இயேசுவின் வார்த்தைகள் உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்டுகின்றனவா?
“இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, . . . ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.”—மத். 7:28, 29.
1, 2. இயேசுவின் போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஏன் ஆச்சரியப்பட்டார்கள்?
கடவுளுடைய ஒரே மகனான இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். வேறெந்த மனிதனாலும் பேச முடியாதளவுக்கு அவர் சிறப்பாகப் பேசினார். சொல்லப்போனால், மலைப்பிரசங்கத்தின்போது அவர் கற்றுக்கொடுத்த விதத்தைப் பார்த்து மக்கள் மலைத்துப்போனார்கள்.—மத்தேயு 7:28, 29-ஐ வாசியுங்கள்.
2 யெகோவாவின் மகனாகிய இயேசு வேதபாரகர்களைப் போல் கற்பிக்கவில்லை. அந்த வேதபாரகர்கள் அபூரண மனிதர்களின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு வீண் வார்த்தைகளை அலப்பினார்கள்; இயேசுவோ கடவுள் சொன்ன விஷயங்களையே போதித்ததால் ‘அதிகாரமுடையவராய் போதித்தார்.’ (யோவா. 12:50) மலைப்பிரசங்கத்தில் அவர் சொன்ன இன்னும் நிறைய விஷயங்கள் நம் ஜெபங்களை எப்படி மெருகூட்டும் அல்லது மெருகூட்ட வேண்டுமென்று பார்க்கலாம்.
மாயக்காரரைப் போல் ஒருபோதும் ஜெபம் செய்யாதீர்கள்
3. மத்தேயு 6:5-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவுடைய வார்த்தைகளின் சாராம்சம் என்ன?
3 ஜெபம் என்பது உண்மை வணக்கத்தின் முக்கியப் பாகமாக இருப்பதால், நாம் யெகோவாவிடம் தவறாமல் ஜெபம் செய்ய வேண்டும். ஆனால், நம்முடைய ஜெபம் மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்ன வார்த்தைகளால் மெருகூட்டப்பட்டிருக்க வேண்டும். அவர் சொன்னதாவது: “நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் [“ஜெபக்கூடங்களிலும்,” NW] வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத். 6:5.
4-6. (அ) பரிசேயர்கள் ஏன் ‘ஜெபக்கூடங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண’ விரும்பினார்கள்? (ஆ) அந்த மாயக்காரர்கள் எவ்விதத்தில் ‘தங்கள் பலனை அடைந்து தீர்ந்தார்கள்’?
4 ‘மாயக்காரர்களைப்’ போல் தம் சீஷர்கள் ஜெபம் செய்யக் கூடாதென்று இயேசு குறிப்பிட்டார்; அப்படிப்பட்ட ‘மாயக்காரர்களில்’ சிலரான பரிசேயர்கள் சுயநீதிமான்களாக இருந்தார்கள்; அவர்கள் பக்திமான்கள்போல் வேஷம் போட்டு மற்றவர்களை ஏமாற்றினார்கள். (மத். 23:13-32) அவர்கள் ‘ஜெபக்கூடங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண’ விரும்பினார்கள். ஏன் அப்படி விரும்பினார்கள்? ‘மனுஷர் காண’ வேண்டும் என்பதற்காகவே. முதல் நூற்றாண்டு யூதர்கள், ஆலயத்தில் தகன பலிகள் செலுத்தப்பட்ட நேரங்களில் (காலை சுமார் ஒன்பது மணிக்கும் மாலை சுமார் மூன்று மணிக்கும்) சபையாகக் கூடி ஜெபம் செய்து வந்தார்கள். எருசலேம் குடிமக்கள் பலரும், ஆலய வளாகத்தில் கூடி வழிபட்ட மக்களோடு சேர்ந்து ஜெபம் செய்தார்கள். அந்த நகரத்திற்கு வெளியில் குடியிருந்த தேவபக்தியுள்ள யூதர்கள் தினமும் இரண்டு முறை ‘ஜெபக்கூடங்களில் நின்று’ ஜெபம் செய்தார்கள்.—லூக்கா 18:11, 13-ஐ ஒப்பிடுங்கள்.
