அதிகாரம் 28
ஒருவருக்கொருவர் அன்பில் ஒத்துவாழ்தல்
யெகோவா தேவனையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய அறிவிலும் நன்றியுள்ள மதித்துணர்விலும் நீங்கள் வளர்ந்து வருகையில், அதே விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்ளுகிற ஆட்களுடன் தவறாமல் ஒழுங்காய்க் கூட்டுறவு கொண்டுவர நீங்கள் விரும்புவீர்கள். இப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் உண்மையான கிறிஸ்தவ சகோதரத்துவமாகிய கடவுளுடைய காணக்கூடிய அமைப்பின் பாகமாவீர்கள். அப்பொழுது: “[முழு] சகோதரக் கூட்டத்தாரில் அன்புகூருங்கள்,” என்பது நீங்கள் கீழ்ப்படிய வேண்டிய ஒரு கட்டளையாக இருக்கும்.—1 பேதுரு 2:17, தி.மொ.; 5:8, 9.
2 தம்மைப் பின்பற்றுகிறவர்கள் ஒருவரிலொருவர் அன்புகூருவது எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார். அவர் அவர்களுக்குப் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் . . . என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் [உங்களுக்குள், NW] அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) “ஒருவரிலொருவர்,” “உங்களுக்குள்” என்ற இந்தப் பதங்கள், உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஒன்றாக ஒரே தொகுதியில் அல்லது அமைப்பில் இருப்பார்கள் என்று தெளிவாகக் காட்டுகின்றன. (ரோமர் 12:5; எபேசியர் 4:25) மேலும் இந்த அமைப்பு, அதன் அங்கத்தினர் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அந்த அன்பால் அடையாளங் கண்டுகொள்ளப்படும். ஒருவனுக்கு அன்பு இல்லையென்றால், மற்ற எல்லாம் பயனற்றதாயிருக்கும்.—1 கொரிந்தியர் 13:1-3.
3 ஆகையால் பூர்வ கிறிஸ்தவர்களுக்கு, அடிக்கடி பின்வருபவற்றைப் போன்ற நினைப்பூட்டுதல்கள் கொடுக்கப்பட்டன: “ஒருவருக்கொருவர் கனிவான பாசமுள்ளவர்களாயிருங்கள்.” (NW) “ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்.” “ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.” “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருங்கள்.” “ஒருவரையொருவர் பொறுத்து ஒருவன் மேல் ஒருவனுக்குக் குறையுண்டானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (தி.மொ.) “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.” “உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.” “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்.”—ரோமர் 12:10; 15:7; கலாத்தியர் 5:13; எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13, 14; 1 தெசலோனிக்கேயர் 5:11, 13; 1 பேதுரு 4:8; 1 யோவான் 3:23; 4:7, 11.
4 என்றபோதிலும், இது, உண்மையான கிறிஸ்தவர்கள் கடவுளுடைய அமைப்பிலிருக்கும் உடன் அங்கத்தினரை மாத்திரமே நேசிக்க வேண்டுமென்று பொருள் கொள்ளுகிறதில்லை. மற்றவர்களையுங்கூட அவர்கள் நேசிக்க வேண்டும். உண்மையில், “ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும்” பெருகும்படி பைபிள் அவர்களைத் தூண்டி ஊக்குவிக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 3:12; 5:15) சரியான சமநிலையுள்ள நோக்குநிலையைக் கொடுப்பவனாய் அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) ஆகவே கிறிஸ்தவர்கள், தங்கள் சத்துருக்களும் உட்பட, எல்லோரையும் நேசிக்க வேண்டியவர்களாக இருக்கையில், அவர்கள் முக்கியமாய்த் தங்கள் ஆவிக்குரிய சகோதரரும் சகோதரிகளுமாகிய, கடவுளுடைய அமைப்பின் உடன் அங்கத்தினர்களை நேசிக்க வேண்டும்.—மத்தேயு 5:44.
