யெகோவாவையும் இயேசுவையும் போல நாமும் ஒற்றுமையாக இருப்போமாக!
‘தகப்பனே, நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே இவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.’ —யோவா. 17:20, 21.
1, 2. (அ) தன்னுடைய அப்போஸ்தலர்களோடு செய்த கடைசி ஜெபத்தில் இயேசு என்ன கேட்டார்? (ஆ) இயேசுவின் மனதில் ஒற்றுமையைப் பற்றிய விஷயம் ஓடிக்கொண்டிருந்ததற்கு எது காரணமாக இருந்திருக்கலாம்?
தன்னுடைய அப்போஸ்தலர்களோடு கடைசி உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயத்தில், ஒற்றுமையைப் பற்றிய விஷயம்தான் இயேசுவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தன் அப்போஸ்தலர்களோடு சேர்ந்து ஜெபம் செய்தபோது, தானும் தன்னுடைய தகப்பனும் ஒற்றுமையாக இருப்பது போலவே சீஷர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று தான் ஆசைப்படுவதாக இயேசு சொன்னார். (யோவான் 17:20, 21-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் சீஷர்கள் ஒற்றுமையாக இருப்பது, யெகோவாதான் இயேசுவை அனுப்பியிருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியாக இருக்கும்! அவர்களுக்குள் இருக்கும் அன்பைப் பார்த்து, அவர்கள்தான் இயேசுவின் உண்மையான சீஷர்கள் என்று மக்கள் புரிந்துகொள்வார்கள். இந்த அன்பு, இன்னும் ஒற்றுமையாக இருக்க அவர்களுக்கு உதவும்.—யோவா. 13:34, 35.
2 அன்று ராத்திரி, ஒற்றுமையைப் பற்றி இயேசு ஏன் நிறைய பேசினார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சீஷர்களுக்குள் அந்தளவு ஒற்றுமை இல்லாததை அவர் கவனித்தார்! உதாரணத்துக்கு, முன்பு ஏற்பட்டது போலவே அன்று ராத்திரியும், “தங்களில் யார் மிக உயர்ந்தவர்” என்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. (லூக். 22:24-27; மாற். 9:33, 34) இன்னொரு சமயம், பரலோக அரசாங்கத்தில் தங்களுக்கு உயர்ந்த இடத்தை, அதாவது இயேசுவின் பக்கத்தில் உட்காரும் அதிகாரத்தை, தர வேண்டுமென்று யாக்கோபும் யோவானும் அவரிடம் கேட்டார்கள்.—மாற். 10:35-40.
3. இயேசுவின் சீஷர்கள் ஒற்றுமையாக இல்லாததற்கு என்ன காரணங்கள் இருந்திருக்கலாம்? என்ன கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்வோம்?
3 இயேசுவின் சீஷர்கள் ஒற்றுமையாக இல்லாததற்கு, பேர் புகழுக்கான ஆசை மற்றும் அதிகாரத்தைப் பெறுவதற்கான ஆசை மட்டுமே காரணமல்ல. இயேசுவின் காலத்திலிருந்த மக்களுக்குள் வெறுப்பும் தப்பெண்ணமும் இருந்ததால், அவர்களுக்கிடையே பிரிவினைகள் ஏற்பட்டன. இப்படிப்பட்ட எதிர்மறையான உணர்ச்சிகளை எதிர்த்து சீஷர்கள் போராட வேண்டியிருந்தது. இந்தக் கட்டுரையில், பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்வோம்: இயேசு எப்படித் தப்பெண்ணத்தைத் தவிர்த்தார்? பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்வதற்கும், ஒற்றுமையாக இருப்பதற்கும் இயேசு எப்படித் தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்? இயேசுவின் முன்மாதிரியும் அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களும் ஒற்றுமையாக இருப்பதற்கு நமக்கு எப்படி உதவும்?
இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் எதிரான தப்பெண்ணம்
4. இயேசுவைச் சுற்றியிருந்தவர்களுக்கு எப்படிப்பட்ட தப்பெண்ணங்கள் இருந்தன?