5 ஜெபம் செய்யப்பட்ட அந்நேரங்களில் பெரும்பாலானவர்களால் ஆலயத்திற்கு அருகிலோ ஜெபக்கூடத்திற்கு அருகிலோ இருக்க முடியாததால், அவர்கள் எங்கு இருந்தார்களோ அங்கேயே ஜெபம் செய்தார்கள். ஆனால் சிலர், அப்படிப்பட்ட ஜெப நேரங்களில் எப்படியாவது ‘வீதிகளின் சந்திகளில்’ போய் நிற்கப் பார்த்தார்கள்; ஏனென்றால், அந்தச் சந்தி வழியாகச் சென்ற ‘மனுஷர் தங்களைக் காண’ வேண்டுமென விரும்பினார்கள். பக்திமான்கள்போல் வேஷம் போட்ட அந்த மாயக்காரர்கள், மற்றவர்கள் பார்த்து மெச்ச வேண்டும் என்பதற்காகவே ‘நீண்ட ஜெபங்களைச்’ செய்தார்கள். (லூக். 20:47) நாம் அவர்களைப் போல் இருக்கக் கூடாது.
6 அந்த மாயக்காரர்கள் ‘தங்கள் பலனை அடைந்து தீர்ந்தார்கள்’ என இயேசு சொன்னார். மற்றவர்களுடைய புகழையும் பாராட்டையும் பெற வேண்டுமென அவர்கள் ஏங்கினார்கள்; ஆகவே, எதற்காக ஏங்கினார்களோ அதை மட்டுமே அவர்கள் முழு பலனாகப் பெறவிருந்தார்கள். அவர்களுடைய மாய்மால ஜெபங்களை யெகோவா கேட்காததால் அவர்களுக்கு வேறெந்த பலனும் கிடைக்காதென இயேசு குறிப்பிட்டார். அதோடு, தம்முடைய உண்மையான சீஷர்களின் ஜெபங்களையே கடவுள் கேட்பாரென அடுத்ததாகக் குறிப்பிட்டார்.
7. “அறைவீட்டுக்குள்” போய் ஜெபம் செய்வது எதை அர்த்தப்படுத்துகிறது?
7 “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” (மத். 6:6) அறைவீட்டுக்குள் போய் கதவைப் பூட்டி ஜெபம் செய்யும்படி இயேசு சொன்னபோது, ஒருவர் சபைக்குமுன் ஜெபம் செய்யக்கூடாதென அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, மற்றவர்களுடைய கவனத்தைக் கவருவதற்காகவும் அவர்களுடைய பாராட்டைப் பெறுவதற்காகவும் ஜெபம் செய்யக்கூடாது என்றுதான் அர்த்தப்படுத்தினார். கடவுளுடைய மக்களின் சார்பாக ஜெபம் செய்யும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்போது இதை நாம் மனதில் வைக்க வேண்டும். ஜெபத்தைக் குறித்து இயேசு கூடுதலாகச் சொன்ன அறிவுரைகளையும் கேட்டு நடக்க வேண்டும்.
8. மத்தேயு 6:7-ன்படி நாம் எப்படி ஜெபம் செய்யக் கூடாது?
8 “அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.” (மத். 6:7) சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லி ஜெபம் செய்வதும் தவறு என்பதை இயேசு இங்கு சுட்டிக்காட்டினார். ஜெபத்தில் மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்கவோ நன்றி சொல்லவோ கூடாதென்று அவர் அர்த்தப்படுத்தவில்லை. சொல்லப்போனால், இறப்பதற்கு முந்தின நாள் இரவு அவர் கெத்செமனே தோட்டத்தில், ‘சொன்ன வார்த்தைகளையே’ மீண்டும் மீண்டும் சொல்லி ஜெபம் செய்தார்.—மாற். 14:32-39.
9, 10. எந்த அர்த்தத்தில் நாம் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லி ஜெபம் செய்யக்கூடாது?
