யெகோவா—மெய் நீதிக்கும் நியாயத்துக்கும் மூலகாரணர்
“அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்.”—உபாகமம் 32:4.
1. நீதிக்கான ஏக்கம் இயல்பாகவே நமக்கு ஏன் இருக்கிறது?
இயல்பாகவே நாம் ஒவ்வொருவரும் அன்புக்காக ஏங்குகிறோம், அது போலவேதான் நியாயமாய் நடத்தப்பட வேண்டும் என்ற ஏக்கமும் கொள்கிறோம். அமெரிக்க அரசியல் மேதை தாமஸ் ஜெஃபர்ஸன் எழுதினார்: “உணர்வது, காண்பது அல்லது கேட்பது போன்றவை நம் உடலமைப்பின் பாகமாய் இருப்பது போலவே, [நியாயமும்] இயல்புணர்ச்சியாகவும் இயற்கை குணமாகவும் உள்ளது.” இது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமல்ல, ஏனெனில் யெகோவா நம்மை அவருடைய சாயலாகவே படைத்திருக்கிறார். (ஆதியாகமம் 1:26) அவருடைய ஆளுமையை பிரதிபலிக்கும் குணங்களை நமக்கு தந்திருக்கிறார்; அவற்றில் ஒன்று நியாயம். அதனால்தான் நியாயமாய் நடத்தப்பட வேண்டும் என்ற ஏக்கம் நமக்கு இயல்பாய் வருகிறது. மெய் நீதியும் நியாயமும் நிலவும் ஓர் உலகில் வாழவும் நாம் ஏங்குகிறோம்.
2. யெகோவாவுக்கு நீதி எந்தளவு முக்கியம்? நாம் ஏன் தெய்வீக நீதியின் அர்த்தத்தை கிரகித்துக்கொள்வது அவசியம்?
2 யெகோவாவைக் குறித்து பைபிள் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “அவர் வழிகளெல்லாம் நியாயம்.” (உபாகமம் 32:4) ஆனால் அநீதி நிறைந்த இவ்வுலகில், தெய்வீக நீதியின் அர்த்தத்தை கிரகித்துக்கொள்வது சுலபமல்ல. இருப்பினும், கடவுளுடைய வார்த்தையின் வாயிலாக, அவர் எப்படி நீதி வழங்குகிறார் என்பதை நாம் பகுத்துணர முடியும்; அவருடைய ஆச்சரியமான வழிகளுக்கு இன்னுமதிகமாய் போற்றுதலையும் காண்பிக்க முடியும். (ரோமர் 11:33) நீதியை பைபிள் சொல்லும் கருத்தில் புரிந்துகொள்வது முக்கியம்; ஏனெனில் நீதியைப் பற்றிய நம் கருத்து மனிதருடைய கருத்துக்களால் பெரும்பாலும் செல்வாக்கு செலுத்தப்படலாம். மனித நோக்குநிலையிலிருந்து பார்த்தால், நீதி என்பது சட்டத்தின் விதிகளை சரியாக பொருத்துவதைக் காட்டிலும் அதிகம் எதுவுமில்லை என கருதலாம். அல்லது தத்துவஞானி ஃபிரான்சிஸ் பேக்கன் எழுதியபடி, “ஒவ்வொரு மனிதனுக்கும் தகுதியானதை அளிப்பதே நீதியில் அடங்கியுள்ளது.” ஆயினும், யெகோவாவின் நீதியில் இன்னும் அதிகம் உட்பட்டுள்ளது.
யெகோவாவின் நீதி இருதயத்துக்கு இதமளிக்கிறது
3. நீதி மற்றும் நியாயத்திற்கு பைபிளில் மூல-மொழி சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தை சிந்திப்பதன் மூலம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
3 பைபிளின் மூலமொழியில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தை சிந்திப்பதன் மூலம் கடவுளுடைய நீதியில் என்ன அடங்கியிருக்கிறது என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.a வேதாகமத்தில் நீதிக்கும் நியாயத்துக்கும் இடையே குறிப்பிடத்தக்க வித்தியாசம் எதுவும் இல்லை என்பது ஆர்வத்திற்குரிய விஷயம். சொல்லப்போனால், ஆமோஸ் 5:24-ல் நாம் பார்க்கிறபடி, சில சமயங்களில் இந்த எபிரெய சொற்கள் இணைச்சொற்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன; அவ்வசனத்தில் யெகோவா தம் ஜனங்களுக்கு இவ்வாறு ஊக்கமளிக்கிறார்: “நியாயம் தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டுவரக்கடவது.” மேலும், அழுத்தி உரைப்பதற்காக அநேக தடவை ‘நீதியும் நியாயமும்’ என்ற சொற்கள் ஒன்றுசேர்ந்து காணப்படுகின்றன.—சங்கீதம் 33:5; ஏசாயா 33:5; எரேமியா 33:15; எசேக்கியேல் 18:21; 45:9.