5 பூர்வ கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் தாங்கள் கொண்டிருந்த இந்த அன்பால் நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தனர். இரண்டாம் நூற்றாண்டு எழுத்தாளனாகிய டெர்ட்டுல்லியன் சொல்லுகிறபடி, மக்கள் அவர்களைக் குறித்து: ‘பாருங்கள் அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவாய் நேசிக்கிறார்கள், ஒருவருக்காக ஒருவர் சாகவுங்கூட அவர்கள் தயாராக இருக்கிறார்கள்!’ என்று சொல்லுவார்களாம். இப்படிப்பட்ட அன்பு இன்று உண்மையான கிறிஸ்தவர்களுக்குள்ளும் காணப்படுகிறது. ஆனால் இது உண்மையான கிறிஸ்தவர்களுக்குள் பிரச்னைகளோ தொல்லைகளோ ஒருபோதும் இருக்கிறதில்லை என்று அர்த்தங் கொள்ளுகிறதா?
அபூரணத்தின் விளைவுகள்
6 நாமெல்லோரும் நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாளிடமிருந்து அபூரணத்தைச் சுதந்தரித்திருக்கிறோமென்று, உங்கள் பைபிள் படிப்பிலிருந்து நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். (ரோமர் 5:12) ஆகவே தவறு செய்வதற்கு மனம் சாய்கிறவர்களாக நாம் இருக்கிறோம். “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்,” என்று பைபிள் சொல்லுகிறது. (யாக்கோபு 3:2; ரோமர் 3:23) கடவுளுடைய அமைப்பின் அங்கத்தினருங்கூட அபூரணராயிருக்கின்றனர், சரியல்லாதக் காரியங்களைச் சில சமயங்களில் செய்கின்றனர் என்று நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். இது உண்மையாக கிறிஸ்தவர்களுக்குள்ளுங்கூட பிரச்னைகளிலும் தொல்லைகளிலும் விளைவடையக்கூடும்.
7 பூர்வ பிலிப்பிய சபையிலிருந்த எயோதியாள், சிந்திகேயாள் என்ற இந்த இரண்டு பெண்களின் நிலையைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்தி சொல்லுகிறேன்.” இந்த இரண்டு பெண்களையும் “ஒரே சிந்தையாயிருக்”கும்படி பவுல் ஏன் ஊக்கப்படுத்தினான்? அவர்கள் இருவருக்குமிடையில் ஏதோ சிறு மனக்கசப்பு இருந்தது. அது என்னவென்று பைபிள் சொல்லுகிறதில்லை. ஒருவேளை ஏதோ வகையில் அவர்கள் ஒருவர்பேரில் ஒருவர் பொறாமையுள்ளவர்களாக இருந்திருக்கலாம். என்றபோதிலும், அடிப்படையாக இவர்கள் நல்ல பெண்களாக இருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பாகப் பவுலுடன் பிரசங்க வேலையில் பங்கு கொண்டவர்களாய்ப் போதிய காலம் கிறிஸ்தவர்களாக இருந்துவந்திருந்தார்கள். இவ்வாறே அவன் அந்தச் சபைக்கு எழுதினான்: “அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி . . . வேண்டிக் கொள்கிறேன்; . . . அவர்கள் . . . சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள்.”—பிலிப்பியர் 4:1-3.
8 ஒரு சமயத்தில் அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் அவனுடைய பயணத் தோழனாகிய பர்னபாவுக்குமிடையில் ஏதோ சிறிது சச்சரவு உண்டாயிற்று. தங்கள் இரண்டாவது மிஷனெரி பயணத்தைத் தொடங்கப்போகும் சமயத்தில், பர்னபா, தன் ஒன்றுவிட்ட சகோதரனாகிய மாற்குவைத் தங்களோடு கூட்டிச் செல்ல விரும்பினான். என்றபோதிலும், பவுல் மாற்குவைத் தங்களோடு கூட்டிச் செல்ல விரும்பவில்லை, ஏனென்றால் தங்கள் முதல் மிஷனெரி பயணத்தின்போது மாற்கு அவர்களை விட்டு தன் வீட்டுக்குப் போய்விட்டிருந்தான். (அப்போஸ்தலர் 13:13) “இதைப் பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள்,” என்று பைபிள் சொல்லுகிறது. (அப்போஸ்தலர் 15:37-40) நீங்கள் இதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா! நீங்கள் அங்கே இருந்து அந்தக் “கடுங்கோப” வெளிக்காட்டைக் கண்டிருப்பீர்களானால், அவர்கள் நடந்துகொண்ட முறையின் காரணமாகப் பவுலும் பர்னபாவும் கடவுளுடைய அமைப்பின் பாகமானவர்களல்லர் என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருப்பீர்களா?
