வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“உங்கள் பரலோகத் தகப்பன் பரிபூரணராக இருப்பது போலவே நீங்களும் பரிபூரணராக இருக்க வேண்டும்” என்று சீடர்களிடம் இயேசு சொன்னார். இன்று மனிதர்கள் எப்படி “பரிபூரணராக” இருக்க முடியும்?—மத். 5:48.
‘பரிபூரணம்’ அல்லது ‘பரிபூரணர்’ என்ற வார்த்தைகள் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தைப் புரிந்துகொள்ளும்போது இந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளலாம். ‘பரிபூரணம்’ என பைபிள் விவரிக்கிற எல்லாமே முழுமையான கருத்தில் சொல்லப்படவில்லை. ஆனால், யெகோவா மட்டுமே முழுமையான கருத்தில் பரிபூரணராக இருக்கிறார். மக்களோ பொருள்களோ ஓரளவுக்குத்தான் பரிபூரணமாக இருக்க முடியும். ‘பரிபூரணம்’ என்பதற்குரிய எபிரெய மற்றும் கிரேக்க பைபிள் வார்த்தைகள் பெரும்பாலும் “முழுமை,” “முதிர்ச்சி,” “குற்றமற்றது” என்ற அர்த்தத்தைத் தருகின்றன; அதாவது, அதிகாரத்திலுள்ள ஒருவர் வகுத்த நியதிகளுக்கேற்ப முழுமையாக இருப்பதை அர்த்தப்படுத்துகின்றன. மக்களுடைய அன்றாட வாழ்க்கையிலும்கூட இந்த வார்த்தை பொதுவாக முழுமையான கருத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. ‘பூரண சுகம் பெற்றேன்’ என்று சொல்வது இதற்கு ஓர் உதாரணம்.
ஆதாமும் ஏவாளும் ஒழுக்க ரீதியில், ஆன்மீக ரீதியில், உடல் ரீதியில் பரிபூரணராய்ப் படைக்கப்பட்டார்கள். அவர்கள் தங்களுடைய படைப்பாளர் வகுத்த நியதிக்கேற்ப பரிபூரணராய் இருந்தார்கள். அவர்கள் கீழ்ப்படியாமல் போனதால், அவர் வகுத்த நியதியை எட்டவில்லை, அதனால் பரிபூரணத்தை இழந்தார்கள், தங்கள் வருங்கால சந்ததியாருடைய பரிபூரணத்தையும் பறித்துப்போட்டார்கள். இவ்வாறு, ஆதாம் மூலமாக பாவமும் அபூரணமும் மரணமும் மனிதருக்குக் கடத்தப்பட்டன.—ரோ. 5:12.
என்றாலும், மலைப்பிரசங்கத்தில் இயேசு தெளிவாகக் குறிப்பிட்டபடி, அபூரண மனிதரும்கூட ஒரு கருத்தில் பரிபூரணராக இருக்க முடியும். அந்தப் பிரசங்கத்தில் பரிபூரண அன்புக்கான நியதிகளை வகுத்துக் கொடுத்தார். மனிதர்மீது கடவுள் காட்டிய அன்பு இதுதான். அதைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தகப்பனின் பிள்ளைகளாக இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பெய்யச் செய்கிறார்.” (மத். 5:44, 45) இத்தகைய அன்பைக் காட்டுவதன் மூலம் இயேசுவின் சீடர்களும் கடவுளுடைய பரிபூரண முன்மாதிரியைப் பின்பற்றினார்கள்.
மற்றவர்களிடம் அன்பு காட்டும் விஷயத்தில், இன்று உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் கடவுள் வகுத்த உயர்ந்த நியதியை எட்ட முயற்சி செய்கிறார்கள். பல்வேறு பின்னணியையும் இனத்தையும் மதத்தையும் சேர்ந்த மக்கள் பைபிளின் திருத்தமான அறிவைப் பெற அவர்கள் மனமுவந்து உதவுகிறார்கள். இப்போது 236 நாடுகளில், சத்தியத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிற 70,00,000-க்கும் அதிகமானோருக்கு பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறார்கள்.
“உங்களிடம் அன்பு காட்டுகிறவர்களிடமே நீங்கள் அன்பு காட்டினால், உங்களுக்கு என்ன பிரயோஜனம்? வரி வசூலிப்பவர்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? உங்கள் சகோதரர்களுக்கு மட்டுமே வாழ்த்துச் சொல்கிறீர்கள் என்றால், அதில் என்ன விசேஷம்? உலகத்தாரும் அப்படித்தானே செய்கிறார்கள்?” என்று இயேசு சொன்னார். (மத். 5:46, 47) உண்மைக் கிறிஸ்தவர்கள் படிப்பு, இனம் போன்றவற்றின் அடிப்படையில் மற்றவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதில்லை; கைமாறு கருதியும் மற்றவர்களிடம் அன்பு காட்டுவதில்லை. மாறாக ஏழை எளியோர், நோய்வாய்ப்பட்டோர், இளையோர், முதியோர் என எல்லாருக்கும் உதவுகிறார்கள். இவ்வழிகளில், கிறிஸ்தவர்கள் யெகோவாவின் அன்பை வெளிக்காட்டுவதன் மூலம் ஒரு கருத்தில் பரிபூரணமாக இருக்க முடியும்.
ஆதாம் இழந்த பரிபூரணத்தை நாம் எப்போதாவது திரும்பப் பெறுவோமா? ஆம், இயேசுவின் மீட்பு பலியில் விசுவாசம் வைக்கிற கீழ்ப்படிதலுள்ள மனிதர், கிறிஸ்து தமது ஆயிரவருட ஆட்சியில் ‘பிசாசின் செயல்களை ஒழிக்கும்போது’ முற்றிலும் பரிபூரணத்தைப் பெறுவார்கள்.—1 யோ. 3:8.