4. நீதியாய் நடப்பது என்பதன் அர்த்தம் என்ன, நீதிக்கு முடிவான தராதரம் என்ன?
4 இந்த எபிரெய மற்றும் கிரேக்க சொற்களுடைய அர்த்தம் என்ன? வேதாகம கருத்தில் நீதியாய் நடப்பது என்பது சரியானதையும் நேர்மையானதையும் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. ஒழுக்கச் சட்டங்கள், நியமங்கள் அல்லது எது சரியானது, நியாயமானது என்பதை யெகோவா தாமே நிர்ணயிக்கிறார்; ஆகவே, அவர் காரியங்களை செய்யும் விதமே நீதிக்கான முடிவான தராதரம். நியாயம் (செதெக்) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய சொல், “நீதி, ஒழுக்கம் ஆகியவற்றின் தராதரத்தைக் குறிப்பிடுகிறது; பழைய ஏற்பாட்டில் அந்தத் தராதரமே இயற்கை குணமாகவும் கடவுளுடைய சித்தமாகவும் இருக்கிறது” என்று தியலாஜிக்கல் உவர்ட்புக் ஆஃப் த ஓல்ட் டெஸ்ட்டமென்ட் விளக்குகிறது. இவ்வாறு, கடவுள் தம் நியமங்களை பொருத்தும் விதம், விசேஷமாக அபூரண மனிதரை நடத்தும் விதம், மெய் நீதி மற்றும் நியாயத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
5. கடவுளுடைய நீதியோடு என்ன குணங்கள் மிகவும் நெருக்கமாய் சம்பந்தப்பட்டுள்ளன?
5 தேவ நீதி கடுமையாகவும் விட்டுக்கொடுக்காமலும் இருப்பதற்குப் பதிலாக இதயத்துக்கு இதமளிக்கிறது என வேதாகமம் தெளிவாய் காட்டுகிறது. தாவீது இவ்வாறு பாடினார்: “கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை.” (சங்கீதம் 37:28) கடவுளுடைய நீதி, அவருடைய ஊழியர்களிடம் உண்மையோடும் இரக்கத்தோடும் நடப்பதற்கு அவரை உந்துவிக்கிறது. தெய்வீக நீதி நம் தேவைகளை உணர்ந்துகொள்கிறது, நம் அபூரணங்களை கருத்தில்கொண்டு செயல்படுகிறது. (சங்கீதம் 103:14) கடவுள் அக்கிரமத்தை கவனியாமல் மன்னித்துவிடுகிறார் என்பதை அது அர்த்தப்படுத்துகிறதில்லை, ஏனெனில் அப்படி செய்தால் அது அநீதியை ஆதரிப்பதாக இருக்கும். (1 சாமுவேல் 3:12, 13; பிரசங்கி 8:11) தாம் “இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்பதை மோசேக்கு யெகோவா விளக்கிக் காண்பித்தார். அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்க மனமுள்ளவராய் இருக்கிறபோதிலும், தண்டனைக்குத் தகுதியானவர்களை தண்டியாமல் விடமாட்டார்.—யாத்திராகமம் 34:6, 7.
6. யெகோவா எப்படி தம் பூமிக்குரிய பிள்ளைகளை நடத்துகிறார்?