9 மற்றொரு சந்தர்ப்பத்தில் அப்போஸ்தலனாகிய பேதுரு தவறு செய்தான். தவறாகத் தங்கள் புறஜாதி சகோதரரைத் தாழ்வாக நோக்கின சில யூதக் கிறிஸ்தவர்களால் தான் வெறுப்புடன் நோக்கப்படுவான் என்ற பயத்தினால் பேதுரு அந்தப் புறஜாதி கிறிஸ்தவர்களுடன் நெருங்கிக் கூட்டுறவு கொள்வதை நிறுத்திக் கொண்டான். (கலாத்தியர் 2:11-14) பேதுரு இவ்வாறு செய்து கொண்டிருந்ததை அப்போஸ்தலனாகிய பவுல் கண்டபோது, அவன், அங்கிருந்த எல்லோருடைய முன்னிலையிலும் பேதுருவின் தகாத நடத்தையைக் கண்டனம் பண்ணினான். நீங்கள் பேதுருவாக இருந்திருப்பீர்களானால் எப்படி உணர்ந்திருப்பீர்கள்?—எபிரெயர் 12:11.
மனவருத்தங்களை அன்புடன் தீர்த்தல்
10 பேதுரு பவுலின்பேரில் கோபமடைந்திருக்கலாம். மற்றவர்களுடைய முன்னிலையில் பவுல் தன்னைத் திருத்தின முறையின்பேரில் புண்பட்ட உணர்ச்சியடைந்தவனாய் எதிர்த்துத் தாக்கியிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. (பிரசங்கி 7:9) பேதுரு மனத் தாழ்மையுள்ளவனாயிருந்தான். அவன் அந்தத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டான், பவுலின்பேரில் தனக்கிருந்த அன்பு தணிந்து போகச் செய்விக்கும்படி அவன் அதை அனுமதிக்கவில்லை. (1 பேதுரு 3:8, 9) பின்னால் பேதுரு, உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதின ஊக்கமூட்டும் ஒரு கடிதத்தில் பவுலை எவ்வாறு குறிப்பிட்டுப் பேசினான் என்பதைக் கவனியுங்கள்: “நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்.” (2 பேதுரு 3:15) ஆம், அன்பு மனவருத்தத்தை மூடும்படி பேதுரு அனுமதித்தான், இந்தக் காரியத்தில் இது அவனுடைய சொந்தத் தவறான நடத்தையின் விளைவாக உண்டாயிற்று.—நீதிமொழிகள் 10:12.
11 பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையில் ஏற்பட்ட அந்தப் பிரச்னையைப் பற்றியதென்ன? அதுவுங்கூட அன்பால் தீர்க்கப்பட்டது. எப்படியென்றால் பின்னால், பவுல் கொரிந்து சபைக்கு எழுதினபோது, பர்னபாவை நெருங்கிய உடன் ஊழியனாக அவன் பேசினான். (1 கொரிந்தியர் 9:5, 6) பயணத் தோழனாக இருக்க மாற்கு தகுதியுள்ளவனா என்பதைச் சந்தேகிக்க பவுலுக்கு நல்ல காரணம் இருந்ததாகத் தெரிகிறபோதிலும், இந்த இளைஞன் பின்னால், பவுல் தீமோத்தேயுவுக்குப் பின்வருமாறு எழுதக்கூடிய அளவுக்கு முதிர்ச்சியடைந்தவனானான்: “மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டு வா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.” (2 தீமோத்தேயு 4:11) மன வருத்தங்களைத் தீர்ப்பதில் வைக்கப்பட்ட இந்த முன்மாதிரியிலிருந்து நாமும் பயனடையக்கூடும்.