4 தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்குத் தன்மேல் இருந்த தப்பெண்ணத்தால், இயேசுவும் பாதிக்கப்பட்டார். தான் மேசியாவைக் கண்டுபிடித்துவிட்டதாக பிலிப்பு நாத்தான்வேலிடம் சொன்னபோது, “நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமா?” என்று நாத்தான்வேல் கேட்டார். (யோவா. 1:46) மேசியா பெத்லகேமில் பிறப்பார் என்று மீகா 5:2-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நாத்தான்வேலுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அதனால், ‘போயும்போயும் நாசரேத்திலிருந்தா மேசியா வருவார்?’ என்று அவர் யோசித்திருக்கலாம். அதோடு, இயேசு கலிலேயாவிலிருந்து வந்ததால், யூதேயாவைச் சேர்ந்த சில பிரபலமான ஆட்கள் இயேசுவைத் தாழ்வாகப் பார்த்தார்கள். (யோவா. 7:52) ஏனென்றால், யூதேயாவில் இருந்த நிறைய பேர், கலிலேயாவைச் சேர்ந்த மக்களை மட்டமானவர்களாக நினைத்தார்கள். இன்னும் சில யூதர்கள், இயேசுவை சமாரியன் என்று சொல்லி அவமானப்படுத்தப் பார்த்தார்கள். (யோவா. 8:48) சமாரியர்கள், இன ரீதியிலும் மத ரீதியிலும் யூதர்களிலிருந்து வித்தியாசமானவர்களாக இருந்தார்கள். யூதர்களும் கலிலேயர்களும் சமாரியர்களைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை; அவர்களிடம் எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்ளவில்லை.—யோவா. 4:9.
5. சீஷர்களைப் பற்றிய என்ன தப்பெண்ணம் மற்றவர்களுக்கு இருந்தது?
5 யூத மதத் தலைவர்கள், இயேசுவின் சீஷர்களையும் மதிக்கவில்லை. அவர்களை “சபிக்கப்பட்டவர்கள்” என்று பரிசேயர்கள் சொன்னார்கள். (யோவா. 7:47-49) ரபீக்களுடைய பள்ளிகளில் படிக்காதவர்கள் மற்றும் தங்களுடைய பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்காதவர்களை, சாதாரண ஆட்களாகவும் எதற்கும் லாயக்கற்றவர்களாகவும் பார்த்தார்கள். (அப். 4:13, அடிக்குறிப்பு.) இயேசுவின் காலத்திலிருந்த மக்கள், தங்களுடைய மதத்தையும் அந்தஸ்தையும் இனத்தையும் நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டார்கள். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் எதிரான தப்பெண்ணத்துக்கு அதுதான் காரணம். இந்தத் தப்பெண்ணம் சீஷர்களையும் தொற்றிக்கொண்டது; மற்றவர்களை அவர்கள் பார்த்த விதத்தையும் பாதித்தது. ஒற்றுமையைக் காத்துக்கொள்ள, தாங்கள் யோசிக்கும் விதத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.
6. தப்பெண்ணத்தால் நாம் எப்படிப் பாதிக்கப்படலாம் என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்லுங்கள்.
6 இன்று, நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் தப்பெண்ணங்கள்தான் இருக்கின்றன. ஒருவேளை, நம்மீது மற்றவர்களுக்கோ மற்றவர்கள்மீது நமக்கோ ஏதாவது தப்பெண்ணம் இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் பயனியராக இருக்கும் ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “ஆஸ்திரேலியாவுல இருக்குற பழங்குடி மக்களுக்கு நிறைய அநியாயங்கள் நடந்திருக்கு. இப்பவும் நடந்திட்டுதான் இருக்கு. இந்த அநீதிய பத்தியே யோசிச்சிட்டு இருந்ததுனால வெள்ளை இனத்த சேர்ந்தவங்கமேல எனக்கு வெறுப்பு அதிகமாச்சு.” சிலர் அவரைத் தவறாக நடத்தியிருந்ததாலும் அவருடைய வெறுப்பு அதிகமானது. கனடாவைச் சேர்ந்த ஒரு சகோதரர், முன்பு தான் உணர்ந்த விதத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “பிரஞ்சு மொழி பேசுறவங்கதான் ரொம்ப உயர்ந்தவங்கனு நான் நினைச்சிட்டு இருந்தேன்.” அதனால், ஆங்கிலம் பேசுபவர்களை அவருக்குப் பிடிக்காமல் போனது.
7. தப்பெண்ணங்களை இயேசு எப்படித் தவிர்த்தார்?
