னார். (மத். 22:21) வரி வசூலிப்பவர்களில் நிறைய பேர் ஊழல் பேர்வழிகளாக இருந்தார்கள் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தபோதிலும், அந்த விஷயத்தின் மீது அவர் கவனம் செலுத்தவில்லை. அதற்குப் பதிலாக, மனிதர்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைத் தரப்போகிற கடவுளுடைய அரசாங்கத்தின்மீது கவனம் செலுத்தினார். இயேசு நமக்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரி வைத்திருக்கிறார்! நாமும் எந்த அரசியல் பிரிவையும் ஆதரிக்கக் கூடாது. சிலசமயங்களில், ஒரு அரசியல் கட்சி நீதி நேர்மையோடு இருப்பதாகவும், இன்னொரு கட்சி அநியாயம் செய்வதாகவும் ஊழல் நிறைந்ததாகவும் நமக்குத் தெரியலாம். எப்படி இருந்தாலும் சரி, எந்த அரசியல் கட்சிக்கும் நாம் ஆதரவு தரக் கூடாது. கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும்தான் கிறிஸ்தவர்கள் முதலிடம் தருகிறார்கள். அதனால், அநீதிகளுக்கு எதிரான எந்தவொரு எண்ணத்தையும் நாம் வளர்த்துக்கொள்வது இல்லை; அவற்றுக்கு எதிராகப் பேசுவதும் இல்லை.—மத். 6:33.
11. நீதிக்கான தாகத்தை நாம் எப்படிச் சரியான முறையில் தணித்துக்கொள்ளலாம்?
11 அரசியல் விவகாரங்களைப் பற்றி ஒருகாலத்தில் தங்கள் மனதில் இருந்த ஆழமான எண்ணங்களை, யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். “பல்கலைக் கழகத்துல சமூகவியல் பாடம் நடத்துனதுனால அரசியல் சம்பந்தப்பட்ட தீவிரமான எண்ணங்கள நான் வளர்த்துக்கிட்டேன்” என்று கிரேட் பிரிட்டனில் இருக்கிற ஒரு சகோதரி சொல்கிறார். “கறுப்பு இனத்தை சேர்ந்த எங்களுக்கு ஏகப்பட்ட அநீதிகள் நடந்திருக்கு. அதனால, கறுப்பு இன மக்களுக்கான உரிமைகளை மீட்டுதரணும்னு நினைச்சேன். பொதுவாவே, எந்த வாக்குவாதம் நடந்தாலும் அதுல நான்தான் ஜெயிப்பேன்; ஆனா, கடைசியில விரக்திதான் மிஞ்சும். இனவெறியினால நடக்குற அநியாயங்களுக்கு மக்களோட மனசுல இருக்குற சில எண்ணங்கள்தான் காரணங்குறதயும், அத பிடுங்கி எறிஞ்சாதான் எல்லாம் சாரியாகுங்குறதையும் புரிஞ்சுக்காம இருந்தேன். பைபிள படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான், முதல்ல என் மனசுல இருக்குற எண்ணங்கள பிடுங்கி எறியணும்னு புரிஞ்சுது. இந்த மாற்றங்களை செய்றதுக்கு வெள்ளை இனத்தை சேர்ந்த ஒரு சகோதரிதான் பொறுமையா உதவி செஞ்சாங்க. இப்போ, சைகை மொழி சபையில நான் ஒழுங்கான பயனியரா இருக்கேன். வித்தியாசப்பட்ட எல்லா மக்களுக்கும் உதவி செய்ய கத்துக்கிட்டு இருக்கேன்.”
“உன் வாளை உறையில் போடு”
12. எந்த ‘புளித்த மாவை’ தன் சீஷர்கள் தவிர்க்க வேண்டுமென்று இயேசு சொன்னார்?