6 யெகோவா எப்படி நீதி செய்கிறார் என்பதைப் பற்றி நாம் தியானிக்கையில், அவரை இரக்கமற்ற நீதிபதியாக, தவறிழைத்தோருக்கு தண்டனை விதிப்பதையே குறியாக கொண்டவர் என நினைக்கக்கூடாது. அதற்கு மாறாக, அன்பாக அதே சமயத்தில் உறுதியாக நடந்துகொள்ளும் தகப்பனாகவே நாம் அவரை நினைக்க வேண்டும். தம் பிள்ளைகளை எப்போதும் மிகச் சிறந்த விதத்தில் நடத்துகிறவர் என்பதாகவும் நினைக்க வேண்டும். “யெகோவாவே, நீர் எங்கள் பிதா” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார். (ஏசாயா 64:8, திருத்திய மொழிபெயர்ப்பு) யெகோவா நீதியும் நியாயமும் வழுவாத தகப்பன். பூமிக்குரிய தம் பிள்ளைகளுக்கு மோசமான சூழ்நிலைகள் அல்லது மாம்ச பலவீனங்கள் காரணமாக உதவியோ மன்னிப்போ தேவைப்படலாம்; அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் சரியானவற்றுக்கான உறுதியை மென்மையான இரக்கத்தோடு சமநிலைப்படுத்துகிறார்.—சங்கீதம் 103:6, 10, 13.
நீதியை தெளிவாக்குதல்
7. (அ) நாம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து தெய்வீக நீதியைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) நீதியைக் குறித்து புறஜாதிகளுக்கு போதிப்பதில் இயேசு என்ன பாகத்தை வகித்தார்?
7 யெகோவாவுடைய நீதியில் காணப்படும் இரக்கத்தன்மை, மேசியாவின் வருகையால் சிறப்பித்துக் காட்டப்பட்டது. ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தபடி, இயேசு தெய்வீக நீதியை கற்பித்து அதற்கு இசைவாய் வாழ்ந்தார். கொடுமைக்கு ஆளான ஜனங்களை மென்மையாய் நடத்துவது கடவுளுடைய நீதியில் உட்பட்டிருப்பது தெளிவாயிருக்கிறது. எனவே, அவர்கள் மீண்டு வரமுடியாத அளவுக்கு மனமுடைந்து போகிறதில்லை. கடவுளுடைய நீதியின் இந்த அம்சத்தை ‘புறஜாதிகளுக்கு வெளிப்படுத்த’ யெகோவாவின் ‘தாசனாகிய’ இயேசு பூமிக்கு வந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தெய்வீக நீதி எதை அர்த்தப்படுத்துகிறது என்பதற்கு உயிருள்ள முன்மாதிரியை அளிப்பதன் மூலம் காண்பித்தார். தாவீது ராஜாவின் ‘நீதிமுளையாக’ இயேசு, ‘நியாயம் விசாரித்து துரிதமாய் நீதிசெய்ய’ ஆவலுள்ளவராய் இருந்தார்.—ஏசாயா 16:5; 42:1-4; மத்தேயு 12:18-21; எரேமியா 33:14, 15, தி.மொ.
8. முதல் நூற்றாண்டில் மெய் நீதியும் நியாயமும் ஏன் தெளிவற்றதாய் ஆனது?
8 யெகோவாவின் நியாயத்தன்மையைக் குறித்த அத்தகைய தெளிவு பொ.ச. முதல் நூற்றாண்டில் குறிப்பாக தேவைப்பட்டது. யூத மூப்பர்களும் மதத் தலைவர்களும்—வேதபாரகர், பரிசேயர், இன்னும் மற்றவர்கள்—நீதியையும் நியாயத்தையும் பற்றிய திரித்துக்கூறப்பட்ட கருத்தையே அறிவித்தனர்; அவர்களே அதற்கு எடுத்துக்காட்டாகவும் இருந்துவந்தனர். இதன் விளைவாக, வேதபாரகரும் பரிசேயரும் விதித்த கோரிக்கைகளுக்கு இசைவாக பொது மக்களால் வாழ முடியாமல் போனது. எனவே கடவுளுடைய நீதியை அடையவே முடியாது என அவர்கள் நினைத்தனர். (மத்தேயு 23:4; லூக்கா 11:46) அது உண்மையல்ல என்பதை இயேசு காண்பித்தார். அந்தச் சாதாரண ஜனங்கள் மத்தியிலிருந்து தம் சீஷர்களை தேர்ந்தெடுத்து, கடவுளுடைய நீதியான தராதரங்களை அவர்களுக்குக் கற்பித்தார்.—மத்தேயு 9:36; 11:28-30.