7 இயேசுவின் காலத்தில் இருந்ததைப் போலவே, நம் காலத்திலும் மக்களின் மனதில் தப்பெண்ணங்கள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. அவற்றை விட்டுவிடுவது அவ்வளவு சுலபம் இல்லை! ஆனால், இப்படிப்பட்ட எண்ணங்களைத் தவிர்ப்பதற்காக இயேசு என்ன செய்தார்? முதலாவதாக, தப்பெண்ணங்களை அவர் வளர்த்துக்கொள்ளவில்லை. எல்லாரிடமும் பாரபட்சமில்லாமல் நடந்துகொண்டார். பணக்காரர்கள், ஏழைகள், பரிசேயர்கள், சமாரியர்கள், வரி வசூலிப்பவர்கள், பாவிகள் என்று எல்லாருக்கும் பாரபட்சமில்லாமல் பிரசங்கித்தார். இரண்டாவதாக, மற்றவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது என்றும் தப்பெண்ணத்தை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்றும் தன்னுடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்; தன் முன்மாதிரியின் மூலமும் அதைக் காட்டினார்.
அன்பாலும் மனத்தாழ்மையாலும் தப்பெண்ணத்தை வெல்லுங்கள்
8. எந்த நியமம் நம்முடைய ஒற்றுமைக்கு அடிப்படையாக இருக்கிறது? விளக்குங்கள்.
8 நம்முடைய ஒற்றுமைக்கு அடிப்படையாக இருக்கும் ஒரு முக்கியமான நியமத்தை இயேசு கற்றுக்கொடுத்தார். “நீங்கள் எல்லாரும் சகோதரர்கள்” என்று தன் சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 23:8, 9-ஐ வாசியுங்கள்.) நாம் ஆதாமின் பிள்ளைகளாக இருப்பதால், ஒரு விதத்தில் நாம் எல்லாருமே சகோதரர்களாக இருக்கிறோம். (அப். 17:26) தன்னுடைய சீஷர்களும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள் என்று இயேசு சொன்னார். ஏனென்றால், யெகோவாவைத் தங்களுடைய பரலோகத் தகப்பனாக அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். (மத். 12:50) அதனால், அவர்கள் யெகோவாவுடைய குடும்பத்தின் பாகமாக இருக்கிறார்கள்; அன்பாலும் விசுவாசத்தாலும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதனால்தான், சபைகளுக்குக் கடிதங்கள் எழுதியபோது தங்களுடைய சக கிறிஸ்தவர்களை சகோதர சகோதரிகள் என்று அப்போஸ்தலர்கள் குறிப்பிட்டார்கள்.—ரோ. 1:13; 1 பே. 2:17; 1 யோ. 3:13.a—அடிக்குறிப்பைப் பாருங்கள்.
9, 10. (அ) தங்களுடைய இனத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள யூதர்களுக்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை என்று ஏன் சொல்லலாம்? (ஆ) மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களைத் தாழ்வாகப் பார்ப்பது தவறு என்பதை இயேசு எப்படிப் புரியவைத்தார்? (ஆரம்பப் படம்)
9 ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாகப் பார்க்க வேண்டுமென்று தன் சீஷர்களிடம் சொன்ன பின்பு, அவர்கள் மனத்தாழ்மையாக இருக்க வேண்டுமென்று இயேசு வலியுறுத்தினார். (மத்தேயு 23:11, 12-ஐ வாசியுங்கள்.) நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், பெருமை என்ற குணம்தான் அப்போஸ்தலர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தியது. இயேசுவின் காலத்தில், தங்களுடைய இனத்தைப் பற்றி மக்கள் ரொம்பப் பெருமைப்பட்டுக்கொண்டார்கள். ஆபிரகாமின் பிள்ளைகளாக இருப்பதால், மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று யூதர்களில் நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால், ‘கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்துகூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க முடியும்’ என்று யோவான் ஸ்நானகர் அவர்களிடம் சொன்னார்.—லூக். 3:8.