9 நாம் “அஞ்ஞானிகளைப்போல,” அதாவது உலகத்தாரைப்போல, ஜெபம் செய்யக் கூடாது. அவர்கள் “வீண் வார்த்தைகளை அலப்புகிறார்கள்,” அதாவது வார்த்தைகளை மனப்பாடம் செய்து மறுபடியும் மறுபடியும் ஒப்பிக்கிறார்கள். உதாரணத்திற்கு, பொய்க் கடவுளான பாகாலை வணங்கியவர்கள், “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும்” கூப்பிட்டார்கள்; ஆனால், அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. (1 இரா. 18:26) இன்றும் லட்சக்கணக்கானவர்கள், அதிக வார்த்தைகளால் “தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று” நினைத்து சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லி ஜெபம் செய்கிறார்கள். “வீண் வார்த்தைகளை” உபயோகித்து மீண்டும் மீண்டும் செய்யப்படும் நீண்ட ஜெபங்கள் யெகோவாவின் பார்வையில் மதிப்பற்றவையெனப் புரிந்துகொள்ள இயேசுவின் வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன. அவர் மேலும் சொல்வதாவது:
10 “அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.” (மத். 6:8) யூத மதத் தலைவர்கள் பலர், புறதேசத்தாரைப் போல் ஏகப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி ஜெபம் செய்தார்கள். துதிகளையும் நன்றிகளையும் மன்றாட்டுகளையும் ஏறெடுத்து உள்ளப்பூர்வமாக ஜெபம் செய்வது உண்மை வணக்கத்தின் முக்கிய அம்சமாக இருப்பது உண்மைதான். (பிலி. 4:6) ஆனால், நம் தேவைகளைக் குறித்துக் கடவுளுக்குத் திரும்பத்திரும்ப நினைப்பூட்ட வேண்டுமென நினைத்துக்கொண்டு சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது தவறாகும். நாம் ஜெபம் செய்யும்போது, ‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே நமக்கு இன்னது தேவை என்று அறிந்திருக்கிறவரிடம்’ ஜெபம் செய்கிறோம் என்பதை மனதில் வைக்க வேண்டும்.
11. மற்றவர்கள்முன் ஜெபம் செய்யும் பாக்கியம் கிடைத்தால் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
11 தவறாகச் செய்யப்படுகிற ஜெபங்களைக் குறித்து இயேசு சொன்ன வார்த்தைகள் நமக்கு எதை நினைப்பூட்ட வேண்டும்? பகட்டோடும் அதிக வார்த்தைகளோடும் செய்யப்படுகிற ஜெபங்களைக் கடவுள் விரும்புவதில்லை என்பதை நினைப்பூட்ட வேண்டும். மற்றவர்களைக் கவருவதற்காக அவர்கள்முன் ஜெபம் செய்யக் கூடாது என்பதையும், எப்போதுதான் “ஆமென்” என்று சொல்லி முடிப்போமோ என அவர்கள் சலித்துக்கொள்ளும் விதத்தில் ஜெபம் செய்யக் கூடாது என்பதையும் நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். ஏதேனும் அறிவிப்புகள் செய்வதற்கோ புத்திமதிகள் கொடுப்பதற்கோ ஒரு வாய்ப்பாக ஜெபத்தைப் பயன்படுத்துவது, மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்ன வார்த்தைகளின் கருத்துக்கு நேர்மாறாக இருக்கும்.
ஜெபம் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கிறார்
12. “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்ற வேண்டுகோளின் முக்கியத்துவம் என்ன?
12 ஜெபம் செய்யும் அரும்பெரும் பாக்கியத்தைத் தவறான விதத்தில் பயன்படுத்துவதைக் குறித்து இயேசு எச்சரித்தபோதிலும், எப்படி ஜெபம் செய்வதென்றும் தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9-13-ஐ வாசியுங்கள்.) மாதிரி ஜெபத்தை அவர் கற்றுக்கொடுத்தது, அதை நாம் மனப்பாடம் செய்து திரும்பத்திரும்ப ஒப்பிப்பதற்காக அல்ல. மாறாக, அதை அடிப்படையாக வைத்து ஜெபம் செய்வதற்காகவே. உதாரணத்திற்கு, அந்த ஜெபத்தில் அவர் முதலாவதாகக் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வாறு சொன்னார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத். 6:9) பூமிக்கு வெகு தூரத்திலுள்ள ‘பரலோகத்தில்’ வசிக்கிற யெகோவாவை நாம் “பிதா” என்று அழைப்பது மிகப் பொருத்தமானது; ஏனென்றால், அவர் நம்மைப் படைத்தவர். (உபா. 32:6; 2 நா. 6:21; அப். 17:24, 28) “எங்கள்” என்ற வார்த்தை, நம் சக விசுவாசிகளும் கடவுளுடன் நெருங்கிய பந்தத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை நமக்கு நினைப்பூட்ட வேண்டும். “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று யெகோவாவிடம் வேண்டுவது, ஏதேன் தோட்டத்தில் கலகம் உண்டான சமயத்திலிருந்து இன்றுவரை அவருடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை அவர் நீக்க வேண்டுமெனவும் அதன் மூலம் தம்மைப் பரிசுத்தப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. இந்த ஜெபத்திற்குப் பதிலளிக்கும் விதத்தில், யெகோவா பூமியில் துன்மார்க்கத்தைத் துடைத்தழித்து தம்மைப் பரிசுத்தப்படுத்தப் போகிறார்.—எசே. 36:23.