9, 10. (அ) வேதபாரகரும் பரிசேயரும் தங்கள் நீதியை எப்படி வெளிக்காட்ட நாடினர்? (ஆ) வேதபாரகர், பரிசேயரின் பழக்கவழக்கங்கள் வீண் என்பதை இயேசு எப்படி மற்றும் ஏன் வெளிப்படுத்தினார்?
9 மறுபட்சத்தில், பரிசேயர்கள், பொதுமக்கள் பார்வையில் படும்படி ஜெபம் செய்வது அல்லது நன்கொடைகள் அளிப்பது போன்றவற்றின் மூலம் தங்கள் ‘நீதியை’ காட்டுவதற்கான சந்தர்ப்பங்களை நாடினர். (மத்தேயு 6:1-6) எண்ணற்ற சட்டங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதன் மூலமும் தங்கள் நீதியை வெளிப்படுத்திக் காண்பிக்க முயற்சி செய்தனர்—அவற்றில் பல அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டவை. அப்படிப்பட்ட முயற்சிகள் ‘நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுவதற்கு’ அவர்களை வழிநடத்தின. (லூக்கா 11:42) வெளித்தோற்றத்திற்கு அவர்கள் ஒருவேளை நீதிமான்கள் போல் காட்சியளித்திருக்கலாம், ஆனால் உள்ளத்திலோ அவர்கள் ‘அக்கிரமத்தால்’ அல்லது அநீதியால் நிறைந்திருந்தார்கள். (மத்தேயு 23:28) எளிதாக சொல்லப்போனால், அவர்கள் கடவுளுடைய நீதியைக் குறித்து மிகவும் குறைவாகவே அறிந்திருந்தனர்.
10 அதன் காரணமாக இயேசு தம்மைப் பின்பற்றியவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 5:20) இயேசு முன்மாதிரியாக இருந்து விளக்கிய தெய்வீக நீதிக்கும், வேதபாரகர் மற்றும் பரிசேயரின் குறுகிய-மனப்பான்மையுள்ள சுய-நீதிக்கும் இடையே பெரும் வேறுபாடு இருந்தது. அவர்களுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டைகளுக்கு இதுவே காரணம்.
தெய்வீக நீதிக்கு எதிராக புரட்டப்பட்ட நீதி
11. (அ) ஓய்வுநாளில் குணப்படுத்துவதைக் குறித்து பரிசேயர்கள் ஏன் இயேசுவிடம் கேள்வி கேட்டனர்? (ஆ) இயேசுவின் பதில் எதை வெளிக்காட்டியது?
11 பொ.ச. 31-ஆம் ஆண்டு இளவேனிற்காலத்தில் கலிலேயாவில் இயேசு ஊழியம் செய்தபோது, ஜெப ஆலயத்தில் சூம்பின கையையுடைய ஒரு மனிதனை பார்த்தார். அது ஓய்வுநாளாய் இருந்தபடியால் பரிசேயர்கள் இயேசுவிடம், “ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா?” என்று கேட்டார்கள். அவர்கள் அந்த ஏழை மனிதனின் துன்பத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அதற்குப் பதிலாக, இயேசுவைக் கண்டனம் செய்வதற்கான சாக்குப்போக்கை கண்டுபிடிக்க அவர்களுக்கிருந்த விருப்பத்தையே அவர்களுடைய கேள்வி சுட்டிக்காட்டியது. அவர்களுடைய உணர்ச்சியற்ற இருதயங்களைக் கண்டு இயேசு வேதனைப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! பிறகு அவர் குறிப்பை உணர்த்தும் அதேபோன்ற ஒரு கேள்வியை பரிசேயர்களிடம் கேட்டார்: “ஓய்வுநாட்களில் நன்மை செய்வது நியாயமோ?” அதற்கு அவர்கள் பேசாமலிருந்தனர்; ஓய்வுநாளில் ஒரு ஆடு குழியிலே விழுந்தால் அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டீர்களோ என்று அவர்களைக் கேட்பதன் மூலம் இயேசு தம்முடைய சொந்த கேள்விக்கு பதிலளித்தார்.b “ஆட்டைப் பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்!” இயேசு மறுக்கமுடியாத வகையில் தர்க்கித்து நியாயம் காட்டினார். “ஆதலால் ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் [அல்லது, சரிதான்]” என்று அவர் சொல்லி முடித்தார். கடவுளுடைய நீதியை மனித பாரம்பரியத்தின் மூலம் ஒருபோதும் தடைசெய்யக்கூடாது. அந்தக் குறிப்பை தெளிவாக்கிய பிறகு, இயேசு அந்த மனிதனின் கையை சுகப்படுத்தினார்.—மத்தேயு 12:9-13; மாற்கு 3:1-5.