10 “நான் அன்பு காட்ட வேண்டிய அந்த மற்றவர்கள் உண்மையில் யார்?” என்று ஒரு திருச்சட்ட வல்லுநன் கேட்டபோது, இயேசு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினார். அதாவது, தங்களுடைய இனத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்வது தவறு என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அவனுடைய கேள்விக்குப் பதிலளிப்பதற்காக இயேசு ஒரு கதையைச் சொன்னார். கொள்ளைக்காரர்கள் ஒரு யூதனை அடித்து சாலையோரமாகப் போட்டுவிடுகிறார்கள். அந்தப் பக்கமாகப் போன சில யூதர்கள் அவனைக் கண்டுகொள்ளாமல் போய்விடுகிறார்கள். ஆனால், அந்த வழியாக வந்த ஒரு சமாரியன் அவனைப் பார்த்து மனம் உருகி அவனுக்கு உதவுகிறார். இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, அந்தச் சமாரியனைப் போலவே நடந்துகொள்ளும்படி திருச்சட்ட வல்லுநனிடம் இயேசு சொன்னார். (லூக். 10:25-37) மற்றவர்களை நேசிப்பது எப்படி என்று ஒரு சமாரியனால் யூதர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும் என்பதை இயேசு புரியவைத்தார்.
11. இயேசுவின் சீஷர்கள் ஏன் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டியிருந்தது? அப்படி நடந்துகொள்வதற்கு இயேசு எப்படி அவர்களுக்கு உதவினார்?
11 இயேசு பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு, “யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும்” பிரசங்கிக்கும்படி தன் சீஷர்களிடம் சொன்னார். (அப். 1:8) அப்படிச் செய்வதற்கு, பெருமையையும் தப்பெண்ணத்தையும் அவர்கள் விட்டுவிட வேண்டியிருந்தது. வேறு தேசத்தைச் சேர்ந்த மக்களிடம் இருக்கும் நல்ல குணங்களைப் பற்றி இயேசு அடிக்கடி தன் சீஷர்களிடம் பேசினார். இப்படிச் செய்தது, எல்லா தேசத்தாருக்கும் பிரசங்கிக்க சீஷர்களுடைய மனதைத் தயார்படுத்தியது. உதாரணத்துக்கு, பலமான விசுவாசத்தைக் காட்டிய வேறு நாட்டைச் சேர்ந்த ஒரு படை அதிகாரியை இயேசு பாராட்டிப் பேசினார். (மத். 8:5-10) அதோடு, வேறு தேசத்து மக்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவியிருக்கிறார் என்பதைப் பற்றித் தன்னுடைய சொந்த ஊரான நாசரேத்திலிருந்தபோது இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். அதாவது, பெனிக்கேயைச் சேர்ந்த சாறிபாத் நகரத்திலிருந்த விதவை மற்றும் சீரியாவைச் சேர்ந்த தொழுநோயாளியான நாகமான் போன்றவர்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவினார் என்பதைப் பற்றிச் சொன்னார். (லூக். 4:25-27) ஒரு சமாரியப் பெண்ணிடமும் இயேசு பிரசங்கித்தார். அவருடைய செய்தியை சமாரியர்கள் ஆர்வமாகக் கேட்டதால், அவர்களுடைய ஊரிலேயே இரண்டு நாட்கள் தங்கி ஊழியம் செய்தார்.—யோவா. 4:21-24, 40.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தப்பெண்ணத்தை எதிர்த்துப் போராடினார்கள்
12, 13. (அ) சமாரியப் பெண்ணுக்கு இயேசு கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது அப்போஸ்தலர்களுக்கு எப்படி இருந்தது? (ஆரம்பப் படம்) (ஆ) இயேசு தங்களுக்குக் கற்றுக்கொடுத்த விஷயங்களை யாக்கோபும் யோவானும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?
12 தங்களுக்குத் தப்பெண்ணம் வராதபடி பார்த்துக்கொள்வதற்கு சீஷர்கள் போராட வேண்டியிருந்தது. ஒரு சமாரியப் பெண்ணுக்குக் கற்றுக்கொடுக்க இயேசு விரும்பியதைப் பார்த்தபோது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. (யோவா. 4:9, 27) ஏனென்றால், யூத மதத் தலைவர்கள் பொது இடங்களில் ஒரு பெண்ணோடு பேச மாட்டார்கள். அதுவும் மோசமான பெயரெடுத்த ஒரு சமாரியப் பெண் என்றால் சொல்லவே வேண்டாம்! அப்போஸ்தலர்கள் இயேசுவைச் சாப்பிடச் சொல்லியும் அவர் கடவுளைப் பற்றிச் சுவாரஸ்யமாக அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டே இருந்தார். உணவு சாப்பிடுவது அவருக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கவில்லை. அந்தச் சமாரியப் பெண் உட்பட எல்லாரிடமும் பிரசங்கிப்பதுதான் தன்னுடைய அப்பாவின் விருப்பம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. கடவுளுடைய விருப்பத்தின்படி செய்வதுதான் அவருக்கு உணவாக இருந்தது.—யோவா. 4:31-34.