12 எயோதியாள் சிந்திகேயாள் ஆகியவர்களைப் பற்றியதென்ன? இவர்கள் ஒருவருக்கொருவர் விரோதமாகச் செய்திருந்த பாவங்கள் எவையாக இருந்தாலும் அவற்றை அன்பு மூடிப்போட இடங்கொடுத்து, தங்கள் மனவருத்தங்களைத் தீர்த்துக் கொண்டார்களா? இவர்களுக்குக் கடைசியில் என்ன நடந்ததென்பதை பைபிள் நமக்குச் சொல்லுகிறதில்லை. என்றபோதிலும், இவர்கள் நல்ல பெண்களாகவும் பவுலுடன் அவனுடைய கிறிஸ்தவ ஊழியத்தில் நெருங்க ஒத்துழைத்தவர்களாயும் இருந்ததனால், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட புத்திமதியை மனத்தாழ்மையுடன் ஏற்றார்களென்று நாம் நியாயப்படியே ஊகித்துக் கொள்ளலாம். பவுலின் பிரச்னையை அன்பின் ஆவியில் சரி செய்வதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.—கலாத்தியர் 5:13-15.
13 சபையிலுள்ள குறிப்பிட்ட ஒருவருடன், அல்லது சிலருடன் ஒத்து வாழ்வதை நீங்களுங்கூட கடினமாய்க் காணக்கூடும். உண்மையான கிறிஸ்தவ பண்புகளை வளர்ப்பதில் அவர்கள் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியதாக இருக்கலாமென்றாலும், பின்வரும் இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: மக்களைத் தாம் நேசிப்பதற்கு முன்பாக அவர்கள் தங்களுடைய எல்லா கெட்ட வழிகளையும் விட்டொழிக்கும் வரையில் யெகோவா தேவன் காத்திருக்கிறாரா? இல்லை; பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “நாம் இன்னும் பாவிகளாயிருக்கும்போதே கிறிஸ்து நமக்காக மரித்ததினால் கடவுள் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.” (ரோமர் 5:8, தி.மொ.) கடவுளுடைய இந்த முன்மாதிரியை நாம் பின்பற்றி, கெட்ட முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறவர்களுக்கு நாம் அன்பு காட்ட வேண்டும்.—எபேசியர் 5:1, 2; 1 யோவான் 4:9-11; சங்கீதம் 103:10.
14 நாமெல்லாரும் இவ்வளவு அபூரணராயிருப்பதால், நாம் மற்றவர்களைக் குற்றங் காண்கிறவர்களாக இருக்கக்கூடாதென்று இயேசு கற்பித்தார். மற்றவர்கள் குற்றங்குறைகளை உடையவர்களாக இருக்கிறார்களென்பது உண்மையே, என்றாலும் நாமுங்கூட அவற்றை உடையவர்களாக இருக்கிறோம். “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” என்று இயேசு கேட்டார். (மத்தேயு 7:1-5) இப்படிப்பட்ட ஞானமான ஆலோசனையை மனதில் வைப்பதன்மூலம், நம்முடைய சகோதர சகோதரிகளுடன் ஒத்து வாழ்வதற்கு நாம் உதவி செய்யப்படுவோம்.