12, 13. (அ) வேதபாரகர், பரிசேயருக்கு மாறாக, பாவிகளுக்கு உதவிசெய்வதில் இயேசு எப்படி தம் அக்கறையை காண்பித்தார்? (ஆ) தெய்வீக நீதிக்கும் சுய-நீதிக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
12 உடல் சம்பந்தமான குறைபாடுள்ளோர் மீது பரிசேயர்கள் குறைவான அக்கறை காண்பித்தார்கள் என்றால், ஆவிக்குரியப் பிரகாரமாய் பலம் குன்றியிருந்தோர் மீது அதைவிடக் குறைவாகவே அக்கறை காண்பித்தனர். நீதியைக் குறித்த அவர்களுடைய திரிக்கப்பட்ட கருத்து, வரி வசூலிப்பவர்களையும் பாவிகளையும் புறக்கணித்து வெறுப்பதற்கு வழிநடத்தியது. (யோவான் 7:49) இருப்பினும், நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு பதிலாக உதவி செய்யும் விருப்பமே இயேசுவுக்கு இருந்தது. இதை சந்தேகமின்றி உணர்ந்த அநேகர் இயேசுவின் போதகத்துக்கு செவிசாய்த்தனர். (மத்தேயு 21:31; லூக்கா 15:1) ஆனால் பரிசேயரோ ஆவிக்குரியப் பிரகாரமாய் நோயுற்றிருந்தோரை குணப்படுத்த இயேசு எடுத்த முயற்சிகளை இழிவுபடுத்தினர். “இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார்” என்று கடிந்துகொண்டு முறுமுறுத்தனர். (லூக்கா 15:2) அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க, இயேசு மறுபடியும் மேய்ப்பர்கள் சம்பந்தப்பட்ட உவமையை பயன்படுத்தினார். காணாமற்போன ஆட்டை ஒரு மேய்ப்பன் கண்டுபிடிக்கையில் சந்தோஷப்படுவது போல, ஒரு பாவி மனந்திரும்புகையில் பரலோகத்திலுள்ள தேவதூதர்கள் மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர். (லூக்கா 15:3-7) சகேயு தன் முந்தின பாவமுள்ள போக்கிலிருந்து மனந்திரும்புவதற்கு உதவியபோது இயேசுதாமே சந்தோஷப்பட்டார். “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்று அவர் சொன்னார்.—லூக்கா 19:8-10.
13 தெய்வீக நீதி சுகப்படுத்தவும் இரட்சிக்கவும் வழியைத் தேடுகிறது; சுய-நீதி சிலரை உயர்த்தி அநேகரை கண்டனம் செய்ய நாடுகிறது. இவற்றுக்கிடையே உள்ள வித்தியாசத்தை இந்தச் சண்டைகள் தெளிவாக வெளிப்படுத்திக் காண்பிக்கின்றன. அர்த்தமில்லாத சடங்குகளும் மனிதர் ஏற்படுத்திய பாரம்பரியங்களும் வேதபாரகரையும் பரிசேயரையும் அகந்தையுடனும் சுய-முக்கியத்துவத்துடனும் நடப்பதற்கு வழிநடத்தியிருந்தன. ஆனால் அவர்கள் ‘நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டார்கள்’ என்று இயேசு பொருத்தமாய் சுட்டிக்காட்டினார். (மத்தேயு 23:23) நாம் செய்யும் அனைத்திலும் மெய் நீதியை கடைப்பிடித்து இயேசுவை பின்பற்றுவோமாக. மேலும் சுய-நீதி எனும் படுகுழியைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருப்போமாக.
14. தெய்வீக நீதி ஒரு நபரின் சூழ்நிலைகளை கருத்தில் எடுத்துக்கொள்கிறது என்பதை இயேசுவின் அற்புதங்களில் ஒன்று எவ்வாறு விளக்குகிறது?