13 ஆனால், யாக்கோபும் யோவானும் இந்த முக்கியமான பாடத்தைப் புரிந்துகொள்ளவில்லை. ஒருசமயம், இயேசுவும் சீஷர்களும் சமாரியா வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது, ராத்திரியில் ஓய்வெடுப்பதற்காக சமாரியர்களுடைய ஒரு கிராமத்தில் இடம் தேடினார்கள். ஆனால், அவர்கள் தங்குவதற்கு சமாரியர்கள் அனுமதிக்கவில்லை. அதனால், யாக்கோபுக்கும் யோவானுக்கும் கோபம் தலைக்கேறியது. உடனே அவர்கள், வானத்திலிருந்து நெருப்பை வரவழைத்து அந்த முழு கிராமத்தையும் அழிப்பதற்குத் தங்களுக்குக் கட்டளையிடும்படி இயேசுவிடம் சொன்னார்கள். அப்போது, இயேசு அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார். (லூக். 9:51-56) ஒருவேளை, தங்களுடைய சொந்த ஊரான கலிலேயாவில் இப்படி நடந்திருந்தால் அவர்கள் இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டார்கள். சமாரியர்களைப் பற்றிய தப்பெண்ணம் அவர்களுடைய மனதில் இருந்ததால் அவர்கள் அப்படிக் கோபப்பட்டிருக்கலாம். கொஞ்சக் காலம் கழித்து, சமாரியர்களிடம் யோவான் பிரசங்கித்தபோது நிறைய பேர் காதுகொடுத்துக் கேட்டார்கள். முன்பு உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொண்டதை நினைத்து அப்போது அவருக்குத் தர்மசங்கடமாக இருந்திருக்கும்.—அப். 8:14, 25.
14. தப்பெண்ணத்தால் ஏற்பட்ட ஒரு பிரச்சினை எப்படிச் சரிசெய்யப்பட்டது?
14 கி.பி. 33-ம் வருஷம், பெந்தெகொஸ்தே பண்டிகை முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, சபையில் இனப் பாகுபாடு பிரச்சினை ஏற்பட்டது. விதவைகளுக்கு உணவு கொடுக்கும் விஷயத்தில், கிரேக்க மொழி பேசும் விதவைகளைச் சகோதரர்கள் சரியாகக் கவனிக்கவில்லை. (அப். 6:1) வேறு மொழி பேசிய சகோதர சகோதரிகள்மேல் இருந்த தப்பெண்ணத்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், அப்போஸ்தலர்கள் இந்தப் பிரச்சினையை உடனடியாகச் சரிசெய்தார்கள். எல்லாருக்கும் சமமாக உணவைப் பகிர்ந்து கொடுப்பதற்காக, தகுதிபெற்ற ஏழு சகோதரர்களை நியமித்தார்கள்; இவர்கள் எல்லாருக்கும் கிரேக்க பெயர்கள் இருந்தன. இவர்களைத் தேர்ந்தெடுத்தது, பாதிக்கப்பட்ட அந்த விதவைகளுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.