12 இயேசுவின் நாட்களில், மதமும் அரசியலும் அடிக்கடி கைகோர்த்துக்கொண்டன. அரசியல் பிரிவுகளைப் போலவே செயல்பட்ட மதப் பிரிவுகள் யூதர்கள் மத்தியில் இருந்ததாக பாலஸ்தீனாவில் தினசரி வாழ்க்கை—இயேசுவின் காலத்தில் என்ற ஆங்கிலப் புத்தகம் சொல்கிறது. அதனால்தான், இயேசு தன்னுடைய சீஷர்களை இப்படி எச்சரித்தார்: “பரிசேயர்களுடைய புளித்த மாவையும் ஏரோதுவுடைய புளித்த மாவையும் குறித்து ஜாக்கிரதையாகவும் விழிப்பாகவும் இருங்கள்.” (மாற். 8:15) ஏரோதுவைப் பற்றி இயேசு சொன்னபோது, பெரும்பாலும் ஏரோதுவின் ஆதரவாளர்களைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் இன்னொரு தொகுதியான பரிசேயர்கள், ரோம ஆட்சியிலிருந்து யூதர்களுக்கு விடுதலை வேண்டுமென்று நினைத்தார்கள். மத்தேயுவின் பதிவின்படி, சதுசேயர்களைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி இயேசு தன் சீஷர்களை எச்சரித்தார். சதுசேயர்களுக்கு ரோம ஆட்சியில் பெரிய பெரிய பதவிகள் கொடுக்கப்பட்டிருந்ததால், ரோமர்களே தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமென்று அவர்கள் நினைத்தார்கள். இந்த மூன்று பிரிவுகளுடைய ‘புளித்த மாவை,’ அதாவது போதனைகளை, தவிர்க்கும்படி இயேசு தன் சீஷர்களை எச்சரித்தார். (மத். 16:6, 12) மக்கள் தன்னை ராஜாவாக்க ஆசைப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே இயேசு இந்த எச்சரிக்கையைக் கொடுத்தது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்!
13, 14. (அ) அரசியல் மற்றும் மத விவகாரங்கள் எப்படி வன்முறைக்கும் அநீதிக்கும் வழிநடத்துகின்றன? (ஆ) நாம் அநீதியாக நடத்தப்பட்டால்கூட வன்முறையில் இறங்குவது ஏன் எப்போதுமே சரியல்ல? (ஆரம்பப் படம்)
13 மதங்கள் அரசியல் கட்சிகளை ஆதரிக்கும்போது, பெரும்பாலும் வன்முறையில்தான் போய் முடிகிறது. எல்லா சமயத்திலும் நடுநிலைமையோடு இருக்க வேண்டுமென்று இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் இயேசுவைக் கொல்ல நினைத்ததற்கு இது ஒரு காரணமாக இருந்தது. ஏனென்றால், மக்கள் இயேசுவைப் பின்பற்றினால் தங்களுடைய பேச்சைக் கேட்க மாட்டார்களோ என்று அவர்கள் பயந்தார்கள். அப்படி நடந்தால், அவர்களுடைய மத மற்றும் அரசியல் செல்வாக்கு ஆட்டம்கண்டுவிடும். “இவனை இப்படியே விட்டுவிட்டால் எல்லாரும் இவன்மேல் விசுவாசம் வைப்பார்கள். பிறகு, ரோமர்கள் வந்து நம்முடைய ஆலயத்தையும் தேசத்தையும் எடுத்துக்கொள்வார்கள்” என்று அவர்கள் சொன்னார்கள். (யோவா. 11:48) அதனால், இயேசுவைக் கொல்ல தலைமைக் குருவாகிய காய்பா திட்டம்போட்டான்.—யோவா. 11:49-53; 18:14.
14 ராத்திரிவரைக்கும் காத்திருந்து, இயேசுவைக் கைது செய்வதற்காக அவன் வீரர்களை அனுப்பினான். ஆனால், தன்னைக் கொலை செய்வதற்கு அவன் போட்ட திட்டம் இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், தன்னுடைய அப்போஸ்தலர்களோடு சேர்ந்து கடைசி உணவைச் சாப்பிட்ட சமயத்தில், வாள்களை எடுத்துக்கொள்ளும்படி அவர்களிடம் சொன்னார். ஒரு முக்கியமான பாடத்தை அவர்களுக்குக் கற்பிப்பதற்கு இரண்டு வாள்களே போதுமானதாக இருந்தன! (லூக். 22:36-38) அந்த ராத்திரி, இயேசுவைக் கைது செய்வதற்காக ஒரு கும்பல் வந்தது. அந்த அநீதியைப் பார்த்த பேதுருவுக்குப் பயங்கரக் கோபம் வந்ததால், தன்னுடைய வாளால் வேலைக்காரர்களில் ஒருவனைத் தாக்கினார். (யோவா. 18:10) ஆனால், இயேசு பேதுருவிடம், “உன் வாளை உறையில் போடு; வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்று சொன்னார். (மத். 26:52, 53) இயேசு கற்றுக்கொடுத்த முக்கியமான பாடம் என்ன? அவருடைய சீஷர்கள் உலகத்தின் பாகமாக இருக்கக் கூடாது! அந்த ராத்திரியில் அதைப் பற்றித்தான் இயேசு ஜெபம் செய்திருந்தார். (யோவான் 17:16-ஐ வாசியுங்கள்.) அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது.