14 பரிசேயர்களின் நியாயமற்ற சட்டங்களை இயேசு அசட்டை செய்தபோதிலும், மோசேயின் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடித்தார். (மத்தேயு 5:17, 18) அவ்வாறு செய்கையில், அந்த நீதியான நியாயப்பிரமாணத்தின் புறத்தோற்றமான கருத்து அதன் நியமங்களை ஒதுக்கித் தள்ளும்படி அவர் அனுமதிக்கவில்லை. 12 ஆண்டுகளாய் உதிரப்போக்கால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு சுகமடைந்தபோது, இயேசு அவளிடம் இவ்வாறு சொன்னார்: “மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ.” (லூக்கா 8:43-48) கடவுளுடைய நீதி அவளுடைய சூழ்நிலைமைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டதை இயேசுவின் பரிவிரக்கமுள்ள வார்த்தைகள் உறுதி செய்தன. அவள் ஆசார முறைப்படி அசுத்தமாயிருந்தாள். அதனால் ஜனக்கூட்டத்தார் மத்தியில் இருப்பதன் மூலம் சட்டநுணுக்கத்தின்படி மோசேயின் நியாயப்பிரமாணத்தை மீறியிருந்தாள். இருந்தாலும், அவளுடைய விசுவாசம் பலனளிக்கப்படுவதற்கு தகுதியாயிருந்தது.—லேவியராகமம் 15:25-27; ஒப்பிடுக: ரோமர் 9:30-33.
எல்லாருக்கும் நீதி
15, 16. (அ) அயலானாக நடந்த சமாரியனைப் பற்றிய இயேசுவின் உவமை நீதியைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது? (ஆ) ‘மிஞ்சின நீதிமானாயிருப்பதை’ நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
15 தெய்வீக நீதியின் இரக்கத்தன்மையை இயேசு வலியுறுத்திக் கூறியது மட்டுமல்லாமல், அது எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இயேசு ‘புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்த வேண்டுமென்பதே’ யெகோவாவின் சித்தமாய் இருந்தது. (ஏசாயா 42:1) இதுவே நல்ல அயலானாகிய சமாரியனைப் பற்றிய இயேசுவின் புகழ்பெற்ற உவமைகள் ஒன்றின் குறிப்பு. நியாயசாஸ்திரி ஒருவன் “தன்னை நீதிமான் என்று காண்பிக்க” விரும்பி கேட்ட கேள்விக்கு அந்த உவமை பதிலாய் இருந்தது. சந்தேகமின்றி, அயலானுக்குரிய கடமைகளை யூத மக்களுக்கு மட்டுமே காண்பிக்க வேண்டும் என்று விரும்பி, “எனக்குப் பிறன் யார்?” என்று அவன் கேட்டான். இயேசுவின் உவமையில் கூறப்பட்ட சமாரியன் தேவ நீதியை வெளிக்காட்டினான், ஏனெனில் அவன் மற்றொரு தேசத்திலிருந்து வந்த அயலானுக்கு உதவிட தன் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க விருப்பமுள்ளவனாய் இருந்தான். இயேசு தம்மிடம் கேள்வி கேட்டவருக்கு இவ்வாறு புத்திமதி கூறுவதன் மூலம் தம் உவமையை முடித்தார்: “நீயும் போய் அந்தப்படியே செய்.” (லூக்கா 10:25-37) அதேபோல் நாமும் எல்லா மக்களுக்கும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் நன்மை செய்தோம் என்றால், நாம் கடவுளுடைய நீதியை பின்பற்றுவோராய் இருப்போம்.—அப்போஸ்தலர் 10:34, 35.
16 மறுபட்சத்தில், நாம் தெய்வீக நீதியை அப்பியாசிக்க வேண்டுமென்றால், ‘மிஞ்சின நீதிமானாய்’ இருக்கக்கூடாது என்பதை வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் உதாரணம் நமக்கு நினைப்பூட்டுகிறது. (பிரசங்கி 7:16) நீதியை பகட்டாக வெளிக்காட்டி மற்றவர்களை கவர நாடுவது அல்லது மனிதர் ஏற்படுத்திய சட்டங்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பது கடவுளுடைய அங்கீகாரத்தை நமக்கு கொண்டு வராது.—மத்தேயு 6:1.