15 நாம் இரக்கமுள்ளவர்களாயும் மன்னிக்கிறவர்களாயும் இருப்பது முற்றிலும் அவசியம். ஒரு சகோதரன் அல்லது சகோதரிக்கு விரோதமாகக் குறை கூறுவதற்கு மெய்யான காரணம் உங்களுக்கு இருக்கலாம் என்பது மெய்யே. என்றாலும் பைபிளின் பின்வரும் அறிவுரையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்: ‘ஒருவருக்கொருவர் பொறுத்துக் கொண்டும் மற்றொருவனுக்கு விரோதமாக எவனுக்காவது குறைசொல்ல காரணமுண்டென்றால் ஒருவருக்கொருவர் தாராளமாய் மன்னித்துக் கொண்டும் இருங்கள்.’ ஆனால் அவர்களுக்கு விரோதமாகக் குறைகூற உங்களுக்கு உண்மையான காரணம் இருக்கையில் நீங்கள் ஏன் மற்றவர்களுக்கு மன்னிக்க வேண்டும்? ஏனென்றால் “யெகோவா உங்களுக்குத் தாராளமாய் மன்னித்தார்,” என்று பைபிள் பதிலளிக்கிறது. (கொலோசெயர் 3:13, NW) நாம் அவருடைய மன்னிப்பைப் பெறவேண்டுமானால், நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:9-12, 14, 15) இயேசுவின் உவமைகள் ஒன்றில் குறிப்பிடப்பட்ட அந்த அரசனைப்போல், யெகோவா நமக்கு ஆயிரக்கணக்கான தடவைகள் மன்னித்திருக்கிறார், அப்படியிருக்க நாம் நம்முடைய சகோதரருக்கு சில தடவைகள் மன்னிக்கக்கூடாதா?—மத்தேயு 18:21-35; நீதிமொழிகள் 19:11.
16 நாம் நம்முடைய சகோதரர் சகோதரிகளிடம் அன்பற்ற, மன்னிக்காத முறையில் நடந்துகொண்டு அதே சமயத்தில் சத்தியத்தில் நடக்கிறவர்களாக இருக்கவே முடியாது. (1 யோவான் 4:20, 21; 3:14-16) ஆகவே, உடன் கிறிஸ்தவர் ஒருவரோடு உங்களுக்கு எப்பொழுதாயினும் ஏதாவது தொந்தரவு உண்டாகிறதென்றால், அவரோடு பேசுவதை நிறுத்திவிடாதேயுங்கள். அவர் பேரில் மனக் கசப்புக் கொண்டிராதேயுங்கள், அதற்கு மாறாக அந்தக் காரியத்தை அன்பின் ஆவியில் சரிசெய்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் சகோதரனைப் புண்படுத்தியிருப்பீர்களானால், வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டுக் கொள்ள தயாராயிருங்கள்.—மத்தேயு 5:23, 24.
17 ஆனால் எவனாவது உங்களை நிந்திப்பானாகில், அல்லது வேறு ஏதோ முறையில் உங்களைப் புண்படுத்துவானாகில் அப்பொழுது என்ன செய்வது? “அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், என்று நீ சொல்லாதே,” என்று பைபிள் அறிவுரை கொடுக்கிறது. (நீதிமொழிகள் 24:29; ரோமர் 12:17, 18) “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு,” என்று இயேசு கிறிஸ்து அறிவுரை கூறினார். (மத்தேயு 5:39) கன்னத்தில் அறைவது உடல் சம்பந்தமாய்க் காயப்படுத்தும்படி கருதப்படுகிறதில்லை, நிந்திப்பதற்கே அல்லது கோப மூட்டுவதற்கே செய்யப்படுகிறது. இவ்வாறாக இயேசு, சண்டைக்குள் அல்லது தர்க்கத்துக்குள் இழுக்கப்படுவதைத் தவிர்க்கும்படி தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். ‘தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும், சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக’ நீங்கள் “சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடர” வேண்டும்.—1 பேதுரு 3:9, 11; ரோமர் 12:14.