15. எல்லாரிடமும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள பேதுரு எப்படிக் கற்றுக்கொண்டார்? (ஆரம்பப் படம்)
15 கி.பி. 36-ல், இயேசுவின் சீஷர்கள் எல்லா தேசத்தாருக்கும் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு, அப்போஸ்தலன் பேதுரு பொதுவாக யூதர்களோடு மட்டுமே நேரம் செலவிட்டார். ஆனால், எல்லாரிடமும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கடவுள் தெளிவுபடுத்தினார். அதனால், ரோமப் படைவீரரான கொர்நேலியுவுக்கு பேதுரு பிரசங்கித்தார். (அப்போஸ்தலர் 10:28, 34, 35-ஐ வாசியுங்கள்.) இந்தச் சம்பவத்துக்குப் பின்பு, யூதரல்லாத கிறிஸ்தவர்களோடு பேதுரு நிறைய நேரம் செலவிட்டார்; அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டார். ஆனால், சில வருஷங்களுக்குப் பிறகு, அந்தியோகியாவில் அவர் இருந்தபோது, யூதரல்லாத கிறிஸ்தவர்களோடு சேர்ந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். (கலா. 2:11-14) இப்படிச் செய்ததற்காக பவுல் தன்னைக் கண்டித்தபோது, பேதுரு அதை ஏற்றுக்கொண்டார். இது நமக்கு எப்படித் தெரியும்? ஆசியா மைனரில் இருந்த யூத மற்றும் யூதரல்லாத கிறிஸ்தவர்களுக்குத் தன்னுடைய முதல் கடிதத்தை எழுதியபோது, சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி பேதுரு குறிப்பிட்டார்.—1 பே. 1:1; 2:17.
16. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பற்றிய எந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்திருந்தது?
16 இயேசுவின் முன்மாதிரியால், “எல்லா விதமான மக்களையும்” நேசிக்க அப்போஸ்தலர்கள் கற்றுக்கொண்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. (யோவா. 12:32; 1 தீ. 4:10) மாற்றங்கள் செய்வதற்கு காலம் எடுத்தாலும், தங்களுடைய மனப்பான்மையை, அதாவது மக்களைப் பார்க்கும் விதத்தை, அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். சொல்லப்போனால், ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டும் விஷயத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பேர்போனவர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவர்களைப் பற்றி மற்ற ஜனங்கள் என்ன சொன்னார்கள் என்பதை இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த டெர்டுல்லியன் என்ற எழுத்தாளர் இப்படி எழுதினார்: “அவர்கள் ஒருவரையொருவர் ரொம்ப நேசிக்கிறார்கள் . . . மற்றவர்களுக்காகத் தங்கள் உயிரையே கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்.” முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் “புதிய சுபாவத்தை” அணிந்துகொண்டதால், கடவுள் எல்லாரையும் சமமாகப் பார்ப்பது போலவே அவர்களும் சமமாகப் பார்க்கக் கற்றுக்கொண்டார்கள்.—கொலோ. 3:10, 11.
17. நமக்குள் இருக்கும் தப்பெண்ணத்தை விட்டுவிட நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்காக சிலர் என்ன செய்தார்கள்?
17 நமக்குள் இருக்கும் தப்பெண்ணத்தை விட்டுவிடுவதற்குக் கொஞ்சக் காலம் எடுக்கலாம். பிரான்சில் இருக்கும் ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “அன்புனா என்ன... மத்தவங்களோட பகிர்ந்துக்குறதுனா என்ன... எல்லா விதமான மக்களையும் நேசிக்குறதுனா என்ன... இப்படி யெகோவா எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்திருக்காரு. இருந்தாலும், மத்தவங்கமேல தப்பெண்ணத்த வளர்த்துக்காம இருக்க இப்பவும் நான் கத்துக்கிட்டுதான் இருக்கேன். அது அவ்வளவு சுலபமா இல்ல. அதனாலதான், அதுக்காக விடாம ஜெபம் பண்ணிட்டே இருக்கேன்.” ஸ்பெயினில் இருக்கும் ஒரு சகோதரி, குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள்மீது தனக்கிருந்த தப்பெண்ணத்தை விட்டுவிடுவதற்கு இப்போதும் போராட வேண்டியிருக்கிறது என்று சொல்கிறார். “அந்த போராட்டத்துல நான் நிறைய தடவ ஜெயிச்சிருக்கேன். ஆனா, விடாம போராடணும்னு எனக்கு தெரியும். ஒற்றுமையான ஒரு குடும்பத்துல எனக்கும் ஒரு இடம் கொடுத்ததுக்காக யெகோவாவுக்கு ரொம்ப நன்றி சொல்றேன்” என்று அவர் சொல்கிறார். மற்றவர்களைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதை நாம் கவனமாக யோசித்துப்பார்க்க வேண்டும். நாமும் இந்த மாதிரி ஏதாவது தப்பெண்ணத்தை விட்டொழிக்க வேண்டியிருக்கிறதா?
