இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
தம்மைப் பின்பற்றுபவருக்கு மிக உயர்ந்த தராதரம்
இயேசு கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதாக எண்ணி, அண்மையில் அவரை கொலை செய்யவும்கூட மதத்தலைவர்கள் வகைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் அவர் “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” என்று விளக்குகிறார்.
இயேசு, கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மிக உயர்வாக மதிப்பவராய் மற்றவர்களையும் அதே மதிப்பைக் கொண்டிருக்கும்படியாக உற்சாகப்படுத்துகிறார். உண்மையில் அவர் சொல்வதாவது: “இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோக ராஜ்யத்தில் எல்லாரிலும் ‘சிறியவன்’ என்னப்படுவான்.” அதாவது, அப்படிப்பட்ட ஒருவன் ராஜ்யத்திற்குள்ளேயே பிரவேசிக்கமாட்டான் என்பதாகச் சொல்கிறார்.
கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை அசட்டையாக கருதுவதற்கு பதிலாக, அதை மீறுவதற்கு வழிநடத்தக்கூடிய மனநிலைகளையும்கூட அவர் கண்டனம் செய்கிறார். “கொலை செய்யாதிருப்பாயாக” என்பதாக நியாயப்பிரமாணம் சொல்வதை குறிப்பிட்டுவிட்டு இயேசு சொல்வதாவது: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.”
ஒருவனுடைய தோழனிடம் தொடர்ந்து கோபித்துக் கொண்டிருப்பது, ஒருவேளை கொலைக்கும்கூட வழிநடத்தக்கூடியதாக அத்தனை வினைமையானதாக இருப்பதன் காரணமாக, சமாதானம் பண்ண ஒருவர் எந்த அளவுக்குப் போக வேண்டும் என்பதை தெளிவாக்குகிறார்: “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.”
பத்துக் கற்பனைகளில் ஏழாவதுக்கு கவனத்தைத் திருப்புகிறவராய் இயேசு தொடர்ந்து சொல்வதாவது: “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.” என்றபோதிலும் விபசாரத்தின் சம்பந்தமாக ஊன்றிய ஒரு மனநிலையையும்கூட இயேசு கண்டனம் செய்கிறார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.”
தற்செயலாக தோன்றி மறையக்கூடிய ஒழுக்கமற்ற எண்ணத்தைப் பற்றி இங்கு இயேசு பேசிக்கொண்டில்லை. ஆனால் ‘தொடர்ந்து பார்த்துக் கொண்டே’ இருப்பது பற்றி பேசுகிறார். இப்படிப் பார்த்துக் கொண்டே இருப்பது காம உணர்ச்சிகளைத் தூண்டி, சந்தர்ப்பம் கிட்டுமானால் விபசாரம் செய்வதில் வந்து முடிந்துவிடக்கூடும். இது சம்பவிக்காதபடி ஒரு நபர் அதை எவ்விதமாக தவிர்க்கலாம்? எவ்விதமாக கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்பதை இயேசு இவ்விதமாக விளக்குகிறார்: “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு . . . உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு.”
தங்கள் உயிரை காத்துக் கொள்வதற்காக, பிணியினால் பீடிக்கப்பட்ட சொல்லர்த்தமான கை கால்களைத் தியாகம் செய்ய அநேகமாய் மக்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இயேசுவின்படி, ஒழுக்கங்கெட்ட சிந்தனையையும் செயல்களையும் தவிர்க்க, எதையும், ஒரு கண் அல்லது ஒரு கைப் போன்ற மதிப்புள்ள ஒன்றையும்கூட, ஒருவர் ‘எறிந்து’ விடுவது இன்னும் அதிக முக்கியமானதாகும். மற்றபடி, இப்படிப்பட்ட ஆட்கள் நித்திய அழிவுக்கு அடையாளமாயிருக்கும் கெஹென்னாவுக்குள் (எருசலேமுக்கு அருகே எரிந்து கொண்டிருக்கும் ஒரு குப்பைக்கூளம்) தள்ளப்படுவார்கள் என்று இயேசு விளக்குகிறார்.
தீங்கிழைக்கும் அல்லது புண்படுத்தும் ஆட்களிடம் ஒருவர் எவ்விதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும்கூட இயேசு பேசுகிறார். “தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்” என்பதே அவருடைய ஆலோசனை. “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.” ஒருவன் தானோ தன்னுடைய குடும்பமோ தாக்கப்படுகையில், தற்காப்பு செய்துகொள்ளக்கூடாது என்பதாக இயேசு இங்கு அர்த்தப்படுத்தவில்லை. அறைதல் என்பது சரீரப்பிரகாரமாக காயப்படுத்துவதற்காக அல்லாமல், அவமானப்படுத்தவே செய்யப்படுகிறது. ஆகவே இயேசு இங்கு சொல்வது, சொல்லர்த்தமாகவே திறந்த கையினால் அறைவதன் மூலமோ அல்லது அவமரியாதையான வார்த்தைகளினால் மனவேதனையை உண்டுபண்ணுவதன் மூலமோ ஒரு சண்டையை அல்லது வாக்குவாதத்தை தூண்டிவிட எவராவது முயற்சி செய்கையில் பழிவாங்குவது தவறாகும் என்பதே.
பிறனை சிநேகிக்கவேண்டும் என்ற கடவுளுடைய சட்டத்துக்கு கவனத்தை திருப்பிய பின்பு இயேசு சொல்வதாவது: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.” இவ்விதமாகச் செய்வதற்குப் பலமான காரணத்தைக் கொடுப்பவராய் அவர் மேலும் சொல்வதாவது: “இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் சூரியனை உதிக்கப்பண்ணு”கிறார்.
இயேசு தம்முடைய பிரசங்கத்தின் இந்தப் பகுதியை பின்வரும் அறிவுரையோடு முடிக்கிறார்: “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” முழுமையான அர்த்தத்தில் ஜனங்கள் பூரணராயிருக்க முடியும் என்பதாக இயேசு அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, கடவுளை பின்பற்றுவதன் மூலம் அவர்கள் தங்களுடைய சத்துருக்களையும் கூட ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்களுடைய அன்பை விரிவாக்க முடியும். லூக்காவின் இணையான பதிவு, இயேசுவின் வார்த்தைகளை இவ்விதமாக பதிவு செய்கிறது: “ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.” மத்தேயு 5:17–48; லூக்கா 6:36. (w86 10⁄15)
இயேசு எவ்விதமாக கடவுளின் நியாயப்பிரமாணத்துக்கு உயர்வான மதிப்பைக் காண்பித்தார்?
◆ கொலைக்கும் விபசாரத்துக்குமான மூலகாரணத்தை வேரோடு நீக்க இயேசு என்ன அறிவுரையைக் கொடுத்தார்?
◆ மறு கன்னத்தை திருப்பிக் கொடுப்பதைப் பற்றி இயேசு பேசிய போது அவர் அர்த்தப்படுத்தியது என்ன?
◆ கடவுள் பூரணராயிருப்பது போல நாம் எவ்விதமாக பூரணராயிருக்க முடியும்?