18 நாம், “[முழு] சகோதரக் கூட்டத்தாரில் அன்புகூர” வேண்டுமென்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (1 பேதுரு 2:17) யெவோவா தேவன் முன்மாதிரியை வைக்கிறார். அவர் பட்சபாதமுள்ளவரல்லர். எல்லா ஜாதிகளும் அவருடைய பார்வையில் சமமானவர்கள். (அப்போஸ்தலர் 10:34, 35; 17:26) வரப் போகிற அந்த “மிகுந்த உபத்திரவத்தி”னூடே பாதுகாக்கப்படப் போகிறவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” எடுக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14-17) ஆகவே, கடவுளுடைய மாதிரியைப் பின்பற்றி எல்லோரையும் ஒன்றுபோல் நேசிக்க வேண்டும், மற்றவர்கள் வேறுபட்ட ஜாதியாராகவோ, தேசத்தாராகவோ, சமுதாய நிலையில் இருப்பவராகவோ, அல்லது வேறுபட்ட தோல் நிறமுடையவர்களாகவோ இருப்பதினிமித்தம் அவர்களைக் குறைவாக நேசிக்கக்கூடாது.
19 கிறிஸ்தவ சபையில் இருக்கிற எல்லோரையும் நன்றாக அறிந்துகொள்ளுங்கள், அப்பொழுது அவர்களை மதித்துணர்ந்து நேசிக்கிறவர்களாவீர்கள். முதிர் வயதுள்ளவர்களைத் தகப்பனைப் போலவும் தாயைப் போலவும், இளைஞரை சகோதரர் சகோதரிகளைப் போலவும் நடத்துங்கள். (1 தீமோத்தேயு 5:1, 2) அதன் அங்கத்தினர் அன்பில் ஒன்றாக அவ்வளவு நன்றாய் ஒத்து வாழ்கிற கடவுளுடையக் குடும்பத்தைப் போன்ற காணக்கூடிய அமைப்பின் பாகமாக இருப்பது மெய்யாகவே ஒரு சிலாக்கியமாயிருக்கிறது. இப்படிப்பட்ட அன்புள்ள குடும்பத்தோடு பூமியின்மீது பரதீஸில் என்றும் வாழ்வது ஆ, எவ்வளவு சிறப்பாயிருக்கும்!—1 கொரிந்தியர் 13:4-8.
[கேள்விகள்]
1. (எ) நீங்கள் எப்படிக் கடவுளுடைய அமைப்பின் ஒரு பாகமாகலாம்? (பி) அப்பொழுது எந்தக் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்?
2. (எ) இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு எந்தப் புதிய கட்டளையைக் கொடுத்தார்? (பி) “ஒருவரிலொருவர்” “உங்களுக்குள்” என்ற பதங்கள் எதைத் தெளிவாகக் காட்டுகின்றன? (சி) அன்புடையவர்களாய் இருப்பது எவ்வளவு முக்கியமானது?
3. உடன் கிறிஸ்தவர்களை நேசித்து அவர்கள் பேரில் அக்கறையுடையவர்களாய் இருப்பதன் முக்கியத்துவத்தைப் பைபிள் எப்படி அறிவுறுத்துகிறது?
4. (எ) கிறிஸ்தவர்கள் ‘ஒருவரிலொருவர்’ மட்டுமேயல்லாமல் மற்றவர்களிலும் அன்புகூர வேண்டுமென்று எது காட்டுகிறது? (பி) கிறிஸ்தவர்கள் முக்கியமாய் யாரை நேசிக்க வேண்டும்?
5. பூர்வ காலங்களிலும் இன்றும் உண்மையான கிறிஸ்தவர்கள், தங்கள் அன்பால் நன்கு அறியப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர் என்று எது காட்டுகிறது?
6. ஏன், உண்மையான கிறிஸ்தவர்களுங்கூட சில சமயங்களில் ஒருவருக்கு விரோதமாக மற்றவர் பாவம் செய்துவிடுகின்றனர்?
7. (எ) எயோதியாளும் சிந்திகேயாளும் “ஒரே சிந்தையாயிருக்”கும்படி ஏன் சொல்லப்பட வேண்டியவர்களாக இருந்தார்கள்? (பி) அடிப்படையாய் இவர்கள் நல்ல கிறிஸ்தவ பெண்களாக இருந்தார்கள் என்று எது காட்டுகிறது?