அன்பு வளரும்போது தப்பெண்ணம் காணாமல் போய்விடும்
18, 19. (அ) நாம் ஏன் எல்லாரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்? (ஆ) அதை எப்படிச் செய்யலாம்?
18 ஒருகாலத்தில் நாம் எல்லாருமே யெகோவாவைவிட்டு ரொம்பத் தூரத்தில் இருந்தோம் என்பதை மனதில் வைப்பது நல்லது. (எபே. 2:12) ஆனால், யெகோவா நம்மை “அன்பெனும் கட்டுகளால் கட்டி,” தன்னிடம் இழுத்திருக்கிறார். (ஓசி. 11:4; யோவா. 6:44) கிறிஸ்துவும் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கிறார்; நாம் கடவுளுடைய குடும்பத்தின் பாகமாக ஆவதற்கு வழி செய்திருக்கிறார். (ரோமர் 15:7-ஐ வாசியுங்கள்.) நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தபோதிலும் இயேசு நம்மை அன்போடு ஏற்றுக்கொண்டிருப்பதால், மற்றவர்களை ஒதுக்கிவைப்பதைப் பற்றி நாம் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது!
19 இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க, பிரிவினையும் தப்பெண்ணமும் வெறுப்பும் அதிகமாகும் என்பதில் சந்தேகமே இல்லை. (கலா. 5:19-21; 2 தீ. 3:13) ஆனால், யெகோவாவின் மக்களாகிய நாம் ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நாடுகிறோம்; பாரபட்சம் இல்லாமல் இருப்பதற்கும் சமாதானமாக இருப்பதற்கும் அந்த ஞானம் நமக்கு உதவுகிறது. (யாக். 3:17, 18) அதனால், மற்ற நாட்டு மக்களோடு நாம் நன்றாகப் பழகுகிறோம், அவர்களுடைய கலாச்சாரத்தை மதிக்கிறோம். சிலசமயங்களில் அவர்களுடைய மொழியைக்கூட கற்றுக்கொள்கிறோம். இப்படிச் செய்யும்போது, நம் சமாதானம் “ஆற்றைப் போலவும்” நம்முடைய நீதி “கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.”—ஏசா. 48:17, 18.
20. அன்பு என்ற குணம், நம்முடைய யோசனைகளையும் உணர்ச்சிகளையும் மாற்றும்போது என்ன பலன்கள் ஏற்படுகின்றன?
20 நாம் ஏற்கெனவே பார்த்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்தச் சகோதரி, பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது தன்னுடைய தப்பெண்ணத்தையும் வெறுப்பையும் விட்டுவிட்டார். அன்புதான் அவருடைய யோசனைகளையும் உணர்ச்சிகளையும் மாற்றியது. கனடாவைச் சேர்ந்த பிரஞ்சு மொழி பேசும் சகோதரரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார். அதாவது, மற்றவர்களைப் பற்றி முழுமையாகத் தெரியாததால்தான் அவர்கள்மீது வெறுப்பு ஏற்படுகிறது என்றும், ஒருவருடைய பிறந்த இடத்துக்கும் அவருடைய குணங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் புரிந்துகொண்டார். சொல்லப்போனால், ஆங்கிலம் பேசும் ஒரு சகோதரியை அவர் கல்யாணம் செய்துகொண்டார். அன்பு என்ற குணம் தப்பெண்ணத்தை வெல்லும் என்பதை இவர்களுடைய அனுபவங்கள் காட்டுகின்றன. அன்பு என்ற குணம், நம் எல்லாரையும் முறிக்கமுடியாத ஒரு பந்தத்தில் நம்மை இணைக்கிறது!—கொலோ. 3:14.
a “சகோதரர்கள்” என்ற வார்த்தை சபையில் இருக்கிற சகோதரிகளையும் குறிக்கும். பவுல் தன்னுடைய கடிதத்தை ரோமிலிருந்த ‘சகோதரர்களுக்கு’ எழுதினாலும், சகோதரிகளையும் மனதில் வைத்துதான் அதை எழுதினார். ஏனென்றால், சில சகோதரிகளுடைய பெயர்களையும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். (ரோ. 16:3, 6, 12) சபையில் இருக்கிற கிறிஸ்தவர்களை, ‘சகோதர சகோதரிகள்’ என்றுதான் காவற்கோபுர பத்திரிகை பல வருஷங்களாகக் குறிப்பிடுகிறது.