17. நாம் தேவ நீதியை வெளிக்காட்டுவது ஏன் அந்தளவு முக்கியம்?
17 கடவுளின் நியாயத்தன்மையை தேசங்களுக்கு இயேசு தெளிவாக்கியதற்கு ஒரு காரணம், தம்முடைய சீஷர்கள் அனைவரும் இப்பண்பை வெளிக்காட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. இது ஏன் அவ்வளவு முக்கியம்? ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என்றும் கடவுளுடைய வழிகளெல்லாம் நியாயம் என்றும் வேதாகமம் நமக்கு புத்தி சொல்கிறது. (எபேசியர் 5:1) அதேபோல், நாம் கடவுளோடு நடக்கையில் ‘நியாயம் செய்ய’ வேண்டும் என்பது யெகோவா தேவைப்படுத்தும் காரியங்களில் ஒன்று என மீகா 6:8 விளக்குகிறது. கூடுதலாக, யெகோவாவின் கோபத்தின் நாளிலே நாம் மறைக்கப்பட வேண்டுமென விரும்பினால், அந்த நாள் வருவதற்கு முன்பு நாம் ‘நீதியைத் தேட வேண்டும்’ என்று செப்பனியா 2:2, 3 நமக்கு நினைப்பூட்டுகிறது.
18 ஆகையால், இந்தக் கொடிய கடைசி நாட்களே நீதியாய் நடப்பதற்கு ‘அநுக்கிரக காலம்.’ (2 கொரிந்தியர் 6:2) யோபுவைப் போல் ‘நீதியை உடுப்பாகவும்’ ‘நியாயத்தை சால்வையாகவும்’ தரித்துக்கொண்டால் யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம். (யோபு 29:14) எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்கியிருப்பதற்கு யெகோவாவின் நீதியில் விசுவாசம் வைப்பது நமக்கு எப்படி உதவும்? கூடுதலாக, நீதி வாசமாயிருக்கும் ‘புதிய பூமிக்காக’ நாம் காத்திருக்கையில், தேவ நீதி நம்மை எப்படி ஆவிக்குரியப் பிரகாரமாய் பாதுகாக்கிறது? (2 பேதுரு 3:13) இக்கேள்விகளுக்கு அடுத்து வரும் கட்டுரை விடையளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a எபிரெய வேதாகமத்தில், மூன்று முக்கிய சொற்கள் உட்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று (மிஷ்பாட்) பெரும்பாலும் “நீதி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சொற்களும் (செதெக் என்பதும் அதோடு சம்பந்தப்பட்ட செதெக்கா என்ற சொல்லும்) பெரும்பாலான சந்தர்ப்பங்களில் “நியாயம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “நியாயம்” (டைக்கையோசின்) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க சொல், “சரியாக அல்லது நேர்மையாக இருக்கிற பண்பு” என்று விளக்கப்பட்டிருக்கிறது.
b இயேசுவின் உதாரணம் நன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று; ஏனெனில் ஓய்வுநாளில் கஷ்டத்திலிருந்த ஒரு மிருகத்துக்கு உதவும்படி யூதர்களின் வாய்மொழிச் சட்டம் திட்டவட்டமாய் அவர்களை அனுமதித்தது. மற்ற பல சந்தர்ப்பங்களில், இதே பிரச்சினையின் பேரில் அதாவது, ஓய்வுநாளில் குணமாக்குவது நியாயந்தானா என்பதைப் பற்றியதில் சண்டைகள் இருந்திருக்கின்றன.—லூக்கா 13:10-17; 14:1-6; யோவான் 9:13-16.
உங்களால் விளக்க முடியுமா?
◻ தெய்வீக நீதியின் அர்த்தம் என்ன?
◻ இயேசு எப்படி புறஜாதிகளுக்கு நீதியை கற்பித்தார்?
◻ பரிசேயர்களின் நீதி ஏன் திரிக்கப்பட்டிருந்தது?
◻ நாம் ஏன் நீதியாய் நடப்பது அவசியம்?
18. அடுத்து வரும் கட்டுரையில் என்ன கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்?
[பக்கம் 8-ன் படம்]
தெய்வீக நீதியில் அடங்கியிருப்பவற்றை இயேசு தெளிவாக்கினார்