13. (அ) “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற வேண்டுகோள் எப்படி நிறைவேறும்? (ஆ) பூமியில் கடவுளுடைய சித்தம் செய்யப்படுவது எதை உட்படுத்தும்?
13 “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத். 6:10) மாதிரி ஜெபத்திலுள்ள இந்த வேண்டுகோளில், “ராஜ்யம்” என்பது பரலோக மேசியானிய அரசாங்கத்தைக் குறிக்கிறது; கிறிஸ்துவும் உயிர்த்தெழுப்பப்பட்ட ‘பரிசுத்தவான்களும்’ இந்த அரசாங்கத்தில் அரசர்களாக இருப்பார்கள். (தானி. 7:13, 14, 18; ஏசா. 9:6, 7) அந்த ராஜ்யம் “வருவதாக” என்று ஜெபிப்பது, பூமியில் கடவுளுடைய ஆட்சியை எதிர்க்கிற அனைவரையும் அழிப்பதற்காக அது வர வேண்டுமெனக் கேட்பதைக் குறிக்கிறது. அது சீக்கிரத்தில் நடக்கும்; அதன்பின் இந்தப் பூமி, நீதியும் சமாதானமும் செழுமையும் நிறைந்த பூஞ்சோலையாக மாறும். (சங். 72:1-15; தானி. 2:44; 2 பே. 3:13) யெகோவாவின் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதைப் போலவே பூமியிலும் செய்யப்பட வேண்டுமெனக் கேட்பது, கடவுள் இந்தப் பூமியில் தமது நோக்கங்களை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்பதைக் குறிக்கிறது; உதாரணத்திற்கு, அவர் பூர்வ காலங்களில் செய்ததைப் போலவே இன்றும் தம் எதிரிகளை அழிக்க வேண்டுமெனக் கேட்பதை இது குறிக்கிறது.—சங்கீதம் 83:1, 2, 13-18-ஐ வாசியுங்கள்.
14. “ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” எனக் கேட்பது ஏன் பொருத்தமானது?
14 “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.” (மத். 6:11; லூக். 11:3) ஜெபத்தில் இவ்வாறு கேட்பது, ‘இன்றைக்கு’ தேவையான ஆகாரத்தைத் தரும்படி கடவுளிடம் கேட்பதைக் குறிக்கிறது. நம்முடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய யெகோவாவால் முடியுமென்ற நம்பிக்கை நமக்கு இருப்பதை இது காட்டுகிறது. இப்படி ஜெபம் செய்யும்போது, தேவைக்கும் அதிகமானதை நாம் கேட்பதில்லை. மாறாக, தினமும் தேவைப்படுவதை மட்டுமே கேட்கிறோம்; இது, ‘ஒவ்வொரு நாளுக்கு வேண்டிய மன்னாவை ஒவ்வொரு நாளிலும்’ சேகரிக்க வேண்டுமென இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த கட்டளையை நமக்கு நினைப்பூட்டுகிறது.—யாத். 16:4.
15. “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற வேண்டுகோளின் அர்த்தம் என்ன?
15 மாதிரி ஜெபத்திலுள்ள அடுத்த வேண்டுகோள், நாம் செய்ய வேண்டிய ஒரு காரியத்திடம் நம் கவனத்தைத் திருப்புகிறது. “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என இயேசு சொன்னார். (மத். 6:12) லூக்கா எழுதிய பதிவின்படி, இந்தக் ‘கடன்கள்’ “பாவங்களை” குறிக்கின்றன. (லூக். 11:4) நமக்கு எதிராகப் பாவம் செய்கிறவர்களை நாம் முதலில் ‘மன்னித்தால்தான்’ யெகோவாவிடம் நாம் மன்னிப்பை எதிர்பார்க்க முடியும். (மத்தேயு 6:14, 15-ஐ வாசியுங்கள்.) ஆகவே, நாம் மற்றவர்களைத் தாராளமாக மன்னிக்க வேண்டும்.—எபே. 4:32; கொலோ. 3:13.
