4 என்னென்ன விஷயங்களுக்காக செய்ய வேண்டும்?
இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்தான் கிறிஸ்தவர்கள் செய்கிற ஜெபங்களிலேயே ரொம்ப அடிக்கடி செய்யப்படுகிற ஜெபம் என்று சொல்லப்படுகிறது. இது, சிலசமயங்களில் கர்த்தருடைய ஜெபம் அல்லது பரமண்டல ஜெபம் என்று அழைக்கப்படுகிறது. எதற்காக அந்த ஜெபத்தை இயேசு கற்றுக்கொடுத்தார் என்று தெரியாமலேயே மக்கள் நிறைய பேர் அதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். தினமும் அதுவும் ஒருநாளில் பல தடவை அந்த ஜெபத்தைச் சொல்கிறார்கள். ஆனால், திரும்பத் திரும்பச் சொல்வதற்காக அந்த ஜெபத்தை இயேசு கற்றுக்கொடுக்கவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?
அந்த ஜெபத்தைச் சொல்லிக்கொடுப்பதற்குக் கொஞ்சம் முன்புதான், “நீங்கள் ஜெபம் செய்யும்போது . . . சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:7) அப்படிச் சொல்லிவிட்டு, மனப்பாடம் செய்து திரும்பத் திரும்பச் சொல்வதற்காக ஒரு ஜெபத்தை இயேசு கற்றுக்கொடுப்பாரா? கண்டிப்பாக இல்லை. அதற்குப் பதிலாக, என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்... ஜெபத்தில் என்னென்ன விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்... என்பதைத்தான் அந்த ஜெபத்தின் மூலம் இயேசு கற்றுக்கொடுத்தார். அந்த ஜெபத்தில் அவர் சொன்ன விஷயங்களைப் பற்றி இப்போது விளக்கமாகப் பார்க்கலாம். மத்தேயு 6:9-13-ல் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்.”
தன்னுடைய தகப்பனான யெகோவாவிடம்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்பதை இதன் மூலம் தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார். ஆனால், கடவுளுடைய பெயரைச் சொல்வது ஏன் ரொம்ப முக்கியம் என்றும், அந்தப் பெயர் ஏன் பரிசுத்தப்பட வேண்டும் என்றும் உங்களுக்குத் தெரியுமா?
மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே கடவுளுடைய பரிசுத்தமான பெயர் பொய்களால் கறைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கடவுளுடைய எதிரியான சாத்தான், யெகோவாவை ஒரு பொய்யர் என்றும் சுயநலம் பிடித்த ஒரு ஆட்சியாளர் என்றும் சொல்லியிருக்கிறான். (ஆதியாகமம் 3:1-6) நிறைய பேர் சாத்தானோடு சேர்ந்துகொண்டு கடவுளை கல்நெஞ்சக்காரர், கொடூரமானவர், பழிவாங்குபவர் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அவர்தான் படைப்பாளர் என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இன்னும் சிலர், கடவுளுடைய பெயரை பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அதைப் பயன்படுத்துவதையும் தடை செய்திருக்கிறார்கள்.
இந்த எல்லா அநியாயங்களையும் கடவுள் சரிசெய்யப்போகிறார் என்று பைபிள் சொல்கிறது. (எசேக்கியேல் 39:7) அந்தச் சமயத்தில் உங்களுடைய தேவைகள் எல்லாவற்றையும் அவர் பூர்த்திசெய்வார். உங்களுடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் அவர் சரிசெய்வார். எப்படி? இயேசுவின் ஜெபத்தில் அடுத்ததாக வருகிற வார்த்தைகளிலிருந்து இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள முடியும்.
“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்.”
இன்று மதப் போதகர்கள் மத்தியில் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமாக வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ரொம்ப காலத்துக்கு முன்பே தீர்க்கதரிசிகள் சொன்ன விஷயங்களை இயேசுவின் சீஷர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதாவது, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மீட்பரான மேசியா கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இருப்பார் என்றும், அந்த அரசாங்கம் இந்த உலகத்தையே மாற்றிவிடும் என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. (ஏசாயா 9:6, 7; தானியேல் 2:44) அந்த அரசாங்கம் சாத்தானுடைய பொய்களை அம்பலப்படுத்தி, சாத்தானுக்கும் அவனுடைய செயல்களுக்கும் முடிவுகட்டுவதன் மூலமாகக் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும். கடவுளுடைய அரசாங்கம் போர், நோய், பஞ்சம், ஏன் மரணத்துக்குக்கூட முற்றுப்புள்ளி வைக்கும். (சங்கீதம் 46:9; 72:12-16; ஏசாயா 25:8; 33:24) அந்த அரசாங்கம் வருவதற்காக நீங்கள் ஜெபம் செய்யும்போது, இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறுவதற்காக நீங்கள் ஜெபம் செய்கிறீர்கள்.
“உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.”
கடவுளுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவது போல, பூமியிலும் கண்டிப்பாக நிறைவேறும் என்பதை இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. கடவுளுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறியபோது அதை யாராலும் தடுக்க முடியவில்லை. சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் எதிராகக் கடவுளுடைய மகன் போர் செய்து அவர்களைப் பூமிக்குத் தள்ளினார். (வெளிப்படுத்துதல் 12:9-12) இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில் இதுவரை நாம் பார்த்த மூன்று விஷயங்கள் நம்முடைய விருப்பத்துக்கு அல்ல, கடவுளுடைய விருப்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நமக்கு உதவுகின்றன. கடவுளுடைய விருப்பம்தான் எப்போதுமே தன்னுடைய படைப்புகளுக்கு ஆசிர்வாதங்களை அள்ளித்தரும். அதனால்தான், பரிபூரண மனிதனாக இருந்த இயேசுகூட, “என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்” என்று தன்னுடைய அப்பாவிடம் சொன்னார்.—லூக்கா 22:42.
“இன்றைக்குத் தேவையான உணவை எங்களுக்குக் கொடுங்கள்.”
அடுத்ததாக, நம்முடைய தேவைகளுக்காகவும் ஜெபம் செய்யலாம் என்று இயேசு சொன்னார். நம்முடைய அன்றாட தேவைகளுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. சொல்லப்போனால், யெகோவாதான் “எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் தருகிறார்” என்பதை இது நமக்கு ஞாபகப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 17:25) தன்னுடைய பிள்ளைகளுக்குத் தேவையானதைக் கொடுப்பதில் சந்தோஷப்படுகிற ஒரு அன்பான அப்பாவாக பைபிள் அவரை விவரிக்கிறது. அதேசமயத்தில், பிரயோஜனம் இல்லாத விஷயங்களுக்காகக் கேட்டால் கடவுள் கண்டிப்பாகக் கொடுக்க மாட்டார்.
“எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள்.”
நாம் பாவம் செய்யும்போது கடவுளுக்குக் கடனாளியாக ஆகிறோம். அப்படியென்றால், நம்முடைய பாவங்களுக்குக் கண்டிப்பாக மன்னிப்பு தேவை. இன்று நிறைய பேர், பாவம் என்றால் என்ன... அது எந்தளவுக்கு மோசமானது... என்பதையெல்லாம் புரிந்துகொள்வதே இல்லை. ஆனால் நாம் படுகிற கஷ்டங்களுக்குப் பாவம்தான் ஆணிவேர் என்று பைபிள் சொல்கிறது. மனிதர்கள் இறப்பதற்கு அடிப்படைக் காரணமே பாவம்தான். நாம் பாவத்தில் பிறந்திருப்பதால், நாம் எல்லாருமே அடிக்கடி பாவம் செய்கிறோம். நம் பாவங்களைக் கடவுள் மன்னிக்கும்போது, முடிவில்லாத வாழ்க்கைக்கான நம்பிக்கை நமக்குக் கிடைக்கும். (ரோமர் 3:23; 5:12; 6:23) “யெகோவாவே, நீங்கள் நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்று பைபிள் சொல்வது உண்மையிலேயே நமக்கு ஆறுதலாக இருக்கிறது!—சங்கீதம் 86:5.
“பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்.”
கடவுளுடைய பாதுகாப்பு எந்தளவு தேவை என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதா? சாத்தான் என்ற ‘பொல்லாதவன்’ ஒருவன் இருக்கிறான் என்று நிறைய பேர் நம்புவதில்லை. ஆனால், சாத்தான் ஒருவன் உண்மையிலேயே இருக்கிறான் என்று இயேசு சொன்னார். அவனை, “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என்றுகூட சொன்னார். (யோவான் 12:31; 16:11) தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த உலகத்தை சாத்தான் கெடுத்துவைத்திருக்கிறான். உங்களையும் கெடுக்க அவன் தீவிரமாக இருக்கிறான். உங்கள் தகப்பனான யெகோவாவிடம் நீங்கள் நெருங்கிப் போவதைத் தடுக்க அவன் முயற்சி செய்கிறான். (1 பேதுரு 5:8) ஆனால், சாத்தானைவிட யெகோவா ரொம்ப பலமுள்ளவர். தன்னை நேசிக்கிறவர்களைப் பாதுகாப்பதில் அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
பரமண்டல ஜெபத்தில் சொல்லப்பட்டிருக்கிற முக்கியமான விஷயங்களுக்காக மட்டுமல்ல, இன்னும் சில விஷயங்களுக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். 1 யோவான் 5:14-ல் கடவுளைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்” என்று இயேசு சொன்னார். உங்களுடைய பிரச்சினைகள் கடவுளுக்கு முன் சாதாரண விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து அவரிடம் சொல்லாமல் இருந்துவிடாதீர்கள்.—1 பேதுரு 5:7.
அப்படியானால், எந்த நேரத்தில், எந்த இடத்தில் ஜெபம் செய்ய வேண்டும் என்பது முக்கியமா?