8. (எ) பவுலுக்கும் பர்னபாவுக்குமிடையில் என்ன சிறு சச்சரவு உண்டாயிற்று? (பி) நீங்கள் அங்கே இருந்து அந்தச் சிறு சச்சரவைப் பார்த்திருப்பீர்களானால், என்ன முடிவுக்கு வந்திருப்பீர்கள்?
9. (எ) பேதுரு என்ன பாவத்தைச் செய்தான், எது அவனை அவ்வாறு நடந்துகொள்ளும்படி செய்தது? (பி) நடந்துகொண்டிருந்ததைப் பவுல் கண்டபோது அவன் என்ன செய்தான்?
10. (எ) பேதுரு, தான் திருத்தப்பட்டபோது எப்படிப் பிரதிபலித்தான்? (பி) பேதுருவின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
11. (எ) பவுலும் பர்னபாவும் அவ்வாறு கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டபோதிலும், தாங்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை எப்படிக் காட்டினார்கள்? (பி) அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?
12. (எ) எயோதியாளும் சிந்திகேயாளும் தங்கள் மனவருத்தங்களைத் தீர்த்துக் கொண்டார்கள் என்று நாம் ஏன் ஊகித்துக் கொள்ளலாம்? (பி) கலாத்தியர் 5:13-15-ன்படி கிறிஸ்தவர்கள் தங்கள் மனவருத்தங்களை அன்புடன் சரிசெய்து கொள்வது ஏன் இன்றியமையாதது?
13. அன்பைக் காட்டுவதில் என்ன முன்மாதிரியை யெகோவா தேவன் வைக்கிறார்?
14. மற்றவர்களைக் குற்றங் காண்கிறவர்களாக இருக்கக்கூடாதென்பதன்பேரில் என்ன அறிவுரையை இயேசு கொடுத்தார்?
15. (எ) அவர்களுக்கு விரோதமாகக் குறை சொல்ல நமக்குக் காரணம் இருக்கையிலுங்கூட நாம் மற்றவர்களை மன்னிப்பது ஏன் முக்கியமானது? (பி) மத்தேயு 18-ம் அதிகாரத்திலுள்ள தம்முடைய உவமையில், மன்னிக்கிறவர்களாக இருக்கவேண்டிய தேவையை இயேசு எப்படிக் கற்பித்தார்?
16. (எ) 1 யோவான் 4:20, 21-ன்படி கடவுளில் அன்புகூருவது எப்படி உடன் கிறிஸ்தவர்களில் அன்புகூருவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது? (பி) நீங்கள் உங்கள் சகோதரனை ஏதோ முறையில் புண்படுத்தியிருப்பீர்களென்றால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
17. மற்ற ஒருவர் உங்களுக்கு ஏதோ தீமை செய்திருப்பராகில் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கை என்ன?
18. எல்லா மக்களையும் நேசிக்கும் கடவுளுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?
19. (எ) உடன் கிறிஸ்தவர்களை நாம் எவ்வாறு பாவித்து நடத்த வேண்டும்? (பி) எந்தப் பெரிய சிலாக்கியம் நம்முடையதாயிருக்கக்கூடும்?
[பக்கம் 233-ன் படம்]
எயோதியாளும் சிந்திகேயாளும் உட்பட்ட இந்தச் சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 235-ன் படம்]
பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையில் ஏற்பட்ட இந்த விவாதம் அவர்கள் கடவுளுடைய அமைப்பின் அங்கத்தினரல்லவென்று பொருள் கொண்டதா?
[பக்கம் 236-ன் படம்]
குறை சொல்வதற்கான காரணங்களை அன்பு மூடிப்போடும்படி மெய்க் கிறிஸ்தவர்கள் அனுமதிக்கிறார்கள்
[பக்கம் 237-ன் படம்]
கடவுளுடைய அமைப்புக்குள் கிறிஸ்தவர்கள் சமமானவர்களாய் ஒத்துவாழ்வதற்கு அன்பினால் தூண்டி நடத்தப்படுகிறார்கள்