16. சோதனையையும் தீயவனிடமிருந்து இரட்சிக்கப்படுவதையும் குறித்த வேண்டுகோள்களை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?
16 “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று [“தீயவனிடமிருந்து,” NW] எங்களை இரட்சித்துக்கொள்ளும்.” (மத். 6:13) இயேசுவின் மாதிரி ஜெபத்தில், ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட இந்த இரண்டு வேண்டுகோள்களை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? பாவம் செய்யும்படி யெகோவா நம்மைச் சோதிப்பதில்லை என்பது நிச்சயம். (யாக்கோபு 1:13-ஐ வாசியுங்கள்.) ‘தீயவனான’ சாத்தானே உண்மையில் “சோதனைக்காரன்.” (மத். 4:3) என்றாலும், கடவுள் எவற்றை அனுமதிக்கிறாரோ அவற்றை அவர் செய்வதாகவே பைபிள் சிலசமயங்களில் குறிப்பிடுகிறது. (ரூத் 1:20, 21; பிர. 11:5) ஆகவே, ‘எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாதீர்கள்’ என்று ஜெபிப்பது, யெகோவாவுக்குப் பிரியமில்லாத ஏதோவொன்றைச் செய்ய ஆசை வரும்போது அதற்கு அடிபணிந்துவிட நம்மை அவர் அனுமதிக்கக் கூடாதெனக் கேட்பதை அர்த்தப்படுத்துகிறது. இறுதியாக, ‘தீயவனிடமிருந்து இரட்சித்துக்கொள்ளும்படி’ ஜெபிப்பது, நம்மை அடிபணிய வைத்துவிட சாத்தானை யெகோவா அனுமதிக்கக் கூடாதெனக் கேட்பதைக் குறிக்கிறது. ‘நம் திராணிக்கு மேலாக நாம் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்க மாட்டார்’ என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.—1 கொரிந்தியர் 10:13-ஐ வாசியுங்கள்.
‘கேட்டுக்கொண்டே, தேடிக்கொண்டே, தட்டிக்கொண்டே இருங்கள்’
17, 18. ‘கேட்டுக்கொண்டே, தேடிக்கொண்டே, தட்டிக்கொண்டே இருப்பதன்’ அர்த்தம் என்ன?
17 “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” என அப்போஸ்தலன் பவுல் சக விசுவாசிகளை ஊக்கப்படுத்தினார். (ரோ. 12:12) இது சம்பந்தமாக இயேசு இந்தக் கருத்தாழமிக்கக் குறிப்பைச் சொன்னார்: “கேளுங்கள் [“கேட்டுக்கொண்டே இருங்கள்,” NW], அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் [“தேடிக்கொண்டே இருங்கள்,” NW], அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் [“தட்டிக்கொண்டே இருங்கள்,” NW], அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” (மத். 7:7, 8) கடவுளுடைய சித்தத்திற்கு இசைவான எதையும் நாம் ‘கேட்டுக்கொண்டே இருப்பது’ தகுந்ததே. இயேசுவைப் போலவே அப்போஸ்தலன் யோவானும் இவ்வாறு குறிப்பிட்டார்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.”—1 யோ. 5:14.
18 ‘கேட்டுக்கொண்டே இருங்கள், தேடிக்கொண்டே இருங்கள்’ என்று இயேசு சொன்ன ஆலோசனை, நாம் ஊக்கமாகவும் தளராமலும் ஜெபம் செய்ய வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. நாம் கடவுளுடைய அரசாங்கத்தின்கீழ் வாழ்ந்து ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் பலன்களையும் அனுபவிப்பதற்கு, ‘தட்டிக்கொண்டே இருப்பதும்’ அவசியம். ஆனால், நம் ஜெபங்களைக் கடவுள் கேட்பாரென நாம் நம்பிக்கையோடு இருக்க முடியுமா? நாம் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தால் நிச்சயம் அப்படி நம்பிக்கையோடு இருக்க முடியும்; ஏனென்றால், “கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” என்று கிறிஸ்து சொன்னார். யெகோவா உண்மையிலேயே ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்பதை அவருடைய ஊழியர்கள் பலருடைய அனுபவம் நிரூபிக்கிறது.—சங். 65:2.