15, 16. (அ) சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பதற்கு பைபிள் எப்படி கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது? (ஆ) இந்த உலகத்தில் என்ன வித்தியாசத்தை யெகோவா பார்க்கிறார்?
15 நாம் ஏற்கெனவே பார்த்த தென் ஐரோப்பாவைச் சேர்ந்த சகோதரி, இந்தப் பாடத்தைத்தான் கற்றுக்கொண்டார். “வன்முறையால, அநீதிக்கு முடிவுகட்ட முடியாதுங்குறத நான் கண்கூடா பார்த்தேன். வன்முறையில இறங்குனவங்களோட வாழ்க்கை பெரும்பாலும் சாவுலதான் முடிஞ்சுது. மத்தவங்களுக்கு விரக்திதான் மிஞ்சியிருக்கு. இந்த பூமியில, கடவுளால மட்டும்தான் உண்மையான நீதிய கொண்டுவர முடியும்னு பைபிளிலிருந்து தெரிஞ்சுக்கிட்டேன். அது எனக்கு சந்தோஷத்த கொடுத்துச்சு. இந்த செய்தியதான் கடந்த 25 வருஷமா மக்களுக்கு பிரசங்கிக்குறேன்” என்று அவர் சொல்கிறார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்தச் சகோதரர், ஈட்டியை எறிந்துவிட்டு, “கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தை” என்ற வாளை கையில் எடுத்துக்கொண்டார். (எபே. 6:17) சமாதானத்தின் செய்தியை, இன வேறுபாடு பார்க்காமல் எல்லா பின்னணியைச் சேர்ந்தவர்களிடமும் இப்போது அவர் பிரசங்கிக்கிறார். மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த அந்தச் சகோதரி, யெகோவாவின் சாட்சியாக ஆனதற்குப் பிறகு, எந்த இனத்தை முன்பு வெறுத்தாரோ, அதே இனத்தைச் சேர்ந்த சகோதரரைக் கல்யாணம் செய்துகொண்டார். இந்த மூன்று பேரும், கிறிஸ்துவைப் போலவே நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்பியதால், மாற்றங்களைச் செய்தார்கள்.
16 இப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்வது எவ்வளவு முக்கியம்! கொந்தளிக்கிற கடலைப் போல மக்கள் இருப்பதாகவும், நிம்மதி இல்லாமல் தவிப்பதாகவும் பைபிள் சொல்கிறது. (ஏசா. 17:12; 57:20, 21; வெளி. 13:1) அரசியல் விவகாரங்கள் மக்களைத் தூண்டிவிடுகின்றன, பிரிவினைகளை ஏற்படுத்துகின்றன, வன்முறைக்கும் வழிநடத்துகின்றன. ஆனால், நாம் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறோம். பல காரணங்களால் பிரிந்திருக்கும் இந்த உலக மக்கள் மத்தியில், தன்னுடைய மக்கள் ஒற்றுமையாக இருப்பதைப் பார்க்கும்போது, யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுகிறார்.—செப்பனியா 3:17-ஐ வாசியுங்கள்.
17. (அ) என்ன மூன்று வழிகளில் நாம் ஒற்றுமையை வளர்க்கலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
17 ஒற்றுமையை வளர்ப்பதற்கான மூன்று வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்த்தோம். (1) எல்லா அநீதிகளுக்கும் கடவுளுடைய அரசாங்கம் முடிவுகட்டும் என்று நம்புவதன் மூலமும், (2) அரசியல் விவகாரங்களில் நடுநிலைமையோடு இருப்பதன் மூலமும், (3) வன்முறையை அறவே தவிர்ப்பதன் மூலமும், நாம் ஒற்றுமையை வளர்க்கலாம். ஆனால், ஒற்றுமைக்கு உலைவைக்கும் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதுதான் தப்பெண்ணம்! ஆரம்பக் கால கிறிஸ்தவர்களைப் போலவே, நாமும் அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.