19, 20. மத்தேயு 7:9-11-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளின்படி, யெகோவா எப்படி நமக்கு அன்பான தகப்பனைப் போல் இருக்கிறார்?
19 பிள்ளைகளுக்கு நன்மையானவற்றை அளிக்கும் அன்பான தகப்பனைப் போல் கடவுள் இருப்பதாக இயேசு சொன்னார். நீங்கள் மலைப்பிரசங்கத்தை நேருக்கு நேர் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். இயேசு இவ்வாறு சொல்கிறார்: “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”—மத். 7:9-11.
20 மனித தகப்பன்மார், தாங்கள் சுதந்தரித்த பாவத்தின் காரணமாக ஓரளவு ‘பொல்லாதவர்களாக’ இருந்தாலும், தங்கள் பிள்ளைகள்மீது இயல்பாகவே பாசம் காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏமாற்றம் அளிப்பதில்லை, அதற்குப் பதிலாக “நல்ல ஈவுகளைக்” கொடுக்கவே பாடுபடுகிறார்கள். நம்முடைய அன்பான பரலோகத் தகப்பனும், நம்மீது பாசத்தைக் காட்டி “நன்மையானவைகளை” அளிக்கிறார்; உதாரணத்திற்கு, தமது சக்தியை அளிக்கிறார். (லூக். 11:13) இது, ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ அளிக்கிற யெகோவாவுக்குச் சேவை செய்யத் தேவைப்படும் பலத்தை நமக்கு அளிக்கும்.—யாக். 1:17.
இயேசுவின் வார்த்தைகளிலிருந்து தொடர்ந்து நன்மையடையுங்கள்
21, 22. மலைப்பிரசங்கத்தின் சிறப்பு என்ன, அதில் இயேசு சொன்ன வார்த்தைகளைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
21 பூமியில் கொடுக்கப்பட்ட சொற்பொழிவுகளிலேயே தலைசிறந்தது மலைப்பிரசங்கம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலுள்ள ஆன்மீக விஷயங்களும் தெள்ளத்தெளிவான கருத்துகளும் அதன் சிறப்புக்குக் காரணமாக இருக்கின்றன. இந்தத் தொடர் கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி, மலைப்பிரசங்கத்திலுள்ள அறிவுரைகளைப் பின்பற்றினால் நாம் ஏராளமான நன்மைகளைப் பெறுவோம். இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் நம் வாழ்க்கையை இப்போதே மேம்படுத்துவதோடு, சந்தோஷமான எதிர்காலத்தைப் பெறவும் உதவும்.
22 இந்தக் கட்டுரைகளில், இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் பொதிந்துள்ள ஆன்மீக இரத்தினங்களில் சிலவற்றை மட்டுமே சிந்தித்தோம். அந்தப் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் ‘அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டது’ ஏன் என்பதை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. (மத். 7:29) தலைசிறந்த போதகரான இயேசு கிறிஸ்துவின் பொன்மொழிகள் எல்லாவற்றையும் நம் மனதிலும் உள்ளத்திலும் நிரப்பும்போது, நாமும் அவர்களைப் போலவே ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோவோம்.
உங்கள் பதில் என்ன?
• மாய்மால ஜெபங்களைக் குறித்து இயேசு என்ன சொன்னார்?
• சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ஜெபம் செய்வதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
• இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி ஜெபத்தில் என்னென்ன வேண்டுகோள்கள் உள்ளன?
• ‘கேட்டுக்கொண்டே, தேடிக்கொண்டே, தட்டிக்கொண்டே இருங்கள்’ என்ற ஆலோசனையை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
[பக்கம் 15-ன் படம்]
மற்றவர்கள் பார்த்து மெச்ச வேண்டும் என்பதற்காகவே ஜெபம் செய்த மாயக்காரர்களை இயேசு கண்டனம் செய்தார்
[பக்கம் 17-ன் படம்]
அனுதின ஆகாரத்திற்காக நாம் ஜெபம் செய்வது ஏன் சரியானதென்று நினைக்கிறீர்கள்?